1. ஆண்டாள் வெங்கட்ராகவன் என்ற எழுத்தாளர் உருவான பின்னணி என்ன? எழுத்தின் மீது உங்களுக்கு ஆர்வம் ஏற்பட்ட முதல் தருணம் எது?
என்னோட அம்மா புத்தக விரும்பி. பக்கா வாசகி. அப்ப லாக்டௌன் நேரம். அம்மாவும் எங்க சரண்யா அக்காவும் சேர்ந்து பேசி, எங்கம்மாவோட புத்தக ஆர்வம் மீண்டும் தலைதூக்கி, நாங்க எல்லாருமா சேர்ந்து புத்தகம் படிக்க ஆரம்பிச்சோம். அப்ப விளையாட்டா துவங்கினதுதான் இந்த கதையெழுதும் ஆசை. பக்கம் பக்கமா நோட்ல எழுதினது, பிறகு பன்னிரெண்டாம் வகுப்பு முடிஞ்சதும் வந்த போட்டி ஒன்றில் கலந்துகொண்டு, முதல்படி வெற்றியில் நுழைந்து துவங்கியதுதான் இந்த எழுத்துப்பணி
2. உங்கள் எழுத்துப் பயணத்தில் «லாஜிக் இல்லா மேஜிக்» ஒரு குறிப்பிடத்தக்க படைப்பாக இருக்கிறது. அந்தக் கதைக்கான அடிப்படை யோசனை எப்படி உருவானது?
உண்மையைச் சொல்லனும்னா ஒருநாள் தூக்கம் வராம விளையாட்டுப்போக்கில் யோசிச்சது தான் அந்த கதை. எதிர்காலத்துக்குப் பயணம் பண்ணினா எப்படியிருக்கும்னு யோசிச்சுட்டே தூங்கினேன். அதை டெவலெப் பண்ணி எழுதின கதை அந்த முதல் பாகம். ஒரு வருஷம் பின்னனி வேலைகள் பார்த்து ஆராய்ச்சி பண்ணி எழுதினேன். முதல் பாகம் முடிக்கும்போதுதான் அடுத்தடுத்த பாகங்கள் எழுத தோன்றி கதையின் போக்கில் பயணிச்சு எழுதினேன்.
3. தலைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கும் தங்களின் வித்தியாசமான வார்த்தைகளே வாசகரிடம் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. முதலில் கதைக்கரு தோன்றிடுமா? அல்லது தலைப்புதானா?
முதல்ல கதைக்கருதான் தோன்றும். அதுக்குப் பிறகு அந்த கருவை உணர்த்தும்படியோ அல்லது கதையில் வரும் முக்கியமான உணர்வை உணர்த்தும்படியோ பெயர் வைப்பேன்
4. ஒரு எழுத்தாளராக உங்களைப் பொறுத்தவரை லாஜிக் முக்கியமா, மேஜிக் முக்கியமா? அதாவது கதையை எழுதும்போது திட்டமிடுதலா, கதாபாத்திரங்களோடு இயல்பாகப் பயணிப்பதா எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?
காதாபாத்திரங்களோடு இயல்பாகப் பயணிப்பது தான். முதல் அத்தியாயம் கூட ப்ளான் பண்ணியெல்லாம் துவங்க மாட்டேன். எழுத எடுக்கும்போது அந்த கதாபாத்திரங்கள் கூட்டிட்டுப் போகும் பாதையில் போயிடுவேன்
5. «நேசவிதையின் புவியீர்ப்பு விசையே» என்ற தலைப்பு அழகாக இருக்கிறது. இந்தத் தலைப்புக்குள் இருக்கும் “புவியீர்ப்பு விசையே” என்ற உருவகம் எப்படிக் கதையோடு இணைந்தது?
நாயகி நாயகனுக்கே தெரியாமல் அவனை பல வருடங்களாகக் காதலிப்பாள். தன்னை அவள் காதலிப்பது பற்றி எதுவும் அறியாத நிலையில் நாயகனாக அவள்மீது காதலில் வீழ்வான். அவள் மனதிலிருக்கும் காதல் விதையின் ஈர்ப்பு விசைக்கு கட்டுப்பட்டு அவள் காதலில் அவன் கட்டுண்டதை வெளிப்படுத்துவதுதான் இந்த தலைப்பு.
