தூரமே தூரமாய் 2
நினைவுகள் அழகானது…
உதட்டில் சிரிப்பினைத் தோற்றுவிக்கும் மறுகணம், கண்களில் கண்ணீரை பரிசளித்துவிடும்.
புன்னகையும், அழுகையும் ஒருங்கே எழும்பும் தருணங்கள் அழகானது தானே! ஆதலால், நினைவுகள் என்றும் அழகானது தான்.
________________________
நான்கு வருடங்களுக்குப் பிறகு…
காலை நேர பரபரப்பிலும் வீடு அத்தனை அமைதியாக இருந்தது.
காலை நேர ஓட்டத்திற்கு சென்ற இனியன் வீட்டிற்குள் நுழைந்ததும், முகத்தை துணியால் துடைத்தவனாக கூடத்து நீளவிருக்கையில் சற்று தளர்வாக அமர்ந்தான்.
“என்னத்துக்கு இப்படி காலையிலே வியர்க்க விறுவிறுக்க ஓடனும். இப்படி சோர்ந்து உட்காரனும்?” என்று கேட்டபடி வந்த தீபா மகனின் முன்பு தேநீர் கோப்பையை வைத்தார்.
“அம்மா…” இழுவையாக அன்னையை ஏறிட்டான் இனியன்.
“என்னடா… இது ஜாகிங். உடற்பயிற்சி. உடலுக்கு நல்லது. அதுதானே?” எனக் கேட்ட தீபா, “உடம்புல சதை இருந்தாலும் பரவாயில்லை. நீயே அங்கங்கே எலும்பு வீங்கி இருக்க. கன்னத்துலையாவது புடிச்சி இழுக்க கொஞ்சம் சதை இருக்கா? நாளைக்கு உனக்கு கல்யாணம் ஆச்சுன்னா உன் பொண்டாட்டி உன்னை எப்படிடா கொஞ்சுவா? கட்டிபிடிச்சா அவளுக்கு பாறையை கட்டிக்கிட்ட மாதிரி இருக்காது? உனக்கெதுக்கு இந்த ஓட்டம், உடற்பயிற்சிலாம்?” என்றார்.
நொடியில் அவனது சிக்ஸ் பேக் தேகத்தை கலாய்த்துவிட்டாரே!
இனியன் முறைத்துக்கொண்டு இருக்க…
‘ஓவரா சீண்டிட்டமோ?’ என நினைத்தவர், “அடுப்புல வேலையிருக்கு கண்ணா” என்று நழுவப்பார்த்தார்.
“இதையும் கொண்டு போங்க. எனக்கு ப்ரேக்ஃபாஸ்ட் ப்ரூட் சாலட் போதும்” என்று தேநீர் கோப்பையை காட்டியவன், வேகமாக எழுந்துச் சென்றான்.
“இவனை டாக்டருக்கு படிக்க வச்சது தப்பாப்போச்சு” என்று புலம்பியவராக தீபா சமையலறைக்குள் செல்ல, அவரை பார்த்து இருபக்கமும் தலையாட்டிவிட்டு மாடியேறுவதை தொடர்ந்த இனியன், முதல் தளம் வந்ததும்… தனது அறைக்கு நேரெதிரே இருந்த அறையின் கதவு பாதி திறந்திருக்க தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான்.
“வாங்கண்ணா!”
இமையாள் வரவேற்றிட… இனியன் மெத்தையில் அமர்ந்தான்.
“ஸ்கூல் கிளம்பிட்டியாடா?”
“ம்ம்ம்…”
ஒற்றை வார்த்தை தான் அவளிடம். கடந்து சென்ற வருடங்களில். கேட்டதற்கு பதில் வரும்.
காரணம் தெரிந்தும் காட்டிக்கொள்ளாது தங்கையின் கவலைக்கு, காவலனாக துணை நிற்கின்றான்.
