தூரமே தூரமாய் 6
சிலரை மறப்பதும், அவரின்றி வாழ்வதும் கடினமானது தான். இருந்தும், பலர்… வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
நினைவுகளோடும்…
வலிகளோடும்…
தூரமே தூரமாய்!
_______________________________
பள்ளி இறுதி மணி ஒலித்திட…
மாணவர்கள் யாவரும் சிறகு விரித்த பட்டாம்பூச்சியாய் வகுப்பறை விட்டு, தரை பட்டு சிதறும் மழைத்துளியாய் வெளியில் தெறித்து ஓடி வரும் காட்சி ஒரு நொடி இதழை நீளச் செய்திடும்.
தனது வகுப்பு முடித்து வெளியில் வந்த இமையாளின் இதழும் சற்று விரிந்தது. மகிழ்வாய்.
அவளின் மகிழ்வு பள்ளி மாணவர்களிடம் தான். முகத்தின் ஒளி கூட பள்ளிக்குள் அடி வைத்திட்டால் கூடிப்போகும்.
அவள் அவளாக இருப்பது அப்பிள்ளைகளிடம் மட்டுமே.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கணித ஆசிரியையாக பணிபுரிகிறாள்.
அவ்வவ்போது இலவச நேரங்களில் சிறு பிள்ளைகள் வகுப்பிற்கு செல்வதும் உண்டு. அது அவளின் மனம் தனிமையில் பல சிந்தனைகளை தவிர்ப்பதற்காக எடுத்துக்கொள்வது.
அப்பள்ளியில் வாழ்வியல் குறித்த அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் வகுப்பு இருப்பதால், அந்நேரம் இலவச நேரங்களில் விருப்பட்ட வகுப்பிற்கு ஆசிரியர்கள் சென்று மாணவர்களுடன் உரையாடலாம். அந்நேரமெல்லாம் இமையாளுக்கு சிறிய வகுப்பு பிள்ளைகளுடன் தான் கழியும்.
சில நேரங்களில் வகுப்புகள் இல்லையென்றால், மைதானத்திற்கு சென்று பிள்ளைகள் விளையாடுவதை பார்த்தபடி அமர்ந்திடுவாள். தனியாக மட்டும் இருந்திடமாட்டாள்.
இரவு நேரங்களில் மனம் வதைக்கொள்(ல்)வதே போதும். அம்மனதிற்கும் ஓய்வு, அமைதியென எல்லாம் வேண்டுமே. எப்போதும் நினைவுகளில் வலி சுமந்திட அது மட்டும் என்ன பாவம் செய்ததாம். அதற்காகவே முடிந்த அளவிற்கு பகலில் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள விரும்பமாட்டாள்.
இமையாளின் வலி, கண்ணீர், நினைவுகள், அழுகை, தவிப்பு, ஏக்கம் யாவும் இருளுக்கே உரித்தானவை. அவளின் படுக்கையும், தலையணையும் மட்டுமே முழுதாய் அறிந்திடும் அவளின் சோகத்தை.
கோடை விடுமுறை தொடங்கவுள்ளது. அவளது வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு வாரம். அதன் பின்னர் பள்ளி திறக்கும் வரை… மூச்சு முட்டும் தனிமையில், மறக்க முயன்றிடாத வலி நிறைந்த நினைவுகளோடு நாட்களைக் கடத்திட வேண்டும். வலியையும் விரும்பி சுமப்பவளுக்கு ஏனோ அதன் தாக்கம் அதிகமிருக்கும் தனிமை என்றால் அத்தனை பயம். ஆதலால் பள்ளி சேர்க்கை பிரிவில் இணைந்து கொண்டாள்.
விடுமுறை நாட்களிலும் புதிய மாணவர்கள் சேர்க்கைக்கான பிரிவில் அவளுக்கு வேலை உண்டு. முழு நேரம் இல்லையென்றாலும், வாரத்தில் சில நாட்களை கழித்துவிடலாம்.
