அன்பின் அதீதம் 2

அன்பின் அதீதம் 2

திரை நிறைந்திருந்த குடும்பத்தினரின் நடுவில் தானும் ஒருவனாக அமர்ந்திட நெஞ்சம் முட்டிய ஏக்கத்தை அடி மனதில் ஒளித்துக் கொண்டவனாக ரிச்சியின் அருகில் சென்று அமர்ந்தான் தீரன்.

“எட்டு வருஷமாச்சு. நீயாவது வீட்டுக்கு போய்வான்னு விரட்ட வேண்டியது தானே ரிச்சி கண்ணு” என்று சொல்லிக் கொண்டிருந்த துளசி, கப்பென்று தன் பேச்சினை நிறுத்தி வாயினை மூடிக்கொண்டார்.

தீரன் முகம் கண்டதும், பார்வையில் கோபம் காட்டியபோதும், கண்களில் அவனை நிறைத்துக்கொண்டே மூத்த தலைமுறையினர் அனைவரும் எழுந்து திரை விலகிச் சென்றனர்.

அவர்களுக்கும் அவனிடம் பேசிட ஆசைதான். ஆனால் அவன் செய்த தவறு, அதை நியாயப்படுத்தும் விதமாக அனைவரையும் துறந்து தூரம் சென்ற வேதனை அவனை முறைத்துக்கொண்டே இருக்கச் செய்கிறது.

“ஹாய் மாம்ஸ்…”

“சித்தப்பா…”

என்று பிள்ளைகளின் சத்தமும், உற்சாகமும் மனதை கனிய வைத்திட, விரிந்த புன்னகை முகமாக அனைவருக்கும் கை அசைத்தான் தீரன்.

பெரியவர்களின் விலகல் கொடுத்த வாட்டத்தை நொடியில் மறந்திருந்தான்.

“என்னடா எல்லாரும் ஒண்ணா இருக்கீய்ங்க?” என்று கயலின் மகள் சாகித்தியாவும் அவர்களுடன் இருப்பதைக் கண்டு வினவினான் தீரன்.

“நீங்க எப்போ வாறீங்க சித்தப்பா?” என்று ஆதிசக்தியின் மகன் அத்வத் கேட்க, தீரனிடம் மௌனம்.

பெரியவர்கள் திரை விலகிச் சென்றிருந்தாலும், அங்கு தான் தீரனின் முகம் பார்த்து தள்ளி அமர்ந்திருந்தனர். அவன் சிறியவர்களிடம் பேசுவதை கவனித்தவர்களாக. அவனை பார்வையில் நிரப்பி, மனதால் தழுவியவாறு. அவனிடம் பேசிட வார்த்தைகள் துடித்தன.

“ம்க்கும் நீ கேட்டதும் வந்துடகிந்திடப் போறான்” என்ற கொற்றவை, “என் கட்டை சாயுறதுக்குள்ள மொவம் காட்டவாது வந்து போவச்சொல்லு” என்றார்.

தன்னுடைய அப்பத்தாவின் வார்த்தைகள் கேட்ட போதும், தீரன் பேச்சுக்கும் வருகிறேன் என்று சொல்லவில்லை.

அவன் மனதில் அத்தனை வருத்தம் மண்டிக்கிடக்கிறது.

அளவில்லா பாசத்தை கொட்டி வளர்த்தவர்கள், அவன் செய்த தவறுக்காக மொத்தமாக அனைவரும் அவனை விலக்கி வைத்த வலி அவனுள்.

தீரன் செய்தது தவறு தான். இதனை தான் செய்தால் குடும்பம் வேதனைக்கொள்ளும், வருந்துவார்கள், தன்னைத் திட்டி அடிக்கக்கூட செய்வார்கள் என்று எல்லாம் தெரிந்துதான் கயலின் காதலுக்கு துணை நின்று திருமணம் செய்து வைத்தான்.

ஆனால் அவனே நினைத்துப் பார்க்காத விலகலை அவனுக்கு தண்டனையாக அவர்கள் கொடுத்திட, மனதால் முழுதாக சிதைந்து வதை சுமந்தவன், அனைவரின் நிழல் தீண்ட விலகி நிற்கும் வலி சுமக்க முடியாது, மேல் படிப்பைக் காரணம் காட்டி, வெளிநாடு செல்வதாக சொல்லியபோது அவனைத் தடுப்பார் அங்கு யாருமில்லை.

