அத்தியாயம் 4

குற்றம் 9

அத்தியாயம் 04

“வர்ஷா, சீக்கிரம் வாடா…” என்று தாய் அழைத்த சத்தம் கேட்க, அறையிலிருந்து வெளியே வந்தாள் வர்ஷாலி.

“ரெடியாகிட்டியா? அப்போ நல்லதுதான். போற வழில என்னை நம்ம ஹோட்டல்ல விட்டுடுடா, அப்பா இன்னைக்கு நேரத்துக்கே ஆபீஸ் போயாச்சு…” என்றார் அந்த வீட்டின் அரசி மேகலா.

அங்கே முன்னறையில்தான் சண்முகநாதன் அமர்ந்திருந்தார்.

வர்ஷா அவளது பையை எடுத்துக்கொண்டவள், “ஏன்மா, இன்னைக்கு ஹோட்டல், ஆபீஸ் போகலையா?” என்று கேட்க,

“இன்னைக்கு எங்க கிளப் மீட்டிங் இருக்கு வர்ஷா, அத முடிச்சிட்டுத்தான் ஆபீஸ் போகணும்” என்று சொல்ல,

சண்முகநாதனுக்கோ எரிச்சல்தான் மூண்டது. மகன் வந்தது தெரிந்திருந்தும் அதனைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் வழமை போல் மகள் இருப்பதில் கோபமான கோபம் அவருக்கு…

“செஞ்ச பாவத்த கோயில் போய் கழிக்க நினைச்சாலே இந்த ஜென்மத்துல உன் அம்மாவால அது முடியாது. கொஞ்சமாச்சும் செஞ்ச தப்புக்கு வருந்தணும். அதெல்லாம் ஒன்னுமே இல்லாம கிளப் அது இதுன்னு இன்னும் ஓடுறால்ல உன் அம்மா. சீக்கிரம் எல்லாத்துக்கும் சேர்த்து வருந்த வேண்டி இருக்கும் பார்த்துக்க” என்று தன் பேத்தியிடம் சொன்னவர், மகளை முறைக்கத் தவறவில்லை…

மேகலாவுக்கோ இது பழகிப்போன ஒன்று என்பதால், “சீக்கிரம் வா வர்ஷா, நான் கார்ல இருக்கேன்” என்று தந்தையின் பேச்சைச் சிறிதும் காதில் எடுக்காதவர் வெளியே சென்றுவிட்டார்.

வர்ஷாதான், “தாத்தா, மார்னிங்கே ஆரம்பிக்கணுமா? அதான் அண்ணா ஊருக்கு வந்துடிச்சில, இனிமேல் எல்லாம் சரியா வரும். திமிர் பிடிக்காம அம்மாகிட்ட வந்து அண்ணாவ பேசச் சொல்லுங்க. இவ்வளவு வசதியா வாழ வேண்டியவர் தேவையா இதெல்லாம்?” என்றவளும் கிளம்பிவிட, சண்முகநாதனின் இதழ்களோ விரக்தியாய் வளைந்தன.

எப்போதுமே சரியாக முடியாத பிழையைச் செய்தும் அதனை இன்று வரை உணராமல் வீம்பு பிடிக்கும் மகளை அவரால் திருத்திவிட முடியும் என்று தோன்றவேயில்லை…

தன் பேத்தியும் அப்படியே தன் மகளைப் போல் பணத்தின் மேல் அதிக நாட்டம் கொண்டு வளர்ந்து நிற்பதில் கவலைதான் அவருக்கு. மருமகனின் வாழ்வில் பெரும் பிழையைச் செய்துவிட்ட குற்ற உணர்ச்சியும் அவர் மனதிலிருந்து நீங்கவில்லை…

கார் நகரத்தின் முக்கியப் பகுதியில் அமைந்திருந்த அந்த ஐந்து நட்சத்திர விடுதியின் முன் வந்து நின்றது.

அது சாதாரணமான சந்திப்பு அல்ல. நகரின் முக்கியத் தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொள்ளும் மாதாந்திரக் கூட்டம்.

காரிலிருந்து இறங்கிய மேகலா, “பாய் வர்ஷா, அப்பாக்கு கால் பண்ணி நம்ம டிரைவர வன் அவர்ல இங்க வர சொல்லிடு” என்றவர் தனது கைப்பையைச் சரிசெய்தபடி உள்ளே நுழைந்தார்.