தங்கையின் காதல் முற்று பெற்ற காரணமறிந்து துடித்தவன், தன் கண் முன்பே ரத்த கரையோடு நின்றிருப்பவனை திட்டவும் முடியாது தவித்து நின்ற தருணம் அத்தனை கொடுமையானது.
அந்த விபத்திற்கு சில மணி நேரம் வரை பட்டாம்பூச்சியாய் துள்ளி திரிந்த தங்கை சிறகின்றி இருக்கும் இந்த சில வருடங்களில்… அண்ணாவாக அவள் நிலையின் மீது இனியன் கொண்ட கவலை அதிகம்.
வெளிக்காட்டிக்கொள்ளாது நடமாடவே தன்னை இறுக்கமாக்கிக் கொண்டான் இனியன்.
“வரவர சுத்தமா பேசறதே இல்லை!”
“அப்படிலாம் இல்லைண்ணா!”
“நீ ஏன் சடனா இப்படி மாறுன?” தெரிந்து கொண்டே வினவினான். அவளாக மனதில் உள்ளவற்றை கொட்டி கவிழ்த்திட்டால் சாதாரணமாகிவிடுவாள் என்று எண்ணினான்.
செய்து கொண்டிருந்ததை விடுத்து இனியனை நிமிர்ந்து அழுத்தமாகப் பார்த்தவள்…
“உங்களுக்கு நிஜமா தெரியாதா?” எனக் கேட்டாள். கூர்மையாக.
இனியன் தடுமாறினான்.
“இமயா!”
“என்னால தான் நீங்க ரெண்டு பேரும் ஃபிரண்ட் ஆனிங்கன்னாலும்… அவங்களுக்கு என்னைவிட உங்களைத்தான் அதிகம் பிடிக்கும்” என்றாள்.
இனியனிடம் கனத்த மௌனம்.
“எனக்காக நீங்க உங்களோட ஃபிரண்டை ஒதுக்க வேண்டாம்.”
பல மாதங்களுக்கு பிறகு நீண்டு பேசுகிறாள்.
“அவன்கிட்ட பேசனும்ன்னா அவன் எங்கிருக்கான்னு தெரியனுமே!” இனியனிடம் ஆழ்ந்த பெருமூச்சு.
அந்நொடி இமையாளின் பார்வைக்கான பொருள் இனியனுக்கு விளங்கவில்லை.
‘பொய் சொல்றேன் என நினைக்கிறாளோ!’ அவனின் மனம் அலறியது.
“என்னைவிட அவங்க உங்களுக்கு முக்கியமில்லை நினைக்கிறேன்” என்றாள்.
இனியனின் விழிகளில் அலைப்புறுதல்.
“எனக்கு என்னவோ கொஞ்ச நாளில் அவங்களை பார்ப்பேன்னு தோணுது” என்றவள், தன்னுடைய பையை எடுத்து தோளில் மாட்டியவளாக அறையை விட்டு வெளியேற…
“நீ உன் வாழ்க்கையை பார்க்கலாமே!” என்றான்.
நின்று திரும்பியவள் அடுத்து என்ன என்று பார்த்தாள்.
“அவன் நல்லாதானே இருக்கான்!”
“இப்போ தான் அவங்க இருக்க இடமே தெரியாது சொன்னீங்க?” அவளிடம் ஒருவித ஆராயும் தன்மை.
‘அடேய் இனியா நீயே மாட்டிப்ப போலயே! வாய் வச்சிட்டு சும்மா இருடா.’ உள்ளுக்குள் தன்னைத்தானே கொட்டிக்கொண்டான்.
“அவன் லைஃப் பார்த்துகிட்டு போயிட்டான். நீ உன் லைஃப் பார்க்கலாமில்லையா?”
“ஹான்…” என்றவள், மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு, “சரி பையன் பாருங்க” என்றாள்.
