தூரமே தூரமாய் 7
என் காதல் பிறந்ததில்
அவன்(ள்) தாயுமானவன்(ள்).
‘எம் காதல் மடிந்ததில்
அவன் காரணமானவன்…’
மறக்க நினைக்கையில்
வேதனையாய் அவன்(ள்).
நினைத்துப் பார்க்கையில்
சுகம் பிணைந்த வலியுமாய் அவன்(ள்)!
______________________
காக்கி உடையில் தயாராகி கண்ணாடி முன் நின்று தன்னுடைய கேசத்தை கையினால் சரி செய்து கொண்டிருந்தான் ருத்விக்.
“அப்பா” என்று ஓடிவந்த தேஷ்…
“எப்போ ஸ்கூல் ஜாயின் பண்ணனும்?” என்று கேட்க,
“தேஷ் குட்டிக்கு அதுக்குள்ள ஸ்கூல் போகனுமா?” என்று மகனை தூக்கி தனக்கு முன்னிருந்த சிறு மேசையில் நிற்க வைத்தான்.
“அங்க போனனே?”
“இங்கையும் பிளே ஸ்கூல் போறீங்களா?” என்றவாறே தொப்பியை கையில் எடுத்தவன், மகனை தூக்கிக்கொண்டு அறையிலிருந்து வெளியில் வந்தான்.
“பிளே ஸ்கூல் விசாரிக்கட்டுமாம்மா?”
சமையலறையில் பொருட்களை பிரித்து அடுக்கிக் கொண்டிருந்த தீபாவிடம் வினவினான்.
“ஸ்கூல் சேர்க்கணும் தான் ருது. ஆனால் பிளே ஸ்கூல் இல்லை. எல்.கே.ஜி. அட்மிஷன் செக் பண்ணு. டூ மன்த்ஸ் தான் இருக்கு. அதுவரை வீட்டிலே ஃபிரியா இருக்கட்டும்” என்றவாறே மளிகைப் பொருட்கள் அடங்கிய டப்பாக்களை தனக்கு ஏற்றவாறு வைத்துக் கொண்டிருந்தார்.
“ஹ்ம்ம்… செக் பன்றேன் ம்மா” என்ற ருது, “ஆளுங்களே கிச்சனையும் செட் பண்ணியிருப்பாங்க. நீங்கதான் உங்களுக்கு வசதிபடுற மாதிரி வைக்கணும் சொல்லி வேண்டாம் சொல்லிட்டிங்க. இப்போ பாருங்க, எவ்வளவு வேலை” என்றான்.
“சும்மா தானே இருக்கேன் ருது. அதுக்கு இதில் நேரம் போகுமே” என்றவர், “இந்த மனுஷன் காலையிலே கிளம்பிப் போயாச்சு. சாப்பிட்டாரா இல்லையா தெரியல” என்றார்.
“என்னால ரொம்ப கஷ்டம் உங்களுக்கு” என்றான் ருது.
அவனை முறைத்துப் பார்த்த தீபா,
“எங்க பையனோட இருக்கிறது எங்களுக்கு கஷ்டமா?” எனக் கேட்டார்.
“ம்மா…”
“போடா… ட்யூட்டியில் ஜாயின் பண்ணனும் தானே. அதைப்பாரு” என்று அவனை விரட்டினார்.
அவர்கள் வருவதற்கு முன்பே வீடு ஏற்பாடாகியிருக்க… பொருட்களை கொண்டு வந்த ஆட்களே அனைத்தையும் பொருத்தி வைத்துவிட்டு சென்றிருந்தனர். அதனால் வீடு சில மணி நேரங்களில் தயாராகி இருந்தது. அவர்களுக்கும் வேலைப்பளு இல்லாமல் போனது.
“மார்னிங் ஜாகிங் போகும்போதே குவார்ட்டர்ஸ் ஏரியா சுற்றி பார்த்துட்டேன் ம்மா… பின்னாடியே ஒரு சூப்பர் மார்க்கெட் இருக்கு. பக்கத்துல நல்ல பெருசாவே பார்க் இருக்கு. பிளே கிரவுண்ட் கூட இருக்கு” என்றான்.
