எழுத்தாளர் கார்த்திகா சக்கரவர்த்தி

எழுத்தாளர் கார்த்திகா சக்கரவர்த்தி

* உங்களைப்பற்றி சில…

நான் கார்த்திகா சக்கரவர்த்தி. சிறுவயதில் இருந்து எந்தக் காகிதத்தை எடுத்தாலும் அதில் இருப்பவற்றை படிக்கும் ஆர்வம் உண்டு. அப்படி படிப்பதை என் தோழிகளிடம் கதையாக சொல்வதிலும் அதிக ஆர்வம் உண்டு.

பத்தாம் வகுப்பு படிக்கும் போது முதன் முதலாக நாவல்கள் எனக்கு அறிமுகமானது. தோழியிடம் இருந்து பெற்று வந்த நாவலை வீட்டில் யாருக்கும் தெரியாமல் பாடம் படிக்கிறேன் என்று சொல்லி பாட புத்தகத்திற்குள் வைத்து படித்தது இன்றும் நன்றாக நினைவில் இருக்கிறது.

சிவபெருமானுக்காக மனதிற்குள்ளேயே கோவில் கட்டிய பூசலாரைப் போன்று பதினோராம் வகுப்பு படிக்கும் போது முதன் முதலாக என்னுடைய ஒரு முழு நாவலை மனதிற்குள்ளேயே தயார் செய்து வைத்தேன். அந்த கதை இன்னமும் அப்படியே பசுமரத்தாணி போல நினைவில் இருக்கிறது என்பது தனிச்சிறப்பு.

கல்லூரி முடித்த பிறகு 2017 ஆம் ஆண்டில் ஒரு விபத்து போல Whattpad தளத்தில் என்னுடைய கதைகள் எழுதும் பயணத்தை துவங்கினேன். அங்கே நிறைய வாசகர்களின் அன்பை சம்பாதித்தேன். அதன் பிறகு பிரதிலிபியின் அறிமுகம் கிடைத்தது. அங்கேயும் தொடர்ந்து கதைகளை பதிவிட ஆரம்பித்தேன்.
2023 ம் ஆண்டு சாரல் தளத்தில் நடைபெற்ற போட்டிக்கதையில் கலந்துகொண்டு சிறப்பு பரிசு பெற்றது எனக்கு ஒரு புது பாதையை போட்டுக் கொடுத்தது. அதன் பிறகு முகப்புத்தகத்தில் நுழைந்து எனக்கென வாசகர்களை உருவாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.

1. கார்த்திகா சக்கரவர்த்தி என்ற எழுத்தாளர் உருவான கதை எப்போது தொடங்கியது? முதன்முதலில் “நான் ஒரு எழுத்தாளர் ஆக வேண்டும்” என்று உங்களுக்குள் தோன்றிய தருணம் எது?

2017 ல் அடுத்தடுத்து நான் சந்தித்த இரண்டு துர் சம்பவங்கள் என்னை மிகவும் அழுத்தத்திற்கு ஆளாக்கியிருந்தது. ஒரு இழப்பு ஒட்டுமொத்த குடும்பத்தையும் தலைகீழாக புரட்டி போட்டு இருக்க குடும்பமே தவிப்பில் ஆழ்ந்திருந்த நேரத்தில் என்னுடைய தனிமையை போக்குவதற்காக whattpad தளத்தில் கதைகள் எழுத ஆரம்பித்தேன்.

அந்த நேரத்தில் என்னுடைய குழந்தை கிறுக்கலுக்கு கூட அத்தனை ரசனையான வாசகர்கள் கிடைத்தது என்னுடைய உண்மையான அதிர்ஷ்டம் என்று தான் கருத வேண்டும். அவர்களுடைய அந்த அன்பான ஆதரவு தான் என்னை இவ்வளவு தூரம் அழைத்து வந்திருக்கிறது.

2. காதல், குடும்பம், மர்மம், த்ரில்லர், குற்றம், ஃபேன்டஸி என முற்றிலும் வெவ்வேறு களங்களில் நீங்கள் பயணிக்கிறீர்கள். இவற்றில் ஒரு கதையைத் தொடங்கும்போது முதலில் உங்களைத் தேர்ந்தெடுப்பது களமா, கதாபாத்திரமா, இல்லை ஒரு சிறிய சம்பவமா?

