அத்தியாயம் 3
முழுவதும் நரைத்த மீசையை முறுக்கிவிட்டவாறு, திரையில் தோன்றிய முத்து மாணிக்கம், தொண்டையை செருமிட…
“ஐயா” என்று விளித்த தீரனின் குரலில் கரகரப்பு.
அவரும் மீசையை நீவியவாறு…
“ஹ்ம்ம்… ஹ்ம்ம்…” என்க,
“பேசமாட்டிங்களா ஐயா?” என்று வாய்விட்டு முகம் பார்த்து கேட்டுவிட்டான் தீரன்.
எட்டு வருடங்களுக்குப் பின்னர் அவரின் குரல் கேட்கின்றான். தொண்டை அடைக்கும் உணர்வு.
“கலங்க வெக்க பாக்குறியோ?” என்ற பெரியவர்,
“இங்கன வர உத்தேசம் ஏதும் இல்லையாட்டுக்கு?” என்றார்.
“யாரும் என்னை இம்புட்டு வருசத்துல ஒரு நா தேடலையே” என்ற தீரனிடம் மிதமிஞ்சிய ஆதங்கம்.
“கூப்பிட்டுதேன் வரணுமாட்டிக்கு. அம்புட்டுக்கு ஆவாத சனமா நாங்க. இது உம்ம வூடுன்னு நெனப்பு இல்லையாக்கும்?” என்றார்.
“ஐயா…”
பெரியவரின் இவ்வார்த்தைகள் போதுமே! அவன் எதிர்பார்த்தது. மனதின் பெரும் பாரம் விலகி ஓடியது.
பேசாது தவிக்க வைத்தவர்கள், உன்னை பிரித்து பார்த்ததில்லை என்பதை உணர்த்திட, அவனது வலிகள் யாவும் கரைந்த மாயம்.
“இங்கனவே இருந்திருந்தாக்கா இம்புட்டு வருசம் மொவம் பார்த்து விலகி நின்னுருக்க முடியுமாடே? வீம்புக்கு போயி அங்கிட்டே நின்னுட்டியேடே. எங்க கோவத்தையும் இழுத்துப் புடிக்க வச்சிட்டியே” என்றார் முத்து மாணிக்கம். அவரிடமும் ஆசை பேரன் உடனில்லாத வருத்தம்.
“பண்ண தப்புக்கு பெரியவங்க கோவ மொவம் காமிச்சாக்கா வூட்டை வுட்டு போயிடுவியாடே… படிப்பை காரணமா வச்சு போனியே, வந்துப்புடுவ நெனச்சாக்கா… மொத்தமா அங்கிட்டு தங்கிட்ட. வூடும் வாங்கிட்டன்னு தெரிஞ்சதும், நீயி மொத்தமா எங்களைய விலகப் பார்த்துட்டேன்னு கோவம். நாங்கதேன் வீம்பா இருந்துட்டோம். எனக்கு ரெண்டு தலைமுறைக்கு இளையவன் நீயி, இறங்கி வரமாட்டியாடே… நீயில்லாம இந்த கிழவன் இருந்திடுவேன்னு நெனச்சிட்டியாக்கும்?” என்றார். இத்தனை வருடம் தான் மட்டும் பிரிவால் வாடவில்லை, தன்னை நினைத்து அவர்களும் தவித்திருக்கின்றனர் என்பதை பெரியவரின் பேச்சின் மூலம் அறிந்துகொண்ட தீரனுக்கு கண்கள் பனித்து வந்தது.
‘அவர்கள் பேசவில்லை. தன் முகம் பார்க்கவில்லை. தான் அருகில் சென்றாலே விலகிச் செல்கின்றனர் என்று தானும் விலகி வந்திருக்கக் கூடாதோ?’ காலம் கடந்து மனதில் வருந்தினான்.
அந்நேர கோபம். தங்களது பிள்ளை பெரியதாய் செய்துவிட்ட தவறை ஏற்று ஜீரணிக்க முடியாது கோபம் கொண்டு கண்டித்து எட்ட நின்றுவிட்டனர்.
