அன்பின் அதீதம் 17

அத்தியாயம் 17

தீரன் மதுரையிலிருந்து புறப்பட்ட மூன்று தினங்களுக்குப் பின்னர்…

“அப்பா உங்க போன் கொடுங்க!”

ரத்தனத்திடம் கேட்டிருந்தாள் மயிலாஞ்சலி.

மயிலாஞ்சலி தீரன் நியூயார்க் சென்று சேர்ந்திருப்பானென நேரத்தை கணக்கிட்டு இரு தினங்களாக பல முறைக்கு மேல் அவனை தொடர்புகொள்ள முயன்றுவிட்டாள்.

தீரனிடத்திலிருந்து எவ்வித பதிலும் இல்லை. மயிலாஞ்சலி அனுப்பிய குறுந்தகவல்கள் ஒன்றும் திறக்கப்படவில்லை.

மொத்தமாக சோர்ந்துப் போனாள்.

மயிலாஞ்சலியிடம் அலைபேசி இல்லாத காலங்களில் கூட அவனுடன் பேசாது இருந்ததில்லை அவள். ஆனால் மூன்று தினங்களாக அவனின் குரல் கேட்காது அவளுக்கு என்னவோ போலிருந்தது.

ஆதியிடம் பேசுவதற்கு முன்னால் வரை, தீரனிடத்தில் தனக்கிருப்பதும், தன்னிடத்தில் அவனுக்கு இருப்பதும் அன்பின் அதீதம் என்று நினைத்திருந்தவளால்… ஆதியிடம் பேசியதற்கு பின்னர் அந்த அன்பின் அதீதம் தான் காதலின் ஆரம்பப்புள்ளியென புரிய, தங்களுக்கு இடையேயான அன்பின் உணர்வுகள் யாவற்றையும் மனதில் போட்டு அலசத் துவங்கியிருந்தாள்.

“உனக்கில்லைன்னா என்ன? தீரனுக்கு அப்படியொரு எண்ணமிருந்தா?” என்ற ஆதியின் கேள்வி தான் அவளுக்கு தங்களின் மனங்களின் வழி அன்பினை ஆராய்ந்துப் பார்க்கத் தூண்டியது.

தீரனின் ஒரு சில வார்த்தைகளும் இப்படியும் இருக்குமோ என அவளின் இதயத்தில் காதல் கதவுகளை மெல்லத் திறந்து வைத்தது.

“எங்களுக்கு நடுவுல இந்த அன்பு இப்படியே இருக்கிறதுதேன் நல்லாயிருக்கும்” என்று சொல்லியவளுக்கே, நெஞ்சில் கூடிய அன்பின் அதீத சுமை, அதன் அடுத்த நிலைக்குச் சென்றால் தான் அதனின் பாரம் குறைக்குமென்ற எண்ணத்தை எழச் செய்திருந்தது.

“இந்த எல்லையில்லா அன்பின் முடிவிலி தான் காதலா?” எனும் கேள்வி எழுந்த அதே கணம், “மாமாவுக்கும் இருக்குந்தேன் அம்புடுது” என்ற எண்ணமும் உருவானது.

“அப்புறமும் ஏன் என்னைய நாளைக்கு பொண்ணுப் பார்க்க வாராய்ங்கன்னு தெரிஞ்சும் இன்னும் எதுவும் வெளிக்காட்டிக்காம இருக்காய்ங்க” என சிந்தித்தவளுக்கு பதில் மட்டும் தெரியவில்லை.

இறுதியில், “ஒருவேளை மாமாவுக்கு அப்படி எண்ணமில்லாட்டி என்ன பண்றது? நாம எதுவும் தப்பா நினைக்கிறோமா?” என்று முடிவுக்கு வந்தவளுக்கு, பலவித மன ஆராய்வுகளுக்குப் பின்னர் அவள் கூறிய அவளது மாமா என்ற அன்பில் மட்டும் வைத்து அவனை பார்க்க முடியவில்லை.