அதற்காகவே வகுப்பினை முடித்துக்கொண்டு பள்ளி முதல்வரை சந்தித்துவிட்டு வருகிறாள்.
இமையாள் இப்பள்ளியில் சேர்ந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. அவளது பாடத்தில் இரண்டு வருடங்களாக அனைத்து மாணவர்களும் நன் மதிப்பில் தேர்ச்சி. ஆதலால் முதல்வருக்கு பிடித்த ஆசிரியர்களில் அவளும் ஒருத்தி.
யாரிடமும் அளவாக தன் எல்லைக்குள் நின்று மரியாதையுடன் பழகும் அவளின் பண்பு இன்னும் அதிகமான மரியாதையை அவளுக்கு பெற்றுத் தந்தது.
மாணவர்கள் குவியலாய் வெளியேறும் காட்சியை பார்த்து நின்றிருந்தவள், இனியன் வந்து தொட்டதும் தான் சுயம் மீண்டாள்.
“ஸ்கூலே காலியாகிடுச்சு. இன்னும் கிளம்பாம நின்னுட்டு இருக்க?” எனக் கேட்டான்.
“பசங்களை பார்த்துட்டே நின்னுட்டேன் போல” என்றவள், “நீங்க என்ன உள்ள வந்திட்டிங்க?” என்று ஆசிரியர்களுக்கான அறை நோக்கி நடந்தாள்.
“ஃபோன் பண்ணால் எடுக்கல. அதான் உள்ளவே வந்துட்டேன்” என தங்கையை தொடர்ந்தான்.
“மேத் எக்ஸாம் முடிஞ்சுதுல?”
“ஹ்ம்ம்… இன்னைக்குத்தான்.”
“அப்போ உனக்கு இனி கிளாசஸ் இல்லையா?”
“நைன்த் கிளாஸ்க்கு இருக்குண்ணா. தென் அட்மிஷன் செக்க்ஷனில் என்னை போட்டிருக்காங்க” என்றாள்.
பேசிக்கொண்டே வாகனங்கள் தருப்பிக்குமிடம் வந்திருந்தார்கள்.
“அப்போ இந்த இயரும் உனக்கு லீவ் இல்லை?” என கேள்வியாக ஏறிட்டான்.
“சிலதுல இருந்து ரொம்ப தூரம் ஓடிபோயிடனும் தோணுதுண்ணா. இருந்தாலும் முடியாதே! என்ன பண்ணட்டும்?”
தங்கையை தோளோடு அணைத்து விடுத்தான்.
இமையாள் ஆறுதல் சொல்லி தேற்றும் கணத்தையெல்லாம் எப்போதோ கடந்துவிட்டாள்.
அனைத்து விதமான தெளிவும் உள்ளது. அவள் நினைத்தால் மட்டுமே மீண்டு வர முடியும். முடியாதென அடமாக இருப்பவளிடம் என்ன பேசுவது?
மௌனமாகவே வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
“என்னது வீடு ரொம்ப அமைதியா இருக்கு?” என்று கேட்டுக்கொண்டே இனியன் உள்ளே நுழைய, இமையாள் இருக்கையில் தொப்பென்று அமர்ந்தாள்.
அவளுக்கு சட்டென்று நெஞ்செல்லாம் அடைக்கும் உணர்வு.
“அண்ணா…” என்று சத்தமாக அழைக்க முடியாது காற்றாக குரல் ஒலித்தது.
ஏதோ நினைவாக திரும்பிய இனியன், தங்கையின் முகத்தில் தெரிந்த அசௌகரியத்தில் அவளருகில் வந்து அமர்ந்தான்.
“என்ன இமயா… என்ன பண்ணுது?”
மூச்சு விட முடியாது திணறியவளின் நிலை கண்டு…
“சில்… ரிலாக்ஸ் டா. என்னாச்சு?” தங்கையின் நெஞ்சை மெல்ல நீவி விட்டான்.
“அவங்களை நான் சீக்கிரமே பார்க்கப்போறேன்னு தோணுதுண்ணா” என்றாள்.