அக்கணம், தானாக நெருங்கிச் செல்ல செல்ல இறங்கி வந்திருப்பார்கள் என்ற புரிதல் அப்போது இல்லாததால், தூரம் சென்றால் கோபம் குறையலாம் எனும் எண்ணத்தில் நாடு கடந்து, கடல் தாண்டி வந்துவிட்டான். அவனின் அந்த எண்ணமே தவறென்று இத்தனை வருடங்களுக்குப் பின்னர், முத்து மாணிக்கத்தின் இன்றைய பேச்சில் அல்லவா தெரிகிறது.
“ஐயா நான்…” அன்று கயலுக்கு நல்லதென்று நினைத்து செய்த ஒன்று குடும்பத்தை முன்னிறுத்தி பார்க்கையில் எத்தனை பெரும் தவறென்றும், கோபம் கொண்டவர்களை உடனிருந்து சமாதானம் செய்யாது, அவர்களின் கோபத்தை மேலும் அதிகரிப்பது போல தூரம் வந்ததும் தவறென்று புரிந்து என்ன பேசுவதென தெரியாது தடுமாறினான்.
“எப்போடே வர?” முத்து மாணிக்கம் எதிர்பார்ப்பாகக் கேட்டிட,
“அடுத்த வாரம் பொண்ணு பார்க்க போவணும். வந்து சேரு” என்று இடைப்புகுந்துக் கூறினார் துளசி.
“ம்மா…” பல வருடங்களுக்குப் பின்னர் இரத்தம் உறைய, இதயம் நின்று துடிக்க, குரல் தவிக்க அழைத்திருந்தான். அன்னையின் குரலாவது கேட்டிடமாட்டோமா என்று தவித்து பலநாள் அவருக்கு அழைத்து, ஏற்கப்படாது நிராகரிக்கப்பட்ட அவனது அழைப்புகளின் வலிகள் இன்று அன்னையின் குரல் கேட்டு ஆற்றுப்பட்டுக்கொண்டன.
“கண்ணுக்கு முன்னுக்க வந்து நின்னு கூப்பிட சொல்லுங்க மாமா” என்று புடவை தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டு நகர்ந்துவிட்டார் துளசி.
“எம்மேல கோவம் போயிருச்சா?” கண்களில் கலங்கி கோர்த்துவிட்ட கண்ணீரோடு தீரன் கேட்க,
“நீயி பண்ணது லேசான காரியமாடே… சுளுவுல மன்னிக்க. எங்க கோவத்தை தாங்கிக்க முடியாம எட்ட போயி எட்டவே நின்னுட்டியே. அப்பனாத்தா கோவமெல்லாம் எம்புட்டு நாளுக்குன்னு கூறு இருக்க வேணாமா?” என்று மாயவேலின் குரல் மட்டும் ஒலித்தது.
“அப்பா!”
“அவனை பேச வேணாம் சொல்லுங்க மாப்பிள்ளை” என்று தனக்கு அருகில் நின்றிருந்த மருமகன் ரத்னவேலிடம் கரகரப்பாக சொல்லிவிட்டு மாயவேல் அங்கிருந்து நகர்ந்திட…
“நீ பார்க்க பொறந்து வளர்ந்த அஞ்சலிக்கே கல்யாண வயசு வந்திட்டு. நீயி எங்க நெனப்பே இல்லாம அங்கிட்டே இருந்துட்டாலும், வயசு போறதுமாடே தெரியல?” எனக் கேட்டார் ராஜவேல்.
“சித்தப்பா…”
“ஒவ்வொருத்தரும் பேச பேச உறவு முறையை சொல்லி நெனவு படுத்திக்கிறியாக்கும். இப்போ நான் பேசவும் சித்தப்பான்னு தழுக்காதடே… உம்ம அழ வச்சு பார்க்கவா பொத்தி வச்சு பாசம் காட்டி வளர்த்தோம்” என்றார் கனகவேல்.
“ச்சூ… செத்த எல்லாரும் ஓரம் போங்க” என்று தன் மக்களை அதட்டி தீரனுக்கு முகம் காட்டிய கொற்றவை, “அங்கிட்டு அவென் ஒத்தையில நிக்கிறான். நெனப்பிருக்கா? இப்படி எல்லாருமா பேசி அவனை வாடவிடாதீ(ய்)ங்க” என்றார்.
