அத்தியாயம் 15
அதிகாலையில் அர்ச்சனா வந்து தோள் தொட்ட பின்னரே தீரன் விழித்தான்.
கண்களை இரு விரல்களால் தேய்த்தபடி கைகள் உயர்த்தி சோம்பல் முறித்தான்.
அவ்வறையே காலியாகி இருந்தது. பிள்ளைகள் மட்டும் இன்னும் படுக்கையில் உறக்கத்திலிருந்தனர்.
“மணி என்ன? விடிஞ்சிருச்சா? யாருமே காணோம்?” என்ற தீரனின் கரம் இப்போதும் தன் மடியில் தலை வைத்திருக்கும் மயிலாஞ்சலியின் முன்னெற்றியை கோதிக் கொடுத்தது.
“அஞ்சுக்கு மேலாவுது தீரா” என்ற அர்ச்சனா,
“நைட்டு முழுக்க இப்படியேவா உட்கார்ந்திருக்க?” என்றதோடு, “ஏட்டி அஞ்சலி” என்று அவளின் கையில் அடித்து எழுப்ப முயல, தீரன் அவளை தடுத்திருந்தான்.
“அச்சும்மா… ஷ்ஷ்ஷ்” என்ற தீரன், “இப்போ அவள் எழுந்து என்ன பண்ணப்போறா? உறங்கட்டுமே!” என்றான்.
“நீ எழுந்துக்க வேணாமா?”
“தேவையில்லை. அவள் எழும்பும் போது நானும் எழுந்துக்கிறேன்” என்றவன், “என் மொபைல் மட்டும் கொஞ்சம் எடுத்துக் குடுத்துட்டு போ” என்றான்.
“உனக்கு கால் வலிக்கலையா? நைட்டு முழுக்க உட்கார்ந்தபடியே உறங்கியிருக்க… உடம்பு நோவு காணாதா?” என்று கடிந்தாள்.
“மனசு பட்ட நோவுக்கு முன்ன இதெல்லாம் வலியாவே தெரியல” என்ற தீரன், “இனி அவக்கூடான இந்தமாறி நெருக்கம் இனி எப்பவும் கிடைக்காது அச்சும்மா” என்றான்.
“அவளுக்காகன்னு பார்க்காத தீரா… அவள் சொன்னதை நீயி கேட்கவே இல்லைன்னு நெனச்சு மறந்து போயிடேன். கண்ணாலம் ஆனா எல்லாம் சரியாப்போவும்” என்ற அர்ச்சனாவின் பேச்சினை தலையசைத்து தடுத்தவன்,
“என் சந்தோஷத்துக்கு காரணமா இருக்கவளை, எனக்காகன்னு கட்டாயப்படுத்தி பார்க்க முடியாது” என்றிருந்தான்.
“உன்னைய கட்டிக்க அவளுக்கு கொடுத்து வைக்கலையே” என்று அர்ச்சனா நகர,
“இப்படி நீயி புலம்புறது இதுவே கடைசியா இருக்கட்டும்” என்றிருந்தான் தீரன்.
“நான் வாவே திறக்கல போதுமா?” என்று அவனின் கையில் அலைபேசியை வைத்தாள்.
“எனக்கு இப்படியொரு எண்ணம் இருந்துச்சுன்னு அவளுக்கு எப்பவும் தெரியக்கூடாது. அவளோட விருப்பப்படி அவளுக்கு நான் எப்பவும் அவளோட மாமாவா மட்டுமே இருந்துக்கிறேன்” என்றான்.
“என் ஆசையையும் புதைக்க வைக்கிற நீயி” என்ற அர்ச்சனா, “நீயி இங்கிட்டு இல்லைன்னாலும், உனக்குத்தேன் அவளை கட்டிக்கொடுக்கணுங்கிற நெனப்பு மட்டும் இருந்துக்கிட்டேதேன் இருந்துச்சு” என்றார்.
