அத்தியாயம் 13
“அப்படியென்ன ரகசியம் பேசணும்?”
மயிலாஞ்சலியை பேச வேண்டுமென அழைத்த ஆதி வீட்டின் பின் புறமிருக்கும் மாமரத்துக்கு கீழே அழைத்து வந்திருந்தான்.
அவளிடம் கேட்பதற்கு முன்னர் சுற்றி யாரும் இருக்கின்றனரா என்று பார்வையை சுழற்றிடவே மயிலாஞ்சலி என்ன ரகசியமெனக் கேட்டிருந்தாள்.
ஆதியிடம் எதையும் மறைக்காது சொல்லுமளவிற்கு மயிலாஞ்சலி நெருக்கம் தான். இருப்பினும் இவ்விடயத்தை எப்படிக் கேட்பதென்ற தயக்கம் இருந்திட மௌனித்து நின்றான்.
“ரொம்ப பெரிய விசயமோ?”
மயிலாஞ்சலி மீண்டும் அமைதியை விரட்டியவளாகக் கேட்டிருந்தாள்.
“ஒரு விசயம் கேட்கணும். ஆனாலும் தயக்கமா இருக்கு அஞ்சலி” என்றான் ஆதி.
“என்கிட்ட என்ன தயக்கம் மாமா? நான் தப்பா எடுத்துப்பேன்னுலாம் நினைக்காம என்ன கேட்கணுமோ கேளுங்க” என்றாள்.
“உனக்கு வூட்ல கண்ணாலம் பேசுறாய்ங்க தெரியும்ல?” என்றான்.
“ம்ம்… எனக்கு ஓகேவான்னு கேட்டுதான மாமா செய்றாய்ங்க” என்ற அஞ்சலி, “நீங்க எல்லாரும் பார்த்து சரின்னாக்கா எனக்கும் சரிதேன் மாமா. எனக்கு ஒரேயொரு விருப்பந்தேன்…” என்று இடை நிறுத்தினாள்.
இவ்விடத்தில் தான் மயிலாஞ்சலியிடம் பேச வேண்டுமென தீரன் அங்கு வந்தது. அவன் வருகையை பருத்த மரத்தின் தண்டு மறைத்திருந்தது.
“கண்ணாலத்துக்கு பொறவும் நான் இங்கிட்டு உங்க எல்லார்க்கூடவும் நம்ம வூட்லே இருக்கணும்” என்றாள்.
அமைதியான இடமென்பதால் அருகில் சில அடிகளுக்கு முன்பே அவள் பேசியது தீரனுக்கு தெளிவாகக் கேட்டது.
“ஓ…” என்ற ஆதி, “தீரனை எவ்ளோ புடிக்கும்?” எனக் கேட்டான்.
தன்னுடைய பெயரை வைத்து அவளது திருமணம் குறித்து என்ன பேச்சென நினைத்த தீரன் அவர்களின் அருகில் செல்லாது நின்றுவிட்டான்.
“மாமாவை ரொம்ப ரொம்ப அதிகமா புடிக்குமே! நாளைக்கே எனக்கு கண்ணாலமாகி எனக்குன்னு ஒரு குழந்தை வந்தாலும், அந்த குழந்தையை விட மாமாதேன் ரொம்ப புடிக்கும்” என்றவள், “ஏன்? எதுக்கு? அப்படின்னு காரணமெல்லாம் சொல்லத் தெரியல. ஆனா மாமா அப்படின்னாலே புடிக்கும். நான் பொறந்ததும் மாமாதேன் என்னைய மொதல்ல வாங்குனாங்க தெரியும்ல உங்களுக்கு. அதால கூட இருக்கலாம். அப்போவே அங்கிட்டே எங்க அன்பு ஆரம்பமாகிப்போச்சு நினைக்கிறேன்” என்றாள்.
அவள் கூறும் அன்பை எதில் சேர்ப்பதென்று குழம்பி நின்றான் ஆதி.