“அப்பத்தா…”
இன்று அனைவரும் தன்னிடம் பேசுவார்கள் என்று தீரன் எதிர்பார்க்கவே இல்லை. துளிகூட அவனுக்கு அந்த நம்பிக்கையும் இருந்திருக்கவில்லை.
அவன் செய்த தவறின் ஆதியே கயல் தான். அவளையே ஏற்றுக் கொண்டவர்கள் தன்னை இன்னும் ஒதுக்கி வைத்ததிலேயே அவர்களுக்கு எதிராக தான் எதுவும் செய்யமாட்டேனென்று தன் மீது எத்தனை பெரிய நம்பிக்கையை வைத்திருந்திருப்பார்கள் என்று உணர்ந்து கொண்டவனுக்கு, இனி தன் குடும்பத்துடன் தனக்கு பேசும் வாய்ப்பேயில்லை என்று தான் இந்த நொடி வரை நினைத்திருந்தான்.
ஆனால் இன்று ஒவ்வொருவரும் கோபத்துடன் கூடிய ஆதங்கத்தை வெளிப்படையாகக் காட்டியிருக்க, அவனுக்கு என்னவோ போலானது.
படிப்பிற்காக, வேலைக்காக என்று இங்கேயே தங்கிவிட்டாலும், வருடம் ஒருமுறை தன்னுடைய குடும்பம், தன்னுடைய உறவுகளென்று நேரில் சென்று வந்திருக்க வேண்டுமோ என்று அத்தனை வருந்தினான்.
அதுநாள் வரை அவனிடம் பேசவே ஒதுங்கியவர்கள் இன்று தானாக முன்வந்து ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசிட, நெஞ்சம் நெகிழ்ந்தான்.
இன்னும் இயல்பாய் பேசிடவில்லை என்றாலும், அவனின்றி எத்தனை வருந்துகிறோம் என்பதை ஓரிரு வார்த்தையில் உணர்த்தியிருந்தனர்.
“அப்புறம் என்னடே… எல்லாம் ராசி ஆகியாச்சு. எப்போ வார?” எனக் கேட்டான் அரவிந்த்.
“இப்போ வாரது கஷ்டம் மாமா. புது புராஜெக்ட் சைன் ஆகியிருக்கு. வந்தாலும் பத்து நாளு லீவுதேன் கிடைக்கும். அதுவுமே இத்தனை வருஷம் லீவ் எடுக்காததை காட்டிதேன் வாங்கணும்” என்றான்.
“இங்கிட்டு மொத்தமா வர முடியாதாடே?” அன்பன் கேட்க, “இனியும் என்னத்துக்கு அங்கனவே இருக்கணும்?” எனக் கேட்டான் அறிவன்.
“சட்டுன்னு வர முடியாதுங்களே” என்ற தீரன், “அதுக்கு நிறைய பார்மாலிடிஸ் இருக்கு. ஆதிண்ணே உங்களுக்குமா புரியல?” எனக் கேட்டான்.
“எல்லாருக்கும் புரியுதுடே” என்ற முத்துபிரபா, “ஆனா உனக்கும் வயசு கூடுதே. ஒரு பொண்ணு புடிச்சிருக்கு. இங்கிட்டு எல்லாருக்கும். நீ வந்தீனாக்கா கண்ணாலத்தை முடிச்சுப்புடலாம்” என்றான்.
‘எதே கல்யாணமா?’ தீரன் உள்ளுக்குள் அதிர்ந்தான். வயது முப்பதை தொட்டிருந்தாலும், இதுநாள் வரை தன்னுடைய திருமணமென்றெல்லாம் தீரன் நினைத்தது இல்லை.
மேற்கத்திய கலாச்சாரம் பார்த்து பழகியவனுக்கு, அங்கு தன்னை நெருங்க நினைக்கும் பெண்களை பார்த்தாலே ஒருவித ஒவ்வாமை தான்.
‘அவளுக்கு தான் எத்தனையாவது ஆள்?’ என்று தான் நினைக்கத் தோன்றும்.
தோழமையுடன் பழகியிருக்கிறான். ஆனால் விரல் தீண்டிடக் கூட அனுமதித்தது இல்லை.
