தூரமே தூரமாய் 5

தூரமே தூரமாய் 5

ஒரு பிரிவு…
பெரிதாய் என்ன செய்துவிடப்போகிறது?

அத்தனை எளிதாக பதில் சொல்லக்கூடிய கேள்வியா இது.

பிரிவு தானே என்று சாதாரணமாக நினைத்திட வேண்டாம்.

பேசிய வார்த்தைகள் மௌனமாய் மனதைக் கொல்லும்.
ஒன்றாக கை கோர்த்து பழகிய நாட்கள் யாவும் ரணமாகும். பசியின்றி உடல் மட்டுமல்ல, அவன்(ள்) இன்றிய நாட்கள் உயிர் வதையாகும். தூக்கங்கள் தூரமாய், இன்பங்கள் இல்லாமல், புன்னகை புதைந்து, நினைவுகளின் காட்சிகளை நினைவுக்கூறும். கண்கள் சிதைந்து, தன்னை தானே வெறுக்க நேரிடும்.

உன்னை நீயே வெறுத்தபின் வாழவும் தோன்றுமோ? சாகவும் முடியாது நாட்கள் யாவும் நடைபிணமாக நகரும்.

மொத்தத்தில் செத்துக்கொண்டே வாழ்ந்து கொண்டிருப்பாய்.

தமிழ்நாட்டின் எல்லையைத் தொட்டது முதல் மனதின் மேலெழும்பும் அலைப்புறுதலை கட்டுக்குள் கொண்டுவர முடியாது தன்மீதே பொங்கும் கோபத்தை காரின் வேகத்தில் காண்பித்தான் ருத்விக்.

“அப்பா… கோ ஸ்லோவ்.”

ருதுவிற்கு அருகில் அமர்ந்திருந்த வேங்கடம் பலமுறை சொல்லியும் கேட்காதவன் தேஷ்ஷின் குரலுக்கு உடனே பிரதிபலித்தான்.

தன்னவளின் சுவாசம் பரவிக் கிடக்கும் இடத்தில் இனி தானும் சுவாசிக்க இருக்கிறோம் என்பதே ருதுவின் நிலையின்மைக்கு காரணம்.

அவளைப்பற்றி தெரிந்துகொண்டால், அவளுடன் வாழ நெஞ்சம் ஏங்கிடும். தவிப்புகள் அடங்காது அவளை நாடிச் சென்றிடுவோமோ என பயந்தே, அவளைப்பற்றி தெரிந்துகொள்ள பல வாய்ப்புகள் இருந்தும்… தவிர்த்து நாட்களைக் கடத்தியவனுக்கு, இனி அவள் வாழும் ஊரில் தான் தன் வாழ்வு என்பதிலே மூச்சுமுட்டியது.

சாலையின் ஓரம் வண்டியை நிறுத்தி இறங்கியவன், இடையில் கை குற்றி காற்றினை இழுத்து வாய் வழி இதழ் குவித்து வெளியேற்றியவனாக தன்னை சமன் செய்திட முயன்றான்.

அவனது உணர்வுகளை பெரியவர்களால் உள்வாங்கிட முடிந்தது.

“இதுக்கே இப்படி கஷ்டப்படுறான். அவனை கஷ்டப்படுத்தி அங்க போகனுமா அம்பிகா?”

தேஷ் வேடிக்கை பார்ப்பதை உறுதி செய்துகொண்டு வேங்கடம் அம்பிகாவிடம் கேட்டார்.

“வலிக்கிதுங்கிறதுக்காக காயத்துக்கு மருந்து போடாம விட்டுடுவீங்களா?”

சிறு கேள்வி பலவற்றை புரிய வைத்திட வேங்கடம் அமைதியாகினார்.

‘இனி இதுதான் நிதர்சனம். இங்கிருந்துதான் ஆக வேண்டும்.’ இரண்டு நாட்களாக மனதில் உருப்போட்ட ஒன்றை மீண்டும் ஆழமாக பதிய வைத்துக்கொண்டு வண்டிக்கு அருகில் வந்தான் ருத்விக்.

“இன்னும் ஒன் ஹவர் டிராவல் தான். நீங்க டிரைவ் பன்றீங்களாப்பா?”

ததும்பும் மனதில் வண்டியை செலுத்த அவனால் முடியாது என்று அவனே அறிந்திருக்க… வேங்கடத்திடம் கேட்டான்.

அவருக்கு அவனை புரியுமே! மறுநொடி இறங்கி ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தார்.

பக்கத்து இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவன் கண்களை இறுக மூடிக்கொண்டான்.

