அத்தியாயம் 4
என்றுமில்லா பெருமகிழ்வு…
இன்று, தீரனிடத்தில்.
“என்ன மச்சான் முகம் ஐயப்பன் கோவில் ஜோதியாட்டம் ஜொலிக்குது?”
மயிலாஞ்சலி பேசி முடித்து சில நிமிடங்கள் கழிந்தும், அசையாது அமர்ந்திருந்த தீரனிடம் கேட்டிருந்தான் ரிச்சர்ட்.
எழுந்த தீரன் ரிச்சர்ட் உணரும் முன்பு அவனை தூக்கிச் சுற்றியிருந்தான்.
“அம் த மோஸ்ட் ஹேப்பியஸ்ட் பெர்சன் இன் த யூனிவர்ஸ்” என்று ஆர்ப்பரித்திருந்தான்.
“டேய்… டேய்…” என்று அவனது எதிர்பாராத செயலில் அலறிய ரிச்சர்ட், “தலை சுத்துதுடா… இறக்கிவிடு” என்று கத்தினான்.
நிதானமாக இறக்கிவிட்ட தீரன்,
“ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் உண்மையான ஹேப்பினெஸ் ஃபீல் பண்றேன் ரிச்சி” என்று அவனின் கன்னம் பிடித்து ஆட்டினான்.
“இந்த சந்தோஷத்துக்கு காரணம் என் மயிலா தான்” என்றான்.
“ஆஹான்” என்ற ரிச்சி, “அதென்னவோ உண்மை தான். அஞ்சலியால மட்டும் தான் நீ நார்மலா இருந்த. அவளும் மத்தவங்க மாதிரி உன்கிட்ட பேசாம இருந்திருந்தா, அவனவன் லவ் ஃபெயிலியருக்காக வளர்க்கும் தாடியை நீ மட்டும் வித்தியாசமா குடும்பத்தை விட்டு பிரிஞ்சேன்னு வளர்த்திருப்ப” எனக்கூறி சிரித்த ரிச்சியை முறைத்தான் தீரன்.
‘அச்சோ அவன் சிரிக்கிறான்னு ஓவரா பேசிட்டமோ?’ உள்ளுக்குள் அரண்ட ரிச்சர்ட், வெளியில் உதட்டினை இழுத்து வைத்து சிரித்ததோடு, திருதிருத்து பார்த்தான்.
“நீ சொல்றது உண்மைங்கிறதால உன்னை விடுறேன்” என்றான் தீரன், “இப்போலாம் தாடி வைக்கிறதே ஸ்டைல் அப்படின்னு ஆகி பலகாலம் ஆச்சு” என்றான். பார்வையால் மிரட்டியவனாக.
“என்னடா டக்குன்னு மூட் மாறிட்ட?”
“பின்ன மாறாம” என்ற தீரன், “என் வீட்டை க்ளப்பா மாத்தினதுக்கே உன்னை மொத்தி எடுத்திருக்கணும். இதுல என்னை கலாய்க்க வேற செய்யுற நீ” என்றான்.
“நீ அப்படிலாம் பண்ணமாட்ட. அம் யுவர் பெஸ்ட் ஃபிரண்டு” என்ற ரிச்சர்ட், “நீ எப்பவும் குட் மூட்லே இருக்கணும்னா அஞ்சலி உன்னோடவே இருக்கணும்டா. அப்போ தான் நான் உன்கிட்ட தப்பிக்க முடியும்” என்றான்.
“நான் ஊருக்கே போயிட்டாலும், இனி மயிலா என்னோடவே இருக்க முடியாது. மேரேஜ் பேசுறாங்க” என்ற தீரன், “நான் இங்க வரும்போது என் இடுப்பு உயரம் தான் இருந்தா… இப்போ அவளுக்கே கல்யாணம்” என்று முறுவலித்தான்.
“இதுக்கு ஏன் மச்சான் ஃபீல் பண்ற? பேசாம நீயே அஞ்சலியை கல்யாணம் பண்ணிக்கோ… அவளும் உன்னோட இருப்பா. உன் சந்தோஷமும் உன்னைவிட்டு போகாது” என்ற ரிச்சியை, தீரன் பட்டென்று வாயிலே அடித்திட, வலி தாங்காது கண்கள் கலங்கிப்போனான்.
