அன்பின் அதீதம் 5

அத்தியாயம் 5

அன்று அலுவலகம் சென்றதும் முதல் வேலையாக விடுமுறை எடுப்பதைப் பற்றித்தான் தனக்கும் மேலதிகாரிகளிடம் கலந்தாலோசித்தான் அதிதீரன்.

“என்ன தீரன் திடீர்ன்னு இவ்ளோ லீவ்?” தாமஸ் கேட்டிட,

“இண்டியா போகலாம் இருக்கேன் தாமஸ்” என்று நீண்டு மலர்ந்த இதழ் விரிப்போடு கூறினான் அதிதீரன்.

“வாவ்… வாட் அ பிளஸன்ட் ஸ்மைல் தீரன்” என்ற தாமஸ், “என்ன சடன் பிளான்?” எனக் கேட்டார்.

“ஃபேமிலிய பார்த்து ரொம்ப வருஷமாச்சு. வர சொல்றாங்க” என்று தீரன் சொல்லிட,

“அம் ரியலி ஹேப்பி ஃபார் யூ மேன்” என்றிருந்தான் தாமஸ்.

தீரன் அங்கு வேலைக்கு சேர்ந்த முதல் நாளிலிருந்து தாமஸ் அவனை பார்க்கின்றான். அவனைப்பற்றி ரிச்சர்ட்டுக்கு முன்பு அனைத்தும் தெரிந்த நபர் தாமஸ் தான். தீரனுக்கு நல்ல நண்பனாகவும், வேலையில் வழிகாட்டியாகவும் இருப்பவன்.

தீரனுக்கு அவனது குடும்பத்தை எவ்வளவு பிடிக்குமென அறிந்திருப்பவனுக்கு, அவனது இன்றைய மகிழ்ச்சியின் அளவை உள்வாங்கிக்கொள்ள முடிந்தது. ஆனாலும் உணர்வுகளின் ஆழம் புரியவில்லை.

“இண்டியன்ஸ் மட்டும் எப்படி ரிலேஷன்ஷிப்பில் எமோஷ்னலி இவ்ளோ கனெக்ட் ஆகியிருக்கீங்க?” என்று எப்போதுமான தனது கேள்வியை இப்போதும் கேட்டான்.

“அது சொன்னா புரியாது தாமஸ்” என்று வழமையான தனது பதிலையே தீரன் கூறிட,

“வெல்” என்ற தாமஸ், “நீ கேட்கிற மாதிரி வன் மன்த் லீவ் கொடுக்க முடியாது தீரன். சாரி ஃபோர் தட். டூ வீக்ஸ் ஓகே” என்றதோடு, “நீயில்லாம எனக்கு ஒரு கை இல்லாத ஃபீல் இருக்கும் மேன்” என்றான்.

அதற்கு புன்னகைத்த தீரன்,

“வீட்ல மேரேஜ் டாக் எடுத்திருக்காங்க தாமஸ்… சீக்கிரம் அரேஞ் பண்ணிடுவாங்க நினைக்கிறேன். சோ, அப்போ கண்டிப்பா நிறைய லீவ் வேணும்” என்றான்.

“யா… யா ஷ்யூர். எனக்கும் இன்வைட் இருக்குமா?” எனக் கேட்டான் தாமஸ்.

“நீயில்லாமலா?”

“இண்டியன்ஸ் வெட்டிங் நிறைய ரிச்வெல்ஸ் இருக்கும்ல… இட்ஸ் சோ கலர்புல்” என்றான் தாமஸ்.

“ஹ்ம்ம்” என்ற தீரனுக்கு ஏனோ திருமணம் பற்றிய பேச்சென்ற போதும் வயதுக்குரிய ஆசைகள், எதிர்பார்ப்புகள் எதுவும் மனதில் தோன்றவில்லை.

“ஓகே மேன்… நான் எப்போ ஃபிலைட் சீட் அவைலபில் பார்த்திட்டு ஆஃப் டேட்ஸ் கன்பார்ம் பண்றேன்” என்ற தீரன் தன்னுடைய வேலையில் ஆழ்ந்துவிட்டான்.

உணவு இடைவேளையின் போது, ரிச்சியுடன் சேர்ந்து தன்னுடைய தற்போதைய வேலை முடியும் நாளினை கணக்கிட்டு விமான பயணச்சீட்டை உறுதி செய்திருந்தான்.

