என் ஆயுள் நீயே 75
மருதன் மன்னிப்பு வேண்டிட, எதற்கு மன்னிப்பு என்று இளங்கோ, கஜேந்திரன் பழையதை மறந்து அவரை ஏற்கும் விதமாக பேசிட,
“என்னண்ணா இது எல்லாரும் ஒரே நேரத்தில் பாசப்பயிர் வளக்குறாங்க?” எழில் இன்பாவிடம் முணுமுணுக்க, அவளுக்கு பக்கத்தில் நின்றிருந்த ஆர்யன், “கதை முடியப் போகுது. அப்போ ஒன்னு சேர்ந்து தானே ஆகணும்” என்றான்.
“கரெக்ட்” என்றார் ஜெயந்தன்.
“இனி மன்னிப்புக்கெல்லாம் அவசியமில்லை. வாங்க” என்ற உதயன் தன் அன்னையை பார்க்க…
“வாங்கண்ணா, அண்ணி வாங்க” என்றார். கண்ணீரோடு.
“உன்னை ரொம்பவே கஷ்டப்படுத்திட்டேன்… மன்னிச்சிடு கங்கா” என்ற மருதன் தங்கையின் கையை பிடிக்க…
“அப்புறமும் என்ன கண்ணுல தண்ணி. எங்க பெரியம்மா அழுதா எனக்கு பிடிக்காது” என்று அவரின் அருகில் சென்று கண்ணை துடைத்து விட்டான் இன்பா.
உதயனைவிட இன்பா கங்காவுக்கு அதிக ஒட்டுதல் தான். தெரிந்த உதயன் சிரிப்போடு பார்த்து நின்றான்.
உதயன் தொடர்ந்து அனைவரும் ஒருவருக்கொருவர் புன்னகைக்க, பேச்சில் சில நிமிடங்கள் கழிந்தது. குமரி அதிகம் ஒட்டவும் முடியாது, வெட்டிக்கொள்ளவும் முடியாது நடப்பதை சாதரணமாக பார்த்து நின்றார். இனி அவரின் நிலை அதுதான். எல்லையும் கூட.
அடுத்து குடும்பம் நிறைவாய் ஒன்றாக அமர, பேச்சும் சிரிப்புமாய் விருந்து நேரம் கழிந்தது.
நனியிதழ் மட்டும் அவ்வவ்போது வந்தனாவை பார்ப்பதும் விலகுவதாகவும் இருக்க, வந்தனாவே நனியின் அருகில் வந்தாள்.
“டாட்டூ லேசர் பண்ணிட்டேன்” என்றாள்.
ஆம் வந்தனா அன்று நனியை மறித்துக் காட்டியது, இடது பக்க மார்பில் நவீன பச்சை இட்டிருந்த உதயனின் பெயரைத்தான்.
அதனை இன்று அவள் அழித்துவிட்டதாக சொல்லவும், அப்படியொரு சந்தோஷம் நனியிதழுக்கு. வந்தனாவை அணைத்து விடுத்தவள், அப்போதே தாத்தா மற்றும் பிரணவ்விடம் அதனை சொல்லி ஆசுவாசம் கொண்டாள்.
பெரியவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்க,
அவர்களை பார்த்தவாறு சிறியவர்கள் அனைவரும் ஒரு பக்கம் ஒன்றாக அமர்ந்து தங்களின் அரட்டையில் ஈடுபட்டிருந்தனர். அதில் வந்தனாவும் அடக்கம்.
இங்கு பேச்சு இருந்தாலும், உதயன் பார்வை பெரியவர்கள் பக்கம் நிலைத்திருக்க…
“என்னவாம் உதய்க்கு?” என்றாள் அஷ்மிதா.
“ஃபுல் பில் ஃபீல் அஷ்மிதா” என்று உதயன் சொல்ல…
“நீங்க எதிர்பார்த்தது…” என்றான் இன்பா.
“ஆசையும் கூட” என்ற உதயன், “இதுக்கு மேல ஒரு சந்தோஷம் இருக்குமா?” எனக் கேட்டான்.
“உங்க முகத்தில் தெரியிற சந்தோஷம் தான் எங்களுக்கு சொந்தத்தோட மதிப்பைக் காட்டுது” என்றான் பிரணவ்.
“எக்ஸாக்ட்லி” என்று எழில் ஆமோதிக்க…
“எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது” என்றாள் நனியிதழ்.