“ம்ம்ம்…”
“வேறெங்கும் போகனும்ன்னா சொல்லுங்க. நான் அழைச்சிட்டு போறேன்” என்றவன்,
“பாட்டியை தொல்லை செய்யாம குட் பாஃயா இருக்கணும் தேஷ். சேட்டை பண்ணக்கூடாது” என்று மகனின் கன்னத்தில் முத்தம் வைத்த ருது வாயிலை நோக்கி நகர்ந்தான்.
“வீடு எங்க இருக்கு? எந்த ஏரியா?”
தீபா கேட்ட கேள்வியில் அவனது நடை நின்றது.
“யார் வீடு?”
“யாரை கேட்கிறேன் உனக்குத் தெரியும்.”
“அது முடிந்த அத்தியாயம் ம்மா. ப்ளீஸ். மொத்தமா மறந்துட்டேன் நினைத்தேன். இல்லைன்னு இங்க வந்தபிறகு தான் தெரியுது. மறக்க ட்ரை பன்றேன். வேணாமே” என்றான்.
ருது அவனது உணர்வுகளை மறைக்காது வெளிப்படுத்துவது தீபாவிடம் மட்டுமே. அவனது அன்னையிடம் கிடைத்த அன்பு பல மடங்காக தீபாவிடம் எவ்வித எதிர்பார்ப்புமின்றி கிடைப்பதால் இந்த வெளிப்படை நிலை அவரிடம் அவனுக்கு.
“மறந்திடுவியா?”
“ம்மா… ப்ளீஸ்.” தழுதழுக்கிறான். ஆனாலும் தொண்டைக்குள் விழுங்க முயல்கிறான். வலி அவனுக்குத்தானே.
“நிஜமா வேணாமா?”
“நான் என்ன சொல்லனும்?”
“திரும்ப ஏத்துக்கமாட்டாங்க நினைக்கிறியா?”
“தேஷ் மட்டும் போதும்மா. நான் இப்படியே இருந்திடறனே!” என்றவன், அடைத்த தொண்டையை சரி செய்து,
“தேஷ்… அவனோட… முடியலம்மா” என்று எதையோ சொல்ல வந்தவன், முடியாது வேகமாக வெளியேறியிருந்தான்.
“அப்போவே சரி செய்திருக்கலாம். பெத்தவங்களுக்காக நீ சிலுவையை சுமக்கணும் இருக்கு” என்று முணுமுணுத்தவராக தேஷ்ஷுடன் சேர்த்து வேலையையும் பார்க்க ஆரம்பித்தார்.
_____________________________
ருது பணியில் சேர்ந்த ஒரு மணி நேரத்தில் தன் அதிரடியை காட்டத் துவங்கியிருந்தான்.
தன்னுடைய அலுவலகம் நுழைந்ததும் எவ்வித அறிமுகமும் வேண்டாமென்று மற்ற பணியாளர்களிடம் சொல்லிவிட்டான்.
முடித்த வழக்குகள் முடிக்காத வழக்குகள் என்று பிரித்து வைக்கக் கூறியவன், முடிக்காத வழக்குகளில் முந்தையது, பின் தங்கியது என பிரிக்கச் செய்தான்.
பின் தங்கிய பல வழக்குகளை யார் விசாரித்தது, இன்னும் ஏன் முடிக்கவில்லையென காரணங்களை கேட்டு துருவி எடுத்துவிட்டான்.
தற்போது சமீபத்தில் நடந்த வழக்குகள் ஒவ்வொன்றையும் அந்தந்த வழக்கு அதிகாரிகளிடம், அவர்களையே சொல்ல வைத்துக் கேட்டுக்கொண்டான்.
“எப்போ முடிப்பீங்க?”
ருதுவின் கேள்வியில் ஆள் மாற்றி ஆள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
“வெல்” என்று இருக்கையிலிருந்து எழுந்தவன், “என்னோட கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் நிலையங்களில், முடிக்கப்படாது மூடிய வழக்கென்று எதுவும் இருக்கக்கூடாது. அதற்காக உங்களது கற்பனை வளத்திற்கு தீனிப்போட்டு வழக்கினை முடித்திடக்கூடாது. வித் இன் ஒன் வீக்… எல்லாம் முடிஞ்சிருக்கணும். க்ளோஸ்ட் ஃபைல்ஸ் என் டேபிளுக்கு வந்திருக்கணும்” என்றான்.
