அன்பின் அதீதம் 7

அத்தியாயம் 7

“தீரா!”

அலுவலகத்தில் வேலைகளுக்குள் மூழ்கியிருந்த தீரனை கலைத்தது ரிச்சர்ட்டின் விளிப்பு.

“ஒர்க் இருக்கு ரிச்சி… டாக் டூ யூ லேட்டர்” என்ற தீரன் கணினியை விட்டு பார்வையை திருப்பவில்லை.

“டேய் அஞ்சலி லைன்ல” என்று ரிச்சர்ட் அலைபேசியை நீட்டினான்.

“ம்ப்ச்…” என நெற்றியைத் தேய்த்துக்கொண்ட தீரன், ஏன் எனும் பார்வை பார்த்தான்.

“உனக்கு வீட்டிலிருந்து கால் பண்ணாங்களாம். நீ அட்டென்ட் பண்ணவே இல்லையாமே! அதான் அஞ்சலி எனக்கு பண்ணியிருக்கா” என்றான் ரிச்சர்ட்.

ரிச்சர்டிடமிருந்து அலைபேசியை வாங்கிய தீரன்,

“ரொம்ப பிஸியா இருக்கேன் மயிலா. நானே கால் பண்றேன்” என அவளை பேசவிடாது வைத்திருந்தான்.

தீரன் நீட்டிய அலைபேசியை வாங்கிய ரிச்சர்ட், செல்லாது அங்கேயே அவன் முகம் பார்த்து நின்றிருந்தான்.

“என்னடா? ஒர்க் இல்லையா?”

“அது இருக்குதான். உனக்கு என்னாச்சு? எவ்ளோ வேலையிருந்தாலும் அஞ்சலி கால் பண்ணா பேசாம இருக்கமாட்ட. இன்னைக்கு வேலையே இல்லாம அந்த கம்ப்யூட்டரை தட்டிக்கிட்டு அப்புறம் பேசுறேன்னு வைக்கிற? என்ன கதை?” என்றான் ரிச்சர்ட்.

“பயங்கர கடுப்பா வருதுடா” என்ற தீரன், இருக்கையிலிருந்து எழுந்தவனாக, “ஒரு காஃபி குடிப்போமா?” என்றான்.

“ம்ம்… குடிப்போமே” என்ற ரிச்சர்ட், உணவு கூடமிருக்கும் பகுதிக்குள் வந்த பின்னரும் அமைதியாக இருக்கும் நண்பனை அளவிட்டான்.

“என்னடா அஞ்சலிக்கிட்ட லவ் எப்படி சொல்றதுன்னு இப்போவே கவலைப்பட ஆரம்பிச்சிட்டியா?” எனக் கேட்டான் ரிச்சர்ட்.

“அதெல்லாம் இல்லைடா” என்ற தீரன், “இவ்ளோ வருஷம் பேசாம இருந்து கடுப்பாக்குனாங்க. இப்போ பேசி கடுப்பாக்குறாங்க” என்றான் தீரன்.

“புரியலையே!”

“அது…”

“இரு மச்சான். காஃபி வாங்கிட்டு வந்துடுறேன்” என்று ஓடிய ரிச்சர்ட், இரண்டு குவளைகளுடன் வந்தமர்ந்து ஒன்றை தீரன் பக்கம் நகர்த்தி வைத்தான்.

“அதெப்படித்தான் நம்ம கேண்டீன் காஃபி மட்டும் இவ்ளோ டேஸ்டா இருக்கோ?” என தன்னுடையது பருகி சப்புக்கொட்டினான்.

“அப்படியே நாலு சப்புன்னு வச்சேன் வைய்யீ” என்ற தீரன் எழ,

“அடேய் போயிராதடா!” என்று தீரன் கைபிடித்து அமர வைத்த ரிச்சர்ட், “ரொம்ப சீரியஸா சொல்ல வந்த, காஃபியோட கதை கேட்டா நல்லாயிருக்கும் நினைச்சேன். இப்போ என்னடா? நான் கேட்கணும் அவ்ளோதான? நீ சொல்லு” என்றான்.