“எதே முடிஞ்சுதா? எங்க முடிஞ்சுது?” என்று பதறி வினவினான் ஆர்யன்.
“ஏன் இவ்ளோ ஷாக்?” வந்தனா மட்டும் புரியாது கேட்க, எழில் “மானத்தை வாங்குறான்” என முனக, அனைவரும் ஒரு சேர ஆர்யனை “இப்போ என்னடா உனக்கு” என்று பார்த்தனர்.
“இப்படி பார்த்தா?” என்ற ஆர்யன், “என் கல்யாணம் முடிக்காம கதையை முடிக்கிறீங்க?” என்றான்.
“அடுத்து அது தான்டா” என்று அனைவரும் ஒன்றாக சேர்ந்து கூற, அங்கே சந்தோஷ அலைகள் சமுத்திரமாய் பரந்து விரிய…
நாமும் ஓயாத அலைகளின் அணிவகுப்பாய் சில வருடங்கள் கடந்திடுவோம்…
அன்று ஆர்யன், எழில் திருமணம்.
சீரும் சிறப்புமாக சுற்றம் சூழ மகிழ்வாய் நடந்தேறியது.
முன்பு முறுக்கிக்கொண்டு விலகி நின்ற குமரி, மருதன் கூட எழில் திருமணத்தில் முன்வந்து வேலைகளை இழுத்துப் போட்டு செய்தனர்.
நான் நீயென ஆளாளுக்கு அன்பில் போட்டியிட, சந்தோஷத்தின் ஊற்றாய் அவர்களின் வாழ்வு.
திருமணம் முடிந்து அனைவரும் உதயன் இல்லத்தில் கூடியிருந்தனர்.
இரவு விருந்துக்கு தயாராகிக் கொண்டிருந்தது.
எழிலின் அறைக்குள் ஆர்யன் அலைப்பின் சோர்வு நீங்க சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாமென்று அப்போதுதான் நுழைந்தான். அடுத்த நொடி, அறை அதிர ஒலித்த சத்தத்தில்…
“உங்களோட முடியலடா” என்று இடையில் கைகள் வைத்து தனக்கு முன் பார்வையை தாழ்த்திப் பார்த்தான்.
ஒரு பெண், மூன்று ஆண் என நால்வர் அவன் முன் நின்றிருந்தனர்.
“என்னங்கடா வேணும் உங்களுக்கு?” ஆர்யன் கேட்க,
“இது எழில் சித்தி ரூம். நீங்க எதுக்கு இங்க வரீங்க?” என முறைத்துக் கொண்டு கேட்டது, நனியின் மகன் பிரனேஷ்.
“ஆமா… இது எங்களோட பிளே ஏரியா… நீங்க வரக் கூடாது” என்றான் இன்பாவின் மகன் இனியன்.
“நீங்க ரெண்டு பேரும் ஏன் அமைதியா இருக்கீங்க?” ஆர்யன் கேட்க,
“நீங்க அத்தையை கூட்டிட்டுப் போயிடுவீங்களா?” என ஒன்றாக முகம் சுருக்கிக் கேட்டனர், உதயனின் இரட்டையர்களான சஞ்சய், சஞ்சிதா.
“அச்சோ… அப்படிலாம் இல்லை” என்ற ஆர்யன் அவர்கள் முன் மண்டியிட்டு, “வேணும்னா நான் உங்க அத்தையோட இங்கவே இருந்திடுறேன்” என்றான்.
“ஜாலி” என்ற பிள்ளைகள் நொடியில் அவனிடம் ஒட்டிக் கொண்டவர்களாக, ஆளாளுக்கு மாற்றி மாற்றி முத்தம் வைத்து வெளியேற, அறைக்குள் சிரிப்புடன் நுழைந்தாள் எழில்.
“பிரனேஷ் ஓகே. மத்த மூணு பேரும் கிளம்பும் போது அழப்போறாங்க” என்றாள். அவர்களை அறிந்தவர்களாக.
“அப்படியா?” என்ற ஆர்யன், அவளை சுண்டி இழுத்து தன் கை வளைவிற்குள் நிறுத்தினான்.
“அச்சோ ஆர்யா, சாமி கும்பிடனும், மத்ததுலாம் அப்புறம் தான். உன் புருஷனுக்கு இருக்க வாலுக்கு கொஞ்ச நேரம் அடங்கியிருக்க சொல்லுன்னு அத்தை இப்போதான் சொன்னாங்க” என்றாள்.
