அன்பின் அதீதம் 21

அத்தியாயம் 21

பாயுமொளி நீ எனக்கு,
பார்க்கும்விழி நானுனக்கு;
தோயும்மது நீ யெனக்கு,
தும்பியடி நானுனக்கு;
வாயுரைக்க வருகுதில்லை,
வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;
தூயசுடர் வானொளியே!
சூரையமுதே! கண்ணம்மா!

– மகாகவி பாரதியார்.

தீரனின் காதலும் அந்த பாரதியின் கவிதைக்கு இணையான மேன்மை கொண்டிருந்தது அவனது மனைவியிடத்தில்.

திருமணம் முடிந்த கையோடு மணமக்களை மீனாட்சி அம்மன் பிரகாரத்தை மூன்று முறை சுற்ற வைத்து பெரியவர்கள் வாழ்த்தியிருந்தனர்.

மற்ற சடங்குகள் முடித்து வீட்டிற்கு புறப்பட்டவர்கள், தங்களின் கிராமத்திற்குள்ளேயே இருக்கும் குல தெய்வ வழிபாட்டையும் முடித்துக்கொண்டு மாலை நேரம் தான் இல்லம் வந்து சேர்ந்தனர்.

ஆலம் சுற்றி உள்ளே வரவேற்று கூடத்தில் அமர வைக்கப்பட்ட மணமக்களுக்கு அடுத்தடுத்த சடங்குகள் பெரும் ஆரப்பரிப்புகளுக்கு நடுவில் கொண்டாட்டமாக நடந்தேறியது.

“நீயி உன் ரூமுக்கு போ சாமி” என்று தீரனை மட்டும் அனுப்பி வைத்த கொற்றவை, மற்றவர்களையும் பார்வையால் அவரவருக்கான வேலைக்குள் தள்ளி, “ராத்திரி சாப்பாட்டு நேரத்தை சுருக்க முடிச்சிட்டு எல்லாரையும் வெரசா ரூமுக்குள்ள முடங்கச் சொல்லு துளசி” என்றார்.

“சரிங்கத்த” என்ற துளசி, அப்போதே இரவு உணவுக்கான வேலையை மற்றைய பெண்களுடன் ஆரம்பித்திருந்தார்.

மயிலாஞ்சலி மட்டும் கொற்றவையுடன் தனித்து விடப்பட்டாள்.

“எப்போ ஊருக்கு போவனும் எதுவும் சொன்னானா?” கொற்றவை கேட்க,

“இன்னும் எதுவும் கேட்டுக்கல ஆத்தா” என்ற மயிலாஞ்சலி, “லீவு அதிகமாக்கணும்… எனக்குதேன் கண்ணாலன்னு தெரியாம இன்னைக்கே ரிட்டர்ன் டிக்கெட் போட்டுட்டேன்னு சொன்னாய்ங்க” என்றாள்.

“அப்போ மேல லீவு போட்டிருப்பியான்… நீங்க அங்கிட்டு போறதுக்குள்ள தாலிச்சரடு மாத்திப்புடுவோம்” என்றார்.

“சரிங்க ஆத்தா” என்று மயிலாஞ்சலி அவருடன் பேச்சில் ஆழ்ந்திட, அத்வத் மற்றும் மற்ற பிள்ளைகள் அவளை சூழ்ந்து கொண்டனர்.

இனி அவளும் தீரனை போன்று தங்களுடன் இருக்கப்போவதில்லை என்பதை ஓரளவுக்கு புரிந்துகொண்ட பிள்ளைகள், அதனை ஏற்கவும் முயன்றனர்.

“அடிக்கடி வந்து போவனும்” என்று ஒன்றாகக் கூறிட அவளுக்கு கண்கள் கலங்கிவிட்டது.

இந்த அன்பிற்காகத்தானே வீட்டோடு வரன் கேட்டது அவள்.

ஓரளவு தன்னை நிலைப்படுத்திய மயிலாஞ்சலி, “நித்தம் போனுல பார்த்துக்கிடலாம்டே” என்று பேசி பிள்ளைகளை இயல்பாக்கியிருந்தாள்.