இதே அவன் கயலுக்கு உதவாது இருந்து சாதாரண நிலையில் சொல்லியிருந்தால், தீரனுக்கு இப்படியொரு யோசனை வரும் முன்னரே வேண்டாமென்று மறுத்து அவனை போக அனுமதித்திருக்கவே மாட்டார்கள். ஆனால் அப்போது தீரன் கிளம்பிக் கூடத்தில் நின்றபோது, “பார்த்து போயிட்டு வா” என்று சொல்வோர் யாருமில்லை.

வீட்டு வாயில் தாண்டி சென்றாலே…

“பார்த்து சூதானமா போய் வா சாமி” என்று ஒலிக்கும் பல குரல்களை அன்று அந்த நொடி தீரன் எதிர்பார்த்து ஏமாந்ததன் வலி அதிகம்.

அவர்களின் கோபமெல்லாம் மிஞ்சிப்போனால் ஒரு வாரமென தீரன் நினைத்திருக்க, துளசி கூட மகன் முகத்தை பார்க்க விருப்பம் கொள்ளவில்லை.

அவனை அன்பால் கொண்டாடியவர்களின் பாராமுகம் சகிக்காது கிளம்பியிருந்தான்.

வாயில் தாண்டி சென்றிருந்தவனை,

“மாமா” என்று ஓடி வந்து அவனது கையை பிடித்து நிறுத்தியிருந்தது மயிலாஞ்சலியின் கரம். அவளின் மற்றொரு கரத்தில் குழந்தை ஸ்ருதி.

“எனக்கு யார் சாக்கி வாங்கிக் கொடுப்பாங்க? பாடம் சொல்லித் தருவாங்க? யார் தூங்க வைப்பாங்க?” பதினான்கு வயது மயிலாஞ்சலி கேட்க, துளிர்த்த கண்ணீரை லாவகமாக உள்ளுக்குள் புதைத்துக் கொண்டு, அவள் முன் மண்டியிட்ட தீரன்,

“மயிலா குட்டி நல்லா படிக்கணும். மாமாவும் படிக்கணும்ல. அப்போதேன் மாமாக்கு நல்ல வேலை கிடைக்கும். மயிலா பேபி கேட்கிறதெல்லாம் வாங்கிக்கொடுக்க முடியும்” என்று மயிலாஞ்சலி கன்னம் தட்டினான்.

“இங்கிட்டே படிக்க முடியாதா?” அஞ்சலி அடுத்தக் கேள்வி கேட்க, தீரனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

“நீங்க பொய் சொல்றீங்க. ஐயா, தாத்தா எல்லாரும் உங்களை திட்டினாய்ங்க. அப்பத்தா, ஆத்தா யாரும் உங்ககிட்ட பேசமாட்ராய்ங்க. அம்மாவும் உங்கக்கூட சண்டை போட்டாய்ங்க. ஆதி, அன்பு, அறிவு மாமாலாம் உங்களை முறைச்சாய்ங்க. நான் பார்த்திட்டுதேன் இருந்தேன். அதனாலதேன் என்னைய, அத்து, ஸ்ருதி பாப்பாவை எல்லாம் விட்டுட்டு நீங்கப்போறீய்ங்க” என்றாள். அழுகையில் வெளிவந்த கண்ணீரோடு.

“அதெல்லாம் இல்லைடா. மாமா தப்பு பண்ணிட்டேன். அதான் எல்லாரும் கோவமா இருக்காய்ங்க. சரியாகிப்புடும். இப்போ நீங்கதேன் பெரிய பொண்ணு. தம்பி, பாப்பா எல்லாம் நல்லா பார்த்துக்கணும்” என்று அஞ்சலியின் தலையில் கை வைத்து அழுத்தம் கொடுத்த தீரன் எழுந்து நின்றான்.

“சித்தா” என்று ஆறு வயது அத்வத் ஓடிவந்து அவனின் காலை கட்டிக்கொண்டான்.

