அத்தியாயம் 9
வீட்டின் வெளி வாயிலைக் கண்டதும், அன்று மனம் உடைந்து வீட்டை விட்டு வெளியேறிய நினைவில் தீரனின் நெஞ்சம் விம்மி அடங்கியது.
அவனது மன உணர்வுகளை அவதானித்த மயிலாஞ்சலி,
“ச்சூ… மாமா! என்னதிது?” என்று அவனது கையை இறுகப்பற்றி அழுத்தம் கொடுத்து விடுத்தாள்.
“உங்க வீடு மாமா இது. இன்னும் பத்து வருசம் செண்டு நீங்க இங்க வந்தாலும் இது மாறாது” என்றாள்.
தனக்காக சிறு சிறு விஷயத்தையும் யோசிக்கும் அவள் மீது பெருங்காதல் கூடியது அவனுக்கு.
“எல்லாரையும் கூப்பிடுவோம். உள்ளவே உட்காருங்க” என்ற மயிலாஞ்சலி உறவுகளை உரக்க அழைத்திட்டாள்.
அவளின் குரலுக்கு அனைவரும் வெளியில் வந்திருந்தனர்.
“என்னத்துக்கு இம்புட்டு சத்தமா கத்திட்டு நிக்குறவ?” என்ற அர்ச்சனா, “உனக்கு இன்னைக்கு கடைசி பரீட்சை. நேரமாவலையா?” எனக் கேட்டார்.
“இதோ கிளம்பிடுறே(ன்)ம்மா” என்ற மயிலாஞ்சலி, “உங்க எல்லாருக்கும் சர்ப்ரைஸ்” என்றாள்.
“காருக்குள்ள யாரோ இருக்கமாட்டிக்கு தெரியுது” என்ற தேவதாரணி, முன் கண்ணாடி வழி மகிழுந்திற்குள் உற்றுப் பார்க்க…
“ஆமா இருக்காங்க, ஆலம் கரைச்சு எடுத்துட்டு வாங்க அத்தை” என கலாவதியிடம் உரைத்தாள் மயிலாஞ்சலி.
“என்னத்துக்கு ஆலம்?” என்று கொற்றவை முன் வர, “இப்படி எல்லாரையும் வாசலுக்கு கூட்டிவச்சு என்ன விளையாட்டு அஞ்சலி இது?” என்று கேட்டார் துளசி.
“நான் விளையாடுல… இப்போ நீங்களே ஆலம் கரைச்சு எடுத்துட்டுவர ஓடுவீய்ங்க” என்ற மயிலாஞ்சலி வண்டியின் கதவினை திறந்திட, தீரன் மென் இதழ் விரிப்போடு இறங்கினான்.
பார்த்த கணம் அனைவருக்கும் சூழல் உறைந்தது. கண்கள் பனித்தன.
தீரனை பார்த்ததும், அன்பன், அறிவன், அரவிந்த், முத்துபிரபா நால்வரும்… ஒருசேர,
“தீரா” என அழைத்தபடி வேகமாக வந்து இறுக அணைத்திருந்தனர்.
எட்டு வருடங்களுக்குப் பிறகான தன்னுடைய வரவை எப்படி ஏற்பார்கள் என்று கலங்கியிருந்த தீரனுக்கு தன்னுடைய சகோதரர்களின் அணைப்பு பெரும் ஆசுவாசத்தை அளித்தது.
“இப்படி ஒரேயடியா பல வருசம் அங்கிட்டே தங்கிட்டியேடே!” என்று அரவிந்த் தீரனின் தோள் தட்டிட…
“அம்புட்டுக்கு வீம்புடே உனக்கு” என்று தீரனின் புஜத்திலே குத்தியிருந்தான் முத்துபிரபா.
“நானுமே இம்புட்டு வருசம் ஆவுமுன்னு எதிர்ப்பார்க்கலயே அண்ணே” என்று தீரன் சொல்ல,
“அதேன் உம்மேல கோவப்பட்டதுக்கு மொத்தமா எங்களையெல்லாம் தள்ளி வச்சிப்புட்டியே” என்றான் அன்பன்.