“இதுக்குமேல இதை பேசுறதே எனக்கு வலியாவுது அச்சும்மா” என்ற தீரன், மயிலாஞ்சலியிடத்தில் அசைவு தெரியவும், அவளுக்கு தட்டிக் கொடுத்தபடி “நீ போ” என்று அர்ச்சனாவிடம் கூறினான்.
மயிலாஞ்சலியோ தீரனின் இன்னொரு கரத்தின் உள்ளங்கையை பிடித்து தன்னுடைய கன்னத்திற்கு அடியில் வைத்தவளாக ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றிருந்தாள். அவளின் இதழ் மென் விரிப்பாய் மலர்ந்திருந்தது.
********************************
காலை உணவு நேரம்…
முத்து மாணிக்கம் உணவுக்கூடத்தில் வந்தமர,
“கஞ்சியா, கூழா மாமா?” என்று வந்தார் ராஜாத்தி.
“இப்போ ஒண்ணும் வேணாமாட்டிக்கு. கருப்பட்டி மட்டும் கொடுத்தா” என்றவர், “எல்லாரும் என்ன பண்றாய்ங்க?” எனக் கேட்டார்.
“பசங்க நாலு பேரும் வயலு, தோப்பு, ஆலைக்குன்னு போயிருக்காய்ங்க… ரத்னம் தம்பியும், கேசவன் அண்ணனும் வாழை கணக்கு பார்த்துக்கிட்டு இருக்காய்ங்க. பெரிய மாமாவும், என் மாமாவும் புதுசா வயலு வாங்குற விசயமா யாரையோ பார்க்கண்ணு வெள்ளென கெளம்பிப் போனாவ…” என்ற ராஜாத்தி, “எல்லாரும் காலைச் சாப்பாட்டுக்கு இப்போ வார நேரந்தேன் மாமா. நீங்க இன்னும் அறையை விட்டு வெளிய வரலன்னு பிள்ளைகளையெல்லாம் இன்னைக்கு துளசி அக்காவே பஸ் ஏத்திவிட போயிருக்காய்ங்க. மத்த பொம்பளைங்க எல்லாரும் அடுப்படியிலதேன் இருக்கோம்” என்றார்.
“ஹ்ம்ம்” என்ற முத்து மாணிக்கம்,
“தீரன் என்ன பண்ணுறான்?” எனக் கேட்டார்.
“இப்போதேன் டிவி ரூம்ல இருந்து மேல அவன் ரூமுக்கு போனான்.”
“சரித்தா… உன் அத்தையை வரச்சொல்லு” என்றார்.
சமையலறை உள்ளே சென்ற ராஜாத்தி,
“ஐயா ஏதோ பெரிய விசயம் பேசப்போறமாட்டிக்கு அம்புடுது” என்று அனைவரிடமும் தகவல் பரப்பினார்.
“என்னவா இருக்கும்?” வித்யா கேட்க,
“அதேன் தெரியல” என்ற ராஜாத்தி, கொற்றவையிடம் கருப்பட்டி தேநீர் நிறைந்த குவளையை கொடுத்து, “ஐயா உங்களை வரச்சொன்னாய்ங்க அத்தை” என்றார்.
முத்து மாணிக்கமும், கொற்றவையும் தீவிரமாக பேசிக்கொள்வது தெரிந்தது. ஆனால் என்ன பேசுகிறார்கள் என்பது யாருக்கும் செவி விழவில்லை.
நேரம் நகர்ந்திட, முத்து மாணிக்கம் அனைவரும் வருவதற்காக அங்கேயே காத்திருந்தார்.
ஒவ்வொருத்தராக வந்தவர்கள், காலை உணவுக்கே எல்லோரும் கூடியிருப்பதைக் கண்டு என்ன விசயமென ஆள் மாற்றி ஆள் கண்களால் கேட்டுக்கொண்டனர்.
“என்ன யாருக்கும் சோலி இல்லையா? இந்நேரத்துக்கு வீடே காலியாயிருக்கும். யாரும் வெளிய போவக்காணோம்” என்று வந்தமர்ந்தாள் மயிலாஞ்சலி.