இமையாளின் பதிலில் இனியன் அதிர்ந்தான். நியாயத்திற்கு அவன் மகிழ்ந்திருக்க வேண்டும்.
மூன்று ஆண்டுகளாக அவளை திருமணத்திற்கு சம்மதிக்க சொல்லி தீபாவும் அவரின் கணவர் சுரேந்தரும் போராடிக் கொண்டிருக்கின்றனர். நடுவில் இனியனின் தலையும் உருளும். இனியாளுக்கு எடுத்து சொல்லென்று. அப்போதெல்லாம் இனியனிடம் மௌனம் மட்டுமே!
அவனால் நண்பனை விட்டுக்கொடுத்திட முடியாது. அதே நேரம் தங்கைக்கு மேலும் ரணம் கொடுத்திட முடியாது.
இமையாள் ருதுவை மறக்க வேண்டுமென நினைக்கும் இனியன், இமையாளின் காதல் ஆழம் உணர்ந்து தன் தங்கைக்கு சரியான பொருத்தம் ருது மட்டுமே என்றும் நினைக்கிறான். இரண்டில் ஒன்று மட்டுமே நடக்க வாய்ப்புள்ளது. அவனுக்கும் தெரியும்.
இனியனால் நண்பனை மலையிறக்க முடியவில்லை. தங்கையின் மனதை மாற்ற முயற்சிக்கிறான்.
“நல்ல பையனா பாருங்கண்ணா! சைக்காலஜியில் மாஸ்டர் முடிச்சிருக்கணும். ஐபிஎஸ் பாஸ் பண்ணியிருக்கணும். என் அண்ணனுக்கு அந்த பையன் க்ளோஸ் ஃபிரண்டா இருக்கணும். அப்படியொரு பையன் பாருங்க. நாளைக்கே கல்யாணம் செய்துக்கிறேன்” என்று இனியனின் தலையில் சத்தமின்றி இடியை இறக்கியவள், கையில் கட்டியிருக்கும் கடிகாரத்தில் நேரத்தை பார்த்தவளாக சென்றுவிட்டாள்.
“இதுக்கு நீ ருதுவைத்தான் கட்டிப்பேன்னு நேரடியாவே சொல்லியிருக்கலாம்” என்று முணுமுணுத்துக்கொண்ட இனியன்,
‘அப்போ அவனுக்கு கல்யாணம் ஆனதை இவள் இன்னும் நம்பலையா?’ என்று உள்ளுக்குள் அதிர்ந்தான்.
“என்னால இதுக்கு மேல முடியாதுடா. எங்கடா இருக்க? அடேய் ருது” என்று ருதுவின் மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் அனுப்பி வைத்தான்.
ருது இமையாளிடம் தன் காதலை சொல்லியதுமே இனியனை சந்தித்து தன் மனதை வெளிப்படுத்தி நண்பனாகிக் கொண்டான்.
ருதுவின் பேச்சில் முதலில் கோபம் எழுந்தாலும், அவனின் பக்குவம் இனியனை நிதானிக்க வைத்தது. யோசிக்க வைத்தது. அவனை கவனிக்க வைத்தது.
“இமையாள் எனக்கு வேணுன்னா… அதில் நீங்களும் அடக்கம். லெட்ஸ் பீ ஃபிரண்ட்ஸ்” என்று நீட்டியவனின் கரத்தை ஏனோ இனியனால் நிராகரிக்க முடியவில்லை. பற்றிக்கொள்ளத்தான் தோன்றியது. அந்த பற்றல் இத்தனை இறுக்கமாகும் என்று அவனே அன்று எதிர்பார்த்திருக்கமாட்டான்.
தங்கையை விட… அவளின் வலியை விட… நண்பன் முக்கியமாக இருக்கின்றானே!
எட்ட நின்று காதலை அன்பு வழி மட்டுமே காட்டிய ருதுவின் மீது இனியனுக்கு அதீத மதிப்பு. அது அவனை தன் நண்பன் என்று சொல்லிக்கொள்வதில் கர்வம் கொள்ள வைத்தது.
