அன்பின் அதீதம் 6

அத்தியாயம் 6

வீட்டிற்கு வந்த பின்னரும் மயிலாஞ்சலியின் எண்ணத்தோடு தான் தீரன் வலம் வந்து கொண்டிருந்தான்.

உதட்டில் மென்மையான விரிப்பு தேங்கிவிட்டது.

அவளது அன்பினால் மட்டுமே அவனின் மகிழ்வு. அதனை முழுதாய் புரிந்துகொண்ட தருணம் காதலும் அகம் நிறைத்திருந்தது.

மனதோடு அவளின் அன்பின் ஆதிக்கம் எப்போதோ நிகழத் துவங்கியுள்ளது. சிறுபெண் என்பதில் அவ்வாதிக்கம் தனக்கு புரியாமலிருந்திட, தனக்கே தனக்குள் முகிழ்த்து மறைந்திருந்த காதலை அறிந்திட ரிச்சியின் வார்த்தைகள் தேவைப்பட்டிருக்கு என நினைத்தவனுக்கு, மனதோடு காதல் இல்லாமலிருந்திருந்தால் சட்டென்று நொடி மாற்றமாய் மயிலாவை வேறு விதமாக ரசித்திருக்க முடியாது… இது அகத்தோடு எப்போதோ நிறைந்து உணர்தலுக்கு காத்திருந்த காதலென புரிந்துகொண்ட தீரனுக்கு முகமெல்லாம் குளிர் புன்னகை.

‘உன்னை நிறையவே பிடிக்கும். அந்த பிடித்தமெல்லாம் காதல்ன்னு புரியாமப் போச்சே! உன்னை என்னைவிட ரொம்பவே சின்னப்பொண்ணாவே நினைச்சிட்டேன். அதான் என்னோட காதல் எனக்கு புரிய லேட்டாகியிருக்கு. உனக்கும் எனக்கும் தனித்தனியா மேரேஜ் சொன்னப்பவும் மரமண்டைக்குப் புரியாமப் போச்சே மயிலா பேபி. ஒருவேளை இந்த ரிச்சி பய லவ்வு, அது இதுன்னு உளறாம, என்னை நானே ஆராயாம இருந்திருந்தா, படத்திலெல்லாம் எண்ட் ஆஃப் த பாயிண்ட் வருமே… கல்யாணத்தை நிறுத்துங்க அப்படிங்கிற சிட்டுவேஷன்ல புரியட்டும்ன்னு என் மனசு எனக்கு வெடிக்க வைக்க அமைதியா இருந்துச்சா’ என நினைத்தவன் வெளியில் சிரித்திருந்தான்.

“என்ன மச்சான் ஆபிசிலிருந்து வந்ததுலேர்ந்து மந்திரிச்சு விட்டவன் மாதிரியே நடந்துட்டு இருக்க?” என்ற ரிச்சர்ட் நீள்விருக்கையில் அமர்ந்து கிண்ணத்தில் நறுக்கிப்போட்ட பழக்கலவையை உண்டபடி வினவினான்.

“எலாம் உன்னால தான்டா?” என்று அவனை இடித்துக் கொண்டு அமர்ந்த தீரன், “ஏதேதோ சொல்லி… இப்போ உள்ளுக்குள்ள ஒரே குடைச்சலா இருக்குடா… இம்சை” என்றான்.

“யாரு என்ன சொன்னாங்க?” ரிச்சர்ட் புரியாது கேட்டான்.

“ஆமா சொன்னாங்க மவுஸ் பேட்’ல மவுஸ் இல்லைன்னு” என்ற தீரன், “இதுக்கு முன்ன இப்படிலாம் இல்லைடா. ஆனால் இப்போ அவளை பார்த்தாலே என்னவோ பண்ணுதுடா. ரசனையா பார்க்கத் தோணுது” என்றான்.

“மயிலா மேல் லவ் வந்திருச்சிப்போல?” ரிச்சர்ட் பற்கள் அனைத்தும் தெரிய சிரித்தபடி கேட்க, தீரன் பார்த்த பார்வையில் வாயினை மூடிக்கொண்டான்.

