தூரமே தூரமாய் 10
‘எல்லா காதலும் கல்யாணத்தில் சேரணுமில்லை. அப்படி சேராத காதலெல்லாம் பொய்யான காதலுமில்லை.
ஒவ்வொரு காதலும் வித்தியாசமானது. வேற வேற கதை.’
அப்படித்தான் ருதுவின் பக்கமிருந்து பார்க்கும்போது அவன் விட்டுச்சென்ற காதலுக்கு வலுவான கதை ஒன்று உள்ளது.
ருது நினைத்திருந்தால் கதையின் போக்கை மாற்றியிருக்க முடியும். ஆனால் அவன் பிழன்று போனது அவனது அன்னையின் கண்ணீரில்.
இப்போது மொத்தமாக தவித்து தனித்து நிற்கிறான்.
அவனது நலம் விரும்பி, அவனுக்காக மட்டுமே என்று வேங்கடம், அம்பிகா, தேஷ், ஷிவன்யா என்று ஒரு சிலர் இருப்பினும், அவன் உயிராக நேசித்த அவனது லேஷஸ் உடனில்லை எனும் வலியை ருது வாழ்நாள் முழுக்க சுமந்திடத்தான் வேண்டும்.
மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு சன்னல் வழி கரிய இருள் வானை வெறித்த ருதுவின் மனம் முழுக்க வெற்றிடம். நிரப்பிடும் ஆளைத்தான் கடினப்பட்டு தள்ளி வைத்திருக்கிறான்.
ருதுவே எதிர்பாராமல் அவனது சிறு செயல் சமூக வலைதளங்களில் அதீத வரவேற்பு பெற்று பரவியிருந்தது. இன்றைய நகரத்தின் செய்தி ஊடகங்களில் கூட அந்த செய்தி ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்தது.
‘வந்த முதல் நாளே அதிரடி காட்டி தன்னை ஒரு ஹீரோவாக நிரூபித்த காவல்துறை அதிகாரி’ எனும் வரிகளோடு.
‘பார்த்திருப்பாளா?’
வேண்டாமென நினைத்தாலும் ருதுவின் நினைவுகள் யாவும் சுழல்வது அவனவளிடம் மட்டுமே.
ஷிவன்யா வீடியோ வந்திருக்கிறது என்று சொல்லியது முதல் ‘இமையாள் பார்த்திருப்பாளா?’ எனும் கேள்வி தான் அவனுள்.
‘பாரத்திருந்தால் என்ன? அவள் இன்னொருவருக்கு மனைவியாகியிருக்கலாம். நினைப்பதே தவறு.’ அவனது மனசாட்சிக் கொட்டியது.
‘இனியன் பார்த்திருப்பான். நாளை என்னைத்தேடிகூட வரலாம்’ என நினைத்த நொடி, ‘நான் அவனை நேரில் சந்திக்கலாமே!’ என்று தோன்றிய எண்ணத்தை முழுதாய் புறம் தள்ளினான்.
ருது இமையாளைப் பற்றி அறிய உதவும் காரணிகள் யாவற்றையும் ஒதுக்கி வைத்திடவே நினைக்கின்றான்.
அவன் கொடுத்த வலியின் குற்றவுணர்வின் தாக்கம். அதிலிருந்து ஓடிப்போகவே முயல்கிறான்.
“ப்பா…” தேஷ்ஷின் சிணுங்களில் தற்காலிகமாக தனது நினைவுகளிலிருந்து மீண்டவன், படுக்கைக்கு விரைந்து, தேஷினை தன் மார்பில் கிடத்தி தட்டிக்கொடுத்தபடி தானும் உறங்கிப்போனான்.
காலை விரைந்து அலுவலகம் செல்ல கிளம்பி கீழே வந்தவன் தனக்கு முன்பாக கிளம்பி பூட்ஸினை மாட்டிக் கொண்டிருக்கும் வேங்கடத்தின் முன்பு சென்று நின்றான்.
“கிளம்பியாச்சா?” கேட்டபடி அவர் எழ,
“நைட் ரொம்ப லேட்டாகிருச்சா?” எனக் கேட்டான் ருது.
“ம்ம்ம்… சிஎம் கூட சேலம் போயிட்டு வர வேண்டியிருந்தது. இன்னைக்கு கோவை. நாளைக்குத்தான் வருவேன்” என்றார் வேங்கடம்.
