அன்பின் அதீதம் 10

அத்தியாயம் 10

“மாமா போலாமா?”

தனதறை பால்கனியில் நின்று அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த தீரனை, அறை வாயிலின் நிலைப்படியில் நின்று உள்ளே எட்டிப் பார்த்தவளாக அழைத்திருந்தாள் மயிலாஞ்சலி.

“உள்ள வா மயிலா” என்ற தீரன், அவளை அமரும்படி நீள்விருக்கையை காண்பித்துவிட்டு மீண்டும் அலைபேசி அழைப்பில் கவனமாகிவிட்டான்.

அந்த அறை அவளுக்கு புதியதல்ல… ஆனால் இன்று புதுவித வாசனை அவளை சூழ்ந்தது.

அறையைச் சுற்றி பார்வையை ஓட்டியவள், தீரன் கொண்டு வந்திருந்த உடைப்பெட்டி திறந்திருக்க, அவனது ஆடைகளை எடுத்து அலமாரியில் அடுக்க ஆரம்பித்தாள்.

பேசி முடித்து வந்த தீரன்,

“அஃபிசியல் கால்” என்றதோடு, “நானே எடுத்து வைக்கணும் நினைச்சேன்” என்றான். அவள் அடுக்கி வைத்த ஆடைகளை சுட்டிக்காட்டி.

“இந்த ஆலிவ் கிரீன் கலர் சொக்காவுல அம்சமா இருப்பீங்க மாமா” என்று தனது கையிலிருந்த சட்டையை அவனுக்கு வைத்துப் பார்த்த மயிலாஞ்சலி, “வேட்டியே இல்லையா?” என்று அலமாரியில் வைத்த துணிகளை ஏறயிறங்க நோட்டம் விட்டுவிட்டு, “இந்தா வாரேன்” என்று வெளியில் ஓடினாள்.

“மயிலா நில்லு” என்று தீரன் கூறியது காற்றில் கரைந்தது.

சென்ற அடுத்த நிமிடம் கையில் வேட்டியுடன் வந்திருந்தாள்.

“இந்தாங்க. அப்பா வேட்டி. இப்போதைக்கு இதை கட்டிக்கோங்க. அடுத்தடுத்த தேவைக்கு மருத போய் புதுசு வாங்கிப்போம்” என்றாள்.

“இப்போ வேட்டியை உடுத்திக்கிட்டு எங்க போறதாம்?” தீரன் கேட்க,

“கிளம்பி வாங்க மாமா” என்று அவனை அங்கிருந்த மற்றொரு அறைக்குள் தள்ளினாள்.

“எவ்ளோ நேரம் மாமா?” என்றவள், இருக்கையில் அமர்ந்து கால்களை ஆட்டியபடி இருந்தாள்.

“வேட்டி கட்டினதே இல்லடா. சரியாத்தேன் உடுக்கனான்னு டவுட்டாவுது. இடுப்புல நிக்கவே மாட்டிக்குது” என்று உள்ளிருந்து கூறியிருந்தான்.

“மே ஐ ஹெல்ப் யூ மாமா?”

“ஒதப்படுவ ராஸ்கல்.” அவனது இதழ் நீண்டு மலர்ந்தது அவன் மட்டுமே அறிந்தது. அவளிடத்தில் மட்டுமே தோன்றும் வெட்கத்தில் அத்தனை மகிழ்வு நிறைவு கொள்கிறது.

“எல்லாருக்கும் பரிசு வாங்கிட்டு வந்து கொடுத்திருக்கீய்ங்க… எனக்கு ஒண்ணும் இல்லையா?”

மயிலாஞ்சலி கால்கள் ஆட்டிக்கொண்டே இருக்க அவளின் கொலுசின் சத்தம் சங்கீதமென அவனின் அகம் சேர்ந்தது.

“வாங்கியிருக்கேன். ஆனா இப்போ கொடுக்க முடியாது” என்று ஆடை மாற்றி வந்த தீரன்,

“எதுக்கு இப்போ ட்ரெஸ் சேஞ்ச்?” எனக் கேட்டான்.