அவளுக்கு நீரினை எடுக்க திரும்பியவனின் கால்கள் அசையாது நின்றன.
“அவங்க பக்கத்துல இருக்க ஃபீல்” என்று சொன்னவள், இருக்கையின் பின்னால் தலை சாய்த்து கண்களை மூடிக்கொண்டாள்.
“ரீச்டு…” இனியனுக்கு ஷிவன்யாவின் அலைப்பேசியில் பார்த்த தகவல் நினைவில் உதித்தது.
இமையாளின் கண்கள் கண்ணீரை சுரந்திட… அவளின் காதுமடல் ஈரத்தில் நனைந்தது.
“இப்போ அவன் உன் முன்னால் வந்தால்?”
“ஜஸ்ட் ஸ்மைல்… அவ்வளவு தான்” என்றாள்.
“அப்புறம் எதுக்கு இந்த அழுகை?”
தங்கையை விட்டுச் சென்றவன் நன்றாக இருக்கும்போது… இவள் மட்டும் ஏன் வலி சுமக்க வேண்டுமென்கிற ஆதங்கம் இனியனிடத்தில்.
“உயிரில் பொத்தி வச்சிட்டேன் போல. பிடுங்கிப்போட முடியல” என்றாள்.
“அவங்க சந்தோஷமா இருப்பாங்கல? என்ன பேபி பிறந்திருக்கும். அப்போவே அவங்க வைஃப் கன்சீவ்வா இருக்கிறதா சொன்னாங்களே!” என்றாள். அவளை பொறுத்தமட்டில் ருது சொல்லியது பொய் என்கிற எண்ணம் இருந்தபோதும்… அவனே சொல்லியது உண்மையாக இருந்துவிட்டால்? பெரும் கேள்வியும் உள்ளது.
இனியனுக்கு ஆத்திரமாக வந்தது.
இதுவரை ருதுவின் மீது இல்லாத கோபம் இன்று அவனிடம். தங்கையின் கண்ணீர் மட்டும் அதற்கு காரணமில்லை.
ஷிவன்யாவின் அலைப்பேசி திரையில், அவளுடன் தோள் மீது கைபோட்டபடி சிரித்த முகமாக ருது இருந்த நிழற்படம்.
ஷிவன்யாவுக்கு அவன் என்ன உறவென்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் தன் தங்கையை தவிக்கவிட்டுச் சென்றவன், உறவுகளோடு சந்தோஷமாக இருக்கின்றான் எனும் சிறு கோபம்.
அவனாக வந்தான்… காதலை சொன்னான்… காத்திருக்க சொன்னான்… இனி வேண்டாம் என்றான்… மொத்தமாக சென்று விட்டான்.
அவன் பக்க காரணங்கள் நியாயமானவையாகவே இருந்துவிட்டு போகட்டும். அதற்கு பலி தன் தங்கையா? இன்று தான் இப்படி சிந்திக்கின்றான். ஏனென்று அவனுக்கேத் தெரியவில்லை.
ஏதோவொரு காரணத்திற்காக பொய் சொல்லிச் சென்றிருக்கிறான். என்றாவது ஒருநாள் நிச்சயம் தங்கையை தேடி தன் நண்பன் வருவானென்ற அவனின் எண்ணம் இன்று ஷிவன்யாவின் அலைப்பேசியில் கண்ட புகைப்படத்தில், அவனிடம் தெரிந்த மகிழ்வில் காணாமல் போயிருந்ததோ?
நிச்சயம் தன் தங்கைப்போல் அவனும் வலியை சுமந்து கொண்டிருப்பான் என்கிற எண்ணம்
பொய்த்துப் போனதாலோ?
“கல்யாணம் ஆகிடுச்சுன்னு அவன் பொய் சொல்றதா சொன்ன. இப்போ இப்படி சொல்ற?”
