அன்பின் அதீதம் 11

அத்தியாயம் 11

கோவிலுக்குச் சென்ற போது ஓயாது பேசிக்கொண்டிருந்த இருவரிடத்திலும் வீட்டிற்கு திரும்பி வந்துகொண்டிருக்கும் போது பெருத்த அமைதியே நிலவியது.

அப்பெண்ணிடம் பேசச்சென்ற தீரன், மயிலாஞ்சலி பிரகாரத்தை இரண்டு முறை சுற்றுவதற்குள் வந்திருந்தான்.

“போலாமா?”

“பேசிட்டீங்களா?” என்று ஆச்சரியமாகக் கேட்ட மயிலாஞ்சலி, “அத்தையை நான் பார்க்க வேண்டாமா?” என்றாள்.

‘உன்னைத்தேன் சாஹித்துக்கு அத்தையாக்கலாம் நான் நினைச்சிட்டிருக்கேன்’ என்று முனகிய தீரன், “வீட்டுக்குப்போய் பேசிக்குவோம் மயிலா” என்று அவளுக்கு முன் நடந்திருந்தான்.

“என்னாச்சு மாமா?”

“உங்களுக்கு அவீங்களை பிடிக்கலையா?”

“மாமா!”

“அவங்களுக்கு எதுவும்…” என்று மயிலாஞ்சலி இழுக்க, படிகளில் இறங்கிக்கொண்டிருந்த தீரன் நடையை நிறுத்தி பார்த்தப் பார்வையில் வீடு வந்த பின்னரும் கூட மயிலாஞ்சலியிடம் பேரமைதி.

“என்னடி ஆச்சு அங்கிட்டு. அவனும் வந்ததும் ரூமுக்குள்ள போயி கதவடைச்சிட்டான். நீயும் வந்ததுலேர்ந்து உம்முன்னு உட்கார்ந்துட்டு இருக்கவ! என்னன்னு சொல்லட்டி” என்று துளசி மயிலாஞ்சலியிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

மற்றவர்களும் என்னவானதென்று மாற்றி மாற்றி கேட்க, என்ன நடந்ததென்று தெரியாத மயிலாஞ்சலி பதில் சொல்ல முடியாது அமைதியாக அனைவரையும் ஏறிட்டாள்.

“இப்படி பார்த்தா என்ன அர்த்தம் அஞ்சலி?” என்று கொற்றவை கேட்க,

“பேசிட்டு போயிருக்காய்ங்க. முடிவை வீட்ல சொல்லுறேன்னு சொன்னாய்ங்கன்னு அந்தப்பொண்ணு அவீங்க வீட்ல சொல்லியிருக்கு. இப்போ மாப்பிள்ளை என்ன சொல்றாருன்னு போன் போடுறாய்ங்க… என்னன்னு பதில் சொல்ல?” என்றார் மாயவேல்.

“மாமா என்கிட்டவும் எதுவும் சொல்லல தாத்தா. பேசப்போன ரெண்டு நிமிஷத்துல வந்துட்டாங்க. என்னன்னு கேட்டதுக்கு பதிலே சொல்லல” என்றாள் மயிலாஞ்சலி. பாவமாக.

“உன்னைய எதுக்கு கூட அனுப்பினது? உன்கிட்ட அவன் எல்லாத்தையும் சொல்லுவான்னுதேன். இப்போ உனக்கு எதுவும் தெரியாதுன்னு சொல்ற?” என்று மாலதி பேச,

“இப்போ நீயே அவன்கிட்ட போயி என்னன்னு கேட்டுட்டு வா” என்றார் ராஜாத்தி.

“மாமாக்கு சொல்லனும்னா அவங்களே சொல்லுவாய்ங்க. இப்படி ஆளாளுக்கு சலம்பிக்கிட்டு நிக்காம அவங்கவங்க வேலையைப்போய் பாருங்க” என்று சத்தமாகக் கூறிய மயிலாஞ்சலி எல்லோரும் அமைதியாக இருக்கவே ஓடிவிட்டாள்.