“சொல்ல முடியாது போடா” என்று தீரனும் குளம்பியை பருக ஆரம்பித்தான்.

அந்நேரம் தீரனுக்கு அன்பனிடமிருந்து அழைப்பு வந்தது.

“இதுதான் பிரச்சினை” என்ற தீரன்,

“நேத்து ஒரு பொண்ணை பார்த்திட்டு வந்து என் பதில் என்னன்னு கேட்டு ஆளாளுக்கு மாத்தி மாத்தி கால் பண்ணிட்டு இருக்காய்ங்க” என்றான். கடுகடுப்போடு.

“உனக்கு பிடிக்கலன்னு சொல்ல வேண்டியதுதானடா?” என்ற ரிச்சர்ட், “இல்லைன்னா அஞ்சலியை மேரேஜ் பண்ணி வைங்கன்னு ஓப்பனா சொல்லு” என்றான்.

“மயிலாவுக்கு ஓகேவான்னு தெரிஞ்சிக்காம சொல்ல முடியாதுடா. சப்போஸ் நான் சொல்றேன்னா… வீட்ல எல்லாருக்கும் சரின்னு அவளும் சம்மதம்ன்னு சொல்லக்கூடாது” என்றான் தீரன்.

“அப்போ நீ அங்க சீக்கிரம் போற வழியைப் பாரு” என்ற ரிச்சர்ட், “இவ்ளோ வருஷமா காட்டாதா வேகத்தை இப்போ காட்டிடுவாங்க போல” என்றான்.

“எல்லாத்துலயும் அதிகம் தான். கோவம், வேகம், அன்பு, அக்கறை… இப்படி எல்லாத்துலயும்” என்ற தீரன், “மயிலாகிட்ட பேசிட்டு வர்றேன். நீ போ. அவகிட்ட பேசாம வச்சது என்னவோ மாதிரி இருக்கு” என்றான்.

தீரன் மயிலாஞ்சலிக்கு அழைப்பும் விடுத்திருக்க…

“முழுசா லவ் கிட்டா (kid) மாறிட்டடா” என்று சிரித்தபடி ரிச்சர்ட் அங்கிருந்து சென்றிட, ஜூலியானா அங்கு வந்தமர்ந்தாள்.

“ஹாய் தீர்…”

அவள் சொல்லியதற்காக பதிலுக்கு புன்னகைத்தான் தீரன். இருப்பினும் ஜூலியானாவிடத்தில் தன்னுடைய கவனத்தைப் பதிக்கவில்லை அவன்.

“வாட் டிட் யூ டிசைட் மேன்?” அவள் கேட்டிட பொங்கி வரும் கோபத்தை முயன்று முகம் காட்டாது கட்டுப்படுத்தினான்.

மயிலாஞ்சலி அழைப்பினை ஏற்றிருக்க, கவனியாதுவிட்டான்.

“அல்ரெடி நான் சொல்லிட்டேன். எனக்கு இதெல்லாம் செட் ஆகாது” என்று தீரன் சற்று காட்டமாகவேக் கூறினான்.

“எதுக்கு மேன் கோபப்படுற நீ?” என்ற ஜூலியானா, “என்னவோ தெரியல உன் பிஸிக் மேல எனக்கொரு கிரேஸ். சோ, டேட் பண்ணலாமாக் கேட்டேன். இது இங்க நார்மலைஸ்ட்” என்றாள்.

“இன்ட்ரெஸ்ட் இல்லன்னு சொல்லிட்டனே! திரும்பத்திரும்ப கேட்கிறது டார்ச்சரா இருக்கு” என்ற தீரன், “லுக் ஜூலியானா… எப்பவும் நோ தான். திரும்பத்திரும்ப கேட்கிறதால எஸ் சொல்லிடமாட்டேன்” என்றவன், மயிலாஞ்சலிக்கு அழைப்பு விடுத்ததையே மறந்தவனாக அங்கிருந்து வேகமாகச் சென்றிருந்தான்.
____________________________

அனைவரும் வீட்டின் முற்றத்தில் கூடியிருந்தனர்.