“அவள் வயசென்ன என் வயசென்ன? முட்டாத்தனமா பேசாம போய் வேலையெதும் இருந்தா பாரு” என்ற தீரனுக்கு அப்பேச்சே ஒப்பவில்லை.
“உங்க ஊர் பக்கம் அக்கா பொண்ணுங்க தாய் மாமாவை கட்டிக்கிறது வழக்கம் தானடா. என்னவோ இல்லாததை சொல்லிட்ட மாதிரி அடிக்கிற. அதுவும் உங்களுக்குள்ள அப்படியென்ன பெரிய வயசு வித்தியாசம்? ஏழெட்டு இருக்குமா? ரொம்பத்தான் போடா, இனி உன்கிட்ட நான் பேசவே மாட்டேன்” என்று முனகிய ரிச்சி, “அந்த சுண்டெலிக்கு போன் பண்ணி, உன்கிட்ட பேசவேணாம் சொல்றேன் இரு” என்று சென்றிருந்தான்.
________________________________
அன்றைய விடியல் முத்து மாணிக்கம் இல்லம் அதீத மகிழ்வோடு இருந்தது.
காரணம் அவ்வீட்டின் இளவரசன் நீண்ட நாட்களுக்குப் பின்னர் அனைவரிடமும் உரையாடி இருக்கின்றான்.
ஒதுக்கி வைத்தவர்கள் குடும்பத்தினராகவே இருப்பினும், பல வருடங்களுக்குப் பின் அவனுடன் பேசியது அத்தனை நிறைவை கொடுத்திருந்தது.
அதிலும் அவனை தாங்கள் ஒதுக்கி வைத்த கோபமின்றி பேசியவனின் மீது, அவன் வைத்திருக்கும் அன்பால் தங்களின் கோபம் மறந்தனர் என்றே சொல்லலாம்.
காலம் அனைத்தையும் சரி செய்யும் என்பது நிதர்சனம். இங்கு கொண்ட காயம் ஆறிய பின்னரும் காலம் கடத்தியது தீரன் தங்களை விட்டுச்சென்ற வருத்தத்திலே. அந்த வருத்தமும் அவன் தங்களுக்காக ஏங்கியிருக்கிறான் என்பதில் காணாமல் போயிருந்தது.
முற்றத்தில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த முத்து மாணிக்கம் இதழில் புன்னகைத் தேங்கி நின்றது.
“என்னவாம்… பெருசுக்கு சிரிப்பு வாப்பெட்டி முழுக்க மல(ர்)ந்து கெடக்கு” என்ற கொற்றவை, புடவை தலைப்பை இழுத்து இடை சொருகியவராக, முற்றம் தூணில் சாய்ந்து கால்கள் நீட்டி அமர்ந்தார்.
“எம் பேரன் வரப்போற சந்தோஷமாட்டிக்கு” என்ற முத்து மாணிக்கம், “ஒரு வரன் வந்துச்சே அந்தப்பொண்ணை நம்ம பயலுவகிட்ட சொல்லி விசாரிக்க சொன்னேன். ஆதியும், அரவிந்தும் ஒத்து வரும்ன்னு சொன்னானுவ. சின்னவன் வந்ததும் சட்டுப்புட்டுன்னு கண்ணாலத்தை பண்ணிப்புட வேண்டியதுதேன். எல்லாருக்கும் பொண்ணை புடிச்சிருக்கா” என்றார்.
“ம்க்கும்… போட்டோவுல பார்த்து என்னத்த புடிச்சிருக்கு சொல்றது” என்று நொடித்த கொற்றவை, துளசி கொண்டுவந்த கருப்பட்டித் தேநீரை வாங்கிக் கொண்டவராக, “நீ செத்த இங்கிட்டு உட்காருத்தா” என்றார்.
“வயலுல கதுரு அறுக்குது அத்த… வண்டி நேரக்கணக்கு பார்க்க அரவிந்த் போயிருக்கியான். புள்ள பசி தாங்கமாட்டியான். அவன் வாரதுக்குள்ள சோறு பொங்கணும்” என்ற துளசி, “உங்களுக்கு கேப்பக்கூழு கரைக்கட்டா மாமா” என்று முத்து மாணிக்கத்திடம் வினவினாள்.