“தீரனை கூப்பிடுத்தா” என்று பெரியவர் அர்ச்சனாவிடம் கூற,
“நான் போறேன்” என்று ஓடியிருந்தாள் மயிலாஞ்சலி.
“மாமா…” என்று அழைத்துக்கொண்டே அறைக்குள் நுழைந்தவள், தீரன் ஆடை மாற்றும் அறைக்குள்ளிருப்பதை அறிந்து,
“மலையனூரு நாட்டாமை… மனசை காட்டு பூட்டாம” என்ற பாடலை பாடிட,
“நீயி வாரதுக்கு முன்ன உன் மாமாங்கிற சத்தம் வந்து சேர்ந்திடுது” என்று வந்தான் தீரன்.
“என்ன பாட்டெல்லாம் பலமா இருக்கு?” என்றான்.
அவன் தோரணையாகக் கிளம்பி வந்து நிற்பதைக் கண்ட மயிலாஞ்சலி,
“என்ன பேண்ட் சொக்கா போட்டிருக்கீய்ங்க… வெளிய போறீங்களா?” எனக் கேட்டாள்.
“ம்ம்… ரிட்டர்ன் டூ நியூயார்க்” என்று தீரன் எவ்வித முன்னறிவிப்புமின்றி சொல்லிட மயிலாஞ்சலியிடம் பெரும் அதிர்வு.
“நெசமாவா?”
“ஆமா!”
“வந்தே நாலஞ்சு நாளுதேன் ஆவது. இருவது நாளு இருக்கேன்னு சொன்னீய்ங்கதான?” என்றவளுக்கு அவன் இத்தனை சீக்கிரம் செல்கிறேன் என்றது கண்களை கலங்க வைத்தது.
“ஆபீஸில் அவசரமான முக்கிய வேலை. ரிசர்ச்ல மிஸ்டேக். நான் போனாத்தேன் சரிபண்ணா முடியும். ஆபீஸ்லே டிக்கெட் போட்டு வரச்சொல்லி கால். கண்டிப்பா நான் போய்த்தேன் ஆவணும்” என பொய்யுரைத்தான்.
அவனால் அவளின் முகம் பார்த்துக்கொண்டே காதலை வெளிக்காட்டிட முடியாதிருப்பது பெரும் அழுத்தமாக இருந்தது.
அதனாலேயே சென்னையிலிருந்து பயணச்சீட்டு நேரடியாகக் கிடைக்காதபோதும், மூன்று இடைநிறுத்தங்களில் செல்லும் விமானச்சேவையில் பதிவு செய்து இப்போது கிளம்பியும்விட்டான்.
“அந்த வேலையை இங்கிருந்தே பண்ண முடியாதா? இப்போ எல்லாரும் வீட்ல இருந்தேதான் வேலை பாக்குறாய்ங்க” என்றாள்.
“இங்கிருந்துட்டே பண்றது அவ்ளோ ஈசியில்ல.”
“இதெல்லாம் அநியாயம். நான் போவவுடமாட்டேன்” என்ற மயிலாஞ்சலி, அவன் தயாராக பெட்டியெல்லாம் எடுத்து வைத்திருப்பதைக் கண்டு அவனை முறைத்தாள்.
“நான் போயாவனும் மயிலா. குழந்தைமாறி அடம்பிடிக்கக் கூடாது” என்றவன் பெட்டியைத் தள்ளிக்கொண்டே வெளியேற, அவனின் பின்னே முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு பாதத்தை அதிர்ந்து அடி வைத்தவளாக வந்தாள்.
நின்று திரும்பிய தீரன், “உன் ரூம்ல ஒரு ஃபோட்டோ இருக்கே! அது வேணும். எடுத்திட்டு வா” என்றான்.
“எந்த ஃபோட்டோ?”
“உனக்கு நான் ஹேர் பின்னல் போட்டுவிடுற ஃபோட்டோ” என்றான்.
