அன்பின் அதீதம் 1
நியூயார்க் நகரம்.
ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கில் அட்லாண்டிக் கரையோரம் பெரிய இயற்கை துறைமுகமாக அமைந்துள்ளது இந்நகரம்.
புரூக்ளின் மாவட்டத்தில் பெரும் கேட்டட் கம்யூனிட்டி வளாகத்தில் உயர்ந்த கட்டிடத்தின் இருபத்தி நான்காவது தளத்தில், நான்கு படுக்கையறை கொண்ட வீட்டு எண் தொண்ணூற்றி ஆறில் தொலைக்காட்சி மற்றும் இசைத்தட்டின் பாடலும், வழக்கத்திற்கு மாறாக அதிக டெசிபலில் ஒலித்துக் கொண்டிருந்தது.
கிட்டத்தட்ட அந்த வீடு சத்தத்தில் அதிர்ந்து கொண்டிருந்தது.
இரவு கேளிக்கை விருந்து நடந்ததற்கு ஆதாரமாகக் கூடத்தில் ஆங்காங்கே மது குடுவைகளும், கண்ணாடி குவளைகளும் உருண்டு கிடக்க… பலதரப்பட்ட உணவுப் பொருட்கள் உண்டதற்கு மிட்சமாய் தரை முழுக்க சிதறிக் கிடந்தன.
ஆங்காங்கே நீள்விருக்கை, தரை, தரை விரிப்பு என்று ஆண், பெண் பேதமில்லாது அரை மயக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தனர்.
திறந்திருந்த சாளரம் வழி சூரியனின் கதிர் சுள்ளென்று முகத்தில் அறைய மெதுவாக கண் திறந்தான் ரிச்சர்ட். கண்களை கசக்கி இடத்தை பார்த்தவன், இருக்கும் நிலை கண்டு நெஞ்சில் கை வைத்து பதறி எழுந்தான்.
(ஆங்கில உரையாடல்கள் யாவும் தமிழில்.)
“அய்யோ வந்தா கொன்னுப் போட்டுடுவானே” என்று வாய்விட்டு அலறிய ரிச்சர்ட்,
“இதுங்க இருக்க நிலைக்கு நாளைக்கு விடிஞ்சாக் கூட எழாதுங்க போலவே. எண்டே குருவாயூரப்பா… ஓ ஜீசஸ்” என்று புலம்பினான்.
அடுத்த கணம் நண்பனின் கோப முகம் கண்முன் வர, சற்றும் யோசியாது சமையலறை நுழைந்து பெரிய பாத்திரம் முழுக்க நீர் நிரப்பி வந்தவன், அங்கே படுத்திருந்த தன் நண்பர்கள் அனைவர் மீதும் பாரபட்சமின்றி ஊற்றினான்.
குளிர்ந்த நீர் உடலில் பட்டதும், அனைவரும் அதிர்ந்து எழுந்தனர். கையில் நீர் பாத்திரத்துடன் நின்றிருந்த ரிச்சர்ட்டை பார்த்து ஒருசேர முறைத்தனர்.
“என்னை முறைக்கிறது அப்புறம்” என்ற ரிச்சர்ட், “விடிஞ்சிருச்சுடா. அவன் வந்திடுவான்” என்றான்.
“அதுக்குள்ளவா?” என்று அலறியவர்கள், தத்தம் உடைமைகளை எடுத்துக்கொண்டு வெளியேற,
“இதெல்லாம் யார் களீன் பண்றது” எனக் கேட்டான் ரிச்சர்ட்.
“நீதான்.” அனைவரும் ஒன்றுபோல கூற, “இனி பார்ட்டி வைக்கணும் கேட்டு வாங்க. அப்புறம் கவனிச்சிக்கிறேன்” என்று கோபமாக பேசியதோடு, அனைத்தையும் துரித கதியில் சுத்தம் செய்யத் தொடங்கினான்.