“செத்த நேரஞ்செண்டு நானே கேக்குறத்தா” என்ற முத்து மாணிக்கம், “அரவிந்த் ஒண்டியா எம்புட்டு நேரம் பாப்பியான்? அறிவையும், பிரபாவையும் அனுப்பி வைக்க வேண்டியதுதானே” என்றார்.
“இப்போதேன் காபி போட்டு ஆதிக்கிட்ட கொடுத்துவுட்டேன்” என்ற துளசி உட்காராது நகர, “மொத நீங்க காபித்தண்ணியை குடிங்க. ராவு வரை ஓடிட்டே இருப்பீய்ங்க” என்று வந்த மாலதி, துளசி கையில் தேநீர் கோப்பையை திணித்துவிட்டுச் சென்றார்.
“சாம்பாருக்கு பருப்பு வைத்தா?” என்ற துளசி, கொற்றவை அருகில் அமர்ந்தார்.
“அதெல்லாம் உங்க மருமவளுங்க பார்த்துப்பாளுங்க… ஆறமர குடிச்சிப்போட்டு வாங்க” என்று சொல்லிக்கொண்டேச் சென்றார் மாலதி.
“என்ன சங்கதி அத்த?” என்று துளசி கேட்க,
“தீரனுக்கு ஒரு வரன் வந்திருக்கே! அந்தப்பொண்ணு வீடு நாளன்னைக்கு சுந்தரமூர்த்தி மாமா வூட்டு கல்யாணத்துக்கு வாராய்ங்கலாம். நாமளும் குடும்பமா போயி வருவோம். அப்படியே அங்கிட்டு வச்சு பொண்ணு பார்த்த மாதிரி ஆகிப்புடும். நம்ம எல்லாருக்கும் புடிச்சிப்போச்சுன்னா மேற்கொண்டு பேசுவோம்” என்றார் கொற்றவை.
துளசி மாணிக்கத்தை பார்க்க…
“சொந்தத்துல வந்த தாக்கல் தான… சொந்தக்காரய்ங்க வூட்டு விசேஷத்துல பொண்ணு பார்த்துக்கிறது நம்ம பக்கத்துல வழக்கம்தா(ன்)ம்மா. பொண்ணு வூட்டுலையும் அந்த முடிவைத்தான் எடுத்திருக்காய்ங்க” என்ற மாணிக்கம், “எல்லாரையும் வூட்டுக்கு கூப்புட்டு முடிவு வேறயா இருந்துச்சுன்னா ரெண்டு பக்கட்டும் சுணக்கமாகிப்போவும். அதுக்கு இது நல்லதுதேன்” என்றார்.
“சரிங்க மாமா. நீங்க சொல்றதும் சரித்தேன். அதுக்கு தக்கன ஏற்பாடு பண்ணிப்புடலாம்” என்று துளசி சொல்லிக் கொண்டிருக்கையில் வந்த ராஜாத்தி, “அவுங்க பையனை பார்க்க வேணாமாக்கும்” என்றார்.
“பையனை வூடு கூப்ட்டு பார்க்கும் முன்னுக்க, நம்ம குடும்ப நிலவரத்தை தெரிஞ்சிக்க ஆசைப்படுராய்ங்க” என்றார் கொற்றவை.
“அதுசரி” என்ற ராஜாத்தி, “சட்டுபுட்டுன்னு தீரனுக்கு கண்ணாலம் பண்ற சோலியை பாருங்க. அடுத்த தலைமுறை வளர்ந்து நிக்கிது” என்று அஞ்சலி மற்றும் அத்வத்தை மனதில் வைத்துக் கூறினார்.
“அதுக்குத்தேன் மெனக்கெடுறோம்” என்ற கொற்றவை, “இந்த சம்மந்தமே அமைஞ்சுப்போச்சுன்னா, தீரன் வர லீவுல சுருக்க கண்ணாலத்தையும் முடிச்சுதேன் அவனை அனுப்பனும்” என்றார்.
