தூரமே தூரமாய் 11
ருது சொல்லிய பணியை முடிக்க முடியாது வெங்கட் அலுவலகம் வந்திருந்தான்.
“யாருன்னு தெரிஞ்சுதா சார்?” ராதிகா வேகமாக அவனருகில் வந்து கேட்டிட, அவனோ இல்லையென உதட்டை சுளித்தான்.
“போச்சு…” என்று மற்றொரு பெண் காவலர் சொல்ல…
“இப்போதான் முடிக்காத கேஸ் முடிக்க சொல்லி டைம் கொடுத்தும் ஏன் முடிக்கலன்னு… அந்த கேஸ் டீல் பண்ணவங்களுக்கெல்லாம் மெமோ கொடுத்தார்” என்றார் கிருஷ்ணன்.
“என்னது மெமோவா?”
ராதிகா ஆமென்று தலையாட்டினாள்.
“அப்போ எனக்கும் மெமோ கொடுத்திடுவாரா?” அவன் அதிர்ந்து கேட்டதில் ராதிகா சத்தமாக சிரித்திட, மற்ற இருவருக்கும் கூட சிரிப்பு வந்தது.
“நான் உன் புருஷன் டி. என்னையே கிண்டல் பண்ணி சிரிக்கிற?” என்று ராதிகாவின் தலையில் வெங்கட் கொட்டிட,
“உறவு முறையெல்லாம் வீட்டில் தான்” என்று சொல்லியிருந்தான் ருது.
‘இவரை கவனிக்கலையே!’ என்று வெங்கட் மெல்ல திரும்பிட, மேசை மீது ஒரு பக்கமாக சரிந்து அமர்ந்து ஒற்றை காலினை ஆட்டிக் கொண்டிருந்தான் ருது.
“வேலை முடிந்ததா எஸ்.ஐ சார்?” ருது கேட்ட தொனியே வெங்கட்டை பயம் காட்டியது.
“அந்த கடைக்காரன் ஃபுட்டேஜ் காட்ட முடியாது சொல்லிட்டான் சார். நான் எவ்வளவோ கேட்டுப்பார்த்துட்டேன். கொடுக்க முடியாது, டெலிட் ஆகிடுச்சு சொல்லிட்டான் சார்” என்றான் பாவம் போல்.
“யோவ்…” ருது மேசையிலிருந்து குதித்திருந்தான்.
அவனின் வேகம் கண்டு, அவனுக்கு சற்று அருகில் நின்றிருந்த ராதிகா பயந்து இரண்டடி பின் நகர்ந்திருக்க, அவளின் வயிறு மேசை முனையில் முட்ட பார்த்திட, சடுதியில் தன் கையை வைத்து தடுத்திருந்தான் ருது.
“சாரி… சாரி ராதிகா.” ருது படபடத்தான்.
“மல்லிகா அக்கா தண்ணி கொண்டு வாங்க” என்றவன், தானே ராதிகாவின் தோளைப்பற்றி இருக்கையில் அமர வைத்து அவள் முன் ஒற்றை கால் குத்திட்டு தரையில் அமர்ந்தான்.
அவனது செயலின் ஆச்சரியத்தில் வெங்கட்க்கு மனைவியை பார்க்க வேண்டுமென்கிற சிந்தையில்லாது அப்படியே நின்றிருந்தான்.
“ஏதும் ஆகலையே! ஓகே தானே ராதிகா?” எனக் கேட்டவனின் கண்கள் அப்படியொரு பயத்தைக் காட்டிக்கொண்டிருந்தது.
“ஒன்னும் ஆகல சார். இடிக்கல. அதுக்குள்ள நீங்க கை வச்சிட்டிங்க” என்று ராதிகா சமாதானமாகக் கூறினாலும், ருதுவின் மனம் சமன்பட மறுத்தது.
“அம் சாரி… சாரி ராதிகா” என்று சொல்லிக்கொண்டே இருந்தான்.