6. கதையை எழுதும்போது, உங்களுக்கு மிகவும் சவாலாக இருந்த கதாபாத்திரம் எது? அந்தக் கதாபாத்திரத்தை உருவாக்கிய விதம் குறித்து பகிர்ந்துகொள்ள முடியுமா?
தீந்துளியில் கலந்த தேன்துளியே கதையின் நாயகன் இளங்கவி. என்னைப் பொறுத்தவரை இவன் ஒரு ஆன்டி ஹீரோ. நாயகியை ஏமாற்றி, நாயகியின் காதலனாக நடித்து அவளோடு வாழ்வான். நாயகிக்கு அவன் அவள் காதலித்தவன் இல்லைனு தெரியாது. ஆனா கதை எழுதும் எனக்குத் தெரியும் தானே? என்னால மனசார அதை எழுத முடியலை. அவ்ளோ கஷ்டமா இருந்தது. ஆனா முடிவு நான் எதிர்ப்பார்த்ததை விட அதிக திருப்தியைக் கொடுத்தக் கதையும் அதுதான்.
7. கதையில் காதலை வெறும் காதல் உணர்வாக மட்டுமல்லாமல், கதாபாத்திரங்களின் வாழ்க்கையை மாற்றும் ஒரு சக்தியாக அணுகியிருக்கிறீர்களா? இதுபோன்ற உணர்வுகளை எழுதும்போது உங்களுக்கு இருக்கும் அணுகுமுறை என்ன?
வெறும் காதல் உணர்வா கொண்டு போனதில்லை. காதல் கதைகளில் பெரும்பாலும் நாயகன் நாயகி ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கும் காதலின் ஆழம், விதம், மற்றும் வெளிப்படுத்தும் தன்மை தான் அவங்க வாழ்க்கையை அந்த கதையில் தீர்மானிக்கும்.
8. «மகிழ்நனின் மருதமே» என்ற படைப்பின் தலைப்பில் இருக்கும் “மருதம்” என்ற சொல்லே ஒரு தனித்துவமான தமிழ் மணத்தைத் தருகிறது. தலைப்புகளில் அழகான தமிழ் சொற்களைப் பயன்படுத்துவதில் உங்களுக்கு இருக்கும் ஆர்வம் எப்படி உருவானது?
நான் பன்னிரெண்டாம் வகுப்புப் படிக்கும்போது என்னோட தமிழ் பாட புத்தகத்தில், ஏதோ ஒரு பாடத்தில் தமிழின் சிறப்புகள் இடம் பெற்றிருக்கும். அப்ப தமிழ்ல ஒரே பொருள் கொண்ட பல சொற்களும், பல பொருட்கள் கொண்ட ஒரு சொல்லும் இருப்பதா அதில் குறிப்பிட்டிருக்கும். ‘கடல்’ என்ற சொல்லுக்கு இணையான என்னற்ற சொற்கள் அதுல இருந்ததைப் படிக்கும்போது எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு. அப்போருந்து கதைக்கு எதாவது தலைப்பு தேடினா, நான் தேர்ந்தெடுக்கும் வார்த்தையை ஒத்த மற்ற சொற்கள் என்னென்ன தமிழ்ல இருக்குனு தேடி எடுப்பேன். அது எனக்கு ரொம்ப பிடிச்சும் இருந்தது.
9. ஒரு கதைக்குத் தலைப்பு வைக்கும் போது, அது கதையின் மையக்கருவைச் சொல்ல வேண்டுமா? அல்லது வாசகருக்குள் ஒரு கேள்வியை உருவாக்கினாலே போதும் என்று நினைக்கிறீர்களா?
பெரும்பாலும் கதையின் மையக்கருத்தை குறிக்கும்படி தான் வைக்க விரும்புவேன்
10. «நிந்தைகளின் நுட்பமே» கதையைத் தொடங்கியபோது முதலில் உங்கள் மனதில் தோன்றியது கதாபாத்திரமா, சம்பவமா அல்லது கதையின் உணர்வா? இக்கதையின் அடித்தளமாக அமைந்த விஷயமென்று ஏதேனும் உள்ளதா?
பக்கா கிரைம் கதை ஒன்று எழுதனுமுங்குறது தான் மனசுல இருந்தது. யார் கொலையாளி என்னனு எதுவும் யோசிக்கலை. எப்படி கொலை செய்யலாமுங்குற பேட்டர்ன் மட்டும் தான் யோசிச்சேன். மத்ததெல்லாம் கதை எழுத எழுத அப்பைக்கப்ப முளைச்ச யோசனைகள் தான்.
