தூரமே தூரமாய் 3
எதையும் தொலைக்கவில்லை…
ஆனால், தேடுகிறேன்.
எனக்கில்லை என்று தெரிந்த பின்பும்…
ஏனோ, உனக்காகத் தவிக்கிறேன்.
_______________________
“தொலைஞ்சிப்போயிடனும் போலிருக்குண்ணா.”
அப்படியொரு வலி அந்த வார்த்தைகளில்.
அதிர்ந்து பேசியறியாத தங்கையின் தொண்டை அடைத்து வெளிவந்த கத்தலில் இனியன் ஸ்தம்பித்துப்போனான்.
“இமயா!”
“முடியலண்ணா… முடியல… என்ன பண்ணட்டும் நான்.” இமையாளின் கண்களிலிருந்து கண்ணீர் கரகரவென வழிய, இனியனின் இதயத்தில் கனத்தின் அளவு கூடிக்கொண்டே போனது.
காலம் எதையும் ஆற்றுப்படுத்தும். இதுவே இயற்கையின் நியதி. நிதர்சனம்.
இங்கு இமையாளின் காயத்தின் வலியை அந்த காலத்தாலும் வடுவாக்கிட முடியவில்லை.
அன்று மருத்துவமனையில் கண் விழித்து இமையாள் ருதுவைப்பற்றி எதுவும் சொல்லவில்லை என்றாலும், தங்கையின் கண்களில் கண்ட வலி இன்றும் கொஞ்சமும் குறையாது அவனால் காண முடிகிறதே!
அண்ணனாக நொறுங்கிவிட்டான்.
நண்பனின் செயலுக்கு பின்னால் வலுவான காரணம் இருக்குமென்றாலும், முதல் முறையாக ருதுவின் மீது அத்தனை கோபம் கொண்டான் இனியன்.
“அவனை வெறுக்கவே மாட்டியாடாம்மா?” ஆயசமாகக் கேட்டிருந்தான்.
“அணு அணுவாய் காதலிச்சிருக்கேன்… காதலிக்கிறேன். எப்படி வெறுக்க முடியும்?” அழுகையில் வினவியவளின் குரலில் வலியை தாண்டிய ஒன்று.
“அவனுக்கு கல்யாணம் ஆகிட்டது. இந்த ஒரு காரணம் போதாதா?”
“வெறுக்க ஆயிரம் காரணங்கள் இருந்தும், முடியாதே… எல்லாத்துக்கும் நடுவில் நாம் வைச்ச அன்பு வாழ்ந்துட்டே தான் இருக்கும்” என்ற தங்கையின் கண்ணீரை அவனால் கண்கொண்டு பார்த்திட முடியவில்லை.
இந்த நான்கு வருடங்களில் இமையாளின் சோகத்தை கண்டிருக்கிறான்… ஆழ்ந்த அமைதியை உணர்ந்திருக்கிறான்… ஒருபோதும் இப்படி வெடித்து வெம்பி அழுவதை பார்த்ததே இல்லை. இன்று மொத்தமாகக் காட்டுகிறாள்.
நான்கு வருடங்களாக அழுத்தி வைத்த யாவற்றையும் இக்கணம் வெளி காண்பிக்கிறாள்.
பார்க்கும் அவனே நொறுங்கிப் போகிறான்.
இந்த காதலுக்கு விட்டுச்சென்ற தன் நண்பன் கொஞ்சமும் தகுதி இல்லாதவன் என்றே அந்நொடி இனியனுக்குத் தோன்றுகிறது.
நண்பனின் பக்க நியாயமான காரணங்கள் ஆயிரம் இருக்கட்டுமே… காதலில் வலியோ, சுகமோ பக்கமிருந்து வாழ்ந்து பார்ப்பதுதானே அக்காதலுக்கு காதலர்களாக அவர்கள் செய்யும் நியாயமாகும்.