ருதுவின் முகத்தில் கடுமையோ, கோபமோ இல்லை. ஆனால் அதீத அழுத்தம் தென்பட்டது.
தனது கூர்மையான பார்வையாலே தான் இப்படித்தான் என்று அனைவரையும் எட்ட நிற்க வைத்திட்டான்.
“கோ அகெய்ட்.”
தான் பேசி முடித்தும் தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவர்களை பார்த்துக் கூறியவன்,
“நீங்க ஸ்டேஷனில் இருக்கணும் அவசயமில்லை. கேஸ் முடிக்க உங்களோட தீவிரம் எந்த எல்லைக்குள்ளும் இருக்கலாம்” என்றான்.
ருது நினைத்திருந்தால் அந்தந்த வழக்குகளுக்கு ஏற்றவகையில் அவர்களுக்கு ஆலோசனை வழங்கியிருக்கலாம். அல்லது அவனே ஆராய்ந்து முடித்திருக்கலாம். அது முதல் நாளே அவர்களுக்கு அவன் மீது விரோதத்தை உண்டாக்கியிருக்கும். அவனது துறையில் நண்பர்களாக பழகாவிட்டாலும், எதிரியாக யாரையும் உருவாக்கிவிடக் கூடாது. அதற்காகவே அவர்கள் வழக்கை மீண்டும் அவர்களிடமே ஒப்படைத்திருக்கிறான்.
புது அதிகாரியிடம் நற்பெயர் எடுக்க வேண்டுமென்பதற்காகவே விரைந்து செயல்படுவர். ருது கணிப்பு என்றும் பொய்த்துப்போனதில்லை.
ஒன்றில் மட்டும் பொய்த்துப்போனது. அவனறியும் நேரம் எப்படி உணர்வான்?
வாகன ஓட்டியை அழைத்தான்.
“நம்ம கண்ட்ரோல் ஏரியா ஒரு ரவுண்ட் போய் வருவோமா?” எனக் கேட்டான்.
“உங்களுக்கு போலாம்ன்னா போலாம் சார்” என்றார் வாகன ஓட்டி மற்றும் டாணாக்காரரான மத்திய வயதுடைய கிருஷ்ணன்.
தொப்பியை அணிந்து வேக எட்டுக்களுடன் வெளியில் வந்த ருது, ஜீப்பில் முன் அமர, கிருஷ்ணன் வண்டியை சாலையில் செலுத்தினார்.
“யாருண்ணா அந்த கைலாஷ்?”
கிருஷ்ணனின் கைகளில் ஒருநொடி வாகனம் தடுமாறி சீரானது.
“அரசியல்வாதியா?” அவரின் அமைதியில் அவனே கேட்டிருந்தான்.
“அரசியல்வாதிக்கும் மேல சார்” என்ற கிருஷ்ணன், “கைலாஷ் எந்த கட்சி ஆளும் கிடையாது. ஆனால் எந்தவொரு கட்சியும் அவன் சொல்லை மீறாது. ஆறு வருஷத்துக்கு முன்ன சின்னதா குவாரி ஆரம்பிச்சு தொழில் செய்யத் தொடங்கியவன். இன்னைக்கு சொல்லிக்கொள்ள முடியாத சொத்து. எப்படின்னு அவன் மட்டும் தான் அறிவான். செய்யாத பிஸ்னெஸ் இல்லை” என்றார்.
“ம்ம்ம்… ஆறு வருஷத்துக்கு முன்ன குவாரியில் விபத்து ஏற்பட்டு, ஒன்பது பேர் இறந்து போனது… இந்த கைலாஷ் குவாரியில் தானே?” எனக் கேட்டான். யோசனையாக.
