தூரமே தூரமாய் 12

தூரமே தூரமாய் 12

“என்னவாம்… டாக்டர் முகம் ஜொலிக்குது.”

மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்த இனியன் தனதறைக்குள் கூட செல்லாது கூடத்து இருக்கையில் இலகுவாக அமர்ந்துவிட்டான்.

முகத்தில் அழகான புன்னகை.

அவன் முன்னிருக்கையில் பள்ளி முடிந்து வந்த இமையாள் சம்மணமிட்டு அமர்ந்தவாறு வினவினாள்.

“ஐ தின்க்… அம் இன் லவ் டா!”

அவனுக்கு தங்கையிடம் மறைக்கவேண்டிய அவசியவில்லை.

“ஆஹான்… பாருடா…! எப்போலேர்ந்து” என்று இமையாளும் உற்சாகம் காட்டினாள்.

“ஆமாம் அதென்ன நினைக்கிறீங்க. கன்ஃபார்ம் பண்ணலையா?” என்று வினவினாள்.

“பார்த்ததும் பிடிச்சுது. மனசுல ஏதோ ஒரு நெருக்கம் தானா வந்து ஒட்டிகிட்ட மாதிரி இருக்குடா. பார்த்து டென் டேஸ் தான் ஆகும். அதுக்குள்ள… தெரியலடாம்மா… டிசைட் பண்ண முடியல” என்று எழுந்து நின்றவன், ஒரு கையை இடையில் குற்றி மற்றைய கையால் நெற்றியை நீவியபடி, “அவள் பக்கமிருக்கும் போது ரிலாக்ஸ்டா… ம்ப்ச், எப்படி சொல்ல? மனசு எதையும் நினைக்காம லேசா இருக்க மாதிரி இருக்கு” என்றான்.

இமையாள் இனியனின் முகத்தில் புதிதாய் தெரிந்த ஒன்றைத்தான் அவதானித்துக் கொண்டிருந்தாள்.

“அப்போ இது லவ் தான்டா” என்றார் தீபா.

வீட்டில் அவர் இருக்கிறார் என்பதையே மறந்து இருவரும் பேசியிருந்தனர். பிள்ளைகள் வந்துவிட்டது அறிந்து அறைக்குள்ளிருந்து வெளியில் வந்த தீபா மகனின் பேச்சினை கேட்டுவிட்டார்.

“போச்சுடா…” இருவரும் ஒரு சேர முனகியது தீபாவிற்கு தெளிவாகவே கேட்டது.

“எனக்கு தெரியக்கூடாதுன்னு ரகசியம் பேசுனீங்களா?” எனக் கேட்டுக்கொண்டே இமையாளின் அருகில் அமர்ந்தார்.

“அப்படியில்லைம்மா” என்று இனியனும் தன்னிடத்தில் அமர,

“பொண்ணு டீடெயில் சொல்லுடா?” என்றார்.

“எதுக்கு?” ஆராய்வாக இழுத்தான்.

“எதுக்கா?” என்ற தீபா, “நம்ம வீடு வீடு மாதிரியா இருக்கு. எப்பவும் எதையோ பறிகொடுத்த மாதிரி ஆளுக்கு ஒரு மூலையில் பேருக்கு நடமாடிட்டு இருக்கோம். உன் தங்கச்சி தான் கல்யாணப் பேச்சுக்கு பெரிய ஆப்பு வச்சிட்டாள். உனக்காவது பண்ணலாம் பார்த்தால்… நீயும் பிடி கொடுக்கல. இப்போதான் உனக்கே ஒரு பொண்ணை பிடிச்சிருக்கே! நீ திரும்ப உன் தங்கச்சியை நினைத்து வருந்தி மனசு மாறுறதுக்குள்ள சட்டுப்புட்டுன்னு விசாரிச்சு கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்வோம். அப்போவாவது வீடு பழைய கலகலப்புக்கு வருதா பார்ப்போம்” என்று நீண்டு பேசியவர், இறுதியில் ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டார்.

இனியன் அமைதியாக இருக்க…

“ஹ்ம்… பிள்ளைங்களுக்கு காலாகாலத்துல கல்யாணம் செய்து பார்க்கவும் பெத்தவங்களுக்கு ஒரு கொடுப்பினை வேண்டும்” என்றார்.

தீபா கலகலப்பாகக் காட்டிக்கொண்டாலும் பிள்ளைகளை நினைத்து உள்ளுக்குள் வருந்துவது அவரின் பேச்சில் தெரிந்தது.