“வரும்போது ஐஸ்கிரீம் வாங்கிட்டு வா சித்தா” என்றான். சூழல் புரியாது.

“நிறைய” என்ற தீரன், அஞ்சலியின் கையிலிருந்த இரண்டு வயது ஸ்ருதியை வாங்கி முத்தம் கொடுத்து, அத்வத்தை தூக்கிச் சுற்றி இறக்கினான்.

“உள்ள கூட்டிட்டுப் போ” என்று கீழே வைத்த பையை எடுத்து தோளில் மாட்டியவனை, “தீரா” என்று அழைத்திருந்தார் ரத்னவேல்.

“மாமா” என்ற தீரன் துளிர்த்த கண்ணீரை சுண்டிவிட்டு புன்னகைக்க… அவனது அருகில் வந்து தோள் தட்டினார்.

“வருத்தமிருக்கு. ஆனால் மத்தவைய்ங்க மாதிரி என்னால உன்னைய ஒதுக்கி வைக்க முடியாதே. இந்த வூட்ல எனக்கு உண்டான மொத பந்தம் நீயி. முடியலடே. இங்கிட்டே இருன்னும் சொல்ல முடியல. கோவந்தேன் அதிகமாவும். இந்த மீசைக்காரைய்ங்க கோவம் அம்புட்டு லேசுல போவாதே” என்றார்.

தீரனின் அக்கா அர்ச்சனாவுக்கு திருமணம் ஆகும்போது எட்டு வயது சிறுவன் அவன். ரத்னவேல் பெண் பார்க்க வந்தபோதே… அவனுக்கு தாயாக இருந்த அர்ச்சனாவை பிரிய முடியாது,

“என் அக்காவை நீங்க கட்டிக்கணும் அப்படின்னாக்கா, இங்கிட்டு நம்ம வீட்டுக்கே வந்துப்புடனும். என் அக்கா என்னோடதேன் இருப்பாய்ங்க” என்று அனைவரின் முன்பும் வைத்து ரத்னவேலிடம் தீரன் சொல்ல, சிரிப்போடு தன் பக்கத்தில் தீரனை அமர்த்திக்கொண்ட ரத்னவேலு,

“பிடிச்சிருக்கு. உன்னையும்” என்றிருந்தார்.

தீரன் அவரை தாவி அணைத்திருந்தான். அப்போது உண்டான நெருக்கம் இருவரிடமும். இன்னும் நீள்கிறது.

யாருமற்ற ரத்னவேலு, அர்ச்சனாவை பெண் பார்க்க வந்ததே அவரின் அத்தையின் வற்புறுத்தலில் தான்.

வந்தவர் மூன்று தலைமுறை உறவுகளை ஒரே வீட்டில் பார்த்து, தானும் அதில் ஒருவனாக அப்போதே முடிவெடுத்திருக்க, தீரன் கேட்டதும் மனமார ஒப்புக் கொண்டார்.

பெரியவர்கள் பதறினாலும், ரத்னத்தின் கூற்றை ஏற்று இதுநாள் வரை வீட்டுடன் தங்கியிருக்கும் மாப்பிள்ளை என்று பாராது, தங்களின் மகன் எனும் விதத்திலே மற்ற பிள்ளைகளுக்கு நிகராக நடத்தி வருகின்றனர்.

“பணமெல்லாம் இருக்கா தீரா?” எனக் கேட்டவர், தன் கையில் வைத்திருந்த பணத்தை அவனின் சட்டை பையில் திணித்து,

“விமான நிலையத்தில் மாத்திக்கோடே. சூதானமா இருய்யா. கோவம் இருக்கத்தேன் செய்யும். அதுவா ஒரு நா கொறையும். காத்துதேன் கெடக்கணும்” என்றார்.

“மாமா” என்று தழுதழுத்த தீரன், அஞ்சலி தன்னையே பார்த்திருப்பதைக் கண்டு, தன்னை சரி செய்துகொண்டான்.

“உம்மேல வச்ச பெரும் பாசத்தோட வெளிப்பாடு இந்த கோவம். கயலைவிட நீ பண்ணியதத்தேன் அவீங்கனால தாங்கிக்க முடியலயாட்டுக்கு” என்றார்.