ஒரு மணி நேரம் கடந்திருக்க, சிறு கரை கூட இல்லாது வீட்டை சுத்தம் செய்து முடித்து, இடுப்பில் கை வைத்து அவன் நிமிர்ந்த வேளையில்,
“ஹாய் ரிச்சி” என்ற கொஞ்சல் அழைப்பு, வரவேற்பறைக்கு வலது பக்கம் உள்ளே தள்ளி தனித்திருந்த அறை பக்கமிருந்து வர, திரும்பிப் பார்த்த ரிச்சர்ட் உச்சக்கட்ட அதிர்வுக்கு ஆளானான்.
“அடி ஆத்தீ… எண்ட கர்த்தாவே” நெஞ்சில் கை வைத்தவன்,
“அவன் ரூமில் என்னடி பன்ற நீ” எனக் கேட்டு முடிக்கும் முன், அவளுக்கு பின்னே வெறும் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து வந்து நின்றான் ஆடவன் ஒருவன்.
பார்த்ததும் இருவரும் அங்கென்ன செய்திருப்பார்கள் என்று விளங்கிக்கொண்டான் ரிச்சி.
“என்ன காரியம் பண்ணியிருக்கீங்க?” அப்படியொரு பதற்றம் ரிச்சியிடம்.
“பார்ட்டி ஆரம்பிக்கும் முன்னவே, அவன் ரூம் பக்கம் போகக்கூடாது சொன்னேன் தானே?” என்றவன், “இத்தனை வருஷமா அவனோட பழகுறீங்க. அவனைப்பற்றித் தெரியும் தானே? இது மட்டும் அவனுக்குத் தெரிஞ்சுது என்னை கொலையே பண்ணிடுவான்” என்ற ரிச்சி தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான்.
ரிச்சி இந்தியாவில் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவன். அவன் இங்கு வேலைக்கென்று வந்து நான்கு வருடங்கள் ஆகின்றன. அவனுக்கு இங்கு நிலவும் மேற்கத்திய நாகரீகம் பழக்கமென்றாலும், நண்பனின் கட்டுப்பாட்டால் அதற்கு பழகாது, குணம் மாறாது எல்லைக்குள் நின்றுகொள்வான்.
என்ன தான் அத்தகைய சூழல் பொருந்திய நண்பர்கள் பழக்கம் அதிகமென்றாலும், ஒரு நாளும் அவர்களின் பழக்கத்திற்கு அடிமையாகியது இல்லை. அதற்கு பெரும் காரணம் அவன்.
ரிச்சி இதுபோன்ற இரவு நேர விருந்து சமயங்களில் குடிக்க மட்டும் செய்வான். அவனின் அதிகபட்ச வரம்புமீறல் மதுபானம் மட்டுமே.
அங்கு இருப்பவர்கள் எல்லாம் அமெரிக்க கலாச்சாரத்தில் ஊறியவர்கள். அவர்களுக்கு அனைவர் முன்பு கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது, அதற்கும் மேல் செல்வதெல்லாம் சாதாரணம்.
ஆனால் இந்தியர்களானா ரிச்சிக்கும், அதிலும் குறிப்பாக இந்தியாவில் தமிழ்நாட்டைச்
சேர்ந்த அவனது நண்பனுக்கும் இவையெல்லாம் பார்த்து பழக்கமென்றாலும் மனதோடு ஒப்பாதவை. அதிலும் அவனுக்கு அறவே பிடிக்காத செயல்கள் இவை.
அவனது சமூக நாகரிகம் எல்லாம், உடல் தீண்டா அணைப்பு, கன்னம் உரசா வரவேற்பு. அவ்வளவே!
அவன் நாகரீகத்தை விரும்புபவனாக இருந்தாலும், ஒருவனுக்கு ஒருத்தி, அந்தரங்கம் புனிதமானது, அது தனியுரிமை கொண்டது. இப்படி பார்க்கும் இடங்களில் எல்லாம் கூடி களிப்பது கிடையாது என்ற ஸ்திரமான எண்ணம் உடையவன்.