“இங்கிட்டே இருக்கன்னு சொல்லுங்க தாரேன்” என்றாள். அழுத்தமாக.
சில நொடிகள் அவளின் முகத்தை பார்த்திருந்தவன், “சரி வேணாம்” என்று திரும்பி நடந்தான்.
“மாமா” என்றவள், “திரும்ப எப்போ வருவீங்க?” எனக் கேட்டு, அவனுடன் நடந்தாள்.
“தெரியல” என்ற தீரன், “பத்திரமா இருக்கணும். முடிஞ்சா உன் மேரேஜ்” என்று சொல்ல வந்தவன் அதற்குமேல் சொல்ல முடியாது நிறுத்திக் கொண்டான்.
அவனது முற்றுப்பெறா வாக்கியத்தை உள்வாங்கிக்கொண்ட மயிலாஞ்சலி மனதோடு கூறிய வார்த்தைகள் அவள் மட்டுமே அறிந்தது.
கையில் பெட்டியோடு வரும் தீரனை மொத்தக் குடும்பமும் யோசனையாகப் பார்த்தது.
தீரன் அங்கு வருவதற்கு முன்னர் அனைவரிடத்திலும் தன்னுடைய மனம் நினைக்கும் எண்ணத்தை தெரிவித்திட வேண்டுமென முத்து மாணிக்கம் காத்திருந்த முடிவை சொல்லியிருக்க எல்லோரிடத்திலும் மகிழ்வின் ஊற்று.
அர்ச்சனா மற்றும் ரத்னவேலு தவிர்த்து.
அவர்கள் எடுத்திருக்கும் முடிவுக்கு தீரன் நிச்சயம் ஒப்புக்கொள்ளமாட்டான் என்று திடமாக அறிந்தவர்களால் மகிழ முடியவில்லை.
மற்றவர்களின் மகிழ்வையெல்லாம் சட்டென்று வடிய வைத்திருந்தது தீரன் பெட்டியுடன் வந்து நின்றது.
“என்ன ராசா பொட்டியோட வந்து நிக்கிற?” கொற்றவை கேட்க, மயிலாஞ்சலியிடம் கூறிய அதே காரணத்தை அனைவரிடமும் கூறினான்.
“இப்படி சட்டுன்னு கிளம்பினா என்னடா பண்றது? உன் கண்ணால விசயமா ஒரு முடிவு எடுத்திருக்கோம்” என்றார் துளசி.
“நீங்க என்ன முடிவு வேணாலும் எடுத்துக்கோங்க… ஆனால் இப்போ நான் கிளம்பியே ஆவணும்” என்றான் தீரன்.
“என்னடா இப்படி பேசுற?” மாயவேல் கேட்க, தீரன் பதில் பேசவில்லை.
“இன்னும் ரெண்டு மூணு நாளாவது இருடே” என்றான் ஆதி.
“இல்லண்ணே முடியாது. அவசரமா வரச்சொல்லி மெயில் வந்துட்டே இருக்கு” என்றான்.
“உன் கண்ணால விசயமா ஒரு முடிவெடுத்திருக்கோம் சாமி” என்றார் கொற்றவை.
“அய்யோ ஆத்தா என் கண்ணாலம் பத்தி எந்தவொரு முடிவும் எடுக்க வேணாம். எனக்கு கண்ணாலம் பண்ணிக்கவே விருப்பமில்லை” என்று மொத்த அழுத்தத்தின் வெளிப்பாடாகக் கத்தியிருந்தான்.
“எய்யா தீரா!” என்று தீரனின் பக்கம் வந்த ரத்னவேலு, “பொறவு பொறுமையா பேசிப்போம். அவந்தேன் ஏதோ அவசரமாட்டிக்கு சொல்றானே!” என்றார் அனைவரிடமும்.
“இப்போ போனா திரும்ப எப்போ வருவியான் தெரியல. நிச்சயமாவது முடிச்சு வச்சு அனுப்புனா செத்த ஆறுதலா இருக்கும்” என்றார் கொற்றவை.
