அன்பின் அதீதம் 8
‘மனதில் சேர்த்து வைத்த சிறு சிறு அன்பெல்லாம்,
நேசம் எனும் வரையறைக்குள் இட்டுச்சென்று,
உனக்குள் என்னை தொலைந்திடச் செய்கிறது.’
_________________________
எப்போதும் போல முத்து மாணிக்கத்தின் இல்லம் காலை நேர பரபரப்புடன் வேகமாக இயங்கிக் கொண்டிருந்தது.
சமையலறைக்குள் சிறு தடுப்பிற்கு முன்னிருக்கும் கூடத்தில் தான் பெண்கள் அமர்ந்து அரட்டைப் பேச்சுக்களுக்கு நடுவில் சமையலுக்கு ஆயத்தம் செய்வார்கள்.
அங்கு அர்ச்சானவைத் தவிர்த்து மூத்த தலைமுறை மற்றும் இளைய தலைமுறை மருமகள்கள் அனைவரும் இருந்தனர். அவர்களுக்கு வேலையை பகிர்ந்தளித்தபடி தூணில் சாய்ந்து கால் நீட்டி கொட்டைப்பாக்கை இடித்தவாறு அமர்ந்திருந்தார் கொற்றவை.
“அர்ச்சனா மதினி எங்க ஆளே காணோம்? ஒரு வாரமாவே அவீங்க மொவமே சரியில்ல” என்று அன்பனின் மனைவி காயத்ரி கேட்டவாறு, பால் கொழுக்கைக்கட்டைக்கு மாவு உருட்டிக் கொண்டிருந்தாள்.
“ஆமா நானும் கவனிச்சேன். தீரன் கண்ணாலப் பேச்செடுத்ததுலேர்ந்தே அவீங்க ஒரு மாறித்தேன் இருக்காய்ங்க” என்றாள் அரவிந்தின் மனைவி ஆதிரா.
“ஒருவேளை அவள் தீரனுக்கு இப்போ கண்ணாலம் நடக்கக்கூடாது நினைக்கிறாய்ங்களா இருக்கும்” என்றார் கல்யாணி.
“என்னவாட்டுக்கு இருக்கும்?” கலாவதி யோசிப்பது போன்று மோவாயில் கை வைத்தார்.
“சும்மா அவள் தலையை உருட்டாம, காலை சாப்பாட்டுக்கு ஆக வேண்டியதைப் பாருங்கட்டி” என்ற கொற்றவை, “அர்ச்சனாவுக்கு எதுவும் உடம்பு நோவா இருக்கும்” என்றார்.
“உடம்பு முடியலன்னா நம்மகிட்ட சொல்லலாமே அத்தை” என்ற ராஜாத்தி, “உங்ககிட்ட எதுவும் சொன்னாளா அக்கா?” என்று துளசியிடம் கேட்டார்.
“இல்லை. மாப்பிள்ளை இன்னைக்கு வெளியூர் பயணம் போறாங்க. அதுக்கு கூடமாட ஒத்தாசையா இருக்காள். அதேன் இன்னுமாட்டிக்கு அடுப்படிக்கு வரல” என்ற துளசி, “இனி ஒவ்வொருத்தரா வர ஆரம்பிப்பாய்ங்க. சுருக்க சமைக்கிற வேலையை பார்ப்போம்” என்று எழுந்துகொண்டார்.
துளசிக்கும் மகனின் திருமண விடயம் குறித்து அர்ச்சனாவின் கண்டுகொள்ளா நிலைக்கு என்ன காரணமென்று தெரியவில்லை! யோசனையோடு சமைக்க நகர்ந்தார்.
“ஒருவேளை தம்பிக்கு தான்தேன் பொண்ணு பார்க்கணும் எதுவும் அக்கா ஆசைப்படுறாய்ங்களோ?” கல்யாணி கேட்டிட,
“விசயம் என்னவா இருந்தாலும் தெரிய வரும்… வீட்டுக்குள்ளவே புரளி பேசாம ஆவ வேண்டியதைப் பாருங்கட்டி” என கொற்றவை விரட்டவே அவரவர் வேலையில் கவனமாகினர்.
தொழில் காரணமாக வெளியூர் செல்ல கிளம்பிக் கொண்டிருந்த ரத்னவேலுவிற்கு காலை உணவு தயாரா என்று கேட்பதற்காக உணவறை வந்த அர்ச்சனா அனைவரின் பேச்சினையும் கேட்டவராக தனதறைக்குத் திரும்பியிருந்தார்.