அன்று அந்த வீட்டிலிருந்த அனைவருமே அவனது நண்பர்களாகவே இருந்தாலும், இதுபோன்ற அவர்களின் நிகழ்வுகளில் கலந்துகொள்ள மாட்டான்.
மாதம் ஒருமுறை ஒருவர் வீட்டில் கூடிடுவர். அப்படி தன்னுடைய சுழற்சி வரும் நேரம், ரிச்சியிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, அதே கம்யூனிட்டியில் இருக்கும் விருந்தினர் இல்லத்தில் சென்று தங்கிக்கொள்வான் அவன்.
அப்படிப்பட்டவன் அறையில் இவர்கள் அவனைப்பற்றித் தெரிந்தும் செய்து வைத்திருக்கும் வேலை, ரிச்சிக்கு நெஞ்சுவலியை கொடுத்தது.
“ஹேய் ரிச்சி என்ன அப்செட் ஆகிட்ட?” அவனின் தோளில் கை வைத்தாள் லிண்டா.
“சாரி மேன். நேத்து தான் புரபோஸ் பண்ணாள். கன்ட்ரோல் பண்ண முடியல” என்றான் டாம்பெர்.
“உனக்கு இவள் எத்தனாவது ஆளுடா?” ஆயாசமாகக் கேட்டான் ரிச்சி.
“ஷீ இஸ் மை செவன்த் கேர்ள் பிரண்ட் டா” என்ற டாம்பெர்ரை வெட்டவா என்கிற ரீதியில் பார்த்தான் ரிச்சி.
“வைய் மேன்… யூ ஆர் டூ ஆங்கர்?” என்ற டாம், “இதெல்லாம் சாதாரணம். உனக்குத் தெரியுமே” என்று சர்வ சாதாரணமாக தோள் குலுக்கினான்.
“அடச்சீ… ரெண்டு பேரும் முதலில் கிளம்புங்க” என்று கத்திய ரிச்சி, நண்பன் வருவதற்குள் அவனது அறையை சுத்தம் செய்ய முனைந்தான்.
எல்லாம் முடித்து ரிச்சி இருக்கையில் தொப்பென்று அமர, காலிங்பெல் அடித்தது.
வேகமாக எழுந்து அவசரமாக வீட்டைச் சுற்றி ஒரு பார்வை பார்த்த ரிச்சி, கதவினைத் திறந்தான்.
உடற்பயிற்சி செய்து முடித்து வந்திருப்பான் போலும். அணிந்திருந்த டி சர்ட் வியர்வையில் நனைந்திருக்க வீட்டிற்குள் நுழைந்தான் அதிதீரன்.
தீரனின் புஜம் உருண்டு திரண்டு வெளி வந்திருக்க…
“வெயிட் லிஃப்ட் பண்ணியா மச்சான்?” என்று கண்களை உருட்டிக் கேட்டான் ரிச்சி.
“நீ சர்ச் போகல?” என்று ரிச்சியிடம் கேட்ட தீரனின் கண்கள், தன் வீட்டின் ஒவ்வொரு இண்டு இடுக்கையும் கூர்ந்து ஆராய்ந்தன.
ரிச்சிக்கு பயந்து வந்தது.
“இன்னதேக்கு (இன்றைக்கு) இவன்கிட்டேர்ந்து என்னை காப்பாத்தி விடுங்க, எண்ட கர்த்தாவே, பகவதி அம்மே, குருவாயூரப்பா” என்று அவசரமாக அவனறிந்த அனைத்து கடவுள்களுக்கும் வேண்டுதல் வைத்தான் ரிச்சர்ட்.
“காட்ஸ் கண்பியூஸ் ஆகப்போறாங்கடா. தமிழ், மலையாளம் கலந்து வேண்டுற” என்று ரிச்சியின் தோளில் அடித்தான் தீரன்.