“புரியாம இல்ல மாமா” என்ற தீரன், “கூடவே இருந்தும் அவீய்ங்க முகம் பார்க்காம, பேசாம இருக்கிறது வலியாவுது. அதேன் தள்ளியிருக்கலாம்” என்று வாக்கியத்தை முடிக்காது அவன் நிறுத்த…

“உம் மனசு இந்த மாமனுக்கு புரியாதாடே” என்றார்.

“உங்களை எல்லாம் ரொம்பவே மிஸ் பண்ணுவேன்” என்ற தீரன், ரத்னவேலை இறுக்கமாக அணைத்து விடுத்தான்.

“போனதும் போனு போடு தீரா. காத்துக்கிடப்பேன்” என்று அவனின் கன்னம் வழித்தார்.

“நீங்களாவது பேசினீங்களே” என்ற தீரன், “ராவு ஒரு மணிக்கு சென்னைல ஃபிளைட்டு. நான் வாரேன் மாமா” என்று, தனக்காகக் காத்திருந்த தன் நண்பனின் வண்டியிலேறி அமர்ந்தான்.

“மாமா ஒரு நிமிசம்” என்று உள்ளே ஓடிய மயிலாஞ்சலி, சில நொடிகளில் மூச்சு வாங்க தீரன் முன் வந்து நின்றாள்.

“எப்போவும் வெளிய போனாக்கா அப்பத்தா திருநீறு பூசிவிடுவாய்ங்களே” என்று சாமி அறையிலிருந்து தான் கொண்டுவந்த விபூதியை தீரன் நெற்றியில் தன் பிஞ்சு விரலால் அழுத்தமாக வைத்தாள்.

“படிப்பு முடிச்சு வெரசா வந்துப்புடு மாமா” என்றாள்.

கள்ளம் கபடமில்லாத பால் சிரிப்பில், மென்முறுவலோடு அவளின் கன்னம் தட்டிய தீரன், மெல்லிய தலையசைப்போடு புறப்பட்டிருந்தான்.

தீரன் சென்று மாதங்கள் பல கடந்த பின்னரும் கூட அவனிடம் யாரும் பேச நினைக்கவில்லை.

கயல்விழியைவிட தீரன் மீதுதான் அவர்களுக்கு அதீத கோபம் இருந்தது. கயலின் நேசம் தெரிந்ததும், தங்களிடம் சொல்லாது, அவனாக முன்னின்று ஒன்றை செய்வதா என்பதைவிட, அவன் செய்த காரியம் பெரியதல்லவா? அதுவும், அன்று தான் கயலை பெண் பார்க்க பையன் வீட்டார் வந்திருக்க, அவர்கள் முன்னிலையில் மாலையும் கழுத்துமாக கயலை ஹரிஷ் உடன் கூட்டிக்கொண்டு வந்து நின்றான்.

வந்தவர்கள் இவர்களது குடும்பம் போன்று பெரியது என்பதால், அவர்களின் முன் தலையிறக்கம் என்பதைவிட, அவர்கள் பேசிச் சென்ற வார்த்தைகளில் அத்தனை இறக்கம். ஒன்றும் பேசிட முடியாது தலை கவிழ்ந்து நின்றிருந்த முத்து மாணிக்கத்தின் முகம் காண முடியாது மற்றவர்களும் மௌனித்து நின்ற கணங்கள் யாவும் தீரன் மீது கோபமாக உருமாறியிருந்தது.

வந்தவர்கள் சென்றிட… பெரியவர் தளர்ந்து இருக்கையில் நெஞ்சை பிடித்துக்கொண்டு சரிய, அப்போதுதான் தீரனுக்கு தான் செய்த செயலின் வீரியம் புரிந்தது.

பெண் பார்க்க வருகிறார்கள் என்றதும், கயல் தன் காதலை சொல்லியது தீரனிடம் தான்.

“வூட்ல சொல்வோம்” என்று நகர்ந்தவனை பிடித்து நிறுத்திய கயல்,

“கொன்னேப்புடுவாய்ங்க தீரா” என்று அஞ்சி நடுங்கினாள்.