உறவை விட்டு விலகியிருக்கும் நேரம் காதலென்று தன் வாழ்வை தானே கையிலெடுத்துக் கொள்ளக்கூடாதென்றும் தெளிவாக இருந்ததால், திருமணம் பற்றிய ஆசைகள் எல்லாம் வயது வந்தும் நெஞ்சத்தில் எழவில்லை.
இப்போது திடீரென்று திருமணத்தைப் பற்றி பேசவும், சிறு திடுக்கிடல். இருப்பினும், நடக்க வேண்டியது நடந்து தானே ஆக வேண்டுமென்ற நிதர்சன ஏற்பு.
“ரொம்ப ரோசிக்கிறமாறி அம்புடுது” என்று முத்துபிரபா வினவ,
“அப்படியில்லிங்கண்ணே” என்ற தீரன், “நீங்க பார்த்து செய்தா எனக்கு சரிதாங்க” என்றான்.
“பொறவு என்னப்பு ரோசிக்கிற?” கொற்றவை கேட்க,
“சட்டுன்னு வர முடியாது அப்பத்தா” என்றான்.
“ரெண்டு வார விடுப்பு கிடைக்காதா சாமி? உன்னைய பார்க்கவாச்சும் வந்து போ ராசா” என்றார்.
“சரிங்க அப்பத்தா. நான் வெவரம் பார்த்து சொல்லுதேன்” என்ற தீரன் தன் அன்னையின் முகம் பார்க்க விழிகளை சுழற்றினான்.
துளசியும், அர்ச்சனாவும் மட்டும் இன்னும் அவனிடம் சாதரணமாக பேசவில்லை.
“சுருக்க வரப்பாரு தீரா. உம்ம கண்ணாலத்துல உடுக்கன்னே பட்டு சீலை எடுத்து வைச்சிருக்கேன்” என்று அஞ்சனை கூட விளையாட்டாய் பேசியிருந்தாள்.
தங்கள் மகளின் கல்யாணத்தை தங்களின் விருப்பமின்றி, அனுமதியின்றி இவன் எப்படி நடத்தலாமென்று அன்று அவ்வளவு குதித்த, மாலதி, கேசவன் கூட… இன்று கயல் ஹரிஷுடன் சந்தோஷமாக வாழும் வாழ்வு கண்டு, தீரன் மீதான கோபமெல்லாம் விடுத்து ஓரிரு வார்த்தை பேசியிருக்க, அர்ச்சனா சுத்தமாக தன் தம்பியின் முகத்தைக் கூட பார்க்கவில்லை.
பெற்றது துளசியாக இருந்தாலும், மடிவிட்டு இறக்காது நெஞ்சம் தாங்கியவள் அர்ச்சனா. தீரன் தன் அக்காவை மணம் முடித்து வைத்து வேறு வீட்டுக்கு அனுப்ப முடியாதென்று சொல்லியிருந்தாலும், ரத்னம் பெண் பார்க்க வரும் முன்னரே…
“என் தம்பி இல்லாம என்னால இருக்க முடியாது. உறவுக்குத்தேன் அவென் என் தம்பி. ஆனால் எனக்கு மொத பிள்ளை அவென்… அவனை வுட்டு வர முடியாது” என்று சொல்லியிருந்தாள். இன்றுவரை ரத்னவேலு தவிர வேறு யாருக்கும் இப்பேச்சு தெரியாது.
தம்பி மீது அர்ச்சனா கொண்ட பாசத்தில் தான் ரத்னவேலு அவள் மீது அன்பு கொண்டதும்.
அப்படிப்பட்டவள் மற்றவர்கள் போன்று முகம் கூட இதுவரை காட்டியதில்லை.
துளசியாவது கோபமாக இரு வார்த்தை உதிர்த்திருந்தார். ஆனால் அர்ச்சனா?
“அக்கா… அக்கா இல்லையா மாமா?” வாய்விட்டு கேட்டுவிட்டான்.
தீரன் கேட்டதும் ரத்னவேல் தன் பக்கவாட்டில் பார்த்தார்.
அவரின் பார்வை வைத்தே அர்ச்சனா அங்கு நிற்கின்றாள் என்பதை உணர்ந்துகொண்ட தீரன்,
“அச்சும்மா” என்றான். தழுதழுப்பாய்.