“லவ் வந்திருச்சு இல்லை… அதுபாட்டுக்கு உள்ள இருந்திருக்கு. நேரம் அமையவும் வெளிய தெரிஞ்சிருக்கு” என்ற தீரன், “கல்யாணம் சொன்னதும் ஒன்னுமே தோணல மச்சான். ஆனால் அவள் தான் எனக்குன்னு நினைக்கும் போது… அப்படியொரு ஃபீல்” என்றவாறு நீள்விருக்கையின் பின்னால் சாய்ந்து இமைகள் மூடாது சொக்கியிருந்தான்.

ரிச்சர்ட் அவனது ஒளிர்ந்த முகத்தையே பார்த்தவனாக இருக்க…

“அப்போ இது லவ் தானடா?” எனக் கேட்டான் தீரன்.

“எனக்கு எப்பவோ தெரியும். உனக்குத்தான் லேட்டா புரிஞ்சிருக்கு” என்ற ரிச்சர்ட், “உனக்காக அவள் பண்ணது பெரிய விஷயமா சின்ன விஷயமான்னு எனக்குத் தெரியாது. ஆனால், அவள் இல்லைன்னா இப்பவும் உனக்கு உன் குடும்பம் கிடைச்சிருக்காது. உன் முகத்திலையும் இந்த சந்தோஷம் வந்திருக்காது” என்றான்.

“எனக்கு இடிக்கிற ஒரே விஷயம் இந்த வயசு தான்டா?” என்ற தீரன், “என் பக்கத்துல குட்டியா தெரிவாளோ? இதாலதான் எனக்குள்ள வந்த லவ் எனக்கு தெரியாமலே இருந்திருச்சோ?” என்றான்.

“உனக்குள்ளிருந்த லவ்வையே இன்னைக்குதான் தெரிஞ்சிக்கிட்டிருந்திருக்க… அதுக்குள்ள பக்கத்துல நிக்க வச்சி பாக்குற அளவுக்கு யோசிக்கிற” என்ற ரிச்சி, “உன்னையே சுத்தி வந்த பொண்ணுங்களை எல்லாம் ஏன் உன் பக்கத்துல கூட அனுமதிக்கல தெரியுமா? பிகாஸ் யூ லவ்ஸ் அஞ்சலி. அவளோட அன்பு உனக்கு கிடைச்சதாலதான் மத்த பொண்ணுங்க புரப்போசல் எதையும் உன்னால அக்செப்ட் பண்ண முடியல” என்றான்.

“மே பீ… இப்போ தோணுது.”

“வயசை யோசிச்சு ரொம்ப குழப்பிக்காத. உனக்கும் தர்ட்டி தான ஆகுது. ரொம்பவே யங் அண்ட் ஸ்மார்ட் லுக்கிங். மனசு ஒத்துப்போனா எட்டு வருஷ வித்தியாசமெல்லாம் பெரிய விஷயமில்ல” என்றான் ரிச்சி.

“ம்ம்… என் மடியில தாங்கியிருக்கேன். இனி நெஞ்சுல தாங்கனும். நினைக்கவே சந்தோஷமாதான் இருக்கு” என்று நிறுத்திய தீரன், “மயிலாவுக்கு என்னை பிடிக்கணும்” என்றான்.

“பிடிக்காமதான் நீ பக்கத்தில் இல்லைன்னாலும் உன்னையே சுத்தி வராளா?”

“நீ சொல்ற பிடிக்கும் வேற… நான் சொல்றது வேற” என்ற தீரன், “அவளுக்கும் பிடிக்கணும்” என்றான்.

“இப்போவே ரொம்ப யோசிக்காத தீரா… உன் குடும்பமே உனக்கு அஞ்சலிதான்னு பேசுறதுக்கும் வாய்ப்பிருக்கு” என்றான்.

“எனக்கும் மயிலாவுக்கும் மேரேஜ் அப்படின்னு யாருமே யோசிக்கல போல” என்ற தீரன், “எனக்கு பொண்ணு பார்த்து இருக்காங்க” என்றான்.

