தூரமே தூரமாய் 8
காவல் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த ருதுவின் எண்ணம் முழுக்க இனியன் தான் விரவியிருந்தான்.
அங்கு ஷிவன்யாவிடம் பேசிக்கொண்டிருந்த தருணம் இனியனின் நினைவு தான்.
‘பக்கம் இருக்கின்றானா?’ எனும் உள்ளுணர்வு.
ஆனால் தன்னை பார்த்துவிட்டு பக்கமிருந்தும் தன் முன்னால் வராமல் இருந்திடமாட்டானென்று ருது நம்பியதால் மனதின் உணர்வை புறம் ஒதுக்கியிருந்தான்.
தங்கையின் வெளிப்படையானப் பேச்சையும், முதல் முறை அவளின் வலி நிறைந்த கண்ணீரையும் காணாமல் இருந்திருந்தால் ருதுவை பார்த்ததும் கோபமேதுமின்று நண்பனை பக்கம் சென்று பார்வையில் நலமறிந்து அணைத்து விடுத்திருப்பானோ?
நட்புக்குள் உரிமையாய் முகிழ்க்கும் கோபமே தனி அழகு. தனியான உணர்வு. வார்த்தைகளற்று உள்ளுக்குள் சுவீகரிக்க வேண்டிய ஒன்று.
ருது… இங்கு வந்த கணம் முதல் இனியனை பார்க்க வேண்டுமென துடிக்கும் மனதை, அவனை கண்டால் இமையாளையும் காண நேரிடுமோ அல்லது அவளைப்பற்றி அறிய நேரிடுமோ என்று இந்நொடி வரை நண்பனைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டுமன்ற எண்ணத்தையே தவிர்த்து வருகிறான்.
“கல்யாணம் ஆகியிருக்கும்ல?” கேட்டுக்கொண்டவனின் நெஞ்சோடு தீ மூட்டிச் சென்றது ருதுவின் காதல் கணங்கள்.
‘ருது நினைப்பு எங்கப்போகுது உனக்கு?’ தன்னையே கடிந்து கொண்டான்.
“உனக்கு தேஷ் இருக்கான். நீ அவள் வேண்டான்னு போயிட்ட… இப்போ அவளுக்கு கல்யாணமாகியிருந்தால் என்ன?” வெளிப்படையாய் கேட்டுக்கொண்டவனுக்கு அவளின் தற்போதைய நிலை தெரிந்தால் போதுமென்று தோன்றியது.
‘நிச்சயம் இனியன் அவளை மீட்டு நல்வாழ்வு அமைத்துக் கொடுத்திருப்பான். அவள் சந்தோஷமாக நன்றாக இருந்தால் போதும்.’ இந்த நான்கு வருடங்களில் ருது வேண்டுவது இது ஒன்று மட்டுமே!
தான் விட்டு வந்த இடத்திலேயே அவள் தேங்கி நின்றுவிடக் கூடாதென்பது.
அவள் அங்கேயே மரித்துவிட்டாள் என்பதை ருதுவிற்கு யார் சொல்வது?
விட்டுச்செல்வதற்கு அவனுக்கு ஒரு காரணம் இருக்குமேயாயின்… அவனை விடாது பற்றிக்கொள்ள அவளுக்கும் ஒரு காரணம் உள்ளதே. காதல் எனும் ஆகப்பெரும் காரணம்.
உன்னையே சரணாகதி அடைந்துவிட்ட மனம் எளிதில் துறந்திடுமா என்ன?
திருமணம் முடிந்து பிள்ளைக்கு தகப்பன் எனும் நிலையில், அவனாலே முதல் காதலை துறந்திட முடியாத நிலையில், அவளை அவன் விட்டுச்சென்ற நிலையென்ன… அவள் கடந்து வந்த வலிகள் தெரியாது அவனாக எண்ணும் எண்ணங்கள் என்ன?
காலம் அவனைப் பார்த்து முறுவலித்தது.
நினைவுகளின் சுழற்சியில் கண் முன்னே தன் நெஞ்சத்தின் ஆழத்தில் பனியாய் உறைந்திருப்பவளின் பிம்பம் என்றும்போல் இன்றும் உருகத் தயாராக, இதயத்தின் தகிப்பை நொடியில் சீர் செய்து சாலையில் கவனமானான்.