“அவனை நேர்ல வந்துட்டு பேச சொல்லுங்க” என்ற அர்ச்சனாவின் குரல் மட்டும் அழுகையாய் கேட்டது.
“மாமா…”
“உம்மேல கோவமிருந்த இடத்துல உன்னைய பார்க்கணும் ஏக்கம் தாம்டே இருக்கு இப்போ. நீயி அங்கிட்டே இருந்திடுவியோன்னு அச்சம் வந்திட்டு. சுருக்க வர பாரு” என்று தீரனை வார்த்தையால் தேற்றினார் ரத்னவேல்.
“கூப்பிட்டதும் வர தொலவுலையா இருக்காய்ங்க மாமா. சும்மா ஆளாளுக்கு வா வான்னு நொச்சு பண்ணிக்கிட்டு. எல்லாரும் போங்க” என்ற அஞ்சலி, தொலைக்காட்சியுடன் பொருத்தியிருந்த இணைப்பைத் துண்டித்துவிட்டு அலைபேசியை எடுத்துக்கொண்டு தனியாக வந்திருந்தாள்.
தீரன் மயிலாஞ்சலியை நெகிழ்வாய் கனிந்து பார்த்தான்.
“ச்சூ மாமா என்னதிது?” என்று பனித்துவிட்டிருந்த அவனின் விழிகளைப் பார்த்து மயிலாஞ்சலி வினவினாள்.
“மயிலா குட்டி ரொம்ப பெரிய பொண்ணாகிட்டாங்க. எல்லாரையும் அதட்டுறீங்க” என்று கண்களில் தேங்கிவிட்ட நீருடன், இதழில் உறைந்து விரிந்த புன்னகையோடு சொல்லியிருந்தான்.
“பொறவு… அதட்ட ஆளில்லாமதேன் எல்லா பெருசும் இந்த வயசிலும் வெறப்பா திறியுராய்ங்க” என்ற மயிலாஞ்சலி, “நீங்க ஹேப்பியா மாமா?” எனக் கேட்டாள்.
பற்கள் பளிச்சிட விழிகள் விரித்து முகத்தில் மின்னொளியை காட்டினான்.
“நெனச்சத செய்து காட்டிட்ட” என்றான்.
“என்ன நெனச்சேனாம்?” என்ற மயிலாஞ்சலி, “ஆனாலும் இவீங்கள பேச வைக்க இம்புட்டு வருசம் செண்டிருக்கு” என்றாள். மலைப்பாக.
“எம்புட்டு வருசம் ஆனா என்ன? மயிலா நெனச்சது நடந்தாச்சு… நடத்தியாச்சு” என்றான் தீரன்.
“இருந்தாலும் இந்த பெருசுங்களுக்கு இம்புட்டு வீம்பு ஆவாது மாமா” என்ற மயிலாஞ்சலி, “உங்களுக்கு வயசு முப்பத்தி ஒன்னா, ரெண்டா?” எனக் கேட்டாள்.
“அது என்னத்துக்கு உனக்கு இப்போ?” என்ற தீரன், “இல்லை கண்ணாலம் பத்தி சொன்னதும் உங்க மொவம் ரோசனை ஆச்சே… அதேன், நீங்க இன்னுமாட்டிக்கு வயசுக்கு வரலையோன்னு கேட்டேன்” என்றாள். பொங்கி வந்த சிரிப்பை சிதறவிடாமல்.
“அடிங்க… வாலு. சேட்டை பேச்சு கூடிப்போச்சுத்தா உனக்கு” என்ற தீரன், “அதெல்லாம் திங்க் பண்ணதே இல்லைடா. அதான் சட்டுன்னு ஜெர்க் ஆகிடுச்சு” என்றான்.
“ஹம்ம்” என்ற மயிலாஞ்சலி, “அதை வச்சுதேன் இவீங்களை எல்லாம் பேச வச்சிருக்கேன் மாமா” என்றாள்.
மயிலாஞ்சலி சொல்வது புரியவில்லை அவனுக்கு.
“புரியுற மாதிரி சொல்லு” என்றான்.