எப்போதுமே ஏதோ ஒரு சிறிய சம்பவம் தான் எனக்குள் கதையாக உருமாறும்.

நாள்தோறும் எவ்வளவோ வார்த்தைகள் பேசுகிறோம் எவ்வளவோ வார்த்தைகள் கேட்கிறோம் அது அனைத்துமே கதைகளாக உருமாறுவதில்லை. ஏதோ ஒரு சில வார்த்தைகள் தான் நமக்குள் இருக்கும் கற்பனையை மிக தீவிரமாக தூண்டிவிடும். எனக்கும் அப்படித் தான் நடக்கும்.

3. «இணையும் கரங்கள்» குடும்பம் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்ட படைப்பு. குடும்ப உறவுகளின் உணர்வுகளை எழுதும்போது, வாசகர்களின் மனதில் இயல்பாகப் பதிய வேண்டும் என்பதற்காக நீங்கள் கவனிக்கும் விஷயம் என்ன?

குடும்ப உறவுகளின் உணர்வுகளைப் பற்றி எழுதும் போது யாருக்கும் எந்தப் பாரபட்சமும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதுதான் என்னுடைய முக்கியமான யோசனையாக இருக்கும்.

4. «ஒரு மழை இரவில்…» மர்மம், திகில், துப்பறிவு ஆகியவற்றை இணைத்துச் செல்லும் கதை. அந்தக் கதைக்கான அடிப்படை யோசனை எப்படி உருவானது? குறிப்பாக “ஒரு மழை இரவு” என்ற சூழலையே கதையின் முக்கியப் பின்னணியாகத் தேர்ந்தெடுத்ததற்கு ஏதேனும் காரணம் இருந்ததா?

ஒருநாள் எதேச்சையாக பெரியம்மை, போலியோ போன்ற உயிர்க்கொல்லி நோய்களுக்காக நாம் போட்டுக் கொள்ளும் தடுப்பூசி எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது என்பதைப் பற்றிய ஒரு காணொளி காண கிடைத்தது. அந்தக் காணொளி தான் என்னுடைய ஒரு மழை இரவில் கதையின் முக்கிய விஷயமான “Brain Bacteria” உருவாக்கத்தின் காரணம்.

எனக்கு இந்த பட்டாம்பூச்சி விளைவு என்பதில் மிகுந்த நம்பிக்கை உண்டு. ஒரு நாள் இரவில் நடந்த இரண்டு தனிப்பட்ட விஷயங்கள் எதிர்காலத்தில் எத்தனை பெரிய கொடூர அழிவுகளை உருவாக்குகிறது என்பதைச் சொல்வதற்காக யோசித்தது தான் இந்த தீம்.

5. மர்மக் கதையில் வாசகர் அடுத்ததாக என்ன நடக்கும் என்று யூகித்துவிடக் கூடாது. அதே நேரத்தில், இறுதியில் காரணமே இல்லாமல் திருப்பம் வந்ததாகவும் தோன்றக்கூடாது. இந்த இரண்டுக்கும் இடையிலான சமநிலையை நீங்கள் எப்படி உருவாக்குகிறீர்கள்?

ஒரே திருப்பத்தை கையில் வைத்துக் கொண்டு கதையைப் புனைவதை விட, கதையின் வேகத்திற்கு ஏற்ப பல இடங்களில் சின்ன சின்ன திருப்பங்களை வைத்தால் வாசகர்களின் ஆர்வத்தையும் பூர்த்தி செய்ய முடியும், அதே சமயத்தில் நாம் கையில் எடுத்திருக்கும் மிகப்பெரிய திருப்பத்தை கடைசி வரை அழகாகக் கொண்டு செல்லவும் முடியும்.

6. «ஒரு நடிகையின் டைரி» என்பது “க்ரைம் ஸ்பாட்” என்ற தொடர் கதைத்தொகுப்பின் முதல் கதையாக அமைந்திருக்கிறது. ஒரே கதாநாயகர்களை வைத்துக்கொண்டு பல குற்றக் கதைகளை உருவாக்கும் எண்ணம் எப்படி வந்தது?

திரில்லர் கதைகளின் நாயகன் என்று போற்றப்பட்டும் ராஜேஷ் குமார் சார் படைத்த விவேக் கதாப்பாத்திரம் அவனுக்கென்று ஒரு நண்பர்கள் பட்டாளத்தை வைத்துக்கொண்டு பல குற்றங்களை நிவர்த்தி செய்யும்.

