இருள் நிழலாய் நானே 18

இருள் நிழலாய் நானே 18

சில இன்ச் நகர்ந்தால் போதும் பெரும் பள்ளத்தாக்கு ஒன்றில் விழும் அபாயம்.

மகி விழுந்த இடம்.

சமர் மெல்ல எட்டிப் பார்த்தான்.

அவ்விடம் வருவதற்கு முன்பு மகி சொல்லியவை காட்சிகளாக விரிந்தது.

நண்பர்களுக்கு என்ன ஆனது என்று தான் தெரியவில்லை. இங்கு என்ன நடக்கிறது என்பதையாவது தெரிந்து கிராம மக்களை இங்கு நிகழும் மர்மத்திலிருந்து பாதுகாப்போம் என்று நினைத்த மகி, தினேஷ் வேண்டாமென மறுத்ததையும் கண்டுகொள்ளாது அனலின் கட்டுப்பாட்டிற்கு பணிந்து மலைப்பாதை நோக்கி நடந்தாள்.

தினேஷிற்கு வேறு வழி இருக்கவில்லை. மகியை பின் தொடர்ந்தான்.

“ரொம்பவே கவனமா இருங்க.” தும்பையின் குரல் மட்டும் அவ்வப்போது ஒலித்தது.

“அவ்ளோ அக்கறை இருக்க பேய் என்னத்துக்கு இங்க தள்ளி விடணும்.” தினேஷ் முணுமுணுக்க அவன் முகத்திற்கு நேரே மிக மிக அருகில் தன் எரியும் முகத்தைக் காட்டி கோரமாக சிரித்தது தும்பையின் பற்றி எரியும் ஆன்மா.

“ஆத்தாடி…” தினேஷ் நெஞ்சில் கை வைத்து பதறி இரண்டெட்டு பின் நகர்ந்தான்.

“நான் கிட்ட வர சூடு உன்னால் தாங்கி நிற்க முடியுதா?” எனக் கேட்டது.

தினேஷ் அரண்டு விழித்து… இல்லையென தலையசைத்தான்.

“ஆனால் என்னை உயிரோடு நெருப்பு வச்சி எரிச்சாங்க. அத்தனை எரிச்சல் வலி… கத்தக்கூடாதுன்னு முழுசா எரியும் வரை, என் இரத்தம் சுண்டி உறைய, சதை உடைந்து கீழே விழ என் கண் பார்க்க என் உயிர் உடலை விட்டு வெளிய வந்தது. அந்த வேதனைக்கான காரணம் தெரியணும் நான் நினைக்கிறது தப்பு இல்லையே!” என வெடித்து கத்தியது. அதன் கத்தலில் கானகம் கிடுகிடுத்தது.

தும்பையின் அன்றைய நரக வேதனை, மகி மற்றும் தினேஷால் உணர முடிந்தது. அந்த உணர்தல் இருவருக்கும் கண்ணீரை சுரந்தது.

“என் நிலை உங்களுக்கு முன்பு இங்கு வந்த உங்க நண்பர்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம். அதை தெரிஞ்சிக்க வேண்டாமா நீங்க?” என்ற தும்பையிடம் அதீத கோபம். அதனின் கோபத்தில் அருகிலிருந்த பச்சை மரம் பற்றி எரிந்தது.

“ஒரு பத்து நாளைக்கு இந்த ஊரிலிருக்க முடியலையே! இங்கிருந்து போக முடியாம தவிக்கிற இந்த மக்களோட நிலை. இங்கு என்ன நடக்குது, ஏன் நடக்குது எதும் தெரியாம, ஏன் சாகறோம் கூட தெரியாம இருக்காங்களே அவங்கலாம் பாவமில்லையா? மக்களுக்கு நல்லது நடக்கணும் நினைக்கிற சமுதாய பொறுப்புள்ள ஒரு துறையில் இருந்துக்கிட்டு எப்படி உன்னால் இப்படி பேச முடியுது?” என்ற தும்பை, “இங்க ஒருத்தன் கீழ விழும்போது இன்னொருத்தன் தூக்கி விடணும்… அப்போ தான் நாம மனுஷன்னு சொல்லிக்க சரியா இருக்கும். இன்னொருத்தன் கஷ்டத்தை பார்த்து, எனக்கென்ன நான் நல்லாயிருக்கேன்னு ஒதுங்கிப்போற வரை இங்க எதும் மாறாது. மாத்த முடியாது. நாம மனுஷங்க சொல்றதில் அர்த்தமும் கிடையாது” என்றது.

