அத்தியாயம் 16
அதீத அன்பின் பேராசை…
அவனின் அவளாக வாழ்ந்திட!
*****************************
ஏழு மாதங்களுக்குப் பின்னர்…
படுக்கையில் சுருண்டு கிடந்த தீரன், அலைபேசியின் ஓசையில் எழுந்தமர்ந்தான்.
யாரென்று பார்க்காமலே அழைப்பது யாரெனத் தெரிந்தும் அழைப்பினை ஏற்காது குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
நியூயார்க்கில் சூரியன் உதிக்கும் நேரமான ஏழு இருபதுக்கு (சில நாட்களில் இது மாறுபடும்.) சரியாக தினமும் அழைப்பு வந்துவிடும்.
தீரன் தனது ஊருக்கு சென்று திரும்பிய இந்த ஏழு மாதங்களாக மயிலாஞ்சலியிடமிருந்து இது வாடிக்கையானது.
தீரனின் உயிர்ப்பே மயிலாஞ்சலி என்ற நிலையிலும் அவளை முழுதாக தவிர்த்தான் தீரன்.
அவளுக்காக அவனது காதலை தனக்குள்ளாக மட்டுமே மூழ்கடித்துக்கொள்ள அவளிடமிருந்து எட்டி நிற்க பழகிக்கொண்டான்.
அன்பின் அதீதமாக ஓரளவிற்கு மேல் சென்றால் வலி என்பதனை கண்டு கொண்டவனுக்கு, தனது அன்பே அவளின் வாழ்க்கைக்கு வலியாகிடக் கூடாதென நினைத்து விலகலை ஏற்கப் பழகியிருந்தான்.
சேர்ந்த உறவுகளை இப்போது அவன் விலக்கி வைத்திருக்கின்றான். தனது மனம் தன்னுடையக் கட்டுப்பாட்டினை மீறி, பெரியவர்களின் திருமண பேச்சிற்கு கட்டுப்பட்டுவிடக் கூடாதென்பதில் அத்தனை திண்ணமாக இருக்கின்றான்.
முன்பு அவன் தேடிய உறவின் தேடுதலை, தற்போது தீரனுக்காக அவனது குடும்பத்தார் தேடிக் கொண்டிருக்கின்றனர்.
யாருடைய அழைப்பையும் தீரன் ஏற்பதில்லை. ஆனாலும் மயிலாஞ்சலி மட்டும் இந்திய நேரத்திற்கு அடுத்தநாள் மாலையான, நியூயார்க்கின் முதல் நாள் விடியலில் தினமும் தவறாது அழைத்திடுவாள்.
பேசவில்லை என்றாலும் அவளின் அழைப்பிற்கு தினமும் எழுந்திடப் பழகியிருந்தான் தீரன்.
இன்னும் சற்று நேரத்தில் அலுவலகம் செல்ல வேண்டும். அதற்கு முன் காலை உணவு சமைக்க வேண்டுமென சமையலறைக்கு வந்த தீரன், அங்கு ஏற்கனவே தயாராக இருந்த உணவினை கண்டு…
“என்னடா அதிசயமா குக்கிங் முடிச்சிருக்க?” என்று ரிச்சர்ட்டிடம் கேட்ட தீரன், பிளாஸ்கில் கலந்து வைத்திருந்த தேநீரை குவளையில் ஊற்றிக்கொண்டு அங்கிருந்த உணவு மேசை இருக்கையில் அமர்ந்தான்.
கூடத்தில் அமர்ந்திருந்த ரிச்சர்ட் தீரனின் கேள்விக்கு அவனருகில் எழுந்து சென்றான்.
ரிச்சர்ட் கிளம்பி வெளி செல்லும் தோற்றத்தில் இருக்க…
“மணி பத்தானாலும் பெட்ல உருண்டுட்டு இருப்ப… இன்னைக்கு என்ன அதிசயமா இவ்வளவு சீக்கிரம் எழுந்து வேலையெல்லாம் செய்திருக்க… இப்போ கிளம்பிவேற நிக்கிற?” என்று கேட்டுக்கொண்டே ஒரு கையில் அலைபேசி திரையை நகர்த்திக்கொண்டே தேநீரைப் பருகினான்.
