அன்பின் அதீதம் 14

அத்தியாயம் 14

“மாமா…”

அத்வத் கதவினை திறந்து வைத்தே ஓடியிருக்க, மயிலாஞ்சலி அழைத்துக்கொண்டே உள் நுழைந்திருந்தாள்.

அவளின் விளிப்பிற்கு முன்பே மிதந்து வந்த கொலுசின் ஒலியில் தன்னை மீட்டு சீராக்கிய தீரன் நிமிர்ந்து அமர…

“என்ன மாமா இங்க இப்படி உட்கார்ந்திருக்கீய்ங்க?” என்று அருகில் வந்திருந்தாள்.

“ஒண்ணுமில்ல” என்று அவளின் முகம் காணாது பதில் வழங்கிய தீரன்,

“என்ன இந்த நேரம்?” எனக் கேட்டான்.

“உங்க ரூமுக்கு நான் வர நேரங்காலமெல்லாம் இருக்காட்டிக்கு?” என்றவள், “டிவி ரூம் போவோம் வாங்க” என்றாள்.

“இன்னைக்கு படம் தாத்தா செலக்ஷன். சிவாஜி நடிச்ச இராஜராஜ சோழன். அதுல பாட்டெல்லாம் நல்லாயிருக்கும் வாங்க” என அழைத்தாள்.

“நான் வரல” என்றவன், “மூவி பாக்குற அளவுக்கெல்லாம் என்கிட்ட பொறுமை இல்லை” என்றான்.

“நீங்க படமெல்லாம் பாக்க வேணாம். சும்மா கூட வந்து உட்கார்ந்திருங்க. எல்லாரும் ஒண்ணா இருக்கும்போது நீங்க மட்டும் இங்கிட்டு தனியா இருப்பீங்க” என்றாள்.

“இத்தனை வருஷமா நான் தனியாத்தேன் இருந்தேன். இனியும் இங்கிருந்து போய் தனியாத்தேன் இருக்கப்போறேன். இன்னைக்கு ஒரு நா தனியா இருக்கிறதுக்கு கவலைப்படுற நீயி” என்றவன் சொல்ல வேண்டுமென சொல்லவில்லை. அவளுடனான வாழ்வை எதிர்ப்பார்த்து வந்தவனுக்கு, இனி வாழ்வே இல்லையென்ற தனிமையின் விரக்தியில் கூறிவிட்டான்.

கேட்டவளுக்கு மனம் கனத்துப் போனது.

தீரன் சொல்வதும் உண்மைதானே! ஆளும் பேருமாக உறவென்று அத்தனைப்பேர் இருந்தும் அவனது நாட்கள் தனித்து தானே நகர்கிறது.

“நீங்க தனியாத்தேன் இருக்கீங்கன்னு உங்களுக்கு ஃபீலாவுதா. நான்தேன் கூடவே இருக்கேனே மாமா!”

“எத்தனை நாளுக்கு?” பட்டென்று கேட்டிருந்தான்.

“கடைசி வரைக்கும். நீங்க கிழவனாகி கையெல்லாம் சுருக்கம் விழுந்து பல்லெல்லாம் கொட்டிப்போன பொறவும் நான் இருப்பேன்.” அவன் வேகமாக கேட்டதில் அதிர்ந்தாலும் பதில் வழங்கியிருந்தாள்.

“இதெல்லாம் சொல்லவும் கேட்கவும் நல்லாத்தேன் இருக்கும். பிராக்டிக்கல் லைஃப்க்கு ஒத்துவராது. உனக்குன்னு ஒரு வாழ்க்கை அமையுற வரைதேன் எல்லாம்” என்றான்.

அவனது காதல் கொடுக்கும் வலியில் தன்னை அறியாது காட்டம் கொண்டிருந்தான் அவளிடத்தில். அதன் வெளிப்பாடே இவை.

அத்தோடு இனி அவளின்றி நானா எனும் எண்ணமே அவனை நிலையில்லாது மனதில் அலைய வைத்தது.