மேகலா உள்ளே நுழைந்ததும், அங்கிருந்த பெண்கள் ஒவ்வொருவராக அவரைச் சூழ்ந்து கொண்டனர்.

நகரின் மிகப்பெரிய தொழிலதிபர்களின் மனைவிகள், பிரபல மருத்துவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அரசியல் செல்வாக்கு மிக்கவர்களின் உறவினர்கள் எனப் பணமும் அந்தஸ்தும் கொண்ட பெண்களின் சங்கமமாக இருந்தது அந்தக் கிளப்.

அதன் தலைவி என்ற முறையில் மேகலாவுக்குத் தனி மரியாதை இருந்தது.

பளபளப்பான கிரானைட் தரை, விலை உயர்ந்த அலங்காரப் பொருட்கள், வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேசைகள் என அந்த இடமே அவர்களின் செல்வச் செழிப்பைப் பறைசாற்றியது.

“மேகலா! இன்னைக்கு கொஞ்சம் லேட்டா வந்துட்டீங்க போல! கார் இல்லையோ? பொண்ணு கூட வந்திருக்கீங்க போல, உங்க காருக்கு என்னாச்ச?” என்றார் உறுப்பினர்களில் ஒருவரான இந்திராணி.

“என்ன பண்றது இந்திராணி, என் ஹஸ்பண்ட் என்ன மாதிரி ஆளுமையா நோ சொல்லக்கூடிய ஆள் இல்லையே!  உதவின்னு கேக்குறவங்களுக்கு பண்ணுறவராச்சே!  அதான் பொண்ணு கூட வரவேண்டியதா போச்சு. புது கார் ஆர்டர் போட்டாச்சு, நாளைக்கே வந்துடும்” என்க, அவர் பேசியது அங்கிருந்தவர்களுக்குப் புரியவில்லை…

ஆனால் அவர்களுக்குள் ஒருவரான கல்யாணிக்கு நன்கு புரிந்தது.

அவரது கணவர் அரசியல் கூட்டங்கள், தேர்தல் பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள் போன்றவற்றுக்கு அதிக எண்ணிக்கையில் கார்களை வாடகைக்கு வழங்கும் நிறுவனத்தின் உரிமையாளர்.

ஆனால் கடந்த சில மாதங்களாகத் தொழிலில் ஏற்பட்ட சறுக்கல் காரணமாக, சிறிது சிறிதாகக் கார்கள் விற்பனையாகிவிட்டிருக்க, தொழிலை முன்னெடுப்பதில் சிறு சிக்கல்.

அதனால் கணவர் தொழில் ரீதியான நண்பர் என்ற முறையில் அவர்கள் வீட்டு கார்கள் மூன்றை ஒரு வாரத்தில் திருப்பித் தருவதாகக் கேட்டு நேற்று வாங்கியிருந்தனர்.

அது தெரிந்து அவரை மட்டம் தட்டவே அங்கே இந்திராணி அதனைக் கேட்டார் என்பதில் கல்யாணிக்குச் சந்தேகமே இல்லை…

மேகலா அடுத்து அதனைப் பற்றிப் பேசாமல், “எல்லாரும் வந்தாச்சுனா ஸ்டார்ட் பண்ணுவோமா?” என்று கேட்க,

இந்திராணியோ, “அடுத்த வாரம் என் மகளோட பிறந்தநாள். லண்டன்ல இருந்து டிசைனர் ஒருத்தரை வரவழைச்சிருக்கேன். பார்ட்டி மட்டும் நம்ம வழக்கமான இடத்துல இல்ல. இந்த முறை கடற்கரையோர ரிசார்ட்டில் வைக்கலாம்னு இருக்கேன்” என்க,

“ஓ! அதுவும் நல்ல ஐடியாதான். நம்ம கிளப் உறுப்பினர்கள் எல்லாரும் வர்ற மாதிரி பார்த்துக்கோங்க. அப்புறம் பார்ட்டி என்றால் ஏதாவது ஸ்பெஷலா இருக்கணும். இப்போதெல்லாம் சாதாரண கொண்டாட்டங்களுக்கெல்லாம் யாரும் ஆர்வம் காட்டுறதில்லை!” என்றார் மற்றொரு பெண்மணி.

அதைக் கேட்டதும் அங்கிருந்தவர்கள் சிரித்தனர்.

அதற்குள் அனைவரும் தங்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்துகொள்ள, மேகலா தலைமை இருக்கையில் அமர்ந்தார்.