“இன்னும் பத்து நிமிசத்துல ஆதி வந்திடுவியான் அர்ச்சனா. அவனும் வாரான். புறப்படணும். திரும்பிவர ஒரு வாரம்… இல்லாட்டி கூடவும் ஆவும்” என்றவர், தனது பயணப் பொதியை சரி பார்த்தவராக மனைவியின் பக்கம் திரும்பினார்.
அர்ச்சனா மெத்தையில் உம்மென்று அமர்ந்திருந்தார்.
அருகில் சென்று அமர்ந்த ரத்னவேலு,
“இம்புட்டு நேரம் நல்லாத்தானே இருந்தது இந்த மொவம். அதுக்குள்ள என்னவாச்சுதாம். சுருங்கிக் கிடக்கு” என்று தாடையை பிடித்து ஆட்டினார்.
“ச்சூ மாமா” என்று ரத்னத்தின் கையை தட்டிவிட்ட அர்ச்சனா, “தீரன் என் தம்பி மட்டுமில்ல… எம் மொத பிள்ளைங்க அவென். உங்களுக்கேத் தெரியுமே” என்றதோடு, “அவன் கண்ணாலம் நடக்கக்கூடாதுன்னு நான் நினைப்பேனா?” எனக்கேட்டு கணவரின் தோள் சாய்ந்தாள்.
“யாரென்ன பேசினாய்ங்க?”
ரத்னவேலு கேட்டதும் அர்ச்சனா தான் கேட்ட அனைத்தையும் கூறியிருந்தார்.
“இதுக்கா மொவத்தை மோட்டு வலைக்கு தூக்கி வச்சிருக்க?” என்ற ரத்னம், “இந்த வூட்டுல என்ன நடந்தாலும் மொத ஆளா முன்ன நிக்கிறது நீயிதேன். இந்த விசயத்துல நீயி ஒதுங்கி ஒதுங்கி நிக்கவும் உனக்கு என்ன காரணமோன்னு பேசியிருக்காய்ங்க. அம்புட்டுதேன்” என்று எடுத்துரைத்தார்.
“வெளங்குது.”
“பொறவு என்னத்தா… சிரியேன். போற காரியம் சுருக்க சுபமா முடியும்” என்றார்.
அர்ச்சனா புன்னகை முகம் காட்ட,
“இதுதேன் நல்லாயிருக்காட்டி” என்ற ரத்னவேலு, “உம் மனசு போல நடக்கு(ம்)த்தா” என்றார்.
“எம் மனசுல என்னமாயிருக்குன்னு உங்களுக்கு எப்படித் தெரியுமாம்?”
“தெரியும். நீயி சொல்லணும் அவசியமில்லை. சொல்லாமலே நான் கண்டுக்கிட்ட கணக்கா மித்தவைங்களும் அம்புட்டுக்கணும் நினைக்கக்கூடாது. நீயி சொன்னாத்தேன் தெரியும். உனக்கு வந்த நெனைப்பு மித்தவைங்களுக்கு வராம இருக்கலாம். நீயி வா தொறந்து சொல்லும்போது நமக்கு இது தோணலையேன்னு நிச்சயம் நினைப்பாய்ங்க” என்ற ரத்னவேலு, “மொத அவென் வரட்டும். உன் சொல் மீறிடுவானா?” என்றார்.
“எப்புடி மாமா?” என்று அர்ச்சனா வாயில் கை வைத்திட, “இந்த வூட்டுக்கு உன்னையும் அவனையும் நம்பித்தேன் வந்தேன். உங்களை புரியாதா எனக்கு?” என்றார் ரத்னவேலு.
“அதுசரி” என்ற அர்ச்சனா, “உங்களுக்கு விருப்பமா?” எனக் கேட்டாள்.
“இந்தக் குடும்பத்துல மொத பந்தம் அவந்தேன்… அவனை புடிக்காம போவுமா?” என்ற ரத்னவேலு, “ஆசையிருக்குதேன். பேசத்தேன் முடியமாட்டிக்கு. பெரியவங்க எல்லாரும் ஒரு பக்கம் போகும் போது, நாம நம்ம மனசை என்னன்னு சொல்றது” என்றதோடு, “போற வேலையை முடிச்சிப்போட்டு வந்துடுறேன். அவனும் அடுத்த வாரம் வந்துப்புடுவியான். நேருக்கு நேர் பேசிப்புடுவோம்” என்றார்.