பெருத்த அமைதி அவ்விடம். எல்லோருடைய முகமும் வாட்டமாகக் காணப்பட்டது.

“இப்போ என்வாகிப்போச்சுன்னு ஆளாளுக்கு சுணங்கி உட்கார்ந்திருக்கீய்ங்க?” என்ற அர்ச்சனா, “ஊர்ல அவள் மட்டும்தான் பொண்ணா?” என்றாள்.

“நல்ல குடும்பம். போட்டோவுல பார்த்ததும் புடிச்சிப்போச்சு. அமைஞ்சிப்புடும் பார்த்தாக்கா… அந்தப் பொண்ணு இப்படி சொல்லிப்போச்சே” என்றார் கொற்றவை. ஆதங்கமாக.

“மண்டபத்தோட மூணாவது ஆளு கணக்கா முடிஞ்சிப்போச்சுன்னு நிம்மதி பட்டுக்கோங்க. இதுவே மொத்த குடும்பமும் அவீங்க வூட்டுக்கு பொண்ணு பார்க்கன்னு போயி இப்படி ஆயிருந்தா, ஊர்ல பதில் சொல்லி மாலாது” என்ற அர்ச்சனாவின் கூற்றை பெரியவர்களும் ஆமோதித்தனர்.

“இதைவிட நல்ல பொண்ணு அமையும் ஆத்தா… சும்மா வெசனப்பட்டு உட்காரக்கூடாது” என துளசியின் கன்னத்தைப் பிடித்து ஆட்டினாள் மயிலாஞ்சலி.

“தீரனுக்கு முடிச்சிட்டா, உனக்கு முடிச்சிப்புடலாம் பார்த்தோம். எங்க, இனி அடுத்தடுத்துன்னு தேடனும்” என்று துளசி சொல்ல, அர்ச்சனா வேகமாக அங்கிருந்து சென்றிருந்தாள்.

மனைவியை கவனித்த ரத்னவேலு, அவளின் எண்ணம் புரிந்தவராக மனதோடு சிரித்துக் கொண்டார்.

அர்ச்சனாவாக வாய் திறந்து தன்னிடம் சொல்லும் வரை, அவளின் மனதை கண்டுகொண்டதாகக் காட்டிக்கொள்ளக்கூடாதென நினைத்தார் ரத்னவேலு.

“சாயங்காலம் அம்புட்டு பேத்தையும் உட்கார வச்சு சுத்திப் போட்டுடு துளசி” என்ற கொற்றவை, “மாப்பிள்ளையை பிடிக்கலன்னு சொல்ல என்னென்னவோ காரணமெல்லாம் போயி… இப்போ குடும்பம் ஒண்ணா இருக்கிறது புடிக்கலன்னு சொல்றளவுக்கு ஆகிப்போச்சு. இம்புட்டு பேரு இருக்க வூட்ல எப்படி வாழுறதுன்னு கேட்டாளாம். அவள் நம்ம தீரனுக்கு அமையாததே சந்தோஷம். இப்படிப்பட்டவ வூட்டுக்கு வந்தா குடும்பத்தை உடைச்சிப்புடுவாள். அவ கொல்லிக்கண்ணு நம்ம வூட்டு ஆளுவ கணக்குலத்தேன்” என்று மனம் நினைத்தையெல்லாம் புலம்பினார்.

“சரி விடுங்க அப்பத்தா… அவசரம் வேணாம். பொறுமையா ஆற அமர பார்ப்போம்” என்று அரவிந்த் சொல்ல,

“எங்க பக்கம் ஒரு பொண்ணு இருக்கு. அவீங்களும் நம்மள மாதிரி பெரிய குடும்பந்தேன். நான் வேணுன்னா என் அத்தைக்கிட்ட சொல்லி கேட்டுப் பார்க்க சொல்லட்டுமா?” எனக் கேட்டாள் கயல்விழி.