அவனின் கடந்தகால வலி மேலெழும்பி அவனை நிலை குலைய வைத்தது. பேறுகாலம் ஒரு பெண்ணுக்கு மறுஜென்மம் என்பதை அவனைவிட அதிகமாக அறிந்தோர் யாரும் இருக்க முடியாது. அதில் இழந்தது அவன் அதிகமாயிற்றே. ஒரு பெண்ணின் பேறுகாலம் ஒரு குடும்பத்திற்கு மகிழ்வான தருணம். ருதுவிற்கு அதுவே சாபமானது.
மல்லிகா தண்ணீர் கொண்டுவந்து கொடுக்க, தானே வாங்கி ராதிகாவிடம் கொடுத்தான்.
“முதலில் நீங்க குடிங்க சார். நீங்க தான் ரொம்ப பயந்த மாதிரி தெரியுது” என்றாள்.
அவளின் இறுதி வார்த்தையில் சட்டென்று தன் உணர்வுகளை மறைத்தவனாக மிடுக்காய் எழுந்து நின்றான்.
ராதிகா மூன்று மாத கருவை சுமந்து கொண்டிருந்தாள். வயிறு இன்னும் தெரியவே ஆரம்பிக்கவில்லை.
‘எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு சார். பொண்டாட்டி கர்ப்பமா இருக்கா?’ என்று முந்தையநாள் பேச்சு வழக்கில் வெங்கட் சொல்லியிருக்க, தானாக ராதிகாவின் நலன் மீது ருதுவிற்கு அக்கறை வந்திருந்தது. அதனாலே மருத்துவமனையில் வேலையாக இருந்தவளை, போதுமென்று அலுவலகம் வரவைத்து… அவளின் வேலைப்பளுவை வெகுவாக குறைத்தும் இருந்தான்.
ஒரே பணியிடம். காதல் வர, வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டனர்… வெங்கட், ராதிகா. பார்த்துக்கொள்ளக்கூட ஆளில்லாமல் இருப்பதால், ராதிகா விடுப்பு எடுக்காது வேலைக்கு வருகிறாள். வேலையோடு சேர்த்து, வெங்கட் மனைவியையும் பார்த்துக்கொள்வான்.
இதெல்லாம் கிருஷ்ணன் மூலமாக ருது அறிந்துகொண்டது. அதனால் ராதிகாவின் அக்கறையும் ருதுவிடம் அதிகமாகியிருந்தது. வெளிப்படையாகக் காட்டவில்லை என்றாலும், பணி நிமித்தமாக மறைமுகமாக நிறையவே செய்கிறான். புரிந்து கொண்ட ராதிகாவுக்கு ஏனென்று தெரியாவிட்டாலும், இன்றைய ருதுவின் செயலில், தான் கர்ப்பிணியாக இருப்பது தான் காரணமென புரிந்தது.
“நீங்க வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுப்பதென்றாலும் ஓகே” என்றவன், அவள் வேண்டாமென்றதும் வெங்கட்டிடம் திரும்பினான்.
‘போச்சு விட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்கப்போராரு’ என்று அவன் உள்ளே அலற…
“கவனமா பார்த்துக்கோ” என்று அவனிடம் ராதிகாவைக் காட்டிச் சென்றான்.
_________________________
மாலை கல்லூரி வகுப்புகள் முடிந்ததும் ஷிவன்யா இனியனைத்தேடி வந்துவிட்டாள்.
அறைக்கு வெளியில் நின்று கொண்டிருந்த செவிலியிடம்,
“டாக்டர் இருக்காங்களா சிஸ்டர்?” எனக் கேட்டாள்.
“ரவுண்ட்ஸ் போயிருக்காங்க. வந்திடுவார். கன்சல்டிங் பார்க்கணுமா?” என பதில் சொல்லி மறுகேள்வி கேட்ட செவிலி, “அவங்க சைல்ட் ஸ்பெஷலிஸ்ட்’ம்மா” என்றார்.
“நான் பேஷண்ட் இல்லை சிஸ்டர்” என்று வேகமாக மறுத்த ஷிவன்யா, “நான் மெடிக்கல் ஸ்டூடண்ஸ். அட்டஸ்ட் சைன் விஷயமா டாக்டர் பார்க்கணும்” என்றாள்.