11. தொடர்கதை எழுதும்போது ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் வாசகரை அடுத்த அத்தியாயத்துக்காகக் காத்திருக்க வைப்பது ஒரு சவால். அதை நீங்கள் எப்படி அணுகுகிறீர்கள்?
எல்லா அத்தியாயங்களிலும் அடுத்த அத்தியாயத்திற்குத் தூண்டும்படி முடிக்க இதுவரை முயன்றதில்லை. ஆனால் சில கதைகளில் கடைசியான பரபரப்பான அத்தியாயங்களை நெருங்கும்போது அந்த சவாலைக் கையாண்டு என்னால் முடிந்த அளவு வெற்றியும் கண்டிருக்கேன்
12. நீங்கள் உருவாக்கும் கதாபாத்திரங்கள் கதையின் ஆரம்பத்தில் நீங்கள் திட்டமிட்டபடியே பயணிக்கின்றனவா? அல்லது எழுதிக்கொண்டிருக்கும்போது அவற்றின் குணநலன்கள் உங்களுடைய கதையையே மாற்றியிருக்கிறதா?
திட்டம் போட்டா அதுபடி நடக்காது🤭 கதைல ஒவ்வொரு அத்தியாயம் எழுதி முடிக்கும்போது ஒரு யோசனை உருவாகும். அதுக்கு ஏற்றார் போல கதையோடு போக்கின்படி தான் கதாபாத்திரம் வடிவமைப்பேன். மையமா இவங்க தைரியமான பாத்திரமா இருக்கனும், இவங்க சாதுவா இருக்கனும்னு இப்படி எதுவும் வேணும்னா யோசிப்பேன். மற்றபடி அவங்க மைய குணநலன்கள் கதையோட போக்கு மற்றும் கதைக்கு அவர்கள் எப்படி செயல்பட்டா நல்லாருக்கும்னு படுதோ அப்படி தான் உருவாகும்.
13. ஒரு கதையை எழுதும்போது முதலில் முடிவைத் தீர்மானித்துவிட்டு அதற்கான பாதையை உருவாக்குபவரா நீங்கள்? அல்லது கதாபாத்திரங்களுடன் சேர்ந்து பயணிக்கும்போது முடிவைத் தீர்மானிப்பவரா?
கதையைப் பொருத்தது. சில கதைகளுக்கு முடிவை முதலிலேயே யோசித்திருப்பேன். உதாரணமாக தீந்துளி கதை தான். சில கதைகளுக்கு கதையோட போக்கில் பயணித்து முடிவு எழுதுவேன்.
14. வாசகர்களின் கருத்துகள் உங்கள் அடுத்த கதையின் கதைக்களம் அல்லது கதாபாத்திர உருவாக்கத்தில் எப்போதாவது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதா?
இதுவரை அப்படி நடந்தது இல்லை
15. ஒரு எழுத்தாளரின் படைப்புகளில் அவருடைய சொந்த ரசனையும் வாழ்க்கைப் பார்வையும் ஏதோ ஒரு வகையில் பிரதிபலிக்கும். உங்கள் கதைகளில் உங்களுடைய தனிப்பட்ட சிந்தனைகள் எந்த அளவுக்கு இடம் பெறுகின்றன?
நிறையவே இடம் பெற்றிருக்கும்🙈 உதாரணமாக எனக்குக் கண்ணாடி வளையல் ரொம்ப பிடிக்கும். அதனால் என்னோட பெரும்பாலான நாயகிகளுக்கு அது பிடித்த ஒன்றாக இருக்கும். இப்படி பல
16. போட்டிக்கதைகள் மூலம் எழுதும்போது, குறிப்பிட்ட காலக்கெடு உங்களுடைய எழுத்தில் வேகத்தை அதிகரிக்கிறதா? அல்லது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறதா?
முன்பெல்லாம் வேகத்தைத்தான் அதிகரித்தது. இப்ப சில நாட்களாக எழுத நேரம் போதாததால் சற்று அழுத்தமாகத்தான் இருக்கிறது.
17. பிற எழுத்தாளர்களின் கதைகளை வாசிப்பதுண்டா? அவர்களின் கதைகளை எப்படி எடுத்துக்கொள்வீர்கள்?
