என் ஆயுள் நீயே 74

என் ஆயுள் நீயே 74

மறுவீடென்று… அதனையும் முடித்துக் கொண்டு அடுத்தநாள் தான் உதயன், அஷ்மிதா அத்தீஸ்வரம் வந்தனர்.

அன்று கறி விருந்து என்பதால், பிரணவ் குடும்பமும் உடன் வந்திருந்தனர்.

அவர்கள் வீட்டிற்குள் வர, தனு முகம் கொள்ளா மகிழ்வுடன் உதயன் முன் வந்து நின்றாள்.

“என்னவாம்… தனு எதோ சொல்ல வந்திருக்கீங்க?” என்ற உதயன் இன்பாவை பார்க்க,

“அவளே சொல்லுவா” என்ற இன்பாவின் முகம் அத்தனை ஒளிர்ந்தது.

“என்னடா?” என்று உதயன் தனுவை பார்த்து கேட்க,

“நீங்க பெரியப்பா ஆகப்போறீங்க” என்றாள் தனு.

“டேய்” என்று இதழோடு கண்கள் நிறைய, அவளின் உச்சியில் கை வைத்த உதயன், “சந்தோஷம்டா” என்றான். தன் தம்பியை ஆர அணைத்து விடுவித்தான்.

வீட்டிலிருப்பவர்களின் முகமும் மகிழ்வைக் காட்ட, அவர்களுக்கும் அப்போது தான் தெரிகிறது என்று புரிந்துகொண்டான் உதயன்.

“சொல்லலையா?” உதயன் இன்பாவிடம் கேட்க,

“நேத்து நைட் தான் கன்பார்ம் பண்ணோம். நீங்க வரட்டும் வெயிட் பண்ணோம்” என்று இன்பா சொல்ல, “நான் அத்தை ஆகிட்டேன்” என்று எழில் போட்ட சத்தத்தில் வீடு நிறைந்தது.

அனைவரும் இன்பா, தனுவுக்கு வாழ்த்துக்கூறி மகிழ, அஷ்மிதா தனுவை கட்டிக்கொண்டு தன் வாழ்த்தை தெரிவித்தாள்.

“நீங்க சாமி கும்பிட்டு ரூமுக்கு போங்க” என்று லட்சுமி பாட்டி, உதயனிடம் சொல்ல, அவருக்கு சரியென்று மனைவியுடன் பூஜையறை நோக்கி நகர்ந்த உதயன்,

“உங்க அம்மாவுக்கு சொல்லு தனு” என்றான்.

“மாமா…” என்று அவள் தயங்க,

“ஃபோன் போட்டாவது சொல்லு. ஆனால் சொல்லணும். கண்டிப்பா” என்றவன், “கடைசி வரை அம்மா வேண்டாம் இருந்திடுவியா நீ?” எனக் கேட்டான்.

தனு இன்பாவை பார்க்க…

“சொல்றாங்க தானே செய்” என்றான். கடுகடுவென.

இன்பாவுக்கு விருப்பமில்லை என்றாலும் சிலவற்றை விடும் எண்ணம் உதயனுக்கு இல்லை.

சிறு சிரிப்போடு மனைவியுடன் நகர்ந்திட்டான்.

இருவரும் சாமி கும்பிட்டுவிட்டு வர,

விஷயம் அறிந்து குமரி ஓடி வந்திருந்தார். யாரையும் அவர் பார்க்கவில்லை. மகளின் அருகில் வந்தவர், அவளின் கன்னம் வழித்து முத்தம் பதித்து, வந்த வேகத்திலேயே சென்றிருந்தார்.

அவரின் குற்றவுணர்வே அவரை உறவுகளிடமிருந்து தானாக ஒதுங்கிக்கொள்ள வைத்தது.

ஒரு நான்கு நாட்களுக்குப் பொருத்திருந்தால் குமரி இப்படி எட்ட நிற்க வேண்டிய நிலை வந்திருக்காது. அவர் கொடுத்த அழுத்தத்திலேயே தனக்குள் உண்டான மாற்றம் மற்றும் புதிய வரவை தனு உணராது போனாள். மனதில் ஒருவித அமைதி சூழ்ந்த பின்னரே அவளும் தன் தாய்மையை உணர்ந்தாள்.

உதயன் அஷ்மிதாவுடன் தங்கள் அறைக்கு வந்தான். அஷ்மிதா முதல் முறை வருகிறாள்.

நல்ல பெரிதான அறை. அனைத்து வசதிகளும் இருந்தன.