“அவன் உனக்கு வேணாம் டா. உன்னை இப்படி அழ வைக்கிற காதல் வேணுமா என்ன? மறக்க ட்ரை பண்ணேன்.”
சொல்லிய இனியனின் முகம் பார்த்த இமையாள், உள்ளங்கையால் முகம் துடைத்து நிமிர்ந்து அமர்ந்தாள்.
“அவங்க போயிட்டாங்க… அதுக்காக இன்னொருத்தன் என் காதல் ஆகிட முடியாதுண்ணா. அவங்க போனப்பிறகும்… இனி அவங்க எனக்கு இல்லவே இல்லைங்கிற இந்த நிலையில் கூட அவங்க மட்டுமே என் காதல். வேறு யாரும் வேணாம் என்பதே என் காதல். அவங்க என்னை விட்டு போனதுக்கும், மறந்திருப்பதற்கும், திரும்பி வரவேப்போறதில்லை என்பதற்கும் காரணம் நிறைய இருக்கலாம். ஆனால் நான் அவங்க மட்டும் தான் என் நினைவுன்னு மறக்காம இருக்க ஒரே காரணம்… எனக்கு அவங்களை மட்டும் தான் பிடிக்கும். அவங்க இருக்க இடத்தில் இன்னொருத்தரை வைக்கவே முடியாதுங்கிறது தான் நிஜம். நினைப்பையே ஒதுக்கி வைக்க முடியாதுங்கிறப்போ… எப்படிண்ணா மறக்க முடியும்?” அழவில்லை, வார்த்தை தடுமாறவில்லை. குரலில் தழுதழுப்பு இல்லை. அத்தனை நிதானமாக தன் உள்ளத்து உணர்வை ஆழமான வார்த்தைகளால் பகிர்ந்திருந்தாள்.
“இமயா…!”
“அவங்களுக்கு கல்யாணமாகிடுச்சு. உண்மையாவே இருக்கட்டும். என்னால அக்செப்ட் பண்ணிக்க முடியல. அவ்வளவு தான். அவங்க மனைவி, குழந்தைன்னு நல்லாயிருக்கட்டும். என் காதலை எங்க அவங்க விட்டுட்டு போனாங்களோ! அந்த இடத்திலே நானும் என் காதலும் இந்த நொடிவரை தேங்கி நின்னுட்டோம். நான் கடைசிவரை நேசிச்சிட்டே இருக்கிறது என் காதலான ருதுவை மட்டும் தான். யாரோ ஒரு பெண்ணோட ருத்விக்கை இல்லை.”
இதற்கு மேலும் இனியனால் அவனை மறந்திடு என மீண்டும் ஒருமுறை சொல்லிட முடியுமா என்ன?
“அப்போ இப்படியே இருக்கப்போறியா?”
“பையன் மட்டும் தான் காதலுக்காக கடைசிவரை தனியா இருக்கணுமா? பொண்ணு இருக்கக்கூடாதா? நாங்கலாம் தாஜ்மஹால் கட்டினா ஏத்துக்க மாட்டிங்களா?” இனியனை இலகுவாக்கிட அவள் சாதாரணம் போல் பேசினாலும், அதிலும் மெல்லிய சோகம் இழையோடியது.
“என்னோட வலிக்கு பின்னால் அவங்க வாழ்க்கை அழகா இருக்கும்ன்னா… அதையும் நான் ஏத்துகிறேன் ண்ணா!”
என்ன மாதிரியான அன்பு இது. இனியனுக்கு மலைப்பாக இருந்தது.
‘இத்தனை காதல் தன் நண்பனுக்கு கொடுத்து வைக்கவில்லையே!’ ஆதங்கமாக எண்ணிக்கொண்டான்.
இருவருமே எந்தவொரு இடத்திலும் ருது வேண்டுமென்றே விட்டுச் சென்றிருப்பானென நினைக்கவில்லை. அந்த இடத்தில் தான் ருதுவின் உண்மையான அன்பு வென்று நிற்கிறது.