மயிலாஞ்சலிக்கு அவனது பேச்சுக்கள் வித்தியாசமாகத் தெரிந்த போதிலும், அதனின் உள்ளிருக்கும் பொருளை ஆராய முற்பட்டிருந்தாள்.

“எம்மேல எதுவும் கோவமா மாமா?”

மயிலாஞ்சலி அவ்வாறு கேட்ட பின்பே, என்ன பேசிக்கொண்டிருக்கிறோம் என்பது விளங்க நெற்றியினை அழுந்தத் தேய்த்தான்.

“நத்திங்” என்ற தீரன், “நீ போடா” என்றான்.

“நீங்க வரல… உங்களுக்கு போரடிக்காது மாமா. படம் முடியுறதுக்குள்ளவே எல்லாரும் அங்கிட்டு அந்த ரூம்ல அப்படியே பேசிக்கிட்டே உறங்கியிருப்பாய்ங்க. செமயா இருக்கும்” என்று மயிலாஞ்சலி அடமாகக் கூப்பிட அதற்கு மேல் அவனாலும் தவிர்க்க முடியவில்லை.

வீட்டிலே நன்கு நீண்ட அகலமான பெரிய அறை அவ்வறை தான்.

“ஒருமுறை என்னைய மட்டும் விட்டுப்போட்டு இந்த மாமாஸ் எல்லாரும் படம் பார்க்க தியேட்டருக்கு போயிட்டு வந்துட்டாய்ங்கன்னு நான் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிப்புட்டேன். அன்னைக்கு அந்தப் படத்தை டவுன்லோட் பண்ணி போட்டு காட்டினாய்ங்க. அப்போ ஆரம்பிச்சது இத்தனை வருசமா மாறாம இருக்கு” என்று கதை கூறியபடி தீரனை அந்த அறைக்கு அழைத்து வந்தாள்.

வாயிலிலே சிறிய மேசையில் ட்ரே ஒன்று இருக்க, அதில் பல அலைபேசிகள் இடம் பெற்றிருந்தன.

“போன் இதுல வச்சிடுங்க மாமா” என்றவள், தானே அவனது கையிலிருந்ததை வாங்கி டிரேயில் வைத்தாள்.

“இந்த ராத்திரிக்கு மட்டும் மொபைல் ஸ்ட்ரிக்ட்லி ரெஸ்ட்ரிக்ட் இன் திஸ் ரூம்” என்றாள்.

“எனக்கு முக்கியமான கால் எதுவும் வரும் மயிலா… அங்கிட்டு இப்போதேன் டே டைம். ஒர்க் போயிட்டு இருக்கும். என் அசிஸ்டன்ஸ் டவுட்னா கால் பண்ணுவாய்ங்க” என்று அலைபேசியை கையிலெடுக்க…

“மாமா” என்று மயிலாஞ்சலி இடுப்பில் கைகள் குற்றி சிறு முறைப்போடு அழைக்க,

“வைச்சிட்டேன்” என்றவனாக அறைக்குள் சென்றிருந்தான்.

தரையில் படுக்கைகள் விரிக்கப்பட்டு எல்லோரும் அமர்ந்திருந்தனர்.

“வாடே! நீ வரத்தேன் வெயிட் பண்ணோம்” என்ற ஆதி, தம்பியை தன் பக்கம் அமர்த்திக்கொண்டான்.

உள்ளே வந்த மயிலாஞ்சலி தீரனை இடித்துக்கொண்டு அவனருகில் அமர்ந்தாள்.

“நான் நமக்கு அங்கிட்டு இடம் போட்டு வைச்சிருக்கேன். நீங்க உங்க அண்ணேங்கக்கூட வந்து உட்கார்ந்துட்டிய்ங்க” என்றவள் தலையில் கொட்டிய அறிவன், “உனக்கு வேணுமின்னா அங்கிட்டு எழுந்துப்போ. படம் ஆரம்பிக்கும்போது சும்மா சலம்பிக்கிட்டு இருக்காத” என்றான்.