“ஹோ… அப்போ உன் விருப்பத்தை சொல்லு. வேணாம் சொல்லிடுவாங்களா?” என்றான் ரிச்சர்ட்.

“யாரும் அப்போஸ் பண்ணமாட்டாங்க தான்… ஆனால் எல்லாரும் சொல்றாங்க அப்படின்னு மயிலா என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லக்கூடாது. அவளுக்கு நான்தான்னு தோணனும். எம்மேல விருப்பம் இருக்கணும்” என்றான்.

“அவள் வீட்ல சொல்றாங்கன்னு ஓகே சொன்னாலும் நீ வேணாம் சொல்லிடுவப்போல?” என்ற ரிச்சி, “அப்போ அஞ்சலிக்கிட்ட லவ் சொல்லு. என்ன ரியாக்ஷன் வருதுன்னு தெரிஞ்சிக்கிட்டு வீட்ல சொல்லு” என்றான்.

“ம்ம்” என்ற தீரன், “என்னவோ மனசே மிதக்குற மாதிரி இருக்குடா” என்று ரிச்சியை தோளோடு அணைத்து சாய்ந்தாடினான்.

“இது நீதானோன்னு எனக்கு டவுட் வருது மச்சான். நல்ல வெறப்பா சுத்திக்கிட்டு இருந்த உன்னையும் இந்த காதல் இப்படி மாத்திடுச்சே!” என்றான் ரிச்சர்ட்.

“எனக்கு அவகிட்ட பேசணும் போல இருக்குடா?”

“தினமும் கால் பண்ணுவாதான?” என்ற ரிச்சர்ட் நேரத்தைப் பார்த்துவிட்டு, “இங்க நைட் நைன் தர்ட்டி ஆகுது அப்போ அங்க டே ஸ்டார்ட் ஆகி சிக்ஸ் மேல ஆகியிருக்குமே. நீயே கால் பண்ணு” என்றான்.

“எக்ஸாம் இருக்கு சொன்னாடா. அதுவும் மிட் நைட் எனக்கு விஷ் பண்ணிட்டு கொஞ்சநேரம் பேசிட்டு தான் தூங்கினாள்” என்ற தீரன், “அலார்ம் வச்சிட்டு தூங்குறேன். அவளுக்கு அங்க எக்ஸாம் முடியுற நேரம் அப்போ பேசிக்கிறேன்” என்று எழுந்து உறங்குவதற்காக தனது அறை நோக்கிச் சென்றான்.

“டின்னர் வேணாமா?” ரிச்சர்ட் கேட்டிட,

“பசிக்கலடா” என்றான் தீரன்.

“ஆமா… இனி பசிக்காது. பசிச்சாலும் சாப்பிட முடியாது. தூக்கம் வரும் தூங்க முடியாது. நிஜத்துல இருப்ப ஆனால் எல்லாம் கனவு மாதிரி தெரியும். அதுக்கும்மேல உன்னைவிட உன் காதலால… உன் ஃப்ரெண்ட் அப்படிங்கிறதுக்காக நான் நொந்து கோந்தாகணும்” என்று ரிச்சர்ட் கேலியாக அடுக்கிக்கொண்டேப் போக, “போதும்” என தீரன் கை காண்பித்ததில் நிறுத்திக்கொண்டான்.

“உண்மையை சொன்னா யார் கேட்கிறா?” என்ற ரிச்சர்ட், “குட் நைட் டா” என்று எழுந்துகொள்ள, தீரன் அலைபேசி ஒலித்தது.

அறைக்குள் தீரன் சென்றிருக்க,

“தீரா மொபைல் விட்டுட்டுப்போர பாரு” என்ற ரிச்சர்ட் யாரென்று பார்த்தான்.

“நீ பேசணும் நினைச்ச அவளே கால் பண்ணிட்டாள்” என அலைபேசியை எடுத்து தீரனிடம் கொடுத்த ரிச்சர்ட், “கண்டம் தாண்டி இருந்தாலும் நல்லாதான் கனெக்ட் ஆகுது வேவ்லென்த்” எனக்கூறி தீரனின் கன்னம் குவிந்த சிறு முறுவலையும், மென் அடியையும் வாங்கிக்கொண்டு அறைக்குள் ஓடிவிட்டான்.