“என்னால் தான் உங்களுக்கு…”
“ம்ப்ச்… ஒரு ஐந்து மாதம் தானே! சமாளிச்சிக்கலாம்” என்றவர், “வந்த முதல் நாளே பெரிய தலைங்களோட மோத ஆரம்பிச்சிட்டப்போல” என்றார்.
“நியூஸ் செக்ரட்டரிரைட் ஆபீஸ் வரை வந்திருச்சா?” என்று பொய்யாய் வியப்பைக் காட்டினான் ருது.
“அங்குவரை ரீச் ஆகணும் தானே நேத்து அந்த விசிட்… அப்புறம் என்ன தெரியாத மாதிரி லுக்?” என்று புருவத்தை ஏற்றி இறக்கிய வேங்கடம், “நான் நேற்று கேள்விப்பட்டவரை சிட்டியோட கவர்மெண்ட் கண்ட்ரோல் முழுக்க கைலாஷ் அப்படிங்கிறவன் கையில் தான். சிஎம் சேலம் போறதுக்குக்கூட அவன் பெர்மிஷன் கொடுக்க வேண்டியது இருக்கு” என்றார்.
“இப்போ என்ன சொல்லவர்றீங்க நீங்க?”
“உன்னை ஒன்னும் சொல்லல. பார்த்து அடி வை. அவ்வளவு தான். கோவையில் கட்சி பொதுக்குழு கூட்டம். போயிட்டு வரேன்” என்றவர் ருதுவின் தோளில் தட்டிவிட்டு, சமயலறையில் வேலையாக இருந்த மனைவியிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டார்.
“தாத்தா” என்று ஓடிவந்த தேஷ், அவரை குனிய வைத்து கன்னத்தில் முத்தம் வைத்தான்.
இது தன் குடும்பம். எனும் நிறைவான புன்னகை அவர் முகத்தில்.
செல்லும் அவரை பார்த்தவாறு நின்றிருந்த ருதுவிற்குள் மெல்லிய படபடப்பு. எதை உணர்த்திட இந்த படபடப்பு என்று புரியவில்லை.
“ருது…” அம்பிகாவின் விளிப்பில் கலைந்து சென்றவன், “ஒரு மாதிரி இருக்கும்மா. என்னன்னு சொல்லத் தெரியல. கவனமா இருங்க” என்று சொல்லிக் கிளம்பினான்.
“சாப்பிட்டு போடா!”
“வெளிய பார்த்துக்கிறேன்” என்றவன் வாயிலை தாண்டி வர,
“ஐயா, வண்டி ஸ்டார்ட் ஆகலன்னு உங்க வண்டியை எடுத்திட்டு போயிருக்காங்க தம்பி. வண்டி ஸ்டேஷனுக்கு அனுப்பிடுறேன் சொன்னாங்க” என்று குவார்ட்டர்ஸ்க்கு காவலுக்கு இருக்கும் காவலாளி தகவல் கூறினான்.
உடனடியாக கிருஷ்ணனுக்கு வண்டி எடுத்துவருமாறு சொல்ல அழைப்பு விடுத்தவன், சொல்லிவிட்டு மீண்டும் வீட்டிற்குள் செல்ல திரும்பியபோதுதான் தன் வண்டி நின்ற இடத்தை எதேர்ச்சையாக ஏறிட்டான். தரையில் எண்ணெய் சிந்தியிருந்தது.
அதன் பக்கத்தில் துண்டாக நறுக்கப்பட்ட வயர் கம்பி இருந்திட… ருதுவின் போலீஸ் மூளை விழித்துக்கொண்டது.
கிருஷ்ணனும் அதே குடியிருப்பு பகுதியில் தான் வசிக்கிறார். அதனால் ருது அழைத்த இரண்டாவது நிமிடம் அவன் முன்பு இருந்தார்.
“அண்ணா… க்விக். மூவ் ஃபாஸ்ட்” என்று வண்டியில் தாவி ஏறினான்.
“என்னாச்சு சார்? எமெர்ஜென்சியா?” எனக் கேட்டபோதும் அவரின் கையில் வண்டி அதீத வேகத்தில் பறந்தது.