“ஏட்டி அஞ்சலி அங்க அவனுங்கக்கூட என்னட்டி வம்பு உனக்கு. இங்கிட்டு வா” என்று அர்ச்சனா அழைத்திட,

“போ” என்றான் தீரன்.

“இன்னைக்கெல்லாம் போ போன்னே சொல்லிக்கிட்டு இருக்கீய்ங்க மாமா” என்று தீரனுக்கு மட்டும் கேட்குமாறு முணுமுணுத்தவள்,

“அஞ்சலி” என்று முத்து மாணிக்கம் அழுத்தமாக அழைத்ததில்…

“இனி நான் பேசவேயில்ல” என்று எழுந்துச் சென்று தனியாக அமர்ந்துகொண்டாள்.

படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே சிறியவர்கள் அனைவரும் உறங்கியிருக்க, பெரியவர்களிடத்தில் மயிலாஞ்சலியை நாளை பெண் பார்க்க வருவதைக் குறித்த பேச்சுக்கள் ஆரம்பமாகியிருந்தது.

ரத்னவேலும், அர்ச்சனாவும் தீரனை வேதனையோடு பார்த்தனர்.

“எனக்கு அவள் இல்லை மாமா” என்று தன்னைக் கட்டிக்கொண்டு தீரன் அழுத கணத்திலிருந்து இன்னுமும் மீண்டு வர முடியாது தவித்துக் கொண்டிருக்கிறார் ரத்னவேலு.

“அவள் உன்னை பிடிக்கலன்னு சொல்லலயேடே… அதிகமா பிடிக்குந்தேனே சொல்லியிருக்கா. பெத்தவங்க விருப்பன்னு கண்ணாலம் பண்ணிக்கச்சொன்னா சரின்னுவாடே! இதுக்கா இம்புட்டு உக்கி அழுவுற” என்று ரத்னவேலு கூறிட,

“அப்படி கட்டிக்க என்னால முடியாது மாமா. எனக்கு அவள் காதல்தேன் வேணும். நீங்க எல்லாரும் சொல்றீங்கன்னு அவள் வேணாம். அத்தோட எங்க அன்பு அடுத்த அடி வைக்கிறதுல அவளுக்கு கொஞ்சமும் விருப்பமில்லை. விருப்பமில்லாததை கேட்டு வாங்க என்னால முடியாது. என் காதல் யாசிக்கிற நிலைமைக்கு போக வேணாமே” என்றிருந்தான் தீரன்.

“அப்போ உனக்கு அவள் வேணாமாடே!” அவனது அழுகையில் வரப்பெற்ற கண்ணீரை துடைத்தவாறு அர்ச்சனா கேட்டிட,

“அவளுக்கு நான் எப்பவுமே அவளோட மாமாவா மட்டுந்தேன் வேணுமாம் அச்சும்மா” என்ற தீரன் பொங்கி வந்த கேவலை அவளின் மடியில் சிதறிவிட்டதில்… அவள் மொத்தமாக நொறுங்கிப்போனாள்.

தீரனை மீறி இருவராலும் முடிவெடுக்க முடியாது போனது.

அவனது வலியில் அவர்கள் கலங்கி நின்றனர்.

இப்போதும் அவனது உள் மனம் சுமக்கும் ரணத்தை அறிந்தே இருந்தனர்.

நாளை வரவிருக்கும் குடும்பத்தைப்பற்றி முத்து மாணிக்கம் கூறிட, தீரனின் பார்வை முழுக்க அவனது மயிலாவிடத்தில் தான்.

அவனது மொத்த உறவும் சுற்றியிருந்த போதும் தீரனுக்கு அவனது மயிலா உடனில்லாதது தனிமையை உணர்த்திட எழுந்து சென்று அவளருகில் சுவற்றில் சாய்ந்து கால்களை நீட்டி அமர்ந்துகொண்டான்.

ஆதி, அன்பன், அறிவன், அரவிந்த் நால்வரும் தீரனைத்தான் கவனித்தனர்.