பிள்ளைகள் விளையாடக் கூப்பிட… மயிலாஞ்சலி கொற்றவையை பார்த்தாள்.

“சொந்தமெல்லாந்தேன் போயாச்சே! நம்ம ஆளுவ மட்டுந்தேன் இருக்கோம். இங்க முத்தத்துலே (முற்றம்) விளையாடுங்க” என்று அனுமதி வழங்கினார்.

அடுத்து நேரம் மயிலாஞ்சலிக்கு பிள்ளைகளுடன் விரைந்து ஓடியிருந்தது.

“நீயி உன் அறைக்கு போயி குளிச்சிட்டு இருத்தா! அத்தைவ வருவாய்ங்க” என்றாள் அர்ச்சனா.

“அத்தைய்ங்களா!” என்று வெளிப்படையாய் அதிர்வை காட்டிய மயிலாஞ்சலி… “அச்சோ அவீங்கயெல்லாம் வேணாமாட்டிக்கும்மா! வந்தா கேலி பேசியே கொன்னுடுவாய்ங்க” என்றாள். மருதாணி வைத்த பொழுது நடந்த பேச்சுக்களை நினைவில் கொண்டு அலறினாள்.

“என்ன ஏதோ எங்களுக்கு பயப்படுறமாறி அம்புடுது” என்று அனைத்து பெண்களும் அங்கு கூடிவிட,

“ஒண்ணுமில்லை… ஒண்ணுமில்லையே” என்று இதழ் விரித்து வைத்த மயிலாஞ்சலி,

“நானே ரெடி ஆகிடுறேம்மா! யாரும் வர வேணாம்” என்றாள்.

“எப்புடி அறைக்கும் நீயே போயிக்குவியா?” தேவதாரணி அதிக சீண்டலோடு கேட்டிட, மயிலாஞ்சி திணறிப் பார்த்தாள்.

“என்னதேன் அவளுக்கு நீங்கெல்லாம் அத்தை உறவா இருந்தாலும், இனி அவளும் உங்களுக்கு தங்கச்சி முறையாவுதுல… அப்புறம் என்னங்கட்டி வம்பு பேசிக்கிட்டு. போங்க போய் அறைக்குள்ள முடங்குங்க” என்று கொற்றவை விரட்டிடவே அனைவரும் சிட்டாய் பறந்திருந்தனர்.

அரை மணி நேரத்தில் வீடே அமைதியாகியிருந்தது. அதற்காக எல்லோரும் அறைக்குள் எல்லாம் சென்றிடவில்லை. பிள்ளைகள் மட்டும் உறங்கியிருந்தனர். மற்ற அனைவரும் அமைதியாக பேச்சின்றி அங்குதான் கூடத்தில் அமர்ந்திருந்தனர்.

“புள்ளையை கூட்டிட்டு வாத்தா” என்று கொற்றவை துளசியிடம் கூற,

“நான் எப்படிங்கத்த?” என்று துளசி தயங்கினார்.

“அடி கூறுகெட்டவளே இனிமேட்டுக்கு அவளுக்கு நீ மாமியாரும் கூட, அர்ச்சனா நாத்தி முறை வந்தாலும் அம்மாவாச்சே அவகிட்ட எப்படி சொல்ல… நீதேன் போவனும்” என்றார் கொற்றவை.

“நம்ம அஞ்சனையை அனுப்புவோம் அத்த” என்று துளசி சொல்ல…

“ஆமா ஆத்தா” என்றாள் அர்ச்சனா.

“ம்ம்… அப்போசரி” என்ற கொற்றவை, “தீரனை கூப்பிட்டு சாமி கும்பிடச்சொல்லி அறைக்கு அனுப்பி வைய்ங்க” என்றார்.

“இப்போதேன் மாமா கூட்டியார போனாய்ங்க” என்று அர்ச்சனா சொல்ல, ரத்னவேலுவுடன் தீரன் அங்கு வந்தான்.