நிச்சயம் வாசிப்பேன். ஒவ்வொரு ஜானருக்கு ஒவ்வொரு எழுத்தாளர்னு எனக்குள் என் ரசனைக்கு ஏற்ற லிஸ்ட் ஒன்னு உண்டு. அதன்படி எந்த நேரம், எந்த மனநிலை, எந்த மாதிரியான கதை கேட்குதோ அதற்கு ஏற்ற ஆசிரியரோட கதையைத் தேர்ந்தெடுத்துப் படிப்பேன்.
18. கதையை எழுதத் தொடங்கும்போது, ஏற்கனவே இருக்கும் அந்தத் தலைப்பு உங்களை ஒரு குறிப்பிட்ட கதைக்களத்திற்குள் அழைத்துச் செல்லுமா? அல்லது எழுதத் தொடங்கிய பிறகுதான் கதை அதன் பாதையைத் தீர்மானிக்குமா?
பெரும்பாலும் கதை எழுதின பிறகுதான் பாதையை தீர்மானிக்கும். வெகு சில கதைகளில் தான் முடிவை முதலிலேயே யோசித்திருப்பேன்.
19. இதுவரை நீங்கள் எழுதிய படைப்புகளில், “இந்தக் கதையை எழுதும்போது நான் எழுத்தாளராக நிறைய கற்றுக்கொண்டேன்” என்று சொல்லக்கூடிய ஒரு படைப்பு எது? ஏன்?
லாஜிக் இல்லா மேஜிக் சீரீஸ் மற்றும் தீந்துளியில் கலந்த தேன்துளியே கதை
20. ஆண்டாள் வெங்கட்ராகவன் அவர்களின் எழுத்தை இதுவரை வாசிக்காத ஒரு புதிய வாசகரிடம், எந்தப் படைப்பின் மூலம் உங்கள் எழுத்தை அறிமுகப்படுத்த விரும்புவீர்கள்? அதற்கான காரணம் என்ன?
நிச்சயம் லாஜிக் இல்லா மேஜிக் சீரீஸ் தான். எனக்கு பர்ஸனலி ரொம்ப பிடித்த கதை அது. நிறைய ஆராய்ச்சி செய்து, கதையை அத்தனை கலகலப்பாகவும் கொடுத்திருந்தேன். அதனால அந்த கதையைத்தான் சஜஸ்ட் பண்ணுவேன்.
21. கல்லூரி வாழ்க்கை, எழுத்துலகம் எப்படி சமன் செய்கிறீர்கள்?
இது எனக்கே புரியலை எப்படி பண்றேன்னு😂 பட் இப்ப சமீபமா இரவு பத்துமணி வரை படிப்புக்கான நேரம், பத்துலருந்து பத்தரை எழுத்துக்கான நேரம். அதுபோக காலைல சீக்கிரம் எழுந்து கொஞ்சம் நேரம் இதுக்குனு செலவிடுறேன்
22. இந்த எழுத்துலகப் பயணம் எப்படியிருக்கிறது?
ரொம்ப ரொம்ப ரொம்ப நிம்மதியாருக்கு. என்னால நிஜ வாழ்க்கைல செய்ய முடியாத, பேச முடியாத, அனுபவிக்க முடியாத எல்லாத்தையும் இதுல எழுதி திருப்தி அடைஞ்சுப்பேன்
23. வெற்றி, தோல்வி… எப்படி பார்க்கிறீர்கள்?
தோல்வி கஷ்டமாலாம் இருக்காதுனு நாடகத்தன்மையா பேச மாட்டேன். எதாவது கதைக்கு எதிர்ப்பார்த்திருந்து கிடைக்கலைனா வருத்தமா தான் இருக்கும். ஆரம்பத்துல ஒருமுறை அழுககூட செய்திருக்கிறேன். அப்ப நான் சின்ன புள்ளை வேறல்ல.. அப்றம் பழகிடுச்சு. போட்டில சேர்ந்தா ஒரு நல்ல படிப்பை முடிக்கலாம் நிறைய வாசகர்களைப் போய் சேரலாமுங்குற எண்ணம் வந்துடுச்சு.
24. எழுத வேண்டுமென்ற எண்ணத்தின் விதை எங்கு துளிர்த்தது?
அம்மாவும் சரண்யா அக்காவும் வாசகியா போட்ட வித்துல, விளையாட்டா நானும் என் உடன்பிறப்பும் பேசிக்கும்போது நானே ஒரு கதை உருவாக்கப்போறேன்னு துவங்கினது தான் இந்த பயணம்..