“என்னாச்சுன்னு தெரியாம இப்போ பொண்ணு வூட்டுக்கு என்னன்னு தாக்கல் சொல்றது?” என்ற முத்து மாணிக்கம்…

“மாப்பிள்ளை எப்போ வாராரு அர்ச்சனா?” எனக் கேட்டார்.

நடக்கும் நிகழ்வுகளில் ‘இந்தப்பெண்ணும் அமையவில்லையோ’ எனும் எண்ணம் அர்ச்சனாவுக்கு மனதின் ஓரத்தில் மகிழ்வைத்தான் கொடுத்தது. தனது எண்ணம் உண்மையானால், அடுத்து தன்னுடைய ஆசையை எப்படி சொல்வதென்ற யோசனையில் உழன்றுக் கொண்டிருந்த அர்ச்சனா முத்துமாணிக்கம் கேட்டதை கவனிக்கத் தவறினாள்.

“மதினி” என்று கல்யாணி தொட்டு உலுக்க…

“ஆங்… என்ன… என்ன கேட்டீய்ங்க?” என்று திடுக்கிட்டார்.

“அண்ணே எப்போ வாராங்கன்னு ஐயா கேட்டாங்க” என்று காயத்ரி சொல்ல,

“வந்துகிட்டு இருக்காய்ங்க ஐயா. ராத்திரி சாப்பாட்டுக்கு வந்துடுவாய்ங்க” என்றாள் அர்ச்சனா.

“ம்ம்… அப்போ நீயி போய் உன் தம்பிக்கிட்ட பேசு” என்றார் முத்து மாணிக்கம்.

“நானா?” என்ற அர்ச்சனா, “என்னன்னு பேச?” எனக் கேட்டாள்.

“அடியே கூறு கெட்டவளே” என்ற கொற்றவை, “பொண்ணை பார்த்து பேச போனானே! ஒண்ணும் சொல்லாம ரூமுக்குள்ள போயிட்டான். பொண்ணு வூட்டுலேருந்து போன் வந்துக்கிட்டே இருக்கு. நீயி போய் என்னன்னு கேளு. உன்கிட்ட மறைக்கமாட்டானே” என்றார்.

“ம்க்கும்… ஆமா ஆமா என்கிட்ட மறைக்காமதேன் கயலுக்கு கண்ணாலம் கட்டி வச்சியான்” என்று அர்ச்சனா சத்தமாக முணுமுணுக்க, கயல்விழி ஹரிஷ் உடன் வண்டியில் வந்து இறங்கிய வேகத்திற்கு வீட்டிற்குள் வந்திருந்தாள்.

“நீயென்னடி இந்நேரத்துக்கு வேர்த்து விறுவிறுக்க வந்து நிக்கிறவ?” என்ற மாலதி, “செத்த தண்ணீ மொண்டாந்து தா ஆதிரா” என்றார்.

“அதெல்லாம் வேணாம்” என்ற கயல்விழி, “தீரன் வந்திருக்கானாம். பொண்ணு வூட்டுக்குத் தெரிஞ்சு, நேர்ல பார்த்து பேசியிருக்கான். எனக்கு யாரும் ஒத்த வார்த்தை சொல்லல” என்றாள். ஆதங்கமாக.

ஹரிஷ் உள்ளே வர, அனைவரும் வாங்க என்றிருந்தனர்.

“அவன் வந்ததுல கண்ணாலம் விஷயம் தான் மண்டைக்குள்ள ஓடிட்டிருக்கு. அதேன் உனக்கு சொல்ல மாறந்தாச்சு. இருந்தாலும் எப்படியோ விசயம் தெரிஞ்சு வந்துப்புட்டியே” என்றார் கொற்றவை.

“பொண்ணுக்கிட்ட பேசிட்டு எந்த பதிலும் சொல்லாம வந்துட்டிருக்கியான். அவீங்க எனக்கு போனு மேல போனு போட்டுட்டு இருக்காய்ங்க. இதுல என் அத்தை வேற, ஒரு சங்கதின்னா சட்டுன்னு முடிவை சொல்றதில்லையான்னு என்னை தாளிக்கிறாங்க. அவீங்களுக்கு நாமலா அவீங்க சொந்தத்துல பொண்ணு கேட்டுப்போவவும் வவுசாகிப்போச்சு” என்றாள் கயல்விழி.