கூடத்திலும், பூஜையறையிலும் மட்டும் மின்விளக்குகள் ஒளிர்ந்தன. மற்ற இடம் அனைத்தும் இருளில் மூழ்கியிருந்தது.

தீரனின் பார்வை மனைவியைத் தேடியது.

“நீயி தேடுற ஆளு, நீயி அறைக்குள்ள போனாதேன் வரும் தம்பி” என்று அவனின் காதில் கிசுகிசுத்துச் சென்றாள் அஞ்சனை.

தீரன் மெலிதாய் புன்னகைத்துக் கொண்டான்.

“சாமி கும்பிடு ராசா” என்று கொற்றவை இறைவனை வணங்கி எழுந்த பேரனுக்கு திருநீர் வைத்துவிட, அவன் முத்து மாணிக்கம், கொற்றவை பாதம் பணிந்து எழுந்தான்.

“சந்தோஷமா வாழணும்” என்று ஆசீர்வதித்து அவர்கள் விலகிட,

துளசி அவனது முகம் பற்றி நெற்றியில் முத்தம் வைத்திருந்தார். ஆதுரமாக. இத்தனை வருட மகனின் தனிமை ஏக்கத்தினை ஒற்றை முத்தத்தில் நிறைவுக்கொள்ளச் செய்திருந்தார்.

மாயவேல் மகனின் நெற்றி கோதினார் வாஞ்சையாக.

“அப்பா…”

“உன்னைய ஒத்தையில தவிக்க விட்டதுக்கு மன்னிச்சிடுய்யா” என்று மாயவேல் மன்னிப்பு கேட்க, அப்போதுதான் அவருக்கு மகனிடமிருந்த திரை விலகியது போன்றிருந்தது.

“அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா.” புன்னகைத்திருந்தான் தீரன்.

“அவன் கிட்ட மன்னிப்பு கேட்கணுன்னா மொத்த பேரும் கேட்கணும். எல்லாத்தையும் மறந்துபுடுவோம்” என்றார் ரத்னவேலு.

“சரி சரி நின்னுட்டே இருக்காதீங்க” என்று கொற்றவை சொல்லிட, தீரன் ரத்னவேலுவை ஏறிட்டான்.

“நீயும் அச்சும்மாவும் ஆசீர்வாதம் பண்ணுங்க மாமா” என்றவனை ஒருசேர அணைத்து விடுத்தவர்கள், “நீயி நல்லாயிருக்கணும்டே” என்று நெகிழ்வோடு வாழ்த்தினர்.

தீரன் அறைக்குச் செல்ல, எதிரே அஞ்சனையுடன் வந்து கொண்டிருந்தாள் மயிலாஞ்சலி.

பின்னால் பெரியவர்கள் நின்றிட தீரன் பார்த்தும் பாராததைப் போன்று கடந்து செல்ல,

“மாமா” என்று அழைத்து அவனை நிறுத்தியிருந்தாள்.

“அஞ்சலி என்ன பன்ற? ஐயா, ஆத்தா எல்லாம் இருக்காய்ங்க” என்று அஞ்சனை அதட்டிட…

“நீங்க வாங்க மாமா” என்று தானே தீரனின் கை பிடித்து, கூட்டி வந்து அனைவருக்கும் மத்தியில் கணவனுடன் இணைந்து நின்றாள்.

“என்னடி இது கூறில்லாம” என்று அர்ச்சனா கடிந்திட,

“கொஞ்சம் கம்மின்னு இரும்மா” என்ற மயிலாஞ்சலி,

“கோவில்ல வச்சு கண்ணாலம் ஆனதால… அங்க அம்மனுக்கு முன்னுக்க வேற யார் கால்லையும் விழக்கூடாதுன்னு சொல்லிட்டீய்ங்க. இப்பவும் தனித்தனியா ஆசீர்வாதம் பண்ணா என்ன அர்த்தம்? நாங்க ஜோடியா ஆசி வாங்க வேணாமா?” எனக் கேட்டாள்.