அந்த நொடியே எப்போதடா இந்தியக் காற்றை சுவாசிப்போம், சொந்த மண்ணில் கால் பதிப்போம், உறவுகளின் அன்பில் ஜீவிப்போம் என்ற எண்ணத்தில் உழல ஆரம்பித்திருந்தான்.

உறவுகளை பார்க்கப்போகும் மகிழ்வில் தீரனின் முகமே பொலிவு கூடி மினுமினுத்தது. இதழில் நிரந்தரமாக புன்னகை உறைந்து நின்றது. நடையில் ஒருவித துள்ளல். உடல்மொழியில் உற்சாகமென, ஆறேழு வருடங்களாக பார்த்து பழகியவர்களுக்கு அவன் வித்தியாசமாகத் தெரிந்தான்.

அவனது இத்தகைய மகிழ்வுக்கான காரணம் என்னவென்று ரிச்சியை துளைத்தெடுத்துவிட்டனர் சகப்பணியாளர்களும், நண்பர்களும்.

“அவன் ஹேப்பியா இருந்தா என்ன காரணன்னு அவன்கிட்ட கேளுங்கடா” என்று ரிச்சி வாய்விட்டே புலம்பியிருந்தான்.

“உன்கிட்ட கேட்க பயந்துட்டு எல்லாம் என்கிட்ட கேட்குதுங்கடா… முடியல.” ரிச்சி மதிய உணவு இடைவேளையில் கதற, “சில் மச்சான். அது என்னவோ தெரியல… திரும்ப அந்த இருபத்தியோரு வயசு தீரனை உள்ளுக்குள்ள ஃபீல் பன்றேன்” என்ற தீரன் முகத்தில் ரிச்சி உணர்ந்தது, அவனது இத்தனை வருட ஏக்கம் முடிவுக்கு வந்த நிம்மதியைத்தான்.

“ஒருமாதிரி நிறைவா ஃபீல் பன்றேன் ரிச்சி. எல்லாம் மயிலா தான் காரணம். அவளுக்கு எதுவும் ஸ்பெஷலா வாங்கிட்டுப் போகணும்” என்ற தீரன், “என்னடா வாங்கலாம்?” என அவனிடமே கேட்டான்.

“உனக்கு மயிலா மேல வேற மாதிரியான ஃபீல் எதுவும் இல்லையா மச்சான்?”

ரிச்சர்ட்க்கு தீரனிடம் இதனைக் கேட்பதற்கு பயமாக இருந்தாலும், தீரனின் மனதில் மயிலாஞ்சலிக்கு அளவு கடந்த அன்பு உள்ளது என்பதாலும், நண்பனின் இத்தகைய பெரும் மகிழ்வுக்கு காரணமும் அவள் என்பதாலும், அவள் அவனுடனே வாழ்வு முழுமைக்கும் இருந்துவிட்டால் நண்பனின் மகிழ்வுக்கு என்றும் குறையிருக்காதே, அதற்கு எதுவும் வாய்ப்புள்ளதா என்பதை அறிவதற்கே, அவன் அடித்திடுவான் என்று அறிந்தும், இரு கன்னங்களிலும் கை வைத்து மறைத்தவனாகக் கேட்டிருந்தான் ரிச்சர்ட்.

“வேற மாதிரி ஃபீல் அப்படின்னா?” உண்மையில் ரிச்சர்ட் கேட்பது தீரனுக்கு விளங்கவில்லை.

“நீ அடிக்கமாட்டன்னு சொல்லு” என்ற ரிச்சர்ட், எழுந்து தள்ளிச் சென்றவனாக,

“லவ்…” என்று இழுத்துச் சொல்லிட, நொடியில் பார்வையில் தீயை தாங்கியவனாக, தீரன் இருக்கையிலிருந்து எழுந்த வேகத்தில், “வேலையிருக்கு மச்சான்” என்று ஓடியிருந்தான் ரிச்சர்ட்.

“மாட்டுனன்னு வைய்யீ… கொண்டேப்புடுவேன்” என்று தீரன் கத்தியிருந்தான்.

“இருந்த மொத்த சந்தோஷத்தையும் கலைச்சு விட்டுட்டான்” என்று கடுகடுத்த தீரன், மூச்சினை இழுத்து வெளியேற்றியவனாக, இருக்கையில் தொப்பென்று தளர்ந்து அமர்ந்தான்.

அந்நேரம் மயிலாஞ்சலி எண்ணிலிருந்து அழைப்புவர, சட்டென்று அவன் முகம் பூவாய் மலர்ந்தது. இதயம் இதத்தை உணர்ந்தது.