“பக்கம் இருந்தப்போ நான் மாமா கைப்புடிச்சு சுத்திக்கிட்டு இருந்தமாறி, பக்கட்டு இல்லாதப்போ மாமா என் கைப்புடிச்சி எனக்கு அடுத்தடுத்து என்னன்னு எல்லாம் பண்ணாங்க. பண்ணிட்டு இருக்காய்ங்க. உங்களுக்குத் தெரியுமா தெரியல எனக்கு படிப்புக்கான செலவு எல்லாம் மாமாதேன் பார்த்துக்கிட்டாங்க. அப்பா கேட்டதுக்கு, எதுக்கு இவ்ளோ சம்பாதிக்கிறேன்னு இருக்கு மாமா. உங்க யாருக்காகவுந்தேன் எதுவும் செய்ய முடியாம இருக்கேன்… என் மயிலாவுக்காகவாவுது என்னைய செய்யவிடேன் மாமா சொன்னாங்க. இப்பவும் என் பொறந்தநாளுன்னா உங்ககிட்டேர்ந்து வாழ்த்தோ பரிசோ வரதுக்கு முன்னாடி தீரா மாமாகிட்டேர்ந்து வந்துப்புடும். தூரத்துல இருந்தாலும் எனக்காக எல்லாமே செய்யுற என் மாமாவை எனக்கு எப்படி கம்மியா புடிக்கும். அதுக்கு அளவெல்லாம் இல்லை” என்று மூச்சுவிடாது பேசியவள்,
“எனக்கு எல்லாமே செய்யுறாருங்கிறதுக்காக வந்த அன்பு இல்லை இது. அது என்னவோ காரணம் தெரியல… மாமா வூட்டை வுட்டு போன அன்னைக்குத்தேன் எப்பவும் சிரிச்சிட்டே இருக்க மாமாவை மொத மொதலா கண்ணெல்லாம் கலங்கிப் பார்த்தேன். அப்போ மனசுக்குள்ள ஒரு எண்ணம்… மாமாவை திரும்ப சிரிக்க வைக்கணும், அதுக்கு நான் காரணமா இருக்கணும் அப்படின்னு. அன்னைக்கு நீங்க யாருமே வெளிய வரல… மாமாவை தனியா விட்டுட்டீங்க. மத்தவைய்ங்க மாதிரி எப்பவுமே மாமாவை தனியா விட்டுடக்கூடாதுன்னு தோணுச்சு. இப்போ இந்த நொடி வரைக்கும் மட்டுமில்லை… என் வாழ்க்கையில என்ன நடந்தாலும் கடைசி நொடி வரைக்கும் என் மாமாவுக்காக நான் இருக்கணும். இருப்பேன்” என்றாள்.
அவளின் அன்பின் அதீதத்தில் மலைத்தது ஆதி மட்டுமில்லை. தீரனும் தான்.
அவளின் காரணமற்ற இந்த அன்புக்கு முன்னால் தீரனுக்கு அவள் மீது தான் கொண்ட காதலே அத்தனை சிறியதாகிப்போனது.
தான் கொண்டிருக்கும் அன்பைவிட அவள் சேர்த்து வைத்திருக்கும் மொத்த அன்பையும் வாழ்வு முழுமைக்கும் மிச்சமின்றி அனுபவித்திட பேராசைக் கொண்டான்.
அவளிடம் தாவி ஓடி சேரத் துடிக்கும் மனதை கட்டுப்படுத்த முடியாது அடி வைத்து முன்னேறிய தீரனின் நடையை ஆதியின் கேள்வி நிறுத்தியிருந்தது.
“தீரனை எவ்ளோ புடிக்கும்?” எனக் கேட்ட ஒற்றை சிறு கேள்விக்கு அத்தனை நீண்டதாக பதில் வழங்கியிருந்தாள் மயிலாஞ்சலி.
நேசமெனும் வரையறைக்குள் இட்டுச்செல்லாது அன்பின் அதீதம் கொண்டிருந்தாள் தீரனிடத்தில்.
“அப்போ அவனை லவ் பண்றியா நீயி?”
தீரன் மீதான மயிலாஞ்சலியின் பேரன்பு, தன்னுடைய தம்பிகள் கூறி நம்பாத ஆதியை அவள் கொண்டிருக்கும் காதலென்று நம்ப வைத்திருக்க தயக்கமின்றி கேட்டிருந்தான்.
“லவ்வா?” என்று அதிர்ந்து கேட்ட மயிலாஞ்சலி, “மாமாவை நான் போய் எப்படி ஆதி மாமா” என்றாள்.
“லவ் இல்லைன்னா என்ன? இவ்ளோ அன்பு இருக்கே… நீயே தீரனை கண்ணாலம் பண்ணிக்கலாமே?”
மயிலாஞ்சலி கூறியதில், தீரனை அவளால் நிச்சயம் மறுத்திட முடியாதென்ற நம்பிக்கையில் திடமாகவேக் கேட்டிருந்தான் ஆதி.