“அதான் சொன்னனேடா… என் சிஸ்டர்…” என்று ரிச்சர்ட் முடிக்கும் முன்னர், நெற்றியில் தட்டிக்கொண்ட தீரன்,
“சாரிடா நினைவே இல்லை…” என்றதோடு, “எத்தனை மணிக்கு ஃப்ளைட் லேண்டிங்?” என்றான்.
“ஏர்போர்ட் போயிட்டு பிக்கப் பண்ணிட்டே வந்துட்டேன் மச்சான். அந்த ரூம்ல தங்க சொல்லியிருக்கேன். ஜெட்லாக் இருக்கும்ல. சோ, ரெஸ்ட் எடுக்க சொல்லியிருக்கேன்” என்ற ரிச்சர்ட், “உனக்கு ஓகே தான?” என்று அவனது தங்கை இங்கு தங்குவது குறித்து வினவினான்.
“அடி விழும்” என்ற தீரன், “எத்தனை நாள் வேணாலும் தங்கட்டும். எனக்கு அப்ஜெக்ஷன் இல்லை” என்றதோடு, “நான் உன் சிஸ்டர் போற வரை நம்ம கம்யூனிட்டி கெஸ்ட் ஹவுஸ்ல தங்கிக்கிறேன்” என்றான்.
“ஹேய் அதெல்லாம் வேண்டாம்” என்ற ரிச்சர்ட்டிடம் மறுப்பாய் தலையசைத்த தீரன்…
“உன் சிஸ்டருக்கு யாருன்னே தெரியாத ஒரு புது ஆண் கூடவே இருக்கிறது அன்கம்ஃபோர்டபிளா இருக்கும்டா. அவங்க கொஞ்சம் ஃப்ரீயா இருக்கட்டும்” என்றான்.
“அப்படிலாம் இல்லடா…”
“என்ன இல்லை… நீ என் வீட்டு ஆளுங்களோட மிங்கில் ஆகியிருக்க மாதிரி, நான் உன் வீட்டோட ஆகலையே! இத்தனை வருசத்துல அவங்ககிட்ட பேசினதுகூட இல்லை. உன் சிஸ்டர் பேர் கூட தெரியாதுடா” என்றான்.
“ம்ம்… இப்போ புரியுது” என்ற ரிச்சர்ட்,
“என்ன புரியுது?” என தீரன் முறைத்துக்கொண்டு கேட்டிட…
“உனக்கு புதுசா ஒரு பொண்ணோட ஒரே வீட்ல இருக்க முடியாதுன்னு சொல்லு. அதைவிட்டு சும்மா உருட்டாதடா” என்றான்.
“அதான் தெரியுதே அப்புறம் என்னடா! என்னால இருக்க முடியாது. அதுதான் விஷயம். போதுமா?” என்றான்.
“நீ லிண்டாவும் டாம்பெர்ரும் உன் ரூம்ல இருந்ததுக்கு, மொத்தமா அந்த ரூமை மாத்தி ஆல்டர் பண்ணப்போவே சில விஷயம் உனக்கு செட்டாகாதுன்னு தெரிஞ்சிடுச்சு” என்ற ரிச்சர்ட், “அவள் வந்திருக்கான்னு நீ வெளிய தங்கினா, அவளாலதான்னு ஃபீல் பண்ணுவாடா! அப்புறம் இங்க ஸ்டே பண்ணவேமாட்டாள். ஹோட்டலில் எத்தனை நாளுக்கு தங்க வைக்க முடியும். அவள் இங்கிருந்து போறவரை எனக்காக கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணு மச்சான். பிளீஸ்…” என்றான்.
“ஊஃப்…” என்ற தீரன், “சரி சரி… ரொம்ப கெஞ்சாதடா” என்று தீரன் நகர,
“அவளை இண்ட்ரோ கொடுக்கிறேன் நில்லுடா” என்றான் ரிச்சர்ட்.