“ஒரு ப்ரொபோஸல் வந்திருக்குடா. அப்பா எப்படியும் முடிக்கணும் நினைக்கிறார்.”
“அவங்களை கடந்து வர முடியலண்ணா!” மென் குரலில் மொழிந்தாள்.
“நீ முயற்சிக்கலன்னு சொல்லு” என்ற இனியன், “விட்டு வேணான்னு போறதுக்கா காதலிச்சான். இதுவரை தோணல… ஆனால் இப்போ தோணுது. அவனை அடிக்கணும். ஒரு அடியாவது அடிக்கணும்” என்று கோபமாகக் கூறிய இனியனின் வார்த்தையில் இமையாளுக்கு புன்னகை எட்டிப்பார்த்தது.
‘உன்னால் அவரை அடிக்க முடியுமா?’ எனும் பாவனை அது.
“அடிக்க முடியாது நினைக்கிறியா?”
“பர்ஸ்ட் அடிங்க… அப்புறம் நம்புறேன்” என்றாள்.
“சரி இப்போ அப்பா, அம்மாவுக்கு என்ன பதில் சொல்லட்டும்?”
“நான் பேசிக்கிறேன். வீட்டுக்கு போங்க” என்றாள்.
“பீச்சுக்கு போகவே இல்லையே?”
“பேச வேண்டியதுலாம் பேசிட்டிங்கதானே?”
இனியனின் தலை ஆமென்பதாக ஆடியது.
“எப்போ என்னால கடந்திட முடியும்ன்னு தோணுதோ… அப்போ நிச்சயம் நீங்க சொல்றதை செய்யுறேன்” என்றவளை இம்முறை கூர்மையாக நோக்கியது இனியனின் விழிகள்.
“நம்பிக்கையில்லை” என்று உதடு சுளித்தவன் வண்டியை கிளப்பி வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.
இருவரையும் எதிர்பார்த்து தீபா வாயில் படியிலேயே ஆர்வமாக நின்றிருந்தார்.
“இப்போ அம்மா கேட்பாங்க. நீயே சொல்லிக்கோ இமயா? அவங்க எதிர்பார்ப்பை என்னால இனியும் முறியடிக்க முடியாது” என்றவன், காரிலிருந்து இறங்கி விடுவிடுவென உள்ளே நுழைந்தான்.
பேசிட்டியா எனும் விதமாக தீபா இனியனின் முகம் காண,
“இமயாவே பேசுறேன் சொல்லிட்டாம்மா” என்று சென்றுவிட்டான்.
“அப்பா வந்தாச்சாம்மா?”
“வர நேரம் தான்” என தீபா சொல்லும்போதே சுரேந்தர் வந்து சேர்ந்தார்.
“என்ன அம்மாவும், பொண்ணும் வெளியவே நிக்கிறீங்க?” என்ற சுரேந்தரோடு பெண்கள் இருவரும் உள்ளே நுழைய…
“இப்போவே பேசிடறேன்” என்றாள் இமயா.
“என்னடி கல்யாணத்துக்கு முடியாது சொல்லப்போறியா?” அதட்டி கேட்டபடி தீபா முன்வர, சுரேந்தர் மனைவியை கைக்காட்டி தடுத்தார்.
“என்னன்னு முதலில் பேசட்டும் தீபா!”
இருவரும் இருக்கையில் சென்று அமர்ந்தனர்.
கீழே சத்தம் கேட்டு இனியனும் வந்திருந்தான்.
“எனக்கு கல்யாணத்தில் விருப்பமில்லை. இப்போன்னு இல்லை… எப்பவுமே எனக்கு கல்யாணம் வேண்டாம்” என்று திடமாக மொழிந்தாள்.
பெற்றவர்கள் இருவருக்கும் அதிர்வு. தீபா முகத்தில் காட்டினார் என்றால், சுரேந்தர் உள்ளுக்குள் ஓடிய நடுக்கத்தை லாவகமாக மறைத்துக்கொண்டார்.