“இந்த அன்பு இப்படியே இருக்கணும் தான் ஆசை மாமா. அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு போய் எங்க ரெண்டு பேருக்குமான இந்த அதீத அன்புக்கு நடுவில் காரணங்களை கொண்டு வர எனக்கு விருப்பமில்லை. எங்களுக்குள்ள இந்த அன்பு இப்படியே இருக்கிறதுதேன் நல்லாயிருக்கும். காதல், கண்ணாலம் அப்படின்னு அடுத்த அடியில இந்த அன்பை கொண்டு போய் உறவு சிக்கலா மாத்த எனக்கு விருப்பமில்லை” என்றாள்.
கேட்டு கொண்டிருந்த தீரனின் ஜீவன் வற்றியது.
இந்த நொடி தூய்மையான அன்பில் தான் மட்டும் காதலை கொண்டு கலங்கடித்து விட்டதாக இதயத்தில் சுருக்கென்று முள் தைக்கும் வலியை உணர்ந்தான் தீரன். மயிலாஞ்சலியின் வார்த்தைகளில்.
“இந்த அன்பு உங்க ரெண்டு பேருக்கும் கண்ணாலம் ஆனா இன்னும் அதிகரிக்கத்தேன் செய்யும் அஞ்சலி… வெறும் உறவு சிக்கலா மட்டும் ஏன் பாக்குற. ஒருத்தர் மேல அன்பு அதிகம் ஆனாலே அங்க சிக்கல்கள் வருந்தேன். அதுதேன் இயல்பு, எதார்த்தம்” என்ற ஆதியிடம்,
“என்னவோ எனக்கு எங்க ரெண்டேருக்குமான இந்த அன்பு இப்படியே இருக்கணுந்தேன் விருப்பமாட்டிக்கு மாமா. மாமா மேல காதல் அப்படின்னுலாம் நான் ரோசிச்சதே இல்லை” என்று பட்டென்று கூறியிருந்தாள்.
அவள் கொண்டிருக்கும் அன்பின் அதீதமே அவளுக்கான காதல் பாதையை திறந்திட மறுக்கிறது என்பது அங்கிருந்த இரு ஆண்களுக்குமே புரிந்தது. இதில் வதை கொண்டது தீரன் மட்டுமே!
மேலும் மயிலாஞ்சலி சொல்லியது தீரனின் காதல் மனதை தீயிலிட்டு பொசுக்கியது.
“என்கிட்ட கேட்டமாறி தீரா மாமாகிட்டவும் கேட்டுடாதீங்க. அவருக்கு நான் எப்பவும், அவர் தூக்கிட்டு சுத்துன அதே குட்டி மயிலாதேன்” என்றிருந்தாள்.
மொத்தமாக தீரனின் காதல் வெந்து சுருண்டது அவ்விடத்தில்.
அதற்கு மேல் அங்கு நிற்க முடியாது, சில நாட்களே ஆகினும் தன்னை இதமாக வாரிச் சுருட்டிக்கொண்டிருந்த காதல் நொடியில் வலியாக மாறி ரணம் கொடுப்பதை ஏற்க இயலாது அறைக்குள் வந்து கதவடைத்து வெடித்துக் கதறியிருந்தான் தீரன்.
மேலும் சில கணங்கள் நின்று அவள் தொடர்ந்து பேசியதை தீரன் கேட்டிருக்க வேண்டுமோ?
“உன் முடிவுல மாத்தமே இல்லையா அஞ்சலி?”
ஆதிக்கு அஞ்சலி தன்னுடைய தம்பி மீது வைத்திருக்கும் அன்புக்கு, அவள் மட்டும் அவனுக்கு மனைவியாகிவிட்டால் அவன் வாசம் முழுவதுமாக தங்களுடனே இருந்துவிடுமென்ற எண்ணம். அதற்காகவே அவள் அத்தனை பேசியிருந்த போதும் ஒருவித எதிர்பார்ப்போடு கேட்டான்.
“இப்போ வரை எந்த மாத்தமும் இல்லை மாமா. இனியும் வராது.”
“தீரனுக்கும் உம்மேல இதே அன்பு இருக்குல?” என்ற ஆதி, மயிலாஞ்சலி ஆமென தலையசைத்ததும், “அப்போ அவனோட அன்பு காதலா மாறியிருந்தா?” என்று கேட்டான்.