“அப்புறம் எப்புடி நிப்பாட்டுறது?” என்ற தீரனுக்கும் தன் குடும்பத்தைப் பற்றி நன்கு தெரியும், ‘எப்படியும் கயலின் காதல் விஷயம் தெரிந்தால் குதிக்கத்தான் போகிறார்கள். குதித்து அடங்கி ஏற்றுக்கொள்ளவும் செய்வார்கள் என்பதால், காதலை சொல்லி வாங்கும் திட்டை, கல்யாணம் முடித்து வாங்கிக்கொள்ளலாம். எப்போதென்றாலும் திட்டு வாங்குவது உறுதி’ என நினைத்தவன், வயதுக்கு உரிய ஆர்வக்கோளாறில் திருமணம் செய்து வைத்து அழைத்து வந்துவிட்டான்.

வந்த பின்னரே செய்திருக்கும் தவறு புரிந்தது. அதிலும், கயலிடம்…

“சொல்லியிருக்கலாமே” என்றவர்கள் தீரன் முகம் கூட காணவில்லை.

“காதலுக்கு நாங்க எதிரியில்லை. சொல்லியிருந்தாக்கா, விசாரிச்சு அடுத்து என்னன்னு பார்த்திருப்போம்” என்று ஆதங்கப்பட்ட மாயவேல் கூட மகனின் முகம் பாராது சென்றிருக்க, வீட்டின் மூத்த பெண்கள் யாவரும் ஒரு வார்த்தை பேசவில்லை.

தீரனாக… அன்னை, சித்தி, அத்தை, அண்ணிகள் என்று அருகில் சென்று பேச முயல, முகத்தை திருப்பிக்கொண்டு சென்றனர். பெரியவருக்கு நடந்த நிகழ்வால் ஏற்பட்டிருந்த நெஞ்சுவலி அனைவரையும் தீரனிடமிருந்து அவனது செயலால் தானே என்று, எட்ட நிற்க வைத்திட்டது.

கொற்றவை அருகில் செல்ல,

“எம் புருஷன் உசுரை காவு வாங்க பார்த்துட்டியேடே” என்று அவர் கண்ணீர் சிந்தியதில் மொத்தமாக துவண்டு விட்டான்.

கயல் தன்னால் தான் என்று வருந்திட, அவளை வருத்த மனமின்றி…

“நான் கொஞ்சம் ரோசிச்சு இருக்கணும்” என்றவன், “உங்க வூட்ல எப்படி பாஸ்… அங்கேயும் இப்படித்தானா?” எனக் கேட்டான். ஹரிஷிடம்.

“எங்க வூட்ல ஓகே தான். கயலுக்காகத்தேன், பொண்ணு பார்க்க வராய்ங்கன்னு அழுததும், நீங்களும் இதுதேன் வழின்னு சொன்னதும் தாலி கட்டிப்புட்டேன்” என்ற ஹரிஷ், அப்போதே கயலை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று, “இங்கிட்டு எல்லாம் ஓகே தான்” என்று தீரனுக்கு அழைத்து சொல்ல சற்று ஆசுவாசம் கொண்ட தீரன், கயலுக்கு வீட்டு ஆட்கள் துணையும் இருக்கிறது என்பதை காட்டுவதற்காக அடுத்தநாள் ஹரிஷ் வீட்டிற்குச்சென்று கயலுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுத்துவிட்டு வர, வீட்டில் உள்ளவர்களின் கோபம் பன் மடங்காகியது.

“நீ அடங்கவே மாட்டியாடே?” ஆதிசக்தி தன் தம்பியை திட்டிட,

“பெரிய மனுஷன்… பெரிய பெரிய காரியமெல்லாம் இஷ்டப்படிக்கு செய்றீரு. நம்ம ஆக்களோட வேதனை புரியுதாடே உமக்கு” என்று கேட்டிருந்தான் அன்பன்.

“அண்ணே கயல் பாவம்” என்று பேச முயன்ற தீரனை கைக்காட்டி தடுத்த முத்துபிரபா, “உன்னைய இன்னும் சின்னப் பிள்ளைன்னு நினைச்சிட்டு இருந்தோம்டே” என்றான்.

“சாரிண்ணே.”