“எப்போ கிளம்பினாங்க எல்லாரும்?” என்ற தீரன், பார்வையில் கடுமை பரவியது.
“இப்போ… கொஞ்சம் முன்ன” என்று திணறிய ரிச்சி, தீரனின் கோபப்பார்வையில் என்னவென்று பார்க்க, இருக்கையின் முனையில், மது பாட்டிலின் லேபிள் ஒட்டியிருந்தது.
‘இது எவன் பார்த்த வேலைன்னு தெரியலையே’ என நினைத்த ரிச்சி,
“சாரி” என்று முடிக்கும் முன், “கிளியர் திஸ்” என்று தனதறைக்குள் நுழைந்திருந்தான் தீரன்.
சென்ற வேகத்திற்கு வெளியில் வந்த தீரன், “என் ரூம் யார் யூஸ் பண்ணது?” என அதீத கோபத்தோடு வினவினான்.
“அது… அது வந்து… சாரிடா. எனக்கும் தெரியல” என்றான் ரிச்சி. நண்பனின் முகம் பார்க்கவே அஞ்சி.
“உனக்கு தெரியலன்னா என்ன அர்த்தம் ரிச்சி? அப்போ நீ உன் கன்ட்ரோல் லாஸ் ஆகும் அளவுக்கு ட்ரிங்க்ஸ் பண்ணியிருக்க” என்று காட்டமானான்.
ரிச்சியின் தலை தானாக கவிழ்ந்தது.
“லுக் ரிச்சி… இங்க இந்த கல்ச்சர் சாதாரணமா இருக்கலாம். அதை நான் தப்பு சொல்லமாட்டேன். ஆனால் எனக்கு அப்படியில்லை. நான் வளர்ந்த வாழ்ந்த சூழல் வேற. என்னோட குணம் வேற. இங்கிருக்கவங்களை கொண்டு வந்து நம்ம கலாச்சாரத்தில் இருன்னு சொன்னா எப்படி முடியாதோ அதே தான் எனக்கும். நான் வேலைக்காக மட்டும் தான் இங்கிருக்கேன்” என்றவனிடம் சிறு இடைவெளி.
‘வேலைக்காக மட்டுமா?’ எனக் கேட்டு கேலி செய்தது அவனது மனம்.
அதிதீரன். தமிழகத்தில் மதுரை அருகே அவனது கிராமம். பெரும் தலைக்கட்டு அவனது குடும்பம். எப்போதும் வீடு நிறைந்திருக்கும் மனிதர்கள்.
வீட்டின் கடைக்குட்டி அவன். அவனுக்கு முன்பு நான்கு அண்ணன்கள், இரண்டு அக்காக்கள். அதுபோக இரண்டு சித்தப்பாக்கள். ஒரு அத்தை. அவனது தந்தை தான் வீட்டின் மூத்தவர்.
தாத்தா முத்து மாணிக்கம். அப்பத்தா கொற்றவை. தந்தை மாயவேல். தாய் துளசி.
உடன் பிறந்தவர்கள் ஒரு அக்கா, ஒரு அண்ணன்.
மூத்தவள் அர்ச்சனா தேவி. அர்ச்சனாவின் கணவர் ரத்னவேல். ஒரு மகள், மயிலாஞ்சலி. நான்காவது தலைமுறையில் மூத்தவள் இவள் தான்.
இரண்டாமவன் ஆதிசக்தி. மனைவி தேவதாரணி. அவர்களின் மகவு பதினான்கு வயது அத்வத்.
முதல் சித்தப்பா ராஜவேல். மனைவி ராஜாத்தி. இரு மகன்கள்… அன்பன், அறிவன். அன்பனின் மனைவி காயத்ரி. மகவு எட்டு வயது ஸ்வாதி. அறிவனின் மனைவி வித்யா. மகவு ஆறு வயது அர்ஜூன்.