“சோ, லேடீஸ்! நம்ம கிளப்போட நெக்ஸ்ட் மந்த் ப்ரோக்ராம் பத்தி பேசலாம். இந்த முறை நம்ம ப்ரோக்ராம் கொஞ்சம் பிரம்மாண்டமா இருக்கணும். நகரத்திலேயே யாரும் இதுவரைக்கும் நடத்தாத அளவுக்கு இருக்கணும்” என்றார்.

“நிச்சயமா மேகலா! அது நம்மளால முடியாதா என்ன? கடந்த முறை நடந்த ஃபேஷன் ஷோவுக்கே எவ்வளவு பெரிய வரவேற்பு கிடைச்சது. அதுவும் மும்பையிலிருந்து மாடல்ஸை வரவழைச்சிருந்தோமே!” என்றார் ஒருவர்.

“அதெல்லாம் சரிதான். இந்த முறை ஏதாவது சர்வதேச அளவிலான நிகழ்ச்சியா இருந்தா நல்லா இருக்கும். நம்ம கிளப்போட பெயர் இன்னும் பெரிய அளவுல பேசப்படணும்” என்று இந்திராணி சொல்ல,

“அதுக்கு பணத்தைப் பத்திக் கவலைப்பட வேண்டாம். நம்மளோட ஒரு டின்னர் பார்ட்டிக்குச் செலவழிக்கிற தொகையைவிட இது பெருசா இருக்கப் போறதில்லை!” என்று சிரித்தார் மேகலா.

அந்தப் பேச்சில் மீண்டும் சிரிப்பொலி எழுந்தது.

அவர்களைப் பொறுத்தவரையில் லட்சங்களில் செலவழிப்பது என்பது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதிதான். ஆடம்பரமும் வசதியும் அவர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்திருந்தன.

“அடுத்த ஃபேஷன் ஷோவுக்கு ஒரு காமன் காம்பெட்டிஷன் செட் பண்ணலாம். சாமானிய மக்கள் பார்ட்டிசிபேட் பண்ணுற போல” என்று மேகலா சொல்ல,

“காம்பெட்டிஷனா??? அதுவும் காமன் பீப்பிள் கூடவா? இங்க உள்ள மாடல் எல்லாம் வெச்சு பண்ணா நல்லாவே இருக்காதே மேகலா” என்றார் இந்திராணி.

மேகலா புன்னகையுடன், “மாடல்ஸ் எப்போவும் போல அதர் ஸ்டேட்தான். ஆனா காம்பெட்டிஷன் வைக்கப் போறது ஷோக்குரிய டிரஸ் டிசைனருக்குத்தான்” என்க, அங்கே சிறு சலசலப்பு…

மேகலாவே, “மோஸ்ட்லி டிசைனர்ஸ் பேமஸானவங்கதான் பார்ட்டிசிபேட் பண்ணுவாங்க. ஒன்னு ரெண்டு பேர் காமன் பீப்பிளா இருந்தாலும் நமக்கு பப்ளிசிட்டிதான். அண்ட் அவங்க வின் பண்ணப்போறது கூட இல்லையே! கலந்துக்கட்டும். அவங்களுக்கும் நமக்கும் இடையில இருக்குற டிஃபரன்ட் எல்லாருக்கும் தெரிஞ்சிக்கட்டும்” என்றார்.

“சூப்பர் மேகலா” என்று பலர் பாராட்ட,

“ராணி, எங்க சேனல் ஹெட் கிட்ட நான் இன்ஃபார்ம் பண்ணிடுறேன். அட்வர்டைஸ்மென்ட் கொஞ்சம் நீ பாத்துக்கோ, எல்லா இடமும் அட் வரணும்” என்றார்.

சிறிது நேரம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்துப் பேசியவர்கள், அடுத்ததாகக் கிளப்பின் உறுப்பினர் சேர்க்கை குறித்துப் பேசத் தொடங்கினர்.

“இந்த முறை யாரையும் அப்படியே உறுப்பினரா சேர்த்திடக் கூடாது மேகலா. நம்ம கிளப்புக்குன்னு ஒரு ஸ்டாண்டர்ட் இருக்கு. யார் யாருக்கு அந்தஸ்தும் பின்னணியும் இருக்கோ அவங்களை மட்டும்தான் சேர்க்கணும்” என்று இந்திராணி கல்யாணியைப் பார்த்தபடி சொல்ல,

அவரின் பேச்சினுள்ளே இருந்த கருத்தில் மேகலாவின் இதழ்கள் மெல்லிய புன்னகையில் விரிந்தன.