அந்த விவேக் தான் என்னுடைய மார்க்கண்டேயன் கதாப்பாத்திரம் உருவாக முழு உத்வேகம்.

7. ஒரு நடிகையின் வாழ்க்கையைச் சுற்றி மர்மத்தையும் குற்றத்தையும் உருவாக்கும்போது, ஒரு எழுத்தாளராக உங்களுக்கு அதிக சவாலாக இருந்த பகுதி எது?

உண்மையில் ஒரு நடிகையின் டைரி கதை ஒரு உண்மைச் சம்பவத்தின் கருவை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
முழுக்க முழுக்க நம் கற்பனையில் உருவாகும் கதை கருவை விட உண்மை நிகழ்வை வைத்து எழுத ஆரம்பிக்கும் கதை மிகவும் சவாலானது.
இந்த கதையில் எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்ததே பலருக்கும் ஏற்கனவே தெரிந்திருந்த விஷயங்களை புதிதாக விறுவிறுப்பாக என் கதையில் காட்ட முயற்சித்தது தான்.

8. உங்கள் கதைகளில் துப்பறியும் அம்சங்களை எழுதும்போது, முதலில் குற்றத்தின் முடிவைத் தீர்மானித்துவிட்டு கதையைப் பின்னோக்கி கட்டமைப்பீர்களா? அல்லது கதையோடு பயணிக்கும்போதே தீர்வு உருவாகுமா?

திரில்லர் கதைகளைப் பொருத்தவரை கதை எழுதும் முன்பே நான் முடிவு செய்வது இரண்டு விஷயம்.

முதல் ஒன்று குற்றத்திற்கான பின்னணி. கதை எவ்வளவு சுவாரசியமாக நகர்ந்தாலும் நடக்கும் குற்றங்களுக்கு பின்னால் இருக்கும் நிகழ்வு (Flashback) சொதப்பிவிட்டால் கதையே சொதப்பி விட வாய்ப்பு இருக்கிறது அதனால் இதில் அதிக கவனம் செலுத்துவேன்.

இரண்டாவது கதையின் முடிவு. கதையின் வில்லன் அல்லது வில்லிக்கு இதுதான் முடிவு என ஆரம்பத்திலேயே முடிவு செய்தால் தான் அதற்கு ஏற்ப காட்சிகளை அமைக்க முடியும்.

9. «மந்திரக்கற்கள்» போன்ற ஃபேன்டஸி கதைக்குள் செல்லும்போது, நிஜ உலகின் விதிகளிலிருந்து விலகி ஒரு புதிய உலகத்தை உருவாக்க வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட கதைகளில் “உலகத்தை உருவாக்குவது” எவ்வளவு முக்கியமானதாக நீங்கள் நினைக்கிறீர்கள்?

எந்த ஒரு கதையாக இருந்தாலும் கதை நடக்கும் இடத்தில் நாம் அமர்ந்திருந்து கதையை காட்சியாக பார்ப்பது போன்ற ஒரு உணர்வை வாசகர்களுக்கு கொடுத்தால் மட்டும்தான் அந்தக் கதை வெற்றி பெறும் என்பது என்னுடைய கருத்து.

நமக்குள் பல கற்பனைகள் உதிக்கும். அந்தக் கற்பனைகளை நாம் கற்பனை செய்த சின்ன விஷயம் கூட மாறாமல் அப்படியே வாசகர்களுக்கு கடத்திவிடும் திறன் இருந்தால் ஃபேண்டஸி கதைகளின் உலகம் மிக அழகானதாக மாறிவிடும்.

10. காதல் கதைகளுக்கும் மர்ம/த்ரில்லர் கதைகளுக்கும் எழுதும் அணுகுமுறையில் உங்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய வித்தியாசம் என்ன?

காதல் கதைகளைப் பொருத்தவரை ஒரு ஆசிரியராக இருந்து யோசித்து எழுதினால் போதுமானது. அங்கே நம்முடைய விருப்பங்கள், நம்மளுடைய எண்ணங்கள் பிரதானமாக இருப்பதில் பெரிதாக பிரச்சனை வராது. எளிதாக எழுதி விடுவேன்.

ஆனால் மர்ம கதையை எழுதும்போது ஒரு ஆசிரியராக எழுதிவிட்டு, எதிரே ஒரு வாசகராக அமர்ந்து அந்த பகுதியை படித்துப் பார்ப்பது என் வழக்கம்.