“ம்மா…” என்று இனியன் சலிப்பைக் காட்டினான்.

“இன்னும் எனக்கே சரிவர விளங்கலம்மா.”

“புரியாமதான் இவ்ளோ சொன்னியாண்ணா?” எனக் கேட்ட இமையாள், “நீயாவது அவங்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கலாமே!” என்றாள்.

“நீயும் புரியாம பேசாத இமயா! அவள் இப்போ தான் தேர்ட் இயர் மெடிக்கல் முடிக்கப்போறாள். படிச்சிக்கிட்டு இருக்க பொண்ணை போயி… ம்ப்ச், சின்னு பொண்ணு மீது எப்படி இதுன்னு எனக்கு மண்டை வெடிக்குது” என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட்டான்.

கிட்டத்தட்ட இருவரிடமும் அதற்கு மேல் பேசி சமாளிக்க முடியாதென ஓடி மறைந்தான்.

“இவன் என்ன இப்படி சொல்லிட்டுப்போறான். இப்போ அந்தப்பொண்ணை லவ் பண்றன்னு சொல்றானா? இல்லைன்னு சொல்றானா?” தீபா குழம்பி புலம்பினார்.

“அண்ணாக்கு அவங்களை ரொம்ப பிடிச்சிருக்கும்மா. படிக்கிற பொண்ணுன்னு வெயிட் பண்ண நினைக்கிறாங்க” என்றாள் இமையாள். அண்ணனின் மனம் அறிந்தவளாக.

“நீயும் வெயிட் பண்ணு… அவனும் வெயிட் பண்ணட்டும். நாங்களும் நீங்க ரெண்டு பேரும் எப்போ ஓகே சொல்லுவீங்கன்னு வெயிட் பண்றோம்” என்று எழுந்த தீபா, “இன்னைக்கு அந்த ரைட்டர் எபி போட்டாங்களா தெரியல. வீட்டுல நடக்குற குழப்பம் போதாதுன்னு அந்த ரைட்டரு வேற, புரியாத அறிவியலை எழுதி என் மண்டையை காய விடுது. இருந்தாலும் இண்ட்ரெஸ்டிங்கா இருக்கு. நான் புண் பட்ட என் மனசை கதை படித்து ஆத்தப்போறேன். நீ போய் டீ ஆத்தி கொண்டா” என்று அறைக்குள் நுழைந்து கொண்டார்.

தீபாவின் இத்தகைய பேச்சால் மட்டுமே அவ்வீடு கொஞ்சமேனும் உயிர்ப்போடு இருக்கிறது.

இமையாளுக்கு அன்னையின் இந்தப்பேச்சு கீற்று போல் புன்னகையைத் தோற்றுவித்தது.

தீபாவிற்கு தேநீர் கலந்து கொடுத்தவள், இனியனைத் தேடி அவனது அறைக்குச் சென்றாள்.

“அண்ணா…”

முகத்தை தூவாளையால் துடைத்தபடி குளியலறைக்குள்ளிருந்து வந்தவன், “வாடா” என்று அழைத்திருந்தான்.

“என்ன கேட்கணும்?” மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு உன்னை நான் அறிவேன் எனும் தோரணையில் அவன் கேட்டதில் கேட்க வந்ததை மறந்து திருதிருத்தாள் இமையாள்.

“என்னவாம் இமயாக்கு? அண்ணாகிட்ட கேட்கவே யோசிக்கிறாங்க?” என்றவன், அவளை மெத்தையில் அமர்த்தி தானும் அமர்ந்து, கைகளை தன் கை பிடிக்குள் வைத்தவனாக,

“டூ டைம்ஸ் நேரில் பார்த்தேன். வந்த அன்னைக்கு. அப்புறம் இப்போ… வீட்டுக்கு வரும் முன்னால். நான் பார்த்தது அவனுக்குத் தெரியாது. நேரில் ரொம்பவே நல்லாயிருக்கான். தகவல் போதுமா?” என இறுதியில் ஆதுரமாக வினவினான்.

“பேசணும் தோணலையா உங்களுக்கு?”

“இல்லையே!”

“ஏன்? எனக்காகவா?”

“இருக்கலாம்.” தோள்களை உயர்த்தி இறக்கினான்.

“என்னை வச்சு பார்க்காதண்ணா. உன் ஃபிரண்டா மட்டும் பாரு” என்றாள்.