“எப்படியிருந்தாலும், வாங்கினது எனக்குத்தான. எப்போ தோணுதோ கொடுங்க. வாங்கிக்கிறேன்” என்றவள், “பொண்ணு பார்க்க போறோம்” என்றாள்.

“யாருக்கு?” என்று கேட்டவாறு கண்ணாடி முன்பு நின்று தலைமுடியை சரி செய்துகொண்டிருந்த தீரனின் கரம் அசைவற்று நின்றது. மயிலாஞ்சலி சொல்லிய பதிலில்.

“யாருக்கா? உங்களுக்குத்தேன். ஐயா உங்ககிட்ட எல்லாம் சொல்லியாச்சு சொன்னாய்ங்க. பொண்ணு நம்மவூரு மலைக் கோயிலுக்கு வருதாம். உங்களை கூட்டிட்டுப் போயிட்டு வரச்சொன்னாய்ங்க” என்றாள்.

தீரனின் மனம் முழுக்க அவனது மயிலா நிறைந்திருக்க அவனால் அவனுக்கு திருமணம் என்று சொல்லியதையே கருத்தில் பதிய வைத்திட முடியவில்லை.

மதிய உணவின் போதுதான்,

“பொண்ணு வூட்டுல நீயி வந்துட்டன்னு சொன்னேன். பொண்ணு உன்னைய இன்னைக்கே பார்க்கணும் சொல்லுது தீரா. தனியா வூட்டுக்கு போவ ஆவாது. உன் அண்ணன் எவனையும் கூட்டிட்டுப் போக முடியாது. பொம்பளை பிள்ளையை பார்த்து பேச எதுக்கு ஆம்பிளை பையனைக் கூட்டிட்டு… நீயி நம்ம அஞ்சலியை கூட்டிட்டு போயிட்டு வந்துடு. எங்க சந்திக்கணும்னு இன்னும் கொஞ்ச நேரத்துல சொல்றதா சொல்லியிருக்காய்ங்க” என்றிருந்தார் முத்து மாணிக்கம்.

“அவனுக்கு விருப்பமா இல்லையான்னு ஒரு வார்த்தைக் கேட்டுக்கிட்டு முடிவு பண்ணுவோமே ஐயா” என்று அர்ச்சனா சொல்ல, தீரன் அவளைத்தான் அழுத்தமாகப் பார்த்தான்.

‘பேச மட்டும் முடியாது… இந்த அக்கறைக்கு ஒண்ணும் குறைச்சலில்லை.’ மனதோடு சடைத்தவனாக முகத்தை திருப்பிக்கொண்டான்.

“எல்லாருக்கும் எல்லாரும் சேர்ந்து பார்த்து பேசி முடிச்சுதானே கண்ணாலம் ஆச்சு. இப்போ நல்லாத்தானே இருக்கீய்ங்க?” என்ற முத்து மாணிக்கம், “இப்போ போனா திரும்ப எப்போ வாரானோ. கண்ணாலத்தை முடிச்சு அனுப்பி வச்சா நம்ம மனசு நிம்மதியா இருக்குமா இல்லையா?” என்றார்.

“நீங்க சொன்னா சரிதேன் ஐயா” என்ற மாயவேல், “போயிட்டு வந்திடுப்பா. இன்னைய பாஞ்சா (பதினைந்து) நாலு கண்ணாலத்துக்கு தேதி குறிச்சிருக்கு. அதுக்குள்ள நீங்க ரெண்டேரும் மனசு விட்டு பேசிக்கோங்க” என்றார். மகனிடத்தில்.

தீரனுக்கு அஞ்சலியிடம் சொல்லாது தன்னுடைய விருப்பத்தை குடும்பத்தாரிடம் வெளிப்படுத்த மனமில்லை.

அதற்காக மட்டுமே அப்போது அமைதியாக இருந்தான்.

அடுத்தடுத்த பேச்சுக்கள் அவனைப்பற்றி சுழல… பேசி முடித்து ஓய்வெடுப்பதாக அறைக்குள் வந்தவன், தன்னவளின் நினைப்பில் தன்னுடைய திருமணப் பேச்சினையே மறந்திருந்தான். தற்போது மயிலாஞ்சலி சொல்லும்வரை.