“அவருக்கு விருப்பமில்லன்னா என்ன? எனக்கு விருப்பம் வந்துருச்சே! நாளைக்கு எல்லாரும் கூடியிருக்கும் போது மாமாவை கட்டிக்கத்தேன் விருப்பமுன்னு ஐயாவை நேருக்குநேரா பார்த்து சொல்லிப்புடுவோம். பொறவு மாமா சம்மதிச்சிதேன் ஆவணும்” என்று தனக்குத்தானே முடிவெடுத்தவளுக்கு,

பெரும் மகிழ்வாய் இருந்தது…

தொலைக்காட்சி அறையில் தீரனது மடியில் அவள் உறங்கிக்கொண்டிருக்கும் போது, அர்ச்சனாவும் அவனும் பேசிக் கொண்டிருந்தது.

நல்ல உறக்கத்தில் இருந்தவளுக்கு அர்ச்சனா தீரனிடம், “உடம்பு வலிக்கலையா?” என்று கேட்ட சத்தத்திலே விழிப்பு வந்துவிட்டிருந்தது.

அப்போது தான் மயிலாஞ்சலியே உணர்ந்தாள், ‘தான் இரவு முழுக்க தீரனின் மடியிலே உறங்கியிருக்கிறோம்’ என்பதை.

‘அச்சோ கால் வலிக்குமே!’ என எழ அசைந்தவள், தீரன் பேசியதில் அதிர்ந்தவளாக கண்களை மூடிக்கொண்டாள். உறங்குவதாகக் காட்டிக்கொண்டாள்.

கேட்க வேண்டிய அனைத்தையும் கேட்டுமிருந்தாள்.

‘அப்போ மாமாவும் என்னைய விரும்புறாரா?’ என மனதோடு துள்ளி குதித்தவளுக்கு, அவன் ஏன் அவனது காதல் தனக்கு தெரியக்கூடாதென்கிறான் என்பதற்கான காரணம் மட்டும் விளங்காது போனது.

‘விடிஞ்சதும் சரியான நேரம் பார்த்து ஐயாகிட்ட பேசணும்’ என நினைத்துக்கொண்டாள்.

காலை நேரமே உணவுக்கூடத்தில் அனைவரும் ஒன்றாகக் கூடியிருக்க, தன்னுடைய விருப்பத்தை சொல்ல இதுதான் சரியான நேரமென நினைத்தவள், தீரனும் வந்துவிடட்டும் சொல்லிவிடலாமென்று சில நொடிகள் காத்திருப்பும் பிடிக்காது தவித்திருக்க, முத்து மாணிக்கம் அர்ச்சனாவிடம் தீரனை அழைத்து வருமாறு சொல்லவும் தானே அழைக்க ஓடியிருந்தாள்.

சட்டென்று மாறிய வானிலையாய், அவளது அன்பின் அதீதம் அடுத்த அடிக்கு முன்னேறியிருப்பதை அறிந்திராத தீரன் வீட்டினர் முடிவுக்கு அவளது வார்த்தைகளை காரணமாகக் கொண்டு மறுத்திட,

காதலை அறிந்திட்ட சில மணி நேரங்களில்… அது கொடுக்கும் வலியையும் அறிந்திட்டாள் மயிலாஞ்சலி.

அவள் அறியாது அவனுக்கு கொடுத்த வலியை, அவனும் அவளுக்கு திருப்பிக் கொடுத்திருந்தான். தன்னை அறியாது.

தீரன் தன்னுடைய மறுப்பில் திடமாக இருந்திட…

காதல் இருந்தும் இந்த மறுப்பு எதற்கென்று நினைத்தவளுக்கு, அவனது வேண்டாமெனும் வார்த்தைக்கு முன்பு தன்னுடைய காதலை சொல்லிட மனம் வராது போனது.

ஒருவேளை தன்னுடைய எண்ணம் தான் தவறானதோ என்றும் நினைக்கத் தோன்றியது.

அத்தோடு தன்னுடைய நேசத்தை கூறுவதற்கான சரியான நேரமும் இதுவல்ல என நினைத்தவள், பொறுமையாக அவனிடம் பேசிட வேண்டுமென்று அமைதிக்காத்து…

தீரன் செல்ல அனுமதித்திருந்தாள்.