“நாம எம்புட்டு பேரு இருந்தாலும் அவனுக்கு அவதேன் தேவைப்படுறா(ள்) அண்ணே!” அரவிந்த் ஆதியிடம் சொல்ல…

“பல வருஷமா அவனுக்கு சொந்தமுன்னு நான் இருக்கேன்னு காட்டிக்கிட்டது அவ மட்டுந்தேன். அப்போ அவனுக்கு அவதேன் உறவா தெரிவா(ள்)” என்ற ஆதி, “ரெண்டேரும் ஒண்ணு சேர்ந்தாக்கா நல்லாயிருக்கும். அதுக்கு கொடுப்பினை இல்லாமப்போச்சு” என்றான்.

“எனக்கென்னவோ சின்னவன் அஞ்சலியை விரும்புறான்னுதேன் தோணுது” என்றான் அன்பன்.

“இருக்காதுடே!” என்ற ஆதி, “அஞ்சலியே அம்புட்டுக்கு தெளிவா இருக்கும்போது சின்னவன்கிட்ட அந்த தெளிவு இருக்காதாடே! அப்படியிருந்தாக்கா அவன் இம்புட்டு நேரமாவா நம்மகிட்ட சொல்லாம இருக்கப்போறான். நீங்கதேன் ஏதோ தப்பா நினைச்சுக்கிட்டு சொன்னீங்கன்னா நானும் அஞ்சலிக்கிட்ட போய் பேசியிருக்கேன்” என்றான்.

“ரெண்டேருக்கும் அப்படியொரு எண்ணமே துளியும் இல்லியாட்டுக்கு. இருந்திருந்தா கண்ணாலப் பேச்சு இம்புட்டு தூரம் போவமுட்டும் இப்படி அமைதியாவா இருப்பாய்ங்க” என்ற ஆதி, “எது நடக்கணுமோ… அதுதேன் நடக்கும். இனி இந்தப்பேச்சு பேசாம, அவீங்களை கவனிச்சுப் பாக்குறதை நிறுத்துங்கடே” என்று அதட்டியிருந்தான்.

“உங்களுக்குள்ள அப்படியென்ன ரகசியமுன்னு நெனச்சேன். இப்பத்தேன் சங்கதி வெளங்குது” என்று நால்வருக்கும் இடையில் தலையை நீட்டியிருந்தாள் தேவதாரணி.

“ஆமா, அவீங்க ஜோடி சேர்ந்தா அம்சமாத்தேன் இருக்கும்” என்றாள் ஆதிரா.

“அப்போ யாரும் படம் பாக்கலையாட்டுக்கு?” என்று ஆதி கேட்க, “அங்கிட்டுப் பாருங்க… பெருசுங்க எல்லாம் மும்முரமா கண்ணாலப் பேச்சு பேசிட்டு இருக்காய்ங்க. அதுக்குள்ள நாங்க என்னத்த தலையை விடுறது. சரின்னு உங்கப் பேச்சுல செவுல பதிச்சா எம்மா பெரிய சங்கதியை சத்தமில்லாம பேசிட்டு இருக்கீய்ங்க” என்றாள் அஞ்சனை.

“நாங்க மட்டும் பேசி என்னாவப்போவுது. சம்மந்தப்பட்ட ஆளுவலுக்கு விருப்பமில்லியே” என்றான் அன்பன்.

“கண்ணாலம் பண்றதுக்கு என்ன விருப்பம் வேணுமாட்டிக்கு? வூட்ல சொன்னா கட்டிக்கிட வேண்டியதுதேன்” என்று காயத்ரி கூற,

“இதை ஐயா காதுல போட்டு விடுவோம்… பொறவு ஐயாவே ஒரு முடிவெடுக்கட்டும்” என்றாள் கலாவதி.

“அர்ச்சனா அக்காவுக்கு இப்படி எண்ணம் இருந்துச்சு. என்கிட்டவே சொன்னாய்ங்க. ஆனால் இப்போ அமைதியா இருக்கிறதுக்கு காரணம் வெளங்கல” என்றான் அரவிந்த்.

