அத்தியாயம் 12
அண்ணன் தம்பிகள் மொட்டை மாடியில் கூட்டம் கூட்டியிருந்தனர்.
“நெசமாவாடே சொல்றீய்ங்க?”
ஆதி தன்னுடைய தம்பிகள் சொல்வதை நம்ப இயலாது கேட்டிருந்தான்.
“அட ஆமாண்ணே! இந்தப்பய மனசுல அப்படி நெனப்பு இருக்குமாட்டிக்கு” என்ற அன்பன், “அவன் அஞ்சலியை மனசுல வச்சிதேன் அந்தப்பொண்ணை வேணாமின்னுட்டியான்” என்றான்.
“அதில்ல காரணம்” என்ற அறிவன், “தீரன் மாமாகிட்ட பேசிட்டு இருந்ததைக் கேட்டேன். அந்தப்பொண்ணுக்கு அவீங்க சொந்தத்துல பையன் பார்த்து முடிவாகியிருக்கு. இது தெரியாம நம்ம கயலு தீரனுக்கு பேசியிருக்கு. தம்பி அமெரிக்காவுல வேலை பாக்குறான்னதும் பொண்ணோட அப்பா ஏற்கனவே முடிவான சம்மந்தம் வேண்டான்னு, நம்ம ஐயாவும் இவன் வந்ததும் கண்ணாலம் நடக்கணுன்னு காட்டுன அவசரத்துல சட்டுபுட்டுன்னு தேதியை குறிச்சாச்சு. அந்தப்பொண்ணு அதுக்குள்ள அந்தப்பையன் மேல ஆசைப்பட்டிருச்சுப் போல. தீரன்கிட்ட இப்போ நீங்க வேணாம் சொலிப்புட்டா எங்கப்பாரு அவருக்கே என்னைய கட்டி வச்சிடுவாருன்னு கெஞ்சியிருக்கு. இப்படி நான் சொன்னேன்னு எங்க அப்பாருக்கு தெரியக்கூடாதுன்னும் கேட்டிருக்கு. அதுக்காகத்தேன் அவன் எல்லார் முன்னுக்கவும் வெளிப்படையா சொல்லல” என்றான்.
“ம்ம்… அப்போ அந்தப்பொண்ணுக்கு இப்படியொரு கதையில்லாம தீரனுக்கு ஓகே சொல்லியிருந்தா என்னடே பண்ணியிருப்பான்?” ஆதி கேட்க,
“அப்பவும் நோ தான் சொல்லியிருப்பான். அவனுக்குத்தேன் அஞ்சலியை பிடிச்சிருக்கே” என்றான் அன்பன்.
“உறுதியா நம்பலாமாடே?”
“அது தெரியல…” என்ற அரவிந்த், “ஆனா அர்ச்சனா அக்காவுக்கு ரெண்டு பேரும் ஜோடி சேரனும் ஆசையிருக்கு” என்று தங்களுக்குள் நடந்த பேச்சு வார்த்தைகளைக் கூறியிருந்தான்.
“எங்களுக்குமே அவீங்க ரெண்டு பேருக்கும் கண்ணாலம் கட்டி வைக்கலான்னுதேன் தோணுதுண்ணே!” என்ற அன்பன், “அஞ்சலி வீட்டோட மாப்பிள்ளை கேட்டதுக்கு பின்னால தீரன் அவள் மனசுல இருப்பானோன்னு ஒரு எண்ணம்” என்றான்.
தீரன் வந்த அன்று அவனது பெட்டியை காரிலிருந்து இறக்கிய சமயம் அஞ்சலி அவர்களிடத்தில் கூறியதை அறிவன் தற்போது ஆதியிடம் கூறியிருந்தான்.
“அவ எதார்த்தமா சொல்லியிருக்கலாமே! அவளுக்குத்தேன் தீரனை எம்புட்டுக்கு புடிக்கும்னு நமக்குத் தெரியுமே” என்றான் ஆதி.
“எதுக்கும் நீயி அஞ்சலிக்கிட்ட கேளு மாமா! அவள் ஆமா சொல்லிப்புட்டா ரெண்டேருக்கும் வெளிய ஆள் தேட வேணாமே” என்றான் அரவிந்த்.
“அதுவும் சரித்தேன்” என்ற ஆதி, திடீரென கேட்ட சத்தமான சிரிப்பொலியில், மொட்டை மாடியிலிருந்து கீழே பார்க்க…
அஞ்சலி வண்டி ஓட்டிட, தீரன் அவள் பின்னால் அமர்ந்து வந்துகொண்டிருந்தான். இருவரின் முகத்திலும் அப்படியொரு சிரிப்பு.