கிளம்பும் பொழுது, வண்டியில் அமர்ந்த பின்னர் அவன் பார்த்த பார்வை இப்போது நினைக்கவும் அவளது இதயம் சில்லிட்டது.

தீரன் உறுதியாக திருமணம் வேண்டாம் என்கவுமே… தீரனும், அர்ச்சனாவும் பேசிக்கொண்டதை தான்தான் தவறாக புரிந்துகொண்டோமோ என்றும் மனதில் உழப்பிக்கொண்டவளுக்கு… தீரனின் கடைசி நேரப்பார்வை அவளுக்கான பதிலை வழங்கியிருந்தது.

“என்னா பார்வை அது? போறப்ப… இப்படியொரு பார்வை முன்ன காட்டியிருந்தா எப்பவோ லவ் புரிஞ்சிருக்குமே” என்று வெட்கச் சிரிப்போடு முகத்தை மூடிக்கொண்டாள்.

தீரனின் காதலை முழுமையாய் அறிந்து கொண்டவள்,

‘கண்ணாலம் ஏன் வேணாம்?’ எனும் பெரும் வினாவோடு தான் அவனை வழியனுப்பி வைத்தாள்.

அனுப்பி வைத்தவளுக்கு அவன் தன்னை ஒதுக்குவான் என்பது தெரியாதுபோனது. அந்த ஒதுக்கத்திற்கான காரணமும் தெரியாது போனது. ஆதியாக சொல்லும் வரை.

சுற்றி அத்தனைப்பேர் இருந்தும், தீரனிடம் பேசாது முதல்முறை தனிமையை உணர்ந்து வதை சுமந்தாள்.

மயிலாஞ்சலியின் வாழ்வில் தீரனின் தடமின்றி கழிந்திடாத நாட்கள், அவனின்றி வெறுமையாக மாறிட, துவண்டு அமர்ந்து தனிமையில் முடங்கிய தருணம், அவளது ஆழ நேசத்தின் எல்லை தெரிந்தது.

தீரனின்றி தானில்லை என்பதும் உணர்ந்தது.

“இப்போ நான் வேறொரு பொண்ணுக்கிட்ட மேரேஜ் பத்தி பேசப்போறது உனக்கு ஒரு மாதிரி இல்லையா மயிலா?”

தீரன் கோவிலில் கேட்டதற்கான முழு அர்த்தம் அப்போது தான் விளங்கிக்கொண்டாள்.

இனியும் அவனிடம் காதலை சொல்லாது இருந்திட முடியாதென்று நினைத்தவள், தன்னுடைய எண்ணிலிருந்து அழைப்பதால் தான் எடுக்கவில்லையோ என்று எண்ணியே ரத்னவேலுவின் அலைபேசியிலிருந்து அழைத்துப் பார்ப்போமென்று அவரிடம் அலைபேசியை கேட்டிருந்தாள்.

மயிலாஞ்சலி அலைபேசி கேட்கவும் ரத்னவேலு எடுத்து அவளிடம் நீட்டிட,

“எதுக்கு? உன் போன் என்னாச்சு?” எனக் கேட்டிருந்தாள் அர்ச்சனா.

“நான் போன் போட்டாக்கா மாமா எடுக்கவே மாட்ராய்ங்கம்மா. அதேன் அப்பா போன்லேர்ந்து போடலாம்னு” என்றாள் மயிலாஞ்சலி.

“கூடவே இருந்தாக்கா மதிப்பும், அருமையும் தெரியாதாம்” என்று மகளை வார்த்தையால் இடித்தவராக அர்ச்சனா சென்றிட,

“அம்மா என்னப்பா சொல்லிட்டுப் போறாங்க?” என்று புரியாது வினவினாள்.

“அது ஒன்னுமில்லைடா” என்ற ரத்னவேலு, “அங்கிட்டு போனதும் வந்துட்டேன்னு போன் போட்டு சொன்னான். அம்புட்டுதேன், நானும் ரெண்டு நாளா போடுறேன் எடுக்கல” என்றார்.

“ஹோ… நீங்க கூப்பிட்டும் எடுக்கலையா?” தீரனுக்கு ரத்னவேலுவின் எண்ணிலிருந்து முயன்றபடியே கேட்டாள்.