“ஹோ… சாரிம்மா. நீங்க இங்க உட்காருங்க. கொஞ்ச நேரத்தில் டாக்டர் வந்திடுவாங்க” என்று அவள் அமர இருக்கையை காட்டிவிட்டு அப்பெண் நகர்ந்த சில நிமிடங்களில் சொன்னது போலவே இனியன் வந்து சேர்ந்தான்.
சில அடிகளுக்கு முன்பாகவே இனியன் அவளை கண்டுவிட்டான்.
ஏனோ அவனுக்கு அவளின் முகத்தை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது.
மனதில் இருக்கும் வருத்தங்கள் யாவும் அவளின் முகம் காணும் தருணம் எங்கோ ஓடிப்போவதைப்போல் உணர்ந்தான். இதயத்தில் மெல்லிய இதத்தை அறிந்தான்.
‘யூ ஆர் ட்ரைவிங் மீ.’ தனக்குள் சொல்லிக்கொண்டான்.
அருகில் வந்ததும் ஷிவன்யா சிறு புன்னகையோடு எழுந்து நிற்க… அவளைக் காணாததைப்போல் உள்ளே சென்றுவிட்டான்.
“இவங்க நம்மளை பார்த்தாங்களா? இல்லையா?” வாய்விட்டு முனகியவளாக அவள் நின்றிருக்க,
“டாக்டர் வந்துட்டாங்க. நீங்க பார்க்கலையா?” என்ற செவிலி, “நீங்க போங்க… இல்லைன்னா டாக்டர் கிளம்பிடுவாங்க” என்றார்.
அவருக்கு சிறு தலையசைப்பைக் கொடுத்தவள், கதவினை தட்டிவிட்டு உள்ளே நுழைய, அவளை எதிர்பார்த்தது போல, தனக்கு முன்னிருக்கும் இருக்கையைக் காட்டினான்.
“தேன்க் யூ டாக்டர்” என்று அமர்ந்தவள் முன்பு, அவளது கோப்பினை எடுத்து வைத்தவன்,
“குட்… நல்லாவே ரிசர்ச் பண்ணியிருக்கீங்க” என்று மற்றொரு கோப்பினை எடுத்து நீட்டினான்.
“பேஷண்ட் ஸ்பெசிமன் டிடெயில் கேட்டிங்களே! இது டாக்டர்ஸ் ரெஃபரன்ஸ்க்காக எடுத்து வைப்பது. பாயிண்ட் நோட் பண்ணிட்டு கொடுங்க. பட் வெளியில் கொடுக்க முடியாது” என்று அழுத்தமாகக் கூறினான்.
‘அப்புறம் எப்படி நோட்ஸ் எடுப்பது?’ என்று அவள் திருதிருக்க…
“இப்போவே, இங்கவே எழுதிட்டு கொடுங்க. நானும் இன்னும் சைன் பண்ணல. இதை முடித்தால் தானே சைன் பண்ண முடியும்” என்றான்.
ஷிவன்யாவின் முகம் சடுதியில் ஒளி கூடியது.
“தேன்க்ஸ் டாக்டர்” என்று பளிச்சென அவள் மொழிய, அம்முகம் இனியனின் அகம் சேர்ந்தது.
“உங்களுக்கு கன்சல்டிங் இல்லையா?”
“என் ட்யூட்டி டைம் மதியம் ரெண்டு மணிக்கு முடிஞ்சிடுச்சு. உங்க ப்ரொஜெக்ட்’க்காகத்தான் இருக்கேன்” என்றான்.
‘எனக்காகவா?’ ஷிவன்யாவுக்கு உள்ளுக்குள் குளிரடித்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
“சீக்கிரம் முடிச்சிட்டிங்கன்னா நான் கிளம்புவேன்” என்று இனியன் சொல்ல, அவள் வேகமாக குறிப்பெடுக்கத் துவங்கினாள்.