“அண்ணே அப்படியில்லை” என்று தீரன் முடிக்கும் முன்பு,
“பழசெல்லாம் என்னத்துக்கு. அதேன் வந்துட்டியானே” என்றான் அறிவன்.
“எல்லாரையும் பாரு. நம்ம கச்சேரியை பொறவு வச்சிப்போம்” என்று அரவிந்த் சொல்ல,
“ஆதிண்ணே எங்க?” எனக் கேட்டான் தீரன்.
“அண்ணே மாமாக்கூட வெளியூர் போயிருக்கு” என்றான் அறிவன்.
“ஹோ, அண்ணேவும் போயிருக்கா” என்ற தீரன்,
“எய்யா சாமி” என்று முன் வந்த கொற்றவையின் பாதம் பணிந்து எழுந்தான்.
கொற்றவை பேரனை ஆசீர்வதித்து அவனது கன்னம் கிள்ளி முத்தம் வைத்திட, துளசி பேச்சின்றி துளிர்த்த கண்ணீரை புடவை தலைப்பில் ஒற்றி எடுத்தார்.
அர்ச்சனா இமைகள் மூடாது தன்னுடைய தம்பியின் உருவத்தை கண்களுக்குள் நிரப்பி குளிர்வாய் மகிழ்ந்தாள்.
அத்தோடு இணைந்து நின்றிருக்கும் தன்னுடைய மகள் மற்றும் தம்பியின் பொருத்தத்தில், அவசரமாக தெய்வங்களுக்கு வேண்டுதல் வைத்தாள். மனதின் எண்ணம் உருவம் கொள்வதுதானே நியதி. அர்ச்சனா வேண்டுதலால் தன்னுடைய எண்ணத்திற்கு உருவம் கொடுத்திட நினைத்தார்.
‘என் கண்ணே பட்டுடும். எப்படியாச்சும் ஜோடிசேர்த்துப்புடு மீனாட்சி.’
“எப்படி தீரா இருக்க?” அஞ்சனைதேவி அவனருகில் வந்து கரம் பிடித்து வினவ,
“நல்லாயிருக்கேன் அக்கா” என்றவனின் பார்வை தன்னுடைய அச்சும்மாவை தேடியது.
அர்ச்சனா தான் தீரன் வண்டியிலிருந்து இறங்கியதும், வித்யாவின் பின்னால் மறைந்து நின்றுகொண்டாளே.
அசைவற்று உணர்வின் பிடியில் தன்னை கண்ணீர் சுமந்து பார்த்து நின்றிருக்கும் துளசியின் அருகில் சென்று,
“அம்மா” என தீரன் அழைத்திட,
“எஞ்சாமி” என்று மகனை தன்னுடைய மார்போடு தழுவியிருந்தார் துளசி.
“அதேன் வந்துப்புட்டானே பொறவு என்னத்துக்கு அழுவ” என்று முத்து மாணிக்கம் தன்னுடைய கம்பீரக் குரலில் கேட்டிட, “ஐயா” என்று பக்கம் வந்த தீரனை தோளோடு அணைத்து, “இந்த தாத்தனை மறந்துப்புட்டியேடே” என்றவராக நீர் தேங்கிவிட்ட கண்களை அழுத்தமாக மூடி திறந்தார்.
“ஐயா…”
“ரொம்ப வருசம் செண்டு பார்த்ததுல மனசு கலங்கிடுச்சுடே. வேறொன்னுமில்லை” என்றவர், கலாவதி ஆரத்தி எடுத்து வரவே,
“நேரா… நேரா நில்லுடே” என்றார்.
கலாவதி ஆரத்தி எடுத்திட,
“எங்களையெல்லாம் அம்புடுதா கொழுந்தனாரே?” என்று வம்பு செய்தாள் தேவதாரணி.
“அதெப்படி தெரியாமப்போவும்?” என்ற காயத்ரி, “தெரியலன்னா மதினி கெத்து காட்டி தெரியவச்சிடுவோம்” என்றாள் ஆதிரா.