அலைபேசி அணைத்து வைத்திருப்பதாக இருக்க, ரத்னவேலுவிற்கு மட்டும் ஏனென்ற காரணம் தெரிந்தது.

‘உடன் வைத்துக்கொண்டே அதிலிருந்து வெளியேறுவது என்பது பெரும் வதையாயிற்றே! அதனை தவிர்க்கவே மொத்தமாக தங்களை தவிர்க்கிறான்.’

ரத்னவேலுவிற்கு மன வேதனையாக இருந்தது.

அவனிடம் பேச முடியாது விம்மி சுருண்டது மயிலாஞ்சலியின் காதல் மனம்.

“நான் ரிச்சி அண்ணேவுக்கு கூப்பிட்டுப் பாக்குறே(ன்)ப்பா” என்றவள் ரிச்சர்ட்டுக்கு அழைக்க,

அங்கு அவனோ நண்பனின் வேதனையில் தானும் சோகத்தில் ஆழ்ந்திருந்தான்.

ரிச்சர்ட்டின் மூலமாக தீரனின் நலன் அறிந்த பின்னரே மயிலாஞ்சலியின் மனம் ஆசுவாசம் கொண்டது. அதற்கு பின்னான இந்த ஏழு மாதங்களும் அதுவே வாடிக்கையாக தொடர்ந்தது.

என்னதான் ரிச்சர்ட்டின் வாயிலாக தீரனைப்பற்றி எல்லாம் தெரிந்துகொண்டாலும் அவனிடம் பேசாது, அவனது குரலைக் கேட்காது, முகம் காணாது மயிலாஞ்சலிக்கு பித்துப் பிடிக்காத குறைதான்.

“அவங்களுக்கு என்னோட என்னதேன் பிரச்சினையாம் ருச்சி ஊறுகாய்” என்று ஒருநாள் தாளமாட்டாது கேட்டிருந்தாள்.

ரிச்சர்ட் நீதான் காரணமென்று உண்மையும் சொல்லவில்லை, வேறொன்றை பொய்யாகவும் சொல்லவில்லை.

“இது அவனோட பெர்சனல் அஞ்சலி. அவனுக்கு நீ உறவாவே இருந்தாலும், அவனைப்பற்றி நான் சொல்றது சரிவராது. இதை அவன்தான் சொல்லணும்” என்றிட…

“அப்போ உங்க ஃப்ரெண்டை அதை சொல்லவாவது சொல்லுங்களேன்” என்று ரிச்சியிடமே காதலின் பாரம் தாங்காது அழுதிருந்தாள்.

“மாமாகிட்ட பேசாம என்னவோ மாதிரி இருக்குண்ணே” என்ற மயிலாஞ்சலி ரிச்சியிடமும் தன்னுடைய காதலை சொல்லவில்லை.

தினமும் மயிலாஞ்சலிக்கு வலியின் அளவு கூடிக்கொண்டேப்போனது.

அவளுக்கு புரியாதது ஒன்றே ஒன்று தான்.

அர்ச்சனாவிடம் தீரன் பேசியதை வைத்து, அவனுக்கும் தன்மீது விருப்பம் உள்ளது என்பதை அறிவாள். அப்புறம் எதற்கு இந்த மறுப்பு, விலகலென்று தெரியவில்லை.

அர்ச்சனாவிடம் கேட்டால் நிச்சயம் பதில் கிட்டும். இருப்பினும் சென்று கேட்டிட முடியாது, தன்னை பார்க்கும் நேரமெல்லாம் அன்னை முறைத்துக்கொண்டு கடுகடுவென இருப்பது மயிலாஞ்சலி கேட்க நினைப்பதை தடை செய்தது.

அவளின் கடுகடுப்புக்கான காரணமும் தெரியவில்லை.