“நிச்சயமா! நம்ம கிளப் எல்லாருக்குமான பொது இடம் கிடையாது. அதுக்குன்னு ஒரு மரியாதையும் தரமும் இருக்கு. அதை நாமதான் பாதுகாக்கணும்!” என்றவர்,

கல்யாணியைப் பார்த்து, “என்ன கல்யாணி, நான் சொல்றது சரிதானே!” என்று மேசையிலிருந்த தண்ணீர் குவளையை எடுத்துப் பருகினார்.

கல்யாணி தயக்கமாய் மேகலாவைப் பார்க்க,

“உனக்கான இடம் அப்படியே தான் இருக்கும் கல்யாணி. உங்க ஸ்டேட்டஸ் பழையபடி வந்தப்புறம் நீ மறுபடியும் ஜாயின் பண்ணிக்கலாம்” என்று வாயிலை நோக்கிக் கை காட்ட, யாரும் எதிர்த்து ஒரு வார்த்தை சொல்லவில்லை…

இத்தனை ஆண்டுகள் கூடவே இருந்தவர் என்ற எந்த உணர்வும் யாருக்கும் இருக்கவில்லை…

அனைவரையும் ஒரு பார்வை பார்த்த கல்யாணி, அத்தனை பேரின் மத்தியிலும் அவமானத்துடன் வெளியேறினார்.

அவர்களது உரையாடலில் பணமும், புகழும், அந்தஸ்தும் மட்டுமே பிரதானமாக இருக்க, அந்தக் கூட்டத்தின் ஒவ்வொரு வார்த்தையிலும் அவர்களின் மேட்டுக்குடி மனப்பான்மை வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.

இந்த குணம் தானே அவரை அந்த பிழையை செய்ய வைத்திருந்தது. அதுவும் இப்போது வரை தான் செய்தது சரி என உள்ளே மனம் நம்பிக்கொண்டிருப்பதன் காரணமும் அது தானே!

_____________________

அன்று புதன்கிழமை வீட்டில் தான் இருந்தாள் அனலி. காலை உணவை செய்து முடித்தவள் தனக்கெனத் தட்டில் போட்டுகொண்டு முன்னறையில் அமர, தொலைக்காட்சிபெட்டி அதன் பாட்டுக்கு ஓடிக் கொண்டிருந்தது.

அன்று அவர்கள் தெருவில் ஒரு திருமணம், காலையிலேயே தேவகி இளையவளுடன் சென்றிருக்க, வருணும் வெளியே சென்றிருந்தான்.

தனியே இருக்கவே பிடிக்கவில்லை அவளுக்கு, ஒவ்வொரு சேனலாக மாற்றியவள் சட்டென தெரிந்த ஆதவின் முகத்தில் அப்படி நிறுத்தி அதனை பார்க்கத் தொடங்கினாள்.

“நிச்சயமா குற்றவாளிய சீக்கிரமே கண்டு பிடிப்போம், இந்த இரண்டாவது கொலை சம்பந்தமான விசாரணையும் இப்போ தான் ஆரம்பிச்சிருக்கோம் சீக்கிரமே எல்லா வெளிச்சதுக்கு வரும்” என்று அவன் சொல்லி அங்கிருந்து செல்ல முனைய,

அங்கிருந்த நிருபர் ஒருவர் “அதான் நீங்க வந்து நாலு நாள் ஆகிடிச்சே சார். இன்னுமா நீங்க துப்பு துலக்கல, நீங்க பெரிய ஆளுன்னு தானே  உங்க டிபார்ட்மென்ட் ஆளுங்க இங்க இருக்குறவங்கள விட்டுட்டு உங்கள கூட்டிட்டு வந்தாங்க, இதோ அடுத்த கொலையும் நடந்தாச்சும் இன்னும் வேடிக்கை தானா? இப்படியே கொலை தொடர்ந்துட்டே இருக்கும் நீங்க இங்க ஊர் சுத்திப் பார்த்துட்டு போவீங்க அப்படி தானே!” என்று நக்கலாய் கேட்க,

ஒரு நிமிடம் நின்று திரும்பியவன், கேட்ட அந்த நிருபரைப் பார்த்து “சூப்பர்… அப்போ உங்களுக்கு இந்தக் கேஸ் பத்தி நிறையத் தெரிஞ்சிருக்குப் போல! கொஞ்சம் எங்களுக்கு கைட் பண்ண முடியுமா?” என்று மெல்லிய புன்னகையுடன் கேட்க,

அவனது கேள்வியில் சற்றுத் தடுமாறிய நிருபர், “சார் என்ன சார் கேள்விய திசை திருப்பப் பார்க்குறீங்களா?” என்று கேட்டான்.