“வந்தனைக்கே எம் பேரனை உம்ம சேட்டையைக் காட்டி அனுப்பி வச்சிடாதீங்கடி” என்று கொற்றவை தன்னுடைய மருமகள்களின் மருமகள்களை அதட்டினார்.
“விடுங்க அப்பத்தா… இவீங்க எனக்கு புதுசு இல்லையே. நான் இங்கிட்டு இருந்து போறதுக்கு முன்னவே மதினி எல்லாம் வந்தாச்சே” என்றான் தீரன்.
“அப்போ எங்க வாப்பேச்சு உங்களுக்கு பழகிப்போச்சு சொல்றீங்களா கொழுந்தனாரே?” என்று தேவதாரணி கேட்க,
“அப்படித்தாங்க மதினி” என சிரித்திருந்தான் தீரன்.
“எம்புட்டு நேரம் வெளியவே நிக்க வச்சு பேசுவீய்ங்க… உள்ள கூட்டிப் போத்தா” என்று துளசியிடம் கூறினார் கொற்றவை.
“வாய்யா…” துளசி அழைத்திட,
“எல்லா கோவமும் மறந்து வாடே” என்றார் முத்துமாணிக்கம்.
வீட்டிற்குள் நுழையும் முன்னர் தீரன் மயிலாஞ்சலியை திரும்பிப் பார்க்க, வண்டியிலிருந்து அவனது பெட்டியை இறக்கிக் கொண்டிருந்த மயிலா, ஏதோ உந்துதலில் அவனை பார்த்து கண்கள் சிமிட்டி,
“போங்க மாமா” என்று செய்கை செய்தாள்.
அசைந்ததோ எனும் விதமாக தலையசைத்த தீரன் வீட்டிற்குள் சென்றிருந்தான்.
“அதென்ன அவன் மட்டும் ஸ்பெஷல் உனக்கு?” மயிலாஞ்சலியின் கையிலிருந்த பெட்டியை வாங்கிய அன்பன் அவளின் தலையில் கொட்டியிருந்தான்.
“அவங்கன்னாவே பிடிக்கும். இதுக்கு ஸ்பெஷல் காரணமெல்லாம் தேவையில்லை” என்ற மயிலாஞ்சலி, “உங்களுக்கென்ன கடுப்பு?” எனக் கேட்டாள்.
“கடுப்பெல்லாம் இல்லை. கூடவே இருக்க எங்ககிட்ட இருக்க ஒட்டுதல விட, எங்கயோ கடல் கடந்து இருந்தவன்கிட்ட எப்படின்னு தெரிஞ்சிக்கத்தான் கேட்டேன்” என்றான்.
“உங்ககிட்டயும் நான் நெருக்கமாத்தேன் இருக்கேன். ஆனாலும் தீரா மாமா வேற. அம்புட்டுக்கு தொலைவுல இருந்தாலும் எனக்குன்னு வேணுங்கிற நேரம் நான் கேட்காமலே எல்லாமே செஞ்சிருக்காய்ங்க. உறவுக்கு கூட இருக்கிறது முக்கியமில்ல. உனக்கு நான் எப்பவும் இருக்கேங்கிற நம்பிக்கை போதும். அந்த நம்பிக்கையை எனக்கு இந்த நிமிஷம் வரைக்கும் மாமா கொடுத்திட்டு இருக்காங்க. இப்போ உங்களுக்கெல்லாம் நான் சோகமா இருக்கேன்னு சொன்னாத்தேன் தெரியும். ஆனால் தீரா மாமாக்கு, நான் சொல்லணும் அவசியமில்லை. நான் வாட்டமா இருந்தாலே மாமாக்கிட்டயிருந்து மெசேஜ் வரும். கனெக்ஷன் அப்படிங்கிறது ஹார்ட் டூ ஹார்ட் இருக்கணும் மாம்ஸ். அது எங்களுக்கு இருக்கு” என்றிருந்தாள்.