நேரத்தைப் பார்த்தான். இப்போது அங்கு நள்ளிரவு. நியூயார்க்கில் முந்தைய நாள் மதியம் இரண்டு முப்பது.

‘இந்த நேரத்துல எதுக்குக் கூப்பிடுறா?’ என்ற கேள்வியோடே அழைப்பை ஏற்று திரை பார்த்தான்.

சத்தமின்றி அமைதியாக இருளாக இருந்தது எதிர்பக்கம்.

பட்டென்று தீக்குச்சி உரசும் சத்தம், சிறு ஒளியில் மஞ்சள் வண்ணமாக மின்னியது மயிலாஞ்சலியின் முகம்.

அவனது இதயத்தில் புதுவித தாக்கம். அந்த மஞ்சள் முகம் அவனது மனதின் ஆழத்தில் அழுத்தமாகப் பதிந்தது.

தனக்கு முன்னிருந்த சிறிய மெழுகுவர்த்தியை ஏற்றியவள்,

“ஹேப்பி பர்த்டே மாமா” என்று கரு விழிகள் விரிய, மென்னிதழ்களில் தவழ்ந்த புன்னகையோடு அவள் தெரிவித்த வாழ்த்து அவனது நெஞ்சத்தில் மின்னலைப் பாய்ச்சியது.

“மேக் அ விஷ் மாமா” என்றாள்.

அவளின் முகத்தில் ரசனையாய் லயித்திருந்தவன், அவளது குரலில் சிறு திடுக்கிடலுடன் விழிப்பதைப்போன்று, “என்னடா?” எனக் கேட்டிருந்தான்.

“நீங்க ஆசைப்படுறது எதுவும் நடக்கணும் நெனைச்சுக்கோங்க மாமா” என்றாள்.

அடுத்த நொடி, ‘உன்னோட மொத்த அன்பும் எனக்கு வேணும் மயிலா! என் சந்தோஷம் உன்கிட்ட தான் இருக்கு’ என மனதில் நினைத்திருந்தான்.

தன்னுடைய மனதின் நினைப்பு அவனுக்கே சிறு அதிர்வைக் கொடுத்தது.

இது எப்படியென்றுத் தெரியவில்லை. அவளை அதிகத்துக்கும் பிடிக்கும் அவனுக்கு. குடும்பத்தில் அனைவரும் விலகி ஒதுங்கி இருந்த தருணம், அவனுக்கு குடும்பமாய் நானிருக்கிறேன் எனக் காட்டியது அவளும் அவளது அழைப்புகளும் தான். அதனாலே அவள் மீது அக்கா மகள் எனும் பாசத்தை தாண்டி அவனது அன்பின் அதீதம் அவள்.

ஆனால் ஒருநாளும் மனம் கொண்ட பிடித்தம் காதலென்று நினைத்தது இல்லை.

தற்போதும் அவனது மனதின் விருப்பம் தெரிந்த பின்னரும், ‘இதெப்படி சாத்தியம்?’ என்று தான் நினைத்தான்.

ஏற்றியிருந்த மெழுகுவர்த்தியை தானே ஊதி அணைத்தாள் மயிலாஞ்சலி.

அவளின் குவிந்த இதழில் வெளியேறிய காற்று குளிர் தென்றலாய் அவனைத் தீண்டியது.

“நீங்க எப்பவும் ஹேப்பியா இருக்கணும் மாமா” என்று கேக்கினை வெட்டினாள்.

“உன்னோட சந்தோஷம் அவள் தான் மச்சான்.” ரிச்சர்ட் சொல்லியது. ‘அவன் சொன்னதால் இந்த தீடீர் நினைப்பா?’ என நெற்றிச் சுருக்கிய தீரன், அவளின் குரலில் நிகழ் மீண்டு புன்னகைத் தவழும் மதி முகத்தை உறைந்துப் பார்த்தான்

“உங்களுக்கு பிடிச்ச ப்ளூ பெரி ஃப்ளேவர்” என்று மயிலாஞ்சலி சிறு துண்டு கேக்கினை திரை வழி அவன் முன் நீட்டிடவே, அவனது உறைந்த பார்வை அசைவு கொண்டது.

“தேங்க்ஸ் டா” என்று மொழிந்தவனுக்கு, ஏனிந்த புதிதான தடுமாற்றமென்று விளங்கவில்லை.