காவல் நிலையத்தின் உள்ளே நுழைந்ததும் கிருஷ்ணனிடம் பார்வையால் வினவினான்.
“வாய் திறக்கமாட்டேன்னு அழிச்சாட்டியம் பண்ணுறான் சார்.”
“நீங்க என்ன கேட்டு விசாரிச்சீங்க?” என்று கிருஷ்ணனிடம் வினவிய ருது, தரையில் ஒற்றை பாதம் ஊன்ற, அங்கிருந்த மேசையில் குதித்து அமர்ந்தான்.
“எதுக்கு செயின் ஸ்நாச் பண்ண? இது ரெகுலரா… உன் தொழிலா? அப்படின்னு தான் சார்” என்றார் அவர்.
“ம்ம்ம்…”
மற்ற காவலர்களும் ருதுவின் தோரணையில் கொஞ்சம் படபடத்து இருந்தனர்.
“அவன் ட்ரக்ஸ் எடுத்திருக்கான். அதை நோட் பண்ணலையா நீங்க?”
ருது கேட்ட பார்வையில் கிருஷ்ணனுக்கு தன்னைப்போல் கால்களில் சிறு நடுக்கம் வந்தது.
“அது சார்…” என்று அவர் இழுக்க,
“எஸ்.ஐ சார் நோட் பண்ணலையா?” என்று உதவி ஆய்வாளர் வெங்கட்டிடம் கேட்டான் ருது.
“சார்” என்ற வெங்கட், “இது லிக்கர் மாதிரி ஸ்மெல் வைத்து கண்டுபிடிக்க முடியாதே சார். அதோடு, இவன் நல்ல ஸ்டெடியா இருக்கான். அதனால் ட்ரக்ஸ் எடுத்திருக்கான்னு ஃபைண்ட் பண்ண முடியல சார்” என்று நேர்படவேக் கூறினான்.
“வெல்” என்ற ருது,
“அவன் பேக் செக் பண்ணிங்களா?”
“அது.. அது வந்து… சார்…” கிருஷ்ணன், வெங்கட் இருவரும் ஒருசேர திணறினர்.
“ஹாஸ்பிடலில் இருக்க கான்ஸ்டபிள் நேம் என்ன?” தனக்கு பக்கவாட்டாக நின்றிருந்த பெண் காவலரிடம் கேட்டான்.
“ராதிகா சார்.”
“அவங்களுக்கு கால் செய்து சிட்டுவேஷன் என்னன்னு கேட்டு, எனக்கு அப்டேட் பண்ணுங்க” என்றான்.
அடுத்த சில நிமிடங்கள் ருதுவிடம் அமைதி.
“சார்…” வெங்கட் அழைக்க, புருவம் உயர்த்தினான் ருது.
“நெக்ஸ்ட் மூவ்…?”
குதித்து இறங்கிய ருது இரு கை விரல்களையும் கோர்த்து தலைக்குமேல் உயர்த்தி சோம்பல் முறித்திட… அவனை வினோதமாக பார்த்தனர் அனைவரும்.
“எல்லாரும் வேலையை பாருங்க” என்றவன், “அவன் ஸ்டெடி மாதிரி தெரிந்தாலும், ட்ரக்ஸ் டாமினேஷனில் தான் இப்போ இருக்கான். கொஞ்சம் தெளிந்ததும் எனக்கு இன்பார்ம் பண்ணுங்க” என்று கிருஷ்ணனிடம் உரைத்தான்.
“கம் வித் மீ வெங்கட்” என்ற ருது தனது அறைக்குள் நுழைய…
“என்னண்ணா… பார்வையாலே தொண்டைக்குழியை அடைக்கிறாரு?” என்றான் வெங்கட்.
“அவரு உங்களை அவரோடவே உள்ளே கூப்பிட்டாரு தம்பி. நீங்க போகாம என்கிட்ட கேள்வி கேட்டுட்டு நிக்கிறீங்க” என்று கிருஷ்ணன் சொல்லிய பின்னரே ருதுவின் ஆளுமையில் சுயம் தொலைத்து நின்றிருக்கிறோம் என்பது உணர்ந்து வேகமாக ருதுவின் அறைக்கு ஓடினான் வெங்கட்.