“ரூமுக்குள்ளதேன் இருக்கான். நீயே போய் என்னான்னு கேட்டுக்கிட்டு வா” என்று துளசி சொல்ல…

“நீயி இரு… நான் போறேன்” என்றாள் அர்ச்சனா.

“இப்போதேன் என்னத்த பேசன்னு கேட்ட?” என்று துளசி கேட்க,

“செத்த சும்மான்னு இரும்மா” என்ற அர்ச்சனா, வேகமாக தீரனின் அறை முன்பு சென்று நின்றாள்.

கதவு மூடியிருக்க மெல்லத் தட்டினாள்.

அவனது அறைக்கு மயிலா மட்டுமே அடிக்கடி வந்து செல்ல… அவள் தானென்று நினைத்த தீரன்,

“தாப்பா போடல மயிலா… உள்ள வா!” என்றிருந்தான்.

கதவு திறந்த ஒலியில் மடிக்கணினியில் தலை கவிழ்ந்திருந்த தீரன் நிமிர்ந்து பார்க்க, நிச்சயம் அர்ச்சனாவை எதிர்பார்க்கவிலை.

சலனமற்று உணர்வுகள் குவிந்து பார்த்தான்.

“வேலையா இருக்கியாடே?” என்று அர்ச்சனா அருகில் வரவும்,

“இப்போதேன் என்னைய பார்க்கணும், பேசணும் தோணுச்சா?” என கலங்கிய விழிகள் அலைப்பாய கேட்டவன் முகத்தை தனது இதயத்தோடு அழுத்தி உச்சியில் இதழ் பதித்திருந்தாள்.

அன்னையின் ஸ்பரிசம் கிடைத்த குழந்தையாய், தாயாகிய அக்காவை இறுக்கி அணைத்திருந்தான்.

“உனக்கு எம்மேல இம்புட்டுக்கு கோவம் நீடிக்கும் நினைக்கல” என்று முகம் உயர்த்தி அர்ச்சனாவை பார்த்தவன், அவள் கண்ணீரை துடைத்து அழ வேண்டாம் என்பதைப்போன்று தலையசைத்தான்.

“உன்னைய இம்புட்டு வருசத்துக்கு ஒதுக்கி வச்ச எம்மேலதாம்டே எனக்கு கோவம்” என்ற அர்ச்சனா, “நீயா வருவேன்னு நெனச்சேன்” என்றாள்.

“அப்போ மாதிரி நான் வந்து நீயி முகத்தை திருப்பிக்கிட்டு போனின்னாக்கா என்னால தாங்க முடியாது அச்சும்மா” என்று சுணங்கியவனின் முகம் துடைத்த அர்ச்சனா, “அதேன் எனக்கு பதிலா எம் புருஷனும், எம் மவளும் உன்கூடவே இருந்தாய்ங்களே!” என்றாள்.

“யாரிருந்தாலும் நீயாகிட முடியாது” என்ற தீரன், “அன்னைக்கு நான் பண்ணது தப்புதேன். நீயி அடிச்சிருந்தாலும் வலிச்சிருக்காதோ என்னவோ? நான் பேச வந்தும் கோவமா போன… எவ்ளோ வலிச்சது தெரியுமா?” என்று தீரன் அன்றைய வேதனைக்கு கொஞ்சமும் குறைவில்லாது இப்போதும் கூறினான்.

“மயிலா தப்பு பண்ணியிருந்தா இப்படித்தேன் எங்கயோ போன்னு விட்டிருப்பியா?” என்று தீரன் கேட்க,

சிறுவனாய் தன் மடிதாங்கிய தம்பியாகத்தான் அக்கணம் அர்ச்சனாவின் கண்களுக்கு அவன் தெரிந்தான்.

“தப்புப்பண்ணிப்புட்டேன் தீரா” என்ற அர்ச்சனா, “அக்காவை மன்னிச்சிடுடே” என்றாள்.

“மன்னிப்பெல்லாம் கேட்க வேணாம். உன் மகளை மட்டும் எனக்கே எனக்குன்னு கொடுத்துப்புடு” என்றிருந்தான்.