“வெல்கம் டூ பிக் த்ரீ ஓ (30) மாமா” என்றவள், “உங்க வயசு சரியா?” எனக் கேட்டாள்.

“அதெல்லாம் சொல்றதுக்கில்ல” என்ற தீரன், “நீயின்னும் தூங்கலயா?” என்றான்.

“உங்களுக்கு விஷ் பண்ணத்தான் வெயிட் பண்ணேன். இப்போ தூங்கிடுவேன்” என்ற மயிலாஞ்சலி, “உங்க பர்த்டேல எனக்கொரு விஷ் இருக்கு. மாமா நிறைவேத்தனும்” என்றாள்.

“என்னதுடா?”

“மாமா இங்கவே இருக்கணும். நம்ம வீட்ல” என்ற மயிலாஞ்சலி, “இது எல்லாரோடைய ஆசையும். தனியா இருந்ததுலாம் போதும் மாமா” என்றாள்.

“உங்களோட இருக்க எனக்கு மட்டும் ஆசை இருக்காதா?” என்ற தீரன், “இப்போ வர முடியாது மயிலா! லீவ் கிடைக்கிறதே பெரிய விஷயமாகிருச்சு” என்றான்.

“ஹோ… இப்போவேன்னா இப்போவே இல்லை. ஆனால் நீங்க நம்ம வீட்ல இருக்கணும். வன் ஆர் டூ, த்ரீ இயர்ஸ்ல இங்க வந்திடுங்க” என்றாள்.

“ம்ம்…” என்ற தீரனுக்கு இருளுக்குள் மின்னலாய் வெட்டும் அவளின் முகம் இதயத்தில் என்னவோ செய்தது. முன்னெப்போதும் அவனுக்குள் இப்படியொரு எண்ணம் வந்ததே இல்லை.

அவனது பிறந்தநாள் இங்கு இருந்தவரை அத்தனை கொண்டாட்டமாகக் கழிந்திடும். தனித்துச் சென்ற பின்னர் வாழ்த்து தெரிவிக்கக்கூட யாருமில்லை. மயிலா ஓரளவு விவரம் தெரிந்த பின்னர் வாழ்த்து சொல்லியிருக்கிறாள். ஆனால் இதுபோன்று என்றும் கிடையாது.

“கேக் நானே பண்ணேன்” என்றவள், “நீங்க இங்கிட்டு வந்ததும் பண்ணித்தாரேன்… இப்போ மாமா பர்த்டேவுக்கு பண்ண கேக் எனக்கு மட்டுந்தேன்” என்று அவன் பார்க்க ரசித்து உண்ண, அவளின் செவ்விதழ் சுவை அறிய அவனது மனம் உந்தியது.

தனது எண்ணம் போகும் பாதையில் அதிர்வை உள்வாங்கியவன், பட்டென்று பார்வையைத் திருப்பிக் கொண்டான்.

“பார்க்கவச்சு சாப்பிடுறனா?” எனக்கேட்ட மயிலாஞ்சலி, “அவ்ளோதான்” எனக்கூறி, “டூ மினிட்ஸ் மாமா” என்று அறையின் விளக்கினை ஒளிரச் செய்து கேக்கினை எடுத்துக்கொண்டு அலைபேசி திரையை விட்டு நகர்வது தெரிந்தது.

மயிலாஞ்சலி நகர்ந்திட திரையில் விழுந்த அவளது அறையின் சுவரில் பதினைந்து வயது தீரனின் மடியில் ஆறு வயது மயிலாஞ்சலி அமர்ந்திருக்க, அவளுக்கு அவன் பின்னலிட்டுக் கொண்டிருக்கும் நிழலுருவம் புகைப்படமாக சட்டத்தில் அடைத்து மாட்டப்பட்டிருந்தது.

அவனது கரங்களில் குழந்தையாய் தவழ்ந்தவள், இன்று அவனது ஒட்டு மொத்த மகிழ்வுக்கும் காரணமாகி நெஞ்சத்தில் புதுவித நேச உணர்வை உண்டாக்கி, அவனுள் மாற்றத்தை விதைத்திருந்தாள்.

புகைப்படத்திலிருந்த உருவம் அவனது மனதில் மெல்ல காட்சி மாற்றம் கொண்டது.

இருவரின் தற்போதையத் தோற்றத்தில் அவன் மடியில் அவனது மயிலா… காதல் பார்வையில் இருவரும் கட்டுண்டு இருப்பதாய்.