கொற்றவையே தான் இதை மறந்துபோனோமே என்று நெற்றியில் தட்டிக் கொண்டார்.

“டேய் அறிவா சாமி ரூம்ல அர்ச்சதை இருக்கு எடுத்திட்டு வாடே” என்று சொல்ல அவன் ஓடிச்சென்று எடுத்து வந்தான்.

அங்கு அனைவருக்கும் தீரன் இளையவன் என்பதால், முத்து மாணிக்கம் கொற்றவை மூத்த ஜோடி ஆரம்பித்து கயல்விழி ஹரிஷ் உட்பட, அஞ்சனை குமார் வரை அனைவரும் தங்களது இணையுடன் புதுமணத் தம்பதியரை நடுவில் வைத்து சுற்றி நின்றிட…

தீரனும், மயிலாவும் அனைவருக்கும் பொதுவாய் வணங்கி நிற்க, வான் தேவதைகளின் பூக்களாய் பெரியவர்களின் அர்ச்சதை மழை அவர்களின் மேல் தூவியது.

அனைவரும் ஒருசேர மனதார தங்களின் பிள்ளைகள் இருவரையும், “கண்ணுக்கு நிறைவா வாழணும்” என வாழ்த்தினர்.

*********************

முதல் முறை மூடிய அறைக்குள் உரிமை உள்ளவளாக, அவனுக்கு மட்டுமே உரித்தானவளாக இனிய படபடப்புடன் தீரனின் அருகில் அமர்ந்திருந்தாள் மயிலாஞ்சலி.

அவளுக்கு அவனிடம் பயமோ, பதற்றமோ கிடையாது. ஆனால் அந்நேரத்துக்கான அவஸ்தை இயல்பாய் அவளிடம் ஒட்டிக்கொண்டிருந்தது.

தீரன் தன்னவளையேதான் பார்த்திருந்தான். கைக்கு கிட்டாதென நெஞ்சோடு மட்டும் பொத்தி வைத்தவள், இன்று அவனருகில். அவளை தன்னுடைய பக்கத்தில் வைத்து பார்ப்பதே அவனுள் பெரும் நிறைவாய்.

விழிகள் அகற்றாது பார்த்தது பார்த்தபடி இருந்தான்.

எப்போதும் அவனின் மகிழ்வாக மட்டுமே அவளிருக்கின்றாள். இதமாய் இந்நேரத்தை தாங்கி நின்றான்.

அவனது அசையா பார்வையால் அவளின் படபடப்பெல்லாம் அவஸ்தையின் அளவை கூட்டியது.

இருவருக்கும் இடையில் நிலவும் அமைதியை உடைத்தால் போதுமென நினைத்தவளுக்கு என்ன பேசுவதென்று தெரியாது…

“ரிச்சி அண்ணே போயிட்டாங்களா?” எனக் கேட்டாள். அவனின் முகம் பாராது.”

“அவன் மேரேஜ் முடிஞ்சதுமே கிளம்பிட்டான். கேரளாவுக்கு அவங்க வீட்டுக்கு போயிருக்கான். நாம நியூயார்க் போன அப்புறம் தான் அவனே வருவான். வன் மன்த் லீவ் போட்டிருக்கான்” என்றான் தீரன்.

“அப்போ நாம எப்போ போறோம்?”

“நாளானன்னைக்கு!”

“ஏதே!” என்று அதிர்ந்தவள், அப்போதுதான் அவனின் முகம் பார்த்தாள்.

“அதுக்குள்ளவா?”

“நான் லீவுன்னு என்னோட வேலையில் எதுவும் செட்டில் பண்ணி வைக்கல. இன்னைக்கே கிளம்பிடுவேன்னு தான் வந்தேன். இந்த ரெண்டு நாள் தாமஸ் அலோவ் பண்ணதே பெரிய விஷயம். AI ல நியூ ஃபீச்சர் ஒன்னு முடிக்க வேண்டிய ஸ்டேஜ். சோ கண்டிப்பா லீவ் முடியாது. இந்த டாஸ்க் கம்ப்ளீட் ஆகிட்டா த்ரீ மன்த் கூட லீவ் எடுத்துக்கோ சொல்லியிருக்கான். சோ, அப்போ இங்க வந்து நிறைய நாள் இருப்போம்” என்றான்.