கையில் நடுக்கத்துடன் அலைப்பேசியில் வேங்கடத்திற்கு விடாது அழைப்பு விடுத்தபடி இருந்தான் ருது.
“எங்க சார் போகணும்?” முக்கிய சாலை வந்ததும் கிருஷ்ணன் வினவிட,
“செக்ரட்டரிரைட்” என்ற ருது, “உங்களுக்கு அங்க யாரும் தெரியுமாண்ணா?” எனக் கேட்டான்.
“முன்பு இன்ஸ்பெக்டரா இருந்தவர் இப்போ, ஸ்குவாட் பிரிவில் அங்கு தான் இருக்கார் சார்” என்றவர், ஏதோ விபரீதம் என்பது புரிந்து, தன்னுடைய அலைபேசியை எடுத்து ருதுவிடம் நீட்டியவராக, “கிஷன் இருக்கும் சார்” என்றார்.
கிஷன் எண்ணுக்கும் இருமுறை அழைத்து எடுக்கப்படாது சோர்ந்த ருது, கண்களை மூடிக்கொண்டு “ஒன்றும் நடந்திருக்கக் கூடாது என்ற வேண்டுதலோடு விழி திறந்து செல்லும் வழி எங்கும் ஏதும் விபத்து நேர்ந்துள்ளதா என ஆராய்ந்தபடி வந்தான்.
செயலகம் வந்ததும், கிருஷ்ணன் வண்டியை நிறுத்துவதற்கு முன்பு குதித்து இறங்கிய ருது, உள் நோக்கி ஓடிட, முதல்வரின் பாதுகாப்பு பிரிவில் இருக்கும் கார்ட்ஸ் ஒருவர் அவனை தடுத்து நிறுத்தியிருந்தார்.
அவர்களுக்கு முதல்வரின் பாதுகாப்புதானே முக்கியம். முறையான பரிசோதனை இல்லாமல் யாராக இருந்தாலும் உள்ளே அனுமதித்திட முடியாதே!
மூச்சினை இதழ் குவித்து வெளியேற்றிய ருது…
“மிஸ்டர்… உங்க ஹெட் திருவேங்கடம் அவங்களை மீட் பண்ணனும்?” என்றான்.
“அவர் இன்னும் வரலையே!” என்று அவர் சொல்லிய நொடி ருது பரிதவித்துப்போனான்.
“இன்னும் வரலையா?” எனக் கேட்டவன் அப்படியே மடங்கி படியில் அமர்ந்த கணம், அங்கே வருகை தந்தார் வேங்கடம்.
“ருது…” என்ற வேங்கடத்தின் குரலில் வேகமாக நிமிர்ந்து பார்த்த ருதுவின் விழிகள் ரத்தமென சிவந்திருந்தது. அழுகையை அடக்கியதன் வெளிப்பாடு அது.
“அப்பா” என்ற கூவலோடு நான்கே எட்டில் அவரை அடைந்தவன் தாவி அணைத்திருந்தான். இறுக்கமாக.
“உங்களுக்கு… உங்களுக்கு ஒன்னுமில்லையே!” என்று அவரை தன்னிலிருந்து விலக்கி ஆராய்ந்தான்.
“ருது அம் ஓகேடா!” என்றவருக்கு அவனின் இந்நிலைக்கான காரணம் புரிந்தது.
“உனக்கு போட்ட ஸ்கெட்சில் நான் சிக்கிட்டேன் போல” என்று சிரித்தவர், “ரொம்ப வேகம் போகல. சுதாரிச்சிட்டேன். பக்கத்துலே மெக்கானிக் ஷாப் இருந்துச்சு. உடனே சரிபண்ணி கொடுத்துட்டான்” என்றார் அவர்.
“ஊஃப்ப்…” அப்போது தான் ருதுவிற்கு நிம்மதியாக இருந்தது.
அந்நேரம் ருதுவின் அலைப்பேசி ஒலித்திட யாரென்று எடுத்துப்பார்த்தான். தெரியாத எண்ணாக இருந்திடவே, ஏற்று கவனமாக செவி மடுத்தான்.