‘நீயே அஞ்சலியை கல்யாணம் பண்ணிக்கோ… அவளும் உன்னோட இருப்பா. உன் சந்தோஷமும் உன்னைவிட்டுப் போகாது.’ ரிச்சர்ட்டின் குரல் வேறு அவனது உள்ளுக்குள் அவஸ்தையாய் ஒலித்தது.

மீதமிருந்த கேக்கினை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதற்காகச் சென்ற மயிலாஞ்சலி திரும்பி வந்திட, தீரன் பார்வையையும் மனதையும் சீராக்கினான்.

“லீவ் என்னாச்சு மாமா?”

“ஹான்… அங்க மார்னிங் ஆனதும் கால் பண்ணலாம் நினைச்சேன்” என்ற தீரன், “நெக்ஸ்ட் வீக் எண்ட் டிக்கெட் புக் பண்ணியிருக்கேன். டுவென்டி டேஸ் அங்கதான்” என்றான்.

“வாவ்… சூப்பர் மாமா” என்ற மயிலா, “அத்துவுக்கும் எக்ஸாம் முடிஞ்சிடும். எனக்கும்” என்றாள் உற்சாகத்தோடு.

“சென்னை வந்து வருவீங்களா?” என்ற மயிலா,

“ஆமா… இங்கிருந்து சிங்கப்பூர். அங்கிருந்து சென்னை டூ மதுரை ” என தீரன் சொல்லியதும், “யார்கிட்டயும் சொல்லாதீங்க. நான் உங்களை மதுரை ஏர்போர்ட் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன். எல்லாருக்கும் சர்ப்ரைஸ்” என்றாள்.

“நான் வரது அவ்ளோவுக்கு அதிசயமா என்ன?”

“ஆமா இங்கிட்டு எல்லாருக்கும். மொத்த குடும்பமும் நீங்க எப்போ வருவீங்கன்னு காத்துக்கிட்டு கிடக்காங்க” என்றவள், “ரொம்ப வருஷம் ஆச்சுல மாமா?” என்றாள்.

“ம்ம்…”

“என்னதான் வீடியோ கால்ல உங்களை பார்த்தாலும், நேர்ல நீங்க கூட இருந்தமாறி வாராது மாமா. சோ, மயிலாவும் மாமாக்காக வெயிட்டிங்” என்று புன்னகையோடு கண்கள் சிமிட்டினாள்.

அவளது வார்த்தையிலும், செய்கையிலும் அவன் தான் திணறிப் போனான்.

“மண்டைக்குள்ள பேய் தான் பிடிச்சு ஆட்டுது” என்று தீரன் முணுமுணுக்க, ‘உன் மயிலா அங்க பட்டாபோட்டுட்டா! அவள் தான் உட்கார்ந்து ஆட்டுறா!’ என்றது அவனின் மனம்.

“என்ன மாமா? எதுவும் கேட்கல!”

தீரன் முனகியதில் தன்னிடம் எதையோ சொல்லி தனக்கு கேட்கவில்லையென நினைத்துக் கேட்டிருந்தாள்.

“நத்திங்டா” என்ற தீரன், “தூக்கம் வரலையா இன்னும்?” எனக் கேட்டான்.

“இல்லை வரல” என்ற மயிலாஞ்சலி, “வேலை நேரத்துல டிஸ்டர்ப் பண்ணிட்டனா?” எனக் கேட்டாள்.

“இப்போ தான் லஞ்ச் முடிச்சேன். சோ, ஃப்ரீ தான்” என்றான்.

“நாளைக்கு சுந்தரமூர்த்தி தாத்தா வீட்டு கல்யாணம். அங்கன மண்டபத்துல வச்சே பொண்ணு பார்க்குறதா முடிவு பண்ணியிருக்காய்ங்க” என்றாள்.

“யாருக்கு?”

ஏற்கனவே அவள் மீதான திடீர் காதல் உணர்வில் குழம்பிப் போயிருப்பவன், அவள் சொல்வது புரியாது வினவினான்.

“யாருக்கா?” என்று முறைத்த மயிலாஞ்சலி, “உங்களுக்குத்தேன். அன்னைக்கு ஒரு பொண்ணு புடிச்சிருக்கு சொன்னாய்ங்களே!” என்றாள்.

“ஹோ” என்றவனிடம் சத்தமே இல்லை.

“என்னாச்சு மாமா?”