“அப்போ தீரன் ஆயிசுக்கும் அங்கிட்டுதேனா?” என்று கையில் முறமும், அப்போதுதான் வீட்டின் பின்கட்டில் பறித்த முருங்கைக்கீரையும் கொண்டு வந்தவராகக் கேட்டுக்கொண்டே பெண்கள் அருகில் அமர்ந்தார் கல்யாணி.
“ஏதோ கோபம். நாமளும் பேசாம இருந்துப்புட்டோம். அவனும் பிரிஞ்சி இருந்துட்டியான். கண்ணாலம் கிண்ணாலம் பண்ணி வச்சு கூடவே வச்சிக்கிடனுதேன் மனசு அடிச்சிக்குது. அதுக்கெங்க கொடுப்பினை இருக்குது” என்றார் துளசி.
ஆசை மகன். துளசிக்கு மட்டுமல்ல. மொத்த குடும்பத்துக்கும் அத்தனை செல்லம். பெரியவர்களிலிருந்து சிறியவர்கள் வரை ஒட்டு மொத்தவர்களின் அன்பையும் திகட்ட திகட்ட அனுபவித்தவன் இன்று கடல் கடந்து, நினைத்தால் சட்டென்று தொட்டு அணைத்து பக்கத்தில் அமர்த்திக்கொள்ள முடியாத தொலைவில் கண்டம் கடந்து தனித்து வாழ்ந்துக் கொண்டிருக்கின்றான்.
அனைவருக்கும் அதில் ஏக வருத்தம் இருந்தபோதிலும், என்னதான் கோபம் மிகுதியாய் இருந்தாலும் அவனைத் தனித்து விட்டிருக்கக்கூடாதென, தங்களின் பிள்ளைகள் அனைவரும் ஒரு குடும்பமாய் ஒரு கூட்டுக்குள் வாழ்வதை பார்க்கையில் தான் தங்களின் தவறும் பெரியவர்களுக்குப் புரியச் செய்கிறது.
“யாருதேன் தப்பு பண்ணல? நம்ம வயசுக்கும், அனுபவத்துக்கும் நமக்கே இறங்கிவர முடியாமப்போச்சு. ஒவ்வொருத்தர் மொவமா பார்த்து நின்னானே” என்று கொற்றவை புடவைத் தலைப்பால் கண்களில் துளிர்த்த நீரை மெல்லிய விசும்பலோடு துடைத்துக்கொள்ள…
“அதுதேன் இப்போ வரப்போராய்ங்களே ஆத்தா. பொறவு என்னத்துக்கு கண்ணை கசக்கிட்டு இருக்கீங்க?” என்று வந்தாள் தேவதாரணி.
“வரவங்களை திருப்பி ஏன் அனுப்பனுமேன்னு நெனைக்குறீங்க. கூடவே வச்சிக்கோங்க” என்றாள் ஆதிரா.
பெண்கள் அனைவரும் கீரையை உருவியபடி தீரனை குறித்து பேசிக்கொண்டிருந்தனர்.
அவனைப்பற்றி இன்றுதான் அனைவரும் வெளிப்படையாகப் பேசவும் செய்கிறார்கள்.
அடுக்களையில் வேலையாக இருந்த காயத்ரி, கலாவதியும் கூட காலை உணவிற்கு நறுக்க வேண்டிய காய்கறிகளை எடுத்துக்கொண்டு முற்றத்தில் அவர்களுடன் வந்து அமர்ந்துகொண்டனர்.
“தீரன் வந்ததும் எல்லாரும் பேசி அவனை இங்கிட்டே இருக்க வச்சிப்புடுவோம்” என்று தேவதாரணி சொல்ல, “அதுக்கு அவென் ஒத்துப்பானா? அந்த நாட்டுல பெரிய வேலையில இருக்கியான். அங்கிட்டு சொந்தமா வூடெல்லாம் வாங்கியிருக்கியான். அதெல்லாம் வேணான்னு விட்டுப்போட்டு வந்துடுவானாக்கும்” என்றார் கலாவதி.
“காலையிலே பெண்கள் மாநாடு பலமா கூடியிருக்கே! என்ன சேதி?” எனக் கேட்டுக்கொண்டே பண்ணையை பார்வையிடச் சென்றிருந்த மாயவேல் வீட்டிற்குள் நுழைந்தார்.