இடையிடேயே அவனிடம் புரியாதவற்றிற்கு விளக்கங்கள் கேட்டிட, அவனும் எளிமையாக புரிய வைத்திட்டான்.
குறிப்புகள் எடுத்து முடிய, அதனை அவள் எழுத ஆரம்பித்தாள்.
அவனது அறை. அவனது மேசை. அவனது பொருட்கள். உரிமையாக கையாள்கிறாள். தன்னவள். இப்படித்தான் அந்நொடி அவனது எண்ணம் இருந்தது.
ஷிவன்யா சிரத்தையாக எழுதிக் கொண்டிருக்க… இனியன் அவளை இமை வெட்டாது பார்த்திருந்தான். ரசித்திருந்தான் என்று சொல்ல வேண்டுமோ?
நான்கு வருடங்களுக்கு முன்பு, நண்பன் மற்றும் தங்கையின் காதலை உடனிருந்து பார்த்தவனுக்கு, தானும் காதலித்து திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்ற ஆசை இருந்தது. பின்னர், அதன் பின்னான நிகழ்வுகளில்… தங்கையின் காதல் வலியை உடனிருந்து பார்த்தவனுக்கு, தற்போது இந்த காதலே வேண்டாமென்கிற மனநிலை தான். ஆனால் அந்த எண்ணத்தையே ஷிவன்யா அழித்திருந்தாள்.
ஷிவன்யாவின் அலைபேசி இசைக்க, இனியன் பார்வையை மாற்றிக் கொண்டான்.
தியாவாக இருக்குமென்று அவள் எடுக்காது விடுக்க… மீண்டும் ஒலித்தது.
“எடுத்து பேசுங்க.” இனியன் சொல்லியதும், தன்னால் அவனுக்கும் நேரமாகிறதேயென எழுதியவாறே, மற்றொரு கையால் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த அலைபேசியை எடுத்து மேசையில் வைத்தவள், எழுதிக்கொண்டே யாரென்று பாராமலே அழைப்பை ஏற்று தானாக ஸ்பீக்கரை அழுத்தியதோடு…
“கேட்ச் யூ லேட்டர் பேபி” என்று சொல்லியிருந்தாள்.
அவள் பேபி என்றதில் இனியனின் விழிகள் தானாக விரிய, அன்று முதல் நாள் அவள் தியாவை பேபி என்று சொல்லியது நினைவில் வர, இயல்பாகினான். அடுத்த நொடியே கேட்ட குரலில் இறுகிப்போனான்.
“ஃபோன் வந்தா யாரென்னன்னு பார்த்து பேசுறதில்லையா ஷிவா?”
அழுத்தமாக ஒலித்தது இனியனின் நண்பனின் குரல்.
‘ருது.’ இனியனின் மனம் மட்டுமே உச்சரித்தது. முகம் பாறையென இறுகியது.
“ஹேய் டார்லிங்.” அழைத்தது ருது என்றதும் உற்சாகத்தில் இனியன் இருப்பதை மறந்து அவள் கூவிட, இனியனின் ஒற்றை புருவம் உச்சம் தொட்டது.
“சாரி… சாரி டாக்டர்” என்றவள், “அப்புறம் பேசுறேன்” என்று அலைபேசியிடம் குனிந்து மெல்லொலியில் மொழிந்து பட்டென்று துண்டித்திருந்தாள்.
இனியனுக்கு தவறான எண்ணம் இல்லை. ஆனாலும் ருதுவிற்கு தனக்கு தெரியாமல் இந்தப்பெண் என்ன உறவு என்று தெரிந்துகொள்ளும் வேகமிருந்தது.
ஷிவன்யா வைத்த கணம் மீண்டும் ருது அழைத்தான்.
ருது முக்கிய விஷயமென்றால் ஒழிய அழைத்திடமாட்டானென்று இனியனை சுருங்கிய கண்களோடு பார்த்தவாறே அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.
இனியன் தன்னையே பார்த்திருப்பதாலோ என்னவோ, எப்போதும் விளிக்கும் டார்லிங்கை தவிர்த்தாள்.