அப்போதுதான் ருது தேர்வு முடிவுகள் வெளிவந்து பயிற்சிக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்த நேரம். அதுவரையிலான நிகழ்வுகள் மட்டுமே அவ்வூரைப்பற்றி அவனது நினைவுகளில் உள்ளது. அதற்கு பிறகு இரண்டு வருடங்கள் செவி வழியாக அறிந்தவையெல்லாம், கடந்த நான்கு வருடங்களில் அவற்றையும் தவிர்த்து ஒன்றுமே தெரிந்துகொள்ளாது இருந்துவிட்டான்.
“ஆமாம் சார்… அந்த கேஸில் உள்ளே போனவன், அங்கு அரசியல் போராட்டத்துக்காக அடியாள் சப்ளை செய்யும் கந்தனிடம் பழக்கம் ஏற்பட்டு, அவனோடு சேர்ந்து அரசியல்வாதிகளுக்கு திரைக்கு மறைவில் சின்ன சின்ன உதவிகள் செய்து… பெரிய புள்ளியா வளர்ந்து நிக்கிறான். ஆரம்பத்தில் அரசியல்வாதிகள் சொல்வதை செய்து வந்தான். இப்போ இவன் சொல்லுவதை அரசியல்வாதிங்க செய்வாங்க. நினைச்சா ஆட்சியையே மாத்திடுவான் சார்” என்று அனைத்து விவரங்களையும் அவர் சொல்ல அமைதியாகக் கேட்டுக்கொண்டான்.
ருது எதுவும் பேசாதிருக்க…
“அவன் மேல கை வைக்கிறதுக்கு முன்ன பலமுறை யோசிச்சிக்கோங்க சார்” என்றார் கிருஷ்ணன்.
“இப்போதைக்கு அந்த ஐடியா இல்லை. பின்னாடி பார்ப்போம்” என்ற ருது, “முடிக்காமல் பெண்டிங்கில் இருந்தது எல்லாம் அவனோட ஆளுங்க வழக்கா?” என்றான்.
“ஆமாம் சார்… நீங்க எவ்ளோ டைம் கொடுத்தாலும் அந்த கேசெல்லாம் முடிக்கமாட்டாங்க” என்றார்.
“ம்ம்ம்ம்…”
“கல்யாணம் ஆகிருச்சா சார்?”
“நாலு வயசுல பையன் இருக்கான்” என்ற ருது, “குவார்ட்டர்ஸ் பக்கம், நல்ல ஸ்கூல் சொல்லுங்கண்ணா?” எனக் கேட்டான்.
பள்ளியின் பெயரை சொல்லிய கிருஷ்ணா, “என் பொண்ணு கூட அங்க தான் எய்த் படிக்கிறாள் சார். டீச்சிங் நல்லாயிருக்கு” என்றார்.
“அட்மிஷன் டிடெயில்ஸ்?”
“வெப்சைட் தான் செக் பண்ணனும் சார். அதுலே அப்ளை பண்ணிடலாம். செலெக்ட் பண்ணிட்டாங்கன்னா மெயில் வரும். அவங்க கேட்கிற ஆவணங்கள் எல்லாம் வர சொல்லுற தேதியில் எடுத்துட்டு போகணும்” என்றார்.
“ஸ்கூல் சேர்க்கிறதுக்கே இவ்வளவு வழிமுறையா?” என்ற ருது, “இந்த சிஸ்டம் ரொம்ப கஷ்டம் தான்” என்றான்.
இவ்வளவு பேசியபடி வந்தாலும், ருதுவின் கண்கள் சுற்றுப்புறத்தை கவனிக்கத் தவறவில்லை.
“ஆறு வருஷத்தில் நிறைய மாறியிருக்கு” என்றான்.
“நீங்க சென்னையா சார்?”
“ம்ம்ம்… ட்ரைனிங்காக இங்கிருந்து போனேன்” என்று தடுமாறியவன், கண்களை மூடி திறந்து, “இப்போதான் திரும்ப வந்திருக்கேன்” என்றான்.
இடையில் நான்கு வருடங்களுக்கு முன் வந்து சென்ற நாள் நினைவில் உதிக்க… உணர்வோடு வலி பரவும் நொடியாய் அமைந்தது.
மறக்கப்பட வேண்டியவை யாவும் நினைவோடு கலந்து உறவாடுவதே ஒரு உறவின் மீது நாம் கொண்ட காதலின்/அன்பின் ஆழம்.