இரண்டாவது சித்தப்பா கனகவேல். மனைவி கல்யாணி. ஆண், பெண் என இரு பிள்ளைகள். மூத்தவன் முத்துபிரபா. மனைவி கலாவதி. அவர்களின் மகவு பத்து வயது ஸ்ருதி. இரண்டாவது அஞ்சனை தேவி. அஞ்சனையின் கணவர் குமார். இவர்களுக்கு ஒரு மகன். பனிரெண்டு வயது அமர்.
முத்துபிரபா, அன்பன் மற்றும் அறிவை விட பெரியவன். அர்ச்சனாவுக்கு இளையவன்.
தந்தை மாயவேலுக்கு அடுத்து ஒரு பெண். தீரனின் அத்தை மாலதி. மாலதிக்கு அடுத்து தான், ராஜவேல், கனகவேல். மாலதியின் கணவர் கேசவன். மகன் அரவிந்த், மகள் கயல்விழி. அரவிந்தின் மனைவி ஆதிரா. இவர்களுக்கு தீபன், தீபிகா என்று இரண்டு மழலைச் செல்வங்கள். அரவிந்த், ஆதிசக்தி சமவயது உடையவர்கள்.
கயல்விழி, தீரனுக்கும் நான்கு வருடம் மூத்தவள்.
தீரனின் உதயம் குடும்பத்தில் எதிர்பாராதது. ஆதலால் தீரனுக்கும் மூத்தவள் அர்ச்சனாவுக்கும் இடையே அதீத வயது வித்தியாசம். அர்ச்சனா வயதிற்கு வந்த பின்னர் தான் தீரன் பிறந்திருந்தான்.
மூன்றாம் தலைமுறையில் அனைவருக்கும் கடைக்குட்டி அவன். அதனால் அதீத செல்லமும். வீட்டில் அனைவருக்கும் தீரன் என்றாள் கொள்ளைப்பாசம்.
ஆதி, பிரபா, அன்பு, அறிவு, அர்ச்சனா, அஞ்சனை, அரவிந்த், முத்துபிரபா இவர்கள் எல்லாம் தங்களின் பிள்ளைகளை கையில் ஏந்துவதற்கு முன்பு பிள்ளையாக மடி தாங்கியது அதிதீரன். இவர்களுக்கு அவன் உறவளவில் சகோதரனாக இருந்தாலும். உள்ளத்தளவில் மூத்த மகன்.
முத்து மாணிக்கம் தொட்டு மாலதி வரை, அர்ச்சனா முதல் கயல்விழி வரை, அவனிற்கு அடுத்து பிறந்த அடுத்த தலைமுறையில் அஞ்சலி முதல் கயல்விழியின் ஆறு வயது மகள் சாகித்தியா வரை அனைவருக்கும் விருப்பமானவன் தீரன். நாளுக்கு நாள், நொடிக்கு நொடி அன்பு மற்றும் பாசத்தால் முக்குளித்தவன் கடந்த எட்டு வருடங்களாக கடல் கடந்து வெளிநாட்டில் வனவாசம் இருக்கின்றான்.
அதற்கு காரணம் கயல்விழிக்கு தீரன் செய்து வைத்த காதல் திருமணம்.
அப்போது தீரனுக்கு இருபத்தி இரண்டு வயது தான். கயலுக்கு இருபத்தி ஐந்து.
கிராமத்து மக்கள் பாசத்திற்கு எந்தளவிற்கு கட்டுப்பட்டவர்களோ அதே அளவிற்கு கோபத்தில் கரை கடந்தவர்கள்.
அதுவரை ஒட்டுமொத்த குடும்பத்தின் அன்பை மட்டுமே பார்த்து வந்த தீரன், அவர்களின் கோபம் தாங்க முடியாது மேல் படிப்பை காரணம் காட்டி வெளிநாட்டிற்கு வந்தவன், இத்தனை வருடங்கள் கடந்தும் அங்கேயே வேலை வீடென செட்டில் ஆகிவிட்டான். தற்போது இருக்கும் வீடு கூட அவனது உழைப்பில் மூன்று வருடங்களுக்கு முன்பு வாங்கியது.