“யா… வெங்கட்! **** கலந்து ஜூஸ் கொடுங்க. உடனே ரிலீவ் ஆகிடுவான்.”
அனுமதி பெற்று உள்ளே வந்த வெங்கட்டிடம், அந்த மாணவனிடம் போதைப்பொருளின் தாக்கம் முற்றிலும் குறைவதற்காக மருந்து ஒன்றை கூறி, பழச்சாற்றுடன் கொடுக்கக் கூறினான் ருது.
“சார் இன்னும் கொஞ்ச நேரம் விட்டால் அவனே தெளிஞ்சிடுவான்” என்று வெங்கட் கூறிட, அவனை பார்வையால் குத்தினான் ருது.
“சார்…”
“டைம்… காலநேரம் டாக்டர்ஸ்க்கு மட்டும் உரித்தானது இல்லை எஸ்.ஐ சார். காவல்துறையைச் சேர்ந்த நம்முடைய நேர விரயமும், கால தாமதமும் கூட ஒரு உயிருக்கு ஆபத்தாக அமையும்.
“நம்முடைய முதல் அலட்சியம்… கால விரயம்” என்றான். அத்தனை அழுத்தமாக.
“சாரி சார்!”
“சொன்னதை செய்யுங்க எஸ்.ஐ சார்.”
‘ஒரு பத்து நிமிடத்திற்கு முன்னால் வந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம்.’ எத்தனை உண்மையான வார்த்தைகள் இவை. இது மருத்துவர்களுக்கு மட்டும் உரித்தானது இல்லை. காவலர்களுக்கும் பொருந்தும். சாதிக்க துடிக்க ஒவ்வொரு சாதனைக்கு பின்னாக எடுத்து வைக்கும் சிறு அடிகளுக்கும் பொருந்தும்.
ருதுவிற்கு பிடிக்காத ஒன்று. நேரத்தை வீணடிப்பது.
அந்த நேர விரயத்தால் அவன் இழந்தது ஓர் உயிரை. அதனின் தாக்கம் இன்றளவும் ஒவ்வொரு செயலிலும் அவனிடம் தென்படும்.
ஒவ்வொரு மணித்துளியும் மிக முக்கியமானது. அன்று புரிந்துகொண்டது. அவன் வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு காரணமாகிப்போனது.
வெங்கட் நகர்ந்ததும் இருக்கையில் கண்மூடி அமர்ந்த ருதுவின் மனதில் தற்போது பிடிப்பட்டிருக்கும் மாணவனின் எண்ணம் தான். அவனை பேருந்து நிலையத்தில் கண்டது முதல், இந்நொடி இரும்பு கம்பிகளுக்கு பின்னால் அவனை பார்த்தது வரையிலான அவனின் சிறு சிறு அசைவையும் அவதானித்தான்.
“சார்… நவ், ஹீ இஸ் ஓகே!”
பட்டென்று கண்களை திறந்த ருது, எதையோ தேடும் வேகத்தில்… அந்த இளைஞன் வைக்கப்பட்டிருக்கும் அறைக்குள் நுழைந்தான்.
நடுங்கியபடி இருக்கையில் அமர்ந்திருந்த மாணவனின் முன்பு சென்று அமர்ந்த ருது,
“எந்த காலேஜ்?” எனக் கேட்டான்.
முதலில் தன்னை விசாரித்த காவலர்கள் போல், இவனும் அடித்து உதைக்கப் போகிறானென பயந்து இருந்தவன், ருதுவின் அமைதியான பேச்சில் நடுக்கம் குறைந்து… தளர்ந்து அமர்ந்தான்.
அவன் சொல்லாது அமைதியாக இருக்க…
அவனது கழுத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் அடையள அட்டையை தூக்கி பார்த்தான்.
“அசோக்… என்னைப் பார்க்கணும்” என்ற ருதுவின் குரலை அவனால் அலட்சியம் செய்திட முடியவில்லை.
தன்னைப்போல் அசோக்கின் கண்கள் ருதுவின் முகத்தில் நிலைத்தது.
“குட்…” என்ற ருது, “யாரது?” எனக் கேட்டான்.