“காரணம் ஏதுமிருக்கா?” சுரேந்தர் தன்மையாகவேக் கேட்டார். அவருக்கு மகளின் மனம் முழுவதுமாக தெரிய வேண்டியிருந்தது.
இனியனை பக்கவாட்டக திரும்பிப் பார்த்த இமையாள், கண்களை அழுந்த மூடி திறந்தாள்.
“நான் ஒருத்தரை லவ் பண்ணேன். இப்பவும் பன்றேன்” என்றாள். இருவரையும் நேர்கொண்டு பார்த்தவளாக.
“என்னடி சொல்ற? லவ்வா?” என்று வேகமாக எழுந்து வந்து இமையாளின் தோளில் ஒன்று வைத்தார் தீபா.
“ம்மா” என்ற இனியன் தங்கையை இழுத்து தன் தோள் வளைவில் நிறுத்திக்கொண்டான்.
“லவ் பன்றன்னு தானே சொன்னாள். இதென்ன கை நீட்டுற பழக்கம்” என்று அன்னையை அடக்கினான்.
“சரிம்மா… யாருன்னு சொல்லு. பேசி பார்க்கிறேன்” என்றார் சுரேந்தர்.
அவருக்கு மகளின் திருமணம் நல்ல முறையில் அவள் விரும்பும்படி நடந்தால் அதுவே போதுமென்று இருந்தது. திருமணம் வேண்டாமென மறுத்துக் கொண்டிருந்தவள், காதலிக்கிறேன் என்றது ஒருவகையில் நிம்மதி கொண்டு அவரை ஏற்கத்தான் வைத்தது.
“பேசி பிரயோஜனம் இல்லைப்பா” என்ற இமையாள், “அவங்களுக்கு நாலு வருஷத்துக்கு முன்னவே கல்யாணம் ஆகிடுச்சு” என்றாள்.
“அப்போ கல்யாணம் ஆனவனையாடி விரும்புற?” என்று தீபா அவளின் முதுகில் கை வைக்க…
“ம்மா… இனியொருமுறை கை வச்சிங்க… நான் மனுஷனா இருக்கமாட்டேன்” என்று விரல் நீட்டி எச்சரித்தான் இனியன்.
“நான் லவ் பண்ண ஆரம்பிச்சப்போ அவங்களுக்கு கல்யாணம் ஆகல” என்றவள், “என்னை இப்படியே விட்டுடுங்க ப்ளீஸ். எனக்கு எதுவும் வேண்டாம்” என்று மடங்கி தரையில் அமர்ந்தவள், உடல் குலுங்க கையினால் முகம் மூடி அழுதாள்.
“இமயா.” சட்டென்று கீழே அமர்ந்து தங்கையை நெஞ்சில் தாங்கியிருந்தான் இனியன்.
தங்கையின் அழுகை அவனுக்கும் வலி கொடுத்தது. இருவரின் நிலை பெற்றவர்களின் மனம் கனக்க வைத்தது.
“நாலு வருஷமாச்சுன்னு சொல்ற. இன்னும்மா உன்னால வெளிவர முடியல?” தீபா ஆதங்கமாக வினவினார்.
“நீங்க லவ் மேரேஜ் தானம்மா… சப்போஸ் உங்களுக்கு அப்பா கிடைக்காமப் போயிருந்தா?” அதற்கு மேல் கேட்காது இமையாள் வார்த்தையை நிறுத்திவிட… இத்தனை வருடங்கள் காதலாக வாழ்ந்த அவருக்கு மகளின் வலி ஒரு நொடியில் புரிந்தது.
அடுத்து அங்கு யாராலும் ஒன்றும் பேச முடியவில்லை.
ஆழ்ந்த அமைதி.