அஞ்சலி வண்டியை நிறுத்திட இருவரும் இணைந்து வீட்டிற்குள் நுழைவதைப் பார்த்திருந்த ஆதிக்குமே அன்பன், அறிவன், அரவிந்த், கூறியது எத்தனை சரியென்று தோன்றியது.
“நம்ம குளக்கரைக்கு போய் வாராய்ங்க” என்ற அன்பன், “வந்ததுலேர்ந்து வீட்ல எல்லார்கிட்டவும் பேசினதோடு சரி. அஞ்சலியோடவேதேன் அவள் கூட்டிட்டுப்போற இடத்துக்கெல்லாம் சுத்திட்டு இருக்கான்” என்றான்.
“ஆமா அஞ்சலியும் எந்நேரமும் அவனோடதேன்” என்றான் அறிவன்.
“நான் அஞ்சலிக்கிட்ட பேசறேன்” என்றான் ஆதி.
“இன்னைக்கே பேசு மாமா! நாளைக்கு அஞ்சலியை பொண்ணுப்பார்க்க ஆள் வருது” என்று அரவிந்த் கூற,
“அப்படியெதுவுமிருந்தாக்கா…” என்று இழுத்த ஆதி, “அவீங்க கண்ணால விஷயமா இம்புட்டு நடக்குது… சம்மந்தப்பட்ட ரெண்டேருமே அமைதியாவுள்ள இருக்காய்ங்க” என்றான்.
“அவங்களுக்கு அப்படியொரு எண்ணமே இல்லாம இருந்தாலும். நாம் ஜோடி சேர்த்து வைப்போம். அஞ்சலிக்கு நம்ம வூட்டை வுட்டு வெளியப்போக ஆவாது. தீரனை கட்டி வச்சிட்டா, அவளுக்காகவாவுது அவனும் இங்கிட்டு நம்மளோடவே இருந்தாகணும். இனியும் அவனை தனியா விட முடியாது” என்றான் அரவிந்த்.
“ம்ம்… அஞ்சலிக்கிட்ட பேசிட்டு அப்பத்தா செவுளுல விஷயத்தை போட்டு விடுவோம். மத்ததை அப்பத்தாவே பார்த்துக்கும்” என்ற ஆதி, “நாலு பேருமே இங்கிட்டு இருக்கோம். தோப்பு, ஆலைக்கு போகலையா? ஐயா பார்த்தா வைவ்வாரு. அவங்கவங்க வேலைக்கு ஓடுங்க” என்று விரட்டினான்.
“நீயி வரலையாட்டுக்கு?”
“நான் ஒரு வாரம் செண்டு இப்போதாண்டே வூட்லே நிக்கிறேன். அது உனக்கு ஆவலைய?” என்ற ஆதி, “அஞ்சலிக்கிட்ட பேசப்போறேன்” என்று கீழிறங்கினான்.
“பிளான் எல்லாம் நல்லாத்தேன் இருக்குது சித்தப்பாஸ். ஆனால் அஞ்சலி அப்படி எதுவும் இல்லன்னு சொல்லிட்டா, பொறவு எப்படி வீட்ல சொல்லி கண்ணாலம் நடத்துவீய்ங்க?” என்று கேட்ட குரலில் மூவரும் யாரென்று பார்க்க, தண்ணீர் தொட்டிக்கு பின்னிருந்து வந்தான் அத்வத்.
“எல்லாம் ஒட்டுக்கேட்டியா?” அறிவன் கேட்டிட,
“எதுக்கு ஒட்டுக்கேட்கணும் சித்து? நீங்க பேசினதுதேன் நல்லா கேட்டுச்சே. நேத்து இங்கிட்டு விளையாடும் போது பந்து தொட்டிக்கு பின்னால ஓடிருச்சு. அதை எடுக்க வந்தேன். நாலு பேரும் ஒட்டுக்கா வந்து நான் இருக்கிறதை கவனிக்காம பேசிட்டீய்ங்க. நானுமே முழுசா கேட்கலான்னு அங்கிட்டே நின்னுட்டேன்” என்றான்.
“சின்னப்பையன் மாதிரியாடா பேசுற நீயி?” என்ற அரவிந்த், “இதை வூட்ல யார்கிட்டேயும் சொல்லிட்டு இருக்காத” என்றான்.