மர்ம கதைகளை பொருத்தவரை நேர்த்தி என்பது அதிகம் இருக்க வேண்டும். நம் கண்ணுக்குத் தெரியாத விஷயங்கள் கூட வாசகர்களுக்கு தெரிய வாய்ப்பிருக்கிறது. அப்படி அவர்கள் ஏதேனும் தவறைக் கண்டுபிடித்து சுட்டிக்காட்டும் அளவிற்கு வாய்ப்பளிக்காமல், நம் கதையின் முதல் வாசகராக நாமே இருந்து தவறுகளைக் கண்டுபிடித்து திருத்திக் கொள்வது சாலச்சிறந்தது என்பது என் எண்ணம்.

11. ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கும்போது, அந்தக் கதாபாத்திரத்தின் குணநலன்களைத்தான் முதலில் தீர்மானிப்பீர்களா? அல்லது அந்தக் கதாபாத்திரத்துக்கு ஏற்ற பெயர், தோற்றம், பின்னணி போன்றவை முதலில் உங்கள் மனதில் உருவாகுமா?

முதலில் ஒரு கதாபாத்திரத்தின் குணநலன்களைத் தான் தீர்மானிப்பேன். அதன் பிறகு தான் மற்றவை.

12. உங்கள் கதைகளில் வாசகர்கள் மிகவும் விரும்பிய அல்லது உங்களை ஆச்சரியப்படுத்திய ஒரு கதாபாத்திரம் எது? அந்தக் கதாபாத்திரத்தை உருவாக்கியபோது இப்படியான வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தீர்களா?

மார்க்கண்டேயன் & பரசுராமன்

இவர்கள் இருவரும் தான் என்னுடைய பெரும்பாலான வாசகர்களுக்கு அதிகம் பிடித்த கதாபாத்திரங்கள்.

என்னை ஆச்சரியப்படுத்திய கதாபாத்திரங்கள் என்று நிறைய இருக்கிறது.

சாஸ்தா, அரசு, அகத்தியன், பிரம்மன், கௌதமன், பிரகலாதன் போன்ற மற்ற சில கதாபாத்திரங்களுக்கு நான் எதிர்பார்த்ததை விட பல மடங்கு அன்பும் மரியாதையும் வாசகர்களிடம் இருந்து கிடைத்தது என்னை ஆச்சரியப்படுத்தியது.

13. ஒரு கதையை எழுதிக்கொண்டிருக்கும்போது கதாபாத்திரங்கள் நாம் நினைத்த பாதையைவிட வேறு பாதையில் பயணிப்பது உண்டா? அப்படியொரு அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா?

அது பெரும்பாலும் என்னுடைய மனநிலையை பொறுத்திருக்கிறது.

நான் நல்ல மனநிலையில் இருந்தால் கதாபாத்திரங்கள் என் பேச்சைக் கேட்டு என் இழுப்பிற்கு வரும். நான் சற்று மோசமான மனநிலையில் இருந்தால் நான் கதாபாத்திரங்களின் இழுப்புக்கு சென்று விடுவேன். கதை எப்படி நகர்கிறதோ அப்படி நகர்த்தி முடித்து விடுவேன்.

14. பிரதிலிபி நடத்திய போட்டிகளில் ஐந்து முறை வெற்றி பெற்றிருப்பது உங்கள் எழுத்துப் பயணத்தில் முக்கியமான மைல்கல். அந்தப் போட்டி அனுபவங்கள் உங்கள் எழுத்தில் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்தியதா?

பிரதிலிபி நடத்திய போட்டிகளில்

1)ஒரு நடிகையின் டைரி
2)மந்திரக்கற்கள் (பாகம் 1)
3)உயிரே விலகாதே
4)மந்திரக்கற்கள் (பாகம் 3)
5)பஞ்சவனம் (க்ரைம்ஸ்பாட் 3)

இந்த ஐந்து கதைகள் வெற்றி பெற்று இருக்கிறது. இதில் மூன்று கதைகள் பணப்பரிசு வாங்கிக் கொடுத்திருக்கிறது. மற்ற இரண்டு குறிப்பிடத் தகுந்த படைப்புகள் என்கிற தலைப்பின் கீழ் வந்திருக்கிறது.