“இல்லை, கொலைகள் தொடர்ந்துட்டே இருக்கும், நான் ஊர் சுத்திப் பார்த்துட்டு போயிடுவேன்னு ரொம்பத் தெளிவா சொல்றீங்களே, அதான் கேட்டேன். ஒருவேளை கொலையாளி யாருன்னு உங்களுக்குத் தெரியுமோன்னு ஒரு சின்ன டவுட்!” என்றவனது நக்கலான பதிலில் அங்கிருந்த காவல் அதிகாரிகள் தங்களுக்குள் சிரித்துக் கொள்ள, கேள்வி கேட்டவனின் முகமோ இறுகியது.

“சார், கேள்வி கேட்கிறது எங்க உரிமை…” என்றான் அவன்.

ஆதவோ “அதே மாதிரிதான், குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறது எங்களோட கடமை. அதுக்காகத்தான் இங்க வந்திருக்கேன். நாலு நாள்ல ஒரு கொலையாளியைக் கண்டுபிடிக்க முடியலன்னு கேள்வி கேட்குறதுக்கு முன்னாடி, அந்தக் கொலையாளி யாருன்னு கண்டுபிடிக்க எவ்வளவு காலம் ஆகும்னு உங்களுக்குத் தெரிஞ்சி இருக்கணுமே! அப்படி  உடனே கண்டுபிடிக்க முடியும்னா நான் தான் அந்தக் கொலையாளியா இருக்கணும்” என்று ஒரு நொடி அத்தனை நிருபர்களையும் சுற்றிப் பார்த்து,

மீண்டும் “இது உங்க நியூஸ் சேனலுக்கான டிஆர்பி கேம் கிடையாது. இரண்டு உயிர்கள் போயிருக்கு. இன்னும் எத்தனை உயிர்கள் போகும்னு எங்களுக்கே தெரியாது. அதனால, ஆதாரமில்லாம பேசுறதையும், விசாரணையைப் பத்தி தேவையில்லாத யூகங்களைப் பரப்புறதையும் தவிர்த்துக்கோங்க. குற்றவாளியைப் பிடிக்க வேண்டிய இடத்துல நாங்க இருக்கோம். எங்க வேலையை எங்கள பண்ண விடுங்க!” என்றவன், அதற்கு மேல் அவர்களுக்குப் பதிலளிக்க விரும்பாதவனாய் அங்கிருந்து நகர்ந்தான்.

அடுத்து அந்த செய்தியாளர் மேலும் சிறிது நேரம் அந்த வழக்கை பற்றி வாசித்து, அந்த செய்தி நிறைவடைத்து இருக்க,

அனலியோ “எப்போ பாரு யாரையாவது மிரட்ட வேண்டியது,  இந்த கேஸ முடிக்க முடியாம எங்கிட்ட உதவி கேட்டு வந்து நிக்கணும் அப்போ இந்த அனலி யாருனு காட்டுவேன். இத மட்டும் நடத்தி கொடுத்துடு கடவுளே!” என்று வேண்டுதலையும் சாபத்தையும் ஒரு சேர கொடுத்தவளுக்கு, நாளு நாட்களுக்கு முன் நடந்தவை தான் கண் முன்னே ஓடியது…

அன்று “யாரு இவர்?” என்று அவள் மாலாவிடம் குசுகுசுத்தது ஆதவின் காதில் நன்கு விழ, அவன் புருவம் தானாகவே உயர்ந்தது.

‘சுத்தம்… இன்னைக்கு என்ன பண்ணப்போறாளோ?’ என்று பரத்தும் மாலாவும் மனதிற்குள் புலம்பிக் கொண்டிருக்க,

“நான் யாருன்னு தெரிஞ்சுக்கிறதுக்கு முன்னாடி, நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்றான் ஆதவ், அவளது பேச்சை இடைமறித்து.

அப்போதுதான் அவள் முழுமையாக அவன் பக்கம் திரும்பினாள்.