“நான் ஏன் சொல்லப்போறேன்” என்ற அத்வத், “எனக்கென்னவோ உங்க பிளான் நடக்காதுன்னு தோணுது” என்று ஓடியிருந்தான்.
“எனக்கும் அவன் சொல்றது சரின்னு படுதுண்ணே” என்றான் அன்பன்.
“பேசாம ரெண்டேருடைய சம்மதமும் இல்லாம நாமளா பேசி செஞ்சி வச்சிப்புடுவோம்” என்ற அறிவன் கூற்றை மறுத்த அரவிந்த், “ரெண்டேரும் அதிக பிணைப்புல இருக்காய்ங்க. நாமளா ஒன்னு செய்யப்போயி… எங்க மனசுல அப்படியொரு எண்ணமே இல்லன்னு சொல்லிட்டா வைய்யீ, அவீங்க உறவை, நெருக்கத்தை நாமளே கொறச்சாமாறி ஆகிப்போவும்” என்றான்.
“சரி சரி… ஆதிண்ணே அஞ்சலிக்கிட்ட பேசிட்டு என்னன்னு சொல்லட்டும். அஞ்சலி அப்படியெல்லாம் இல்லைன்னு சொல்லிட்டா, அர்ச்சனா அக்காவே அடுத்து நடக்க வேண்டியதை பார்த்துக்கிடும்” என்றான் அன்பன்.
***************************
“எனக்கு பரபரன்னு இருக்கு மாமா! ஆசையை வச்சிக்கிட்டு என்னத்துக்கு இந்தப்பய கம்முன்னு இருக்கான்னு தெரியல” என்று அர்ச்சனா கணவரிடம் குறைபட்டாள்.
“எதுக்கு அவசரப்படுற அர்ச்சனா. தீரன் அஞ்சலிக்கிட்ட பேசுறேன்னு சொல்லியிருக்கான்ல… அவன் பேசிட்டு என்னன்னு சொல்லட்டும். மத்தது பொறவு பார்ப்போம்” என்றார் ரத்னவேலு.
“என்னையவிட ஐயா அவசரமா இருக்காரு. அவருக்கு அஞ்சலி கண்ணாலத்தையும் தீரன் கண்ணாலத்தையும் பார்த்துப்புடனும். அதுக்குன்னு அவரு காட்டுற வேகம் எனக்குத்தேன் அச்சமாட்டு வருது” என்ற அர்ச்சனா, “நாளைக்கு பொண்ணு பார்க்க வாராய்ங்கன்னு வெறும் தகவலா மட்டும் சொல்றாரு. தீரன் விசயத்துல பட்டுபட்டுன்னு பண்ண மாதிரி நாளைக்கும் எதுவும் பணிப்புடுவாரோன்னு எனக்கு கெதக்குன்னு வருது” என்றாள்.
“என்ன தீவிரமான ஆலோசனை” என அர்ச்சனா பேசியதைக் கேட்டுக்கொண்டே வந்த தீரன் கேட்க,
“நீ ஏன்டா இம்புட்டு பொறுமையா இருக்க? இப்போயிருக்க பசங்கெல்லாம் லவ்வுன்னு எம்புட்டு வேகமா இருக்காய்ங்க… எனக்குன்னு வந்து வாய்ச்சீங்க பாரு” என்று அங்கலாய்த்து பேசினாள் அர்ச்சனா.
“அவசரப்பட்டா ஒரு காரியமும் சரியா நடக்காது அச்சும்மா…” என்றான்.
“இருந்தாலும் உன் பொறுமை ரொம்ப பொறுமைடே” என்றவள், “நாளைக்கு என்ன நடக்குமோன்னு இருக்கு எனக்கு” என்றாள்.
“என்ன நடக்கும்? ஒண்ணும் நடக்காது… நீயி சும்மா புலம்பிக்கிட்டு இருக்காத. நான் மயிலாக்கிட்ட பேசத்தேன் அவள் ரூமுக்குப் போனேன். ஆள காணோம். அவள் போனும் ரூம்லே இருக்கு. எங்க போயிருக்காள்?” என்று வினவினான்.
“ஆதி கூப்பிட்டான்னு போனாள்” என்று அர்ச்சனா சொல்ல,
“பின்னாடி மாமரத்துகிட்ட நின்னுதேன் பேசிட்டு இருக்காய்ங்க” என்றார் ரத்னவேலு.