“என்னாச்சு மாமா?” என்று அசைவற்று நின்றிருந்த தீரனின் தோள் தொட்டு சுயமீட்ட மயிலாஞ்சலி, “உங்களுக்கு மேரேஜ் பண்ணிக்க விருப்பமில்லையா?” என கேட்டிருந்தாள்.

“எப்போ மேரேஜ் பத்தி பேசினாலும் உறைஞ்சுப் போயி நிக்கிறீங்க. உங்க மனசுல என்ன இருக்குன்னு சொல்லுங்க மாமா. இப்போ வேணான்னா கொஞ்ச நா செண்டு பண்ணுவோம்” என்றாள்.

அவனுக்காக யோசித்து பேசும் அவளை அந்த நிமிடம் இறுக்கி அணைத்து தனது காதலை சொல்லிட மனம் உந்திட…

“உன்கிட்ட ஒன்னு சொல்லனும் மயிலா” என்று தீரன் முடிக்கும் முன்னர்,

“இன்னும் கிளம்பலயா? அங்கிட்டு அந்தப்பொண்ணு வந்திருச்சாம். உங்க அய்யனுக்கு போன் போட்டுச்சு. இன்னுமாட்டிக்குமா போவலன்னு ஐயா கோவப்படுறாய்ங்க” என்று வந்தார் துளசி.

அவனது காதலை சொல்லும் நொடி தள்ளிச் சென்றது.

‘அங்க ஒரு பொண்ணை காக்க வச்சு இங்க நீ பொறுமையா இருக்கிறது சரியில்லை தீரா. அந்தப்பொண்ணுக்கிட்டவே முடியாது சொல்லிடு’ என மனதில் நினைத்தவன்,

“கிளம்பிட்டோம்மா” என்றான்.

“ம்ம்… நாங்க எல்லாம் பேசி முடிவு பண்ணிப்புட்டோம் தீரா. ஐயா சொன்னா நீயி மறுக்கமாட்டன்னு அம்புட்டு உறுதியா பொண்ணு வூட்ல பேசியிருக்காரு. நீயி உன் சேட்டையை இதுல காமிச்சிடாத” என்ற துளசி, “கண்டிப்பா உனக்கு பொண்ணை பிடிக்கும்” என்றிருந்தார்.

மனதில் தோன்றிய ஆயாசத்தை உள்ளுக்குள்ளே மறைத்தவன்,

“சரிம்மா” என்றான்.

“நான் பொண்ணை பார்த்து சரின்னாக்கா எம் மாமாவுக்கும் சரிதேன் அம்மத்தா. நீங்க கவலைப்படமா இருங்க” என்ற மயிலாஞ்சலி தீரனுடன் வெளியில் வந்தாள்.

“பார்த்து சூதானமா போய் வாங்க” என்ற கொற்றவை, “உன் வேலையை நாங்க ஏதோ மாத்தி சொல்லிப்புட்டோம் ராசா. நீயி சரியா சொல்லிப்புடு” என்றார்.

“மொத பொண்ணை மாமாவுக்கு நேர்ல பார்த்து புடிக்கட்டும். பொறவு மத்தது” என்ற மயிலாஞ்சலியின் கன்னத்தில் இடித்த கொற்றவை,

“எல்லாம் பேசி முடிவாகிப்போச்சு. அவதேன் நம்ம தீரனுக்கு. இனி மாத்த ஆவாது. அதை மனசுல வச்சிக்கிட்டு போய் வாங்க” என்று அனுப்பி வைத்தார்.

“பைக் வேணுமாடே?” அரவிந்த் தீரனிடம் கேட்க,

“அதெல்லாம் வேணாமாட்டிக்கு. நான் என் வண்டியிலே கூட்டிட்டுப் போயி வந்துடுறேன்” என்ற மயிலாஞ்சலி தன்னுடைய இருசக்கர வாகனத்தை உயிர்ப்பித்திருந்தாள்.