“என்னா போலீசு… அப்பான்னா ரொம்ப புடிக்கும் போல. நம்மகிட்ட வச்சிக்கினா இதுதான் நடக்கும். உனக்கு வச்சக்குறி. தப்பிச்சிட்ட. இது சும்மா சாம்பிள் தான் மாப்பு. அடங்கியிரு இல்லாங்காட்டி அடக்கிடுவோம்” எனக்கூறி வைத்திருந்தான் எதிராளி.
“யாருப்பா?”
“எவனோ அல்லக்கை ப்பா. அவன் பார்த்த வேலை தான் இது. நேரடியா மோத தெரியாத சில்லரைங்க” என்ற ருது, “ரொம்பவே கவனமா இருங்க” என்று சொல்லிச் சென்றான்.
நேற்று காந்தாவை நேரிலே சென்று பார்த்து, சட்டத்திற்கு புறம்பாக செய்யும் தொழில்களை நிறுத்தக்கூறி ருது சொல்லியது காந்தாவின் ஆட்களுக்கு உவப்பானதாக இல்லை.
“பெரிய பெரிய போலீஸிலிருந்து எல்லாம் நம்ம பேட்டைக்குள் வரவே தயங்கும் போது… சின்னப்பையன் இவன் நேரா வூட்டுக்கே வந்துக்கினு லந்து கொடுத்திருக்கான். அவன்கிட்ட நம்ம பவுசை காட்ட வேண்டாம்” என்று ஒருவன் மற்றவர்களை தூண்டிவிட, இரவோடு இரவாக காவலர் குடியிருப்பு பகுதிக்குள்ளாகவே நுழைந்து ருதுவின் வண்டியில் பிரேக் வயரை துண்டித்திருந்தனர்.
வேலையின் அவசரம் காரணமாக வேங்கடம் ருதுவின் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பியிருக்க, வழியிலே பிரேக் இல்லை என்பது தெரிந்து லாவகமாக வண்டியின் வேகத்தை கையாண்டு மணற்பரப்பு பகுதியில் இருக்கும் மரத்தின் மீது மோதி நிறுத்தியிருந்தார்.
வேங்கடம் கவனிக்காது பயணித்திருந்தால்… நிச்சயம் உயிருக்கு அசம்பாவிதமாக ஏதும் நடந்திருக்கும் அபாயம் உண்டு.
அமைதியாக கையாள நினைத்த ருதுவிற்கு ரொம்பவே உரசிவிட்ட கோபம்.
நேராக தனது அலுவலகம் சென்றவன்…
“அந்த பேட்டை நுழைவு வாயிலுக்கு எதிரே ஒரு சூப்பர் மார்க்கெட் இருந்தது. நிச்சயம் காமிரா வைத்திருப்பான். சரியா நம்ம வண்டி உள்ளே நுழையும்போது அந்த ஆளு வண்டி மேல விழுற மாதிரி எவனோ தானே செட் பண்ணியிருக்கணும்? இன்னும் ஒரு மணி நேரத்தில் அவன் என் கண் முன்னாடி இருக்கணும்” என்று வெங்கட்டிற்கு உத்தரவிட்டான்.
“சார்…” வெங்கட்டிடம் வெளிப்படையான தயக்கம்.
“என்ன?” ருதுவின் கோபம் எப்படியிருக்கும் என்பதற்கான சிறு ஆரம்பத்தை உணர்ந்தவர்களுக்கு சற்று அச்சமாகத்தான் இருந்தது.
நேற்று பாடல் கேட்டபடி சிரித்தவாறே கதை கேட்ட ருது இவனில்லை எனும் எண்ணம் தான். மற்ற பணியாளர்களுக்கு பார்வையாலே அத்தனை சூட்டைக் காட்டியிருந்தான் ருது.
“கொஞ்சம் யோசித்து…” வெங்கட் தயக்கத்தோடு மொழிய,
“காக்கிச்சட்டை போட்டுக்கிட்டு வேடிக்கை பார்க்க சொல்றீங்களா எஸ்.ஐ சார். ஆரம்பத்திலே போலீஸெல்லாம் ஒழுங்கா வேலை பாரத்திருந்தால், கைலாஷ்ன்னு ஒருத்தன், அவனுக்கு அல்லக்கை காந்தான்னு ஒருத்தன் வளர்ந்து வந்திருக்கவே மாட்டாங்க” என்று சூடாகக் கூறியதோடு.