“உங்க அவசரத்துக்கு நான் கண்ணாலம் பண்ண முடியாது ஆத்தா. எனக்கு விருப்பமே இல்லை. ஏன் கட்டாயப்படுத்துறீங்க” என்று ஆயாசமாக நெற்றியைத் தேய்த்தான்.
“நாங்க பார்த்த ரெண்டு பொண்ணும் உனக்கு ஒத்து வரலன்னு இப்படி பேசுறியா சாமி?” என்று துளசி கேட்க,
“இப்போ பார்த்திருக்க பொண்ணு கட்டாயம் உனக்கு செட்டாவா தீரா” என்றார் கல்யாணி.
“யாரா இருந்தாலும் வேணாம் சித்தி. எனக்கு தோணும் போது சொல்றேன். அப்போ பண்ணி வைங்க” என்றான் தீரன்.
“என்னடே தனியா படிச்சு தனியா முடிவெடுத்து பெரிய வேலையில் இருக்கோமுன்னு இப்போ எங்க யார் பேச்சையும் கேட்கக்கூடாதுன்னு இருக்கியா?” என்று மாயவேல் கேட்க, அவரை அடிபட்ட பார்வை பார்த்தான் தீரன்.
“தனியா எப்பவும் எதுவும் செய்யணும் நெனச்சது இல்லப்பா. நீங்க எல்லாருந்தேன் என்னைய தனியா விட்டீய்ங்க… இப்பவும் அந்த விலகல் புள்ளி அளவு இருந்துட்டேதேன் இருக்குது” என்றான்.
அதற்கு மேல் அங்கு யாராலும் அடுத்து ஒரு வார்த்தை பேச முடியவில்லை.
அதுவரை அமைதியாக இருந்த முத்து மாணிக்கம், தொண்டையை செருமியபடி தீரனின் பக்கத்தில் வந்தார்.
“உனக்கும் அஞ்சலிக்குந்தேன் கண்ணாலம் பண்ணலாம் முடிவு பண்ணியிருக்கோம்” என்றார்.
தீரன் வலி கூடிய அதிர்வோடு மயிலாஞ்சலியை ஏறிட, அவளோ கண்கள் ஒளிர அவனை பார்த்தாள்.
ஒரே கணத்தில் இரு ஜோடி விழிகளும் கவ்வி நிற்க, சட்டென்று நெஞ்சத்தில் ஊடுருவிய மின்னலில் தீரன் வேகமாக பார்வையை விலக்கிக்கொண்டான்.
“நம்ம வூட்லே இருந்ததாலோ என்னவோ அவள் எங்க கண்ணுக்குத் தெரியவே இல்லை. நைட்டு உன் மடியில அவள் படுத்திருந்தது… அவளை நீ அரவணைச்சது எல்லாம் பார்த்த பொறவுதேன்… இது ஏன் முன்னாடியே தோணாமப்போச்சுன்னு… இந்த நெனப்பு ஏன் வரலன்னு என்னையவே கொட்டிக்கிட்டேன்” என்றார் முத்துமாணிக்கம்.
தீரன் அமைதியாக நின்றிருக்க…
“சரின்னு சொல்லுடே” என்றாள் அர்ச்சனா. பெரும் தவிப்போடு. அவளின் தவிப்பு தீரன் மற்றும் ரத்னவேலுவிற்கு மட்டுமே தெரிந்தது.
மயிலாஞ்சலியை பார்த்துக்கொண்டே, இதயத்தில் வலிக்க வலியொன்று ஆழமாய் இறங்கிட…
“பொண்ணு மயிலாவா இருந்தாலும் எனக்கு கண்ணாலம் வேணாம்” என்றவன்,
“என்னால முடியாது அச்சும்மா” என்றிருந்தான்.
மயிலாஞ்சலியின் விழியில் துளிர்த்த ஒற்றை நீர் உருண்டு கன்னம் வழிந்தது. பிறர் அறியாது வேகமாகத் துடைத்திருந்தாலும் ஆதி கண்டுகொண்டிருந்தான்.