எளிதில் அனைத்தும் துறந்திடுவானா?
மனதை திசை திருப்ப, பார்வையில் கூர்மைக் காட்டினான்.
போக்குவரத்து சமிக்கை பகுதி. அதன் இருபுறமும் பேருந்து நிற்கும் நிழற்குடை இருந்தது.
மாலை நேரம் என்பதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு சென்று திரும்போவோர் என பலதரப்பட்ட மனிதர்களோடு பேருந்து நிற்குமிடம் சற்று கூட்டமாகவே காட்சியளித்தது. அதீத பரபரப்போடு.
“ரெட் லைட் எரியுது. சிக்னலில் நிக்கிறோம் அப்படின்னு தெரியுதுதானே! அப்புறம் எதுக்கு அந்த வண்டியை உறுமிக்கிட்டே இருக்கானுங்க தெரியல. இப்போலாம் எட்டாவது படிக்கிறதே பெரிய பைக்கு ஓட்டுது. என்னவோ ராக்கெட் ஓட்டுற சீன். கீழ விழுந்தா வண்டியை தானா தூக்க முடியுமா?” என்று தங்களுக்கு முன்னால் ஆக்சலேட்டரை சுழற்றிக்கொண்டே நின்றிருந்த இருசக்கர வாகன ஓட்டியை பார்த்து கிருஷ்ணன் புலம்பிட, ருதுவின் கண்கள் தங்களுக்கு பக்கவாட்டில் இருந்த பேருந்து நிறுத்துமிடத்தில் பதிந்தது.
ஏதோ ஒன்று அவனது மூளையை கவனிக்கத் தூண்டியது.
‘அங்க என்னவோ தப்பா தெரியுது.’ தனக்குத்தானே சொல்லிக்கொண்டவனாக, பார்வையில் கூர்மையை தேக்கி ஆராயந்தான்.
ஒரு இளம் பெண் பேருந்திற்காக காத்திருக்க, அவளுக்கு பின்னால் இளைஞன் ஒருவன் மாஸ்க் அணிந்தபடி அப்பெண்ணையே பார்த்திருந்தான். அவனது விழிகளில் கள்ளத்தனம். சுற்றி இருப்பவரின் மீது பார்வை அலசல். அவனது உடல் மொழியில் தெளிவில்லை. மொத்தத்தில் அவனிடம் நிதானமில்லை.
அவனது கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த அடையாள அட்டையும், மாட்டியிருந்த பையும் மட்டுமே அவனை கல்லூரி மாணவனாக அடையாளப்படுத்தியது. தோற்றம் நிச்சயம் அவன் மாணவன் என்று கூறாது.
ருதுவின் பார்வை அவனது கைகளை ஆராய்ந்தது. கத்தி, பாட்டில் ஏதேனும் வைத்திருக்கிறானா என்று. அதற்கு காரணம் அப்பையனின் கவனம் முழுக்க தனக்கு முன்னிருக்கும் பெண்ணின் மீதே நிலைத்திருந்தது.
இப்போதுதான் பொது இடத்தில் பெண்ணின் மீது… காதலிக்க மறுத்தாள் என்பதற்காக கொலை செய்வது, ஆசீட் வீசுவதெல்லாம் எளிதாகிவிட்டதே. அந்த எண்ணம் ருதுவிடம்.
அவனது கைகள் வெறுமையாக இருந்தது.
லேசர் விழி கொண்டு போலீசின் ஆராயும் தன்மையில் அவனை ருது பார்வையால் மேலும் ஊடுருவினான். அவனிடன் எவ்வித ஆயுதமும் இல்லையென்பதை உறுதி செய்த ருது, அவனின் மீது சந்தேகம் அதிகமாகவே வண்டியிலிருந்து கீழிறங்கினான்.
“அப்படி ஓரமா நிறுத்துங்கண்ணா” என்றவன் இரண்டு அடிகள் முன் வைக்க, குறுக்கே நுழைந்த பேருந்து… நிறுத்தம் தள்ளி நின்றது.