துளசி எழுந்துச் சென்று நீர்மோர் கொண்டு வந்து கணவரின் கையில் கொடுத்தார்.
வாங்கி பருகியவர் மாணிக்கத்தின் அருகில் அமர்ந்தார்.
“எல்லாம் தீரனைப் பத்தித்தேன் பேச்சு. இம்புட்டு வருசமா பேசாத பேச்செல்லாம் பேசுராய்ங்க” என்று மகனிடம் தகவல் தெரிவித்தார் மாணிக்கம்.
“ம்ம்… நாம எல்லாரும் ஒண்ணா இருந்துக்கிட்டு அவன் மட்டும் ஒத்தையில கெடக்கும் வெசனம்” என்றார் மாயவேல். மகனின் மீது அப்படியொரு பாசம். அந்தப் பாசம் தானே அதீத கோபத்திற்கும் காரணமானது. தங்களின் அதிக அன்புதானே அவன் என்ன செய்தாலும் சரியென்று போக வைக்கும் எண்ணத்தைக் கொடுத்ததென்று அவர்களின் தீரா கோபத்திற்கு காரணமும் அன்பு தான்.
“அன்னைக்கு அவன் கலங்கி பரிதவிச்சுப் போனப்போ போகாதன்னு சொல்ல ஒருத்தருக்கும் வா வரல. இப்போ உட்கார்ந்து பாசத்தைக் காட்டிக்கிட்டு இருக்கீய்ங்க” என்றார் ரத்னவேல்.
தீடீரென ரத்னவேல் அவ்வாறு சொல்லியதில் அனைவருக்கும் சுருக்கென்றது.
அவரின் பேச்சுக்கு யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.
அன்று தீரன் வீட்டைவிட்டு கிளம்பும் போது ஒவ்வொருவரின் முகம் பார்த்து நின்றானே! யாருக்கும் அன்றைய கோபம் மறந்து அவனிடம் பேசவேண்டுமென்று தோன்றவில்லையே. அவன் செய்த தவறும், கோபமும் தானே பிரதானமாகத் தெரிந்தது.
“இப்பவும் அஞ்சலி வளர்ந்து நிக்கிறா. அவனுக்கு பண்ணாம இவளுக்கு எப்படி கண்ணாலம் பண்றதுங்கிற யோசனையிலதேன் உங்களுக்கு அவென் நெனைப்பு வந்துச்சு. உங்களுக்கென்ன அவென் மேல அக்கறையா? இல்லை, பழைய பாசந்தேன் அப்படியே இருக்குதா?” எனக் கேட்டார்.
“மாப்பிள்ளை…” மாயவேல் வருத்தமாக ஏறிட்டார்.
“உண்மையைத்தேன் சொல்றேன் மாமா. அவன் பண்ணது தப்புத்தேன். நான் இல்லன்னு சொல்லல. ஆனால் ஒரு குழந்தை பொறந்ததும் கயல ஏத்துக்கிட்டீங்கதான. அப்போவே அவன்கிட்டவும் பேசியிருந்தா அவன் இப்போ இங்கிட்டு நம்மக்கூட இருந்திருப்பானே” என்றார்.
ரத்னவேலிற்கு தன்னுடைய உறவுகள் மீது அத்தனை ஆதங்கம். இத்தனை வருடங்கள் கேட்க நினைத்தும் அமைதியாக இருந்தவர், இன்று ஆளாளுக்கு தீரன் அங்கேயே இருந்திடுவான் என்று வருத்தமாகப் பேசிட மொத்தமாக வெளிக்காட்டிவிட்டார்.
மாணிக்கம் உட்பட அனைவருக்கும் தாங்கள் செய்த தவறு புரிந்தது. பதில் சொல்ல முடியாது ரத்னவேலை பார்த்தனர்.