அன்றும் அப்படித்தான். அர்ச்சனா தன்னுடைய மகளை பார்க்கும் நேரமெல்லாம் பார்வையால் முறைத்து, உதட்டை சுளித்துக் காட்டிட…

“இப்போ என்னம்மா ஆச்சு? உனக்கும் நான் புடிக்காம போயிட்டேனா? சரியா பேசமாட்டேங்கிற, பாக்குற நேரமெல்லாம் என்னவோ மொறச்சிக்கிட்டே இருக்க” என்று பொங்கிவிட்டாள் மயிலாஞ்சலி.

அதற்கும் அர்ச்சனா முறைத்தாளே தவிர பதிலேதும் சொல்லவில்லை. நகர்ந்திருந்தாள்.

வெடித்து வந்த கேவலை அடக்கியவளாக தன்னுடைய அறைக்கு ஓடிச்சென்றவளை கவனித்த ஆதி…

“நீங்களா நெனச்சு மனசோட மட்டும் வைச்சுக்கிட்டா அவள் அதுக்கு பொறுப்பாவாளா? அவள் மனசுலையும் என்ன இருக்குன்னு புரிஞ்சிக்கப்பாருக்கா. எப்போபாரு உன் தம்பிக்கு அக்காவா மட்டுமே இருக்காத” என்று கடிந்து கொண்டான்.

“என்னடே உளர்ற?” என்று அர்ச்சனா விழிகள் இடுங்கிட…

“சின்னவன் அஞ்சலியை விரும்புறானா?” எனக் கேட்டிருந்தான் ஆதி.

“உனக்கெப்படித் தெரியுமாட்டிக்கு?” அர்ச்சனா அதிர்வோடு வினவினார்.

“அவன் எனக்கும் தம்பிதேன்” என்ற ஆதி, “உனக்கும் ரெண்டேரையும் ஜோடி சேர்க்கணும் ஆசை இருக்குதான? அதை நீயி ஏன் அன்னைக்கு ஐயா தீரன் கிட்ட உனக்கு பொண்ணு அஞ்சலிதேன்னு சொல்லும்போது சொல்லல?” எனக் கேட்டான்.

அவனுள் ஓர் அனுமானம் இருந்தது. அதனை உறுதி செய்துகொண்ட பின்னர் மயிலாஞ்சலியிடம் பேசுவோமென்று அர்ச்சனாவிடம் வந்திருந்தான்.

“அன்னைக்கு அரவிந்த்கிட்ட சொல்லும் போதே தெரியும். அவன் உங்ககிட்டலாம் சொல்லிப்புடுவான்னு” என்ற அர்ச்சனா, “உங்க நாலேருக்கு மட்டுந்தேன் தெரியுமா? இல்லை வேற யாருக்கெல்லாம் தெரியும்?” என்றாள்.

“நமக்கும், பெரியவங்களைத் தவிர்த்து எல்லாருக்கும் தெரியும்” என்ற ஆதி, “அன்னைக்கு ஐயா சொல்லும்போது சின்னவன் மறுத்தது எனக்கே அதிர்ச்சியா இருந்தது. அவனுக்கு அஞ்சலி மேல ஈடுபாடு இல்லைன்னாலும், அவளை கட்டிக்கிட மறுக்கமாட்டியான் நெனச்சேன். அன்னைக்கு நீயும் மாமாவும் அவன் ரூம்ல இருந்து வெசனப்பட்டு வெளிய வந்ததை அறிவன் கவனிச்சிருக்கான்” என்றான்.

“ம்ம் அவன் மறுக்க காரணமே அவன் காதல்தேன்” என்றாள் அர்ச்சனா. பெரும் மூச்சோடு.

“புரியுராமாறி சொல்லுத்தா?”

“என்னத்த சொல்ல சொல்ற? அவள் வாயாலே அவளுக்கு கிடைக்கவிருந்த நல்ல வாழ்க்கையை கெடுத்துக்கிட்டான்னு சொல்ல சொல்றியாடே?” என்ற அர்ச்சனா, “அவள் மேல கொள்ளப் பிரியம் வச்சிருக்காண்டே உன் தம்பி. அவகிட்ட விருப்பத்தை சொல்லி கண்ணாலம் கட்டிக்கத்தேன் அவன் வந்ததே! ஆனால்” என்று இடை நிறுத்தியவள், “உன்கிட்ட அவள் பேசினதை கேட்டுப்புட்டு வந்து உக்கி கதறுனா(ன்) பாரு. என் குலையே அந்துப்போச்சுடே!” என்றாள்.