கேட்க வேண்டுமென நினைத்தெல்லாம் தீரன் கேட்கவில்லை. அக்கணம் தன்னுடைய மனதை அக்காவிடம் வெளிப்படுத்த வேண்டுமென்ற எண்ணம் தன்னைப்போல் அவனை கேட்க வைத்திருந்தது.

தீரன் கேட்டதில் அர்ச்சனாவிடம் நொடி நேர ஆச்சரியம், அதிர்வு.

“ஆத்தாடி!” என்று வாயில் கை வைத்த அர்ச்சனா, “இதுதேன் பொண்ணு கேக்குற முறையாக்கும்?” என்று அவனின் கன்னத்தில் இடித்தாள்.

“கேட்க உரிமை இருக்கே! எப்படி கேட்டா என்ன? நான் கேட்டுட்டேன். நீயி கொடுத்துப்புடு” என்றான்.

“ரொம்பத்தேன்” என்ற அர்ச்சனா, “எனக்கும் இந்த விருப்பம் இருந்துச்சு தீரா. ஆனால் வூட்டு ஆளுங்க ரோசனை இந்தப்பக்கட்டு திரும்பவே இல்லையே! நான் சுதாரிக்கும் முன்ன உன் கண்ணாலம் வரை முடிவு பண்ணிட்டாய்ங்க. என்னயிருந்தாலும் உன் கண்ணாலத்துக்கு நானே தடையா இருக்கக்கூடாதே! அதேன் அமைதியா இருந்துப்புட்டேன்” என்றாள்.

“ஹ்ம்ம்… மாமா உன்கிட்ட சொல்லியிருப்பார் நெனச்சேன்.”

“அவருக்குத் தெரியுமா உன் மனசு?”

“உன்கிட்ட இப்போ சொன்னமாறிக்கூட அவர்கிட்ட சொல்லல. அவரே கண்டுபிடிச்சிட்டாரு. நேர்ல வாடே பேசிப்போம் சொன்னாரு. இங்க வந்தா, மாமாவுக்கே தெரியாம எல்லாம் ஏற்பாடாகியிருக்கு” என்று பெருமூச்செரிந்தான்.

“மாமா என்கிட்ட ஊருக்கு போகுமுன்ன உன் மனசு வச்சுதேன் என் ஆசை கண்டிப்பா நடக்கும் சொன்னாரா? வரட்டும் பேசிக்கிறேன். அஞ்சலி உனக்குத்தேன். நான் இப்போவே எல்லார்கிட்டவும் பேசுறேன்” என்று அர்ச்சனா வேகமாக நகர,

“அச்சும்மா நில்லு” என்று அவளின் கை பிடித்து நிறுத்தியிருந்தான்.

“ஷ்ஷ்ஷ்… மறந்தே போயிட்டேன்” என்று நெற்றியில் தட்டிக்கொண்ட அர்ச்சனா, “சாயங்காலம் கோவிலுக்கு போனியே என்னடே ஆச்சு?” எனக் கேட்டாள்.

“அதை அப்புறம் சொல்றேன். இப்போ மொத நீயி உட்காரு” என்று தனக்கு அருகில் அவளை அமர்த்தியவன், “உன் ஆர்வத்தைக் கொஞ்சம் கட்டி வை. எல்லார்கிட்டயும் பேசுமுன்ன மயிலாகிட்ட நான் பேசணும். என் விருப்பத்துக்கு அவள் ஓகே சொன்னாதேன் மத்தவங்ககிட்ட பேசணும். இல்லைன்னா இதை நமக்குள்ளே முடிச்சிப்போம்” என்றான்.

“அவளுக்கு என்னையவிட மட்டுமில்ல… இந்த உலகத்திலே உன்னையத்தேன் அதிகம் புடிக்கும்” என்றாள் அர்ச்சனா.

“இந்த பிடித்தம் வேற அச்சும்மா” என்ற தீரன், எப்படி சொல்வதென்று தயங்கி, “உனக்கு மாமாவை பார்த்ததும் தோணுச்சே அந்த மாதிரி. என் உசுருக்குள்ள அவள் நுழைஞ்ச மாதிரி, அவளுக்குள்ள நான் இருக்கனா தெரியணும்” என்றான்.