“இல்லை வேணாம்” என்ற தீரன், “ஜெட்லாக்… தூங்கிட்டு கூட இருக்கலாம். டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். அவங்க இருக்க நேரம் நான் இருந்தா அப்போ பார்க்கலாம். எனக்கு அவங்களை இண்ட்ரோ கொடுத்தே ஆகணும் அவசியமில்லை” என்றான்.
“நீ இப்படி சொல்லலனாதான் ஆச்சரியம்” என்ற ரிச்சர்ட்,
“இன்னும் எத்தனை நாளுக்கு மச்சான் ஒதுங்கி நிக்கப்போற? அஞ்சலி கிட்டதான் பேசுறது இல்ல… அக்கா, மாமாகிட்டவும் பேசலன்னா என்ன அர்த்தம்? அக்கா எனக்கு கால் பண்ணி புலம்புறாங்க” என்றான்.
“புலம்புறாங்க சொல்றியே! அதுக்குத்தான் பேசுறது இல்லை” என்ற தீரன், “உன்கிட்ட பேசினா பேசு… என்கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம்” எனக்கூறி அறைக்குள் வேகமாக நுழைந்திருந்தான்.
ரிச்சர்ட்க்கு வேதனையாக இருந்தது.
ஊரிலிருந்து இங்கு வந்த நாட்களில் தீரனின் முகம் காணவே அத்தனை கவலையைக் கொடுத்தது ரிச்சட்டுக்கு.
எந்நேரமும் வலியின் நிழலோடு உறவாடிக் கொண்டிருந்தவனை காண்கையில், அதிலிருந்து மீட்டுக் கொண்டுவரவே முடியாதா என்று பயமாக இருந்தது.
ஆனால் அடுத்தடுத்த நாட்களில் ரிச்சர்ட் எதிர்பாராதா மாற்றம். பழைய தீரனாக இல்லாவிட்டாலும், கசங்கி சோக முகத்தோடு எதையோ இழந்தவன் போன்று வலம் வரும் தீரன், மாறியிருந்தான்.
“நீ நிஜமாவே மூவ் ஆன் ஆகிட்டியா தீரா?” ரிச்சர்ட் நம்ப முடியாது கேட்டிட,
“இந்த வாழ்க்கையை வலியோட வாழ பழகிட்டேன்” எனக்கூறி ரிச்சர்ட்டை அதிர வைத்திருந்தான் தீரன்.
ஒரு காதல் இத்தனை அவஸ்தையை கொடுத்திடுமா? வேகமாக தலையை உலுக்கிக் கொண்டான்.
தீரன் அலுவலகம் செல்லத் தயாராகி வர,
“சாப்பிட்டு போடா” என்றான் ரிச்சர்ட்.
“நீ ஆபீஸ் வரலையா?” என்ற தீரன், உணவு மேசை இருக்கையில் அமர ரிச்சர்ட் உணவினைக் கொண்டு வந்து வைத்தான்.
சாப்பிட்டு முடித்த தீரன்,
“நிஜமா நீதான் குக் பண்ணியா?” எனக் கேட்டான்.
“ஹான்… ஆமா. அதிலென்ன டவுட் உனக்கு?” என்று தடுமாறிய ரிச்சர்ட், “அவளை ஏர்லி மார்னிங் ஏர்போர்ட் போயிட்டு கூட்டிட்டு வந்தப்புறம் படுத்தா தூக்கம் வரல. சரி சும்மா இருக்கிறதுக்கு குக் பண்ணலாம் நினைச்சு பண்ணேன். ஆனா நீ நான்தான் பண்ணனான்னு கேட்கிற. போடா! இனி நான் செய்யவே மாட்டேன்” என்று முகம் சுருக்கினான்.
“ஓவரா ஆக்ட் பண்ணாதடா!” என்ற தீரன் தட்டினை கழுவி வைத்தவாறு, “டேஸ்ட் நல்லா இருந்துச்சுன்னு கேட்டேன். உனக்கு இந்தளவுக்கு நல்லா சமைக்க வராதே! அதான் உன் சிஸ்டரை எதுவும் வேலை வாங்குனியோன்னு கேட்டேன்” என்றான்.