உள்ளம் மட்டும் ‘லேஷஸ்’ என்று ஓயாது முணுமுணுத்துக் கொண்டே இருந்தது.

மூடிய கருவிழிகளுக்குள் அவனது உயிரான இமையாள், இமை சிமிட்டிட பட்டென்று விழி திறந்து நிமிர்ந்து அமர்ந்தான்.

ருதுவை ஒரு பார்வை பார்த்த வேங்கடம் வாகனத்தை சீராக இயக்கிட,

“உங்களுக்கு குவாட்டர்ஸ் கேட்டிருக்கீங்களா?” எனக் கேட்டான் ருது.

“நான் என் பையன் வீட்டில் தங்கலான்னு வேணாம் சொல்லிட்டேன்” என்றார் அவர்.

“தேன்க்ஸ் ப்பா” என்ற ருது, “எனக்கும் உங்களோடவே இருக்கணும். ஒரே வீட்டில்” என்றான்.

ருதுவின் எல்லாம் தெரிந்த அம்பிகாவுக்கு, அவன் இதையும் கடந்து வர வேண்டுமென்கிற எண்ணம் தான்.

“எல்லாம் சரியாகும் ருது.”

முன்னால் கை நீட்டி ருதுவின் தோள் தொட்டு அம்பிகா சொல்ல…

“எதுவும் சரியாக வேண்டாம்மா” என்று தேஷ்ஷை திரும்பிப் பார்த்தான் ருது. அவன் அம்பிகாவின் மடியில் தலை வைத்து உறங்கியிருந்தான்.

“அப்போவே எளிதா சரி செய்திருக்கக்கூடிய விஷயம் தேஷ்” என்று அம்பிகா வருத்தமாகத் தெரிவித்தார்.

“ஆமா செய்திருக்கலாம். ஈசியா ஹேண்டில் பண்ணியிருக்கலாம். ஆனா அப்போ நான் இருந்த சூழல்” என மென் முணுமுணுப்போடு கண்களை மூடியவனின் அகத்தில் கண்ணீர் தடம்.

பெற்ற தாய் தந்தையரின் கண்ணீருக்கு முன் ருதுவிற்கு காதல் தெரியாமல் போனது.

‘உன்னை நான் பார்த்திடவே கூடாதுடி.’ மனம் நினைப்பதெல்லாம் நடந்திடுமா என்ன? வேண்டாமென்பது தானே வேண்டுமென்பதாகவும் இருந்திடும்.

___________________________

இனியன் நோயாளிகளின் சிகிச்சை முடித்து அமைதியாக அமர்ந்திருந்தான். அவனின் மனதில் பலதும் ஓடிக்கொண்டிருந்தது.

தங்கையின் வாழ்வை செம்மை படுத்திட வேண்டும். பெற்றோரின் வருத்தம் போக்கிட வேண்டும். இவ்விரண்டிலுமே பல சவால்கள் அடங்கியிருப்பதை உணர்ந்தே இருந்தான்.

இமையாள் முடிந்த காதலிலிருந்து மீண்டுவிட்டால் போதும். யாவும் சரி செய்திடலாம். ஆனால், அதுதானே இங்கு நடக்க இயலாத காரியம்.

என்ன செய்து தங்கையை மீட்கப்போகிறேன் என்பதில் மூழ்கிப்போனான்.

இனியனுக்கு கல்லூரி நண்பர்கள் பலர் இருந்தாலும், அவன் மனதால் நெருக்கமாக இருந்தது ருதுவிடம் தான். அவனது நட்பு கிடைத்தப் பின்னர் எதுவொன்றென்றாலும், அது வருத்தமோ, மகிழ்வோ ருதுவிடம் சொல்லியே பழக்கப்பட்டவனுக்கு, ருது காணாமல் போனப்பிறகு அதீத வலி. யாரிடமும் எதையும் வெளிப்படையாக பகிர்ந்துகொள்ள முடியாது, ருதுவின் மின்னஞ்சலிடம் அனைத்தையும் கொட்டிக்கொண்டிருந்தான். தற்போது அதுவும் முடியாமல் எங்காவது முட்டிக்கொள்ளலாம் போல் மனம் அழுத்தம் பெறுவதை சீர் செய்ய முடியாது தனக்கு எதிரே இருக்கும் சுவரை வெறித்தவனாக அமர்ந்திருக்கிறான்.

‘இப்படியே உட்கார்ந்திருந்தா எல்லாம் சரியாகிடுமா?’ என்று அங்கேயே அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளை பார்வையிட்டு வீட்டுக்கு கிளம்பலாம் என இருக்கையை விட்டு எழுந்திட… முதன்மை மருத்துவர் அவனைத்தேடி வந்தார்.