“நீயி மட்டும் சொல்லிப்பாரு. கண்டிப்பா சரின்னிடுவா(ள்). அவளுக்கு அம்புட்டுக்கு புடிக்கும் உன்னைய” என்ற அர்ச்சனா சில நாட்களாக முகத்தில் தங்கிவிட்ட வாட்டத்தை துறந்து பழைய பொலிவுடன் காணப்பட்டாள்.

“அவளுக்கும் என்னைய புடிக்கும் தெரியும். அது எந்தளவுக்குன்னு நான் மொத தெரிஞ்சிக்கணும். உங்களுக்காக எனக்கு ஓகே சொல்றது வேணாம். எனக்காக சொல்லணும். அவளுக்கும் எம்மேல காதல் இருக்கணும். அவக்கூட காதலோட வாழணும் அச்சும்மா” என்றிருந்தான்.

தீரனின் முகம் காட்டிய ஒளியில் அவனது காதலின் ஆழம் ஒளிர்ந்தது.

“சரி எப்போ பேசப்போற?” என்ற அர்ச்சனா, “எனக்கு மனசே குளிர்ந்து கெடக்குடே. எப்போடா உன் பக்கத்துல அஞ்சலியை நிக்க வச்சு பார்ப்பேனுட்டு இருக்கு” என்றாள்.

“கொஞ்சம் உன் ஆர்வத்தை அடக்கு அச்சும்மா. உன் வேகத்துக்கு டக்குன்னுலாம் என்னால சொல்ல முடியாது. அதுக்கான நேரத்துல கண்டிப்பா சொல்லுவேன்” என்றான்.

“உன் பொறுமைக்கு இங்காரும் காத்துக்கிடக்க மாட்டாய்ங்க. ஐயா உன் கண்ணால விஷயத்துல எப்போ என்ன முடிவு பண்ணுவாருன்னே தெரியல” என்ற அர்ச்சனா, “உனக்கு நாலு நா டைம் தாரேன். அதுக்குள்ள அஞ்சலிக்கிட்ட உன் விருப்பத்தை சொல்ற. நீயி அமெரிக்காவுக்கு போகும் போது அவளையும் உன் பொண்டாட்டியா கூட்டிட்டுப்போற. அம்புட்டுதேன்” என்றாள். கட்டளையாக.

“உனக்கு மாமியார் ரோலெல்லாம் செட் ஆவல அச்சும்மா…” என்று அவளின் கன்னம் பிடித்து இழுத்த தீரன், “இதுக்கு அப்புறம் வருவோம். இப்போ முடிக்க வேண்டிய பஞ்சாயத்து ஒன்னு இருக்கு. வா வெளியப்போவோம்” என்று அர்ச்சனாவுடன் அறையிலிருந்து வெளியில் வந்தான்.

எல்லோரும் அவனுக்காகத்தான் காத்திருந்தனர்.

“என்ன எல்லாரும் என் ரூமையே பார்த்திட்டு இருக்கீய்ங்க?” என்ற தீரன், கயல்விழி வந்திருப்பதைக் கண்டுவிட்டு,

“எப்படி கயலு இருக்க?” என்று அவளின் நலன் விசாரித்து, ஹரிஷ்ஷை அணைத்து விடுத்தான்.

“சாகித்தியா வரலையா?”

“அவள் என் மாமியார் கூட இருக்காடே” என்ற கயல்விழி, “நீயி மொத பொண்ணை பிடிச்சிருக்கா இல்லையான்னு சொல்லுடே! இங்க என் தலை உருண்டுடும் போல” என்றாள். கயல்விழியிடம் அதீத பதற்றம். அது அவள் மூலமாக வந்த வரன் என்பதாலென அனைவருக்கும் புரிந்தது.

எல்லோருமே அவனது பதிலுக்காகக் காத்திருப்பது தெரிந்தது.

“பொண்ணு எனக்கும் பிடிச்சிருக்கணும் அப்படின்னு இங்க யாரும் நெனச்சமாறி தெரியலையே!” தீரன் சொல்லிட,

“அதெப்படிடே இல்லாமப்போவும்” என்றார் மாயவேல்.