“போடே” என்ற அறிவன், “ஐயா சோர்ந்து பார்த்திருக்கியா? இப்போ அம்புட்டுக்கு நிலைக்குலைஞ்சு கிடக்காரு” என்றான்.

தீரன் வயது ஆர்வத்தில் செய்து வைத்து விட்டு அதைப்பற்றி விளக்கம் கொடுக்கக்கூட தெரியாது திணறி பார்த்தான் அனைவரையும்.

அந்த திணறல் இன்று இந்த நொடியும் அவனது முகத்தில்.

வருடங்கள் பல கடந்த பின்பும், அந்த நிகழ்வை கடந்து வருவோர் யாருமில்லை.

தீரன் நியூயார்க் வந்த பின்னர் அவனுடன் தொடர்பிலிருந்தது இரண்டு பேர் மட்டும் தான். ரத்னவேல், மயிலாஞ்சலி.

நாட்கள் செல்ல செல்ல மயிலாஞ்சலி வாயிலாக அவ்வீட்டு குழந்தைகள் மட்டும் ஒவ்வொருவராக தீரனிடம் பேசத் துவங்கி இருந்தனர்.

தீரனின் தலைமுறையினர் கூட பெரியவர்களின் பேச்சுக்கு மதிப்பளித்து அவனுடன் இதுவரை பேசவில்லை. பேச வேண்டுமென்ற ஆசை மட்டும் உள்ளது. மயிலாஞ்சலி காணொளி அழைப்பு விடுத்திடும்போது, திரை நிறைக்கும் தம்பியின் முகத்தை பார்த்துக்கொள்வர்.

அக்கால மனிதர்களான மூத்தவர்களுக்கு தீரன் மீது இப்போதும் அதீத அன்பு உள்ளது. இருப்பினும் அவனிடம் இயல்பாக பேசிட முடியவில்லை. முக்கிய காரணம் தீரன் மீது அவர்கள் வைத்திருந்த, வைத்திருக்கும் அளவற்ற அன்பே! அன்பு தாண்டி தங்களை மீறி செய்துவிட்டான் எனும் வருத்தம்.

அவர்களின் விலகலை உடனிருந்து தாங்கிக்கொள்ள முடியவில்லையென தூரம் சென்று தூரமாகியிருந்தான்.

படிப்பு முடிந்ததும் தீரன் தனக்கு இங்கேயே வேலை கிடைத்து விட்டதாக சொல்ல,

“இங்க வரக்கூடாதுன்னு இருக்கமாட்டிக்கு அம்புடுது” என்ற ரத்னவேலுவின் பேச்சை சிரிப்போடு ஒதுக்கிவிட்டான் தீரன்.

உடனிருந்து வேதனைப்படுவதற்கு எட்டி நின்றுவிடலாம் என்பது தீரனின் எண்ணம்.

தவறும் செய்துவிட்டு, தங்களை விட்டும் சென்றுவிட்டான் எனும் தீரா கோபம் உறவுகளுக்கு.

தீரனின் வேலை விடயம் ரத்னவேலு சொல்லி மயிலாஞ்சலி மூலம் அறிந்த பெரியவர்கள் கோபம் மேலும் கூடியது.

“அவீய்ங்க இஷ்டப்படிக்கு செய்யுறது இதுவொன்னும் புதுசில்லையே” என்ற மாயவேலுக்கு மகன் மீண்டும் மீண்டும் தங்களை மீறி செய்யும் முடிவுகளில் வருந்தி வேதனை கொண்டார்.

பேசாமலிருந்தால் ஓடி வந்திடுவான் என்று நினைத்திருக்க,

பேசவே யோசிப்பவர்களுடன் எப்படி ஒன்றாக வேதனையோடு வலம் வருவதென்று தீரன் முற்றும் முழுதாக நியூயார்க் வாசியாக மாறியிருந்தான்.