“அவனுக்கு புடிக்குமா மாமா?”
“நிச்சயமா புடிக்கும்.” முதல் நாள் தீரனிடம் பேசியதில் அவனின் மனதை அறிந்ததை வைத்துக் கூறினார்.
“மாமா…” ஆதிசக்தியின் குரல் கேட்க,
“ஆதி கிளம்பிட்டியான் போல. நான் வாரேன்” என்று அர்ச்சனாவின் சிரித்த முகம் பார்த்து கிளம்பியிருந்தார் ரத்னம்.
********************
நியூயார்க்கிலிருந்து சிங்கப்பூர் வந்ததும் தீரன் மயிலாஞ்சலிக்கு அழைத்திருந்தான்.
“சிங்கப்பூர் வந்துட்டீங்களா?” எனக் கேட்டவள், பாதி உறக்கத்திலிருப்பது தெரிந்தது.
“ஹ்ம்ம்… ஜெஸ்ட் நவ்” என்ற தீரன், “சென்னை வர ஃபைவ் ஹார்ஸ் ஆகும். அங்கிருந்து மதுரை வன் ஹார் பிஃப்டீன் மினிட்ஸ்” என்றான்.
“ஏன் சென்னை வந்து… அங்கிருந்து டைரக்ட் ஃப்ளைட் இல்லையா?” என்று மயிலாஞ்சலி கேட்டிட,
“டைரக்ட் ஸ்டாப் இல்லை. சென்னை வந்து, அதே ஃப்ளைட் தான் மதுரை” என்றான்.
“அப்போ நான் காலையில ஏழு மணிக்கு மருத ஏர்போர்ட் வந்துடுறேன்” என்றவள், “மாமாவுக்கு என்னைத் தெரியுமா? இல்லை நேம் போர்ட் எதுவும் புடிச்சிக்கிட்டு நிக்கணுமா?” எனக்கேட்டு வம்பு செய்தாள்.
“நில்லேன்… உனக்கு என்னைத் தெரியாதுன்னா!” என்றவன், “அனௌன்ஸ்மென்ட் வந்தாச்சு. நேர்ல பார்ப்போம்” என்று வைத்துவிட்டவனுக்கு எப்போதடா நேரம் விரைந்து செல்லுமென்று இருந்தது.
தினமும் பேசினாலும், அலைபேசி வழி பார்த்துக்கொண்டாலும், ஒருவரையொருவர் நேரில் சந்தித்து பார்த்துக்கொள்ளும் இன்பம் தனியல்லவா!
தீரனின் மனதில் ஒரு கணம், தான் இறுதியாக நேரில் பார்த்த பனிரெண்டு வயதான மயிலாஞ்சலியின் முகம் மின்னி மறைந்தது.
சட்டென்று குளிர்ந்த வானிலை அவனது இதயத்தை பலமாகத் தாக்கியது.
இருக்குமிடம் மறந்து வெட்கப் புன்னகைச் சிந்தியவன், இதழின் ஓரம் லாவகமாக ஒளித்துக் கொண்டான்.
நியூயார்க்கில் விமானம் ஏறும் முன்பு ரிச்சர்ட்டுடனான உரையாடல் நிகழ்வுக்கு வந்தது.
“இந்த லீவிலே லவ் சக்சஸ் பண்ணிடுவியா மச்சான்?”
“அது மயிலா கையில தான்டா இருக்கு” என்ற தீரன், “வீட்ல என்ன முடிவுல இருக்காங்கன்னே தெரியல. மாமாவும் நெல் எக்ஸ்போர்ட் விஷயமா வெளியூர் போயிருக்காங்க. இந்த வாரம் முழுக்க அவர் வீட்ல இல்லை. அன்னைக்கு அப்புறம் பேசுறேன் சொல்லி போன் கட் பண்ணதுல இருந்து மயிலாகிட்ட ஒழுங்கா பேச நேரம் அமையவே இல்லை. அவளுக்கு எக்ஸாம் டைம் வேற. அதனால அங்க நிலவரம் என்னான்னு சரியா தெரியல. அங்க போனாதான் தெரியும்” என்றான்.