ருதுவிற்கு இமையாள் தான் தன்னுடைய காலம் முழுமைக்கும் என்கிற அதீத காதல். அதனை மறைத்து செய்வதில் துளி விருப்பமும் இல்லை. காதலை பெற்றோரிடம் காதலென்று சொல்லிட முடியாது. பெற்றோரின் மனநிலை காதல் என்பதில் மட்டும் எப்படி மாற்றம் கொள்ளுமென யாராலும் கணித்திட முடியாது. அதற்காகவே தனக்கு இணையான வயதுடைய, தன்னவளின் தமையனுக்கு தன்னை புரியுமென்று இமையாளிடம் காதலை சொல்லிய சில நிமிடங்களில் இனியனிடமும் சொல்லியிருந்தான்.
அதில் தொடங்கிய அவர்களின் நட்பு இமையாள் என்பவளுக்காக மட்டுமில்லாது, இரு ஆண்களுக்காகவே ஆழ வளர்ந்தது.
ருது பயிற்சிக்கு சென்ற பின்னர், இமையாளுடன் பேசிய பொழுதுகளில் இனியனுடனும் பேசிக்கொண்டு தான் இருந்தான்.
இமையாளை எப்படித் தவிர்த்தானோ அதேபோல் இனியனையும் ருது தவிர்க்கவே செய்தான்.
சொல்லப்போனால் இமையாளை விட இனியனை அதிகம் விலக்கி வைத்தானென்றே சொல்லலாம்.
இனியனை கொண்டு இமையாளை மீண்டும் தன் வாழ்வில் இணைத்திட முயன்றிடுவோமோ என்பதற்காகவே இமையாளை காட்டிலும் நண்பனை அதிகம் தள்ளி வைத்தான்.
இமையாளை சந்தித்து பேசிவிட்டு இனியனுடன் பேச இருந்த ருதுவிற்கு தன்னவளை ரத்த வெள்ளத்தில் பார்ப்போமென்ற எண்ணம் சிறிதுமில்லை.
கண்ணீரோடு மழை நீரில் கரைந்து தன் பார்வையிலிருந்து மறைந்தவளை பார்த்துக்கொண்டே இனியனுக்கு அழைத்த ருது, அவனது கல்லூரியில் சந்திப்பதாக சொல்லி கிளம்பிவர, சில நொடிகளில் அவன் கண்டது கூட்டத்திற்கு நடுவே ரத்தம் மழைநீரோடு கலந்து ஓட நடு சாலையில் மயங்கிக் கிடந்த தன்னவளைத்தான்.
அவளுக்கு வலிக்கும் என்று தவித்தவன், அந்நொடி மனம் சுமக்க முடியா வலியில் துடித்திட்டான்.
இனியன் மேல் படிப்பு இறுதி ஆண்டு படிக்கும் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தவன், அரை உயிராய் சுவற்றில் சாய்ந்து சிகிச்சை அறையையே பார்த்தபடி நின்றிருந்தான்.
ருதுவால் அதிக நேரம் அங்கிருக்க முடியாது. அவன் மீது பெரும் பாரம் ஒன்றுள்ளது. அது அவனின் வாழ்நாள் முழுக்க தொடரக்கூடியது. அவனால் விட்டுவிடவும் முடியாது.
இமையாளுக்கு ஒன்றுமில்லையென தெரிந்தால் போதும். உயிரை பிடித்துக்கொண்டு சிலையாகியிருந்தான்.
பிரிக்க முடியா இதழ்களை பிரித்து, குரலேயின்றி இனியனுக்கு தகவல் கொடுக்க… அடுத்த ஐந்து நிமிடங்களில் அதிக படபடப்போடு இனியன் ஓடிவர… தாவி அணைத்திருந்தான் ருது.