“ரூம் அழகா இருக்கு உதய்.” என்ற அஷ்மிதா பார்வையை சூழலவிட, அவன் மெத்தையில் சென்று அமர்ந்தான்.

“இங்கிருந்து தானே கால் பேசுவீங்க?” காணொளி அழைப்பில் பார்த்தது வைத்து அவள் சரியாகக் கேட்க, ஆமென்ற உதயன் அவளின் கை பிடித்து இழுத்து தன் மடியில் அமர்த்தி இறுக்கினான்.

“உதய்… டோர்.” அவள் குரல் அடங்கி ஒலித்தது. அவன் தான் அவளை கரைய வைக்கும் வேலையை விரல்களுக்கு அளித்திருந்தானே.

“இந்த ஃப்ளோர் யாரும் வரமாட்டாங்க அஷ்மிதா. டோர் ஆட்டோமேட்டிக். க்ளோஸ் பண்ணதும் லாக் ஆகியிருக்கும்” என்ற உதயன் அழுத்தமாக அவளின் மூக்கில் மூக்குத்தியின் மீது முத்தம் வைத்திருந்தான்.

நினைக்கும் நேரமெல்லாம் அந்த மூக்குத்தியில் அவனது இதழ் ஆழப் பதிந்து விடுகிறது. கூடலில் கொள்ளும் தாகம், அந்த ஒற்றை முத்தத்திற்கு கொண்டுவிடுகிறாள் அவள்.

“கிஸ் பண்ணியே தொலைய வைக்குறீங்க உதய்” என்றாள்.

“அப்போ அஷ்மிதா உதய்க்குள் இன்னும் தொலையலையா?” என்ற உதயன், அவளை முழுதாக சிவக்க வைத்தே தன் கை அணைவிலிருந்து விடுத்தான்.

“முத்தம் வைக்கவே இப்படி பிங்கிஷ் ஆனா… நான் பாவம்டி” என்றான்.

“பிங்க் ஆக்குறதே நீங்க தான்” என்றவள், அவனருகில் தள்ளி அமர,

“ரொம்ப தூரம் தான்” என்றவன், “நீ மட்டும் பாக்குற உதய் பிடிச்சிருக்கா அஷ்மிதா?” என்றான்.

“ரொம்ப…” என்று இழுத்துக் கூறியவள், அடுத்த நொடி அவனது அணைப்பிலிருந்தாள்.

“லவ் யூ உதய்…” என்ற அஷ்மிதா உதயன் நெற்றியில் தன் குளிர்ந்த இதழால் சூடான முத்தம் வைக்க, அவளின் இடை நின்ற உதயன் கைகள் இறுக்கம் காட்டின.

இருவரும் அணைப்புக்குள் கட்டுண்டு, அந்நேரம் ரசித்திருக்க, உதயன் அலைபேசி இசைத்தது.

இன்பா தான் அழைத்திருந்தான்.

உதயன் என்னவென்று கேட்கும் முன்பு,

“மருதன் குடும்பத்தோட வந்திருக்கார்” என்றான்.

அவன் சொல்லிய விதத்திலே வந்தனாவும் வந்திருக்கிறாள் என்பதை புரிந்துகொண்ட உதயன்,

“வந்தனா வந்திருக்கா” என்று அஷ்மிதாவையும் அழைத்துக் கொண்டு கீழே வந்திருந்தான்.

“எதுவும் பிரச்சினை வேண்டாம் மருதா. இப்போ தான் கல்யாண முடிஞ்சு, எல்லாம் சரியாகி வீடு சந்தோஷமா இருக்கு” என்று இளங்கோ சொல்லிக் கொண்டிருக்க…

“அப்பா” என்று அருகில் வந்த உதயன், “வாங்க மாமா, அத்தை” என்றான். மருதன், சகுந்தலாவை பார்த்து.

அனைவரும் உதயனின் நெருக்கமான பேச்சை புரியாது பார்க்க, அடுத்து அவன் வந்தனாவிடம் பேசியது ஆச்சரியத்தைக் கொடுத்தது.

“எப்படியிருக்க வந்தனா?” உதய் கேட்க,

“நல்லாயிருக்கேன் மாமா” என்றாள் வந்தனா.

பார்த்திருந்த நனியிதழுக்கு மயக்கம் வரும் போலானது.

“பிரணவ் என்னை பிடிடா… இவளுக்கு இவ்ளோ மென்மையா பேச வருமா?” என்று நெஞ்சில் கை வைத்தாள் நனி.