“இல்லை… நான்தான் பண்ணேன்.” இம்முறை ரிச்சர்ட் விறைப்பாகக் கூறிட…
“அதுக்கு ஏன்டா உன் முகம் இப்படி ஆகுது” என்ற தீரன், “நம்புறேன். போதுமா?” என்றதோடு, “ஆபிஸ் வரியா நீ?” எனக் கேட்டான்.
“மதியத்துக்கு மேல வர்றேன்டா” என்றான் ரிச்சர்ட்.
“ஃபுல் டே ஆஃப் கூட எடுத்துக்கோடா. உன் சிஸ்டர் தனியா இருப்பாங்களே” என்ற தீரன்,
“அதெல்லாம் அவள் தனியா இருப்பாள்” என்று ரிச்சர்ட் கூறுவதற்கு முன் வெளியேறியிருந்தான்.
அடுத்த நொடி அறைக்குள்ளிருந்து வெளி வந்திருந்தாள் அவள்.
“என்ன ருச்சி ஊறுகாய் உங்க ஃப்ரண்ட் போயாச்சா?”
“ஹ்ம்ம்… எதுக்கு இந்த கண்ணாமூச்சி. அவன் இருக்கும் போதே வர வேண்டியதுதான? எப்படியும் அவன் உன்னை பார்க்கத்தான போறான்” என்றான் ரிச்சர்ட்.
“அதை விடுங்க” என்றவள், “உண்மையாவே உங்க ஃப்ரெண்ட் கேர்ள்ஸ் யாரோடவும் பேசமாட்டாரா?” என்று வினவினாள்.
“வேலை விஷயமா ஆபீஸில் பேசுவான். அவ்ளோதான். மத்தபடி கேர்ள்ஸ் அப்படின்னாவே பத்தடி தள்ளிதான் நிப்பான். அவனால எனக்கு வந்த நாலு லவ் ப்ரொபோஸலை ரிஜெக்ட் பண்ணியிருக்கேன் தெரியுமா?” என அழுவதைப் போல் கூறினான்.
“ஏன்? நீங்க லவ் பண்ணா அவங்களுக்கு என்ன?”
“அவனுக்கு என்னவா? இங்க எதுக்கு வந்த? வந்த வேலையை மட்டும் பாரு. உன் குடும்பம் நீ ஒழுக்கமா இருப்பன்னு நம்பி உன்னை இவ்ளோ தூரத்துக்கு அனுப்பி வச்சிருக்காங்க. அவங்களுக்கு உண்மையா இருன்னு அட்வைஸ் பண்ணுவான். அதுக்கு லவ்வே வேணாம் தோணிடும்” என்ற ரிச்சர்ட், “என்னவோ அவனுக்கு இங்க இருந்தாலும், ஈசியா ரிலேஷன்ஷிப்பிலிருந்து மூவ் ஆன் ஆகற இந்த கல்ச்சர் மேல ஈடுபாடு கிடையாது. லவ் பண்ணா கடைசிவரை அவங்கதான் உனக்கு. அப்படின்னா லவ் பண்ணு சொல்லுவான். அதை இங்கயே பிறந்து வளர்ந்த பொண்ணுங்ககிட்ட எதிர்பார்க்க முடியாது. மேக்சிமம் அவன்கிட்ட பேசின பொண்ணுங்க எல்லாரும் அடுத்த செக்கென்ட் டேட் பண்ணத்தான் கூப்பிடுங்க. அதுக்காகவே எட்ட நின்னுடுவான். என்னையும் அப்படியே பழக்கிவிட்டுட்டான்” என்றான். ஆயாசமாக.
“அதுல ரொம்ப வருத்தமோ?” அவள் இழுவையாகக் கேட்டிட,
“லைட்டா” என்று ரிச்சர்ட் கண்களை சுருக்கி விரல்களால் கொஞ்சம் என்பதைப்போல காண்பிக்க…
“வரட்டும் போட்டுக் கொடுக்கிறேன்” என்றாள் அவள்.
