தூரமே தூரமாய் 13

தூரமே தூரமாய் 13

ருதுவிற்கு பிரிவை உண்டாக்கி செல்ல வலுவான காரணம் இருந்தாலும், இமையாளை முற்றும் முழுதாய் மறந்திட முடியவில்லை.

மாட்டியிருக்கும் சிக்கலில் அவனது வாழ்வின் போக்கு எப்படி வேண்டுமானாலும் மாறும் அபாயம் உள்ளது. அதில் அவளையும் அலைக்கழிக்க அவனுக்கு விருப்பமில்லை. தன்னை நேசித்த ஒரு காரணத்திற்காக அவளும் தன் முட்பாதையில் வதைப்பட வேண்டாமென நினைத்தான். தன் பாதை தான் இப்படியாகிவிட்டது. அவளாவது நன்றாக இருக்க வேண்டுமென எண்ணியவனுக்கு அவளின் நலன் தன்னிடம் உள்ளது என்பது ஏனோ மறந்து போனது.

“எனக்கு திருமணம் ஆகிவிட்டது.” ருது சொல்லியது உண்மையோ? பொய்யோ? ஆனால் அவ்வாறு சொல்லி ஒரு உயிரை துடிக்கவிட்டு வந்த பின்னர் ருது மகிழ்வாய் இருந்திடவில்லை.

அத்தனை வலிகளை சுமக்க முடியாது கடந்து வந்தான். தேஷ் எனும் பூ மலரை வாழ்வின் பிடிப்பாக பற்றிக்கொண்டு.

யாருமற்று அவனது லேஷஷின் நினைவில் அவன் வாடும்போதெல்லாம் அவனை கொஞ்சமேனும் உயிர்ப்புடன் நடமாட வைத்தது இனியனிடமிருந்து வரும் மின்னஞ்சல்கள் தான்.

அதில் இனியன், ருது நேரில் இருந்திடும்போது எப்படியெல்லாம் பேசிடுவானோ அதற்கெல்லாம் எழுத்து வடிவம் கொடுத்திருப்பதைப்போல் சிறு சிறு நிகழ்வையும் கொட்டி அனுப்பிட, ருதுவிற்கு அதுவே போதுமானதாக இருந்தது.

அதிலும் இனியன் பொதுவாக ருதுவின் நலன் கேட்டு, தனது நிலைக் குறித்து புலம்புவானே தவிர்த்து இமையாளைப் பற்றி ஏதும் கூறிட மாட்டான்.

அவன் சொல்லியது பொய் எனும் பட்சத்தில் வேண்டாமென சென்றவன் தானாக தேடி வரட்டும். உண்மை எனும் பட்சத்தில் தொடர முடியாத உறவு எட்டவே நிற்கட்டும் எனும் எண்ணத்தால் தங்கையைப் பற்றி இனியன் எதையும் சொல்லிட மாட்டான்.

இனியனின் மின்னஞ்சல்களை எல்லாம் ஆர்வமாக… தன்னை நினைத்து தேடவும் ஒரு உயிர் உள்ளது என்கிற மகிழ்வில் படிக்கும் ருதுவுக்கு, ஒன்றிலாவது தனது லேஷஷை பற்றி சொல்லிட மாட்டானா எனும் ஏக்கம் எட்டிப்பார்க்கும்.

தனக்காக தன்னுடைய நட்பிற்காக உருகும் இனியனிடமாவது பேசலாம் எனத் தோன்றும் எண்ணத்தை அந்நொடியே அழித்திடுவான்.

ருதுவும் இனியனுடன் தொடர்பில் இருந்திருப்பான். இனியன் தனக்கு நண்பனாக மட்டுமே இருந்திருந்தால். இனியன் அவனவளுக்கு அண்ணனாகவும் இருந்துவிட்டானே!

ருதுவால் ஒரே நேரத்தில் காதல் மற்றும் நட்பின் இரு பெரும் வலிகளை சுமப்பது சற்று கடினமாகத்தான் இருக்கிறது.

‘நான் உன் பக்கத்தில் இருக்கன்னு தெரிந்தும், என்னை முன்னால் வந்து பார்க்கணும் தோணலையா?’

இனியன் தன்னை பார்த்துவிட்டான் என்று தெரிந்த கணம் முதல் ஓராயிரம் முறை மானசீகமாக நண்பனிடம் கேட்டுவிட்டான். விடை என்னவோ மனதை நோகவே செய்கிறது.

உறக்கம் வராது அறைக்குள்ளே அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான்.