தீரன், அரவிந்தை பார்த்து புன்னகைத்தபடி இருபக்கமும் கால் போட்டவாறு மயிலாஞ்சலியின் பின்னால் அமர, வண்டி நகர்ந்தது.

செல்லும் இருவரையும் பார்த்திருந்த அரவிந்துக்கு, அன்றைய நாளில் பலமுறை தோன்றிய எண்ணம் இக்கணமும் தோன்றியது.

“இவீங்களையே ஜோடி சேர்த்திருக்கலாமே!”

“ஆமா… யாருக்கும் தோணாமப்போச்சே!”

அரவிந்த் வாய்விட்டு சொல்லியிருக்க அவனுக்கு பின்னால் ஒலித்தது அர்ச்சனாவின் வருத்தமான குரல்.

“அக்கா…”

அரவிந்த் அர்ச்சனாவுக்கு அத்தை மகனாக இருப்பினும், அவனைவிட அவள் மூத்தவள் என்பதால் அக்கா என அழைத்தே பழகியிருந்தான்.

“என்னடா அக்காவுக்கு?” என்று தனது வேதனை சுமந்த கண்களை புடவையால் தேய்த்து மறைத்த அர்ச்சனா, “என் ஆசை நிறைவேறாம ஆக்கிட்டீங்கல?” என்றாள்.

“அக்கா உண்மையிலே யாருக்கும் இப்படி சின்ன நினைப்புக்கூட வரல. வந்திருந்தா விட்டிருப்போமா? அஞ்சலி வயசை வச்சு இந்த நினைப்பு வரலையாட்டுக்கு” என்ற அரவிந்த், “நீயி அவன் கல்யாணப்பேச்சு ஆரம்பிச்ச அப்போவே சொல்லியிருக்கலாமேக்கா” என்றான்.

“என்னன்னு சொல்ல சொல்றடே?” என்ற அர்ச்சனா, “உங்களுக்கு வேணுமின்னா தீரன் சம்மதம் வேணாமா இருக்கலாம். ஆனால் எனக்கு அவனுக்கான கண்ணாலத்துல அவனோட விருப்பம் முக்கியம். அவன் வந்ததும் நேர்ல பேசிக்கிடுவோம் இருந்தேன். இப்படி ஒரு நா யாரும் எதிர்ப்பார்க்காம, பொண்ணு வூட்டுக்கு கூட்டிட்டுப் போயி நிப்பீங்கன்னு கனவா கண்டேன் நானு. மொத பொண்ணு பார்த்தப்போ எம் மவ(ள்) கண்ணுக்குத் தெரியலையாங்கிற கோவத்துல அமைதியா இருந்துட்டேன்” என்றாள்.

மண்டபத்தில் வைத்து பார்த்த பெண், வீட்டில் அதிக எண்ணிக்கை என காரணம் காட்டி மறுத்திருக்க, இரண்டு நாளில் அனைவரும் சரியாகட்டும் தனது ஆசையை சொல்வோமென்று அர்ச்சனா காத்திருக்க… அடுத்தநாளே முத்து மாணிக்கம் கயல்விழி தன்னுடைய சொந்தத்தில் சொல்லிய பெண்ணை பார்த்திட குடும்பத்தையே அழைத்துச் சென்றுவிட்டார். அங்கு வைத்து அர்ச்சனாவால் எப்படி தன்னுடைய எண்ணத்தை சொல்லிட முடியும்?

வீட்டிற்கு சென்ற பின்னர் பார்த்துக்கொள்வோம் என்றிருக்க, முத்து மாணிக்கம் தீரன் திருமண விடயத்தில் இத்தனை வேகம் காட்டுவாரென்று அர்ச்சனா எதிர்பார்க்கவில்லை.

ரத்னவேலுவும் வெளியூர் சென்றிருக்க, அர்ச்சனாவுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

பெண் பார்த்த கையோடு அடுத்தடுத்த முடிவுகளை முத்து மாணிக்கம் வரிசைப்படுத்த அர்ச்சனா தன்னுடைய ஆசையை மொத்தமாக மனதில் பூட்டியிருந்தார்.