“நாங்க சரின்னாக்கா நீயி மறுக்கமாட்டேன்னுதேன் எல்லாம் ஏற்பாடு பண்ணோம் தீரா” என்றார் கனகவேல்.

“எஸ் நீங்க சொல்லி எனக்கும் சரின்னாக்கா கண்டிப்பா மறுப்பு இருக்காது என்கிட்ட” என்றான் தீரன்.

“இப்போ என்னடே… நாங்க சொல்லி உனக்கு இது சரிவரும் தோணலையாக்கும்?” என்றார் ராஜவேல்.

“ஆமா சித்தப்பா! இது சரி வராது.” தீரன் இப்படி பட்டென்று சொல்வானென்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

“ஏன் சரிவராது?” முத்து மாணிக்கம் இருக்கையை விட்டு எழுந்தவராக கணீரெனக் கேட்டார்.

“எனக்கு பொண்ணு புடிக்கல. அவ்ளோதேன் காரணம்” என்றவன், வாயிலில் நின்றிருந்த ரத்னவேலுவை கண்டவனாக,

“மாமா” என்று சிறுவனாக அவரருகில் ஓடியிருந்தான்.

“தங்கப்புள்ள” என்ற ரத்னவேலு தீரனின் முகம், தோள், கைகள் என தொட்டுத் தடவி, அவனை தன்னோடு அழுத்தமாக அணைத்திருந்தார்.

பார்த்திருந்த யாவருக்கும் தீரனிடத்தில் தாங்கள் தவறவிட்ட நெருக்கம் புரிந்தது. இருவருக்குமிடையேயான அன்பு அருகருகே இல்லையென்றாலும் இடைப்பட்ட காலத்தில் எத்தனை பிணைப்பைக் கொண்டுள்ளது என்பதும் புரிந்தது.

“கோவத்துல விலகி நின்னிருக்க கூடாதோ?” மாயவேல் தன்னுடைய தந்தையிடம் மெல்லியக்குரலில் கூறிட,

“அப்பனா வருத்தப்படுரியாக்கும்?” என்றார் முத்து மாணிக்கம்.

“என்ன இருந்தாலும் நம்மகிட்ட அவன் இப்படி ஓடிவரலையே ஐயா” என்ற மாயவேல், “தப்பு நம்ம மேல. மாப்பிள்ளை காட்டிய நானிருக்கேங்கிற நெனைப்பை நாம கொடுக்காம விட்டுப்புட்டோமே! இப்போ வருந்தி பிரயோசனமில்லை” என்றார்.

“எப்படியிருந்தாலும் அவன் உம் மகங்கிறது மாறாதுடே” என்றார் முத்து மாணிக்கம்.

“மாமா மேல ரொம்பத்தேன் பாசம் போல?” அஞ்சனைதேவி இருவரின் உணர்வுகள் படிந்த முகம் கண்டு கேலி செய்தாள்.

“உனக்கு அதுல என்னட்டி பொறாமை?” என்ற கொற்றவை,

“அவன் ஏன் அந்தப்பொண்ணை வேணாமின்னு சொல்லுறான்னு கேட்டுச் சொல்லுங்க மாப்பிள்ளை” என்று ரத்னத்திடம் முறையிட்டார்.

“இதுல நான் கேட்க என்னயிருக்கு?” என்று ரத்னவேலு குடும்பத்தாரிடம் பேச ஆரம்பிக்க, அவருடன் வந்திருந்த தன்னுடைய அண்ணன் ஆதியிடம் ஒன்றிவிட்டான் தீரன்.

“அவனுக்கு சரி வராதுன்னு தோணுச்சின்னாக்கா… நம்ம இஷ்டத்துக்கு பண்ண, கண்ணாலம் விளையாட்டு இல்லையே! அவென் மனசுக்கு என்னவோ அதை செய்யுங்க” என்றார் ரத்னம்.

தான் கூட தனது மகனின் மனமென்று பார்க்கவில்லையே என மாயவேலுக்கு ரத்னத்தின் வார்த்தைகள் குற்றவுணர்வைக் கொடுத்தது.

“ஒத்து வாராததுக்கு காரணம் என்னன்னு சொல்ல சொல்லுடே” என்றார் முத்து மாணிக்கம்.