அணைப்பில் அப்படியொரு அழுத்தம்.
நண்பனின் தோள் குலுங்குவதில் அழுகிறான் என்பதை உணர்ந்த இனியன், தன்னுடைய கவலையை ஒதுக்கியவனாக ருதுவை தேற்றினான். ஆறுதலாய் முதுகில் தட்டிக் கொடுத்தான்.
“என்னாச்சுடா? நீயேன் சடனா காணாமல் போயிட்ட? இப்போ இங்க எப்படி?”
ருது மெல்ல தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு விலக இனியன் கேள்விகளை அடக்கினான்.
ஒரு கால் மடக்கி பின்னால் சுவற்றில் வைத்தவனாக, மடக்கிய கால் தொடையில் கையினை வைத்து சுவற்றில் சாய்ந்து நின்ற ருது தலையை பின்னால் அழுத்தி முகத்தை மேலுயர்த்தி… கண்களை மூடிய ருது…
“எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு இனியா” என்றான். ருதுவின் கண்ணிலிருந்து கண்ணீர் இறங்கி வந்து செவிமடலைத் தொட்டது.
தங்கையை ஏமாற்றிவிட்டான் என்று நொடியில் எழுந்த கோபம், ருதுவின் கண்ணீரில் காணமல் போனது.
“ருது…” இனியன் அங்கிருந்த இருக்கையில் தொய்ந்து அமர்ந்தான்.
“நானே பேசணும், அவளைப்பற்றி தெரிஞ்சிக்கணும் கேட்டாலும், நீ ரிப்ளை பண்ணிடாத” என்ற ருதுவின் முகத்தை ஏறிட்ட இனியனுக்கு அந்த முகத்தில் தெரிந்ததெல்லாம் நண்பன் கொண்ட வலி, சோகம். அப்பட்டமாய் காட்டிக்கொடுத்த வருத்தத்தில் இனியன் கனத்துப்போனான்.
‘ஏதோ உள்ளது.’ இனியனால் நினைக்க மட்டுமே முடிந்தது. அந்த சூழலில் இனியனால் அடுத்து என்ன என்று யோசித்து கேட்டிடவும் முடியவில்லை.
“வலிக்குதுடா” என்ற ருதுவின் குரல் அடைத்து வெளிவந்தது.
ருதுவின் சட்டை முழுக்க இமையாளின் குருதி. இன்னும் ஈரம் காயாது அவனின் நெஞ்சத்தின் ஈர்த்தை முற்றிலும் வற்ற வைத்திருந்தது.
இனியன் எழுந்து வந்து ருதுவின் தோளில் கை வைத்திட…
இனியனை இறுக கட்டிக்கொண்டு சில நொடிகள் அழுத்தமாக நின்ற ருது,
“பார்த்துக்கோ… முடிஞ்சா நல்ல லைஃப் அமைச்சுக்கொடு” என்று சொல்லிவிட்டு திரும்பியும் பாராது சென்றிருந்தான்.
ருதுவின் திருமண விஷயம் இனியனே எதிர்பாராதது. தன் நண்பனைப்போல் காதலுக்கு மரியாதை கொடுத்து யாரும் காதலித்திருக்கமாட்டார்கள் என்ற இனியனே அவனது காதலில் பலமுறை வியந்து பார்த்திருக்கிறான்.
தங்கையை காட்டிலும் நண்பன் இன்றியமையாதவனாகியது அக்குணத்தில் தான்.
அன்று ஏனோ எல்லாம் காற்றாகியிருந்தது.
அடுத்து ருதுவின் எண்ணம் சூழாது தடையாக இமையாளின் நிலை இனியனை தன்னகத்தே இழுத்துக்கொண்டது.
இமையாள் வீட்டிற்கு வரவே கிட்டத்தட்ட ஒரு மாதமாகியது. சாதாரணமாக எழுந்து நடமாடிட ஆறு மாதங்களுக்கும் மேலானது.