இதில் பஞ்சவனம் வெற்றி எனக்கு மிகவும் நெருக்கமானது. வாழ்வின் மிக மோசமான காலகட்டத்தில் எழுத்து உலகில் இனி எனக்கு இடமே இல்லையா என்கிற வருத்தத்தில் நான் இருந்த போது, இல்லை உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று சொல்வது போல மிகப்பெரிய போட்டி ஒன்றில் மூன்றாம் பரிசு பெற்றுக் கொடுத்தது பஞ்சவனம்.

அந்த வெற்றி தான் இன்று வரை பொருளாதார சிக்கல்களுக்கு நடுவில் தொடர்ந்து எழுதக்கூடிய ஒரு உத்வேகத்தை எனக்கு கொடுத்திருக்கிறது.

15. ஒரு கதை எழுதும்போது வாசகர்களின் எதிர்பார்ப்பை மனதில் வைத்துக்கொள்வீர்களா? அல்லது முதலில் உங்களுக்கு திருப்தி தரும் கதையை எழுதிவிட்டு, வாசகர்களின் எதிர்வினையைப் பின்னர் ஏற்றுக்கொள்வீர்களா?

என் கதையின் முதல் வாசகர் எப்போதும் நான் தான். அதனால் எனக்கு முழு திருப்தி ஏற்பட்டால் மட்டும்தான் நான் கதையை வெளியிடவே செய்வேன். அதன் பிறகு வாசகர்கள் என்ன சொல்கிறார்களோ அதை ஏற்றுக் கொள்வேன்.

16. சில எழுத்தாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் அல்லது ஒரு குறிப்பிட்ட களம் மீண்டும் மீண்டும் மனதில் தோன்றும். உங்களுக்கும் அப்படியொரு “மீண்டும் அழைக்கும்” கதாபாத்திரம் அல்லது கதை யோசனை இருக்கிறதா?

மீண்டும் மீண்டும் அழைக்கும் கதாபாத்திரம் என்றால் அது என்னுடைய க்ரைம்ஸ்பாட் நாயகன் மார்க்கண்டேயன் தான். அவனுக்கு எத்தனை கதைகள் எழுதினாலும் போதவே போதாது என்கிற உணர்வு தான் வருகிறது.

17. வாசகர்களின் கருத்துகளில் எந்த வகையான கருத்து ஒரு எழுத்தாளராக உங்களை அதிகமாகத் தொட்டிருக்கிறது?

சமீபத்தில் இலங்கையை சேர்ந்த ஒரு ஒரு பெண் பகிர்ந்த விமர்சனம் என்னுடைய நெஞ்சை உருக்கி விட்டது.

‘உங்களுடைய கதையில் இருந்து வாழ்க்கைப் பாடத்தை கற்றுக்கொள்கிறேன். எது சரி, எது தவறு என்பதை உங்கள் கதைகளின் மூலம் என்னால் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது’ என்று அந்தப் பெண் சொன்ன வார்த்தைகள் என்னுடைய எழுத்து பயணத்திற்கு ஒரு கிரீடம் என்றே கருதுகிறேன்.

இதற்கு இணையான இன்னும் ஒரு விமர்சனம் இருக்கிறது. என்னுடைய சிலந்தி வலைக்குள் ஓர் சித்திரம் என்கிற கதையில், கதாநாயகி அறியாமல் அவள் குளிப்பதை படமெடுத்ததை அறிந்து கலங்கி போய் நிற்கும் நாயகிக்கு அந்த நிகழ்வை அவள் எப்படி கடந்து வர வேண்டும் என்று அவளுடைய ஒரு ஆசிரியர் சொல்லிக் கொடுப்பது போல ஒரு காட்சி வரும்.

அந்தக் காட்சியை குறிப்பிட்டு, “என்னோட பொண்ணு கிட்ட இதைப் படிச்சு காண்பிச்சு எதிர்காலத்தில் உனக்கு இதைப் போல ஏதாவது நடந்தால் இந்த மாதிரி தைரியமா எதிர்கொள்ளனும் என்று சொல்லிக் கொடுத்தேன்” என்று ஒரு பெண் குழந்தையின் அம்மா என்னிடம் சொன்ன போது நான் உணர்ந்த உணர்வை வார்த்தையால் வடிக்கவே முடியாது.

ஒரு எழுத்தாளருக்கு இதை விட பெரிய கவுரவம் இருக்க முடியுமா என்று எனக்கு தெரியவில்லை.