வருடங்கள் ஓடிட, அப்போது புரியாத யாவும் அஞ்சலிக்கு புரிந்திட, சிறு வயதில் தன் மாமனின் அன்பில் திளைத்தவள், தற்போதும் தீரன் உடனில்லாவிட்டாலும், அவளின் ஒவ்வொரு தேவைக்கும் வேண்டியவற்றை சரியாக ரத்னவேலுவின் மூலம் செய்து கொண்டிருப்பவனின் அன்பில் கரைந்து கொண்டிருப்பவளுக்கு எப்படியாவது தன்னுடைய குடும்பத்தோடு தீரனை ஒன்று சேர்க்க வேண்டுமென்ற எண்ணம் தீவிரம் கொள்ள…

தீரனிடம் பேசும் காணொளி அழைப்புகளை வேண்டுமென்றே தொலைக்காட்சியுடன் இணைத்து பேசத் துவங்கியிருந்தாள். நடு கூடத்தில் இருவரின் பேச்சுமிருக்க ஒவ்வொருவராக இணைந்து இப்போது தீரனின் முகம் காணும் அளவில் பக்கம் வரவழைத்திருந்தாள்.

உன்னிடம் பேசவில்லையே தவிர்த்து உன்னை நாங்கள் முழுதாக ஒதுக்கவில்லை என்பதை அவனின் முகம் பார்ப்பதில் உணர்த்தி இருந்தனர்.

தீரனுக்கு இதுவே போதுமென்ற எண்ணம் தான். இருப்பினும் இத்தனை வருடங்கள் சென்ற பின்பும், தன்னை அவர்களாக வாவென அழைக்காத வருத்தம் அவனுள். அந்த வருத்தமே பெரும் தடை விதித்து அவனை இந்தியாவிற்கு வரவிடாது கட்டி வைத்திருக்கிறது.

“சாப்டிங்களா சித்தப்பா?” ஸ்ருதி கேட்க,

“பட்டுக்குட்டி” என்று ஆரம்பித்த தீரன், ஒவ்வொரு குட்டீஸ் உடனும் சிரித்து பேசி முடித்து மயிலாஞ்சலியிடம் வந்து நின்றான்.

“எக்ஸாம் எப்போ முடியுதுடா?” தீரன் கேட்க, “நெக்ஸ்ட் வீக் மாமா” என்ற மயிலாஞ்சலி, “நானும் அங்கிட்டு வரலாம் இருக்கேன்” என்றாள்.

மயிலாஞ்சலி சுற்றிப் பார்க்க வரும் எண்ணத்தில் குறிப்பிடுகிறாள் என்று நினைத்த தீரனும்,

“வாயேன்… யார் வேணாம் சொன்னாய்ங்க” என்றான்.

“அப்படியே உங்க ஆபிஸில் ஒரு வேலை வாங்கிக் கொடுத்துப்புடுங்க… உங்களோடவே இருந்திடுறேன்” என்றாள்.

“சித்தப்பாவை கட்டிக்கோ அஞ்சலி. வாழ்க்கை முச்சூடும் அவரோடதேன்” என்று அத்வத் கிண்டல் செய்ய,

“என்ன பேச்சு இது அத்து?” என்று வேகமாக அதட்டியிருந்தான் தீரன்.

“ச்சூ மாமா அவென் சும்மா கோட்டிக்கு சொன்னானாட்டிக்கு” என்ற மயிலாஞ்சலி, “உங்களுக்கு கல்யாணப் பேச்சு பேசுறாய்ங்க. அதுக்குத்தேன் கயல் அக்கா எல்லாரும் வந்திருக்காய்ங்க” என்றாள்.

“நான் அங்கிட்டு இல்லாமலே கல்யாணமாம்மா?”

“அதை சொல்லத்தேன் இந்த போன்” என்று திரையில் முகம் காட்டிய ஆதிசக்தியை பார்த்ததும் தீரனின் நெஞ்சம் துடித்தது.,

எத்தனை வருடங்களுக்குப் பின்னர் தன்னுடைய உடன் பிறப்பின் முகம் காண்கிறான்.

“அண்ணே!”

தம்பியின் தழுதழுப்பில், தொண்டை கமற,

“ஐயா வாராங்க” என்று விலகி நின்றான் ஆதிசக்தி.

முழுதும் நரைத்த மீசையை முறுக்கிவிட்டவாறு, திரையில் தோன்றியவர், தொண்டையை செறுமிட…

“ஐயா” என்று விளித்த தீரனின் குரலில் கரகரப்பு.

error: Content is protected !!
Scroll to Top