ஒரு ஆன்மாவுக்குள் இத்தனை ஆவேசமா இருவரும் அதிர்ந்து நின்றிருந்தனர்.

அது தும்பையின் ஒட்டு மொத்த கோபம். பெரும் மர்மத்திலிருந்து தன்னுடைய கிராமத்தை மீட்க முடியவில்லையே எனும் ஒரு ஆன்மாவின் குமுறல் அது.

“சாரி தும்பை” என்ற தினேஷ், “நீ காற்று தானே! உன்னால் உள்ள போய் என்ன நடக்குது தெரிஞ்சிக்க முடியாதா?” எனக் கேட்டான்.

“ரெண்டு முறை முயற்சி பண்ணேன். என் ஆன்மா அவங்க ரகசியத்தை தெரிஞ்சிக்க முயற்சி பண்ணுதுண்ணு என்னை மந்திர கட்டுக்குள் வச்சிட்டாங்க. இந்த மலையில் அவங்களை மீறி என்னால் ஒன்றும் செய்ய முடியாது” என்ற தும்பை, “இப்போ அவங்களால் என் முன்னாடியே உங்களுக்கு எதும் ஆனாலும் என்னால உங்களை காப்பாற்ற முடியாது” என்ற அரூபம் காற்றில் மறைய, எரிந்து கொண்டிருந்த மரம் சட்டென்று குளிர்ந்து சாதாரணமாய் காற்றில் அசைந்தாடியது.

“ஊஃப்…” காற்றினை இழுத்து ஊதிய தினேஷ், “என்னால் தும்பையையே இன்னும் நம்ப முடியல, இதுல அவள் சொல்றதுலாம் மலைப்பா இருக்கு மகி. நம்புறதா வேணாமா ஒண்ணும் புரியல” என்று தினேஷ் சொல்ல வித்தியாசமான ஒலி அவர்கள் நின்றிருந்த இடத்தை சூழ்ந்தது.

“என்ன சத்தம்?” என்று கேட்டு மகி திரும்ப, இருவரையும் கூரையோடு சேர்த்து மூடியது போல் மெல்லிய திரை ஒன்று சூழ்ந்து சிறை பிடித்தது.

“நாம எதுலையோ மாட்டிக்கிட்டோம் மகி!”

“என்னன்னு சரியா தெரியல” என்று மகி சொல்லும் போது, காலடியில் மிதிபடும் சருகுகளின் ஓசை.

சுற்றி பார்க்க யாரும் இல்லை.

பல பேர் நடந்துவரும் சத்தம். கண்ணுக்கு முன் யாரும் தெரியவில்லை.

“யாரு…” தினேஷ் மகியை பிடித்துக் கொண்டு பின்னால் நகர்ந்து செல்ல, எதிலோ இடித்து நின்றனர்.

திரும்பி பார்க்க அவர்களை தடுக்கும் விதமாக எதுவும் அங்கில்லை.

“ஒன்னுமே இல்லையே தினேஷ்.” மகி சொல்லிட, சட்டென்று மகி காற்றில் மிதந்தாள்.

ஆனால் அவளுக்குத் தெரிந்தது. தன்னை யாரோ தூக்கி இருக்கின்றனர் என்று.

“மகி… மகி என்னாச்சு?” தினேஷின் வாயில் யாரோ ஓங்கி குத்தியிருந்தனர்.

“ஆ…” என்று வலியில் முனகிய தினேஷ், “இருட்டில் ஒன்னும் தெரியல” என அலைபேசியில் டார்ச் அடித்திட… அலைபேசி பறந்து சென்று மறைந்தது.

மின்னலாய் மறைந்திட்ட அதனின் ஒளியில், நீர் படலாமாய் பல உருவங்கள் தங்கள் முன் நிற்பது தெரிந்தது.