25. வாசகர்களிடம் சொல்ல வேண்டுமென நீங்கள் நினைப்பது?
கதைகளைப் படித்து மனசுக்குப் படும் நிறை குறை எதுவாருந்தாலும் எழுத்தாளரிடம் பகிர்ந்துக்கோங்க.
26. புதிய எழுத்தாளர்களுக்கு சொல்ல விரும்புவது?
சொல்லப்படும் நிறைகளை மற்றும் ஏற்காமல் குறைகள் இருந்தது, அதை வாசகர்கள் சுட்டிக்காட்டினா ஏற்று, ஆராய்ந்து திருத்திக்கோங்க.
27. எழுத்துலகில் கடினமான தருணமென நீங்கள் நினைத்தது?
ரைட்டிங் ப்ளாக் தான். எழுத வார்த்தைகள் கோர்க்க முடியாத நேரம். எழுதவும் வராது, எழாதாமலே இருப்பதும் எப்படியோ இருக்கும். அந்த தருணத்தைக் கடந்து நார்மல் மோட் திரும்புவது தான் கடினமான தருணம்
28. எந்தவகை கதை எழுதுவது சற்றே சிரமமானதென நினைக்கிறீர்கள்?
கிரைம் அன்ட் ஃபேன்டஸி. நிறைய வேலைபாடுகள் செய்தாதான் துவங்க முடியும் என்னால. ஆனா எனக்கு அதுதான் பிடிக்கவும் செய்யும்.
29. புதிதாக வரும் எழுத்தாளர்களும், அவர்களின் கதைகளும் உங்களின் பார்வையில் எப்படி இருக்கிறது?”
நான் வந்தப்ப என்னோடு வந்த புதுமுக எழுத்தாளர்கள் கதைகள் படிச்சிருக்கேன். இப்ப ரொம்ப சமீபமாக வந்த எழுத்தாளர் பற்றி எனக்கு அந்தளவு தெரியலை. இதைப் படிக்கும் வாசகர்கள் யாராவது புதுமுக எழுத்தாளர்களில் உங்கள் மனதை கவர்ந்த எழுத்துக்கு உரிமையானவர்கள் இருந்தால் சொல்லுங்க படிச்சுப் பார்க்குறேன்
30. பெற்ற வெற்றிகள்:
நறுமுகை நிலாகால போட்டி- மலரே மௌனமா- மூன்றாம் பரிசு
வைகை தளம்- பத்து நாள் பத்து அத்தியாயம் போட்டி- கார்கோள் கொண்ட குமரியாள்- இரண்டாம் பரிசு
கவி சந்திரா தளம் போட்டி- நம் காதல் நாணலன்றோ?-மூன்றாம் பரிசு
தூரிகை தளம் ஹீரோ போட்டி- காகிதப்பூவே- முதல் பரிசு
31. ஒவ்வொரு ஜானருக்கும் ஒவ்வொரு எழுத்தாளர்கள் பிடிக்குமென்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்… அவர்கள் யாரென்று குறிப்பிட்டால், அவர்களின் கதைகளை இதுவரை வாசித்திடாத வாசகர்கள் முயற்சித்துப் பார்க்க உதவியாக இருக்கும்.
ஃபீல் குட்- பவித்ரா நாராயணன்
அழுத்தமான காதல்- பிரியதர்ஷினி. எஸ்
கிரைம்- கார்த்திகா சர்க்கரவர்த்தி
ஃபேன்டஸி- பார்கவி முரளி
காமெடி- வானதி
*************
எழுத்தில் எண்ணங்களையும், வார்த்தைகளில் உணர்வுகளையும் அழகாய் வடிக்கும் எழுத்தாளருக்கு வாழ்த்துகள்!
உங்கள் எழுத்துப் பயணம் மேலும் மேலும் சிறக்க, புதிய படைப்புகள் பிறக்கட்டும்!
கேள்விகளுக்கும் பதில்களுக்கும் வழியே இலக்கிய உலகை வளப்படுத்தும் உங்கள் முயற்சி தொடரட்டும்!
ஆண்டாள் வெங்கட்ராகவன் அவர்களின் எழுத்துலகப் பயணம் வெற்றிகளால் நிறையட்டும்!
நட்புடன் 💞
பிரியதர்ஷினி S