தங்கள் விருப்பமின்றி காதல் திருமணம் செய்துகொண்ட கயல் மீதான கோபம் கூட அவள் உண்டாகியிருக்கிறாள் எனும் செய்தியால் மறைந்துபோக, குடும்பத்துடன் இணைந்துவிட்டாள்.
ஆனால் அதிதீரன்… இன்னும் விலகி நிற்கின்றான்.
குடும்பத்தின் நினைவில் மூழ்கியவனை, ரிச்சி தோள் தொட்டு சுயம் மீட்டான்.
“இனி பார்ட்டி அப்படின்னா வன் ஹவரில் முடிக்க முயற்சி பண்ணு. நைட் ஸ்டே இனி அலோவ் பண்ணமாட்டேன்” என்று கட்டளையாகச் சொல்லிவிட்டு, மற்றொரு அறைக்குள் நுழைந்து கொண்டான் தீரன்.
இனி அவன் அந்த அறையை பயன்படுத்தமாட்டான் என்று தெரிந்து நொந்து போனான் ரிச்சர்ட்.
வாழும் இடம் அதிநாகரிக உலகமான அமெரிக்காவாக இருந்தாலும், அதிதீரனின் ஆணி வேர் தமிழக மண் மனம் மாறாத மதுரை ஆயிற்றே. வழக்கத்திற்கு எளிதாக பழக்கம் கொண்டிடுவானா என்ன?
குளித்து முடித்து வெளியில் செல்ல கிளம்பி தயாராகி வந்த தீரன்,
“என்னோட தின்க்ஸ் இந்த ரூமுக்கு ஷிஃப்ட் பண்ணிடு” என்றான்.
ரிச்சி மலைப்பாக முதுகில் கை வைத்து உடலை வளைத்து, இதழ் குவித்து காற்றை ஊதினான்.
“என்னடா?” தீரன் கேட்ட விதத்திலே அரண்டுபோன ரிச்சி, “இப்போவே செய்யணுமா?” எனக் கேட்டு, “அல்ரெடி வீட்டை க்ளீன் பண்ணதில் முதுகு பெண்டாகிப்போயி” என்றான்.
“எப்போவேணா செய். ஆனால் நான் வரதுக்குள்ள செய்” என்று சொல்லிவிட்டு தீரன் நகர…
“நீயெல்லாம் மனுஷனாடா?” என்றான் ரிச்சி.
“அதனாலதான் உன்னை இத்தோட விடுறேன்… எம்புட்டு தெனவு இருந்தாக்கா, என் அறைக்குள்ள நுழையுற வரைக்கும் கம்முன்னு இருந்திருப்ப நீயி?” என்று பார்வையால் சீறினான்.
‘அய்யோ கிராமத்தான் வெளியில வரானே!’ என உள்ளுக்குள் நடுங்கிய ரிச்சி…
“ஹேய் கூல் மச்சி. பத்தே நிமிஷம். அந்த ரூமிலிருக்க உன் தின்க்ஸ் எல்லாம் மாத்திட்டு, அந்த ரூமை டோட்டலா டிஸ்மாண்டில் பண்ணி ஆல்ட்டர் பண்ணிடுறேன்” என்றான்.
ரிச்சி பயத்தில் டிஸ்மாண்டில் என உளறியது சிரிப்பை வரவழைக்க, வெளிக்காட்டிக்கொள்ளாது வெளியேறினான் தீரன்.
“எங்கடா கிளம்பிட்ட?” என்ற ரிச்சி, நேரத்தைப் பார்த்தான்.