“தினேஷ்…” மகி அலறிட, ” எல்லாமே பேயா மகி” எனக் கத்தினான் தினேஷ்.

மகி இன்னும் இன்னும் உயர செல்ல, அவள் மூச்சுக்குத் தவித்தாள்.

“அவளை விடுங்க” என்று தினேஷ் கத்தியபடி மகியை பிடிக்க முயற்சி செய்ய அவனால் கொஞ்சமும் அசைய முடியவில்லை.

“மகி என்னால முடியல” என தினேஷ் கத்திட…

புள்ளியாய் மறைந்த மகி, அதி வேகத்தில் தரையை நோக்கி இறங்கிட, அவளின் கைகள் அரணாக அவளது வயிற்றை இறுகப் பற்றியிருந்தது.

“அத்து.” உயிர் துறக்க இருக்கிறோம் என்ற அவளின் பயம், அவளை சமரை நினைத்த கதற வைத்தது.

‘உன்னைவிட்டு போகப்போறேனா அத்து? உன்கிட்ட ஒரு விஷயத்தை சொல்லாமலே உன்னைவிட்டு போறேன். என்னை மன்னிச்சிடு அத்து’ என மனதால் மகி மருகிட, தரையில் பலமாக விழ இருந்த தருணம் இரண்டடி உயரத்தில் நின்று மிதந்தாள் மகி.

தினேஷுக்கு மூச்சு நின்றே போனது.

“மகி ஒன்னும் ஆகலையே?” தினேஷ் மகியை தூக்கி நிறுத்த அருகில் செல்ல, பல பேர் சேர்ந்து தினேஷை தடுத்து இழுத்துப் பிடித்தனர். தொடுகையை உணர முடிந்தது. யாரென்று கண்ணுக்குப் புலப்படவில்லை.

“கண்ணுக்குத் தெரியாம ஒளிஞ்சு வீரத்தைக் காட்டாதீங்கடா” என்று தினேஷ் கத்தினான்.

மகியால் அசைய முடியவில்லை. காற்றில் மிதந்தபடியே என்று சொல்ல முடியாது, யாரோ இருவரின் கையில் ஏந்தி நிற்கிறோம் என்பது தெரிந்தது.

“யாரு?” மகி நடுக்கத்தோடு வினவ,

“சாகப்போற நீ எங்களை தெரிஞ்சு என்ன பண்ணப்போற?” என்ற குரல் மட்டும் ஒலித்தது.

“இவங்க எல்லாம் இன்விசிபுள் மென் மாதிரி தெரியுது மகி!” தினேஷ் சொல்லிட, மகி தன்னை பிடித்திருக்கும் தொடு உணர்வை வைத்து, தன் கையால் பிடிக்க, அது ஒருவரின் கை என தெரிந்தது.

“எக்சாக்ட்லி தினேஷ். இவங்க எல்லாம் பேய் கிடையாது” என்று மகி சொல்ல…

“நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு அறிவாளியா இருந்திருக்க வேண்டாம்” என்று அதீத சிரிப்பு சத்தத்துடன் ஒரு குரல் ஒலித்தது.

அந்த குரல் மகிக்கு நல்ல பரிட்சயமானதாகத் தெரிந்திட…

“உன்னை கொலை பண்ணக் கூடாதுன்னு தான் தோணுது. ஆனால் என்ன பண்றது? கொஞ்சம் தெரிஞ்சுகிட்ட உங்களை உயிரோடு விட்டால்… என்னோட மொத்தமும் தெரிய வாய்ப்பிருக்கு. அதனால் இப்போ நீங்க” என்ற குரல் நின்றுவிட…

காற்றில் மருந்து நிரம்பிய ஊசி ஒன்று மிதந்தது.

இங்கு நடப்பது எதையும் தடுக்க முடியாது தும்பையின் ஆவி முட்டி மோதி அலைந்தது.

ஊசி மகியை நெருங்கிட…

“ஹேய்… விடுங்க. அவளை விடுங்க” என்ற தினேஷ் ஊசியை பிடிக்க முயல, உருண்டு கீழே விழுந்த தினேஷ் அடுத்து எழ முடியாதளவுக்கு அவர்களின் தாக்குதலில் திணறினான்.