அதற்கு சிரித்த ரிச்சர்ட்…
“அவன் என்னை ஓடவிட்டு அடிப்பான்” என்றான்.
இப்போது சிரிக்கும் முறை அவளுடையதானது.
“அவன்கிட்ட எப்போ பேசப்போற?”
“தெரியல… வந்துட்டேன். ஆனா எப்படி என்னன்னு பேசி கூட்டிட்டுப் போகப்போறன்னு தெரியல. அதிக நாளும் இல்லை” என்றவளிடம் பெரும் ஏக்கங்கள் கூடியிருந்தன.
“அவன்கிட்ட உன் லவ்வை சொல்லுடா… உண்மையாவே அவ்ளோ சந்தோஷப்படுவான். அவனோட சந்தோஷமே நீதான்னு அடிக்கடி சொல்லுவான். ஆனால் இப்போ அவனோட வலிக்கு நீதான் காரணமா இருக்க அஞ்சலி” என்றான்.
ஆம் மயிலாஞ்சலி தான். அவளின் காதலைத்தேடி மீட்டெடுக்க வந்திருக்கிறாள்.
“எனக்குத் தெரியாதே ருச்சி இப்படியெல்லாம் ஆகும்னு. கொஞ்சம் லேட்டா புரிஞ்ச என் லவ் முன்னாடியே புரிஞ்சிருக்கலாம். நான் தான் சொதப்பிட்டேன்” என்று நெற்றியில் தட்டிக்கொண்டாள்.
“சில விஷயங்கள் இப்படித்தான்… வலி கடந்து தான் நடக்கணும் இருந்தா நாம ஒண்ணுமே பண்ண முடியாது. நடக்கிறது தான் நடக்கும். ஃப்ரீயா விடு” என்ற ரிச்சர்ட், “ரொம்ப பிடிக்குதா இப்போ?” எனக் கேட்டான்.
“இப்போன்னு இல்லை எப்பவுமே ரொம்ப ரொம்ப அதிகத்துக்கும் பிடிக்கும். மனசுல இருக்க காதலை கொஞ்சம் கூட கண்ணு வழியாக்கூட காட்டுலன்னா எனக்கு எப்படி புரியுமாம். அவுங்களுக்கு லவ் இருக்குன்னு நானா எப்படி தெரிஞ்சிக்க முடியும். சொல்லணும் தான” என்றவள், “இவங்க பாட்டுக்கு வேணாம் சொல்லிட்டு வந்தாச்சு. ஆனால் மாமா அண்ணேய்ங்கலாம் அவீங்க போறதுக்கு காரணம் நாந்தான்னு பேசியே கொன்னுட்டாய்ங்க. அதுக்காக அவீங்களுக்காக கல்யாணம் பண்ணிக்க முடியுமா? எனக்கும் லவ் வரணும்ல” என்றாள்.
“இதுல அவங்க அக்கா வேற, எனக்கு அம்மா மாதிரி இல்லாம தம்பிக்கு அக்காவா, எனக்கு நாத்தனாரா… பார்க்கும் போதெல்லாம் ஒரே முறைப்பு தான் போங்க” என்றாள். இறுதியாக பெருமூச்சு அவளிடத்தில்.
மயிலாஞ்சலி கூறியதில் சத்தமிட்டு சிரித்த ரிச்சர்ட்,
“அப்போ உன் அம்மாவே உனக்கு நாத்தனார் கொடுமை பண்றாங்கன்னு சொல்லு” என்றான்.
“ஆமா… அதுமட்டுமில்ல, துளசி அம்மத்தாலாம் எனக்கு மாமியார் கிடையாது. என் அம்மா தான் எனக்கு மாமியார் ரோலும் பிளே பண்ணுவாய்ங்க” என்றாள்.
ரிச்சர்ட்டின் சிரிப்பு மேலும் மேலும் அதிகரித்தது.