“ஒண்ணுமில்லடா! ரொம்ப லேட் ஆகுது பாரு” என்ற தீரன், “நீ தூங்கு” என்றான்.

“முகமே சுருங்கித் தெரியுதே மாமா. அன்னைக்கும் கண்ணாலம் பண்ணனும் சொன்னப்போ, வழக்கமா பசங்கக்கிட்ட வர வெட்கமே உங்ககிட்ட இல்லையே” என்ற மயிலாஞ்சலி, “கண்ணாலத்துல விருப்பம் இல்லையாட்டுக்கு?” என்றாள்.

‘ஆமா, பொண்ணு நீதான்னா எனக்கு ஓகே!’

இரு நாட்களுக்கு முன்னர் குடும்பமே சேர்ந்து திருமணம் குறித்து பேசியபோது அதைப்பற்றிய எண்ணம் இல்லாது இருந்தவனுக்கு இக்கணம் அவனது மகிழ்வுக்கு காரணமாக இருக்கும் மயிலாஞ்சலியுடன் திருமணம் வேண்டுமென்ற எண்ணம் ஆழம் பெற்றிருந்தது.

அதனின் வெளிப்பாடே தன்னைப்போல் அவனின் மனம் அவனுக்கு முன் முந்திக்கொண்டு பதில் கொடுக்கின்றது.

“என்ன மாமா பதிலே காணோம்?”

“அப்படிலாம் இல்லை” என்ற தீரன், “என்னோட ஃப்ரீ டைம் முடிஞ்சுது. வீட்டுக்குப் போனதும் கால் பண்றேன்” என்றான்.

“எனக்கு விடிஞ்சதும் எக்ஸாம் இருக்கு. நீங்க கால் பண்ணா நான் காலேஜ்ல இருப்பேன். வூட்டுக்கு போயிட்டு நல்லா தூங்குங்க… குட் நைட்” என்றவள் அழைப்பினைத் துண்டித்திட, சில நிமிடங்களில் கூட்டம் ஒன்று இருந்தபோதும் தன்னுடைய மனதின் போக்கை தான் அறிய வேண்டுமென, இருக்கையின் பின் சாய்ந்து கண்களை மூடி அமைதியாக யோசிக்கத் துவங்கிவிட்டான்.

உடன் இல்லையென்றாலும் அவனது வாழ்வின் மொத்தமும் மயிலாஞ்சலி நிறைந்திருந்தாள்.

தீரன் வீட்டைவிட்டு கிளம்பிய நொடியிலிருந்து இந்த நொடி வரை அலைபேசி வாயிலாக அவனுடனே பயணித்துக் கொண்டிருக்கின்றாள்.

ஒன்றாகவே இருந்திருந்தால் எப்படியோ? யாருமே இல்லையென்று ஒதுங்கி வந்த நிலையிலும் அவனை தனித்திருக்கவிட்டதே இல்லை அவள்.

அவன் தூக்கி வளர்ந்ததாலோ என்னவோ? அவனின்றி அந்த வயதில் இருக்க முடியாது அழுதவளிடம் ரத்னவேலு அலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்து பேச வைத்திருக்க… அதுவே தொடர்கதையானது.

யாரும் இல்லை என்றாலும் அனைத்துமாக தானிருப்பதாக தன்னையறியாது காட்டியிருந்தாள். அவளிடம் பேசினாலே போதும் உடனில்லாத குடும்பம் அவளில் நிறைந்திருப்பதாக அகம் நிறைந்திடுவான்.

அவளின்றி நாட்கள் நகர்ந்திடாததால் அவள் மீதான அன்பின் மாற்றத்தை உணராது போனான். இன்று அவளுக்கே திருமண வயது வந்துவிட்டதாகக் கூறி, அவனது திருமணத்திற்குப் பேசிட, அன்பின் அடுத்த நிலையில் அவனது மனம் அவனை இட்டுச் செல்கிறது.

‘எப்பவும் அவள் தான் உன்னோட எல்லமாவும்… மொத்த சந்தோஷமாவும் இருந்திருக்கா தீரா! அவள் இல்லாம நீ இருக்க முடியுமான்னு ஒரு நிமிஷம் யோசிச்சுப்பாரு.’

இதயத்தின் கேள்விக்கு, “முடியாது” என்ற பதில் அவனிடத்தில்.

அக்கணம் முடிவு செய்திட்டான்… தனக்கு எல்லாம் அவள் தான்… அவனின் மயிலா.

error: Content is protected !!
Scroll to Top