சில நிமிடங்களில் கண்களை துடைத்துக்கொண்டு நிமிர்ந்த இமையாள்…
“அண்ணாக்கு மேரேஜ் பண்ணுங்க” என்றாள்.
“முடியாது.” இனியன் பட்டென்று மறுத்திருந்தான்.
“அண்ணா ப்ளீஸ்…”
“முடியாதுடா… உன்னை இப்படியே விட்டுட்டு, நான் மட்டும் எப்படிடா? நீ உடைஞ்சு உட்கார்ந்திருக்கும் போது… ம்ப்ச், என்னை சந்தோஷமா இருக்கு சொல்றியா? முடியுமா என்னால?” என்றான்.
பிள்ளைகளின் அன்பில் மகிழ்வதா, துக்கம் கொள்வதா என்று தெரியாது பெரியவர்கள் தவித்து பார்த்திருந்தனர்.
இனியனுக்கு தன்மீதே ஆத்திரமாக வந்தது. தங்கையின் இந்நிலைக்கு தானும் ஒரு காரணமென்று.
காதலிக்கிறேன் என்று வந்தபோது, பொறுப்பான அண்ணனாக தவறென்று எடுத்து சொல்லாது, அவனும் அல்லவா ருதுவின் குணத்தில் கவரப்பட்டு அக்காதலுக்கு துணையாக நின்றான். அன்று இமையாளுக்கு அண்ணனாக மட்டும் அவன் நடந்து கொண்டிருந்தால், இன்று இந்நிலை வந்திருக்காதோ என முதல்முறையாக குற்றவுணர்விற்கு ஆட்பட்டான்.
“கொஞ்சநாள் போகட்டும் தீபா” என்று எழுந்த சுரேந்தர், பிள்ளைகளின் தோற்றம் காண முடியாது, தளர்ந்த நடையுடன் அறைக்குள் சென்று முடங்கிவிட்டார்.
பிள்ளைகளைத் தேற்றும் வழி தெரியாது தாயாய் தவித்து நின்றார் தீபா.
______________________________
“எங்க அவன்?”
கோபமாக உள்ளே நுழைந்த மனிதர், அங்கு தன்னை கண்டு மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றவர்களுக்கு சிறு தலையசைப்பை கொடுக்க வேண்டுமென்பது கூட கருத்தில் இல்லாது, “இருக்கானா?” எனக் கேட்டுக்கொண்டே, தடுப்பை தள்ளிவிட்டு அறைக்குள் நுழைந்தார்.
மேசையின் மீதிருந்த அலைப்பேசியில்…
‘ஹே என்ன வேணா நடக்கட்டும்
நான் சந்தோசமா இருப்பேன்.
உசுரு இருக்கு வேறென்ன வேணும்
உல்லாசமா இருப்பேன்.
என்ன வேணா நடக்கட்டும்
நான் சந்தோசமா இருப்பேன்.
உசுரு இருக்கு வேறென்ன வேணும்
உல்லாசமா இருப்பேன்.
எனக்கு ராஜாவா நான்…
எனக்கு ராஜாவா நான்…’ என்று ஒலித்துக் கொண்டிருக்க, இருந்த கடுப்பில் அலைப்பேசியை எடுத்து பாடலை அணைத்திருந்தார்.
இருக்கையில் பின் சாய்ந்து, கண்களை மூடி, இரு கால்களையும் தூக்கி மேசை மீது ஒன்றன் மீது ஒன்றாக வைத்து, ஆட்டியபடி உல்லாசமாக பாடல் கேட்டுக் கொண்டிருந்தவன், சட்டென்று ஒலி அமிழ்ந்ததில் கண்களை திறந்தபடி, எழுந்து நின்று சோம்பல் முறித்தான்.
தன்னை முறைத்துக்கொண்டு நின்றிருப்பவரை…
“எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்” என்று பாடியபடி நெருங்கி…
“ஹே ரகிட ரகிட ரகிட” என அப்பாடலில் தோளினை ஆட்டுவதைப்போல் ஆட்டினான்.