இருவரின் அலைப்பேசி எண்ணுமே அவனிடம் உள்ளது. பழைய எண்ணை தனக்காகவேணும் மாற்றியிருக்க மாட்டார்கள் என்று அதீத நம்பிக்கை. இவன் தான் அனைத்தையும் துறந்திறந்தான். அவர்கள் இவனை மட்டுமே மனதில் வைத்து நிஜமாகிய நினைவுகள் அனைத்தையும் நிழல் மாறாது வைத்திருக்கிறார்கள். ஒன்றாக இருந்த நாட்களையும் கூட.

அலைப்பேசி எண்ணை திரையில் மனனமாக தட்டச்சு செய்தவன், நொடியில் நெஞ்சத்தில் அழுத்தம் ஏற்பட, அழித்திருந்தான். மின்னஞ்சலில் செய்தியை நிரப்பியவன் அனுப்பாது ட்ராஃப்டில் சேர்பித்தான்.

காதல் வலிக்கு சற்றும் குறைந்ததல்ல நட்பின் வலி.

“இனியா!”

மெத்தையில் கவிழ்ந்தடித்து படுத்தவன் தலையணையை அழுத்திக்கொண்டு உறங்க முயற்சித்தான்.

உறக்கம் வருவேணா என போக்குக் காட்டியது.

தேஷ் ஷிவன்யாவுடன் அவளது அறையில் உறங்கிவிட்டான். இல்லையென்றால் மகனைக் கட்டிக்கொண்டாவது உறக்கத்தை தழுவியிருப்பான்.

அவனது தனிமையின் துயர் போக்கும் ஆள் அவனது மகன் மட்டுமே.

நேரத்தை பார்த்தவன் தயங்கினாலும் எழுந்து ஷிவன்யாவின் அறைக்குச் சென்று கதவினைத் தட்டினான்.

கண்களை கசக்கியபடி கதவினை திறந்தவள்,

“என்னண்ணா ட்யூட்டியா?” எனக் கேட்டபடி கை மறைவில் கொட்டாவி விட்டாள்.

“இல்லை ஷிவா” என்ற ருது, “தேஷ்ஷை தூக்கிக்கட்டுமா?” என வினவினான்.

“என்னாச்சு டார்லிங்?” என்றவளின் முகத்தில் சட்டென்று தோன்றிய பதற்றத்தில் தன் முகத்தை சீராக்கியவன்…

“நத்திங்… நத்திங் டூ ஒர்ரி. ஏதோ பேட் ட்ரீம்” என சமாளித்தான்.

“ம்ம்ம்… அவன் நல்லா தூங்குறான். நீங்க கவலைப்படமால் போய் தூங்குங்க” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே…

“அத்தை” என தேஷ் சிணுங்கிட… ஷிவா உள்ளே சென்று தட்டிக் கொடுத்திட ருது திரும்பி வந்திருந்தான்.

அதன் பின்னர் பால்கனியில் இரவு வானினை வெறித்தவனாக நடை பயின்றவன் விடிந்தும் விடியா பொழுதில் காக்கியை மாட்டிக்கொண்டு புறப்பட்டுவிட்டான்.

பல இரவுகள் உறங்காதது அவனுக்கு பழக்கம் தான். இன்று ஏனோ மனதின் பாரம் அதிகம் கூடியிருந்தது.

ருது நேராக சென்றது காந்தா பேட்டைக்கு நேரெதிர் இருந்த பல்பொருள் அங்காடிக்குத்தான்.

ருது அங்கு சென்று சேர வானம் வெண்மை பூண்டிருந்தது.

வாயிலில் நின்றிருந்த காவலாளி, வண்டியிலிருந்து ருது இறங்கி நின்றதும் வேகமாக அவனின் அருகில் ஓடி வந்தார்.

“சார்…?”

“இந்த கடையோட ஓனர் இன்னும் இருபது நிமிஷத்தில் என் முன்னால் நிற்கணும்” என்றவனாக வண்டியின் பேனட்டின் மீது குதித்து அமர்ந்தான். தொடையில் அவனது விரல்கள் தாளம் தட்டின.

“அவனுக்கு கால் பண்றதுக்கு முன்னாடி எனக்கொரு காபி சொல்லுங்க” என்றான். நகர்ந்து முன் சென்றவரிடம்.

ருது ரசித்து காபியை சுவைத்து முடித்திட, கடையின் உரிமையாளர் மாசி வந்திருந்தார்.