“ஹாய் இனியன்.”

“ஹலோ டாக்டர். எனித்திங் சீரியஸ்?”

“நத்திங் மேன். தேர்ட் இயர்க்கு கிளாஸ் இருக்கு. பீடியாட்ரிக் சிலபஸ். எனக்கு அர்ஜெண்ட் சர்ஜரி ஒன்னு இருக்கு. உன்னோட டிப்பார்ட் தானே! மேனேஜ் பண்ண முடியுமா?” என தன்மையாகவே கேட்டார்.

அவர் ஜோசப். அந்த கல்லூரி மருத்துவமனையின் டீன். சொல்லப்போனால் இனியனும் அவரிடம் படித்த மாணவன். அவரின் உயரத்திற்கு அவர் கட்டளையாகவே சொல்லியிருக்கலாம். அவர் வேண்டுதலாகக் கேட்டிட மறுக்க முடியாது ஒப்புக்கொண்டான்.

“ஓ… தேன்க்ஸ் மேன். தேன்க் யூ.” இனியனின் தோளில் தட்டிச் சென்றார்.

இனியனும் இருக்கும் மனநிலையில் இப்படியொரு மாற்றம் மனதிற்கு நன்றாக இருக்குமென்று, கல்லூரி கட்டிடம் இருக்கும் பகுதியை நோக்கிச் சென்றான்.

மருத்துவன் என்பதற்கான அடையாளமான ஸ்டெத் மற்றும் வெண்ணிற கோட் என எதுவுமின்றி, கை முட்டி வரை மடிக்கப்பட்ட சட்டை, கலைந்த முன்னுச்சி கேசம், ஒரே இடத்தில் அமர்ந்து மதியம் வரை வேலை பார்த்த சோர்வென களைந்த தோற்றத்தில் மருத்துவமனை கட்டிடத்திலிருந்து எதிரே இருந்த கல்லூரி பகுதிக்கு மைதானத்தின் வழி நடந்து சென்று கொண்டிருந்தான்.

ஆங்காங்கே மரத்தடியில் மாணவர்கள் நின்று பேசியபடியும், சிரித்து அரட்டை அடித்துக்கொண்டும் இருந்தனர்.

அதனை மென் சிரிப்புடன் பார்த்தபடி வந்த இனியனுக்கு அவனது கல்லூரி நாட்கள், அதுவும் அவனது வகுப்புகள் முடிந்து வரும்வரை அவனுக்காக ருது வந்து காத்திருந்த தருணங்கள் நெஞ்சில் அலை மோதின.

ருது இமையாளை காதலித்த நாட்களில் இமையாளை தினமும் சந்தித்தானோ இல்லையோ நண்பனை காண தினமும் இனியனுக்கு வகுப்பு முடியும் நேரம் வந்திடுவான்.

இங்கெல்லாம் வந்தால் ருதுவின் நினைவு அதிகம் வருமென்பதாலே மருத்துவமனை பகுதியோடு தன் எல்லையை முடித்துக்கொள்வான் இனியன். இன்று தவிர்க்க முடியாது வந்திருக்க… நண்பனின் நினைவுகள் அதிகம் தோன்றியது.

ஒருவித கசந்த முறுவலோடு முன்னேறினான்.

அருகில் கேட்ட பெண்களின் குரல் தன்னைப்போல் அவனது செவிகள் உள்வாங்கியது.

“எவ்வளவு நேரம் ஷிவன்யா. டைம் ஆகுது. டீன் கிளாஸ். பெல் அடிக்கும் முன்ன கிளாஸ் போகணும்” என்ற பெண்ணின் குரலில் அத்திசை நோக்கிட, அப்பெண்ணின் பின் உருவம் மட்டுமே இனியனுக்கு தெரிந்தது.

அப்பெண் ஒரு பெண்ணை மறைத்தபடி நின்றிருந்தாள். அவள் கூறிய ஷிவன்யாவாக இருக்கும்.

“ப்ளீஸ் தியா. திட்டாதே! என் பட்டுக்குட்டில!”

கொஞ்சலாக ஒலித்த இனிய குரலில் இனியனின் நடை நின்று மெல்ல தொடர்ந்தது. அவனுக்கு அக்குரலை மீண்டும் கேட்க வேண்டும் போலிருந்ததோ! முகம் பார்க்கும் சிறு ஆவல் பிறந்ததோ!