“ம்ம்… யார் என்ன முடிவெடுத்தாலும் குடும்பத்துக்குன்னு யோசிக்காம உன்னோட விருப்பம் என்னவோ அதை ஓப்பனா சொல்லு” என்ற ரிச்சர்ட், “அஞ்சலி சரி சொல்லணும் நினைச்சு ரொம்ப யோசிக்காத” என்றான்.
“அவள் சம்மதம் ரொம்ப முக்கியம்டா!”
“வீட்ல சொல்றவங்களை மேரேஜ் பண்ண அவளுக்கு ஓகே! அப்போ அவங்க சொல்ற பையனை கட்டிக்க சம்மதன்னு அர்த்தம் தான? அந்த பையன் நீ அப்படிங்கிறப்போ கண்டிப்பா சரின்னு சொல்லுவா(ள்)” என்ற ரிச்சர்ட், “மேரேஜ் ஆனா லவ் தானா வந்திடும்டா” என்றான்.
“அப்படி மேரேஜ் ஆகிடுச்சுன்னு வர பிடித்தம் எனக்கு வேண்டாம். அவளுக்கா வரணும். எனக்கு வந்த மாதிரி. அவளுக்கு நான் தான் அப்படின்னு அவளோட மனசு சொல்லி என்மேல விருப்பம் வரணும்” என்ற தீரன், “அவளுக்கு வெளியூர் மாப்பிள்ளையெல்லாம் வேணாமாம். வீட்டோட வேணுமாம். ரூல் போட்டிருக்கா. அது மட்டும் தான் இடிக்குது. இப்போதைக்கு இந்தியாவிலே செட்டில் ஆகறதை என்னால நினைச்சிக்கூட பார்க்க முடியாது. புது ஃபீச்சர்ஸ் ஆட் பண்ணி ஃபங்ஷன் ஆகுற வரை டைட் ஷெட்யூல் தான்” என்றான்.
“இப்போவே அந்தளவுக்கு யோசிக்காத மச்சான். மே பீ நீதான் அவளுக்கானவன் அப்படிங்கிறப்போ, அவளோட முடிவுல மாற்றம் வரலாமே” என்றான் ரிச்சர்ட்.
“ஹ்ம்ம்… போனதும் டைம் பார்த்து சொல்லணும்” என்ற தீரனுக்கு, அந்த நொடியே மயிலாஞ்சலியிடம் காதலை சொல்லும் படபடப்பு ஒட்டிக்கொண்டது.
“பல வருஷம் கழிச்சு ஊருக்கு போற… எல்லாரையும் பார்க்க இருக்க, ஜாலியா போயிட்டு வாடா! அஞ்சலி உனக்குத்தான்” என்ற ரிச்சர்ட்டை அணைத்து விடுத்தான் தீரன்.
தான் வெளிப்படையாக சொல்லாமலே தன்னுடைய மனதை ரத்னவேலு கண்டுகொண்டிருக்க, அவரை மீறி அங்கு எதுவும் நடந்துவிடாது… மற்றவர்களை வேறு மாதிரி முடிவெடுக்கவும் ரத்னவேலு அனுமதித்திட மாட்டாரென்று தீரன் கொண்டிருந்த நம்பிக்கை யாவும் அவனது பயணம் முடிந்த அன்றைய விடியலில் தொலைய இருக்கின்றது.
********************
மதுரை பன்னாட்டு விமானநிலையம்.
விமான நிலைய செயல்முறைகள் முடித்த தீரன், கண்களில் தேடலை கூட்டி, காத்திருப்போர் பகுதிக்கு மிகுந்த ஆவலுடன் வந்தான்.
அவனைக் கண்டதும் உற்சாகத்தோடு கையசைத்திட்ட அத்வத்தை பார்த்ததும் தீரனின் ஆர்ப்பரிப்புகள் மொத்தமும் வடிந்திருந்தன.
“ஹாய் சித்தப்பா” என்று அருகில் வந்தவனை தோளோடு அணைத்து விடுத்த தீரனிடமிருந்து, அவன் தள்ளிக்கொண்டு வந்த பயணப் பொதிகளை வாங்கியிருந்தான் அத்வத்.
“போன்ல பாக்கிறதை விட, நேர்ல அம்சமா இருக்கீய்ங்க சித்தப்பா” என்ற அத்வத், “வண்டி பார்க்கிங்கில் இருக்கு” என்று ட்ராலியைத் தள்ளினான்.
“தனியாவா வந்த?” அத்வத்திடம் கேட்டாலும், தீரனின் பார்வை அவனின் மயிலாவைத் தேடி அவ்விடம் அலைந்தது.