“தினேஷ்” என்ற மகியால் கத்தக்கூட முடியவில்லை.

சில நிமிடங்களில் தினேஷ் இரத்தத்தால் நனைந்திருந்தான். உடல் முழுக்க அத்தனை காயம். அவனால் மகியின் நிலையை கண் கொண்டு பார்க்க முடியவில்லை.

பலர் வட்டமாக நின்று அவளை பந்து போல மாற்றி மாற்றி சுழற்றுவது தெரிந்தது. உடன் மகியின் கதறல். தினேஷால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

தினேஷின் கண்கள் மெல்ல சொருக, தன் உயிர் பிரிகிறது என்பதை அவன் ஆழ் மனம் உணர்த்தியது.

அந்நொடி மகியின் உடலில் ஊசி இறங்க… உடல் தள்ளாடி நகர்ந்து சென்ற மகி, பின்னாலிருந்த பள்ளத்தாக்கு நோக்கி சரிந்திட, “மகி” என்ற கூவலோடு தினேஷ் கண் மூடியிருந்தான்.

மகியின் உடலில் செலுத்தப்பட்ட மருந்தின் தாக்கத்தால், சடுதியில் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவாக, மகியின் உடலிலிருந்து காற்றாய் சில நுண் துகள்கள் வெளியேறியது.

“இந்த இடமா லட்டு?”

மகி கண்ணீர் வழிய ஆமென்றாள்.

“உங்களை அன்னைக்கு நைட் தாக்கியது அமானுஷ்யம் கிடையாது ரைட்?” என்ற சமர், “இப்போ ஏன் எங்களை தாக்கல?” எனக் கேட்டான்.

“தெரியல” என மகி சொல்லும் போது, “இன்னும் கொஞ்ச முன்னேறி போங்க” என்றது தும்பை.

“போனால்?” கேட்ட சீனுவை தும்பை முறைக்க அவ்விடம் அனல் கூடியது.

“சும்மா முறைச்சு வெப்பத்தைக் கூட்டாத. உடம்பெல்லாம் சூடுல எரியுது” என்றான் சீனு.

உடனே மகி தன் சில்லிப்பை பரப்பிட, நொடியில் அவ்விடம் சீரானது.

சமர் அவ்விடத்தை பார்வையால் அலசியபடி ஒவ்வொரு அடியையும் மிக கவனமாக எடுத்து வைத்தான்.

அப்போது தான் பொம்மை பறவைகள் பல அவ்விடத்தில் நிறைந்திருப்பது தெரிந்தது.

சமர் ஒன்றை எடுத்து ஆராய, அதனின் கண்களில் காமிரா பொருத்தப்பட்டிருந்தது.

“நான் நினைச்சது தான்” என்ற சமர், “இந்த மலைப் பாதையில் யாரும் அடி வைத்தாலே எதிர இருப்பவனுக்கு தெரிஞ்சிடுது. நீங்க சொன்னது வச்சு நிச்சயம் காமிரா மூலம் தான் இவ்விடத்தைக் கட்டுப்பாட்டில் வச்சிருக்கணும் கெஸ் பண்ணேன். அதான் ஜாமர் கொண்டு வந்தேன்” என்றான் சீனுவை அர்த்தமாக ஏறிட்டு பார்த்தான்.

“ஜாமரால் காமிராஸ் வொர்க் ஆகல. நாம இங்க வந்த நியூஸ் அவனுக்கு போய் சேரல. அதனால் தான் அன்னைக்கு உங்களை தாக்கிய யாரும் இப்போ இங்க வரல” என்றான் சீனு.

“அப்போ இந்த முறை எதும் தடையாக நடக்கறதுக்குள்ள மேல போயிடலாம்” என்ற தும்பை ஒரு குறிப்பிட்ட தூரம் வந்ததும் தூக்கி வீசப்பட்டாள்.

மகி அந்த பகுதியை எளிதாக கடந்திருக்க, தும்பை அவ்விடத்தை தொடக் கூட முடியாது எரிந்து காற்றாகினாள்.

Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
Scroll to Top