“டேய் என்னடே சொல்ற?” என்று அன்பன் கேட்க,
“மயிலாவை இன்னைக்கு பொண்ணு பார்க்க வராய்ங்கலே… அதை நல்லபடியா செய்ங்க” என்றான்.
“அவீங்களை வரவேணாமின்னு சொல்லியாச்சுடே” என்றான் அரவிந்த்.
“ம்ம்… அவளுக்கு இப்போ கண்ணாலத்துக்கு என்ன அவசரம். பொண்ணுன்னு வூட்ல இருந்தாக்கா நாலு பேரு வந்து கேட்கத்தேன் செய்வாய்ங்க. அதுக்குன்னு கட்டிக்கொடுத்திட முடியுமா? அவளுக்கு மேல படிக்கணும் விருப்பமிருந்தா படிக்கட்டும். பொறவு பொறுமையா அவள் ஆசைப்படிக்கு வீட்டோட மாப்பிள்ளையா பார்த்து கட்டிவைங்க” என்றான்.
“நாங்க உனக்கு கட்டி வைக்கிறதைப்பத்தி பேசுனாக்கா நீயி வேற யாருக்கோ கட்டிக்கொடுங்கிற… இது என் கடைசிகால ஆசை. எனக்காக சரின்னுடே” என்றார் முத்துமாணிக்கம்.
“இப்போவே எங்களுக்குள்ள சேர முடியலன்னு சொல்ற நீயி… இதுக்கு மேல்பட்டும் உன்னைய தனியா விட்டாக்கா, காலம் முச்சூடும் தனிச்சிடுவ. அஞ்சலியை கட்டிக்கிட்டு நீயே நம்ம வூட்டோட இருந்திடு ராசா… ஐயா சொல்றதை கேளு சாமி” என்றார் கொற்றவை.
“உங்களுக்காக சரின்னு சொன்னா அதுல எங்க வாழ்க்கை எங்கிருக்கும் ஆத்தா” என்ற தீரன், “மயிலாவுக்கும் இதுல நிச்சயம் விருப்பமிருக்காது” என்றான். மயிலாஞ்சலி ஆதியிடம் பேசியதை மனதில் நிறுத்தி, தனக்குத்தானே உள்ளத்து ரணத்தைக் கீறிக்கொண்டவனாகக் கூறினான்.
தீரனின் பதிலை எல்லோரும் மேலோட்டமாகப் பார்த்தனர் என்றால், அரவிந்த் மட்டும் ஆராய்வாய் கருத்தில் கொண்டான்.
‘மயிலாவுக்கு விருப்பமிருக்காதென்றால், அவனுக்கு விருப்பம் இருக்கோ?’ ஆனால் அச்சூழலில் மனதில் எழும் கேள்வியை அரவிந்தால் வெளிப்படுத்த முடியவில்லை.
தீரனுக்கு விருப்பமென்றால் இக்கணம் அவன் சரியென்றிருக்க வேண்டுமென்ற மற்றொரு யோசனை அவனிடத்தில்.
“இதுல அவள் விருப்பம் முக்கியந்தேன்… ஆனாலும் கண்ணாலம் ஆனா விருப்பம் தானா வந்துப்போவும் சாமி” என்று துளசி சொல்ல, “அவளுக்கு நீன்னாக்க கொள்ளப்பிரியமாச்சே” என்றார் மாலதி.
“நீங்க சொல்ற விருப்பம் வேற, அவளுக்கு எம்மேல இருக்க அன்பு வேறம்மா” என்ற தீரன், “அவளுக்கு எப்பவும் நான் அவளோட மாமாவா இருக்கக்கிறதுலதேன் சந்தோஷம்” என்றான்.
ஆதி விலுக்கென தன் தம்பியை நிமிர்ந்துப் பார்த்தான்.
“முடிவா என்னடே சொல்ற?”