பேருந்தில் ஆட்கள் ஏறுவதும் இறங்குவதுமாக இருக்க… பேருந்து நகரத் தொடங்கிய நொடி அப்பெண்ணின் கழுத்திலிருந்த சங்கிலியை அறுத்துக்கொண்டு வேகமாக ஓடிச்சென்று பேருந்தில் ஏறியிருந்தான் அவன்.
இமைக்கும் நொடியில் நடந்துவிட்ட நிகழ்வை உள்வாங்கிய ருது, மின்னலென பாய்ந்தோடி பேருந்தில் ஏறினான்.
ருதுவின் காக்கி உடை யாரென அவனை அடையாளப்படுத்திட… அவன் ஏறியதை கண்ணாடி வழி கண்ட ஓட்டுநர் பேருந்தை சட்டென்று நிறுத்தினார்… அந்த இளைஞன் முன்பக்க வழியாக தப்பித்து ஓடினான்.
இரண்டே தாவில் அவனின் சட்டை காலரை பற்றி இழுத்திருந்தான் ருது.
அவனை இழுத்துக்கொண்டு ருது கூட்டம் கூடிய இடத்திற்கு வர,
“நல்ல அடி சார்” என்றார் கிருஷ்ணா.
“என்ன நடந்தாலும் வேடிக்கை பார்ப்பது மட்டும் நிற்காது” என்று சுற்றி நின்ற கூட்டத்தைப் பார்த்து ருது முணுமுணுத்தவனாக, “நீங்க ஆட்டோ பிடித்து இவனை ஸ்டேஷன் கூட்டிட்டுப்போங்க” என்றதோடு, “பக்கத்தில் ஏதும் ஹாஸ்பிடல் இருக்கா” எனக்கேட்டு தெரிந்தவனாக, சங்கிலியை பிடித்து இழுத்ததில் பின்பக்கமாக விழுந்ததால், அப்பெண்ணிற்கு தலையில் நல்ல அடி. அதோடு கழுத்திலும் சங்கிலி அறுத்த வேகம் வெட்டியிருந்தது.
தானே அப்பெண்ணை ஜீப்பில் ஏற்றியவன்,
“ஸ்டேஷனுக்கு அழைத்து யாரும் லேடி கான்ஸ்டபிள் ஹாஸ்பிடல் வரச்சொல்லுங்க” என்று சாலையில் சீறினான்.
ருது வந்தது இனியன் வேலை செய்யும் கல்லூரி மருத்துவமனை தான். அது அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் பொது மருத்துவமனை.
பெண் காவலர் வரும்வரை அங்கிருந்தவன்…
“அவங்க கண் விழித்ததும் ரிப்போர்ட் எழுதி வாங்கிக்கோங்க. அதுக்கு முன்ன, அவங்க வீட்டை விசாரித்து தகவல் கொடுங்க” என்று வெளியில் வந்தான்.
வாகனம் தருப்பிக்குமிடம் நோக்கி செல்லும் போதுதான், நினைவு வந்தவனாக…
ஷிவன்யாவின் எண்ணுக்கு அழைத்தான்.
முதல் ஒலியிலேயே ஏற்றிருந்தாள்.
“மாஸ் பண்ணிட்டிங்க போங்க. சோஷியல் மீடியா, ரீல்ஸ், ஷார்ட்ஸ்’ன்னு உங்க வீடியோ தான் செம வைரல். அதுவும் பஸ்ஸில் நீங்க தாவி ஏறியது இருக்கே… என் பிரண்ட்ஸ்க்கெல்லாம் நீங்க க்ரஷ் ஆகிட்டிங்க” என்று ருதுவை பேசவே விடாது மூச்சுவிடாது சொல்லிக் கொண்டிருந்தாள்.
அவள் சொல்லிய பின்னர் தான் அந்த நிகழ்வு காணொளி எடுக்கப்பட்டிருப்பதையே ருது அறிந்தான்.
‘மொபைல் வச்சுக்கிட்டு இவனுங்க பண்ணுற அலும்பு… ஷ்ஷ்ஷ்… வீடியோ எடுத்த எவனுக்கும் அடிபட்டு விழுந்து கிடந்த பொண்ணை காப்பாத்தனும் தோணல போல’ என்று விரக்தியாக நினைத்துக் கொண்டான்.