மயிலாஞ்சலி பேசப்பேச அன்பன் தனக்கு அருகிலிருந்த அரவிந்தைத்தான் அர்த்தமாகப் பார்த்திருந்தான்.
“சும்மா இங்கிட்டு நின்னு வெட்டிப் பேச்சு பேசாம பொட்டியலாம் தூக்கிட்டு வாங்க” என்ற மயிலாஞ்சலி வீட்டிற்குள் ஓடியிருந்தாள்.
“நாம தீரனுக்கு தப்பா வெளிய பொண்ணு பார்த்துட்டமோ?” கேட்ட அரவிந்தின் யோசனைதான் அன்பனுக்கும்.
“இந்த நெனப்பு வரவே இல்லையேடே நமக்கு” என்றான் அறிவன்.
“சரி இனி மாத்தவா முடியும்? யாருக்கு எங்க என்ன வாச்சிருக்கோ அதுதேன் நடக்கும்” என்று அரவிந்த் கூற,
“அஞ்சலி வீட்டோட பையன் வேணும் சொன்னதுக்கு இது காரணமா இருக்குமோ?” என்றான் அன்பன்.
“எது?” அறிவன் சுருங்கிய பார்வையோடு வினவினான்.
“அதேம்டா… அஞ்சலிக்கு தீரன் மேல விருப்பம்…” என்று இழுக்க,
“அப்படி எதுனா இருந்தாக்கா அவளுக்கு நம்மகிட்ட சொல்றளவுக்கு தைரியம் இருக்காட்டிக்கு” என்றான் அரவிந்த்.
“அதுவும் சரிதேன்” என்ற அறிவன், “ஆதிண்ணே வரட்டும். அஞ்சலிக்கிட்ட பேசச்சொல்லுவோம்” என்றான்.
“எங்க அப்பா, சித்தப்பாலாம் ஆளை காண்கல?” என்று தீரன் கேட்க, அவ்வீட்டு சில்வண்டு அனைத்தும் ஓடி வந்து அவனைக் கட்டிக்கொண்டன.
“ஹாய் சித்தப்பா…
“ஹாய் மாமா…”
“எல்லாரும் எப்படிடே இருக்கீய்ங்க” என்ற தீரன் அனைவரின் நலம் விசாரித்து இளையவர்களின் அன்பில் மூழ்கி திளைத்து மீண்டான்.
“மூணு தாத்தாவும் வயலுக்கு போயிருக்காய்ங்க” என்ற ஸ்ருதி, “எம்புட்டு நா இங்கிட்டு இருப்பீய்ங்க சித்தப்பு?” எனக் கேட்டாள்.
“டுவென்டி டேஸ் இருப்பேன் டா” என்ற தீரன், பிள்ளைகள் அனைவரும் சீருடையில் இருப்பதைக் கண்டு,
“ஸ்கூல் கிளம்பியாச்சா?” எனக் கேட்டான்.
“எஸ்… இப்போ வேன் வந்துப்புடும்” என்று அர்ஜூன் சொல்ல,
“ஆமா… ஆமா எல்லாம் ஓடுங்க” என்று பேரக் குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு பள்ளி வாகனம் வந்து நிற்கும் இடம் நோக்கிச் சென்றார் முத்து மாணிக்கம்.
“ஐயாவுக்கு இருக்க முக்கியமான வேலையே இப்போ இதுதேன்” என்று வித்யா சொல்ல,
“நீயி இங்கிட்டு வந்து உட்காருடே” என்றார் கொற்றவை.
கூடத்தின் நடுவில் தீரன் அமர்ந்திருக்க, அவனைச் சுற்றி மொத்தக் குடும்பமும் அமர்ந்திருந்தனர். ஒவ்வொருத்தர் கையிலும் காலை நேர உணவு பல வகைகள் இடம் பெற்றிருந்தன.
“என்னத்துக்கு இப்படி உட்கார வச்சு என்னையவே பார்த்துக்கிட்டு கிடக்கிறீய்ங்க?” கன்னத்தில் கை வைத்து ஒவ்வொருவரின் முகத்திலும் தனது பார்வையை நொடிக்கு அதிகமாக நிலைக்க விட்டு தீரன் கேட்டிருந்தான்.