உடல் நிலையோடு மனமும் பாதிக்கப்பட்ட நிலையில்… இனியனால் தங்கையை விட்டு நண்பனை ஆராய முடியாதுபோனது.
எல்லாம் சரியாகி ருதுவை தேட அவன் பல மடங்கு தூரம் சென்றிருந்தான்.
ருதுவின் சமூக வலைதள கணக்குகள் யாவும் மூடப்பட்டிருந்தது. அலைப்பேசி எண் மாற்றப்பட்டிருந்து. இனியனுக்கு நண்பனை தொடர்புகொள்ள இருந்த ஒரேவழி மின்னஞ்சல் மட்டுமே!
பதில் வராத போதும், மின்னஞ்சல் முகவரி புழக்கத்தில் இருக்கிறதா என்பது தெரியாத போதும்… பல முடியாத தருணங்களில், தன்னுடைய குமுறல்களை புலம்பலாகக் கொட்டி அனுப்பிடுவான். இதுவரை அவற்றிற்கெல்லாம் பதில் வராதபோதும் இனியன் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறான்.
நொடிகளில் மீட்டிப்பார்த்த நினைவுகளிலிருந்து வெளிவந்த இனியன் தலையை இருபக்கமும் ஆட்டியபடி எழுந்து தனதறை சென்று மருத்துவமனை செல்ல கிளம்பித் தயாராகி வந்தான்.
“நீ கேட்ட சாலட்.” தீபா அவன் முன் மேசையில் வைத்தார்.
சுரேந்தரும் அருகில் வந்தமர்ந்தார்.
‘பலே திட்டம் போலவே!’ நினைத்தாலும் பழக்கலவையில் கண்ணாக இருந்தான்.
“இதெல்லாம் சாப்பிட்டால் எப்படி காணும். இந்த வயசில் தான் நல்லா சாப்பிட முடியும்” என்ற சுரேந்தர் பேச வந்ததை பேச முடியாது தயங்கிட…
“என்ன பேசணும் நேரடியா பேசுங்கப்பா!” என்றிருந்தான் இனியன்.
“அது இனியா…” என்று சுரேந்தர் தீபாவை பார்த்திட…
“நல்ல இடம் ஒன்னு வந்திருக்கு. எப்டியாவது அவளை சம்மதிக்க வை இனியா” என்றார் தீபா.
இனியன் அமைதியாக இருக்க, அவன் முன் பையனின் புகைப்படம் மற்றும் விவரங்களை முன் வைத்தார்.
“இருபத்தியேழு வயசாகுது இனியா. உனக்கு முப்பத்தி ஒன்னு. அவளுக்கு முடிக்காமல் பண்ணிக்கமாட்டன்னு நீயும் பிடிவாதமா இருக்க. ஊருல இருக்க எல்லாரும் பொண்ணை கட்டிக்கொடுக்கிற எண்ணமில்லையான்னு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. இன்னும் கொஞ்ச நாள் போனால் வர வரணும் வராது. அவளுக்கு முடிச்சிட்டு உனக்கு முடிக்க வேண்டாமா?” என்று ஒரே மூச்சில் பேசி முடித்து தவிப்பாய் மகனின் முகம் பார்த்தபடி இருந்தார் சுரேந்தர்.
இனியனிடம் பதில் தான் இல்லை.
திருமணம் ஆகிவிட்டது என்று ருது சொல்லியதை நம்புவதா? இல்லை அவன் சொல்வது பொய். எதற்கோ பொய் சொல்கிறான் என்று இன்னமும் அவன் நினைவாகவே இருக்கும் தங்கையின் கூற்றை நம்புவதா? எதுவும் தெரியாது நடுவில் குழம்புபவன் இனியன் தான்.
“ஈவ்வினிங் இமயா வரட்டும்மா பேசுறேன்” என்று எழுந்துவிட்டான்.