“இந்தப்பேச்சு கொஞ்சம் அடங்கட்டும் கயலு பொறவு பேசிக்கிடுவோம்” என்றார் ராஜாத்தி.

ஆள் மாற்றி ஆள் தீரனுக்கு அந்தப் பொண்ணு அமையவில்லை என்பதும்,

“ஒரு ஊரே குடும்பமா இருக்க வீட்ல பிரைவசி எப்படி இருக்கும். எனக்கு வேணாம்” என சொல்லிய காரணமும் வீட்டாருக்கு அந்நேர வருத்தமாக இருந்தது.
___________________________

அன்று எப்போதும்போல் தீரன் உறங்கச் செல்வதற்கு முன் மயிலாஞ்சலியிடம் பேசிட அலைபேசியில் அழைத்தான்.

அப்போதுதான் ஜூலியானாவுடன் பேசிக் கொண்டிருந்தபோது, மயிலாஞ்சலிக்கு அழைத்திருந்தது நினைவு வந்தது, அழைப்பினை ஆராய்ந்துப் பார்க்க அவள் ஏற்றிருந்ததும், சில நிமிடங்கள் அவள் அழைப்பில் இருந்ததையும் உறுதி செய்தது.

“பேசினதை கேட்டாளா தெரியலையே!” நெற்றியைத் தேய்த்தவனாக, மயிலாஞ்சலி அழைப்பினை ஏற்கக் காத்திருந்தான்.

ஒலி முடியும் தருவாயில் ஏற்கப்பட்டது.

“இன்னைக்கு அத்துவுக்கு எக்ஸாம் மாமா… மார்னிங் ஸ்டடி. மேத் சொல்லிக் கொடுத்துட்டு இருக்கேன்” என்று மயிலாஞ்சலி எடுத்ததும் சொல்லிட, தீரனின் வதனம் சுருங்கியது.

மயிலாஞ்சலி எப்போதும் அவனிடத்தில் பிறகு பேசுவதாக சொல்லியது கிடையாது. இரு நாட்டிற்கும் நேர வித்தியாசம் பல மணிநேரமாக இருந்தபோதும், அவனது அழைப்பென்றால் அவள் நிராகரித்தது இல்லை. முதல் முறை அவனிடம் பேசுவதற்கு காரணம் சொல்கிறாள். அவனுக்கு என்னவோப் போலானது.

காதல் வந்த பின்னர் சிறு சிறு அசைவுக்கும் அவனது மனம் உரிமை உணர்வை எதிர்பார்த்தது போலும்.

“ம்ம்… உனக்கு காலேஜ் இருக்கா?”

“இல்லை மாமா. அப்புறம் பேசுறேன்” என வைத்துவிட்டாள்.

அடுத்து தீரன் ரத்னவேலுவிற்குத்தான் அழைத்தான்.

ரத்னவேலு அதிகாலை நேரமென்பதால், இரவு திறந்து வைத்த வாய்க்கால் மடையை பார்வையிடுவதற்காக வயலுக்கு வந்திருந்தார்.

“என்ன மாப்பிள்ளை இந்த நேரத்துக்கு. இப்போதேன் வூட்டுக்கு வந்தீ(ய்)ங்களா?” எனக் கேட்டார்.

“மாப்பிள்ளைனு சும்மா வாய் வார்த்தைக்கு சொல்றது” என்று முனகியவன், “ஆமா மாமா” என்றான்.

தீரன் சத்தமின்றி கூறியது ரத்னவேலுவிற்கு கேட்கச் செய்தது. புருவம் சுருங்கியது. ஏதோ உள்ளுக்குள் புரிந்தும் புரியாத நிலை.

“அஞ்சலி போன் எடுக்கலையா?” எனக் கேட்டார்.

“ஏன் உங்களுக்கு நான் போன் பண்ணதே இல்லையா? மயிலா எடுக்கலன்னாதேன் போனு போட்டிருக்கேனா?” என்றவனின் கடுகடுப்பு ரத்னவேலுவை மேலும் ஆழ்ந்து யோசிக்க வைத்தது.