“கிரேட் மம்மி. என்னைபத்தி சரியா தெரிஞ்சு வச்சிருக்காங்க” என்றவன், “பாட்டிக்கு தெரிஞ்சா திட்டுவாங்க” என்றவளின் பேச்சை தனக்குள் விழுங்கியிருந்தான்.
வேண்டாமென்று மறுத்தவளும் அவனின் மென்மையில் அவனுள் மொத்தமாக கரைந்திருந்தாள்.
_________________
“உதய் உங்களுக்குத்தான் வெயிட்டிங்” என்று அஷ்மிதா அறைக்குள் நுழைய,
“மூக்குத்தி மாத்தலையா நீ” என்றான் உதயன்.
“நான் வந்ததே தப்பு” என்றவள், “சீக்கிரம் வாங்க. பசங்களும் பசியில் இருக்காங்க” என்று அவன் பிடிக்கும் முன் ஓடிவிட்டாள்.
“இங்க… என்கிட்ட தானே வரணும்” என்ற உதயன் கீழே செல்ல, அப்போதுதான் பிரணவ் உள்ளே வந்தான்.
“எங்கடா போயிட்டு வர?” உதயன் கேட்க,
“ரீமா கால் பண்ணா. பேசிட்டு வரேன்” என்றான் பிரணவ்.
“எப்படியிருக்கா?” நனியிதழ் கேட்க,
“அவளுக்கென்ன சொல்லாம கொள்ளாம பாரின் போய் செட்டில் ஆகிட்டா. நல்லாத்தான் இருக்கா” என்றான் பிரணவ்.
திருமணத்தில் விருப்பமில்லாத ரீமா, வீட்டில் வற்புறுத்தவே வேலையென்று வெளிநாடு சென்றவள் அங்கேயே தங்கிவிட்டாள். அதில் பிரணவ்வுக்கு சிறு வருத்தம்.
“அவளையும் காலம் மாத்திடும் விடுடா” என்று உதயன் தட்டிக் கொடுக்க, பிரணவ் புன்னகைத்தான்.
“பேசிட்டே நிக்காம உங்க பொண்ணுக்கு ஊட்டுங்க. நீங்க கொடுத்தா தான் சாப்பிடுவாலாம்” என்று மகளையும், உணவடங்கிய கிண்ணத்தையும் உதயனிடம் கொடுத்துவிட்டு அஷ்மிதா செல்ல…
அடுத்து இதுதான் தங்களின் வேலையென்று புரிந்த பிரணவ் மற்றும், இன்பாவும் தங்கள் பிள்ளைகளுக்கு உணவு ஊட்டத் துவங்க, சஞ்சய் மட்டும் மூவரிடமும் மாற்றி மாற்றி உணவினை வாங்கிக்கொண்டான்.
பெரியவர்கள் அனைவரையும் ஒன்றாக அமர வைத்து பெண்கள் உணவு பரிமாறிட, உண்டு முடித்தவர்கள் பிள்ளைகளுடன் ஐக்கியமாகிட, நாலு ஜோடியும் ஒன்றாக அமர்ந்து உண்டனர்.
“வந்தானாவுக்கும் கல்யாணம் ஆகிட்டா நல்லாயிருக்கும்” என்றாள் அஷ்மிதா.
“நான் நல்லாயிருக்கிறது பிடிக்கலையா?” என்ற வந்தனா, “எல்லாம் தெரிஞ்சு என்னை ஒருத்தன் ஏத்துக்கணும். அப்போ தான் எனக்கு கல்யாணம். அது நடக்கும்போது பார்ப்போம். இப்போ சாப்பிடுவோம்” என்று அவள் சொல்லிட, உணவு நேரம் வழக்கம்போல கலாட்டாவாக கழிந்தது.
இரவு ஆர்யன், எழில் அவர்களின் பிரத்யேக இரவிற்குள் நுழைந்திட, மூன்று ஜோடிகளும் தத்தம் அறைக்குள் உறங்க ஆயத்தமாகினர்.
“பையன் எங்கடி?” பிரணவ் கேட்க, “அவன் செல்வா அண்ணா ரூமுக்கு ஓடிட்டான்” என்றாள் நனியிதழ்.
“அப்பாடா… அப்போ இன்னைக்கு நமக்கு விடுதலை” என்று மனைவியை இழுத்து அவளுள் புதையத் துவங்கியிருந்தான் பிரணவ்.