“நானும் பெரிய மனுஷந்தேன் மாமா. பத்தாம் வவுப்பு பரீட்சை எழுதியிருக்கேன். உங்களைக் கூட்டியார நான் போதாதா?” என்றவன் பின்னந்தலையில் வலிக்காது தட்டிய தீரன், “வாய்… வாய்…” என்றான்.
“எல்லாம் அஞ்சலி ட்ரெயினிங்காக்கும்” என்றான்.
“ம்ம்…” என்ற தீரன், “நிஜமாவே அவள் வரலயாடா?” எனக் கேட்டான். ஏமாற்றம் கவிழ்ந்த முகத்துடன்.
அக்கணம் அவனது பின்னால் வலது பக்கத் தோளில் யாரோ கை வைத்திட, தீரன் யாரென்று திரும்பிப் பார்க்க, அவனுக்கு இடது பக்கம் வந்து நின்றாள் மயிலாஞ்சலி.
தீரன் ஒரு சுற்று சுற்றி நேராக பார்க்க, அவனுக்கு முன் மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு, தலை சாய்த்து, விரிந்த புன்னகையோட, ஒற்றை புருவம் தூக்கி பார்த்தவாறு நின்றிருந்தாள்.
அவளின் சிறு உடல் மொழிக்கும் சொக்கி உள்ளம் அதிர்ந்தான் தீரன்.
“மயிலா…” மொத்த மகிழ்வையும் கண்களில் தேக்கியிருந்தான்.
“மாமா” என்று இரு கரம் விரித்தவளாக தீரனை நெருங்கிய மயிலாஞ்சலி, அவன் எதிர்பார்த்திடாது பக்கவாட்டில் அணைத்து விடுத்தாள். சிறு அணைப்பில் தனது அன்பையும், மகிழ்வையும் கொட்டிக் காண்பித்திருந்தாள்.
“ஆள் செம ஸ்மார்ட்டா இருக்கீ(ய்)ங்க மாமா” என்று வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு வண்ணத்தில் காம்புகள் நீண்ட தாமரை மலர்கள் இரண்டை இரு கரங்களுக்குள் கோர்த்தவளாக அவன் முன் நீட்டியிருந்தாள்.
அவளின் அணைப்பில் சிலிர்த்து உறைந்தவன், அவளின் வார்த்தையில், செயலில் நிகழ் மீண்டிருந்தான்.
“ஆஹான்… அப்படியா?” என்று மயிலாவின் உச்சியில் உள்ளங்கை வைத்து அழுத்தம் கொடுத்த தீரன், “சர்ப்ரைஸ் எல்லாம் பயங்கரமா இருக்கே” என்று தாமரை மலர்களை வாங்கிக்கொண்டதோடு, “மயிலாவுக்கு இன்னும் நினைவிருக்கா?” எனக் கேட்டான்.
தாமரை மலர்கள் இரண்டையும் நாசி சேர்த்து வாசம் நுகர்ந்தான். குளத்து நீரின் ஈர மண் மற்றும் பாசி வாசனை அவனது நுரையீரல் சேர்ந்தது. கிராமத்து மணம் அளித்திடும் புத்துணர்வாய் புது சிலிர்ப்பு அவனது தேகத்தில் ஓடி மறைந்தது.
“எப்படி மறக்கும்? இந்த பூ கேட்டு நான் அடம் பிடிச்சேன்னு, ராத்திரியில நீங்க குளத்துல இறங்கி கொடி சிக்கி… அன்னைக்கு உங்க அச்சும்மாகிட்ட வாங்கின அடி மறக்க முடியுமா?” என்று சிரித்தாள்.
அவளில் நிறைந்த சிரிப்பு அவனிடத்திலும்.
“எப்படி இருக்கீங்க மாமா?” எனக் கேட்டவள், “போகும்போது மீனாட்சியை பார்த்துப்புட்டு போவோம் மாமா” என்றாள்.
“ம்ம்…” என்ற தீரன், ‘இனி எல்லாம் மீனாட்சி ஆட்சிதேன்’ என மனதோடு மொழிந்தவனாக முகம் சிவந்தான்.
தீரனின் பெட்டியை வண்டியின் பின்னால் வைத்து மூடிய மயிலாஞ்சலி, முன்னால் அமர வந்த அத்வத்திடம், “பொறத்தால உட்காருடே” எனக்கூறி, தீரனை முன்னிருக்கையில் அமர்த்தினாள்.