அவரின் கண்களில் அனல் கூடியது. அதையெல்லாம் அவன் பொருட்படுத்தவே இல்லை.
“ரகிட ரகிட ரகிட… ஊ
ரகிட ரகிட ரகிட… ஊ
ரகிட ரகிட ரகிட… ஊ” என்று ஊ என்ற எழுத்தை அவரின் காதில் ஊதி பாடலின் வரியை முடித்தே பாடுவதை நிறுத்தி மேசையில் குதித்து அமர்ந்தான் ருத்விக்.
“திமிருடா உனக்கு. ரொம்பவே கூடிப்போச்சு” என்றவர் அவன் அருகில் தொப்பியை கழட்டி மேசை மீது வைத்தவராக முன்னிருந்த இருக்கையில் அமர்ந்தார்.
“திட்டுறதுக்குதானே அவ்வளவு கோபமா வந்தீங்க?” என்றவனிடம் அப்படியொரு நக்கல்.
“கிண்டலா பன்ற நீ” என்று அவனின் தொடையில் தட்டியவர், “உன் முகத்தை பார்த்து… நீ பண்ணுற சேட்டைக்கு பிறகும் கோபமா இருக்க முடியுமா என்ன?” எனக் கேட்டார்.
“நான் சேட்டை பண்றனா? ஒரு பொறுப்பான போலீஸ்காரனை பார்த்து என்ன வார்த்தை சொல்றீங்க நீங்க?” என்றவனிடம் அடக்கப்பட்ட சிரிப்பு. பக்கென அவரும் சிரித்துவிட்டார்.
“அவனை எதுக்குடா போட்டுத்தள்ளுன. சின்ன பையன் டா. இன்னும் பதினேழு வயசு கூட ஆகல” என்றார்.
அவர் பீகார் மாநிலத்தின் டிஜிபி. திருவேங்கடம். தமிழர். அதனாலேயே தமிழன் என்று ருத்விக்கின் மீது தனிப்பட்ட விருப்பம் அவருக்கு. அது அவனது கடமை தவறாத நேர்மையில் மேலும் அதிகரித்தது. அவன் எது செய்தாலும் சரியாக இருக்குமென்ற நம்பிக்கை. அந்த நம்பிக்கையை மிக எளிதாகவே அவரிடம் ருத்விக் ஏற்படுத்தியிருந்தான்.
“க்ரைம் ப்ராஞ் டிசி மாதிரியாடா நடந்துக்கிற?”
“வேறெப்படி நடந்துக்குறேன்?” என்ற ருத்விக், தான் அமர்ந்திருந்த நிலையில் மாற்றமில்லாது எட்டி மேசை இழுவையை திறந்து சில புகைப்படங்களை எடுத்து அவர் முன்னே போட்டான்.
பார்த்ததும் மனிதர் ஆடிவிட்டார். கண்கொண்டு பார்த்திட முடியாது, கையை வைத்து படங்களை மறைத்துக்கொண்டார்.
“நீங்க சொன்ன சின்னப்பையன் பண்ண வேலை தான் இது” என்ற ருத்விக்,
“கண்டுபிடிச்சு கூட்டி வரும்போது, ஜெயிலில் தானே போடப்போறீங்க? போடுங்க, எனக்கு இன்னும் பதினேழு வயசு ஆகவே ரெண்டு வாரம் இருக்கு. ஜூவைனைல் பிரிசனில் தான் போடுவாங்க. அங்கிருந்து ஈஸியா வெளிவந்திடுவேன்னு அசால்ட்டா சொல்லி சிரிக்கிறான்” என கை முஷ்டிகளை இறுக்கி மடக்கினான்.