“அதுதேன் சின்னவருக்கு பொண்ணு பாக்குற விசயத்துல தலையிடாம ஒதுங்கி இருந்தாய்ங்களா மதினி” என்றாள் வித்யா.

“இவன் போய் பார்த்திட்டு வந்து பொண்ணு ஒத்துவராது சொன்னப்போக்கூட அக்கா ஐயாகிட்ட அவனுக்கு அஞ்சலியை கட்டி வைக்கிறது பத்தி பேசணும் சொன்னுச்சு. ஆனா இப்போ அரவமே இல்லாம, நாளைக்கு பொண்ணு பார்க்க வரதைப்பத்தி ஐயா பேசுறதுக்கெல்லாம் தலையாட்டிட்டு இருக்கு” என்ற அரவிந்தை தொடர்ந்து அனைவரின் பார்வையும் அர்ச்சனாவிடம் சென்று திரும்பியது.

“அக்கா, மாமா, சின்னவன் மூணு பேருக்கும் நடுவுல என்னவோ நடந்திருக்குமாட்டி” என்ற அறிவன், “ஆதி அண்ணே அஞ்சலிக்கிட்ட பேசிட்டு வந்த நேரம், அக்காவும் மாமாவும் தீரன் ரூமிலிருந்து வெளிய வாரத பார்த்தேன். ரெண்டேரு முகமே சரியில்லை” என்றான்.

“ஒருவேளை அக்கா ஐயாகிட்ட பேசுறதுக்கு முன்னாடி சின்னவன்கிட்ட அவன் சம்மதம் கேட்டுப்புடலாம் நெனைச்சி பேசி, அவனும் அஞ்சலி மாறி வேணாமின்னுட்டானோ? அதனாலதேன் அக்கா ஆசையிருந்தும் அதைப்பத்தி பேசாம விட்டுப்போச்சோ” என்றான் ஆதி.

அனைவருக்குமே ஆதி சொல்வதுதான் காரணமாக இருக்குமென்று தங்களுக்குள் ஒரு முடிவுக்கு வந்திருந்தனர்.

**************************

தீரன் அருகில் வந்து அமரவும் மயிலாஞ்சலி ரொம்பவும் தீவிரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படத்தைப் பார்ப்பது போல பாவனை செய்தாள்.

தீரனும் எதுவும் பேசவில்லை. திரைப்படம் பார்க்கவில்லை என்றாலும் தொலைக்காட்சியில் கண் பதித்திருந்தான்.

தீரனுக்கு நினைத்தது இல்லையென்றான பின்பு, அவளுடன் இருக்கும் நொடிகளை மட்டும் விரும்ப ஆரம்பித்தான்.

எல்லோரும் திரைப்படம் பார்ப்பதை காரணமாக வைத்து அரட்டையில் மூழ்கியிருப்பது தெரிந்தது.

“யாரும் படம் பாக்குற மாறி தெரியல!” தீரன் சொல்லிட,

“படம் சும்மா சாக்குதேன்… வூட்ல இம்புட்டு ஆளுவ இருந்தாலும் எல்லாரும் ஒட்டுக்கா கூடுறது ராவுல உண்ங்கிற நேரந்தேன். அப்போ சாப்பிடாம பேசிட்டு இருந்தாக்கா, ஐயாவும், தாத்தாவும் வைவாங்க. அதுக்குத்தேன் இப்படி எல்லாரும் கூடி உட்கார்ந்து பேச இந்த ராத்திரி” என்றாள் மயிலாஞ்சலி.

“ஹ்ம்ம்” என்று தீரன் அவள் முகம் பார்க்காது சத்தம் காட்ட…

“இப்போ எல்லாரும் நம்ம வூட்டு கதைத்தேன் ஓட்டிட்டு இருப்பாய்ங்க. எல்லாரைப்பத்தியும் பேசுவாய்ங்க. உங்களை, என்னைப்பத்திக்கூட” என்றாள்.