“அவன் பண்ண தப்புக்கு நீங்க பண்ண தப்பு ஈடாகுமா?” எனக் கேட்டவர், “உங்களுக்கு ஒரு பிள்ளை இல்லைன்னா இன்னொன்னு. தூக்கிக் கொஞ்ச, சந்தோஷப்பட்டுக்க, தோள் சாஞ்சு ஆறுதுலா கண்ணு மூடன்னு இத்தனைப் பேரு இருந்ததால அவன் அங்கிட்டு ஒத்தயில பட்ட கஷ்டம் தெரியாமப்போச்சு. தனியா கஷ்டப்பட்டு படிச்சு அவனா முன்னேறியிருக்கான். அந்த நாட்டுல வீடு வாங்கி, ஒரு பெரிய இடத்துல இருக்கான். அவன் படிப்புக்கு, மத்த செலவுக்குன்னு அந்த வயசுலே அவந்தேன் உழைச்சான். இம்புட்டு சொத்து சொகம் இருந்து என்ன பிரயோஜனம். அவனா காட்டுமரமா வளர்ந்து நிக்கிறான். இப்போ திரும்ப நீங்க பாசம் காட்டி உங்க பக்கம் இழுத்து, இங்கிட்டே அவனை தக்கவச்சு, அவன் உழைப்பெல்லாம் ஒண்ணுமில்லாம ஆக்க திட்டம்போடுறீங்க. ரொம்ப நல்லாயிருக்கு” என்றார்.
“அப்போ அவன் காலத்துக்கும் அங்கிட்டு தனியா கிடக்கட்டும் சொல்றீங்களா?” துளசி தழுதழுப்போடு கேட்டார்.
“நான் அப்படி சொல்ல வரல. இன்னைக்கு மகன் மகன்னு உருகுற எல்லாருக்கும், அப்போ இந்தப்பாசம் எங்கப் போச்சுன்னு கேட்கிறேன். அவனும் இந்த வூட்டுல ஒரு ஆளா விசேச நாளுல வந்து நின்னுப்புட மாட்டானான்னு வருந்ததா நாளில்லை. அவன் போனதுக்கு அப்புறம் இங்கிட்டு எத்தனை விசேசம் நடந்துச்சு… ஒன்னுத்துக்காவது அவனை கூப்பிடுவோம், பேசுவோம் தோணுச்சா உங்களுக்கு? அவன் இல்லாம சந்தோஷமாத்தேன் எல்லாம் பண்ணீங்க. கயலுக்கு குழந்தை பொறந்ததும் அவள் பண்ணது தப்பில்லன்னு ஆகிப்போச்சுல உங்களுக்கு. அதுக்கு பொறவு கூட அவனோட பேசலயே நீங்க யாரும். எம்புள்ளை எம்புட்டு வேதனைப்பட்டிருக்கும். கயலை சேர்த்துக்கிட்டதுக்கு பொறவு, கயலையே கூட்டிக்கிட்டாய்ங்க நம்மகிட்டயும் பேசிடுவாய்ங்கன்னு எம்புட்டு எதிர்பார்த்திருப்பியான்” என்ற ரத்னவேலுக்கு கண்கள் கலங்கிவிட்டிருந்தது.
“அப்பா” என்று அஞ்சலி, ரத்னவேலின் கரம் பிடிக்க,
“இவங்களையெல்லாம் ஒரு வார்த்தையாவது கேட்கணும் தோணும்டா… உறவாச்சே நம்ம வார்த்தை கஷ்டப்படுத்திடக் கூடாதுன்னு அமைதியா இருந்துப்புட்டேன். ஆனா இன்னைக்கு ஆளாளுக்கு அவன் இங்க வந்ததும் அதை பண்ணனும் இதை பண்ணனும், கூடவே வச்சிக்கணும், பாசத்தை அப்படிக் காட்டணும் இப்படிக் காட்டணுன்னு எம்புட்டு பேச்சு.. அதேன் மனசு தங்காம எல்லாம் கொட்டிட்டேன்” என்றார்.
“விடுங்கப்பா… இதுக்கு பொறவு உங்க மருமகன் உங்களோடத்தேன் இருப்பாய்ங்க” என்ற மகளின் தலையில் கை வைத்த ரத்னவேல், “நீயும் இவங்கள மாதிரி ஒதுங்கி இருந்திருந்தன்னா, அவன் உக்கியே போயிருப்பான்” என்றார்.