“இம்புட்டு வருசம் பார்க்காத உங்க மொவத்தை இப்போ பக்கட்டுல பாக்குறாய்ங்களாம்” என்ற அஞ்சலி,
“உங்க ரூம்ல பொட்டி எல்லாம் வச்சாச்சு மாமா. சாப்புட்டு, உறங்கி எழும்புங்க நான் வந்துப்புடுவேன். சேர்ந்து ஊர் சுத்துவோம்” என்றவள், “பை மாமா” என்று கல்லூரி பையோடு வெளியேறியிருந்தாள்.
மயிலாஞ்சலி வெளியேறவும், அரவிந்த், அன்பன், அறிவன் மூவரும் உள்ளே நுழைந்தனர்.
அவர்களின் கண்ணில் விழுந்தது தீரனின் காதல் பார்வை. பட்டென்று விழிகளை மாற்றிக்கொண்டான் தீரன்.
அரவிந்த், “என்னடே கவனிப்பு பலமா இருக்கு” என்க,
“இம்புட்டும் நான் உண்கவாம்” என்று மலைத்துக் கூறினான் தீரன்.
“பொம்பளைங்க நாங்க எங்க பாசத்தை இப்படி சாப்பாட்டுலதேன் காட்டுவோம். வேறெதுல ராசா காட்ட முடியும்?” என்ற கொற்றவை, ஒரு வாய் உணவை பேரனின் வாயில் வைத்தார்.
அவரைத் தொடர்ந்து மற்றவர்களும் ஊட்டிவிட தீரனுக்கு கண்களில் குளிரும், நெஞ்சத்தில் மகிழ்வும் ஒருங்கே எழுந்தது.
தேவதாரணி, ஆதிரா, காயத்ரி மூவரும் மணம் முடித்து வரும் போது தீரன் பதின் பருவ சிறுவன். அவர்களுக்கும் அவன் தான் மூத்த மகனாக வலம் வந்திருந்தான். ஆதலால் அவர்களுக்கு அவனிடத்தில் கொழுந்தன் எனும் விலகல் இல்லாதுப்போனது.
அர்ச்சனா மட்டும் தள்ளி நின்றிருந்தாள். அவளுக்கு தம்பியை சேயாக மடி தாங்கிட மனம் தவித்தது. இருப்பினும் அவன் இத்தனை ஆண்டுகள் பிரிந்திருந்த கோபம் எட்ட நிற்க வைத்தது.
“என்னத்துக்கு கண்ணு கலங்குது” என்று தேவதாரணி தீரனின் கண்களை துடைத்துவிட,
“இதெல்லாம் திரும்ப கிடைக்கவே கிடைக்காதோன்னு பல நாள் ஏங்கியிருக்கேன் மதினி” என்ற தீரனின் குரல் தழுதழுத்தது.
“புத்திக்கெட்ட கோவத்துக்கு உன்னைய ஒத்தையில நிக்க வைச்சிப்புட்டோமே” என்ற துளசி, “இங்கிட்டே இருந்துடு சாமி” என்றார்.
“அது…” என்று இழுத்த தீரனுக்கு, தற்போது அங்கவே தங்கிட முடியாத சூழல்.
அவனது அலுவலகத்தில் புதிய தொழில்நுட்ப வடிவப் பிரிவில் அவன் மேற்கொண்டிருக்கும் ஆராய்ச்சி மிக முக்கியமானது. அதனை பாதியில் விட்டுவிட்டு அவனால் வர முடியாது. அந்த ஆராய்ச்சி எப்போது முடியுமென்றும் சொல்ல முடியாது. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்க அதிலிருந்து வெளியேற முடியாத நிலை. அதனை இப்போது அவர்களிடம் சொல்லி வருத்தம் கொள்ளச்செய்ய வேண்டாமென நினைத்தான்.