“இனியன், அண்ணா ரூம் போயாச்சா?” கேட்டுக்கொண்டே சட்டையை கழட்டி அதற்குரிய இடத்தில் மாட்டிவிட்டு கட்டிலில் அமர்ந்த இன்பா கேட்க, “என்னைக்கு அவன் இங்கிருந்திருக்கான். மாமாவும், அஷ்மியும் தான் பாவம்” என்று தன்னருகில் அமர்ந்த மனைவியை காதலாய் அணைத்துக் கொண்டான் இன்பா.
நான்கு பிள்ளைகளும் செய்யும் கலாட்டாவில் உதயன் அறை ஆரவாரமாகக் காட்சியளித்தது.
அவர்களுக்கான பாலுடன் அறைக்குள் வந்த அஷ்மிதா,
“நீங்களே குடிக்க வைங்க” என்று பொறுப்பை அவனிடமே ஒப்படைத்துவிட்டு, வீட்டின் மூத்த மருமகளாக விசேஷத்தில் ஓடியாடி வேலை செய்ததில் தளர்வாய் நீள்விருக்கையில் சென்று அமர்ந்து, பின் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.
மனைவியை ஒரு கணம் பார்த்த உதயன்,
“இன்னும் நீ மூக்குத்தி மாத்தலை” என்றான்.
“போயா” என்றவள் முகத்தை திருப்பிக்கொள்ள, சிறு முறுவலாக உதயன் தன் கவனத்தை பிள்ளைகள் பக்கம் திருப்பினான்.
அனைவரிடமும் சேட்டையும் வால் தனமுமாக சுற்றும் பிள்ளைகள் உதயனிடம் மட்டும் சாந்தமாக அடங்கிப்போயிடுவர்.
அவ்வீட்டில் பெரியவர்களுக்கு மட்டுமல்ல, சிறியவர்களுக்கும் அதீத பிடித்தம் உதயன் தான்.
பிள்ளைகள் உறங்கியதும் மனைவியின் அருகில் வந்தமர்ந்த உதயன், அவளின் காலினை எடுத்து தன் மடியில் வைத்து மெல்ல அழுத்திக் கொடுத்தான்.
அசதியில் உடனடியாக உறங்கியிருந்த அஷ்மிதா,
“உதய்” என்று உறக்கத்தில் உச்சரித்திட, “எழுந்துக்கோ அஷ்மிதா” என்று அவளின் கன்னத்தில் மீசை குத்த அழுத்தமாக முத்தம் வைத்தான்.
வருடங்கள் பல கடந்தும் உதயனின் அஷ்மிதா எனும் அழைப்பில் கொள்ளை காதல் நிரம்பி வழியும். அவளை சிலிர்க்கச் செய்திடும்.
அவள் வீம்புக்கென்று கண்கள் மூடியிருக்க, மூக்குத்தியில் இதழ் பதித்த உதயன், அதன் நுனியில் கடித்திட, ஆ என்று அலறியபடி எழுந்து அமர்ந்திருந்தாள்.
அவளிடம் தன் கையை நீட்டினான்.
“பிளீஸ் உதய்…” என்றவள், அவன் கை நீட்டியே இருக்கவும், “அராஜகம் பண்றீங்க நீங்க” என்று கையிலிருந்த மூக்குத்தியை வாங்கி, போட்டிருந்ததை கழட்டி மாற்றினாள்.
“இதுக்கு இவ்வளவு பிடிவாதம்” என்ற உதயன் மூக்குத்தியில் முத்தம் வைத்து விலகி அமர்ந்தான்.
“அப்படி இதுல என்னதான் இருக்கு தெரியல. தினமும் போடுற ட்ரெஸ் நிறத்துக்கு மாத்தி மாத்தி கழட்டி கழட்டிப் போட்டு என் மூக்கு ஒருவழி ஆகுது. இன்னைக்கு ஒருநாள் வேலையில மாத்த மறந்ததுக்கு காலையிலிருந்து எத்தனை தரம் சொல்லிட்டீங்க” என்று அவனின் மீசையை வலிக்க இழுத்து வைத்தாள்.
“அஷ்மிதாகிட்ட என்னை முதலில் இழுத்தது இந்த மூக்குத்தி தான்” என்று அவளின் நுனி மூக்கில் ஒரு விரலால் தட்டிய உதயன், அவளை இழுத்து தான் மார்பில் சாய்த்து, நீள்விருக்கையில் சரிந்து அமர்ந்தான்.