அவர் காந்தா பேட்டைக்குள்ளிருந்து வருவதை ருது கவனித்திருந்தான்.

“பேட்டையில தான் நம்ம வூடு இருக்கிது சார்” என்றவன், “என்ன சார் வூட்டுக்கு சரக்கு வாங்கணுமா? சொல்லிவுட்டிருந்தா நம்ம பயலுவ கையினுல கொடுத்துவுட்டிருப்பனே” என்றான்.

“சரக்கு தான் மிஸ்டர்… ஆனால் வாங்க வரல. எடுக்க வந்திருக்கேன்” என்று வண்டியின் மீதிருந்து இறங்கிய ருது அவனது தோள் மீது கைபோட்டபடி கடையை நோக்கி நடந்தான்.

“புரியல சார்.”

“புரியும் வாங்க சொல்றேன்” என்ற ருது வண்டி சத்தம் கேட்டு திரும்பிட, கிருஷ்ணனும், வெங்கட்டும் வந்திறங்கினர்.

“உங்களையும் வர சொன்னாரா?” என கிருஷ்ணனைக் கண்டு வினவிய வெங்கட், “இவனுங்களை முடிக்காம ஓயமாட்டார் போலவே” என்று முணுமுணுத்தான்.

“அதனால் தான் இந்த வயசுல இந்த உயரத்தில் இருக்கார்.” கிருஷ்ணன்.

“உண்மை தான். இவர்கிட்ட நிறைய கத்துக்கணும்.”

“பேசி முடிச்சாச்சுன்னா வேகமா வாங்க.” ருது சொல்லியதில் இருவரும் அருகில் ஓடி வந்திருந்தனர்.

அதற்குள் மாசி கடையை திறந்திருந்தான்.

கடையின் உள்ளே நுழைந்த ருது ஒவ்வொரு பகுதியாக பார்வையிட, மளிகைப்பொருட்கள் இருக்குமிடம் வந்ததும் தன்னுடைய கால்ச்சட்டை பையிலிருந்து வெண்மை நிற பொட்டலத்தை எடுத்து சர்க்கரை பொட்டலங்களுக்கு நடுவில் வைத்தான்.

“சார்… சார் என்னா சார் வைக்கிரிங்கோ?” என்று மாசி வேகமாக ருதுவிடம் வர,

“இதுவும் சர்க்கரைதான் மாசி. ஆனால் இதை விற்றால் தண்டனை உண்டு. காலத்துக்கும் ஜெயில் சாப்பாடு தான்” என்றான் ருது.

“சார் வேணாம் சார்.”

மாசியின் கத்தலை எல்லாம் ருது பொருட்படுத்தவே இல்லை.

“வீடியோ ஆன் பண்ணுங்க வெங்கட்” என்ற ருது, சில நிமிடங்கள் எதையோ தேடுவதைப்போல், தான் வைத்த பொட்டலத்தை கிருஷ்ணன் தேடி எடுப்பதைப்போல் பதிவு செய்தான்.

“பக்கா எவிடன்ஸ். இவனை அரெஸ்ட் பண்ணுங்க எஸ்.ஐ சார்” என்றான்.

“வேணாம் சார். என்னாண்ட வச்சிக்கினாத. நான் கைலாஷ் ஆளு” என்று எகிறினான் மாசி.

“ஹோ அப்போ அந்த கைலாஷ் வேற மாதிரியா. உன்னையெல்லாம் ஆளா வச்சிருக்கான்” என்று கேலியாக சிரித்தான் ருது.

ருது சொல்லிய அர்த்தத்தில் மற்ற இருவரும் சிரித்திட,

“உனக்கு என்னாதான் வேணும் சார்?” என்று பற்களைக் கடித்தான் மாசி.

“ஹான்… அப்போ நேத்து இவங்க உன்கிட்ட கேட்ட புட்டேஜ் கொடு. உன்னை விடுறேன்” என்றான் ருது.

“அது அழிஞ்சிப்போச்சு சார்.”

“இது வேலைக்கு ஆகாது கிருஷ்ணன். இவன் உள்ள இருந்தாதான்” என்று ருது முடிக்கும் முன்பு அவன் கேட்ட காணொளி காட்சி அடங்கிய தட்டினை ருதுவிடம் கொடுத்திருந்தான் மாசி.

“ஜெயிச்சிட்டோம், உனக்கு பயந்துக்கினே நினைச்சிடாத சார். உன்னால ஒன்னும் பண்ண முடியாது. அந்த தைரியத்தில் தான் கொடுத்துக்கினேன்” என்றான்.