“நானா? நான் கான்ஸ்டபிள் அனலி சார்!” என்றாள் கெத்தாக.

“ஓஹோ! அப்போ உங்களுக்கு உங்க ஜாப் எதுன்னு நல்லாவே தெரியுது, அப்போ ஒரு சீனியர் அதிகாரிகிட்ட எப்படி பேசணும்னு தெரியணும் இல்லையா?” என்று புருவத்தை உயர்த்த, அதனை எல்லாம் உணராமல்,

“அட இவ்வளவு கெத்தா சூப்பரா இருக்கீங்களே, நீங்க இங்க தான் ஒர்க் பண்ணப்போறீங்களா சார்?” என்றாள் அப்பாவியாய்.

அவளது கேள்வியில் பரத் தலையிலேயே அடித்துக் கொள்ளாத குறைதான்.

“அனலி!” என்று மாலா பல்லைக் கடித்துக் கூப்பிட,

“என்ன மேடம்? நான் என்ன தப்பா கேட்டேன்?” என்று அவளும் திரும்பிக் கேட்டாள்.

ஆதவ் அலட்டிக் கொள்ளாமல் “நான் தான் இந்தக் கேஸை டேக்கோவர் பண்ண வந்திருக்கிற ஏசிபி ஆதவ் மதிமாறன்” என்று முடித்தது தான் தாமதம் அடுத்த நொடியே அனலியின் முகம் மாறியது.

சட்டென அவன் கரத்தைப் பிடித்தவள் “ஓஓஓ… நீங்கதான் அந்த ஆதவ் மதிமாறனா? ஹைதராபாத்ல இருந்து வந்திருக்கீங்களா? உங்களைப் பத்தி நிறைய கேள்விப்பட்டிருக்கேன் சார்!” என்றாள் உற்சாகமாக…

அவளுக்கு அவனை அப்படி ஒன்றும் முழுதாக எல்லாம் தெரியாது, இந்த ஒரு வாரமாய் அவனைப்பற்றி தானே அங்கு பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது. அதில் ஒரு ஆர்வம் அவளிடம், அதிலும் அவன் செய்தியில் பெரிதாய் பேசப்பட்டான் என்று தெரிந்தது முதல், அவளும் அதில் வருவது போல் கனவு எல்லாம் கண்டாளே! அதன் தாக்கம் இது…

அவன் பார்வை அவளிலும் அவன் கரத்திலும் மாறி மாறிப் படிய,  கரத்தை விளக்கியவள்,

“உங்க பேரை முன்னாடியே சொல்லி இருக்கலாமே சார்!… நானும் உங்களப் போல டிவில எல்லாம் வருவேன்” என்க,

‘ஐயோ கடவுளே!’ என்று மாலா மனதிற்குள் புலம்பினார் என்றால் பரத்துக்கோ என்ன பண்ணுவதென்றே புரியாத நிலை…

ஆதவ் மட்டும் அமைதியாய் மிக அமைதியாய் சில நொடிகள் அவளையே பார்த்தான்.

“சரி, நீங்க தணீஸ்வரன் வீட்டுக்குப் போனது உண்மையா?” என்று அவனுக்குத் தேவையான கேள்வியைக் கேட்க, அவளது முகம் சட்டென மலர்ந்தது.

அவனிடமிருந்து பாராட்டு பெறுவது பெரிதல்லவா அனைத்தையும் கொட்டத் தொடங்கினாள்.

“எஸ் சார்! அதுவும் யாருக்கும் தெரியாம மாறுவேஷத்துல போனேன். அங்க ஏதாவது க்ளூ கிடைக்குமான்னு” என்க,

“வெரி குட்!” என்றான் ஆதவ்.

அவளது முகம் பெருமையில் இன்னும் விரிய, “தேங்க்யூ சார்!” என்றவள், “ஆனா இடைல இந்த மாலா மேடம் தான் கால் பண்ணி எல்லாத்தையும் கெடுத்துட்டாங்க, ஒன்னும் கெட்டுப் போகல நாளைக்கே மறுபடியும் போறேன் சார்” என்க, ஆதவின் முகம் இறுகியது.

அவனுக்கு நடந்தது தெரியவேண்டி இருந்ததில் பொறுமையுடன் இருந்தவனுக்கு, அவள் சொன்ன விதமும், அவளது அறியாமையும் அதனை உடைக்க போதுமானதாய் இருந்தது.