“அவன் என்னை ஃபிரண்டா பார்க்கலையே! பார்த்திருந்தால் இங்கு வந்ததும் என்னத்தேடி வந்திருப்பான். அவனும் உன்னை வைத்து தானே என்னை பார்க்கிறான்” என்ற இனியனின் கேள்வியில் நியாயம் இருப்பதாகவே இமையாளுக்குத் தென்றியது.

“உனக்கு அவனை பார்க்கணுமா?”

இனியன் இப்படி கேட்பானென்று அவள் எதிர்பார்க்கவில்லை. பட்டென்று விழியுயர்த்தி இனியனின் முகம் கண்டாள்.

“என்ன சொல்லணும்?”

“உண்மையை!”

“தோணாமல் இல்லை. ஆனால் அவங்க சொன்னது உண்மையா இருக்கும் பட்சத்தில்… என்னால் ஏத்துக்க முடியுமா தெரியல” என்றாள். வற்றிவிட்ட குரலில்.

“அப்போ அடுத்து என்னன்னு சீக்கிரம் முடிவு பண்ணு. உன்னோட உணர்வுக்கு மதிப்பு கொடுத்து தள்ளியிருந்தால் என் தங்கையின் வாழ்வு வீணாகிடும் போல” என்றான்.

“அண்ணா…” அவளிடம் இனியனின் பேச்சில் மெல்லிய அதிர்வு உண்டானது.

“கடைசி வரை தனியா இருக்கலாம் நினைப்பா. அப்படியிருந்தால் இந்த நொடியே அழிச்சிடு. உன் வாழ்க்கைன்னு வரும்போது நானும் எல்லா அண்ணன்களை போலத்தான் இருப்பேன்” என்று அழுத்தமாகக் கூறியவன், “நீ குட்டியா இருக்கும்போது உன்னை என் மடியிலே தான் வச்சிருப்பேன். அப்போ நீ நல்லா கொழுகொழுன்னு வெயிட்டா இருப்ப. தூக்கவே முடியாதுன்னாலும் அடமா என் மடியிலே வச்சுக்கிட்டு சுத்துவேன். நானே அப்போ குட்டி, ஆனால் நீ என்னை பெரியவனா ஃபீல் பண்ண வைச்ச. சொல்லப்போனால் அப்போவே உன்னை என் பேபியா பார்த்திருக்கேன். இப்போ என் உயிராதான் தெரியுற. உன்னை நான் இப்படியே விட்டுடுவன்னு எப்படி நினைச்ச நீ?” எனக் கேட்டான்.

“அண்ணா…”

“காலம் எல்லாத்தையும் மாற்றும். நம்புவோம்” என்று தங்கையின் உச்சியில் உள்ளங்கை வைத்து அழுத்தினான்.

இமையாளுக்கு ஒன்று மட்டும் புரிந்தது. தன்னை கொண்டு தான் தன் வீட்டின் சந்தோஷமென்று.

“அப்போ உங்க விருப்பத்தையும் எனக்காகத்தான் தள்ளி வைக்க நினைக்கிறீங்களா?”

“அம்மாகிட்ட என்ன பதில் சொன்ன? என் மனசு புரிந்து தானே சொன்ன. அப்புறம் ஏன் இந்தகேள்வி?” என்ற இனியன், “அவள் படிக்கட்டும். ரொம்ப ஆசைப்பட்டு படிக்கிறாள் போல. என்னால் அது வீணாக வேண்டாம். அவள் எனக்குத்தான் அப்படின்னா நிச்சயம் என் கைக்கு வருவாள்” என்றவனிடம் அடுத்து என்ன பேசுவதென்று அவளுக்குத் தெரியவில்லை.

இமையாளால் இனியன் சொல்வதைப்போல் ருதுவை மறந்து வேறொரு வாழ்வென்பதெல்லாம் நினைத்துக்கூட பார்த்திட முடியாத ஒன்று. எப்படியாவது இனியனை திருமண பந்தத்தில் நுழைத்திட வேண்டுமென எண்ணி, அவனாக ஒரு பெண்ணை விரும்புவதாக சொல்லவும், அதைப்பற்றி பேசி ஒப்புக்கொள்ள வைத்திட நினைத்துவர, உன்னைத்தாண்டி எதுவும் பெரிதல்ல என்பதை எத்தனை அழகாய் வார்த்தைகளால் அவளுக்கு உணர்த்திவிட்டான்.