அங்கு நின்றிருந்த கிருஷ்ணா மற்றும் வெங்கட்டிற்கு ருதுவின் இந்த மென்மையான அணுகுமுறை ஆச்சரியமாக இருந்தது.
ருதுவின் பீகார் வழக்குகளை, ருது தங்களுக்கு தலைமையாக வருகிறான் என்றதும் மற்ற காவலர்கள் தேடி அலசி தெரிந்து கொண்டிருந்தனர்.
அங்கு அதிரடியாக சுழட்டி ஆடியவன், இங்கு அமைதியாக செயல்பட்டால் அவர்களுக்கு ஆச்சரியமாகத்தானே இருக்கும்.
“யாருன்னு சொல்லிட்டா நீங்க வீட்டுக்கு கிளம்பிடலாம்” என்றான் ருது.
“சார் அதெப்படி விட முடியும். ட்ரக்ஸ் கேஸ். அவன் பையினை நீங்க செக் பண்ண சொல்லி ஆராய்ந்ததில் ரெண்டு சின்ன பாக்கெட் பவுடர் கிடைச்சிருக்கு. அத்தனை எளிதில் வெளிவிடும் கேஸ் இல்லை இது” என்று வெங்கட் முன்வந்து கூறினான்.
“ம்ம்ம்… புரிஞ்சுதா?” என்று வெங்கட்டை கைகாட்டி அசோக்கிடம் வினவிய ருது,
“யாரது?” என்றான்.
“அவன்… காலேஜ் பக்கத்து பேட்டையில் இருக்கும் காந்தா சார். என் கிளாஸிலே அவனோட பேட்டை பசங்க இதை ஈஸியா விக்கிறாங்க” என்றான்.
வெங்கட் சொல்லியதில்… இதில் மாட்டினால் ஆயுளுக்கும் சிறை தான் என்பதை புரிந்துகொண்ட அசோக், ருது உண்மையை சொன்னால் விட்டு விடுகிறேன் என்று சொல்லியதில் நம்பிக்கை வைத்து சொல்லிவிட்டான்.
அசோக்கின் அடையாள அட்டையை கழட்டிய ருது, கிருஷ்ணனிடம் நீட்டி,
“இதிலிருக்கும் அவனது அப்பா நெம்பருக்கு போன் போட்டு வரச்சொல்லுங்க” என்றான்.
“சார்…” அசோக் அதிர்ந்திட,
“இப்போ உன்னை நான் சாதாரணமா வெளியில் விட்டால், திரும்பவும் இதை நீ செய்வ… ட்ரக்ஸ் வாங்க பொண்ணோட செயினை ஸ்நாச் பன்ற நீ, நாளைக்கு கொலை செய்யவும் வாய்ப்பிருக்கு இல்லையா?” என்று தன் தாடையை நீவியவாறு கேட்ட ருது…
“காக்கியும், கருப்பு கோட்டும் கொடுக்கும் தண்டனையை விட, பெத்தவங்க கண்ணீருக்கு பவர் அதிகம். அந்த கண்ணீர் என்னவும் செய்யும்” என கடந்த கால அனுபவத்தில் தன்னிலை மறந்து மொழிந்தவன், அழுந்த கண்களை மூடித் திறந்தவனாக…
“இருபது வயதிலே வாழ்க்கையை தொலைத்திட வேண்டான்னு தான் உன்னை விடுறேன். அத்தோடு உன்னை பிடிச்சு உள்ளே போடுவதை விட, இதுக்கு மூலமான ஆணிவேரை பிடிக்கணும். அப்போதான் உன்னை மாதிரி தெரிந்தே சீரழியும் பலபேரை காக்க முடியும்” என்று வெளியேறினான்.
“இவரை புரிஞ்சிக்கவே முடியல சார்.”
“அவர் சொன்னதை செய்வோம். வாங்க” என்று கிருஷ்ணனுடன் வெளியில் வந்தான் வெங்கட்.
“வெங்கட்.” ருதுவின் சிம்ம குரலுக்கு வெங்கட் பாய்ந்தோடினான் என்று தான் சொல்ல வேண்டும்.
“அசோக் பேரண்ட் வந்ததும், எழுதி வாங்கிட்டு வெளியில் விடுங்க” என்றான் ருது.