“நம்பி உட்காரலாமா?” கேட்டு மயிலாஞ்சலியிடம் முறைப்பினைப் பெற்றுக்கொண்டான் தீரன்.
“உங்களை ஜூப்பிட்டருக்கே கூட்டிட்டு போவேன்” என்றவளின் கைகளில் வெகு லாவகமாக இயங்கியது மகிழுந்து.
‘உன்னோட உலகம் தாண்டியும் வர தயார் தான். மேடம் தான் முடிவு பண்ணனும்.’ ஒவ்வொரு நொடியும் காதலை சொல்லிடத் தவித்தான். பெருங்காதலை மனதோடு பொத்தி வைக்க பேரவஸ்தைக் கொண்டான்.
அதன் பின்னர் கோவில் வரும் வரை அவனிடத்தில் சேர்பித்திட அவளுக்கு பல கதைகள் இருந்தன. அனைத்தையும் அவளை ரசித்தபடி கேட்டிருந்தான் தீரன்.
‘என்னை அவகிட்ட மொத்தமா சேர்த்திடு.’ இருகரம் கூப்பி மீனாட்சி அம்மனின் முன் மயிலாஞ்சலியின் மீதான மனம் நிறைந்த காதலோடு வேண்டுதல் வைத்த தீரன் கண்கள் திறந்திட, அம்மனிடத்தில் வைத்த தாழம்பூ குங்குமத்தை தீரனின் நெற்றியில் இட்டு, தனது மென் கரம் வைத்து அவனது கண்களை மறைத்தவளாக இதழ் குவித்து ஊதியிருந்தாள் மயிலாஞ்சலி. தனது மூச்சுக் காற்றால் அவனையும் சிறகின்றி விண்ணில் பறக்க வைத்திருந்தாள்.
“நான் பிரசாதம் வாங்கிட்டு வர்றேன்” என்று அத்வத் ஓடிட…
“டைம் இல்ல அத்து. நான் காலேஜ் போவணும்” என்று அவனை தடுத்திருந்தாள் மயிலாஞ்சலி.
“சர்க்கரைப்பொங்கல், புளியோதரை செமயா இருக்கும்ல?” தீரன் சொல்லிட, “நீ இங்கிட்டே மாமாவோட நில்லுடே” என்று சொல்லிய மயிலாஞ்சலி, சில நிமிடங்களில் தீரன் சொல்லிய பிரசாதம் மட்டுமில்லாது அங்கு கிடைக்கும் எல்லா வகை பிரசாதங்களையும் வாங்கி வந்திருந்தாள்.
“டேய்… நான் முன்ன சாப்பிட்ட நினைவில் கேட்டேன்” என்ற தீரனின் வாயில், அவன் மறுக்கவே முடியாது அனைத்திலும் ஒவ்வொரு வாய் எடுத்து அவனுக்கு ஊட்டியிருந்தாள்.
“சும்மா கேட்டீங்களோ, நிஜமாவோ… உடனே கிடைச்சிட்டா மனசு நிறைஞ்சிடும்ல” என்றவள், “போலாமா?” என்றாள்.
“அப்போ நான் என்ன கேட்டாலும் செய்வீயா?” அவனிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு.
“கண்டிப்பா… முடியாதுன்னாலும் முடிச்சிக்காட்டுவேன். என் மாமா ஆசைப்பட்டதெல்லாம் நடக்கணும். எப்பவும் சந்தோஷமா இருக்கணும்” என்றவளை அள்ளி அணைத்து தனக்கே தனக்கென்று நெஞ்சுக்குள் பொத்திக்கொள்ள பேராவல் அவனிடம் ஆர்ப்பரித்தது.
தீரன் விழிகள் சுருக்காது அவளையே பார்த்திருக்க…
“போலாம் மாமா. இன்னைக்கு லாஸ்ட் எக்ஸாம். உங்களை வூட்ல வுட்டுட்டு நான் காலேஜ் போவணும்” என்றாள்.
“எனக்கு பிரசாதம்” என்று அத்வத் கேட்க, “மொத்தம் உனக்குத்தேன். கார்ல உட்கார்ந்து உண்கிட்டே வாடே” என்று பிரசாதம் அடங்கிய இலையை அவனின் கையில் திணித்தாள்.