“இப்பவும் அது பொய் தான்” என்றவள், “அவங்க போனது போனதாவே இருக்கட்டும் இனியாண்ணா. அவங்க திரும்பி வந்தாலும் எனக்கு வேண்டாம். அவங்க கொடுத்த வலியோட வாழ பழகிட்டேன்” என்றதோடு, “ஒருமுறை பார்க்கணும். அது போதும். நான் இல்லாம அவங்க இருக்காங்க தானே? என்னால அவங்க இல்லாம இருக்க முடியாதா என்ன?” என்றாள்.
“உன் மனநிலை என்னன்னு எனக்கு சுத்தமா புரியல இமயா! ஐ தின்க்… உனக்கு கவுன்சிலிங் தேவைப்படுது நினைக்கிறேன்” என்றான்.
“அவங்களுக்கு நான் எவ்வளவு அடிக்ட் ஆகியிருக்கேன்னு தெரியுதா இனியாண்ணா?” எனக் கேட்டவள், கண்களை மெல்ல திறந்து, “நாலு வருஷமாகியும் அவங்களை மறக்க முடியாத அளவுக்கு” என்றாள்.
“அவங்க நினைவு இல்லாமல் ஒருநொடி கடக்கிறது இல்லை இனியாண்ணா.”
“இப்போலாம் ரொம்ப புலம்பற இமயா?”
“எனக்குள்ளே வச்சு பைத்தியமாகிடுவனோன்னு பயம் வந்திருச்சுண்ணா” என்றவள், “நீட் அ ஹக்” எனக் கேட்டிருந்தாள்.
அண்ணனாக நொறுங்கிவிட்டான்.
“டேய் இமயா” என்றவன் தந்தையாக தன் தங்கையை நெஞ்சம் தாங்கியிருந்தான்.
“நீங்க கல்யாணம் பண்ணிக்கோங்க ண்ணா…”
“நான் இதுக்கு பதில் சொல்லிட்டேன்.”
இனியனிடமிருந்து பிரிந்தவள், “எனக்காக” என்றாள்.
“கொஞ்சநாள் போகட்டும்” என்றவன், “ருது இங்க வந்திருக்கான் நினைக்கிறேன்” என்றான்.
“நினைக்கிறீங்களா? தோணுது சொல்றீங்களா?”
“இந்த ஊருக்குள் இருந்தால் நிச்சயம் ஒருநாள் கண்ணில் பட்டுதானே ஆகணும். பார்ப்போம்” என்றான்.
ஆனால் அவர்களுக்கான பதில் அன்று இரவே கிடைத்தது.
மாடியில் காய வைத்த துணியை எடுக்கச் சென்ற தீபா கீழே வரவும், இருவரும் இயல்பாய் காட்டிக்கொண்டனர்.
இரவு உணவின் போது நால்வரிடமும் பேச்சில்லை. மிக அமைதியாக அந்நேரம் நகர.
“அந்த டிவியை ஆன் பண்ணு தீபா. மயானத்துல இருக்கிற மாதிரி இத்தனை அமைதி” என்றார். மூவரும் அவரை ஒரு நொடி பார்த்து விலகினர்.
ஓடியாடி உற்சகாமாக, வீட்டை உயிர்ப்போடு வைத்திருந்த தன் பிள்ளைகள் இருவருமே மனதால் ஓய்ந்து போய்விட்டதாக எண்ணிய சுரேந்தருக்கு இந்த அமைதி கடுப்பாக இருந்தது. அதில் என்ன சொல்கிறோம் என்று உணராது சொல்லிவிட்டார்.
“என்ன சேனல் வைக்கட்டும்?”
தொலைக்காட்சியை உயிர்ப்பித்த தீபா கேட்டிட…
“என்னத்தையும் வை. இதைக்கூட சொல்லுவாங்களா?” என்று கடிந்தார்.
“என்ன கோபம் உங்களுக்கு?”
இனியன் கேட்டிட…
“எனக்கென்ன கோபம். எல்லாம் வருத்தம் தான்” என்றவர், “நியூஸ் சேனல் வச்சிட்டு வந்து நீயும் சாப்பிடு” என்றார் மனைவியிடம்.
இமையாள் பெற்றோர் இருவரின் முகத்தையும் பார்க்காது குனிந்தபடி தட்டிலே கவனமாக இருந்தாள்.