“ஓகே சார்.”
“தென்… அந்த பேட்டைக்கு போகணுமே!” என்றான்.
வெங்கட்டின் முகத்தில் அப்பட்டமான பீதி.
“கண்டிப்பா போகணுமே!” இருக்கையின் கையில் தன்னுடைய கை முட்டி குற்றி, தாடையை நீவியவனாக ருது சொல்லிய பாவனையில் வெங்கட்டின் தலை தானாக ஆடியது.
“உங்க பயத்துக்கான காரணம்?”
“காந்தா கைலாஷ் ஆளு சார். அவன் மேல் கை வைத்தால், நம்ம ஆஃபீசையே கொளுத்திடுவானுங்க!”
“ம்ம்ம்… அதையும் பார்த்திடலாம்” என்று தன்னிரு தொடையிலும் உள்ளங்கையால் தட்டியவனாக எழுந்த ருது…
“கிருஷ்ணன்” என்று அலுவலகம் விட்டு வெளியில் சென்றான்.
ருதுவிற்கு பின்னால் கிருஷ்ணன் வேகமாக செல்ல…
தனக்கு கீழ் பணிபுரியும் மற்ற காவலரிடம், அசோக்கின் பெற்றோர் வந்தால் செய்ய வேண்டிய நடைமுறையை செய்ய சொல்லிவிட்டு, வெங்கட் ஓடிச்சென்று ஜீப்பில் ஏறியிருந்தான்.
“நீங்க பயப்படுறீங்க நினைத்தேன்.”
ருது வெங்கட்டை பாராது மொழிய,
“அவங்களைப்பற்றி உங்களுக்குத் தெரியாதே சார்” என்றான் வெங்கட்.
சட்டென்று அவனை திரும்பிப் பார்த்த ருது…
“ஆஹான்… அப்போ எனக்கு காவலா வரேன்னு சொல்லுங்க” என்று இரு புருவத்தையும் ஒருசேர உயர்த்தி இறக்கினான்.
ருதுவின் அதிரடியை கேள்விப்பட்டிருந்தவர்களுக்கு, இந்த ருது புரியாத புதிராகவே காட்சியளித்தான்.
மியூசிக் பிளேயரை ஆன் செய்த ருது,
“சாங்ஸ் பிடிக்குமா ரெண்டு பேருக்கும்?” எனக் கேட்டான்.
‘இந்நேரத்தில் பாட்டு அவசியமா?’ என்று இருவருக்கும் ஒன்றாகத் தோன்றிட, ஒருவரையொருவர் கண்ணாடி வழி பார்த்துக்க கொண்டனர். கிருஷ்ணன் மற்றும் வெங்கட்.
“பதிலே இல்லை.”
“பிடிக்கும் சார்.” இணைந்து கூறியிருந்தனர்.
“எனக்கு நல்லா பெப்பியா இருக்க சாங்ஸ் தான் பிடிக்கும். லைக் விஜய் அண்ட் தனுஷ் சாங்ஸ். கேட்கும்போதே ஃபுல் பாடி வைப் ஆகனும்” என்றான்.
“சார் இந்த சிட்டுவேஷனுக்கு இந்த பேச்சு வேணுமா?” வெங்கட் வாய்விட்டே கேட்டுவிட்டான்.
ருதுவிடம் அட்டகாசமான சிரிப்பு.
“நிஜமாவே பயந்து வருது சார்” என்ற வெங்கட், “நாம் ஸ்டேஷனில் கிளம்பிய அடுத்த செகண்ட், அங்க வரோம்ன்னு தகவல் போயிருக்கும் சார். அந்த காந்தா என்ன செய்வான்னு நினைக்கவே அச்சமா இருக்கு சார்” என்றவனின் தொண்டைக்குழி ஏறியிறங்கியது.
“ரொம்பத்தான் பில்டப் கொடுக்கிறீங்க எஸ்.ஐ சார்” என்ற ருது, “அவனை பார்த்தே ஆகணும்… க்யூரியஸ் அதிகமாகிட்டே இருக்கு” என்றான்.