“நான் அப்படி சொல்லலடே” என்றவர், “இந்நேரம் பண்ணியேன்னுதேன் கேட்டேன்” என்றார்.

“ஒண்ணுமில்ல… பண்ணனும் தோணுச்சு பண்ணேன்” என்றான் தீரன்.

“ம்ம்… நம்ம ஆளுவ யாரு போனும் எடுக்கலையாட்டுக்கு. கண்ணாலம் பண்ணிக்க விருப்பமில்லையாக்கும்?” எனக் கேட்டார்.

“தெரியல மாமா…” என்ற தீரன், “எதுக்கு எல்லாரும் கால் பண்ணிட்டே இருந்தாய்ங்க?” எனக் கேட்டான்.

ரத்னவேலு விவரம் கூறிட,

“ஹோ…” என்றவனிடம் ஆழ்ந்த பெருமூச்சு.

“ஆசுவாசப்படுற மாதிரி அம்புடுது. பொண்ணு புடிக்கலையா?”

“பொண்ணை பார்க்கவே இல்லை” என்ற தீரன், “வேறொன்னு விருப்பமாட்டுக்கு படுது மாமா. ஒத்து வந்தா சொல்லுதேன்” என்றான்.

“என்ன மாப்பிள்ளை காதலா?”

“அதுதேன் விளங்கல” என்றான் முழுதாய் மனதை மறைத்தவனாக.

மற்றவர்களிடம் தெரிவிக்கும் முன்னர் தீரனுக்கு அவனது மயிலாவின் எண்ணம் யாதென்று தெரிய வேண்டுமாக இருந்தது.

“அப்போ வூட்ல இதை சொல்ல வேண்டியதுதானே” என்ற ரத்னம், “வெளிநாட்டுக்கார புள்ளையா?” என ஓரளவு அவனின் மனதை கண்டுகொண்ட பின்னரும் வேண்டுமெனக் கேட்டார்.

“வெவரம் பொறவு சொல்லுதேன் மாமா” என்ற தீரன், “அக்கா என் கண்ணாலத்தை பத்தி என்ன சொல்லுது?” என வினவினான்.

“அவள் இதுல ஒரு வா பேசல” என்றார்.

“ஏனாம்?”

ஓசையின்றி சிரித்தவர், “அவகிட்டதேன் கேட்கணும். என்ன சங்கதின்னு வா தொறந்து சொன்னாதேன் அம்புடும். உன் மனசை நானா தொறந்து பார்க்க முடியும்?” என்றார்.

“ம்ம்” என்ற தீரன், “ஊருக்கு வந்ததும் பேசுவோம் மாமா. என் விருப்பம் எதுவாயிருந்தாலும் நீயி என் கூட நிக்கணும்” என்றான்.

“இது ஏதோ என்னைய வம்புல மாட்டிவிடுத கணக்கா தெரியுதே” என்று ரத்னவேலு சிரித்திட, “எனக்காக நாலு அடி வாங்கனுமின்னாலும் நீயி வாங்கிதேன் ஆவணும் மாமா. ரெடியா இருந்துக்கோ” என்றான்.

“அதுசரி… மச்சான் தயவுக்கு மலை ஏறுறது மட்டுமில்ல… நாலு பேருக்கிட்ட மிதியும் வாங்கணும் சொல்லுதியாட்டுக்கு” என்று ரத்னவேலு சிரித்திட…

“வாங்கலாம் தப்பில்லை. வாங்கிதேன் ஆவணும் அப்படின்னாக்கா… இன்னும் நாலு சேர்த்தும் வாங்கலாம்” என்றான்.

“உனக்காக அடிதானே மாப்பிள்ளை வாங்கணும்… வாங்கிப்புடலாம்” என்றவரின் மனம் குளிர்ந்து கிடந்து. அவனது விருப்பத்தை கண்டுகொண்டதில்.