தைரியமாக காதலில் சுமக்கும் வலியை பெற்றோரிடம் சொல்லிவிட்டாள். ஏனோ அதன் பின் அவர்களை நேர்கொண்டு பார்த்திட முடியவில்லை.
அவளின் காதல் திருமணத்தில் முடிந்து வாழ்வில் வெற்றி பெற்றிருந்தால் இந்த உணர்வு இருந்திருக்காதோ? இப்போ மகளாக பெற்றவரின் ஆசைகளை கொன்றுவிட்டோமே என்கிற குற்றவுணர்வு அவளிடத்தில்.
தன் காதலை வீட்டில் சொல்லியது முதல் தாய், தந்தையிடம் கண்கொண்டு பேசிட முடியாது தவிப்பவளுக்கு தன்னால் தான் இனியனின் வாழ்வும் தடைபடுகிறதோ என்கிற கவலை.
இனியன் உணவு முடித்து எழ,
“நகரத்தின் புதிய துணை ஆணையராக திரு.ருத்விக் ஐபிஎஸ் அவர்கள் பணிமாற்றம் பெற்று வந்துள்ளார்” என்ற செய்தி ஒலித்திட…
ருத்விக் என்ற ஒலியில் இமையாளின் மொத்தமும் அசைவற்று உறைந்தது.
இனியன் வேகமாக தங்கைக்கு அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்து அவளின் கரம் பற்றினான்.
“இமயா…”
மொத்த பாசத்தின் குவியலாய் அவ்விளிப்பு.
இமையாளின் இமைகள் அகல விரிந்து பதிந்தது தொலைக்காட்சித் திரையில்.
ருதுவின் தற்போதைய புகைப்படம் காக்கி உடையில் ஒளிர்ந்தது.
முதல் முறை அவனை காக்கி சீருடையில் அவனுக்கான நட்சத்திரங்களுடன் காண்கிறாள்.
அவனது பயிற்சியின் போது, பயிற்சிக்கான காக்கி சீருடையில் பார்த்திருக்கிறாள். ஆனால் இது தனியானதல்லவா?
கண்களில் நீர் திரண்டு வழிய காத்திருக்க… உதடு விரிந்திருந்தது.
இனியனின் கரம் கொடுத்த அழுத்தத்தில் தன்னை நிலைப்படுத்தியவள்…
“அம் ஓகே இனியாண்ணா” என்று கடைசி வாய் உணவை உண்டு முடித்தவளாக எழுந்து சென்றுவிட்டாள்.
இருவரையும் கவனித்த தீபாவும், சுரேந்தரும் இனியனை அர்த்தமாக ஏறிட…
“ஊப்ப்…” என்று காற்றினை குவித்து ஊதினான்.
“இப்போ சொன்னாலும் சரியிருக்காதுப்பா” என்று சென்றுவிட்டான்.
“அப்படியென்ன அந்த நியூஸில் சொன்னாங்க?” தீபா கேட்டிட சுரேந்தருக்கும் புரியவில்லை.
அந்த செய்தியில் ருதுவுடன் சேர்த்து, அவன் மாற்றம் பெற்றுள்ள துறையின் முந்தைய அதிகாரியின் மாற்றத்திற்கான காரணத்தையும் சொல்லியிருக்க அவர்களுக்கு எதற்கென்று விளங்கவில்லை.
“சீக்கிரம் எல்லாம் சரியாகும் நம்புவோம்” என்ற சுரேந்தருக்கு பிள்ளைகளின் வாழ்வு இப்படியே சென்றுவிடுமோ என்ற கவலை.
வேகமாக தங்கையை தேடி வந்த இனியன், அவள் அறையில் இல்லாததும் மொட்டைமாடி சென்று பார்த்தான்.
மிதமான தூறல்.
மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு நிலவினை வெறித்திருந்தாள்.
“இதென்ன சட்டுன்னு மழை. க்ளைமேட் காட்டவேயில்லை” என்றவாறு இமையாளின் அருகில் வந்து நின்றான்.