அனைவருக்கும் தீரன் செய்தது தவறென்றபோதும், அவனிடத்தில் இத்தனை கோபம் கொண்டு விலகியிருந்திருக்க வேண்டாமென்று ரத்னவேலின் பேச்சில் வருந்தினர்.
“இத்தனை வருஷ ஆதங்கம். அவன் வரதுக்குள்ள காட்டிப்புட்டா மனசு கொஞ்சம் லேசாகிப்புடும் நெனச்சு பேசிப்புட்டேன். யாரும் தப்பா நெனச்சிக்கிட வேணாம்” என்று ரத்னவேல் தன்னுடைய வருத்தத்தைத் தெரிவிக்க, இருக்கையிலிருந்து எழுந்து ரத்னம் அருகில் வந்த மாயவேலு, “அவனுக்காக நீங்க இருக்கீங்களே! அப்பவும், இப்பவும்… எப்பவும் இருப்பீங்க. ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை” என்று அவரின் தோள் தட்டினார்.
அனைத்தையும் ஒரு பார்வையாளராக பார்த்துக்கொண்டிருந்த அர்ச்சனாவுக்கு கணவரின் பேச்சு குற்றவுணர்வைக் கொடுத்தது.
ரத்னவேல் ஒரு நாளும் இப்படி அர்ச்சனாவிடம் பேசியதில்லை. ஏன் தீரன் குறித்து வாய் திறந்ததே இல்லை.
“நீயாவது பேசு” என்றும் சொல்லியதுமில்லை.
தீரன் வீட்டை விட்டுச் சென்றது முதல் அவனுடன் ரத்னவேல் தொடர்பில் இருக்கின்றாரென்று அனைவருக்கும் தெரியும். ஆனாலும் யாரும் ஒருநாள் கூட தீரன் எப்படியிருக்கின்றான் என்ன செய்கின்றானென்று அவரிடம் கேட்டதில்லை.
‘நீங்களா கேட்காதபோது நான் ஏன் சொல்லணும்?’ என்று ரத்னவேலுவும் தீரனைப் பற்றி பேசியதில்லை.
வீட்டு விசேஷங்களின் போது கூட, அனைவரும் ஒன்றாக அமர்ந்து எப்படி செய்யலாமென கலந்தாலோசித்திடும் தருணங்களில் யாராவது ஒருவர் தீரனையும் அழைப்போமென்று சொல்லமாட்டார்களா என எதிர்பார்த்து ஏமாந்தவருக்கு ஏமாற்றமே எஞ்சியது.
“நீங்க எடுத்து சொல்லித்தேன் அவங்களுக்கு என் நெனப்பு வரணுமா மாமா?” தீரனிடம் ரத்னவேல் புலம்பிடும் நேரம் அவன் இதைக்கூறித்தான் அவரை அமைதிப்படுத்துவான். அதற்காகவே தானாக அவனைப்பற்றி பேசுவதை முழுதாகவே ரத்னவேல் தவிர்த்திருந்தார்.
அஞ்சலி விவரம் தெரிந்த பின்னர் அனைவரின் பார்வையிலும் தீரனின் இருப்பை, அவனுடனான உரையாடல் மூலம் காட்டிடத் துவங்கினாள். அதன் பலனே இன்று அனைவரின் மனமாற்றத்திற்கும் காரணம்.
அனைவரும் ஒதுக்கி வைத்தபோதும் அவர்களின் கோபத்திற்கு மதிப்பளித்து ஒதுங்கி இருந்தவன், எப்போது தன்னை மீண்டும் அவர்களுடன் இணைத்துக் கொள்வார்களென்று காத்துக்கிடந்தவன், மீண்டும் அவர்களின் அன்பு தனக்கே தனக்கென்று கிடைக்குமென ஏங்கிக்கிடந்தவன்… தன்னுடைய குடும்பத்தோடு இணைய பெரும் மகிழ்வோடு வருபவன் மீண்டும் அனைவரையும் பிரிந்து செல்லவிருக்கின்றான்.
முன்பு அவர்கள் அவனுக்குக் கொடுத்த விலகலை, இம்முறை அவன் அவர்களுக்குக் கொடுக்க இருக்கின்றான்.