“நம்ம மேலத்தெரு கணேசன் மாமா இருக்காய்ங்கல… அவெங்க என்னைய பொண்ணு கேட்டு இருப்பாய்ங்கப் போல. ஐயா படிக்கிற புள்ளைக்கு இப்போ என்னத்துக்கு அவசரமின்னு வேணாமின்னுட்டாய்ங்க… அப்போ அம்மாதேன், என் தம்பி நெனைவு இருக்கா இல்லையான்னு ஆரம்பிக்க, எல்லாருக்குமே உங்களுக்கு கண்ணாலம் பண்ணனும் ஆசை இருந்தும், ஆள் மாத்தி ஆளு என்ன சொல்லுவாய்ங்கன்னு உள்ளுக்குள்ளவே வச்சிருந்திருக்காய்ங்க. அம்மா சொன்னதும் வால் புடிச்ச மாறி எல்லாரும் உங்க கண்ணாலம் பத்தி பேச, நீங்க பேசினா மட்டும் ஆச்சா. அதுக்கு எம் மாமா மொத இங்கிட்டு வரணுன்னு நான் சொன்னேன். விட்டு போனாங்களே வரட்டும் அப்படின்னு ஐயா வெறப்பா சொல்ல, நீங்களா கூப்பிடாம மாமா வரமாட்டாய்ங்க, இம்புட்டு வருஷமா உங்க முன்னுக்க போன் பேசுறேன், யாராச்சும் மாமாகிட்ட வாப்பெட்டி திறக்குறீங்களா? நீங்க கூப்பிடாம மாமா வந்தாக்கா, திரும்ப எல்லா கதையும் முச்சூடும் பேசி அவரை வதைப்பீங்க… மாமாக்கு கண்ணாலம் கட்ட விருப்பமின்னா, நீங்க எல்லாரும் கூப்பிட்டாகணும். நீங்க கூப்பிடாம மாமாவே வாரன்னு சொன்னாலும் நான் விடமாட்டேன் சொன்னேன்” என்று மொத்தமாக எல்லாம் சொல்லி முடித்து மயிலாஞ்சலி மூச்சு வாங்கிட,
“இதை மொத குடி அஞ்சலி” என்று சொம்பு நீரை மயிலாஞ்சலி முன் நீட்டினான் அத்வத்.
“இருங்க மாமா” என்ற அஞ்சலி, அத்வத் கொடுத்த நீரை வாங்கி பருக…
“அஞ்சலி சொன்னது பாதிதேன் சித்தா. உங்களுக்காக நேத்து எல்லார்கிட்டயும் எம்புட்டு பேச்சு. எல்லாருமே ஒரு நிமிசம், நம்ம அஞ்சுவான்னு ஷாக் ஆகிட்டாய்ங்க” என்றான் அத்வத்.
“எக்ஸ்ட்ராவா சொல்லுறான் மாமா. நம்பாதீங்க” என்று மயிலாஞ்சலி இடையில் சொல்ல,
“உங்களுக்கு கண்ணாலம் பண்ணனுன்னு எல்லாரும் நெனச்சாய்ங்கதேன்… ஆனா இப்போ எல்லாரும் உம்ம மேல கோவம் போயி பேச காரணம் அஞ்சலிதேன்” என்றான்.
“அதெல்லாம் ஒன்னுமில்ல மாமா. கோவம் இருக்க அளவுக்கு உங்கமேல பாசமும் அதிகம். கோவத்தை விட்டு இறங்கிவர அவீங்களுக்கு காரணம் தேவைப்பட்டிருக்கு. அம்புட்டுதேன். இப்போ எல்லாரும் பேசிட்டாய்ங்க. மாமா ஹேப்பிதான?” எனக் கேட்டாள் சிரித்த முகமாக.
“ரொம்ப…” என்ற தீரனுக்கு அவளின் மலர்ந்த முகம் அதீத இதத்தைக் கொடுத்தது.
குழந்தையில் அவளை கையில் ஏந்திய நொடிகள் எல்லாம் கண்ணில் வலம் வர, நெஞ்சம் நெகிழ அவளைப் பார்த்தான்.
அவனது அக்கா மகள். அவளுக்கு தாய் மாமன் அவன். மழலையாய், சிறுமியாய் அவன் கை பிடித்து திரிந்தவள், இன்று அவனது பெரும் வலிக்கு நிவாரணியாக இருந்திருக்கிறாள்.