முதல்முறை… மயிலாஞ்சலியின் அழைப்பினை இதயம் படபடக்க பார்த்து நின்றான்.

“அய்யோ மதுரை மீனாட்சி… என்ன இது? ஒரு நாளைக்கே உள்ள ஒரே கலவரமா இருக்கு” என்று வாய்விட்டுப் புலம்பியவன், இதழ் குவித்து காற்றினை வெளியேற்றி, பின்னந்தலை வருடியவனாக அழைப்பினை ஏற்றிருந்தான்.

மயிலாஞ்சலியின் முகம் தெரியும் முன், அங்கிருக்கும் சூழலின் சத்தம் அவனின் செவியை அடைந்திருந்தது.

கூட்டத்திற்குள் ஒலிக்கும் பலதரப்பட்ட ஒலிகள் பின்னணியில் மேளம், நாதஸ்வர இசையும் நிறைந்திருந்தது.

“மயிலா முகம் தெரியல” என்ற தீரன், “எங்க இருக்க?” எனக் கேட்டான்.

“சிக்னல் சரியா இல்லை மாமா. எனக்கு உங்க முகம் தெரியுது” என்றவளின் குரல் முடிய, திரையில் தோன்றிய அவளின் பிம்பத்தில் மூச்சு விடவும் மறந்து சிலையாகியிருந்தான்.

‘காட்.’ சட்டென்ற வானிலை மாற்றம் போன்று அவனது உள்ளத்திலும் துடிப்பின் மாற்றம். வேகம் கூடி அதிகரித்தது.

“இப்போ தெரியுதா மாமா?”

மயிலாஞ்சலி கேட்டதற்கு பதில் சொல்ல முடியாது திணறிப் பார்த்தான்.

கூந்தலை பின்னலிடாது விரித்துவிட்டு, சூடியிருந்த குண்டு மல்லி ஒரு பக்கம் தோள் வழி முன் வழிந்திருக்க, உடுத்தியிருந்த கருநீல நிற பட்டு கரை வைத்த தாவணியும், இளஞ்சிவப்பு வர்ண ரவிக்கையும் அவளின் சிவந்த நிறத்தை மேலும் எடுப்பாகக் காட்டியது.

மைத்தீட்டிய கருவிழிகள் இரண்டும், வேல்விழியாய் இதயத்தை குத்திக் கிழிப்பதை உணர்ந்தான்.

உள்ளுக்குள் பதுங்கியிருந்த காதலை உணர்ந்த பின்பு அவளின் ஒவ்வொரு அசைவையும் அவனை கவனிக்க வைத்தது.

திரையில் தீரனின் உருவம் அசைவற்று தெரிய, அலைபேசி உறைந்து (Freeze) விட்டதோ என நினைத்து,

“மாமா கேட்குதா?” என்று மீண்டும் மீண்டும் கேட்டாள்.

“இங்க கொடு மயிலா…” என்று அத்வத் அலைபேசியை வாங்கிட தீரனின் திரையில் மயிலாவின் உருவம் மாறிட தீரன் சுயம் மீண்டிருந்தான்.

“ஹாய் சித்தப்பா… ஹேப்பி பர்த்டே” என அத்வத் கையசைத்தான்.

“ஹான் பெரிய மனுஷன் வாழ்த்து சொன்னா நன்றி சொல்லணுமோ?” என்ற தீரன், “என்னடா எல்லாரும் எங்க இருக்கீய்ங்க?” எனக் கேட்டான்.

“சுந்தர மூர்த்தி தாத்தா பேத்திக்கு கண்ணாலம். குடும்பத்தோட வரணும் சொன்னாங்களா… அதான் நம்ம வீட்டு ஐயாவிலிருந்து, கடைசி நண்டு அமர் வரைக்கும் வந்தாச்சு” என்று சிரித்தான்.