“காலையிலே இம்புட்டு பேசுறீரு… அக்கா கூட இல்லையாட்டுக்கு?” என்றான்.

“ஏன்? உன் அக்கா கூட இருந்து நான் இம்புட்டு பேசினது இல்லையாக்கும்?” என்றவர், “வயலுக்கு வந்திருக்கேன்” என்றார்.

“அதுதேன் இம்புட்டு பேச்சா” என்ற தீரன், “அடுத்து என்ன சேதி?” என்றான்.

“தூக்கம் வரலையா?” என்ற ரத்னவேலு, “என்ன கேட்கணுமோ நேரடியா கேளுடே” என்றார்.

“நான் நேரா கேட்குற நேரம் வருமாட்டிக்கு. அப்போ மறுப்பு சொல்லாம இருந்தாக்கா சரிதேன்” என்ற தீரனிடத்தில்,

“இப்போ என்ன கேட்கணுமோ கேளுடே” என்றார்.

“மயிலாவை யாரோ பொண்ணு கேட்டதா சொன்னா(ள்). அந்த விசயம் என்னாச்சு?”

“பையன் நல்லவந்தேன். குணசாலி. சென்னையில வேலை பாக்குதான். ஐயாவுக்கு, மாமாவுக்கெல்லாம் சம்மதந்தேன். ஆனா அஞ்சலி வேணாம் சொல்லியாச்சு” என்றார்.

“ஏன் வேணாமாம்?” ஒருவேளை அவளுக்கும் தன்னைப்போல் வெளிக்காட்டிக்கொள்ளாத விருப்பம் இருக்குமோ எனும் எண்ணத்தில் ஒருவித எதிர்பார்ப்பில் கேட்டிருந்தான்.

“அஞ்சலிக்கு வூட்டோட மாப்பிள்ளை வேணுமாம். நம்ம வூட்டை வுட்டு வெளியில எங்கட்டும் தங்க ஆவாதாம். அதுவுமில்லைன்னா நம்ம மருதைக்குள்ளே (மதுரை) பார்க்கணுமாம். நெனச்சா பத்து நிமிஷத்துல நம்ம வூட்டுல இருக்கணுமாம். அந்தப்பையன் உள்ளூரா இருந்தாலும் கண்ணாலத்துக்கு பொறவு சென்னையிலதேன் குடியாம். அதான் வேணாமின்னாச்சு” என்றார்.

தீரனடத்தில் பதில் இல்லை.

“அஞ்சலிக்கு நல்ல ஆளும் பேருமா கூட்டுக்குள்ள இருந்துப்புட்டு வெளிய போவ விருப்பமில்லை” என்று ரத்னவேலுவே சொல்லியிருந்தார்.

தீரனுக்கு மயிலாஞ்சலியின் இந்த எண்ணம் சிறு கவலையை அளித்தது.

‘அப்போ எனக்கு நோ சொல்லிடுவாளோ?’

“என்ன மாப்பிள்ளை சத்தத்தையே காணோம்!”

“ஒண்ணுமில்ல மாமா” என்ற தீரனின் குரலில் முன்னிருந்த தெளிவில்லை.

“நம்ம கயலு அவங்க பக்கட்டு ஏதோ பொண்ணு சொல்லியிருக்கு. ரெண்டு நா செண்டு அதைத்தேன் வெவரம் பாக்க இருக்காய்ங்க” என்றார்.

“நான் மொத அங்கிட்டு வந்துடுறேன் மாமா. பொறவு பேசிக்கிடுவோம். எதுக்கு இம்புட்டு அவசரமா ஆவலாதியா பண்ணிக்கிட்டு இருக்காய்ங்க?” என்றான்.

“போன நாளுக்கு மொத நாளு முப்பது ஆகிப்போச்சேடே! வயசு கூடுதா இல்லையா? ஆதிக்கெல்லாம் உன் வயசுல அத்வத் பொறந்திருந்தியான்” என்றார்.