“சொல்ல முடியும்னா சொல்லியிருப்பானே! காரணம் அந்தப்பொண்ணு பக்கட்டு இருக்கலாம். அதை நாம எப்படி சொல்றதுன்னு தீரன் நெனைக்கலாம்” என்றார் ரத்னவேலு.

அனைவருக்கும் ரத்னம் அளவுக்கு தீரனை தாங்கள் யாரும் புரிந்து வைத்திருக்கவில்லை என்றே அக்கணம் தோன்றியது.

“இதுதான் உன் முடிவா தீரா?”

ஆதியுடன் பேசிக்கொண்டிருந்த தீரன்,

“ஆமா ஐயா” என்றிருந்தான்.

“சரிடே… இது நா வரைக்கும் உன்னைய புரிஞ்சிக்காம தள்ளி வச்சிட்டோம். இதுக்கு மேலயும் அப்படி எதையும் செய்ய வேணாமாட்டிக்கு. நான் பொண்ணு வூட்டுல பேசிக்கிறேன்” என்று அப்பேச்சினை முடித்து வைத்தார் முத்து மாணிக்கம்.

“அப்போ அவனியாபுரத்துல ஒரு பொண்ணு இருக்குன்னு தரகர் சொன்னாரே! அதை பாப்போமோ?” என்றார் கொற்றவை.

“இல்லை வேண்டாம்” என்ற முத்து மாணிக்கம், “நம்ம அவசரத்துக்குதேன் எல்லாம் தடையாவுதாட்டிக்கு. பொறுமையா செய்வோம். பார்த்த ரெண்டு இடமும் ரொம்ப நல்ல இடம். என்னவோ தகையல. அவனுக்கு குரு பலன் வரலையோ என்னவோ? அவசரப்படாம நிதானமா பார்ப்போம். இப்போதைக்கு கொஞ்ச நா தீரன் கல்யாணப் பேச்சை நிறுத்தி வைப்போம்” என்றார்.

தீரனிடத்தில் பெருத்த ஆசுவாசம்.

அவன் முகம் காட்டிய பாவனையை கண்டுகொண்ட அரவிந்த், ‘அப்படியும் இருக்குமோ?’ என்று சிந்தித்தான்.

அரவிந்தின் பார்வையை உணர்ந்த தீரன் முகத்தை மாற்றிக்கொண்டான்.

“அதேன் இந்த சம்மந்தம் வேணான்னு முடிவாகிப்போச்சே. நீயி உன் விருப்பத்தை சொல்லுக்கா.” அருகிலிருந்த அர்ச்சனாவிடம் மெல்ல கிசுகிசுத்தான் அரவிந்த்.

“இப்போவே பேசணும்னு அவசரமில்லடே. தேதி வரை முடிவாகியிருந்த விஷயம்… இல்லைன்னு ஆன சங்கட்டம் கொஞ்சம் அடங்கட்டும். பொறவு பேசுவோம்” என்ற அர்ச்சனாவுக்கு அந்த நொடியே பேசிட மனமும் வாயும் பரபரத்தது. இருப்பினும் தீரன் கேட்டுக் கொண்டதற்காக அமைதியாக இருந்தாள்.

அவளின் அமைதியில் அடுத்த இடியை இறக்கியிருந்தார் முத்து மாணிக்கம்.

“அஞ்சலி கேட்டுகிட்ட மாதிரியே வீட்டோட இருக்க ஒரு சம்மந்தம் வந்திருக்கு. சாயங்காலந்தேன் தாக்கல் வந்துச்சு. தீரன் விஷயம் ஒரு முடிவுக்கு வந்ததும் சொல்லுவோமின்னு இருந்தேன்” என்ற பெரியவர், “நாளன்னைக்கு நாள் நல்லாயிருக்கேன்னு பொண்ணு பார்க்க வரச்சொல்லிட்டேன்” என்றதோடு, “பெத்தவைங்களுக்கு சம்மதந்தான?” என்றவர், பதிலை எதிர்ப்பார்க்காது, “ஆக வேண்டியதைப் பாருங்க” என்று சென்றிருந்தார்.

error: Content is protected !!
Scroll to Top