18. ஒரு கதையை பாதியில் நிறுத்திவிட்டு பின்னர் தொடர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அந்தக் கதைக்குள் மீண்டும் மனதளவில் செல்வது கடினமாக இருக்குமா? எழுத்தாளராக அதை எப்படி சமாளிக்கிறீர்கள்?

இரண்டு மூன்று முறை இப்படி நடந்து இருக்கிறது. ஆனால் ஒருமுறை முந்தைய பதிவுகளை எல்லாம் படித்து பார்த்து விட்டால் எளிதாக என்னால் கதைக்குள் செல்ல முடியும். அதில் பெரிதாக சிரமம் என்று எதுவும் இல்லை.

19. “கதைகள் என் கனவு… எழுத்துகள் அதன் உயிர்…” என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். இன்று பல ஆண்டுகள் எழுதிய பிறகும், எழுத்தைப் பற்றிய உங்கள் அந்த முதல் கனவு மாறியிருக்கிறதா?

நிச்சயமாக இல்லை. என்னுடைய பல கனவுகள் நினைவாகாமலேயே போய் இருக்கிறது. அந்த சோகங்கள் ஒவ்வொன்றையும் என்னுடைய கதைகள் கொடுக்கும் வெற்றி அழித்துக் கொண்டே இருக்கிறது. அதனால் கதையும் எழுத்தும் எனக்கு என்றும் உயிர் தான்.

20. கார்த்திகா சக்கரவர்த்தியின் கதைகளை இதுவரை வாசிக்காத ஒருவரிடம், “என் கதைகளை ஒருமுறை வாசித்துப் பாருங்கள்” என்று சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் எந்தக் கதையிலிருந்து அவர்களைத் தொடங்கச் சொல்வீர்கள்? ஏன்?

திரில்லர் பிடிக்கும் என்றால் “க்ரைம்ஸ்பாட்” சீரிஸ் படியுங்கள்.
Fantasy பிடிக்கும் என்றால் மந்திரக்கற்கள் படியுங்கள்.
Feelgood பிடிக்கும் என்றால் என்னுடைய ஆரம்பகால கதைகளை படித்து பாருங்கள்.
அழுத்தமான மனதை விட்டு அகலாத கதாபாத்திரம் கொண்ட கதைகள் வேண்டும் என்றால் என்னுடைய தற்போதைய குடும்பக் கதைகளை படியுங்கள்.

உங்களுக்கு என்ன மாதிரியான கதைகள் விருப்பம் என்றாலும், அந்த வகையில் சில கதையாவது நிச்சயம் என்னிடம் இருக்கும். அதனால் என் கதைகளைப் படித்து பாருங்கள்.

21. இந்த எழுத்துலகப் பயணம் எப்படியிருக்கிறது?

சிரமங்கள் சில இருந்தாலும் பயணம் மிக அழகாகவே இருக்கிறது.

22. வெற்றி, தோல்வி… எப்படி பார்க்கிறீர்கள்?

வெற்றி பெறும் போது நாம் கொண்டாடுவோம். தோல்வி அடையும் போது வெற்றி பெற்றவர்களுக்கு முழு மனதோடு வாழ்த்து சொல்லிவிட்டு அடுத்த போட்டியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைப்பேன்.

23. எழுத வேண்டுமென்ற எண்ணத்தின் விதை எங்கு துளிர்த்தது?

எனக்கு என்ன வரும், எதில் என்னைச் சுற்றி இருப்பவர்களை விட நான் ஒரு படி மேலே வர முடியும், எந்த திறமை என் மனம் மகிழும் அளவிற்கு எனக்கு பாராட்டுகள் வாங்கிக் கொடுக்கும் என்கிற கேள்வி எழுந்த தினம் தான் என்னுடைய எழுத்துப் பயணத்தின் விதை விழுந்த தினம்.

24. வாசகர்களிடம் சொல்ல வேண்டுமென நீங்கள் நினைப்பது?

உங்களுக்கு பிடித்த எழுத்தாளரை தாராளமாகக் கொண்டாடுங்கள். அவர்களை விட்டுக்கொடுக்காமல் சண்டை போடுங்கள் அதில் எல்லாம் எந்த தவறும் கிடையாது.