வயலுக்கு சென்று வந்தவர் வீட்டிற்குள் வரும் முன்னர் அவர்களை கவனித்திருந்தார்.
“சரி…” என்ற தீரன், “பேசிட்டு வந்து சொல்றேன்” என்று வெளியேறினான்.
“இவள் எதுவும் சொதப்பிடாம இருக்கணும் மாமா” என்ற அர்ச்சனா ரத்னவேலுவின் கையை இறுக்கமாகப் பிடித்தாள். அதில் அவளது தவிப்புகள் தெரிந்தது.
“நிச்சயம் நீயி நினைக்கிறது நடக்கும் அர்ச்சனா. தீரனுக்கு அஞ்சலியால மறுப்பு சொல்ல முடியாது. அவன்மேல அவள் வச்சிருக்க பாசந்தேன் நமக்குத் தெரியுமே” என்றார்.
“ஆனா உங்க மச்சான்கிட்ட இதை சொன்னா… ரெண்டும் வேற வேறன்னு அளப்பான். கேட்கிற நமக்கு மூச்சி முட்டிப்போவும்” என்றாள்.
“அவன் மனசு, அவன் விருப்பம். சில எதிர்பார்ப்புகள் இருக்கத்தேன் செய்யும்” என்ற ரத்னம், “நான் ஐயாக்கிட்ட பேசிட்டு வரேன்” என்றார்.
“என்ன பேசப்போறீய்ங்க?”
“நாளைக்கு அந்த குடும்பம் பொண்ணு பார்க்க வூடு வரைக்கும் வந்த பொறவு நாம மறுக்கிறது சரி வராது. வரவச்சு அவமரியாத பண்ண மாதிரி ஆகிப்புடும். அதுக்குள்ள ஐயாகிட்ட பேசி, அங்களை வர வேணாம் சொல்லிடுறேன்” என்றார்.
“இதுவும் சரித்தேன்” என்ற அர்ச்சனா, “தம்பி அஞ்சலியை விரும்புறான்னு எதுவும் சொல்லாதீங்க. தீரனுக்கு அஞ்சலியை கொடுக்க நமக்குத்தேன் விருப்பம் இருக்கமாறி சொல்லுங்க. அந்த காலத்து ஆளு, காதல் அப்படின்னா, வேணுமின்னே எதுவும் காரணம் சொல்லி தட்டிக்கழிக்க வாய்ப்பிருக்கு. அரவிந்த் லவ்வுல என்னென்ன கிடுக்குப் பண்ணாரு” என்றாள்.
“ம்ம்…” என்று ரத்னவேலு, முத்து மாணிக்கத்தின் அறை பக்கம் செல்ல, கொற்றவை எதிர்பட்டார்.
“என்ன மாப்பிள்ளை ஆலைக்கு போவலியா?”
“போவணும் ஆத்தா” என்றவர், “ஐயா ரூம்ல இருக்காய்ங்களா?” எனக் கேட்டார்.
“அவருக்கு இன்னைக்கு மாச செக்கப்புல… பெரியவன் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போயிருக்கான். வர சாயங்காலம் ஆகிப்போவும்” என்றார் கொற்றவை.
“ஓ… சரிங்க ஆத்தா… ஐயாகிட்ட பேசலான்னு வந்தேன்.”
“எதும் சங்கதியா?”
“அப்படிலாம் இல்லங்க. நாளைக்கு அஞ்சலியை பொண்ணு பார்க்க வர சொன்ன குடும்பத்திப்பத்தி தெரிஞ்சிக்கத்தேன் பேசனுங்க. வேற ஒண்ணுமில்லை” என்று நகர்ந்தார்.
____________________________
இரவு உணவு மட்டும் எப்போதும் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்பது தான் அவர்களின் வழக்கம்.
இன்றும் அனைவரும் உணவு கூடத்தில் அமர்ந்திருக்க, தீரன் மட்டும் காணவில்லை.
அர்ச்சனாவின் பார்வை நொடிக்கு ஒரு தரம் தீரனின் அறையைத் தொட்டு வந்தது.
“எங்க சின்னவனை காண்கல?” கேசவன் கேட்க,
“என்னன்னு தெரியல. மதியமும் உண்க வரலையே” என்ற துளசி, “நீ போயி அவனை கூட்டியா அத்து” என்றார்.
“சாயங்காலம் கூட நான் டீ போட்டுக் கொண்டுப்போனேன். வேணாமின்னுட்டான்” என்றாள் அஞ்சனை.