“அவளுக்கு விருப்பமில்லன்னா என்ன? நாங்க பேசி முடிவு செஞ்சு கட்டி வைக்கிறோம் சொன்னதுக்கு, அவளுக்கு நான் எப்பவும் அவள் மாமாவா மட்டும் இருக்கிறதுலதேன் விருப்பமாட்டிக்கு… அவளுக்கு என்ன விருப்பமோ அதுதேன் என் விருப்பமும். இனி இதைப்பத்தி பேசவே கூடாதுன்னுட்டான்” எனக் கூறினாள்.

“அப்போ அஞ்சலிக்கு அவனை கட்டிக்க விருப்பமில்லனுதேன் கண்ணாலமே வேணாமின்னுட்டானா?”

“ஆமா!”

“கிறுக்குப்பய” என்று தன்னுடைய தம்பியை திட்டிய ஆதி, “உன் மவளும் அவனை இப்போ விரும்புறா தெரியுமா?” எனக் கேட்டான்.

“நெசமாவாடே?” அப்படியொரு பூரிப்பாய் எதிர்பார்ப்போடு கேட்டாள் அர்ச்சனா.

“என்கிட்ட பேசும் போது அவளே உணராம இருந்திருக்கா. அதுக்கு பொறவு ரோசிக்கும் போதோ இல்லை வேறென்னவோ நடந்திருக்கு. அஞ்சலிக்கு அவள் மனசு புரிஞ்சியிருக்கு. அடுத்து சின்னவன் வேணாமின்னு குழப்பி விட்டுட்டான். அவளுக்கு அவள் மாமாவாவே அவன் இருக்கணுமின்னா என்னா அர்த்தம்? அதை உன் பொண்ணுக்கும் சரியா சொல்லத் தெரியல. உன் தம்பிக்கும் சரியா புரிஞ்சிக்கத் தெரியல. ரெண்டும் ஒருத்தருக்கொருத்தர் பாக்கேன்னு காதலை விட்டுக்கொடுத்து நம்மளை சுத்தல்ல விடுதுங்க” என்றான். அலுப்பாக.

“நீயி சொல்றது பொய்யில்லையேடே?”

“இல்லக்கா” என்ற ஆதி, “ரெண்டும் மனசு விட்டு பேசிக்கிட்டாலே சுமூகமாகிடும்” என்றான்.

“நான் இப்போவே அவனுக்கு கூப்பிட்டு சொல்றேன். ரொம்ப சந்தோசப்படுவியான். இங்கிருந்து எம்புட்டு வலியோட போனான்” என்ற அர்ச்சனா தீரனுக்கு அழைத்திட, அவனுக்கு இணைப்பு கிடைக்கவே இல்லை.

“அவனுக்கு நீயி போன் போட்டு புலம்புவன்னு தெரிஞ்சிருக்கு அதேன் உன்னைய பிளாக் பண்ணியிருக்கான்” என்றான்.

“அப்போ நீ போடு!”

“உன்னையே பிளாக் பண்ணியிருக்கான். அவன்கிட்டலாம் என் நெம்பர் இருக்கான்னே தெரியல” என்ற ஆதியின் எண்ணும் இணைப்பில் இணைந்திட முடியவில்லை.

“அஞ்சலி காலையில கூட சத்தம் வருது அவன் போன் எடுக்க மாட்டேங்கிறான் அப்படின்னு மாமாகிட்ட சொல்லிட்டு இருந்தாடே!”

“எப்பவும் அவனோட அவள் மட்டுந்தேன் இருந்திருக்கா. அதேன் அவள் நெம்பரை பிளாக் பண்ணலப்போல” என்ற ஆதி, “நான் அஞ்சலி கிட்ட பேசிட்டு வாரேன். பொறவு ஒரு முடிவுக்கு வருவோம்” என்றான்.

“தீரனுக்கும், அஞ்சலிக்கும் கண்ணாலமாகிப்புடும்ல?”