அவனின் அமைதியில் என்ன கண்டனரோ…
“லேசுல வேலையை விட முடியாதா சாமி?” எனக் கேட்டார் கொற்றவை.
“ம்ம்… ஆமா அப்பத்தா” என்று தீரன் சொல்ல…
“அம்புட்டுக்கு பெரிய உத்யோகமா?” என்றாள் வித்யா.
“கொஞ்சம் பெரிய வேலைன்னுதேன் நினைச்சிட்டிருக்கேன்…” என்று சிரித்த தீரன், “நியூயார்க் சாஃப்ட் டெக் கம்பெனியில் AI ரிசர்ச் டீம் ஹெட்” என்றான்.
“ஏதே!” என்று கலாவதி வாய் பிளந்திருந்தாள்.
“நெசமாதேன் சொல்றீங்களா?” என்று தேவதாரணி கேட்க,
“இதுல பொய் சொல்ல என்னயிருக்கு மதினி” என்ற தீரன், தன்னுடைய வாலட்டிலிருந்து அலுவலக அடையாள அட்டையை எடுத்துக் காண்பித்தான்.
“இவளுக காட்டுற பாவனைக்கு பெரிய வேலை மாதிரி தெரியுது. தீரன் சொல்றது உனக்கு விளங்குச்சா?” என்று கொற்றவை துளசியின் காதில் முணுமுணுத்தார்.
“எனக்கும் தெரியல அத்த” என்று துளசியும் அவர்களின் பேச்சினைக் கவனித்தார்.
“இந்த ஐடி கார்ட் காட்டுற வேலையெல்லாம் வேணாமாட்டிக்கு” என்ற ஆதிரா, அவளின் அலைபேசியை தீரனிடம் நீட்டி, “இதுல என் போட்டோவை நிலவுல உட்கார்ந்து நான் வடை சாப்பிடுற மாதிரி மாத்திக் கொடுங்க. அப்போ நம்புறேன்” என்றாள்.
அவள் கேட்டதில் AI பற்றி விவரம் அறிந்த அனைவரிடத்திலும் கொள்ளென்ற சிரிப்பு எழுந்தது.
“AI மூலமா ஒரு பிக் கிரியேட் பண்ண ஐந்து பிரிவில் வேலை நடக்கும். ஈசியா நான் கேட்ட மாதிரி இல்லைன்னு டெலிட் பண்ணிடுவீங்க. பட் அதுக்கு பின்னாடி நிறையவே உழைப்பிருக்கு. AI டேட்டா சென்டரில் வெப்பத்தைக் குறைக்க கூலிங் சிஸ்டமில் தண்ணீ பயன்படுத்தப்படுது. நீங்க இப்போ கேட்ட படத்தை கிரியேட் பண்ண 0.7 லிட்டரிலிருந்து 60 லிட்டர் வரை தண்ணீ செலவாகும். இப்போ சொல்லுங்க… இந்த படத்தை நான் உருவாக்கித் தரட்டுமா?” என்ற தீரன், “AI, பிக் ரெடி பண்றதுக்காக மட்டும் உருவாக்கப்பட்டது இல்லை. அதுக்கான தேவைகள் நிறையவே இருக்கு. சரியா யூஸ் பண்ணாம உங்க டைம் மட்டுமல்ல அதோட டைமும் வேஸ்ட் பண்ணிட்டு இருக்கீங்க” என்றான்.
தாங்கள் விளையாட்டாக பேசியப் பேச்சு அவனை தொழில் ரீதியாக தாக்கிவிட்டதென்று புரிந்த ஆதிரா தீரனின் அழுத்தமான பேச்சினை தவறாக எடுத்துக்கொள்ளவில்லை.
தீரன் நீட்டிய அடையாள அட்டையை வாங்கிய அன்பன்,
“நீ இம்புட்டுக்கு பெரிய பதவியில இருப்பன்னு யாருக்கும் தெரியாதுடே! பொண்ணு வீட்ல சாப்ட்வேர் கம்பெனியில ஐடி’ல இருக்கன்னுதேன் சொல்லியிருக்கு” என்றான்.