ஆனால் மனதிற்கு பிடித்தவர் என்கிற ஒரே காரணத்திற்காக உங்களுக்குப் பிடிக்காத விஷயங்களை பிடித்தது போல காட்டிக் கொள்ள வேண்டாம். இது பிடிக்கவில்லை இப்படி எழுத வேண்டாம் என்று தனிப்பட்ட முறையிலாவது ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

செய்வது தவறு என்று தெரிந்தும் செய்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்றாலும் சில எழுத்தாளர்கள் தன்னுடைய உண்மையான வாசகர்களுக்கு இது பிடிக்கவில்லை என்று புரிந்து கொண்டால் எழுத்தில் சின்ன மாற்றத்தை கொண்டு வர வாய்ப்பிருக்கிறது.

25. நீங்கள் விரும்பிய கதாபாத்திரத்தை வாசகர்கள் ஏற்றுக்கொள்ளாத அனுபவம்?

சமீபத்திய என்னுடைய பல குடும்பக்கதைகளின் கதாநாயகர்களை வாசகர்கள் ஏற்றுக் கொள்வதே இல்லை 😃

ஜனா, சாருகேசி, அகல்யா, மோகனன், நரசிம்மன் என பட்டியல் நீள்கிறது.

பெற்ற வெற்றிகள்:

1) ஒரு நடிகையின் டைரி (பிரதிலிபி)
2)மந்திரக்கற்கள் 1 (பிரதிலிபி)
3)பஞ்சவனம் (பிரதிலிபி)
4) உயிரே விலகாதே (பிரதிலிபி)5)மந்திரக்கற்கள் 3 (பிரதிலிபி)

6)சிலந்தி வலைக்குள் ஓர் சித்திரம் (ஜனனி நவீன்- Saaral Novel Competition)

7)காற்றில் வரைந்த காவியக்காதல் (பிரியங்கா முத்துக்குமார் – பிரம்மாஸ்திரம் Competition)

8)இதயத்தில் இடம் இல்லையோ
(பிரியா மெகன் – காதல் காலம் போட்டி)

9) ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் (ஜனனி நவீன்- Saaral Competition)

10) நேசம் வளர்க்க நெஞ்சம் தாராயோ 1 (கவி சந்திரா – வாகை சூடவா Competition)

11) உடைந்த தூரிகை வரைந்த உயிரோவியம் (மல்லிகா மணிவண்ணன் – கதை தொழிற்சாலை Competition)

12) விதிகள் பிழையானால் (ப்ரஷா – நிலாக்கலாம் Competition)

* தோல்வி தருணத்தையும் கடந்த நிலையையும் விருப்பமிருந்தால் பகிர்ந்துக்கொள்ளலாம்.

அன்றில் நாடும் தீந்தென்றல்
நிழலாய் தொடரும் நிழல்
நெஞ்சில் துளி இடமில்லையா
நெஞ்சில் விழுந்த நேசவிதை
உனை மீறிய வரமில்லையே

இந்த ஐந்து கதைகளும் போட்டிக்காக எழுதி வெற்றி வரிசையில் இடம் பெறவில்லை.

இதில் இரண்டு கதைகள் நான் மிகவும் எதிர்பார்த்து வெற்றி பெறவில்லை எனவும் சற்று வருத்தமாக இருந்தது உண்மை. ஆனால் எளிதாக கடந்து வந்து விட்டேன்.

*******************

எங்களுடன் மனம் திறந்து உரையாடி, உங்கள் எழுத்துலக அனுபவங்களையும் சுவாரஸ்யமான பல விஷயங்களையும் பகிர்ந்து கொண்டதற்கு மனமார்ந்த நன்றி, கார்த்திகா சக்கரவர்த்தி அவர்களே!

உங்கள் எழுத்துப் பயணம் இன்னும் பல உயரங்களைத் தொடவும், உங்கள் க்ரைம் நாவல்கள் தொடர்ந்து வாசகர்களை பரபரப்புடனும் ஆவலுடனும் பயணிக்கச் செய்யவும், எண்ணற்ற வெற்றிகளும் விருதுகளும் உங்களைத் தேடி வரவும் எங்களது அன்பான வாழ்த்துகள்!

தொடரட்டும் உங்கள் எழுத்துப் பயணம்…
வெல்லட்டும் உங்கள் எழுத்தின் வலிமை! 🌷

 

நட்புடன் 💞

பிரியதர்ஷினி S

error: Content is protected !!
Scroll to Top