“ஆமா ஆமா சித்தப்பா நம்ம வீட்டு ஆளுவ வந்ததுமே மண்டபம் நெரிச்சல் ஆகிப்போச்சு” என்று திரையில் எட்டிப்பார்த்து சிரிப்போடு சொல்லிய ஸ்ருதியின் முதுகில் தட்டிய மயிலாஞ்சலி, “ரெண்டு பேரும் அங்கிட்டு போங்க” என்றாள்.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல மாமா. நைட்டு சொன்னனே! பொண்ணை பார்க்கிறதுக்குதேன் குடும்பமா வந்தது. அவுங்களும் நம்ம வீட்ல எம்புட்டு பேருன்னு தெரிஞ்சிக்கணும்ல” என்றாள்.

அத்வத், ஸ்ருதி பேசியதில் மலர்ந்து சிரித்திருந்த தீரனின் முகம் மயிலாஞ்சலி கூறியதில் சட்டென்று கூம்பிப்போனது.

“நீ காலேஜ் போகலையா? எக்ஸாம் இருக்கு சொன்ன? இங்கென்ன பண்ணிட்டிருக்க?” என்று தன்னைப்போல் ஒருவித கடினக் குரலில் கேட்டிருந்தான் தீரன்.

கடந்து சென்ற இத்தனை வருடங்களில் தீரன் ஒருபொழுதும் இப்படி பேசியதில்லை அவளிடத்தில். அவனது பார்வையுமே கடுமையை சுமந்த தோற்றம்.

“என்னாச்சு மாமா?” நொடிப்பொழுதில் அவனது முதல் கடுமையில், தொண்டை அடைக்க கலங்கிப் பார்த்தவளை தவித்துப் பார்த்தான்.

தான் அவள் மீது காதல் கொண்டு அவளுக்காக யோசித்திருக்க… அவளோ தன்மீது எவ்வித உணர்வுமின்றி தனக்குத் திருமணமென அவளும் பெண் பார்க்க வந்திருப்பதாகச் சொல்லவும் அவனுக்கு கோபம் மூண்டுவிட்டது. அதனை அடக்க முடியாது முகத்திலும், வார்த்தையிலும் காட்டியிருந்தான்.

‘ம்ப்ச்…’ மனதிற்குள் தன்னையே கடிந்தவனாக, “இங்க வேறவொரு டென்ஷன்” எனக்கூறி சமாளித்தான்.

“நீங்க என்கிட்ட இந்த மாதிரி டோன்ல பேசினதே இல்லையா! டக்குன்னு ஒரு மாதிரி ஆகிடுச்சு” என்ற மயிலாஞ்சலி, “ஏழு தான் ஆகுது மாமா. ஒன்பதரைக்கு தான் பரீட்சை. இங்கிருந்து நேரா காலேஜ் போயிடுவேன். மாமாக்கு பாக்குற பொண்ணை நான் பார்க்காம எப்படி? அதேன் வந்தேன்” என அவன் கேட்ட கேள்விகளுக்குமான பதிலைக் கூறியிருந்தாள்.

“இருங்க பொண்ணை காட்டுதேன்” என்று மயிலாஞ்சலி கூற,

“அதெல்லாம் வேண்டாம்” என்று தீரன் மறுக்கும் கணம்…

“இங்க கொண்டாத்தா போனை” என்று அலைபேசியை வாங்கியிருந்தார் கொற்றவை.

“ஆத்தா…”

“கோவிலுக்கு போனியாய்யா?”

தனது பிறந்தநாளுக்காக் கேட்கிறார் என்பது புரிய, “இங்கிட்டு இன்னும் என் பிறந்தநாளு வரலைங்கத்தா. விடிஞ்சதும் போய் வாரணுங்க” என்றான்.

“இங்கத்திக்கும் அங்கிட்டு நேரம் மாறுபாடா தம்பி?” என்று கொற்றவை வினவ, “ஆமாங்க அப்பத்தா” என்றான்.