“உன்னோட முயற்சிக்கான பலன் தான் என்னோட இந்த சந்தோஷம்” என்றவன், “உன்னை குட்டியா இந்த கையில் தூக்கி வச்சிருப்பேன். ஆனால் இப்போ மேடம் ரொம்ப பெரிய மனுஷி ஆகிட்டீங்க” என்றான்.
“நீங்க என் கூட மட்டுந்தேன் இல்லை. மத்தபடி உங்களுக்கு தெரியாம என்ன பண்ணியிருக்கேன்” என்ற மயிலாஞ்சலி, “எப்போ வாரீங்க மாமா? பார்த்து எட்டு வருசமாச்சுல. சீக்கிரம் வாங்க மாமா” என்றாள்.
“நாளைக்கு ஆபீஸ் போயிட்டு என்ன நெலவரம் பார்த்திட்டு சொல்றேன்” என்ற தீரன், “மேக்சிமம் டூ வீக்ஸ் லீவ்தேன் கிடைக்கும்” என்றான்.
“நீங்கதேன் ஹெட். உங்களுக்கே லீவு கிடைக்காதா?” எனக் கேட்டான் அத்வத்.
“பெரிய பதவிங்கிறதாலதேன், பொறுப்பு அதிகம். லீவ் லேசில்லை” என்றான்.
“ஹோ…” மயிலாஞ்சலி, அத்வத் ஒருசேர வாயில் வட்டம் போட்டனர்.
“என்னடா… என்ன பிளான் உங்களோடது?” சரியாக அவர்கள் இருவரையும் கணித்துக் கேட்டான்.
“அப்போ பத்து நாளுல உங்களுக்கு கண்ணாலம் பண்ண முடியாதுல?”
“ஆமா!” இருவரையும் தீரன் கூர்ந்து நோக்கினான்.
“பெரிய விசயம் ஒண்ணுமில்லை சித்தப்பு. எனக்கு பரீட்சை முடிஞ்சு வந்தீங்கன்னாக்கா… உம்ம கூட சுத்த வசதிப்படும். அதுதேன், பைய்ய நிதானமா வாங்க” என்றான் அத்வத்.
“அப்போ நான் சீக்கிரம் வாரதில் உங்களுக்கு விருப்பமில்லையாட்டுக்கு?” அவர்கள் சொல்வதன் பொருள் புரிந்தபோதும் வேண்டுமென்றே சீண்டினான்.
“நீங்க இங்கிருந்து போவும் போது வெவரம் தெரியலன்னாலும், உங்கக்கூடவே சுத்தி திரிஞ்ச எனக்கும், இவனுக்கும் நீங்க இல்லாம எம்புட்டு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா மாமா. இப்போ நீங்க திரும்பி வரும்போது, இங்கிருக்கப்போற அம்புட்டு நாளும் உங்கக்கூடவே இருக்கணும் ஆசைப்படுதோம். அம்புட்டுதேன். இதில் உள்குத்தெல்லாம் எதுவுமில்லை” என்றாள் மயிலாஞ்சலி.
அஞ்சலியின் பதிலில் அப்படியொரு நெகிழ்வு தீரன் மனதில்.
அவனுக்கென்று அழுத்தமான உறவு மயிலாஞ்சலி. அவனின் மயிலா.
குடும்பத்தை விட்டு தனித்து இருந்தவனுக்கு, ‘நீ தனியாக இல்லை உன்னோடு நானிருக்கிறேன்… உன் குடும்பத்தின் மொத்தமாக என்பதைப் போன்று நித்தமும் அவனுக்கு தன் அழைப்புகளால் உணர்த்தியவள்,’ இன்று அவனோடு பல வருடங்கள் கழித்து அவனது உறவுகள் பேசியிருந்தாலும், இடைவெளியின் தாக்கமின்றி இயல்பாய் பேசிடக் காரணம் மயிலாஞ்சலி அல்லவா. அவனும் நம்முடன் தான் இருக்கிறான் என்பதை, தன்னிடம் பேசும் அழைப்புகள் வைத்து குடும்பத்தில் தன் இருப்பை வலியுறுத்திக் கொண்டிருந்த அவளின் சிறு செயல் பெரும் காரணமல்லவா!
இன்று அவளால், தீரனின் சந்தோஷம் அவன் அகம் சேர்ந்தது.