“கண்டிப்பா மாமாவை கட்டிக்குவேன். அவருக்காக. மாமாவுக்காக என்னவும் செய்வேன். அவரை சிரிக்க வைக்க நெனச்ச என்னால அழ வச்சி பார்க்க முடியாது. சந்தோஷத்தை மட்டுமே கொடுக்க நெனச்ச என்னால வலி கொடுக்க ஆவாது” என்றாள்.
அவளின் இந்த அன்பின் அதீதம் தான் காதலென்று அவளுக்கு எப்படி புரிய வைக்கவெனத் தெரியாது நின்றான் ஆதி.
“ஆனால் காதல் இல்லாம என்னைய கட்டிக்க மாமா நிச்சயம் சம்மதிக்க மாட்டாய்ங்க. அவருக்காகன்னு கட்டிக்கிட்டு, அவரோட அங்க போய் இருந்து… என் மேல அவருக்கு இருக்க அன்பை காரணமா வச்சு இங்க கூட்டிட்டு வரணுன்னு நினைக்கமாட்டேன். எங்க கண்ணாலம் நடந்தா வூட்ல எல்லாரும் இதைத்தேன் எதிர்பாப்பீங்க. ஏன் இப்போ நீங்க இப்படி கேட்கவும் இதுதேன் காரணம். சரியா?” என்றாள்.
ஆதியால் பதில் சொல்ல முடியவில்லை. அவன் உண்மை காரணம் அதுதானே! எப்படி சொல்லிடுவான். அவனின் அமைதியே அவளுக்கான பதிலை வழங்கியது.
“கண்ணாலம் கட்டிக்கிட்டு இங்க வரணும் அப்படின்னு தினம் தினம் அவருக்கு வதைக்கொடுக்க என்னால முடியாது. எம்புட்டு பெரிய உத்யோகம். அதை விட்டுப்போட்டு எனக்காகன்னு வந்தாலும் என்னால ஏத்துக்க முடியாது” என்றவள், “மாமாவுக்கே எம்மேல அப்படியொரு விருப்பம் இருக்காது மாமா. அப்படியிருந்தா மாமா என்கிட்ட சொல்லியிருப்பாய்ங்க. அட்லீஸ்ட் எனக்கு உணர்த்தியாவுது இருப்பாய்ங்க. நாம ரெண்டேரும் தேவையில்லாம பேசிக்கிட்டு இருக்கோம்” என்றாள்.
“இது தேவையில்லாத பேச்சா உனக்குத் தெரியுது… ஆனா எங்களுக்கு” என்ற ஆதி, “நாளைக்கு நம்ம வூட்லே எல்லாரும் தீரனைக் கட்டிக்க சொன்னா என்ன பண்ணுவ?” என்றான்.
“மாமாவுக்கு சரின்னா… எனக்கும் சரிதேன். ஆனால் அதுக்கு மாமா என்னை நீங்க சொல்ற கோணத்துல பார்க்கணுமே” என்று மென்மையாக சிரித்தாள்.
“உன்னோட இந்த அன்புக்கான ஆழம் இப்போ புரியாது அஞ்சலி… நாளைக்கு உன் பக்கட்டோ இல்லை அவன் பக்கட்டோ ஜோடியா வேற வேற ஆள் நிக்கும்போது தெரியும். இதுவரை மாமான்னு நீயி மட்டும் உரிமையா சுத்தி வந்த இடத்துல வேற ஒரு பொண்ணை பார்க்கும்போது உன் மனசு கலங்கித் துடிக்கும். அப்போ உன்னால அழுவக்கூட முடியாது. இதை சாதரணமா கடந்துப்போவ மத்தவைய்ங்க மேல வச்சிருக்க மாதிரியான அன்பை அவன் மேல நீயி வச்சில்லை. மொத்த அன்பையும் அவனுக்குதேன்னு வெதைச்சு வச்சிருக்க. உன் மனசு, தீரன் மேல உனக்கிருக்க அன்பு எங்களுக்கு நீயி பாக்குற கோணத்துல தெரியவே இல்லை. உன்னையும், தீரனையும் ஒட்டுக்கா பார்த்ததுலேர்ந்து நீங்க ரெண்டேரும் லவ் பண்றதாதேன் எங்களுக்குத் தெரியுது” என்றான்.
“உங்களுக்குன்னா… ஆல் மாம்ஸுக்குமா?” என்றவள், “மத்தவைங்களுக்குத் தோணலையாட்டுக்கு. அப்படி தோணியிருந்தாக்கா எங்களுக்கு வேற வேற இடம் பார்க்கமாட்டாய்ங்க” என்றாள்.