“சரிய்யா சரி… கண்ணாலத்துக்கு பார்க்க வந்திருக்க பொண்ணு தகையனும் வேண்டிக்க சாமி” என்றவர், “சந்தோஷமா இருய்யா” என்று அலைபேசியை மயிலாஞ்சலியிடம் நீட்டினார்.

‘உன் பேத்தியை எனக்கு கட்டி வைக்க உங்களுக்கெல்லாம் நெனைப்பு வரணும் வேண்டிக்கிறேன்.’ உள்ளுக்குள் சடைத்துக் கொண்டான்.

“எல்லாரும் உங்களுக்கு விஷ் பண்ணனுமாம் மாமா” என்ற மயிலாஞ்சலி அலைபேசியில் பின் திரை வைத்திட, அவனது மொத்த குடும்பமும் வட்டமாக இருக்கைகளில் ஒரே இடமாக அமர்ந்திருந்தனர்.

அனைவரும் ஒரே தருணத்தில் மண்டபம் அதிர வாழ்த்தினைத் தெரிவிக்க, தீரனின் நெஞ்சம் நெகிழ்ந்தது. எத்தனை வருடங்கள் ஆயிற்று. காரணமான அவனது மயிலாவை இன்னுமின்னும் அதிகத்துக்கும் பிடித்தது.

மண்டபத்திலிருந்த அனைவரும் ஒரு கணம் இவர்களைத் திரும்பிப் பார்த்திட,

“வெளிநாட்டுல இருக்க பேரனுக்கு பொறந்தநாளு. வாழ்த்து சொல்லுறோம்” என்று கொற்றவை பொதுவாகக் கூறினார்.

அனைவரும் ஓரிரு வார்த்தைகள் தீரனிடம் பேசிட இறுதியாக வாழ்த்து தெரிவித்து பேசிய முத்து மாணிக்கம் அலைபேசியை மயிலாஞ்சலியிடம் கொடுத்தார்.

“அச்சும்மா இல்லையா மயிலா?”

அத்தனைப் பேரிலும் அவனது அக்காவைதான் தீரனின் விழிகள் தேடியது. அவளின் வாழ்த்திற்காக அவனது மனம் ஏங்கியது.

“அம்மா” என்று மயிலாஞ்சலி இழுக்க, இங்கு அர்ச்சனா மகளிடம் தன்னைக் காட்டாதே என்று கண்களை உருட்டினார்.

“ம்க்கும் ரொம்பத்தான்” என்று உதடு சுளித்த மயிலாஞ்சலி, “உங்ககிட்ட பேசணுன்னு என் மாமா ஒன்னும் தவமிருக்கல” என்று அர்ச்சனாவிடம் சொல்லியவளாக, “நீங்க இங்கிட்டு வந்த பொறவு அம்மாகிட்ட பேசவேக்கூடாது மாமா” என்று அவனுக்கும் கட்டளை விதித்தாள்.

‘உன்னை பெத்ததுக்காகவே என் அக்கா எம்புட்டு கோவத்தை காமிச்சாலும் இறங்கி போவேன்.’

“எதுவும் சொன்னீங்களா?”

“இல்லையே!”

“ம்ம்… பொண்ணு வீடு அந்தப்பக்கம் உட்கார்ந்திருக்காய்ங்க. இருங்க செல்ஃபி எடுக்கிற மாதிரி காட்டுறேன்” என்றாள்.

“அதெல்லாம் வேண்டாம் மயிலா!”

“தாத்தாதேன் உங்களுக்கு பொண்ணை காட்டச் சொன்னாய்ங்க” என்றவள், சுயமி எடுப்பதைப் போன்று பெண்ணின் வீட்டாரையும், பெண்ணையும் காண்பித்தாள்.

தீரன் அவர்களை பார்க்கவே இல்லை.

“பார்த்தீங்களா? பொண்ணு எப்படி?” என்று மயிலாஞ்சலி ஆர்வமாகக் கேட்டிட, “உன்னை அடிக்கப்போறேன் பாரு” என்றிருந்தான் தீரன்.

“ஏனாம்?”