“போய் வேலையைப் பாருங்க சார்” என்றான்.
அலுவலகம் விட்டு வெளியில் வந்த வெங்கட் அங்கிருந்த மரத்தடியில் யோசனையோடு நின்றுவிட்டான். உண்மையில் அவனுக்கு பயந்து வந்தது.
ருது சொல்வதை செய்தால் காந்தா என்னவும் செய்வான். காந்தாவுக்கு பயந்து செய்யாமல் விட்டால் ருது என்ன செய்வானென்றே தெரியாது.
வெங்கட் அல்லாடினான். ஒரு முடிவு எடுக்க முடியாது.
“என்ன சார் போகலையா?”
ராதிகாவின் குரலில் திரும்பிய வெங்கட்…
“எப்படிப்போக…?” என்றவன், “நீங்க ஹாஸ்பிடலில் காவலுக்கு இருந்தீங்களே?” என்றான்.
“அந்தப்பொண்ணு டிஸ்சார்ஜ் ஆகிட்டாங்க சார். கழுத்தில் கூட லேசான காயம் தான். பின் மண்டையில் தான் அடி. தையல் போட்டிருக்காங்க. ஸ்கேன் பண்ணதுல பயப்படுற மாதிரி எதுவுமில்லை. டிசி சாரிடம் ரிப்போர்ட் பண்ணிட்டேன். அவர் தான் அவங்க வீட்டுக்கு போனதும் வந்திடுங்க சொல்லிட்டார்” என்று நீளமாகவே விளக்கம் கொடுத்தாள்.
“அப்போ அந்த அசோக் விஷயத்தை அவர் அப்படியே விட்டுட்டாரா? அவனை பிடித்தது, அந்தப்பொண்ணை காப்பற்றியதென வீடியோஸ் ஸ்பிரட் ஆச்சே. இதோட முடிவு என்னன்னு மீடியா சும்மா விடாதே” என்றான்.
“அதை நான் பார்த்துக்கிறேன். சொன்னதை செய்ங்க எஸ்.ஐ சார்” என்று அழுத்தமாக ஒலித்த குரலில் வெங்கட் ஓடியேப்போனான்.
________________________________
கதவு தட்டி அனுமதி கேட்கும் சத்தத்தில்… தான் செய்து கொண்டிருந்த வேலையில் கண்ணாக இருந்தவாறே…
“யா கமின்” என்றிருந்தான்.
“ஹலோ டாக்டர்!”
குரல் கேட்டதும் தலையை உயர்த்தாமலே யாரென்று கண்டுகொண்டான் இனியன்.
ஒரு நோயாளியின் மருத்துவ அறிக்கையை படித்துக் கொண்டிருந்த இனியன், மூடி வைத்தவனாக நிமிர்ந்து அமர்ந்து தனக்கெதிரே புன்னகை முகமாக நின்றிருந்த ஷிவன்யாவை அழுத்தமாக ஏறிட்டான்.
அவன் பார்வையே என்ன என்று கேள்வி கேட்பது போலிருந்தது.
“அட்டஸ்ட் சைன் வேணும். ப்ரொஜெக்ட் சப்மிஷன். போடுறீங்களா ப்ளீஸ்?” என்று கண்களை சுருக்கிக் கேட்டவள், “படிச்சு பார்த்து பண்ணுங்க. கரெக்ஷன் இருந்தாக்கூட சொல்லுங்க” என்றாள்.
அவள் படிப்பு விஷயமாக வந்திருப்பதால் இனியனால் ஒதுக்க முடியவில்லை.
“மேஜர் உங்க டிப்பார்ட் தான்.” அவன் அமைதியாக இருக்கவும் மறுத்துவிடுவானோ எனக் கூறினாள்.
“வேற பீடியாட்ரிஷனே இல்லையா?” எனக் கேட்டிட வாய் வரை வந்துவிட்ட வார்த்தைகளை விழுங்கிக்கொண்டவன்,
“சப்மிஷன் எப்போ?”
“நாளைக்கு டாக்டர்.”
“ம்ம்… ஈவ்வினிங் உங்க கிளாசஸ் முடிந்ததும் வாங்க. இப்போ வச்சிட்டு போங்க” என்றான்.
“டாக்டர்…” என்று அவள் தயங்கிட,
“வேறென்ன?” எனக் கேட்டான்.