“ஆஹான்” என்று கூலர்ஸை கீழிறக்கிய ருது, “பயமில்லைன்னா நேத்தே கொடுத்திருப்படா” என்று வெளியேறினான்.

ருது வண்டியில் ஏறப்போக,

“சார் இதை என்ன பன்றது?” என எடுத்த பொட்டலத்தை காண்பித்துக் கேட்டான் வெங்கட்.

“ராதிகாகிட்ட கொடுத்து சமோசா செய்து சாப்பிடுங்க” என்றான்.

“சார்…” வெங்கட் அதிர்வாய் பார்க்க…

“இவ்ளோ மருந்து ஏது சார். அசோக்கிடமிருந்து எடுத்தது கிராம் கணக்கில் தானே இருந்தது” என்றார் கிருஷ்ணன்.

“அச்சோ அண்ணா அது மைதா மாவு. அம்மாக்குத் தெரியாமல் எடுத்து வந்தேன். கொண்டு போய் எடுத்த இடத்தில் வைக்கணும். இல்லைன்னா ஓடவிட்டு உதைப்பாங்க” என்றவனை வினோதமாக பார்த்தனர் இருவரும்.

“இவரு அவங்க அம்மாவுக்கு பயப்படுவாங்க போலண்ணா!”

வெங்கட் சொல்லியதும் கிருஷ்ணனிடம் மென் புன்னகை.

ருது காந்தா பேட்டைக்குள் நுழைய, இருவரின் விழிகளும் அதிர்ச்சியில் விரிந்தது.

“போச்சு காலையிலே வம்பை விலைக்கு வாங்க ஆரம்பிச்சிட்டார்” என்று இருவரும் தத்தம் வந்த இருசக்கர வண்டிகளில் ருதுவை பின் தொடர்ந்தனர்.

அடுத்த இரண்டு நிமிடங்களில் கண்காணிப்பு காணொளியில் பதிவாகியிருந்த முகங்களை கைது செய்திருந்தான் ருது.

காலை நேரம் என்பதால் பேட்டை மக்களுக்கு தகவல் பரவுவதற்குள் அந்த நால்வரையும் இழுத்துக்கொண்டு காவல் நிலையம் வந்திருந்தான் ருது.

________________________________

பள்ளியின் வலைதள பக்கங்களில் வந்திருக்கும் சேர்க்கை படிவங்களை சரிபார்த்துக் கொண்டிருந்தவர்களில் இமையாளும் ஒருத்தி.

இமையாளுக்கு அருகில் அமர்ந்திருந்த ஆசிரியர் ஒரு விண்ணப்பத்தை சரிபார்த்தவாறே…

“இந்த பேபி அம்மா நேம் கூட இமையாள்” என்றிட, இமையாளிடம் இதழ் விரியா புன்னகை.

“கொஞ்சம் நல்லா தான் சிரித்தால் என்னவாம். உன் வயசுக்கு இவ்வளவு அமைதிலாம் கூடாது இமையாள்” என்றார்.

அதற்கும் அவளிடம் புன்னகையே.

“வாய் மட்டும் திறந்திடாத” என்று அவள் சொல்ல…

“எப்போ ஸ்டூடண்ட் இன்டர்வியூ மேம்?” எனக் கேட்டாள் இமையாள்.

“எக்ஸாம்ஸ் எல்லாம் முடிந்ததும்” என்றார் அவர்.

“இன்னும் டூ வீக்ஸ் தான் இருக்குல மேம்?”

“ம்ம்ம்… எவ்வளவு வேகமா போகுது இந்த இயர்” என்றவர், “செலக்டட் அப்ளிகேஷன்ஸ் ஸ்டோர் பண்ணி வை. நாளைக்கு இன்டர்வியூ மெயில் ரிப்ளை பண்ணிக்கலாம்” என்று அவர் சொல்ல, அவளும் சரியென்றாள்.

அவர்கள் வேலை முடித்து கிளம்பிட, இனியனிடமிருந்து அழைப்பு வந்தது.

“கிளம்பிட்டேண்ணா!”

“ஓகேடா” என்ற இனியன், “நைட் எனக்கொரு சர்ஜரி இருக்குடா. எமெர்ஜென்சி. வர லேட் ஆகும்” என்று சொல்லி வைத்திட்டான்.