“ஹ்ம்ம்…” சத்தமின்றி வெளிவந்தது அவளின் குரல்.

“என்னோட தனியா அங்கவர பயமா இருக்கா?”

தீரனின் கேள்வியில் விலுக்கென நிமிர்ந்து பார்த்தவள், இல்லையென தலையசைக்க, தீரன் தன்னிரு கைகளையும் விரித்து வா என்பதைப்போல் இமைகள் மூடி திறந்தான்.

சடுதியில் பாந்தமாய் அவனுள் அடங்கியிருந்தாள்.

“மயிலாவுக்கு என்ன சொல்லணும்?”

“ம்ஹூம்… ஒண்ணுமில்லை” என்று முகத்தை அவனது மார்பிலே தேய்த்தவள், “என்ன சொல்லணும் தெரியல” என்றதோடு,

“ஒரு மாதிரி ஷிவரிங்கா இருக்கு” என்றாள்.

“அப்போ அதை போக வைக்கணுமே! மயிலாவுக்கு ஓகேவா?” என குறும்பாய் ஒற்றை கண்ணடித்தான்.

அதில் மெல்லிய படபடப்பின் அளவு கூடியது. அதை மறைக்கும் பொருட்டு…

“என் பரிசு எங்க?” என்றாள்.

தீரன் நியூயார்க்கிலிருந்து இங்கு வந்தபொழுது அனைவருக்கும் பரிசு கொடுத்திருக்க தனக்கு இல்லையாயென மயிலாஞ்சலி கேட்டதற்கு பிறகு தருவதாக சொல்லியிருந்தான். தற்போது அதனையே அவள் கேட்டிருந்தாள்.

“தாலி கட்டினதும் கொடுத்திட்டனே” என்ற தீரன் மெத்தையில் தன் மடியை தொட்டுக்கொண்டிருந்த அவளின் பாதத்தை பிடித்து, அவளது மென் விரலில் தான் போட்டுவிட்ட மெட்டியில் அழுத்தமாக முத்தம் வைத்தான்.

வேகமாக அவனது மார்பில் புதைந்திருந்தாள்.

“நான் கேட்டப்போவே இந்தப் பரிசை கொடுத்திருந்தா, என் மரமண்டைக்கு அப்போவே புரிஞ்சிருக்கும்” என்று முணுமுணுத்தவளின் உதடுகள் மார்பு உரசிட…

“சில்லாவுது மயிலா” என்றிருந்தான். கிறக்கமாக.

அக்கணம் அவனுக்கு வேண்டிய ஒப்புதலை அவளின் அணைப்பு தன்னைப்போல் வழங்கிட, “நீங்க சந்தோஷமா இருக்கீய்ங்களா மாமா?” எனக் கேட்டாள்.

தன்னுடைய மார்பில் அழுந்தியிருந்தவளின் முகம் பற்றி நிமிர்த்திய தீரன்…

“என்னோட மொத்த சந்தோஷமாவும் நீயிருக்க” என்று தன்னுடைய மகிழ்வை முத்தத்தால் அவளின் நெற்றியில் துவங்கி வைத்தான்.

சில்லென்ற இதம் சூடாய் உடல் முழுக்க பரவ, அழுந்த கண்களை மூடியிருந்தாள்.

இடையோடு கையிட்டு தூக்கி தன்னுடைய மடியில் அமர்த்திக்கொண்டான்.

அவனிதழ்களுக்கு முன் ஒற்றை விரல் அவளது முகமெங்கும் ஊர்வலம் நடத்தி பாதை வகுக்க, அதரம் பின் தொடர்ந்து முடிவிலா ஆதாரத்திற்கு வழிவகுத்தது.