“உங்களுக்கு யாரு அந்த அனுமதியைக் கொடுத்தது?” என்று வெகு நிதானமாய் வந்தது அவன் கேள்வி…

அதில் அவளது சிரிப்பு கொஞ்சம் கொஞ்சமாக மறைய, தயக்கத்துடன், “அது… அது… யாரும் கொடுக்கல சார். நானே…” என்றவள் முடிக்கவில்லை,

“நீங்களே முடிவெடுத்துட்டீங்களா? அப்போ இந்த டிபார்ட்மென்ட்ல இனிமேல் ஒவ்வொருத்தரும் அவங்களுக்குத் தோணினதைச் செய்ய ஆரம்பிச்சிடலாமா?” என்று சட்டென குரலை உயர்ந்த,

“இல்ல சார்… அது வந்து…” என்று குரல் தந்தியடித்தது

“ஸ்டாப்!” என்று கத்திய அவனது ஒற்றை வார்த்தையில் அவளது பேச்சு மொத்தமாய் நின்றது.

“ஒரு கான்ஸ்டபிளா உங்க கடமை என்னன்னு தெரியுமா? உங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட வேலையைச் சரியா செய்யணும். அதை விட்டுட்டு, சினிமாவுல வர்ற மாதிரி மாறுவேஷம் போட்டு மினிஸ்டர் வீட்டுக்குள்ள நுழையுறதெல்லாம் உங்க வேலை கிடையாது. இந்தக் கேஸ் பார்க்க தான் நான் வந்திருக்கேன். நீங்களே எல்லாம் முடிவெடுத்து செய்றதுனா சொல்லுங்க, நான் இப்போவே ஐஜி சார் கிட்ட சொல்லிட்டு இங்க இருந்து கிளம்பிடுவேன்” என்றவனது குரல் இப்போது இறுகியிருந்தது.

அவனுக்கு காவல் துறை மேல் அத்தனை ஈடுபாடு, அப்படி இருக்கையில் இப்படி ஒருத்தி அதுவும் அவன் வேலை செய்யும் இடத்தில், அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை…

அவனுக்கு கீழே வேலை செய்பவர்களையும் அவர்களது வேலையையும் அத்தனை மதிப்பவன் அவன், எந்த வேலையாக இருந்தாலும் அதுவும் காவல் துறையின்  ஒரு பாகம் என்ற எண்ணம் கொண்டவன் அவன், சரி என்றால் பாராட்டவும் தவறு என்றால் கண்டிக்கவும் செய்வான். ஆனால் ஒரு போதும் இப்படி கோமாளித் தனத்தை ஆதரிப்பதில்லை…

“ஆனா சார், ஒரு க்ளூ கிடைச்சிருந்தா இந்தக் கேஸுக்கு எவ்வளவு யூஸ்ஃபுல்லா இருந்திருக்கும் தெரியுமா?” என்று அப்போதும் அவள் புரிந்து கொள்ளாமல் பேச, கடுப்பாகி விட்டது அவனுக்கு…

“கிடைச்சிருந்தா…!” என்று அழுத்திக் கேட்டவன், “அதுவே உங்களுக்கு ஏதாவது பிரச்சனை ஆகியிருந்தா? உங்க உயிருக்கு ஆபத்து வந்திருந்தா? அதுக்கு யார் பொறுப்பு? எடுத்தோம் கவுத்தோம்னு பண்ண தான் வேலைக்கு வந்தீங்களா, ஒரு பேசிக் சென்ஸ் வேணா?” என்க,

“அது… நான் கவனமாத்தான் இருந்தேன் சார்…” என்று அவள் அப்போதும் அவனுக்கு தன்னை உணர்த்தி விட எண்ணி இழுக்க,

“உங்க கவனத்தைப் பத்தி எனக்கு எந்தச் செர்டிபிகேட்டும் தேவையில்லை. ஆனா, இனிமேல் எனக்கு இன்போர்ம் பண்ணாம எந்த முட்டாள்தனத்தைச் செய்யக்கூடாது, காட் இட்” என்க, அவளோ முகத்தைச் சுருக்கியவளுக்கு கண்ணீர் கன்னம் இறங்கி விட்டது.

அழுகையூடே “சார், நான் என்ன பெரிய தப்பு பண்ணிட்டேன்? ஒரு வார்த்தை சொன்னா புரிஞ்சுக்க மாட்டேனா?” என்றாள்.