“இந்த புக்ஸ் கிளாஸ் முடிந்து லைப்ரரியில் ரிட்டர்ன் கொடுக்கணும் தியா. அல்ரெடி த்ரீ டைம்ஸ் ரிட்டர்ன் பேக் எடுத்துட்டேன். இன்னைக்கு கண்டிப்பா ரிட்டர்ன் பண்ணியே ஆகணும். ஃபைவ் மினிட்ஸ்” என்று தியாவின் கன்னத்தை பிடித்து ஆட்டியபடி அவள் முகம் சுருக்கினாள். இனியனால் அவளின் முகம் காண முடியவில்லை. தியா முழுதாக மறைத்தபடி ஷிவன்யாவின் முன் நின்றிருந்தாள்.

‘இனியா என்னதிது? இப்போ நீ எதுக்கு இங்க வந்தாய்? இப்போ என்ன பண்ண நினைக்கிறாய்? இதென்ன புதிதாய்?’ தனக்குள்ளே பல கேள்விகள் கேட்டவனாக, தலையை உலுக்கிக்கொண்டு இனியன் நடையை எட்டி வைக்க…

“டைம் ஆச்சு பேபி. நீ ரிட்டர்ன் பண்ணு, நான் என் கார்டில் எடுத்துக் கொடுக்கிறேன்” என்று தியா சொல்வது நன்கு கேட்டது அவனுக்கு.

“ம்க்கும்… நீ பர்ஸ்ட் கார்ட் கொண்டு வந்திருக்கியா?” என ஷிவன்யா சிறு சிரிப்போடு கேட்டதும் அவனின் செவி தீண்டியது.

ஷிவன்யா கேலி செய்ததில் முறைத்த தியா, “போடி… நான் போறேன்” என்று வேகமாக நடந்து இனியனை தாண்டி செல்ல… அவனுக்கு இது தியாவாக இருக்குமென்று கணிக்க முடிந்தது.

“தியா ப்ளீஸ்… நில்லு” என்று நாலைந்து புத்தகங்களையும், கோட், ஸ்டெத், பை என கைகளில் பிடி கொள்ளாது அள்ளிக்கொண்டு ஷிவன்யா ஓடி வரும் அரவம் திரும்பி பார்க்காமலே இனியன் உணர்ந்தான்.

மைதானம் முடிந்து கட்டிடத்திற்குள் நுழைந்த இனியன், முதல் தளத்தில் இருக்கும் வகுப்பிற்கு செல்ல சில படிகளில் முன் ஏறியிருக்க, ஓடி வந்த ஷிவன்யா, இனியனின் தோள் உரசியபடி, அவனைத் தாண்டி இரு படி ஏறியிருக்க, கால் இடறி பின்னால் சரிந்தாள்.

“ஹேய் கேர்ள்… பார்த்து” என்று சடுதியில் இனியன் அவளை பின்பக்கமாக தன் இதயம் தாங்கியிருந்தான்.

அவள் கையில் வைத்திருந்த யாவும் ஆங்காங்கே படிகளில் சிதறியிருந்தன.

விழ இருந்த பயத்தில் கண்களை இறுக மூடியிருந்த ஷிவன்யா, விழவில்லை என்றதும் நிம்மதியாக இமை திறக்க,

“ஆர் யூ ஓகே?” என்றபடி அவளின் முதுகில் கை வைத்து தனக்கு முன்பாக நிமிர்த்தி நிற்க வைத்தான்.

“சாரி… சாரி பாஸ்” என்றவளால் இனியனின் முகம் விடுத்து விழிகளை அகற்றிட முடியவில்லை. ஏதோவொன்று அவளை அம்முகம் கவர்ந்தது. இன்னதென்று அவளால் பிரித்தறிய முடியவில்லை. பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது.

“ஹலோ…” அவளின் அசையா விழிகளில் நொடிப்பொழுது தொலைந்து மீண்டவன், அவளின் முன் கை அசைத்து நிகழ் மீட்டான்.

“சாரி… சாரி… கிளாஸ் டைம் ஆச்சு…” என்றவள் திரும்பி படியேறிட,

“இதெல்லாம் வேண்டாமா?” எனக் கேட்டான் இனியன். படிகளில் கிடந்த அவளின் உடைமைகளைக் காட்டி.

“ம்ப்ச்… சாரி, கவனிக்கல” என்று திரும்பியவள், “சாரி” என விழுந்தவற்றை எடுக்க, இனியன் உதவி செய்தான்.

“தேன்க்ஸ்… தேன்க் யூ” என்றவள், வேகமாக சென்றிட, அவன் நின்றிருந்த படியில் அலைப்பேசி கிடப்பதை அப்போதுதான் கண்டான்.