அந்நேரம் சரியாக,
“நல்லவன் சாவதும்… கெட்டவன் வாழ்வதும் நம்ம கையில இல்லை…” என்று பாடலின் வரிகள் ஒலிக்க…
“ஃபேக்ட்” என்று முறுவலித்தான் ருது.
“அந்த ஏரியா பார்க்கவே… சிட்டியில தனித்தீவு மாதிரி தெரியும் சார். கைலாஷின் குட்டி ராஜ்ஜியம் அது. அவனுக்கு அடியாள் முதல், பெரிய அறிவாளி வரை அங்கிருந்து தான் உற்பத்தி செய்றானுங்க” என்றார் கிருஷ்ணன்.
“அங்க சின்னதுல இருந்து பெருசுங்க வரை கைலாஷ் மூலமாக, காந்தா சொல்றதைதான் செய்வாங்க. சட்டத்துக்கு புறம்பா அவனுங்க பண்ணாத தொழிலே இல்லை சார். சுண்டல் பீச்ல விக்கிறதுல இருந்து, முதல்வர் ஆபீஸ் வரை அவனுங்க ஆளுங்க இருக்கானுங்க. பீச்ல கல்லை விக்கிறவன் கம்ப்யூட்டரில் பூந்து விளையாடுவான். அங்கிருக்க ஒவ்வொரு உயிரும் கைலாஷ்க்கு அக்மார்க் விசுவாசிங்க” என்று நீண்டு கூறினான் வெங்கட்.
“இவ்வளவு தெரிந்தும் ஏன் அரேஸ்ட் பண்ணாமல் இருக்கீங்க?” ஓடும் பாடலுக்கு ஏற்றவாறு தனது தொடையில் விரல்களால் தாளம் தட்டியபடி இவர்களின் செய்திகளிலும் கவனம் வைத்து வினவினான்.
“ம்க்கும்… அந்த காந்தாவை தூக்கிட்டா போதும். கைலாஷின் மொத்த சிஸ்டமும் டவுன் ஆகிடும். இந்த நினைப்போட போன பல போலீசுங்க இப்போ அவனுங்க ஆளுங்க. அப்படியும் துள்ளுன போலீஸ் என்ன ஆனாங்கன்னே தெரியல” என்று வெங்கட் சொல்ல, “தெரிஞ்சே யாராவது சாவைத் தேடி போவாங்களா சார்?” என்றார் கிருஷ்ணன்.
ருதுவின் மனதில் ஓடியதெல்லாம் ஒன்றே ஒன்று தான்… ‘அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி’ இதுதான் நிதர்சனம். அரசனை பின்பற்றித்தான் யாவும். ஒரு ராஜ்ஜியத்தை கைப்பற்றிட சிப்பாய்களை தன்னகப்படுத்துவதை விட, ராஜாவை தாக்கி நிலைகுலைய வைத்துவிட்டால் போதும். மொத்த படையும் அடிபணிந்து விடும். இங்கும் காந்தா என்ற ஒருவனை தாக்குவதை விட, கைலாஷ்ஷை ஒழித்திட வேண்டும்!
ருதுவின் மனதில் பல கணக்குகள். அவன் இங்கு வருவதற்கு முன்பே நகரத்தின் நிலவரத்தை ஓரளவு தெரிந்துகொண்டே வந்திருந்தான். அவன் தெரிந்து கொண்டதில் அதிக இடம் பிடித்தது கைலாஷ் மட்டுமே! அவனின் பெயர் அரசியல் வரை நுழைந்திருப்பதே ருதுவிற்கு பெரும் சவால். கைலாஷ் அழிக்கப்பட வேண்டிய கள்ளிச்செடி. ஆனால் அதில் கை வைத்தால் முள்ளாய் பாதுகாப்பது பெரும் பெரும் புள்ளிகள்.
ஆயாசமாக தலையை ஆட்டிக்கொண்டான்.
‘பெரிய டாஸ்க் டா ருது.’ இதழ் குவித்து ஊதினான்.
ஜீப் காந்தா பேட்டை வளைவுக்குள் நுழைந்தது.
நுழைவு வாயிலின் வளைவினை விழி உயர்த்தி ருது பார்வையிட்ட கணம், ஜீப்பின் முன்பகுதியின் மேல் வந்து விழுந்தது ரத்தத்தில் தோய்ந்த உடல்.