“மாமா” என்று காற்றாய் ஒலித்த ஓசை அறையெங்கும் நிறைய, அவளுள் அவன் மொத்தமும் நிறைந்திருந்தான்.

இறுகிய அணைப்புகளும், இன்பத்தின் வலிகளும் மென்மையில் துவண்டுபோயின.

அவளுள் அவன் நிறைய, அவனுள் அவள் தொலைந்திட்டாள்.

அன்பு கொண்ட நெஞ்சம் இரண்டும் பாரமேற்றிய அன்பின் அதீதத்தை முழுவதுமாய் தனக்கான இடத்தில் சேர்ப்பித்திருந்தனர்.

கொள்ளை கொண்டு, கொடுக்கும் கொடையாளர்களாய்… உயிர் கரைத்து ஜீவன் பெற்றன.

நீளா இரவில் மீளா காதல் கொண்டனர். கரை காணா வாழ்வின் எல்லையாய் மோட்சம் கொண்டது அவர்களின் அன்பின் அதீதம்.

************************

நான்கு மாதங்களுக்குப் பின்னர்…

நியூயார்க்.

மயிலாஞ்சலிக்கு கர்ப்பகாலத்தில் இலகுவாக அணிய வேண்டிய ஆடைகள் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து வாங்கி வந்திருந்தான் தீரன்.

அனைத்தையும் பெட்டியில் மடித்து வைத்தபடி இருந்தவனை, உம்மென்ற முகத்துடன் முறைத்தபடி பார்த்திருந்தாள் மயிலாஞ்சலி.

“இப்போ எதுக்கு என்னை பாசமா பாக்குறியாம்?”

“பாசமாலாம் பார்க்கல… கடிச்சு வைக்கலாமான்னு பாக்குறேன்” என்றாள். கடுகடுப்போடு.

“நைட்டு கடிச்சது போதலயா?”

“இன்னும் கடிச்சாலும் போதாது” என்றவள், தீரன் துணிகளை மடித்து வைக்க வைக்க, பெட்டியிலிருந்து ஒவ்வொன்றாய் எடுத்து களைத்து வைத்தாள்.

“மயிலா!”

“என்ன இப்போ மயிலாக்கு?” என்றவள், “உங்களையே சுத்தி சுத்தி வாரன்னு ரொம்பத்தேன் பவுசு காட்டுறீய்ங்க” என்று அங்கிருந்து எழுந்து சென்றாள்.

மயிலாஞ்சலி அறையைவிட்டு வெளியில் வர முத்து மாணிக்கம், கொற்றவை தவிர்த்து மொத்த குடும்பமும் அங்கு இருந்தனர்.

“இதை குடித்தா” என்று துளசி பழச்சாறு அடங்கிய குவளையை கொடுக்க, “ஒரு இடத்துல உட்காரு அஞ்சலி. அதிகம் நடக்காத. இப்போதேன் கவனமா இருக்கணும்” என்றாள் அர்ச்சனா.

இப்படி ஆளாளுக்கு அனைவரும் அவளைத் தாங்கினாலும், அவளின் வதனம் சுருங்கியேதான் இருந்தது.

“இப்படியே நடந்துட்டே இருந்தா நேரந்தேன் போவும். எல்லாரும் கெளம்புற வழியைப் பாருங்க. நம்ம ஊர்ல பஸ் ஏறுற மாதிரி விமான நிலையத்துல விமானம் ஏற முடியாது” என்று அனைவரையும் விரட்டிக் கொண்டிருந்தார் மாயவேல்.

“ஏதோ என் தம்பி பேர்ல அமெரிக்கா வரை வந்தாச்சு. இல்லைன்னா நம்ம மருதையை தாண்ட விட்டிருப்பாய்ங்களா” என்று ஆதிரா முணுமுணுக்க, “அதேன் அமெரிக்காவை பத்து நாளா சுத்தி பார்த்தியே! போதாது” என்றாள் அர்ச்சனா.