“சேர்ந்து இருந்தாலும் எல்லாருக்கும் எல்லாரைப்பத்தியும் தெரியணும்ல. எதேர்ச்சியா ஆரம்பிச்ச பழக்கம், இப்போ வழக்கமாகிப்போச்சு” என்று மயிலாஞ்சலி கூறிட, தீரனிடத்தில் சிறு சத்தமும் இல்லை.

மயிலாஞ்சலி தீரனின் முகம் பார்க்க…

“இந்தமாறியான நேரத்துலக்கூட யாருக்கும் என் நெனைப்பு வராதுல” என்ற தீரனின் வார்த்தையில் இத்தனை வருடங்கள் அவர்களுடனான பந்தத்தை இழந்த வேதனை அப்பட்டமாகத் தெரிந்தது.

கண்களில் மிதமிஞ்சிய சோகம்.

“உங்களைப்பத்தி பேசலனாலும் யாரும் உங்களை நெனக்காம இருந்ததே இல்லை மாமா” என்ற மயிலாஞ்சலியின் முகம் பார்த்த தீரன்,

“இம்புட்டு வருசம் எப்படியோ… இப்போ இந்த கூட்டுக்குள்ள நான் சேர்ந்திருக்கேன் அப்படின்னாக்கா காரணம் நீதேன். என் ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் மீட்டுக்கொடுத்த உன்னைய என்னோடவே வச்சிக்கணும் தோணுது” என்றிருந்தான்.

காதலை இனி எப்போதும் அவளிடம் சொல்லிவிடவேக் கூடாதென உறுதி எடுத்திருந்தவன், சேர முடியாத சொந்தங்களுடன் சேர்ந்திருந்த தருணத்தால் நெஞ்சம் நெகிழ்ந்திருக்க மனதில் புதைந்த காதலுக்கு மறைபொருளாக வார்த்தை வடிவம் கொடுத்திருந்தான்.

ஏற்கனவே இது போன்று அவன் மறையாகக் கூறிய தருணங்களில் தானாக அர்த்தம் கொண்டு பதில் வழங்கியது போன்று இல்லாமல், ஆதியிடம் பேசியதால், தீரன் தற்போது கூறிய வார்த்தைகளுக்குள் வேறெதுவும் இருக்குமோ என்று மனதோடு ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

மயிலாஞ்சலியின் விழிகளின் ஓட்டத்தில் அவளின் மன யோசனையை அவதானித்த தீரன், தன்னையே நிந்தித்தவனாக,

“ரொம்ப ரோசிக்காத… அதேன் நீயி எப்பவும் எனக்காக கூட இருப்பேன்னு சொன்னியே. அதை வைச்சுத்தேன் சொன்னேன்” என்று லாவகமாக சமாளித்தான்.

தீரனின் பதிலில் யோசனையை விடுத்தாலும் அவள் உள்ளே பெரும் குடைச்சல்.

ஆதி கூறியதில் குழம்பியவள், தீரன் முன்பு பேசியவற்றையெல்லாம் அகத்தில் கோர்த்து அர்த்தம் தேடிக் கொண்டிருக்கிறாள். அதில் இந்நேரப் பேச்சுக்களும் அடக்கம் கொண்டன.

‘தானே எதையும் வெளிப்படையாகக் காட்டிக்கொடுத்திடுவோமோ’ என நினைத்த தீரன் பேச்சினை வேறு பக்கம் திருப்பினான்.

“மேல எதுவும் படிக்கிற ஐடியா இல்லையா?”

“இருக்குத்தேன்… அதுக்குள்ளதேன் கண்ணாலப் பேச்சை எடுத்துட்டாய்ங்களே! அவங்களை மீறி என்ன செய்றது? ஐயா சொல்றதை கேட்டே பழகியாச்சி” என்றாள்.

“ஹோ… அப்போ மேடமுக்கு மேரேஜ் பண்ணிக்க ஆசை வந்திடுச்சு” என்றான். அவனது குரலிலிருந்த உணர்வை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை.