“வயசாவுதேன்னு கவலைப்படுறீரோ?” என்ற தீரன், “அதுக்காக கட்டிக்கிட முடியுமா? மனசுக்கு புடிக்கணும். நிறைவா ஃபீல் ஆவணும்” என்றான்.

“அது சரி” என்ற ரத்னவேலு, “நீ வர லீவுல உன் கண்ணாலத்தைப் பண்ணிப்புடனும் பாக்குறாய்ங்க. அதுதேன் இந்த ஆவலாதி” என்றார்.

“மொத்தமா இதுக்கு பொறவு நான் அங்கிட்டு வரவே மாட்டேன்… இல்லை வரக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டாய்ங்களா?” எனக் கேட்டான்.

“அது அப்படி இல்லடே… என்னதேன் நீயி கடைக்குட்டியா இருந்தாலும் உன்னைய ஒத்தையில நிக்கவுட்டது அவீங்க மனசை போட்டு வாட்டுது. இம்புட்டு வருசம் காட்டாத வேகத்தை இப்போ காட்டுறாய்ங்க” என்றார்.

“நான் வந்த பொறவு பேசிக்கொடுவோம் சொல்லு மாமா. வேகத்தைக் காட்டுறேன்னு எதுவும் கோட்டித்தனமா செய்து வைக்கப் போறாய்ங்க” என்றான்.

“இதுல நா என்னத்த சொல்றது? உனக்கு ஒரு நல்லதை நடத்திப் பார்க்க, அவீங்களுக்கு உரிமை இருக்கே! அதேமாறி, உனக்கு என்ன வேணும் சொல்றதுக்கும் உனக்கு உரிமை இருக்குடே. உன் மனசு வேண்டுறதை வா தொறந்து சொல்லு. மறுத்திடுவாய்ங்களா?” என்ற ரத்னவேலு, “அடுத்த வாரம் வாரன்னு அஞ்சலி சொல்லுச்சு. எந்த தேதி?” என வினவினார்.

“அவள் சொல்லக்கூடாது சொல்லியிருக்கா மாமா” என்ற தீரனின் பதிலில் பொங்கி வந்த சிரிப்பை வெளியில் சிதறவிடாது கட்டுப்படுத்தினார்.

‘இப்போவே தலையாட்ட ஆரம்பிச்சாச்சுப்போல.’ அவனின் மனம் சிறு சிறு விடயத்திலும் தெளிவாய் வெளிக்காட்டிட, அப்படியொரு சந்தோஷம் அவருக்கு.

“அஞ்சலி சொன்னா கேட்டுக்கிடுவியோ?”

“என் சந்தோஷத்துக்கு மொத்த காரணம் அவதேன். சொன்னா கேட்டுத்தேன் ஆவணும்” என்றவனின் வாய்க்கொள்ளா புன்னகையை பார்க்காமலே ரத்னவேலுவால் உணர முடிந்தது.

“ரொம்பத்தேன்!”

“உனக்கு எம் மனசு புரிஞ்சிடுச்சுல மாமா?”

“புரியாம என்னடே! ஆனாலும் நீயா மனசு தொறந்து சொன்னாதேன் மாமா என்னவும் செய்ய முடியும்” என்றார்.

“சீக்கிரமே சொல்றேன். நேர்ல உரிமையா கேக்குறேன்” என்றான்.

“கேளுடே…” என்றவர், “அதுவரைக்கும் நம்ம ஆளுவ ஆர்வத்தை என்ன பண்றது?” எனக் கேட்டார்.

“அடுத்தவாரம் நான் வாரதுக்குள்ள என்ன செஞ்சிட முடியுமாம்?” என்ற தீரன் மட்டுமல்ல, குடும்பத்தாருடன் இருக்கும் ரத்னவேலுவிற்குமே அவர்களின் வேகம் தெரியாமல் போனது.

தீரன் வந்திறங்கும் நாளன்று அவன் எதிர்பாராததை செய்திருந்தனர்.

error: Content is protected !!
Scroll to Top