“சரி சரி அரட்டை அடிச்சு நேரத்தை ஓட்டாதீங்க” என்று கனகவேல் சொல்லிட,

“ரிச்சி எங்க?” என்றார் ராஜவேல்.

“அவன் டாக்சி வந்திருச்சுன்னு போனான்” என்றார் கேசவன்.

“இதோ ரிச்சியே வந்தாச்சே” என்ற ஆதி, “எத்தனை டாக்சி. எல்லாரும் போவ ஆவுமா?” எனக் கேட்டான்.

“இங்கிருந்து மெட்ரோ வரைதேன் டாக்சி ப்ரோ. அப்புறம் ஏர்போர்ட் வரை ட்ரெயின்” என்றான்.

“ஹோ…”

“லக்கேஜ் எல்லாம் கீழ கொண்டுப்போகனும்” என்ற ரிச்சர்ட்டுடன் ஆண்கள் அனைவரும் புறப்பட்டிருந்தனர்.

“நீயி என்னட்டி இன்னும் உட்கார்ந்திருக்க” என்று அர்ச்சனா மகளை அதட்டிட,

“அச்சும்மா” என்று அறையிலிருந்து வந்திருந்தான் தீரன்.

“அவளை நான் எதுவுமே சொல்லல…” என்று அர்ச்சனா நகர்ந்திருந்தார்.

“உனக்கு ஒரு மாசத்துக்கு தேவையான பொடி, மசாலா, எல்லாம் அரைச்சு கிச்சன்ல சிவப்பு கலர் கப்போர்டில் வச்சிருக்கு தீரா” என்ற காயத்ரி, “எல்லாம் ஒழுங்கா காலியாவனும்” என்று பத்திரம் காட்டினார்.

“சரிங்க சித்தி” என்ற தீரன், மயிலாஞ்சலியின் அருகில் அமர, அவளோ வேகமாக எழுந்து அறைக்குள் சென்றாள்.

“பேசாம நீயி உன்னால எப்போ ஊருக்கு வந்து தங்க முடியுமோ அப்போவே கூட்டிட்டு வாய்யா. ஊருக்கு கிளம்பனும் சொன்னதுல இருந்து மொவத்தை எட்டூருக்கு தூக்கி வைச்சிருக்கா” என்றார் கலாவதி.

“ஆமா சாமி… அவள் அங்க வந்தும் இப்படி சிலிப்பிக்கிட்டு திரிஞ்சா… அவளை யாரு கண்டிக்க?” என்றார் கல்யாணி.

“உங்களையெல்லாம் விட்டு இருக்க முடியாது வீட்டோட மாப்பிள்ளையை பாருங்கன்னு சொன்னவளா இவன்னு இருக்கு” என்றார் மாலதி.

“நான் பேசுறேன் சித்தி” என்று தீரன் அறைக்குள் சென்றான்.

முகம் பார்க்கவே மாட்டேனென்றவளை இழுத்து பிடித்து தன்னுடைய மடியில் இருத்தி கைகளால் அணையிட்டிருந்தான்.

மயிலாஞ்சலி விசும்பிட… தீரன் அவளை கண்டுகொள்ளவே இல்லை.

அவளின் வயிற்றில் கை வைத்து குழந்தையுடன் ஒன்றிவிட்டான்.

“அப்பாவுக்கு பேபி தினமும் கால் பண்ணனும். அப்பாகிட்ட பேசணும். அப்பா அங்க உங்ககிட்ட வரைவரைக்கும் அம்மாவை பத்திரமா பார்த்துக்கணும்” என்றவன், அழுத்தமாக முத்தம் வைத்தான்.

“ஏன் மாமா இப்படி பண்றீங்க?” தாளமாட்டாது கேட்டிருந்தாள்.

“என்ன பண்றாங்க?” என்ற தீரன், அவளின் முகம் துடைத்து, கலைந்திருந்த பின்னலை அவிழ்த்து தானே பின்னலிட ஆரம்பித்தான்.

“நீங்களும் வாங்க மாமா!”