“பொண்ணு வீடா?” தீரன் கேள்வியாகப் பார்க்க…
மாயவேல் தன்னுடைய தம்பிகள் இருவருடனும் வீட்டிற்குள் நுழைந்தார்.
அனைவருக்கும் நடுவில் அமர்ந்திருந்த மகனை எதிர்பாராது பார்த்ததும் மாயவேல் மனதளவில் தளர்ந்து நின்றார்.
“தீரா” என்ற கூவலான அழைப்போடு கனகவேல் அருகில் செல்ல,
“சித்தப்பா” என்றவனின் தலை கோதினார்.
“நல்லாயிருக்கியாடே” என்று ராஜவேல் அவனின் தோளில் தட்டிக்கொடுத்திட, சிறு புன்னகையோடு நகர்ந்த தீரன்,
“அப்பா” என்று மாயவேலின் அருகில் சென்றான்.
“ரொம்பத்தேன் தேட விட்டுட்டடே” என்ற மாயவேல், மகனை தோளோடு தழுவியிருந்தார்.
“என்ன காலையிலே யாருக்கும் வேலை இல்லையாட்டுக்கு. நடு கூடத்துல ஒண்ணு கூடியிருக்கீய்ங்க?” என்று வயலுக்கு சென்றிருந்த ஆண்களுக்கு தேநீர் கொண்டுச் சென்ற மாலதியும், அவர்களுடன் அப்போதுதான் வந்தவராகக் கேட்டவாறு உள் நுழைந்தார்.
மாயவேல் அணைத்து நின்றிருந்த தீரனைக் கண்டதும்,
“தீரா” என்றவர், “ஆத்தாதேன் உன்னைய காண்காம போயிடுமோன்னு நித்தம் புலம்பிட்டு கிடந்தாக” என்று அவனின் கன்னம் வழித்து நெட்டி முறித்தார்.
“அப்போ அத்தைக்கு என்னைய தேடலயாட்டுக்கு” என்று தீரன் சிரிக்க…
“நாலு போடத்தேன் தேடுனேன்” என்று அவனின் குமட்டில் இடித்தார்.
“இன்னும் நாலு சேர்த்து போடு… இம்புட்டு பேரு இருந்தும், அங்கவே தங்கிப்புட்டானே” என்றார் மாயவேல்.
“அப்பா…” தீரன் பாவமாக அழைத்திட,
“இதை கேட்காம ஏங்க வச்சிட்டியேடே” என்ற மாயவேல் அடைத்த தொண்டையை செருமினார்.
“அதேன் வந்துப்புட்டானே! இனிமேட்டுக்கு வெசனம் என்னத்துக்கு. நாளைக்கே கண்ணால வேலையை ஆரம்பிச்சிட வேண்டியதுதேன். அவன் திரும்பி போறதுக்குள்ள கண்ணாலத்தை முடிச்சிப்புடுவோம். இப்போலேர்ந்தே வீடு கண்ணால கலை கட்டணும்” என்ற பிள்ளைகளை பள்ளி பேருந்தில் ஏற்றிவிட்டு வந்த முத்து மாணிக்கம், “தீரன் வந்ததும் பொண்ணு நேர்ல பார்க்கணும் சொல்லுச்சே. அஞ்சலி வந்ததும் தீரனை கூட்டிட்டுப்போய் பார்த்துப்போட்டு வரச்சொல்லு” என்றார்.
“கல்யாணமா? அதுக்குள்ளவா?” என்று கேள்வியாக அதிர்ந்த தீரன், “இருபது நாளுதேன் லீவு” என்றான்.
“ஆளும் பேருமா இம்புட்டு பேரு இருக்கும்போது உனக்கு எதுக்கு அந்த கவலை. நாலு நாள்ல கூட கண்ணாலம் பண்ணிப்புடலாம்” என்று முத்து மாணிக்கம் மீசையை முறுக்கினார்.
தீரன் பெரியவரின் பேச்சில் தடுமாறி நின்றான்.