“இந்த ப்ரொஜெக்ட் கன்குலுஷனில் பேஷண்ட் அப்ஃசர்வ் ரிப்போர்ட் பின் பண்ணனும்… ரிலேட்டபுல் ஸ்பெசிமன் ரிப்போர்ட்ஸ் இருந்தால் தர்றீங்களா? டாக்டர் வீவ் என்னன்னு தெரிஞ்சிட்டு ரிட்டர்ன் பண்ணிடுறேன்” என்றாள்.
“அப்படியெல்லாம் ஒரு பேஷண்ட்டோட ரிப்போர்ட் கொடுத்திட முடியாது மிஸ்…”
“ஷிவன்யா டாக்டர்.”
‘அவள் பெயர் உனக்குத் தெரியாது அப்படித்தானே!’ மனம் கொட்டியது. அதனை அவன் கண்டு கொள்ளவில்லை.
“வாட் எவர்… பைனல் செம், பிராப்பர் கைடென்ஸோட இதை பண்ணுவீங்க. இப்போ என்ன பண்ணிருக்கீங்களோ அதை சப்மிட் பண்ணுங்க” என்றான்.
“ப்ளீஸ் டாக்ட…”
“யூ மே கோ நவ்!” வாயிலை நோக்கி கை காட்டியிருந்தான்.
‘போடா’ என்று சத்தமின்று உதடு மட்டும் அசைத்தவள், உதட்டை சுளித்தவளாக வெளியேறினாள்.
தியா வேறொரு மருத்துவரிடம் சென்றிருக்க… அவளுக்காகக் அங்கேயே அப்பிரிவில் இனியனின் அரை முன்பிருக்கும் இருக்கையில் அமர்ந்து காத்திருந்தாள் ஷிவன்யா.
சில நிமிடங்களில் தியா வர,
“சைன் வாங்கிட்டியா?” என்று சுரத்தே இல்லாமல் கேட்டாள் ஷிவன்யா.
“ம்ம்ம்… படிச்சிக்கூட பார்க்கல. என்ன டாபிக்ன்னு மட்டும் தான் சொன்னேன். சைன் போட்டுட்டாங்க” என்று தியா மகிழ்வாய் சொல்ல… ஷிவன்யா இனியனுக்கு மானசீகமாக தலையில் கொட்டு வைத்தாள்.
தோழியின் முகம் வைத்தே கண்டு கொண்டவளாக,
“என்ன உன் ஆளு போடலையா?” என்று சிரிப்போடு வினவி அவளை இடித்துக்கொண்டு அமர்ந்தாள் தியா.
“ம்க்கும்… போடி. என்னவோ பார்த்ததும் மனசுல ஒட்டிக்கிட்டாங்க. தூக்கிப்போட முடியல. இதை சாக்கு வச்சு பார்க்கலாம் வந்தால்… அநியாயத்துக்கு டாக்டரா இருக்காங்க” என்று புலம்பினாள்.
இங்கு ஷிவன்யாவின் புலம்பலில் தியா அட்டகாசமாக சிரித்த அதே கணம், இவர்களுக்கு பின்னால் இனியனின் அறை சுவற்றில் திறந்திருந்த சன்னல் வழி அவளின் வார்த்தைகளைக் கேட்க நேர்ந்த இனியன் மென்மையாக இதழ் விரித்திருந்தான்.
அவனது புன்னகைக்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று ஷிவன்யாவின் வார்த்தையிலிருந்து ருது அவளுக்கு யாராக இருக்குமென, அவன் பயந்த உறவு இல்லை என்பது தெரிந்தது. மற்றொன்று அவனுக்குள்ளும் அவள் மெல்லிய சலனத்தை ஏற்படுத்தியிருந்தாளே. ருதுவை காரணம் வைத்து அவள் மீது தோன்றிய ஈர்ப்பை புதைத்து வைத்திருந்தான். இனி வெளிக்கொணர்ந்திடலாமே!
“சரி போகலாம். ஈவ்வினிங் வர சொன்னாங்க” என்று எழுந்த ஷிவன்யா, சன்னல் வழி பாதி தெரிந்த இனியனின் உருவத்தை ரசித்தபடி சென்றிருந்தாள்.