அவன் மார்பில் கண் மூடி சாய்ந்திருந்த அஷ்மிதா,
“நீங்க ஹேப்பியா உதய்?” எனக் கேட்டாள்.
அவளின் உச்சியில் முத்தம் வைத்த உதயன்…
“அஷ்மிதா உதய் கூட இருக்கும்போது உதய் ஹேப்பினஸ்க்கு என்ன குறைச்சலாம்?” என்றான்.
“நிஜமாவா?” என்றவள், அவனின் முகம் பார்த்து, “நம்பிட்டேன்” என்றாள்.
“நம்புடி” என்று அவன் கன்னத்தில் முத்தம் வைக்க…
“அப்போ குடும்பமில்லாம நான் மட்டும் போதும்ல?” என்று அவனைப்பற்றித் தெரிந்தும் விஷமமாகக் கேட்டு, நமட்டுச் சிரிப்பு சிரித்தாள்.
“அஷ்மிதாவுக்கு உதய்யை தெரியுமே” என்று அவளின் கன்னம் கிள்ளிய உதயன் பார்வை கட்டிலில் வரிசையாக உறங்கிக் கொண்டிருந்த பிள்ளைகள் மீது படிந்தது.
“நமக்கு அடுத்து… இவங்க ஒற்றுமையில் தான் நம்ம சந்தோஷம் இருக்கு” என்றான்.
“உங்க வளர்ப்பு. சரியாத்தான் இருக்கும். நம்ம குடும்பம் எப்பவும் ஒற்றுமைங்கிற எல்லைக்குள் நல்லாவே இருக்கும். உங்களை கடந்து யாரும் எதுவும் யோசிக்கமாட்டாங்களே” என்று அவனது கன்னத்தில் லேசாய் கடித்து மென்மையாய் இதழ் பதித்த அஷ்மிதா,
“உதய்க்கு மொத்தம் அஷ்மிதா தான். ஆனால் சந்தோஷமா நிறைவு கொள்ளும் இடம் இந்த குடும்பம். சரியா?” எனக் கேட்டாள்.
இல்லையென்ற உதயன்,
“இந்த குடும்பம் நிறையும் இடம் உதயனாக இருக்கலாம். ஆனால், உதயன் முழுமையாகும் இடம் அஷ்மிதா தான்” என்றான்.
“எனக்காக சொல்லக் கூடாது” என்று சொன்னவளுக்கும், யாவும் நீதான் என்றவனுக்கும் குடும்பம் தான் எல்லாம் என்று தெரியும்.
ஆயுள் முழுமைக்குமான அவர்களின் காதல் நிறைவு கொள்வது அவர்களின் இந்த புரிதலால் தான்.
காதலாய் ஒருவரின் அணைப்பில் ஒருவர் கட்டுண்டு இருக்க, அவர்களின் வாழ்வு என்றும் சொர்க்கம் தான்.
அவர்களின் சொர்க்கம் கை சேர்வது குடும்பம் எனும் ஒன்றில்.
அந்தக் குடும்பத்தின் முழுமையில், மகிழ்வில், சந்தோஷத்தில், சிரிப்பில் தானே அவர்களினது மட்டுமல்லாது அக்குடும்பத்தின் ஒவ்வொரு உயிரின் ஜீவனும் நிறைந்துள்ளது. அதன் ஆணி வேர் மட்டுமே உதயன். அங்கு ஒருவரில்லை என்றாலும் வேருக்குள் நிறைவது வெறுமை தான்.
உதயன் என்பவன் வேராய் தாங்கி நிற்கும் வரை, அங்கு வெறுமை சூழவோ, பட்டுப்போதலுக்கோ வழியில்லை.
அன்பில் அவன்…
எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க, உறவுகள் கூடி வாழ்வதே மகிழ்வாகும்.
சொந்தமென பிணையப்பட்ட உறவுகள், யுகங்கள் ஆயினும் ஆலமரமாய் விருட்சம் பெற்று, பரந்து விரிந்திருக்க ஒரே ஆதாரம், அடித்தளம் அன்பு.
அன்பால் ஆயுள் நீளும் பந்தம்.
அன்பை பகிர்வோம். அன்பால் இணைவோம்.
சுபம்.