தன் வாழ்வு நேர்பெற, அவன் வாழ்வை வீண் செய்யவும் தயங்கிட மாட்டானென்று அவளுக்கு புரிந்தது.

‘எனக்கு என்ன பண்ணனும் தெரியலையே ருது.’ மனதோடு துவண்டு கதறினாள்.

துளிரும் கண்ணீரை மறைக்க அங்கிருந்து சென்றுவிட்டாள்.

‘உன்னை மாற்ற எனக்கு வழி கிடைச்சிடுச்சு.’ இனியனின் கண்களில் சிறு ஒளி.

________________________________

வெகுநாட்களுக்குப் பின்னர் ஷிவன்யா தன் குடும்பத்தை நேரில் காண்கிறாள். மனதால் மகிழ்வில் திளைத்திருந்தாள்.

வேங்கடம் ஆள் இல்லாததால் அன்னையிடம் மட்டும் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தாள். தேஷ் அத்தையென்று அவளையே சுற்றி வர இருவரும் வீட்டிற்குள் ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்தனர்.

ருது ஷிவன்யாவை அழைத்து வரும்போதே மாலை ஆறு மணி ஆகியிருந்தது. அதனால் ஏதும் அவசரமென்றால் அலுவலகம் சென்றுகொள்ளலாமென வீட்டிலே இருந்துகொண்டான்.

“விளையாடியது போதும். உன் ரூம் அரேன்ஞ் பண்ணு ஷிவா. காலையில் காலேஜ் கிளம்பும் போது எல்லாம் தேடி அம்மாவை அலைக்கழிப்ப” என்ற ருதுவின் அதட்டலில் ஓட்டம் நின்று அமைதியாக அறைக்குள் நுழைந்தாள் ஷிவன்யா.

“ரொம்பத்தான் நல்லபிள்ளை” என்று சிரித்த அம்பிகா, “நீ வாடா… உனக்கு சாப்பாடு ஊட்டுறேன்” என்று தேஷ்ஷை தூக்கிக்கொண்டு நகர்ந்தார்.

ருது ஷிவன்யாவிற்கு உதவ சென்றான்.

“நீங்க வருவீங்க தெரியும். இந்தாங்க…” என்று இரண்டு மூன்று அட்டை பெட்டிகளை அவன் முன் நகர்த்தியவள், “என்னோட புக்ஸ் எல்லாம் அடுக்கிக் கொடுத்திடுங்க போதும்” என்றாள்.

“அப்போ நீ?” எனக் கேட்டாலும் அவளது புத்தகங்களை அடுக்க ஆரம்பித்திருந்தான்.

“ட்ரெஸ்லாம் இருக்குல டார்லிங்” என்றவள் இரண்டு பெரிய பெட்டிகளிலிருந்த துணிகளை வாரிசுருட்டி அள்ளி அப்படியே வார்ட்ரோப்பில் திணித்து முடினாள்.

“அவ்வளவு தான் முடிஞ்சுப்போச்சு” என்று மலையை பெயர்த்து வைத்தவள் போல் கைகளை தூசி தட்டுவதுப்போல் தட்டினாள்.

அவளை முறைத்து பார்த்த ருது…

“இதுதான் அடுக்கி வைக்கும் லட்சணமா? ஒழுங்கா எடுத்து மடித்து வை” என்று அவளின் காதினை திருகி விடுத்தான்.

“வீட்டிலும் விறைப்பாவே இருக்கணும் அவசியமில்லை டார்லிங்” என்றவள் முகத்தை சுருக்கியபடி ஒழுங்குமுறையில் உடைகளை அடுக்கத் துவங்கினாள்.

கல்லூரி நடவடிக்கைகளை ருதுவிடம் பகிர்ந்துகொண்டபடி வாய் ஓயாது ஏதேதோ பேசிக்கொண்டே இருந்தாள்.

“எக்ஸாம் எப்போ?”

“நெக்ஸ்ட் மன்த்” என்றவள் அப்போது தான் நினைவு வந்தவளாக, “அந்த புளூ ஃபைல் மட்டும் என் பேக் மேலே வச்சிடுங்க. நாளைக்கு சப்மிட் பண்ணனும். இந்த செம் மார்க் முழுக்க அதில் தான் இருக்கு” என்று ருதுவிற்கு அருகில் கிடந்த… இன்று இனியனிடம் கையெழுத்து வாங்கிய கோப்பினைச் சுட்டிக் கூறியிருந்தாள்.