“உன் ஆசை தெரிஞ்சிருந்தா யாரும் மறுப்பு சொல்லியிருக்க மாட்டாய்ங்கக்கா” என்ற அரவிந்துக்குமே தற்போது தீரன், மயிலாஞ்சலி ஒன்று சேர்ந்திருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

“இனி புலம்பி என்னாவப்போவுது. பொண்ணு யாரா இருந்தாலும் வாழ்க்கை என் தம்பியோடது. நல்லாயிருக்கட்டும். கண்ணாலமே முடிவாகிப்போச்சு. இனிமேலும் இதை பேசுறது நல்லாயிருக்காது” என்ற அர்ச்சனாவின் முகமே அத்தனை ஏமாற்றத்தை வெளிக்காட்டியிருந்தது.

*****************************

“என்ன மாமா அமைதியா வாரீங்க?”

தீரன் எதுவும் பேசாது வரவே மயிலாஞ்சலி கேட்டிருந்தாள். வண்டியின் கண்ணாடியில் அவன் முகம் பார்த்து.

“மாமா எப்போ வராய்ங்க?”

“இன்னைக்கு ராவுக்கு வந்திடுவாய்ங்க” என்ற மயிலாஞ்சலி, “அம்மத்தா வர முன்னுக்க, என்னவோ சொல்ல வந்தீங்களே என்னது மாமா?” என நினைவூட்டியவளாகக் கேட்டிருந்தாள்.

“போற வேலையை முடிச்சிட்டு சொல்லுறேன்” என்ற தீரன், “எக்ஸாம் எப்படி பண்ணியிருக்க?” எனக் கேட்டான்.

“அதெல்லாம் நல்லாத்தேன் பண்ணியிருக்கேன்” என்ற மயிலாஞ்சலி, “உங்களுக்கு கண்ணாலம் பண்ணிக்க என்ன சங்கட்டம்?” என்றாள்.

“என்னவோ யாரோ தெரியாதப் பொண்ணை டக்குன்னு உரிமைங்கிற இடத்துல வச்சு பார்க்க முடியல… ஒரு மாதிரி ஆக்வோர்டா இருக்கு” என்றான்.

“ஏதே” என்றவள் வண்டியை சட்டென்று சாலையிலே நிறுத்தியிருந்தாள்.

“ஹேய் பார்த்து” என்ற தீரன், அவளின் தோள் பிடித்து நிலைகொண்டான்.

“அப்போ தெரிஞ்சப்பொண்ணு வேணுமின்னா யாருக்குமே கண்ணாலம் ஆவாதே மாமா” என்றவள், “அந்த ஜூலியானா டேட் கூப்பிடாம லவ் யூ சொல்லியிருந்தா கண்ணாலம் பண்ணியிருப்பீங்களோ?” என்றாள். பின்னால் தலையை மட்டும் பக்கவாட்டாகத் திருப்பி அவனைப் பார்த்துக் கேட்டாள்.

“அதுக்கும் பிக் நோ தான்” என்ற தீரன், “அன்னைக்கு கேட்டுட்டியா நீயி? அதான் கோபமோ?” என்றான்.

“ஆமா கேட்டாய்ங்க” என்று உதடு சுளித்த மயிலாஞ்சலி, “என்னவோ நீங்க சரியா இருந்தாலும், அவங்க பேச்சை அன்னைக்கு ஏத்துக்க முடியல. உங்க மேல கோபமெல்லாம் இல்லை. எக்ஸாம் டைம். கொஞ்சமா பிஸி” என்றதோடு, “உங்களுக்கு நிறைய ஃபேன் பேஸ் இருக்கும் போலவே” என்றாள்.

“ஆமா ஆமா இதுக்கு முன்ன உனக்கு எக்ஸாம் வந்ததே இல்லை” என்ற தீரன், “அது அவங்க கல்ச்சர். நம்மளை மாதிரி மேரேஜ் அவங்களுக்கு லைஃப் லாங் கமிட்மென்ட் கிடையாது. யாரும் யார்கூட வேணாலும் பிடிச்ச மாதிரி வாழலாம். அதுக்காக அவங்களை தப்பு சொல்ல முடியாது” என்றான்.