அவள் அவளாக இருக்கும் இடமால்லவா அது. அங்கே அவளை அப்படியெல்லாம்யாரும் பெரிதாய் திட்டியதில்லை. திட்டியதில்லை என்பதை விட இதுவரை இப்படி பெரிதாய் எந்த பிழையும் அவள் செய்யவில்லை என்பதே உண்மை…

அவள் இப்படி புரியாமல் பேசிக் கொண்டிருக்க, மாலா அவளைத் தடுக்க நினைத்து அவளிடம் பேச வர, அவரைத் தடுத்தவன்,

“ஓ! ஒரு வார்த்தை சொன்னா புரிஞ்சுக்குவீங்களா?” என்று அவளைப் பார்த்தவன், “அப்போ அதையே ஒரு வாரம் சொல்லிப் புரிய வைக்கிறேன்” என்று

அங்கிருந்த அனைவரும் அவனைப் பார்த்தனர்.

“அடுத்த ஒரு வாரத்துக்கு நீங்க வேலைக்கு வர வேண்டாம்” என்றான் ஸ்திரமான குரலில்…

“என்னது?” என்று அனலி அதிர்ச்சியில் வாயைப் பிளக்க,

“காதுல விழலையா? ஒரு வாரம் டியூட்டிக்கு வரக்கூடாது. வீட்டிலேயே இருங்க, ஐஜி கிட்ட நான் பேசுறேன். உங்களுக்கான சஸ்பெண்ட் ஆடர் வந்து சேரும்” என்றவன் அங்கிருந்து வெளியேறி இருந்தான்.

அன்றிலிருந்து இதோ நான்கு நாட்களாக வீட்டில் தான் இருக்கிறாள்.

கிடைத்த வேலையையும் கெடுத்துக் கொண்டதாக சித்தியிடம் வாங்காத திட்டுக்கள் இல்லை…

வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை அவளுக்கு, நான்கு நாட்களே போதும் என்றாகி விட்டது.

சித்தி வெளியில் சென்றிருக்க, தொலைக்காட்சி பெட்டி முன் அமர்ந்து, அப்படியே பழைய நினைவில் மூழ்கி இருந்தவளைக் கலைத்தது தம்பி வருணின் குரல்.

“அனலிக்கா, நான் பாட்டுக்கு கத்திட்டு இருக்கேன் நீ என்னடான்னா பதிலே சொல்லாம இருக்க, இதப் பாருக்கா முதல்ல” என்று அந்த செய்தித்தாளை அக்காவிடம் காட்ட, வாங்கிப் பார்த்த அனலியின் கண்ணில் எதுவுமே  பெரிதாய் தெரியவில்லை…

மனம் வேறு இடத்தில் இருந்ததாலோ என்னவோ அதில் இருந்த எழுத்துக்கள் மூளைக்குள் ஏறவில்லை…

“என்னடா வருண்?” என்று தம்பியிடமே கேட்க, அவன் தமக்கையை மேலிருந்து கீழே பார்த்தவன், “நீ சஸ்பண்ட் ஆனதுல இருந்தே சரி இல்ல பாத்துக்க” என்றான்.

“அதெல்லாம் எனக்கே தெரியும் பெரிய மனிஷா என்னனு சொல்லு முதல்ல” என்க,

“ஐயோ அக்கா, இதோ பாரு. பேஷன் டிசைனர் கம்பெடிஷன் நடக்கப் போகுதாம்” என்று காட்ட,

சட்டென ஒரு ஆர்வத்துடன் அதனை வாங்கிப் பார்த்தவள் மீண்டும் சக்தி வடிந்தவளாய் “நான் தான் டிகிரிய முடிக்கலயே வருண்” என்று சோகமாய் சொல்ல,

அவள் தலையில் தட்டியவன், “முதல்ல முழுசா படிக்கா, என்னன்னே தெரியாம பேசாத, யார் வேணா கலந்துக்கலாமாம். வர்ற மண்டேய் முதல் கட்ட தேர்வு நடக்கப் போகுது” என்று சொல்ல, அனலியின் கண்களில் ஆர்வம்…

இந்த ஆர்வம் எதனை நிகழத்தப் போகிறதோ???? 

யாருக்கு நல்லதாய் அமையும்??? 

குற்றம் 9 இன் பின்னணி என்ன??? 

செவ்வாய் கொலை நடந்த காரணம்??? 

குற்றம் தொடரும்…

ஆஷா சாரா…

Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
Scroll to Top