வாரத்தில் விடுமுறை நாளான அன்று தீரனின் மொத்த குடும்பமும், அவர்களுக்கு இரவாக இருந்தாலும், நியூயார்க் நேரம் பகல் பதினொரு மணியளவில் அழைத்து பேசிடுவர். பதினொரு மணியாக இன்னும் ஒரு மணி நேரம் மட்டுமே இருக்க, தீரன் வெளியில் செல்வதை ஆச்சரியமாகப் பார்த்தான் ரிச்சி.
“கால் வரதுக்குள்ள வந்திடுவேன்டா” என்று வெளியில் சென்ற தீரன் சரியான நேரத்திற்கு முன்னதாக வந்த போதும், அவர்கள் அதற்கும் முன்னதாக அழைத்திருந்தனர்.
தீரன் வருகிற நேரமெனக் கூறி ரிச்சி அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தான்.
தொலைக்காட்சியுடன் இணைக்கப்பட்டிருந்த இணைப்பில், தீரனின் மொத்த குடும்பமும் அடங்க முடியாது அடங்கியிருந்தனர்.
தீரன் வாயிலில் வந்து நிற்க, அஞ்சலி தான் ரிச்சியிடம் பேசிக் கொண்டிருந்தாள்.
திரையில் தான் படாதவாறு சமயலறை சென்றவன், அந்த வாரத்திற்கு தேவையாக வாங்கி வந்திருந்த பொருட்களை குளிர்சாதனப் பெட்டியில் அடுக்க ஆரம்பித்தான்.
“மாமா ஒழுங்கா சாப்பிடுறாங்களா ருச்சி ஊறுகாய்?” எனக் கேட்டவள், “லாஸ்ட் வீக் உங்க ஆபிஸ் புராஜக்ட் சக்சஸ் மீட் ஃபங்ஷன்ல எடுத்ததுன்னு நீங்க அனுப்பின போட்டோவில் மாமா இளைச்சாமாறி தெரியிறாங்க” என்றாள்.
அவளின் பேச்சு தீரன் செவிகளிலும் விழ, ஒருமுறை தன்னை குனிந்து பார்த்தான். அவனுக்கே அவனது தோற்றத்தில் எவ்வித மாற்றமும் தெரியவில்லை. ஆனால் தன்மீது வடியாத கோபம் இருப்பினும் தன்னை முழுதாக ஒதுக்கிவிடவில்லை என்பதில் சிறு ஆசுவாசம் தீரனிடம். அனைவரின் முன்பும் அஞ்சலி தன் உடல் நலனைப்பற்றி சொல்கிறாள் என்றால், நிச்சயம் இதுகுறித்து வீட்டில் ஒரு பேச்சுவார்த்தை கண்டிப்பாக நடந்திருக்கும் என்று அறியாதவனா அவன். மெல்ல இதழ் விரித்துக் கொண்டான்.
“கூடவே இருக்க எனக்கு அப்படியொன்னும் அவன்கிட்ட வித்தியாசம் தெரியலையே ஒரெலி ரெண்டெலி அஞ்செலி” என்று ரிச்சி, அவள் தன்னை ருச்சி ஊறுகாய் என்றதற்காக பதிலுக்கு கிண்டலாக அழைக்க…
அவளோ, “அண்ணே” என்று முறைத்து பார்த்தாள்.
“பயந்துட்டேன்” என்ற ரிச்சி, தீரனின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடமும், அவர்களது குடும்பத்தில் தானும் ஒருவனாக அத்தனை நெருக்கமாக பேசிக் கொண்டிருக்க, தன் வேலை முடிந்து ரிச்சியின் அருகில் வந்து அமர்ந்தான் தீரன்.
தீரன் வந்த நேரம் ரிச்சியிடம் மகனைப்பற்றி பேசிக் கொண்டிருந்த துளசியின் வாய் கப்பென்று மூடிக் கொண்டது. அவர் மட்டுமல்ல, அவரது தலைமுறை ஆட்கள் அனைவரும் தீரன் மீது அழுத்தம் நிறைந்த பார்வை காட்டி எழுந்து திரை விலகிச் சென்றிருந்தனர்.