“இந்த ஃபோட்டோவில் இருக்க பொண்ணுக்கு வயசு பன்னெண்டு தான். பதினேழு வயசு பையன் செய்யுற காரியமா இது. அதான் போட்டுத் தள்ளிட்டேன். அவன் சொன்ன மாதிரி சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் கொண்டு போய் விட்டால், இவன் திருந்தாம நாலு பேரை சேர்த்து கெடுப்பான். அந்த சின்னப்பொண்ணு தனக்கு நடந்த கொடுமை என்னன்னு தெரியாமலே அரை உயிரா ஹாஸ்பிடலில் கிடக்கிறாள். மீடியாவுக்கு தெரிஞ்சா உயிரோட இருக்க பொண்ணை வார்த்தையாலே சுடுகாட்டுக்கு அனுப்பிடுவாங்கன்னு கமுக்கா வச்சி அவனை தேடிப்போனால், கொஞ்சம் கூட குற்றவுணர்வே இல்லாம இனியும் இதுபோல செய்வேங்கிற மாதிரி பார்க்கிறான். ஒரு நொடி அந்த குட்டிப்பொண்ணு கண்ணு முன்னாடி வந்து நின்னாள். அவனை சுட்டுட்டேன்.” சாதரணமாக தோள் குலுக்கினான்.
“மீடியாவுக்கு இப்போ நீ சுட்டது தெரிஞ்சிடுச்சே. இனி நோண்டி விஷயம் என்னன்னு கண்டுப்பிடிச்சு அந்தப்பொண்ணை விசாரிக்கிறேன்னு கொடுமை பண்ணத்தானே போறாங்க” எனக்கேட்டு வேங்கடத்தை பார்த்து அர்த்தமாக சிரித்த ருத்விக்…
“நீங்க பதறி அடிச்சிக்கிட்டு ஓடி வந்தப்போவே தெரியுது… பையன் பெரிய இடம்னு. எலெக்ஷன் டைம் வேற, இந்த நியூஸை அவனுங்களே மூடி மறைச்சிடுவானுங்க. சிங்கில் வோர்ட் லீக் ஆகாது” என்றான்.
“பக்கா பிளான்… ஹ்ம்ம்” என்ற வேங்கடம், “நீ சுட்ட புல்லட்டுக்கு கணக்கு சொல்லணுமே?” என்றார்.
“சொல்லிடலாமே! பட் நான் சொல்ற வரை அவனுங்க என்னை விட்டு வைப்பானுங்களா என்ன? என்னை திரான்ஸ்ஃபர் பண்ண சொல்லி உங்களுக்கு ஓலை வந்திருக்குமே” என்று தன்னுடைய நக்கல் தொனி கொஞ்சமும் மாற்றாது கேட்டிருந்தான்.
“அடேய்” என்ற வேங்கடம், “என்னால சத்தியமா உன்னோட முடியலடா” என்று புலம்பினார்.
“கண்டிப்பா இந்த முறை உன்னை திரான்ஸ்ஃபர் பண்ணியே ஆகணும் ருத்விக். எப்பவும் ஒருத்தன் கிட்டவேவாடா மோதுவா… அவன் ஆளுங்கட்சி ஆளுடா. அவனோட அக்கா பையன், நீ சுட்டது. உன்னை இங்க இருக்கவே விடக்கூடாதுன்னு சி.எம்’கிட்ட மல்லுக்கு நிக்கிறான். அவனால் கட்சிக்கு நிறைய நிதி வருதுன்னு முதல்வர் என்னை டீல் பண்ண சொல்லிட்டார்” என்றார் விளக்கமாக.
“திரான்ஸ்ஃபர் தானே கொடுங்க. நாலு வருஷமா இங்கவே இருந்து போர் அடிச்சிப்போச்சு. வேறெங்கும் போவோம்” என்றான். சோம்பல் முறித்தபடி.
அடுத்த நொடி வேங்கடம் சொல்லிய ஊரின் பெயரில் போகவே முடியாதென தர்க்கம் செய்யத் தொடங்கியிருந்தான் ருத்விக்.