“என்ன அவசரமோ?” என்று குனிந்து எடுத்தவனின் விரல்களின் தொடுதலால் கடவுசெயல் இல்லாமல் இருக்க, திரை நீங்கி அலைப்பேசி ஒளிர்ந்தது.

திரையில் மிளிர்ந்த புகைப்படத்தில் இனியனின் விழிகள் அகல விரிந்து… அதிர்ச்சி, ஆச்சரியம், குழப்பம் என பல பாவனைகளை ஒருங்கேக் காட்டியது.

அந்நேரம் சரியாக தகவல் வந்ததற்கு அடையாளமாக மேலே அறிவிப்பு எம்பி குதித்தது.

அறிவிப்பு வந்த எண்ணின் பெயர் கவனிக்க வைத்ததால்…

உள்ளே செல்லாது… விரலால் கீழிறக்கினான். தவறென்று மனம் கூவியபோதும் செய்திருந்தான்.

“ரீச்டு” என்று வந்திருந்தது.

வகுப்பு மணியின் ஓசையில் சுயம் பெற்று அலைப்பேசியை சட்டைப் பையில் வைத்தவன் வகுப்பினை நோக்கிச் சென்றான்.

நிச்சயம் இத்தருணத்தை இனியன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதுவரை பெண்களை கவனித்து பார்த்திடாத, தான் இன்று ஒரு பெண்ணின் குரலில் ஈர்க்கப்பட என்ன காரணமென்று நினைத்ததற்கு பதில் அவனது சட்டைப் பையில்.

இங்கு காரண காரியமின்றி எதுவும் நடப்பதில்லை.

யாரென்றே அறிந்திடாத பல மனிதர்களின் வருகை நம் வாழ்வின் பாதையையே மாற்றி அமைத்துவிடும்.

தனக்குரிய வகுப்பிற்குள் இனியன் செல்ல, ஷிவன்யாவின் முகம் அதிர்வை காட்டியது.

“இவர் டாக்டரா?” தன்னைப்போல் கேட்டிருந்தாள்.

“லெக்ச்சர் எடுக்க வந்திருக்கார் அப்படின்னா டாக்டர் தானே?” என்று பதில் வழங்கிய தியா, “ஆள் நல்லாயிருக்கார்ல?” என்றாள்.

பார்த்ததும் இனியன் மீது ஏதோவொன்று ஈர்க்கப்பட்டிருந்த ஷிவன்யாவுக்கு தியாவின் இந்தப் பேச்சு ரசிக்கவில்லை.

“ஆமாம்… ஆமாம்…” என்று உதடு சுளித்து, புத்தகத்தில் கவிழ்ந்துவிட்டாள் ஷிவன்யா.

இனியன் சிறு அறிமுகத்திற்கு பின் வகுப்பு எடுத்து முடிக்கும் தருவாயில் தான் தலை குனிந்தே அமர்ந்திருந்த ஷிவன்யாவை கண்டான்.

வகுப்பு முடிந்ததும் வெளியேறுவதற்கு முன், “ஷிவன்யா” என்றழைத்து வெளியில் வருமாறு கை காண்பித்துவிட்டு சென்றான்.

“உனக்கு தெரிந்தவரா பேபி. சொல்லவே இல்லை” என்ற தியாவின் முதுகிலே அடித்துவிட்டு, ‘என்னை எதுக்கு கூப்பிடுறாங்க’ என்று யோசித்தபடி வெளியில் சென்றாள்.

“டாக்டர்…”

அவளுடைய அலைபேசியை எடுத்து நீட்டினான்.

“ஹோ… ஸ்டெப்ஸில் மிஸ் பண்ணிட்டனா? தேன்க் யூ டாக்டர்” என்று வாங்கிக்கொண்டாள்.

“நீங்க எங்க இருக்கீங்க?”

முதல் முறை பார்க்கும் பெண்ணிடம், அதுவும் அறிமுகமே இன்றி இப்படி கேட்பது தவறென்று தெரிந்தபோதும் அவனால் கேட்காமல் இருக்க முடியவில்லை. கிடைக்கும் வாய்ப்பை அவன் தவரவிட விரும்பவில்லை.

ஏன் எனும் விதமாக அவனை ஏறிட்ட போதும், ஏதோ ஒன்று அவனிடம் அவளை பதில் சொல்ல வைத்தது.

“ஹாஸ்டல்.”

“ஹோ, ஓகே” என்றவன், “யூ கேரியான்” என்று சென்றுவிட்டான்.

செல்லும் அவனையே பார்த்திருந்தவளின் விழிகளில் மென் ரசனை.

error: Content is protected !!
Scroll to Top