“ஆசை அப்படின்னுலாம் இல்லை மாமா. நான் இப்போ வேணாமின்னாலும் அதையிதை பேசி என்னைய ஒத்துக்க வச்சு செய்யத்தேன் போறாய்ங்க. அதுக்கெதுக்கு நான் வீம்பு பண்ணி எல்லாரையும் மூச்சுப்பிடிக்க வசனம் பேச வைக்கணும். எப்படியிருந்தாலும் அவீங்க பாக்குற ஆளைத்தேன் கட்டிக்கிடப்போறேன். அதை அவீங்க விருப்பம்போல செஞ்சிக்கிட்டா சந்தோஷப்படுவாய்ங்களே” என்றாள்.

“அப்போ உனக்குன்னு எந்த எதிர்பார்ப்பும் இல்லையா?”

எப்படி பேச்சினை மாற்றினாலும் இதிலே வந்து நிற்பதில் ஆயாசமாக இருந்தாலும் அவனால் சில கேள்விகளை ஒதுக்க முடியவில்லை.

“என்ன எதிர்பார்ப்பு அப்படின்னு கேட்டாக்கா… கொஞ்சமும் ரோசனை பண்ணாம என் தீரா மாமா மாதிரி வேணுமின்னுதேன் சொல்லுவேன்” என்றிருந்தாள்.

அவளது பதிலில் அவன் தான் வெந்து நொந்திருந்தான்.

‘அசலே உனக்குன்னு இருக்கும்போது மாதிரி எதுக்குடி?’ என உள்ளுக்குள் கேட்டுக்கொண்ட தீரன் அப்படியே பின்னால் சுவற்றில் தலைசாய்த்து கண்களை மூடிக் கொண்டான்.

தீரன் காட்ட மறுத்த போதும், அவனது உள்ளத்து கீறலை, அவனின் வதங்கிய முகம் பளிங்காய் காட்டியது.

அவனது முக கசங்கலுக்கான பதில் தெரியாது மூடிய விழிகளின் அசைவினை படிக்க முயன்றாள்.

அன்று கோவிலில் வைத்து தீரன் கேட்ட ஓரிரு கேள்விகள், “தீரன் உன்னை விரும்பியிருந்தாக்கா?” என்று ஆதி கேட்ட கேள்வி, அங்கு அந்த அறைக்கு வரும் முன்னர் அவனது அறையில் வைத்து கேட்டவை, தற்போது அவனறியாது தொடுத்த வினாக்கள் என அனைத்தையும் ஒரே கோட்டில் வைத்து பதில் தேடினாள்.

பல்வேறு கோணங்களில் மூளையை உருட்டியவளுக்கு, தீரன், ஆதி சொல்லிய கோணத்தில் மட்டும் ஆராயத் தோன்றவில்லை.

‘உன் பக்கத்திலும், அவன் பக்கத்திலும் வேறு யாரோ நிக்கும்போது உன் மனசு உனக்குப் புரியலாம்.’

மனதில் வைத்து தேடாது அவனிடம் நேரடியாகக் கேட்டுவிட்டால் மொத்தமாகக் கொட்டிக் கொடுத்திடுவான்.

அவன் சொல்லாது அவளாக அறிந்திட வேண்டுமென்று இருக்கையில்… நடக்கவிருப்பது தானே நடந்திடும்.

தீரனின் முகம் பார்த்து சுவற்றில் சாய்ந்திருந்தவள், சில நிமிடங்களில் உறக்கம் கண்களை சுழற்றிட அவனது மடியில் தலை சரித்துப் படுத்தவளாக இமைகள் மூடியிருந்தாள். தன்னைப்போல் தீரனின் கரம் அவளின் தலை கோதியது.

தீரன் சுவற்றில் சாய்ந்து கண்கள் மூடியிருக்க, அவனது நீண்டிருந்த கால்களின் மடியில் தலை வைத்து உறங்கியிருந்தாள் மயிலாஞ்சலி.

அக்காட்சியை அங்கிருந்த அனைவரின் கண்களும் ஒவ்வொரு உணர்வில் உள்வாங்கியது.

error: Content is protected !!
Scroll to Top