“உண்க உட்கார்ந்தவனை எதுக்கு எழுப்புற” என்ற மாயவேல், அனைவருக்கும் தண்ணீர் எடுத்து வைத்துக் கொண்டிருந்த அஞ்சலியிடம், “நீ போ’த்தா” என்றார்.
அஞ்சலி தீரனின் அறைக்குச் செல்ல… அர்ச்சனா ரத்னவேலுவை அர்த்தமாக ஏறிட்டார்.
அர்ச்சனாவுக்கு மனமெல்லாம் கனத்துக் கிடந்தது. அழுது பார்த்திராத தன்னுடைய தம்பியின் கண்ணீரை கண்டது முதல் உள்ளம் வருந்தி உள்ளுக்குள் கதறிக் கொண்டிருக்கிறாள். அவளிடம் எதிர்பார்த்த விடயம் நடக்காது என்பதைவிட, தன்னுடைய தம்பியின் ஆசை முடிவுக்கு வந்ததை நினைத்துதான் அதீத கவலை.
அஞ்சலியிடம் பேசிவிட்டு வருகிறேன் என்று சென்ற தீரன் வெகு நேரமாகியும் என்ன நடந்ததென்று சொல்ல வராமலிருக்க, அர்ச்சனாவே அவனைத் தேடிச் சென்றார்.
தீரனின் அறை மூடியிருக்க… பிறகு வரலாமென திரும்பிச் செல்ல அடி வைத்திட, அறைக்குள் தீரன் யாரிடமோ கத்தி பேசும் சத்தம், அர்ச்சனாவை கதவை திறந்துகொண்டு உள்ளே செல்ல வைத்தது.
கதவு திறந்த வேகத்தில் திரும்பிப்பார்த்த தீரன், அர்ச்சனாவுக்கு தன்னுடைய முகத்தைக் காட்டாது மறுபுறம் திரும்பியிருந்தான்.
“யார்கிட்ட இவ்ளோ சத்தமா கத்திட்டு இருக்க தீரா?”
……
“நான் கேக்குறேன்ல?”
……
“தீரா!”
அவனின் தோள் தொட்டு திருப்பிய அர்ச்சனா கலங்கி சிவந்திருந்த அவனது விழிகள் கண்டு பதறினாள்.
“தீரா என்னடே” என்ற அர்ச்சனா கேட்டது தான், அக்கணம் அவளை இறுக்கி கட்டிக்கொண்டவனாக கதறித் துடித்திட்டான்.
“வலிக்குது அச்சும்மா” என்றவனின் வலியில் தோய்ந்து வெளிவந்த அவனது வார்த்தைகள் அவளின் உயிரை உருவியது.
“என்னய்யா… என்னத்துக்கு இப்படி உக்கி மறுகுற?”
“இது இவ்ளோ வலிக்குமா அச்சும்மா?” என்றவனின் அழுகை அவளின் மனதை கலங்கடித்தது.
“யாரு போன்ல… யாரோட பேசிட்டு இருந்த நீயி?”
அர்ச்சனா அறைக்குள் வரும்போது தீரன் அலைபேசியை காதில் வைத்திருக்கவே அவ்வாறு வினவினார். அழைப்பில் வந்த செய்தியில் தான் தவிக்கின்றானோ என நினைத்து.
“முடியல அச்சும்மா” என்ற தீரனின் உடல் தொய்ந்து தளர, அர்ச்சனா அவனை மடி தாங்கியவளாக தரை சரிந்தாள்.
“எஞ்சாமி அழுவாதடே… எனக்கு என் உயிரே பதறுதுடே” என்ற அர்ச்சனா, “நீயி இப்படி அழறத நான் பார்க்கத்தேன், இங்கிட்டு இம்புட்டு வருசம் செண்டு வந்தியா நீயி” என்று அரற்றினாள்.
“கொஞ்ச நாளா இருந்தாலும் மனசோட வேர் வரை நிறைஞ்சிட்டாள் அச்சும்மா. சட்டுன்னு இந்த வலியை ஏத்துக்க முடியல” என்று அர்ச்சனாவின் மடியில் முகம் புதைத்திருந்தவன் நிமிர்ந்துப் பார்க்க…
கண்ணீரால் சிவந்திருந்த அவனது முகம் அவளை வதைத்தது.