“அப்போ தீரனை கட்டிக்க உனக்கு விருப்பமில்லை…”
“அப்படியொரு எண்ணமே நீங்க கேட்கிற வரைக்கும் எனக்கா இல்லை” என்றாள்.
“சரி” என்ற ஆதி, “கடைசி வரை இதே தெளிவோட இரு. நீயி உணராம இருக்க உன் காதலை இனியும் உணர்ந்திடவேக் கூடாதுன்னு மீனாட்சிக்கிட்ட வேண்டிக்கிறேன்” என்றவனாக ஆதி அவ்விடத்திலிருந்து சென்றிருந்தான், தெளிவாக இருந்தவளை மொத்தமாக குழம்பி நிற்க வைத்ததை அறியாது.
ஆதி தற்போது சொல்லிய, ‘உன் பக்கட்டோ இல்லை அவன் பக்கட்டோ ஜோடியா வேற வேற ஆள் நிக்கும்போது தெரியும்’ என்ற வார்த்தைகள் முன் தினம் தீரன் அவளிடத்தில் கேட்டதை நினைவு கூர்ந்திருந்தது.
‘எனக்கு இன்னொரு பொண்ணுக்கூட கல்யாணம்… இப்போ நான் அவங்ககிட்ட பேசப்போறது…’
“ஆதி மாமா சொல்ற மாதிரி தீரா மாமாவுக்கு அப்படியேதும் நெனப்பு இருக்குமோ?” என வாய்விட்டே கேட்டுக்கொண்டவள், “இருந்தா மாமா சொல்லியிருக்குமே! அதுவும் என்னைய நாளைக்கு பொண்ணு பார்க்க வர இருக்காய்ங்க. அப்படியிருந்தாக்கா இப்போவாவது வந்து சொல்லியிருக்கணுமே!” என்று தனக்குத்தானே பதிலும் சொல்லிக்கொண்டாள்.
“ஆதி மாமா பேசுனதுல எதுவும் குழப்பிக்காத அஞ்சலி” என்றவளின் உள்ளே பெரும் அலைப்புறுதல்கள் அலைமோதத் துவங்கின.
தீரன் கோவிலில் பெண் பார்க்க செல்லும் முன்பு பேசியவை யாவும் அவனுக்கான காதலாக மனதில் உழன்றது.
****************************
“நீங்க அஞ்சலியை லவ் பண்றீங்களா சித்தப்பா?”
தன்னுடைய அறை பால்கனியில் இருளை வெறித்தபடி நின்றிருந்த தீரனிடம் கேட்டிருந்தான் அத்வத்.
அவனது கேள்வியில் அமைதியாக திரும்பிய தீரன்,
“நீயி இன்னும் உறங்காம என்னடே பண்ணிட்டு இருக்க?” எனக் கேட்டான்.
“நாளைக்கு சண்டேல… எல்லாரும் படம் பார்க்க கூடியிருக்காய்ங்க. மாசத்துல ஒரு தரம் இது வழக்கந்தேன். உங்களை கூட்டிப்போவ வந்தேன்” என்ற அத்வத், “நான் கேட்டதுக்கு நீங்க பதிலே சொல்லல” என்றான்.
“உன் வயசுக்கு இதைப்பத்தி பேசுறதா?” என்ற தீரன், “அப்படி ஏதும் இருந்தாக்கா உன்கிட்டதேன் மொத சொல்லுவேன். போதுமா?” என்றான்.
“இல்லை நீங்க பொய் சொல்றீங்க… சித்தப்பாஸ் எல்லாம் காலையில மொட்டை மாடியில பேசிக்கிட்டாய்ங்க” என்றான்.
“என்ன பேசிக்கிட்டாய்ங்க?” என்ற தீரனிடத்தில் அத்வத் அனைத்தும் கூற, ஆதி மயிலாஞ்சலியிடம் தங்களின் திருமணம் குறித்து ஏன் பேசினான் என்பது தீரனுக்கு விளங்கியது.
“வூட்ல கண்ணால வயசுல ஆளுவ இருந்தாக்கா இப்படி பேசுறதெல்லாம் சகஜந்தேன் அத்து. இதெல்லாம் சின்னபையன் நீயி கண்டுக்கக்கூடாது” என்ற தீரன், “எனக்கு டயர்டா இருக்கு. உறங்கணும். நீயி போயி படம் பாரு” என்றான்.