“அது அவீங்க கையிலதேன் இருக்கு” என்ற ஆதி, “அஞ்சலிக்கு அவன் காதல் தெரிஞ்சாலே போதும். அவளே அவனை கட்டிக்குவாள்” என அன்று தீரன் கேட்காது விட்டதை ஆதி அர்ச்சனாவிடம் சொல்லியிருந்தான்.

“இதெல்லாம் அவன் என்கிட்ட சொல்லலையேடே” என்று அர்ச்சனா கூற,

“அவன் இதை கேட்டிருக்கமாட்டியான். அஞ்சலி எனக்கு அப்படியொரு எண்ணமே இல்லன்னு சொன்னதுமே அடுத்து பேசுனதை கேட்காம போயிருப்பான் நெனைக்கிறேன்” என்றான் ஆதி.

“இதுங்கல என்னன்னு சொல்லி திட்டுறது? சுலுவுல சேர வேண்டியதை வுட்டுப்போட்டு இப்படி சுத்திக்கிட்டு மூக்கை தொடுதுங்களே” என்றாள் அர்ச்சனா.

“இப்படித்தேன் சேரணுமிருந்தா நடுவுல நாம என்ன பண்ணிப்புட முடியும்” என்ற ஆதி, “இதுக்கு மேலவும் நாம அவசரப்பட வேணாமாட்டிக்கு” எனக்கூறி அஞ்சலியை தேடிச் சென்றான்.

வீட்டின் பின்பக்கம் கிணற்றுத் திண்டில் கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

“இப்போ என்னத்துக்கு எப்பவும் சோகமாவே மொவத்தை வச்சிக்கிட்டு சுத்தி வார?”

ஆதியின் குரல் கேட்கவே நிமிர்ந்து பார்த்தாள் மயிலாஞ்சலி.

தனது உள்ளத்து வேதனையெல்லாம் யாரிடமாவது பகிர்ந்தால் தேவலாமென இருந்தவள் ஆதியிடம் மறைக்காது கூறினாள்.

“மாமாவுக்கு என்னைய கட்டிக்கிட ஆசை… ஊருக்கு கிளம்பிப் போனப்போ ஒரு பார்வை பார்த்தாய்ங்க… மொத்தமா உசுரையே உருவி எடுத்த கணக்கா” என்றதோடு, “மாமா என்கிட்ட பேசவே மாட்டேங்குது. ஏன் என்னைய வேணாம் சொன்னாய்ங்க காரணம் தெரியவே மாட்டுங்குது. மனசுல அம்புட்டு வலியாவுது மாமா” என்று தனக்கு அருகில் வந்தவனின் தோளில் முகம் பதித்து அழுதிருந்தாள்.

“அவென் உன்னை வேணாமின்னு சொன்னதும் உன்மேல இருக்க காதல்தேன் காரணம்” என்று அனைத்தும் கூறி வலியில் துவண்டிருந்தவளை சரி செய்திருந்தான். இயல்பாக்கியிருந்தான்.

“நெசத்துக்குமா மாமா?”

“வேணுன்னா உன் அம்மாக்கிட்ட கேக்குறியா?”

“அய்யோ வேணாம். அவீங்க தம்பிக்கு மவளை கட்டிக்கொடுக்க அவீங்க நெனைக்கலாம். ஆனால் மவள் லவ் பண்ணிப்புடக்கூடாது. செவுள திருகிடுவாய்ங்க” என்ற அஞ்சலி, “இனி நான் பார்த்துக்கிறேன். தேங்க்ஸ் மாம்ஸ்” என அவனின் இருபக்க கன்னத்தை இழுத்துப் பிடித்து ஆட்டினாள்.

“ஏய் வாலு…” என்ற ஆதி, “என்ன பண்ணப்போற?” எனக் கேட்டான்.

“கண்ணாலந்தேன்!”

“அவன் இல்லாமலா?”

“தாலிக்கட்ட உங்க தம்பி இங்க வருவார் மாமோய்” என்றவள், அப்போதே வீட்டிற்குள் ஓடி அனைவரையும் கூடத்தில் ஒன்று கூட்டியிருந்தாள்.

error: Content is protected !!
Scroll to Top