“என்னாச்சிடே?” என்ற அர்ச்சனா, தீரன் மீண்டும் அவளின் மடியில் கவிழ்ந்திட, அருகில் கிடந்த அலைபேசியை எடுத்துப் பார்த்தாள்.
ரிச்சி எனும் பெயரில் இன்னும் தொடர்பில் இருந்தது.
அர்ச்சனா காதில் வைக்க, ரிச்சர்ட் அந்தப்பக்கம், “தீரா” என்று அழைத்துக் கொண்டிருப்பது கேட்டது.
“ரிச்சி…”
ரிச்சி இதுவரை அர்ச்சனாவிடம் பேசியது இல்லை. ஆதலால் அவனுக்கு அவளது குரலை யாரென்று கிரகிக்க முடியவில்லை.
அஞ்சலி பேசும் போது ரிச்சியை அர்ச்சனா கவனித்திருக்க,
“நான் அர்ச்சனா” என்றிருந்தாள்.
தீரனுக்கு அர்ச்சனாவின் மீதிருக்கும் அன்பின் ஆழம் ரிச்சர்ட்டுக்கு தெரியுமென்பதால்,
“அக்கா தீரன்… தீரன் ஓகே தான?” என்று கேட்டான். அவனது குரலில் அதீத பதற்றம்.
“என்னய்யா என்னாச்சு? இப்படி சுருண்டு இவனை நான் பார்த்தது இல்லையே” என்ற அர்ச்சனா, “உன்கிட்ட என்ன பேசினான்?” எனக் கேட்டாள்.
“அது… அது வந்துக்கா” என்று சொல்வதா வேண்டாமாயென ரிச்சி இழுக்க, அவளிடமிருந்து அலைபேசியை வாங்கியிருந்தார் ரத்னவேலு.
“என்னடே?”
ரத்னத்தை கண்டுகொண்ட ரிச்சர்ட்,
“போன் பண்ணேன். அஞ்சலிக்கு நான் வேணாமாம் அப்படின்னு சொல்லிட்டு, இப்போவே நான் கிளம்பப்போறேன். என்னால இங்க இருக்க முடியாது. இருந்து நாளைக்கு அவள் இன்னொருத்தன் முன்னாடி போய் நிக்கிறதை என்னால பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டு அழறான். எனக்கு என்னன்னு ஒன்னுமே புரியல மாமா” என்றான் ரிச்சர்ட்.
தீரன், மாமா என்றழைப்பதால், ரிச்சர்ட்டும் அவரிடம் பேசும் போது மாமா என்றே அழைக்க பழகியிருந்தான்.
“ம்ம்…”
“அவன்… அவன் அங்க ஓகே தான மாமா?”
“நான் பார்த்துக்கிறேன் ரிச்சி. நீயி வெசனப்படாம இரு” என்று அலைபேசியை வைத்த ரத்னவேலு,
“தீரா” என்று அர்ச்சனாவின் மடியிலிருந்த அவனது முகத்தை தூக்கி அவனை நிமிர்ந்து அமரச் செய்தார்.
முகத்தில் கண்ணீரின் தடம் இல்லையென்றாலும், அழுகையை அவர் முன் அவன் அடக்குவது உதடு துடிப்பதில் கண்டுகொண்டார்.
“அஞ்சலிக்கிட்ட என்ன பேசின?” என தீரனிடம் கேட்டவர், “நீயி போய் அவனுக்கு குடிக்க தண்ணீ கொண்டா” என்று அர்ச்சனாவிடம் கூறினார்.
“நீங்க எப்போ வந்தீங்க?” அர்ச்சனா கேட்க,
“உன் பின்னாலேதேன் வந்தேன்” என்ற ரத்னவேலு, “போ அர்ச்சனா” என்று மனைவியை வெளியேற்றினார்.
அர்ச்சனா சென்றதும்,
“என்ன நடந்தது தீரா?” என அழுத்தமாக வினவினார்.
அர்ச்சனாவிடம் சொல்லாது கலங்கியது போன்று ரத்னத்திடம் முடியவில்லை.
நடந்ததைக் கூறினான்.
தண்ணீர் கொண்டுவந்த அர்ச்சனாவும் எல்லாம் கேட்டிருந்தாள்.
“எனக்கு அவள் பொருத்தமில்லையா மாமா? காதல் அப்படின்னா அன்பு தான மாமா. அந்த அன்பே ஒருத்தரை எட்ட நிக்க வைக்குமா?” என்று கேட்டவனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாது இருவரும் தவித்துப் பார்த்தனர்.