இமையாள் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு செல்ல… வழியெங்கும் கலவரம். தடியர்கள் கடைகளை அடித்து நொறுக்கியபடி, சாலைகளில் வரும் வாகனங்களை மறித்து கலவரம் செய்து கொண்டிருந்தனர்.

அப்பகுதி காந்தா பேட்டை சுற்றியுள்ள பகுதி.

ருது தன்னுடைய ஆட்களை கைது செய்துவிட்டான் என்று தெரிந்த நொடி காந்தா ருதுவின் காவல் நிலையம் முன்பு தனது ஆட்களுடன் கூடிவிட்டான்.

ருது அந்நேரம் முடிக்காத கொலை வழக்கு ஒன்றில் சிக்கிய குற்றவாளியை விசாரித்துக் கொண்டிருந்தான்.

காந்தா உள்ளே நுழைய, பயம் இருந்த போதிலும்,

“வேற ஒரு கேஸ் விசாரணையில் இருக்காங்க. நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்று காந்தாவை தடுத்திருந்தான் வெங்கட்.

வெங்கட்டின் மறுப்பில் மேலும் கோபம் வரபெற்ற காந்தா, அவனை தள்ளிவிட்டு, தனது ஆட்களை வெளியில் நிற்குமாறு கண்காட்டி, விசாரணை அறைக்குள் நுழைந்த வேகத்தில் ருதுவின் சட்டையில் கை வைத்திட முயன்றான்.

நொடிப்பொழுதில் இருக்கையிலிருந்து சுழன்று எழுந்த ருது, காந்தாவின் மார்பில் தன் பூட்ஸ் காலினை வைத்து தள்ளியிருந்தான்.

தள்ளிய வேகத்திற்கு காந்தா சுவற்றில் மோதி தரையில் சரிந்து அமர,

“இவனை தூக்கி செல்லில் போடுங்க கிருஷ்ணன்” என்று கர்ஜித்தான்.

“யார் மேல கை வைக்க வர?” என்ற ருது, சுட்டு விரல் ஆட்டி, பற்களால் கீழ் உதட்டை கடித்தான்.

“மல்லிகாக்கா” என்று அழைத்தவன்,

“ஒரு ஆளை கொன்னு பேட்டை வாயிலில் கட்டிப்போட்ட வழக்கில் முதல் குற்றவாளி மற்றும் காவல்துறை அதிகாரி மேல் காவல் நிலையம் புகுந்து கை வைக்க பார்த்ததாகவும் சேர்த்து எப்.ஐ.ஆர் ஃபைல் பண்ணுங்க” என்றான்.

காந்தா மற்றும் கைலாஷ் நினைத்து பயந்த போதிலும், தனக்கு மேலதிகாரி சொல்வதை செய்தாக வேண்டிய கடமை அவர்களுக்கு. ஆதலால், கிருஷ்ணன் காந்தாவை இழுத்து கம்பிகளுக்கு பின்னால் அடைத்து பூட்டினை பூட்டிட, ருது சொல்லியதை வார்த்தை மாற்றாது குற்றப்படிவத்தில் குறிப்பிட்டு ருதுவிடம் கையெழுத்து வாங்கியிருந்தார் மல்லிகா.

விசாரணை அறையிலிருந்து வெளியில் வந்த ருது…

“ராதிகா இன்னைக்கு லீவ் எடுத்துக்கோங்க” என்றவனாக, “வீட்டில் ட்ராப் பண்ணிட்டு வாங்க வெங்கட்” என்றிருந்தான்.

ருதுவிற்கு தெரிந்துதான் இருந்தது. எத்தனை பெரிய ரவுடியை செல்லுக்குள் அடைத்திருக்கிறோம் என்று. இன்னும் சில நிமிடங்களில்… ஏன் நொடிகளில் பெரிய பெரிய ஆட்களிடமிருந்து அவனுக்கு அழைப்பு வரலாம். அதற்கெல்லாம் ருது செவி சாய்க்கப்போவதில்லை. ஆதலால் காந்தாவின் ஆட்கள் கலவரத்தில் ஈடுபடலாம். நகரமே இன்றைய பொழுது ஸ்தம்பிக்க உள்ளது என்பதை நன்கு அறிவான்.

அனைத்தும் கைலாஷின் தலைமையில் இனிதே துவங்கும். இந்த அலுவலகம் கூட அவர்களின் கலவரங்களில் தரைமட்டமாக்கப்படும். அதில் ராதிகாவுக்கோ, அவளின் வயிற்றில் வளரும் குழந்தைக்கோ எவ்வித ஆபத்தும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ராதிகாவை வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.