“அதுசரி” என்ற மயிலா வண்டியை முடுக்கியவளாக, “அப்போ மாமாவும் பிடிச்ச மாதிரி வாழ ஆசைப்படுறீங்களாக்கும்?” என்றாள்.

“ஆமா… பிடிச்ச மாதிரி… என் மனசுக்கு பிடிக்கிற பொண்ணோட வாழ்க்கை முச்சூடும் வாழ ஆசைப்படுறேன்” என்றான்.

கண்ணாடியில் தெரிந்த அவளின் ஒரு பக்க முகத்தை மட்டும் பார்த்து காதலாய்.

புரிய வேண்டியவளுக்கு புரியாது போனது.

“இப்போ பாக்குற பொண்ணை நீங்க சொல்ற மாதிரி பிடிக்கலாம்” என்றாள்.

“நீ பொண்ணை பார்க்கலையா?” தீரன் கேட்க,

“அன்னைக்கு பரீட்சை இருந்துச்சு. நான், அப்பா, ஆதி மாமா தவிர எல்லாரும் போய் பார்த்தாய்ங்க” என்றவள், “கோவில் வந்திருச்சு” என்று வண்டியை நிறுத்தினாள்.

“நீங்க போய் பேசிட்டு வாரீங்களா மாமா. நான் இங்கிட்டே இருக்கேன்” என்றாள்.

“தனியா எப்படிடா… அதுவும் ஒரு பொண்ணை பார்த்து” என்று தீரன் இழுக்க,

“நியூயார்க்கில் இருந்தாலும் நீங்க இன்னும், நானும் மதுரைக்காரன் தாண்டா அப்படிங்கிற ஆளாவாதேன் இருக்கீய்ங்க” என்று சிரித்தாள்.

“எங்க இருந்தாலும் நமக்குன்னு இருக்கிற குணத்தை மாத்திக்கக்கூடாது” என்ற தீரன், “அந்தப்பொண்ணை எப்படி கண்டுபிடிக்கிறது?” என்றான்.

“மொத படியேறி கோவிலுக்கு போவோம். இங்கிட்டு இந்த நேரத்துக்கு கூட்டமிருக்காது. ஈசியா கண்டுபிடிச்சிடலாம். இல்லைன்னா பொண்ணு நெம்பர் ஐயாக்கிட்டு கேட்டு வாங்குவோம்” என்றவள், தீரனுடன் இணைந்து படியேறினாள்.

“இந்த கோவில் நெனப்பிருக்கா மாமா?”

“ம்ம்… குரங்குக்கு வாழைப்பழம் கொடுக்கிறேன்னு நீ பண்ண அட்டகாசம் தான? நினைவிருக்கு” என்று சிரித்தான்.

“நீங்க சிரிச்சா அழகா தெரியுறீங்க மாமா” என்றவள், “மீசையை நம்ம ஊரு பசங்க மாதிரி ஷார்ப்பா வைச்சுக்கோங்க மாமா. மாஸ்ஸா இருப்பீங்க” என்றாள்.

இதெல்லாம் அவளுக்கு அவனை பிடிக்கும் என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே கூறுகிறாள் என்பது புரிந்திட, சரியென புன்னகையை மட்டுமே பதிலாக வழங்கினான்.

கோவில் பூசாரி இவர்கள் குடும்பத்திற்கு தெரிந்தவர் மற்றும் நல்ல பழக்கம் என்பதால், இருவரும் சாமி கும்பிட்டு முடித்ததும்,

“அங்கிட்டு காவடி மடத்துக்கிட்ட இருக்க வேப்ப மரத்துக்கு கீழ நிக்கிற பொண்ணுதேன். கொஞ்சம் முன்னுக்கதேன் ஐயா போன் பண்ணாய்ங்க” என்று கூறினார்.