“அக்கா அவங்க நடிக்கிறாங்களோ?” எழில் கேட்க,

“இல்லை” என்றாள் அஷ்மிதா.

“அப்போ எதோ எங்களுக்குத் தெரியாம நடந்திருக்கு” என்றான் பிரணவ்.

“எஸ்…” இன்பா அஷ்மிதாவை பார்க்க,

“உதய் சொல்லுவாங்க இன்பா” என்றாள் அஷ்மிதா.

“கல்யாணத்துக்கு வருவீங்க நினைச்சேன்” என்ற உதயன், “உங்க அண்ணன் குடும்பத்தோட வந்திருக்காங்க. கூப்பிட மாட்டீங்களாம்மா” என்றான் உதயன். கங்காவை பார்த்து.

“உதயா.” கங்கா தவிப்பாய் தன் அண்ணனை பார்க்க…

“எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க. நான் செய்த எல்லாத்துக்கும்” என்று கரம் கூப்பி நின்றவரின் கையை கஜேந்திரன் முதலில் வேகமாக இறக்கி விட்டார்.

“என்ன உதயா இது?” என்று இளங்கோ கேட்க,

“என்னப்பா நடக்குது இங்க?” என்றார் கஜமுகன்.

“என்னையும் மன்னிச்சிடுங்க… உண்மையான அன்புக்கும், ஆசை பட்டது கிடைக்கணும் அப்படிங்கிற வெறிக்கும் நடுவில் என்னென்னவோ செய்திட்டேன்” என்ற வந்தனா, மீண்டும் தன் மன்னிப்பை வேண்டினாள். அவளின் பார்வை இளங்கோ மற்றும் நனியிதழ் தொட்டு அனைவரையும் பார்த்தது.

உண்மையில் வந்தனா சொன்னதைப்போன்று அவளின் ஆசை வெறி எனும் வரையறைக்குள் சென்று அவளை மனதால் வெகுவாக பாதித்திருந்தது. அதனாலே, தான் என்ன செய்கின்றோம் பேசுகின்றோம் என்பது மூளை வழி உணராது கிறுக்குத் தனமாக ஏதேதோ செய்து வைத்துவிட்டாள்.

அன்று பகவதி அம்மன் கோவிலில் உதயன் மற்றும் அஷ்மிதா பேசுவதை மறைந்திருந்து பார்த்த வந்தனாவை உதயன் கண்டுகொண்டு பேசிட, வந்தனா அவளுக்கு உதயன் வேண்டுமென்று பேசிய விதத்தில் அவள் நினைத்தது நடக்க வேண்டுமென்று மனதால் அழுத்தம் பெற்றிருக்கிறாள் என்பதை புரிந்து, அன்றே மருதனை சந்தித்து அவரிடம் பேசி அவளின் நிலையை புரிய வைத்து, அவளுக்கு மருத்துவர் உதவி தேவை என்பதை வலியுறுத்தி, தானே முன்னின்று அவளை அதற்குரிய சிறப்பு மருத்துவரிடம் அழைத்துச் சென்றான். செல்வதற்கு முன்பு வந்தனா பற்றி அனைத்தும் அஷ்மிதாவிடம் சொல்லியிருக்க, அன்று அவளும் மருத்துவமனை வந்திருந்தாள்.

உதயன் அழைத்தான்… உதயன் தன்னுடன் இருக்கின்றான் என்பதனாலேயே உதயனுடன் அமைதியாக மருத்துவமனை வந்த வந்தனா,

அஷ்மிதாவை மருத்துவமனையில் கண்டதும், உதயனை தன்னிடமிருந்து பறிக்க பார்க்கிறாள் என்று கையில் கிடைத்த மருத்துவ உபகரணங்கள் அனைத்தையும் எடுத்து அஷ்மிதா மீது வீச, உதயனால் கூட வந்தனாவை கட்டுபடுத்த முடியவில்லை.

வந்தனாவின் அந்த ஆவேசத்தை கண்கூடாகப் பார்த்த மருதனுக்கு தன்னுடைய மகளின் நிலை புரிய, அவளை முழுதாக மருத்துவர்கள் வசம் ஒப்படைத்து விட்டார்.

“அவங்க ரொம்ப வயலன்டா பிஹேவ் பண்றாங்க… நினைச்சது கிடைக்கலன்னு ஒருவித அப்செசன் உள்ள போயிட்டாங்க. ட்ரீட்மென்ட் அவசியம். கவுன்சிலிங்கில் வெளிய கொண்டு வந்திட முடியும்” என்று மருத்துவர் நம்பிக்கையாக சொல்லிட, உதயன் எனும் பெயருக்கு கட்டுப்பட்டு மருத்துவர்கள் பேச்சினை வந்தனா கேட்கத் துவங்கியிருந்தாள்.