அவனிடம் ஒரு பெண், குழந்தையை பெற்றெடுக்கும் காட்சியை நேரில் கண்ட ரணம். மனதோடு இன்றும் தேங்கியுள்ளது. திருமணம் முடித்து கணவனாக பார்க்க வேண்டிய காட்சி… ஆனால் அவன் பார்த்த தருணம்? விளங்கிக்கொள்ள முடியா ஒன்று.

ராதிகாவும், வெங்கட்டும் வெளியில் வர, காந்தாவின் ஆட்கள் அடிதடி ஆயுதங்களோடு விறைத்துக் கொண்டு நின்றனர்.

“எங்க அண்ணாத்த எங்கடா?” ஒருவன் நீண்ட பட்டா கத்தியை தோளில் வைத்து பிடித்தபடி முன் வந்து கேட்டிட…

ராதிகாவை தன் கை வளைவில் கொண்டு வந்தவனாக,

“டிசி சாரிடம் பேசிட்டு இருக்காங்க” என்று சொல்லி நகர்ந்தான்.

“சார் அதிரடியா கோபமான ஆளா இருந்தாலும், ரொம்ப அக்கறையான ஆள் இல்லையா வெங்கட்?”

“ம்ம்ம்… அவருக்கு ஒரு குழந்தை இருக்கே. இதை கடந்து வந்தவர். அதனால் அனுபவம், உன்மேல் அக்கறை காட்டுறார்” என்றான் வெங்கட்.

ருதுவின் இந்த அக்கறைக்கு பின்னான நிகழ்வு எத்தனை கொடுமையானது என்பது அவன் மட்டுமே அறிந்தது.

ராதிகாவை விட்டுவிட்டு வெங்கட் காவல் நிலையம் திரும்பி வந்தபோது, அடியாட்கள் யாவரும், காவல் நிலைய வெளி வளாகத்தில் அதீத முறைப்போடு அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தனர்.

“என்னா சப்-இன்சு எம்புட்டு நேரமா பேச்சு வார்த்தையை போட்டுக்கினு இருக்காங்க உன் சாரு. எங்க அண்ணாத்த இம்பா பொறுமையா போயிக்கிற ஆளே இல்லை. ஒழுங்கா அண்ணாத்த பேச்சினை கேட்டுக்கின்னு எங்க ஆளுவளை வெளிய வுட சொல்லு” என்று ஆளாளுக்குக் கத்தினர்.

அப்போதே மதியத்திற்கு மேலாகியிருந்தது.

அதையெல்லாம் கண்டு கொள்ளாது உள்ளே வந்த வெங்கட்…

“அவனுங்களுக்கு இன்னும் உண்மை தெரியல போலிருக்கு சார். பேசாமல் மொத்தமா எல்லாரையும் உள்ள பிடிச்சுப் போட்டுடலாம் சார். ஸ்டேஷன் முன்னாடி கலவரம் செய்தாங்கன்னு” என்றான்.

“நீ சொல்றதும் கரெக்ட் தான்… ஆனால் பாரு அவனுங்க கலவரம் செய்யலையே எஸ்.ஐ சார். எவ்ளோ அமைதியா மரத்தடியில் உட்கார்ந்திருக்காணுங்க” என்று வெங்கட்டிடம் சொல்லிக்கொண்டே வெளியில் வந்த ருது,

வாயில் படியின் மத்தியில் நிமிர்ந்து நின்றான்.

ருதுவை கண்டதும் தடியர்கள் பெரும் சத்தத்தோடு அவன் முன் வந்து நின்றனர்.

“என்னா போலீசு ரொம்பத்தான் மாஸ் காட்டிக்கினு சுத்துற. எங்க காந்தா அண்ணாத்த வந்து பேசனுமா உனக்கு?” என்று ஒருவன் கேட்டிட,

“அண்ணாத்த எங்கன்னு கேளுடா” என்றான் மற்றொருவன்.

“உங்க அண்ணாத்த கம்பிக்குள்ள இருக்காரு. நாளைக்கு கோர்ட்டில் வந்து பாரு” என நின்ற நிலையில் ஒரு காலினை தூக்கி பூட்ஸில் மண்ணை தட்டியவனாக ருது சொல்லிட, ஆளாளுக்கு துள்ளி கத்தினார்கள்.

வெங்கட்டிற்கு மனதிற்குள் ‘பத்த வச்சிட்டியே பரட்டை’ என்று தான் தோன்றியது.

error: Content is protected !!
Scroll to Top