“நான் ப்ரொஜெக்ட் சம்மந்தமா” என்று அவள் தொடங்கியதும்,
“கிளாஸ் ஓவராகியிருக்கணுமே, இன்னும் என்ன பிஸி?” என்று இடையிட்டிருந்தான் ருது.
“அதைத்தான் சொல்ல வரேன்…”
“ஹாஸ்டல் வெக்கேட் பண்ணனும் நினைவிருக்கா? நீயே கால் பண்ணுவ நினைத்தேன். உன் ஹாஸ்டல் பில்டிங் முன்னாடிதான் நிக்கிறேன்” என்றான்.
அவளுக்கு அந்த நினைவே இல்லை. நெற்றியில் தட்டிக்கொண்டாள்.
“அச்சோ அண்ணா” என்று தலையில் கொட்டிக்கொண்டவள், “ஹாஸ்டல் வெக்கேட் பண்ண உங்களை வர சொன்னதை மறந்தே போயிட்டேன். ஒரு டென் மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க வந்திடுறேன்” என்றாள்.
அவளது வார்த்தைகளைக் கூர்மையாக உள்வாங்கிக்கொண்டிருந்த இனியனுக்கு அவளது அண்ணா என்கிற விளிப்பு முகத்தை யோசனையாக சுருங்கவே வைத்தது.
ருதுவிற்கு அக்கா மட்டும் தான்.
‘யாரிந்த புது தங்கை. அதுவும் தனக்குத் தெரியாமல்? இத்தனை நெருக்கமாக’ என நினைத்தான்.
‘உனக்குத் தெரியாமல் ருதுவிடம் நிறைய இருக்கே!’ உடனடியாகக் கூறியது அவனது மனம்.
இனியனிடம் பெருமூச்சு.
அதற்குள் ஷிவன்யா பேசி முடித்திருந்தாள்.
“ஏன் ஹாஸ்டல் வெக்கேட் பண்றீங்க?” அவளது பேச்சில் கவனித்ததுபோல் வினவினான்.
“இப்போ என் ஃபேமிலி இங்கவே வந்துட்டாங்க சார். இனி ஹாஸ்டல் தேவையில்லை. வீட்டிலிருந்து ஜாலியா வருவேன்” என்று அவள் சொல்லியதிலே குடும்பத்துடன் இருக்க அவள் எத்தனை ஏங்கியிருக்கிறாள் என்பதை புரிந்துகொண்டான்.
“வீடெங்கே… டிராவல் டைம் அதிகம் அப்படின்னா… சிட்டி ட்ராஃபிக்கில் கஷ்டம்” என்றான். அவனுக்கு ருதுவைப்பற்றி ஏதும் தெரிந்துகொள்ள வேண்டும். எப்படி நேரடியாகக் கேட்பதென சுற்றி வளைத்தான்.
இதற்கிடையில் ஷிவன்யா எழுதி முடித்து அவனிடம் கையெழுத்திற்காக கோப்பினை நீட்டியிருந்தாள்.
“போலீஸ் குவார்ட்டர்ஸ் டாக்டர். இங்கிருந்து பக்கம் தானே!” என்றிருந்தாள்.
“ஹோ… உங்க அப்பா போலீஸா?” பேனாவை திறந்து கொண்டே, காகிதத்தில் விழிகள் பதித்து ஆச்சரியம் போல் வினவினான்.
“அப்பா, அண்ணா ரெண்டு பேரும்” என்றாள் பெருமையாக.
“எந்த பிரான்ச்?”
“அப்பா செக்ரட்டரிரைட் ஸ்குவார்ட் ஹெட். முன்னாடி பீகாரில் டிஜிபி. அண்ணாக்கு இங்க டிரான்ஸ்பர். அம்மா அண்ணா, தேஷ் விட்டு இருக்க முடியாது சொல்லவும் அப்பாவும் வேலையை மாத்திக்கிட்டாங்க.” இனியனின் மீது கொண்ட நேசத்தால், எதையும் ஆராயாது குடும்ப சூழலை விவரித்திருந்தாள்.