பிரணவ் திருமணத்தன்று கொடுக்கும் சிகிச்சையை மீறி வந்தனா ஆவேசமாக நடந்துகொள்ள, அவளை உதயனால் மட்டும் தான் கட்டுபடுத்த முடியுமென்று மருத்துவர் கூறியதால், அன்றைய நாள் என்னவென்று தெரிந்து, உதயனுக்கு அழைக்காது, அஷ்மிதாவுக்கு அழைத்து சூழலை மருதன் விவரித்திட, அஷ்மிதா மருத்துவமனை சென்றாள். இதற்காகத்தான் அன்று உதயன் எதற்கு சென்றாயென்று கோபம் காட்டியது.

அஷ்மிதாவை பார்த்ததும் வந்தனா ஆவேசமாக நடக்க முயற்சிக்க…

“உதய் எனக்கு மட்டும் தான்” என்றாள் அஷ்மிதா.

மருதன் பதறிட…

“சில நேரங்களில் உண்மையால் மட்டும் தான் ஆழ் மனதை அமைதிப்படுத்த முடியும்” என்றார் மருத்துவர்.

அஷ்மிதா உதய் எனக்குத்தான் என்றதில் அதிர்ந்து உறைந்த வந்தனா, இதுநாள் வரை கொடுத்த சிகிச்சையில் ஒருவிதமாக அதனை ஏற்றுக்கொள்ள முயல, மெல்ல மயக்கம் கொண்டிருந்தாள்.

சில நிமிடங்களில் செலுத்திய மருந்தினால் மயக்கம் தெளிந்த வந்தனா, அதன் பின்னர் காட்டியதெல்லாம் அமைதி தான்.

முழுதாக ஐந்து மாத சிகிச்சைக்குப் பின்னர், புதிய வந்தனாவாக மீண்டிருந்தாள்.

அனைத்தும் மருதன் கூறிட, வந்தனா விடயத்தில் உதயன் மட்டுமல்ல, அஷ்மிதாவும் உயர்ந்து தெரிந்தாள்.

கறி விருந்து நேரமென்று குமரியை அழைத்துக் கொண்டு வந்த ஜெயந்தனும் அனைத்தும் கேட்டிருந்தார்.

“கத்துக்க… துரோகம் பண்ணாலும் நாம செய்ய வேண்டியது நன்மை மட்டும் தான். நல்லதே நினைக்கணும், நல்லதே செய்யணும். அப்போதான் நமக்கு வேண்டிய நல்லது தானா நடக்கும்” என்று குமரியின் மனதில் ஆணி அடித்தது போல் சொற்களை இறக்கினார் ஜெயந்தன்.

“இப்போ என் பொண்ணு நல்லபடியா இருக்க காரணம் உதயன் தான். கல்யாணத்துக்கு வாழ்த்து சொல்லிட்டு பார்த்திட்டு போலாம் வந்தோம். கிளம்புறோம்” என்று மருதன் வாயில் நோக்கி திரும்பிட,

“மாமா நில்லுங்க” என்றான் உதயன்.

உதயன் பெரியவருக்கு கண் காட்டிட,

“இன்னைக்கு கறி விருந்து. இருந்து சாப்பிட்டு போலாம் மருதா” என்றார் கஜமுகன்.

“நான்…” என்று அவர் தடுமாற,

“நீங்க என் மனைவிக்கு அண்ணன். அப்போ இந்த குடும்பத்தில் ஒருத்தர் தானே” என்றார் இளங்கோ.

“நீங்க வேணும்னா எங்களை விரோதியா பார்த்திருக்கலாம். ஆனால் நாங்க எப்பவும் உங்களை வேத்தாளா பார்த்தது இல்லை. எங்க அண்ணிக்காக” என்றார் கஜேந்திரன்.

“நடந்தது எதுவா வேண்டுமானாலும் இருக்கட்டும் மருதா. எல்லாம் நல்லதுக்கு நினைப்போம். ஒத்துமையா சேர்ந்து நிக்கிறது தான் சந்தோஷம். ஆளுக்கு ஒரு பக்கம் இனியும் ஏன் விலகி நிற்கணும்” என்று கஜமுகன் கேட்க, அவரின் கையை பிடித்து தன் முகத்தில் வைத்துக் கொண்டார் மருதன்.

error: Content is protected !!
Scroll to Top