“உனக்கு டைம் ஆகலையா? காலேஜ் ஓடு. எனக்குத் தூக்கம் வருது” என்று அழைப்பை வேகமாகத் துண்டித்து அலைபேசியை படுக்கையில் விசிறியவன், கவிழ்ந்தடித்துப் படுத்துக்கொண்டான்.

அங்கு மயிலாஞ்சலியிடம் ஆள் மாற்றி ஆள் தீரன் என்ன கூறினான் என்று கேட்டு அவளை ஒருவழி செய்தனர்.

“அப்புறமா சொல்றன்னு சொன்னாய்ங்க” என்ற மயிலா, “டேய் அத்து வந்து ட்ராப் பண்ணு” என அத்வத்துடன் கல்லூரி கிளம்பிவிட்டாள்.

“தம்பிக்கு பொண்ணு பிடிச்சிருக்கா தெரியலையே?” அஞ்சனை தேவி சொல்லிட,

“பொறவு ஆதியை போன் போட்டு கேட்கச் சொல்லுவோம்” என்றார் கலாவதி.

“நாம சொன்னா அவன் ஒத்துப்பியான். பொண்ணு வடிவா லட்சணமா இருக்கே! நம்மளை பார்க்கையில அவங்களுக்கும் சம்மதங்கிற மாதிரிதேன் தெரியுது. சட்டுப்புட்டுன்னு பேசி முடிச்சிப்புடுவோம்” என்றார் துளசி.

“ஆமா… இருபது நாளுதேன் விடுப்பாம். அஞ்சலி சொன்னா” என்று ஆதிரா கூற, “எப்போ வராய்ங்கன்னு சொல்லமாட்டேன்னுட்டா. சஸ்பென்ஸாம்” என்றார் காயத்ரி.

“ம்ம்” என்ற மாயவேல், “எப்படியும் ரெண்டு வாரத்துல வருவான். அவுங்களுக்கும் சரின்னாக்கா நாம அதுக்கடுத்த இருவது நாள்ல தேதி குறிச்சி முடிவு பண்ணி ஏற்பாடெல்லாம் பண்ணுவோம். அவன் வந்ததும் கண்ணாலத்தை முடிச்சிப்புடுவோம்” என்றார்.

“அண்ணே சொல்றதும் சரித்தேன்” என ராஜவேல் கூற,

“அவென் சம்மதம் கேட்காம… அவென் சரின்னு சொல்லாம நாமளா முடிவெடுக்கிறது சரியில்லை” என்றார் ரத்னவேலு.

“நம்ம சொல்லை மீறிடுவானா அவென்?” முத்து மாணிக்கம் மீசையை நீவியவாறு பேசினார்.

“நம்ம சொல்லுங்கிறதை விட, அவென் விருப்பம் முக்கியமில்லையா? வாழப்போறது அவென். அத்தோட அங்கிட்டு அவனுக்கு ஏத்த மாதிரி இருக்க பொண்ணு வேணும் நினைச்சிருந்தா?” என்ற ரத்னவேலுவின் பேச்சு ஏற்புடையதாக இருந்தாலும் யாரும் ஏற்கும் நிலையில் இல்லை.

“திரும்பிப்போறவன் வேறெப்ப வரானோ? கண்ணாலம் பண்ணி அனுப்பிட்டா ஆசுவாசம்மா இருக்குமே! என் கட்டை சாயுரதுக்குள்ள அவன் கண்ணாலத்தைப் பார்த்துப்புடனும்” என்றார் கொற்றவை.

“இங்க ஒரு நல்ல காரியம் நடந்திட்டு இருக்கு. என்ன பேசிட்டு இருக்கவ” என்று மனைவியை அதட்டிய முத்து மாணிக்கம், “நமக்கு புடிச்சு செஞ்சா அவென் ஏத்துக்குவான். நாம ஆக வேண்டியதைப் பார்ப்போம். அவென் மறுக்க காரணமில்லை. மொத பொண்ணு வீட்ல என்ன சொல்றாய்ங்க தெரிஞ்சிப்போம். இப்போ இங்கிட்டு நடக்குற கண்ணாலத்தை பார்ப்போம்” என்றார்.

error: Content is protected !!
Scroll to Top