“நீங்களே அஞ்சலியை கட்டிக்கிடலாம்ல சித்தப்பா?”
“இது உனக்கு தேவையில்லாத பேச்சு அத்து” என்ற தீரன், “இதுக்கு மேல நீயி இப்படி வேற யார்க்கிட்டவும் பேசவும் கூடாது” என்று கண்டிப்புடன் கூறினான்.
“ஏன் சித்தப்பா உங்களுக்கு அஞ்சலியை புடிக்கலையா?”
“அத்து… ஒத வாங்கப்போற நீயி” என்ற தீரன் விழிகளை உருட்டிட, அடித்துவிடுவானோ என்று அத்வத் ஓடியிருந்தான்.
அதுவரை திடமாக நின்றிருந்த தீரன் துவண்டு தரை அமர்ந்தான். கட்டிலில் சாய்ந்தவனாக.
“எனக்கு உன்னை புடிக்கலையா?” என்று அத்வத் கேட்டதை வைத்து விரக்தியாக தன்னிடமே கேட்டுக்கொண்டு வலியின் சாயலில் சிரித்தான்.
“உன்னை மட்டுந்தேன் புடிக்கும்னு இனி எப்பவும் என்னால சொல்ல முடியாம பண்ணிட்டியேடி” என்ற தீரன், “உன்னை யாருடி எம்மேல இவ்ளோ அன்பு வைக்க சொன்னா? எனக்கு உன் காதல் தாண்டி வேணும்” என்று தன்னைப்போல் அரற்றியபடி தலையை பின்னால் மெத்தையில் சாய்த்து கண்களை மூடிக்கொண்டான்.
கண்ணின் ஓரம் கண்ணீர் கசிந்து அவனது காதுமடல் தீண்டியது.
இத்தனை வலியிலும் எப்படி திடமாக இருக்கின்றானென்று அவனுக்கே தெரியவில்லை.
மயிலாஞ்சலி ஆதியிடம் பேசியதை கேட்டுவிட்டு அறைக்குள் வந்து தாழிடாது கதவடைத்தவன், தரையில் மண்டியிட்டு சத்தமின்றி உள்ளத்தோடு கதறி துடித்திருந்தான்.
அந்நேரம் தான் ரிச்சர்ட் அவனுக்கு அழைத்திருந்தான்.
அழைப்பை ஏற்ற தீரன் நண்பனிடத்தில் அப்படியொரு கதறலை வெளிப்படுத்தியிருந்தான்.
காதலுக்காக உள்ளம் மருகி தானும் உயிர் வேதனையை அனுபவிப்போமென்று முன்னெப்போதும் நினைத்துக்கூட பார்த்திருந்திருக்க மாட்டான்.
ஆனால் இக்கணம்… இதயத்தினை பிடுங்கெறிய முயன்றான்.
“வலிக்குது ரிச்சி…” என்று அழுதவன்,
“எல்லாம் உன்னாலடா… நான் பாட்டுக்கு இருந்தேன். எனக்குள்ள இருந்த காதலை என்னென்னவோ சொல்லி வெளிய கொண்டுவந்து என்னை இப்படி வலி அனுபவிக்க வச்சிட்ட” என்று நண்பனை குற்றம் சாட்டினான்.
அடுத்த நொடியே அவனிடம் ஆறுதலையும் தேடியிருந்தான்.
“இது இப்படித்தான் இருக்குமா ரிச்சி… என்னால இங்க முடியலடா, நான் நாளைக்கே கிளம்பிடப்போறேன். அவள் எம்மேல வச்சிருக்க அன்பை, நான் காதலோட பார்த்து கலங்கப்படுத்திட்டேன் அப்படின்னு தோணுதுடா. இனிமே என்னால அவள் முகத்தை சாதாரணமா பார்க்க முடியுமா தெரியல. அவளோட பிரசன்ஸ் ஃபீல் பண்ணாலே லவ் தான்டா முன்ன வருது… அவள் சொல்ற அன்பு மட்டுமே வச்சு எப்படிடா பார்க்க முடியும்” என்று கத்தியிருந்தான்.
அந்த சத்தம் கேட்டுதான் அர்ச்சனா அறைக்குள் நுழைந்தது.
இப்போதும் தானா அப்படி கதறினோம் என அவ்வெண்ணத்தில் ஊர்ந்துக் கொண்டிருந்தவனை கலைத்தது அருகில் கேட்ட மயிலாஞ்சலியின் அழைப்பு.