ருது தனக்காக காத்திருக்கிறான் என்பதாலே ஒட்டு மொத்தமாக அனைத்தையும் அள்ளிப்போட்டுக் கொண்டு விடுதியிலிருந்து கிளம்பியிருந்தாள். அதனால் அக்கோப்பு பல புத்தகங்களுக்கு நடுவில் மாட்டிக்கொண்டிருந்தது.

“இன்னைக்குதான் முழுசா அந்த ப்ரொஜெக்ட் வொர்க் முடிந்தது. சைன் போட யோசிச்ச டாக்டர்… மனசு வந்து நல்லா பண்ணியிருக்கீங்க சொன்னாரு” என்று அவள் சொல்லும்போது உதட்டில் புன்னகை. விழிகளும் மலர்ந்ததோ எனத் தோன்றியது ருதுவிற்கு.

காதலில் திளைத்து நீந்தியவனுக்கு அதற்கான ஆரம்பப்புள்ளிகள் தெரியாதா என்ன?

“டாக்டர் உனக்கு கிளாஸ் எடுக்கிறாரா?”

அவள் சொல்லிய கோப்பினை திறந்து பார்த்தவனாகக் கேட்டான்.

“ம்ம்ம் ஒருமுறை சப்ஸ்ட்டிட்யூட் கிளாஸ் எடுக்க வந்தார்” என்றவள், “அங்கே தான் பிராக்டிஸ் பண்றார். எங்க டீன், அவரோட பேட்ச் பெஸ்ட் ஸ்டூடண்ட் அவங்கதான்னு அதுக்கடுத்த கிளாஸ் வந்தப்போ சொன்னாங்க” என்றாள்.

ஷிவன்யா சொல்வதை கேட்டுக்கொண்டே அந்த கோப்பின் இறுதி பக்கத்தில் இருந்த இனியனின் பெயரை பார்த்த ருதுவினுள் நடுக்கம். இதயத்தில் அதிர்வு. நண்பனின் பெயருக்கே இத்தனை உணர்வு வெளிப்பாடா?

இனியனின் கிறுக்கிய கையெழுத்துக்கு கீழே ஆங்கில எழுத்துக்களில் அவனது பெயர் தட்டச்சு செய்யப்பட்டிருந்தது.

அவர்களின் பிரிவின் போது இனியன் முதுகலை கடைசி வருடம். அவன் மருத்துவத்தில் எந்த துறையில் சிறந்து விளங்க வேண்டுமென மேற்படிப்பு படித்தானென்று ருதுவிற்கு நன்கு தெரியும். அதுவும் ஷிவன்யாவின் முந்தையப் பேச்சில் படித்ததும் இதே கல்லூரி என்று யூகிக்க… இது தன்னுடைய இனியனாகத்தான் இருக்க முடியுமென உள்ளே கூக்குரல் ஒலித்து அடங்கியது.

“இனியன்.” பெயரினை மெல்ல வருடியவனாக வாய்விட்டுக் கூறினான்.

“அதான் அவங்க நேம்” என்றிருந்தாள் ஷிவன்யா.

“அப்போ நான் உன்னை பிக்கப் பண்ண வந்தப்போ அவங்களோடதான் இருந்தியா?” எனக் கேட்டான். அவனது குரலே கரகரத்து வந்தது.

“ம்ம்ம்…” என்றவள், “உங்களுக்கு அவங்களைத் தெரியுமா?” எனக் கேட்டாள்.

“மே பீ” என்றவன் வெளியேறியிருந்தான்.

‘அப்போ இருமுறை அங்கு சென்றபோதும் யாரோ தன்னை பார்க்கும் உணர்வைக் கொடுத்தது இனியனோட பார்வை தானா?’ எனக் கேட்டுக்கொண்டவனுக்கு ஆமென்று பதில் வழங்கியது அவனின் மனம்.

‘என் முன்னால் வரணும் தோணலையா?’

‘எப்படி வருவான்?’

கேள்விக்கு கேள்வியே அவனுள் எழுந்தது.

சில நாட்களாக இனியனிடமிருந்து மின்னஞ்சலும் வராமலிருக்க…

‘என்னை வெறுத்துட்டியாடா?’ என்று மனதோடு பேரிரைச்சலில் கத்தினான்.

error: Content is protected !!
Scroll to Top