மருத்துவமனை வந்தவன் தான் பார்க்க வேண்டிய நோயாளிகளை பார்த்து முடித்து இருக்கையில் சற்று ஓய்வாக அமர்ந்த நொடி அதுவரை பின்னுக்கு தள்ளப்பட்டிருந்தவை யாவும் முன்னால் முந்தியது.
“நாலு வருஷம் ஆச்சுடா. இன்னமும் ஒருத்தி உன்னையவே நம்பிட்டு இருக்காள். நீ சொன்னது பொய்யா, உண்மையான்னு கூட தெரிஞ்சிக்க முடியல. விட்டுட்டு வலி கொடுக்கவா காதலிச்ச? இதுதான் நான் உனக்கு அனுப்பும் கடைசி தகவல். நண்பனுக்காகன்னு இதுவரை நான் பார்த்தது போதும். இனி அவளுக்காக யோசிக்கப்போறேன்” என்று ருதுவின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்த இனியனிடம் பெரும் ஆயாசம்.
கண்களை மூடி அமர்ந்துவிட்டான்.
ருதுவுடன் சிரித்து பேசி சுற்றிய நிகழ்வுகள் கண்ணில் வலம் வர, பட்டென்று இருக்கையிலிருந்து எழுந்திருந்தான்.
நேரத்தை பார்த்தான். இமையாளுக்கு பள்ளி விடும் நேரம். சிறிது நேரத்தில் பள்ளியின் வாயிலில் அவளுக்காகக் காத்திருந்தான்.
“ட்யூட்டி முடிஞ்சுதா?”
அண்ணனை கண்டதும் அவனருகில் வந்தவள் கேட்டபடி காரிலேறி அமர்ந்தாள்.
“வெளியில் எங்கும் போகலாமா?”
கேட்டவனை என்ன என்பதைப்போல் பார்த்தாள்.
“கொஞ்சம் பேசணும்!” இனியன்.
“பீச் போகலாம்.”
“அந்த காபி ஷாப் வேண்டாமே!”
“எனக்கு அங்கதான் போகணும்.”
“இன்னமும் எத்தனை நாளுக்கு அவன் ஞாபகம் வரும்போதெல்லாம் அங்கவே போய் உட்கார்ந்திருக்கபோற இமயா?” இனியனிடம் அத்தனை காட்டம். தங்கையிடம் என்றுமே அதிர்ந்து பேசிடாதவன்… இன்று வெடித்திருந்தான்.
இனியும் முடியவே முடியாது எனும் இனியனின் மொத்த அழுத்தமும் கோபமாக வெளியில் வந்தது.
“அவன் தான் நீ வேணான்னு போயிட்டானே! இன்னமும் ஏன் இப்படி உருகுற. நீயும் நிம்மதியில்லாம, உன்னை சுற்றியிருக்கவங்களையும் நிம்மதியா இருக்க விடாமல் படுத்தி வைக்கிற” என்றவன் ஸ்டியரிங்கில் உள்ளங்கை வைத்து விடாது தட்டினான்.
“மூளைக்கு புரியுற சிலது மனசுக்கு புரியாதுண்ணா. புரிஞ்சாலும் மனசு ஏத்துக்க எத்தனை வலி அனுபவிக்கும் தெரியுமா? அவங்க சொன்னது உண்மையாவே இருக்கட்டும். ஆனால் நேசிக்கிறது என்னை மட்டுமே நேசித்த என் ருதுவைத்தான்” என்றவள், குலுங்கி அழுதிட வெறித்துப் பார்த்தான் இனியன்.
“தொலைஞ்சுப்போயிடணும் போலிருக்குண்ணா!” தொண்டை கிழிய கத்தியிருந்தாள்.
‘தொலைந்துப்போதல் என்பது இருத்தலிலிருந்து மொத்தமாக வெளியேறுவது.’
முடியுமா அவளால்?