“இமயா…”
“நான் ஓகே தான் இனியாண்ணா” என்றவள், “கோபம் கோபமா வருதுண்ணா” என்றாள்.
“யார் மேல?”
“உங்களுக்குத் தெரியாதா?”
“இத்தனை வருஷமா இல்லாம இப்போ என்ன?”
இனியனை பக்கவாட்டாக கருமணிகளை மட்டும் சுழற்றி பார்த்தவள், பார்வையை சடுதியில் விலக்கிக்கொண்டாள்.
கசந்த முறுவல் அவளிடம். உதட்டின் ஓரம்.
“காதல் எல்லாத்தையும் மறக்கும், மன்னிக்கும் சொல்லுவாங்கல? ஆனால் வலி சுமக்கும் காதல், தன்னோட அழுத்தத்தை சின்ன கோபத்தில் கூட காட்டலன்னா மனம் எப்படி அமைதியாகும்?
“நான் கேட்டேனா… அவங்க என் வாழ்க்கையில் வேணுன்னு நான் கேட்டேனா?
“அவங்களா வந்தாங்க. விருப்பத்தை சொன்னாங்க. கவனிக்க வச்சாங்க. உங்கவரை வந்து அவ்வளவு நம்பிக்கை கொடுத்தாங்க.
“இதையெல்லாம் மொத்தமா ஒரே நாளில் ஒன்னுமில்லைன்னு போனவங்க மீது குட்டியா கூட கோபம் இருக்கக்கூடாது சொல்றீங்களா?
“இப்போ அவங்களை நேரில் பார்த்தால் கோபத்தை காட்டுவேனா தெரியாது. ஆனால் அவங்க வேணுன்னு மட்டும் சொல்ல மாட்டேன்.
“எனக்கும் மனசிருக்கு, அதில் உணர்விருக்கு… அந்த உணர்வில் எத்தனை ஆழமா அவங்க நிறைஞ்சிருக்காங்கன்னு தெரிஞ்சும் நான் வேணான்னு போனவங்க எனக்கும் வேணாம்.
“எனக்கு இந்த காதல் மட்டும் போதும். மனசோடு வலி நிரம்பிய ஒரு சுகம். இது போதும்.”
முகத்தை வானோக்கி உயர்த்தி காண்பித்தாள்.
முகம் நனைத்த ஈரத்தில் மனம் நனையச் செய்திட்டாளோ?
“அப்புறமும் ஏன் அவனோட பெயருக்கே இத்தனை ரியாக்ட் பன்ற?”
இனியனின் இக்கேள்விக்கு நிச்சயமாக அவளிடம் பதிலில்லை. மனதின் சில உணர்வுகளுக்கு வார்த்தை வடிவம் கொடுத்திட முடியாது.
“உனக்கு மட்டும் தான் தவிப்பு, ஏக்கம் எல்லாம்.” இனியனின் கண் முன்னே ஷிவன்யாவுடன் சிரித்தபடி ருது நிற்கும் புகைப்படம் தோன்றி அவனை அவ்வவ்வபோது கடுப்படித்துக் கொண்டிருந்தது.
இதுநாள் வரை நண்பனாக இருந்தவன்… தற்போதுதான் ஒரு பெண்ணின் அண்ணாக மாற்றம் கொண்டுள்ளான்.
“உங்க ஃபிரண்டை பார்க்கப்போகலையா?”
“தூறல் மட்டுமல்ல… உறவு கூட தீர்ந்துப்போச்சுன்னா திரும்பாது” என்று சொல்லிய அண்ணனை மெச்சுதலாக பார்த்தாள் இமையாள்.
“அப்போ நட்பிலும் பிரிவு வலியை கொடுக்கும்… ரைட்?” என்றாள்.
இனியனின் தலை மேலும் கீழும் ஆடியது. மௌனமாய் மென் சோகம் அவனது முகம் காட்டியது.
‘தீர்ந்துபோன தூறல் திரும்பாதடி!’
காய்ந்துபோன பூவில் மணம் ஏதடி?