“நான் போன பின்னாடி டோர் கூட லாக் பண்ணாமா அப்படி என்னடா சத்தமா சிரிப்பு உனக்கு?” என்று கேட்டுக்கொண்டே வேகமாக கதவினை திறந்து கொண்டு வந்த தீரன், “லிஃப்ட் வரை கேட்குது நீ சிரிக்கிறது” என்று ரிச்சர்ட்டின் தலையிலே கொட்டியிருந்தான்.
“சும்மா பேசிட்டு சிரிச்சிட்டு இருந்தோம்டா” என்ற ரிச்சர்ட், தீரன் கொட்டிய இடத்தை தேய்த்தபடி கூறினான்.
“ஆமா நீயெதுக்கு இப்போ திரும்ப வந்த?” எனக் கேட்டான்.
“வந்ததாலதான நீ போட்ட டிராமா தெரிஞ்சுது” என்ற தீரன்,
“உன்னை இவ்ளோ தூரம் யாரு தனியா வரச்சொன்னது?” என்று மயிலாஞ்சலியின் பக்கம் பார்வையைத் திருப்பியிருந்தான்.
தீரன் வேகமாக உள்ளே வந்திருந்தாலும் அவனின் பார்வை முழுக்க ரிச்சர்ட் மீதே இருந்திட, ‘நல்லவேளை நம்மள பார்க்கல’ என நினைத்து, அப்படியே சத்தமின்றி அறைக்குள் சென்றிட மெல்ல நகர்ந்த மயிலாஞ்சலி தீரன் நேர்கொண்டு பார்த்து வினவியதில் திடுக்கிட்டு அசையாது நின்றாள்.
அடுத்த நொடி வேகமாக அறைக்குள் ஓடியவள், மீண்டும் வந்து…
“இதை குடுக்கத்தேன் வந்தேன்” என்று அவன் கேட்ட புகைப்படத்தை நீட்டியிருந்தாள்.
“இதை நான் நம்பனுமா?” என்று கேட்டபோதும் புகைப்படத்தை வாங்கிக்கொண்டான்.
“அது… மாமா…”
“இதென்ன மதுரையிலிருந்து தேனிக்கு பஸ்ல போற மாதிரியா? உன்னை எப்படி இங்க தனியா போகவிட்டாங்க?” என்று கடிந்தான்.
அவளுக்கு தெரிந்த தீரனுக்கு அவளிடம் குரல் உயர்த்திக்கூட பேச வராது. ஆனால் இவனோ இத்தனை மாதங்களுக்குப் பின்னால் தன்னை பார்த்த பின்னரும் கூட மகிழ்வைக் காட்டாது, நலன் விசாரிக்காது இங்கு வந்ததற்காக கடிந்து கொள்கிறானென்று மனம் சுனங்கினாள்.
ரிச்சர்ட்டுக்கோ நாங்க பேசினதெல்லாம் கேட்டிருப்பானா என யோசனை பயணித்தது.
‘நீயெதுக்கு இங்க வந்த?’ என தீரன் கேட்டதில், அவன் தங்கள் பேச்சினை கேட்கவில்லையென்று புரிந்தது.
“நீ பாட்டுக்கு நம்ம ஊர் சந்தைக்கு போற மாதிரி தைரியமா இவ்வளவு தூரம் தனியா கிளம்பி வந்திருக்க!” என்ற தீரன், “உன்னை என்கிட்ட சொல்லக்கூடாதுன்னு சொன்னாளா?” என்று ரிச்சர்ட்டிடமும் அதட்டலாக வினவினான்.
“இப்போ என்னத்துக்கு மாமா சும்மா கோவமா பேசிட்டு இருக்கீய்ங்க. உங்களை பார்க்கணும் தோணுச்சு வந்துட்டேன். இப்போ இங்க வந்ததுல என்னவாகிப்போச்சு?” என்று சிலுப்பிக்கொண்டு கேட்டவள், “இன்னும் கொஞ்ச முன்னாடியே வந்திருப்பேன். இந்த எம்பசில இழுத்து அடிச்சிட்டானுங்க” என்றாள்.