“சரிங்க பூசாரி” என்ற மயிலாஞ்சலி, தீரனின் நெற்றியில் திருநீறு வைத்துவிட்டு,

“இங்காருங்க மாமா யாரென்ன சொல்லியிருந்தாலும் கண்டுக்காதீங்க… உங்களுக்கு பொண்ணு புடிச்சாதேன் கண்ணாலம். சரியா! அதை விட்டுப்போட்டு ஐயாவுக்கு புடிச்சிருக்கு, நம்ம வீட்டு வாண்டு சாஹித்யாவுக்கு புடிச்சிருக்கு… எல்லாம் பேசி முடிவு பண்ணிட்டாய்ங்க. இனி ஒன்னுமே பண்ணமுடியாது… அப்படி இப்படின்னு மனச போட்டு உளப்பிக்கிட்டு இருக்காதீங்க. பேசுங்க, புடிச்சிருக்கு… ஒத்துவரும்னு உங்க மனசுக்கு பட்டா மட்டும் சரின்னு சொல்லுங்க” என்றாள்.

“மயிலா சொன்னா கண்டிப்பா கேட்க வேண்டியதுதேன்” என்ற தீரன், “நீயும் வா” என்றான்.

“நீங்க பேசுங்க மாமா. நான் பிரகாரத்தை சுத்திட்டு வாரேன்” என்றவள், “ஆல் தி பெஸ்ட் மாமா” என்றாள். துள்ளலோடு.

செல்லாது அவளையே பார்த்து நின்ற தீரன்,

“மாமா” என்றவளிடம்,

“உனக்கு ஒண்ணுமே தோணலையா மயிலா?” எனக் கேட்டிருந்தான்.

“என்ன தோணனும். புரியல மாமா” என்றாள்.

“எனக்கு இன்னொரு பொண்ணுக்கூட கல்யாணம்… இப்போ நான் அவங்ககிட்ட பேசப்போறது… இதெல்லாம்” என்றிருந்தான்.

தன்னைப்போலான காதல் அவளிடத்தில் இல்லையென்று அவனுக்குத் தெரியும். இருப்பினும், திருமணம் என்ற பின்னர், தனக்கு அருகில் தன்னுடைய மயிலா அன்றி வேறொரு பெண் என்ற எண்ணமும், ரிச்சியின் சீண்டலும் தானே அவனுக்கு அவனது காதலை காட்டிக்கொடுத்திருந்தது.

அதுபோல் அவளுக்கும் சின்னதாகவேனும் சிறு சலனம், சிறு வருத்தம் அல்லது தன்னுடைய உடமையை இன்னொருவர் சொந்தம் கொண்டாட இருக்கின்றார் எனும் மருகலை உண்டாக்கியிருக்குமோ எனும் எதிர்பார்ப்பில் கேட்டுவிட்டான்.

தீரன் கேட்ட பொருள் அவளுக்கு விளங்கவில்லை.

“என் மாமாவுக்கு கண்ணாலம் அப்படின்னா எனக்கு சந்தோஷந்தேன் மாமா” என்றிருந்தாள்.

“ஹோ… அப்போ ஒண்ணுமே இல்லையா?” என்றான்.

மயிலாஞ்சலி புருவம் சுருக்கிட…

“உனக்கு என்னை பிடிக்குமா?” எனக் கேட்டிருந்தான்.

“உங்களுக்குத் தெரியாதா?” என்று முறைத்தவள், “அப்பாவைவிடவே உங்களத்தேன் நிறைய புடிக்கும்” என்றாள்.

தான் கேட்பது, தான் உணர்த்துவதையெல்லாம் புரிந்துக்கொள்ளாது இருக்கின்றாள் என்ற அவனது கோபம், அவளின் பதிலில் சட்டென்று காணாமல் போயிருந்தது.

சன்னமாக முறுவலித்திருந்தான்.

“எனக்கு மேரேஜ் ஆகிட்டா, எனக்குன்னு ஒருத்தி வந்துட்டா, இப்போ இருக்க மாதிரி நீயி என்கிட்ட க்ளோஸா இருக்க முடியாது” என்றான்.

“ஏன்?”

“யோசி…” என்றவன் அப்பெண் இருக்கும் இடம் நோக்கிச் சென்றான்.

தீரன் கேட்டது, சொல்லியதென எதுவும் புரியாது குழம்பி நின்றிருந்தாள் தீரனின் மயிலா.

error: Content is protected !!
Scroll to Top