ஷிவன்யா சொல்ல சொல்ல இனியனின் குழப்பம் தான் அதிகரித்தது.
ருதுவின் அப்பா பிஸ்னெஸ் மேன். இவள் என்னவென்றால் போலீஸ் சொல்கிறாள். முதலில் அவனுக்கு அக்கா தான். இவள் சொல்வதை பார்த்தால் அக்கா இருக்கிறாள் என்பதே அவனுக்கு சந்தேகமாக இருந்தது.
‘உன்னை சுற்றி என்னதான்டா வலை பின்னி வச்சிருக்க.’ மனதோடு புலம்பினான் இனியன்.
குழப்பத்தோடே கையெழுத்திட்டு அவளிடம் கொடுத்தான்.
“தேன்க்ஸ் டாக்டர்” என்று எழுந்தவள், சாக்லேட் ஒன்றினை அவன் முன்பு நீட்டினாள்.
“சைன் பண்ணதுக்கு லஞ்சமா?” அவன் முறைத்துக் கொண்டு கேட்டிட,
“அச்சோ இல்லை” என்று பதறினாள்.
“நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணதுக்கு… ஜஸ்ட் டோக்கன் ஆப் தேன்க்ஸ்” என்றாள்.
“ஹான்…” என்றவனும் புன்னகையோடு வாங்கிக்கொண்டான்.
முதல்முறை அவன் முகத்தில் அவள் கண்டு தோன்றிய சிரிப்பில் மொத்தமாக தன்னை தொலைத்து விழி விரித்தாள்.
ஷிவன்யா ருதுவிற்கு என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் அவள் தன் நண்பனுக்கு மிகவும் நெருங்கிய உறவு என்பது மட்டும் புரிய, அவளிடம் தன் இயல்பை காட்டியிருந்தான்.
“சூப்பரா இருக்கீங்க டாக்டர்” என்று தன்னை மறந்து கூறியவள்,
“ஆஹான்” என்று அவன் சொல்லியதில் வேகமாக வெளியேயிருந்தாள்.
இனியனின் இதழ் அகம் நிறைந்த சிரிப்பை உதிர்த்தது. பல நாட்களுக்குப் பின்னர் ஒருவித துள்ளல் மனநிலை அவனிடம்.
உற்சாகமாகவே வீட்டிற்கு செல்ல கிளம்பி வெளியில் வந்தான்.
ருதுவை பார்க்க வேண்டும் போலிருந்தது. முதல் நாள் அவனை கண்டபோது இருந்த கோபம் இப்போது இனியனிடம் இல்லை. அவன் மொத்தமாகவே தன் அடையாளத்தை மாற்றியிருக்கிறான். குடும்ப சூழல் உட்பட. பெயர் மட்டுமே அவனுடையாதாக உள்ளது. இதற்கு பின்னால் வலுவான காரணங்கள் இருக்குமென்ற நம்பிக்கை ஷிவன்யாவின் பேச்சின் மூலம் உண்டாக, அவனது கோபமும் விலகியிருந்தது.
இருப்பினும் தங்கை என்று வரும்போது அண்ணனாக மட்டுமே நடந்துகொள்ள வேண்டுமென முடிவெடுத்திருந்தான்.
இனியன் மருத்துவமனை வளாகம் விட்டு வெளியில் வர, ஷிவன்யா கேபில் ஏறிக்கொண்டிருந்தாள். ருது காக்கி உடையில் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் அமர்ந்தபடி அவளுக்கு தலையசைத்துக் கொண்டிருந்தான்.
இனியன் பார்வையால் நண்பனை தழுவிட, ருதுவின் நெஞ்சோரம் கூவல். ஏதோ உந்துதல். ருது திரும்பிப் பார்த்திட, இனியன் வேகமாக வண்டியின் பக்க கண்ணாடியை மேலேற்றியிருந்தான்.
பார்வையால் வட்டம் போட்டுவிட்டு ஷிவன்யா செல்லும் வாகனத்தை பின் தொடர்ந்து ருது செல்ல… இனியனும் வண்டியை வீடு நோக்கி செலுத்தியிருந்தான்.