“பேசிட்டியா? நான் இங்கே தான் உன் காலேஜ் பார்க்கிங்கில் இருக்கேன்” என்றான்.
“ஹேய்… வெயிட். இதோ வந்துட்டேன்” என்றவள் கிட்டத்தட்ட ஓடி வந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.
“ஹாய் டார்லிங்…”
ஷிவன்யா அவ்வாறு சொல்லியபடி அங்கு ஜீப்பில் சாய்ந்து நின்றிருந்த ருதுவை பக்கவாட்டாக அணைத்த சமயம் தான்… தன்னுடைய பணி முடிந்து அங்கு வந்தான் இனியன்.
“ருது…” மெல்ல அவனது உதடுகள் உச்சரிக்க, கண்கள் பனித்தது. ஒருநொடி சகலமும் அவனுக்கு நின்று இயங்கியது. ஓடிச்சென்று நண்பனை இறுக அணைத்துக்கொள்ளும் வேகம். உணர்வுகளை அடக்கியவனாக, சட்டென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கு பின்னால் தன்னை மறைத்துக் கொண்டான்.
“அடிப்பட்ட பொண்ணை இங்கு தான் அட்மிட் பண்ணியிருக்கீங்களா?” என்று ஷிவன்யா கேட்டிட,
“ம்ம்ம்” என்றவன், “நீயென்ன சாப்பிடுறதே இல்லையா? போனமுறை பார்த்ததுக்கு மெலிஞ்சு தெரியுற” என்றான். அவளின் தோள் மீது கையிட்டு தனக்கருகே நிறுத்திக்கொண்டவனாக.
“அதெல்லாம் இல்லை” என்றவள், “தேஷ் எப்படியிருக்கான்?” எனக் கேட்டாள்.
அவர்கள் பேசுவதெல்லாம் இனியனுக்கு தெளிவாகக் கேட்டது.
இவளே அவனுக்கு என்ன உறவென்று தெரியாதபோது, தேஷ் யாரென்று சிந்தித்தான்.
ருதுவிற்கு ஷிவன்யா மீதான அக்கறை அவனின் பேச்சில் தென்பட, இனியன் என்ன மாதிரி உணர்கிறான் என்று அவனுக்கேத் தெரியவில்லை.
இமையாளின் மீது ருது காட்டிய அக்கறையெல்லாம் கண்முன் தோன்றி கண்களை கரிக்கச் செய்தது.
“குட்” என்ற ருது, “எப்போ ஹாஸ்டல் வெக்கேட் பன்ற? மார்னிங் நீ பதில் சொல்லலையாம்?” என்றான்.
“இந்த வீக்கெண்ட். வந்திடுங்க. ரிஜிஸ்டரில் சைன் பண்ணனும்” என்றாள்.
“ஓகே” என்ற ருது, “ஸ்டேஷனில் வொர்க் இருக்கு. நைட் கால் பன்றேன்” என்று ஜீப்பில் ஏற முற்பட…
“டார்லிங்” என்று இடையில் கைகளை குற்றி, அவனை முறைத்தபடி இழுத்தாள்.
நீண்ட இதழ் விரிப்போடு தன் இரு கரங்களினாலும் அவளின் கன்னம் பற்றி ஆதுரமாக நெற்றி முட்டி விலகியவன்…
“இதைவிடவே மாட்டியா?” என்று வண்டியில் ஏறியிருந்தான்.
“பிடிச்சிருக்கே! நீங்க இப்படி பண்ணும்போது உங்களுக்கு என்னை ரொம்ப பிடிக்கும்ன்னு என்னால் ஃபீல் பண்ண முடியுது” என்றாள் ருதுவின் கன்னம் இரண்டில் தன் சுட்டு விரல்களை குத்தி.
“சரி… சரி… டேக் கேர்” என்று வண்டியை உயிர்ப்பித்த ருதுவின் மனமெல்லாம் மெல்லிய பாரம் ஏறுவதைப்போல் இருந்தது.
தனக்கு நெருக்கமான உறவு பக்கமிருந்து விலகிச் செல்வதைப்போல் உணர்ந்தான்.
‘யாரோ என்னை நோட் பன்றாங்க.’ தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.