தீரன் முறைத்துக்கொண்டு நிற்க,
“இப்போ என்ன? நான் வந்தது புடிக்கலயா? நான் வேணா திரும்பிப் போயிடவா?” என்றாள் மயிலாஞ்சலி.
“முதல்ல அதை செய். சீக்கிரம் கிளம்புற வழியைப் பார்” என்ற தீரன்,
“இங்க வர நீதான கைட் பண்ண? இப்போ போகவும் எப்போ டிக்கெட் அவைலபுல் பார்த்து அனுப்பி வை” என்று ரிச்சர்ட்டிடம் கூறியதோடு,
“என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லல…” என்று முணுமுணுத்தான்.
“சொல்லனும்னா நான் பண்ண ஒரு காலுக்காவது ரெஸ்பான்ஸ் பண்ணியிருக்கனும்” என பட்டென்று பதில் வழங்கியிருந்தாள் மயிலாஞ்சலி.
தீரன் முறைத்திட…
“சும்மா முறைக்காதீய்ங்க மாமா. உங்களை பார்க்கத்தேன் வந்தேன்” என்றாள்.
இடையில் கைகள் குற்றி இதழ் குவித்து காற்றினை ஊதி தன்னுடைய அழுத்தம் குறைத்த தீரனின் பார்வை பொய்யான கடுமையை விலக்கி கனிவை தாங்கியிருந்தது. ஆனால் நொடி நேரமே! மயிலாஞ்சலி அவனின் கனிவை உள்வாங்குவதற்கு முன்னர் மாற்றியிருந்தான். தானாக ஒருவித இறுகலை உடல் மொழியில் கொண்டு வந்திருந்தான்.
“நான் வந்தது புடிக்கலையா மாமா?”
தீரனின் எண்ணம் என்னவென்று அவனது முகத்தில் பிடிபடாது போகவே அவ்வாறு கேட்டிருந்தாள்.
“ஆமா பிடிக்கல!” பட்டென்று மொழிந்தவன், அவளின் கண்கள் காட்டிய மென் வலியை புறம் ஒதுக்கியவனாக, “எதுக்கு வந்த?” எனக் கேட்டான்.
“எனக்கு கண்ணாலம். இன்னும் பதினேழு நாளுல” என்றாள்.
தற்போது இதயம் நொறுங்கி அதிர்வது தீரனின் முறையாயிற்று. அவனது இறுக்கம் மேலும் அதிகரித்தது. சட்டென்று அதி வேகத்தில் துடிக்கும் இதயத்தின் துடிப்பு அவனது மூச்சினை இழுத்து பிடிக்கும் உணர்வு. விண்ணென்று தெறித்த மின்னல் இதயத்தை பிளந்த வலி, உடலின் ஒவ்வொரு அணுவையும் துவளச் செய்தது.
அவனது வலியின் தடம் அவளிடத்தில் கடத்தப்பட்டது. பார்வையால். அவனின் வேதனை புரிய, உள்ளத்தால் தன்னையே நிந்தித்து வதை கொண்டாள்.
மயிலாஞ்சலியின் கூரிய பார்வையின் மொழி புரியாது புருவம் தூக்கிய தீரன், நொடியில் தன்னை மீட்டவனாக…
“பதினேழு நாளுல மேரேஜ் வச்சுக்கிட்டு உன்னை யாரு இங்க வரச்சொன்னது. எப்படி விட்டாங்க?” என வினவினான். தன்னுடைய வலிகளையெல்லாம் தனக்கு மட்டுமே உரித்தானதாக விழுங்கிக் கொண்டான்.
“நீங்க இல்லாம கண்ணாலம் பண்ணிக்க முடியாது. அதுதேன் கூட்டிட்டு போலான்னு வந்தேன்.”
“என்னால வர முடியாது. நீ இங்கிருந்து கிளம்பும் வழியைப்பார்” என்றவன் வேகமாக வெளியேறியிருந்தான்.