“எனக்கு இப்போ கெளம்பனுங்க ஐயா!” என்ற தீரன் ரத்னவேலுவை பார்க்க, அவனின் மனம் மீறி ஒன்றும் பேசிட முடியாத இடத்தில் தவித்துக் கொண்டிருந்தார்.
“போலாம் மாமா” என்று தீரன் சொல்ல… அவர் அவனின் பெட்டியை கையிலெடுத்தார்.
அர்ச்சனாவின் கையை அழுத்திக் கொடுத்து, மயிலாஞ்சலியை பார்த்து மெல்ல சிரம் அசைத்த தீரன், அனைவருக்கும் பொதுவாக…
“போய் வாரேன்” என்று வெளியேறினான்.
ரத்னவேலு தீரனின் பெட்டியை வண்டிக்கு பின்னால் வைத்து மூடிட, முன்னிருக்கையில் சென்று அமர்ந்த தீரன் இருக்கையின் பின் சாய்ந்து வேதனையின் மிச்சத்தை உள்ளுக்குள் பதுக்கியவனாகக் கண்களை அழுத்தமாக மூடிக்கொண்டான்.
மூடிய இமைகள் தாண்டி வெளியேற துடித்த கண்ணீரின் தடம் அவனது தொண்டைக்குழியில் பதிந்தது.
அன்று அவன் சென்ற போது அவனைப் பார்க்க யாருக்கும் மனமில்லை… இன்று அவர்களை திரும்பிப் பார்த்திட அவனால் முடியாது போனது.
பொத்தி வைக்கும் நேசத்தின் கட்டுப்பாட்டை மீறி, செவிகளுக்குள் ரீங்கரிக்கும் மயிலாஞ்சலியின் வார்த்தைகளுக்கு அணையிட்டு, அவளின் மனதின் மீதான அக்கறை குறைத்து, சுயநலமாக தன்னுடைய காதலுக்கு இடமளித்துவிடுவோமோ என்று அஞ்சியே தன்னுடைய குடும்பத்தாரை மட்டுமில்ல, தனது எல்லாமாகிய தன்னவளையும் பார்க்காது இருந்தான்.
அவனது காதலை அவனே உணரும் முன்பு, அவனது திருமணம் என்றதும் முதல் தேர்வாக மயிலாஞ்சலி இருப்பின், வீட்டினரின் விருப்பத்துக்கு மதிப்பளித்து சம்மதம் என்றிருப்பானோ என்னவோ? ஆனால் அவள் மீதான அவனது அன்பு அதீதம் கொண்டிருக்க, தன்மீது காதல் என்ற வரையறைக்குள் நுழைய விரும்பாதவளின் தூய்மையான அன்புக்கு மதிப்பளித்திட்டான் இக்கணம். அவளின் நேசத்தை அறியாதவனாக!
ரத்னவேலு வண்டியை உயிர்ப்பித்திட,
தன்னுடைய நெற்றி தீண்டிய மென் ஸ்பரிசத்தில் பட்டென்று விழிகள் திறந்திருந்தான் தீரன்.
சன்னல் வழி முகம் காட்டி, தீரனுக்கு திருநீறு பூசியிருந்தாள் மயிலாஞ்சலி.
பதுக்கிக்கொள்ள கரையிட்டு வைத்த அவனது வலிகள் மொத்தமும் சிந்தாமல் சிதறாது அவளது விழிகள் வழி அவளின் அகம் சேர்ந்திருந்தது.
“பார்த்து சூதானமா போய்வா மாமா” எனக்கூறி வண்டி நகர்ந்திட விலகி நின்றாள் மயிலாஞ்சலி.
அன்று அவனை அனுப்பி வைத்திட வெளிவராத மொத்தக் குடும்பமும், இன்று அவன் விரைந்து திரும்பி வர வேண்டுமென்ற பெரும் தவிப்போடு அவன் செல்லும் வண்டி புள்ளியாய் மறையும் வரை வாயிலில் நின்றிருந்தனர்.