“மாமா பிளீஸ்.”

“இல்லைன்னா நான் இங்கிட்டே இருக்கேன். உங்களுக்கு லீவ் கிடைச்சதும் ரெண்டேரும் சேர்ந்து போவோம்.”

“மாமா!”

“டேய் தீரா!”

அவளின் கெஞ்சலுக்கு பதில் பேசாது தன்னுடைய வேலையில் அவன் கண்ணாக இருக்க அதட்டி அழைத்திருந்தாள்.

எப்போதாவது அரிதாக அவள் பன்மையை விடுத்து அதீத உரிமையாய் அழைத்திடும் அவ்விளிப்பில் அவன் மனம் குளிர்ந்துபோகும்.

குளிரை மறைத்தவனாக அவளை அவன் பார்க்க…

அவனது கழுத்தில் கரங்களை மாலையாகக் கோர்த்துக் கொண்டவள்,

“நீயில்லாம எப்படிடா! உண்மைக்கும் முடியாது” என அவனது கன்னத்தில் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு முத்தம் வைத்தாள்.

“நான் ஆபீஸ் போயிட்டா நீ நாள் முழுக்க இங்க தனியா இருக்கணும். அதோட நீ இங்க இருக்கிறதுக்கும் அங்க இருக்கிறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்குடா. அங்க நம்ம கிராமத்து சூழலே வேற. இந்த டைம்ல உனக்கும் பேபிக்கும் அங்க இருக்கிறதுதான் நல்லது. நம்ம சொந்தத்துக்கு நடுவுல பேபி இருக்கிறதே வேற” என்று பல முறை சொல்லிய காரணத்தை இப்போதும் பொறுமையாகக் கூறியிருந்தான்.

திருமணம் முடிந்து மூன்றாம் நாள் வேலையை காரணம் காட்டி மனைவியோடு இங்கு வந்திருந்தான். அடுத்த மாதமே மயிலாஞ்சலி உண்டாகியிருக்கும் விடயம் தெரிய அனைவரும் கொண்ட மகிழ்வுக்கு அளவில்லை.

முதல் மூன்று மாதத்திற்கு பயணத்தை தவிர்க்குமாறு மருத்துவர் தெரிவித்திட, சரியாக மூன்றாம் மாதம் முடிய பத்து நாட்கள் இருக்கும் முன்னர் மொத்த குடும்பத்தையும் இங்கு வரவழைத்துவிட்டான் தீரன்.

அவர்கள் ஊருக்கு செல்லுமன்று மயிலாஞ்சலியையும் உடன் அனுப்பி வைக்க நினைத்த முடிவை, முதல் நாள் இரவு தான் அவளிடம் தெரிவித்திருந்தான். அதுமுதல் அவளும் அவனை விட்டு இருக்க முடியாதென பல விதத்தில் கூறிவிட்டாள். தீரன் சற்றும் அசைந்து கொடுக்கவில்லை.

“கல்நெஞ்சக்காரா” என்று வேகமாக அவன் மடியிலிருந்து எழ, மீண்டும் தன் மடியில் அமர்த்திக்கொண்டான்.

“இந்த வேகம் இதுதான் கடைசி. பேபிக்கு சொன்னதுதான் மயிலாவுக்கும். தினமும் போன் பண்ணனும், நிறைய பேசணும், நிறைய மெசேஜ் பண்ணி என்னை வேலை செய்யவிடாம தொல்லை பண்ணிட்டே இருக்கணும். ஒழுங்கா சாப்பிடணும். யாரோடவும் வம்பு பண்ணக் கூடாது. நான் வரவரை கீழ உன் ரூம்லே இரு. அடிக்கடி மாடிப்படி ஏறக் கூடாது” என்று அவளைப்போன்றே ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு முத்தம் வைத்தவன், “நானுமே உனக்குள்ளதேன் இருக்கேன். சோ மயிலா ரொம்பவே சூதானமா இருக்கணும்” என்று அவளின் இதழில் அழுத்தமாய் ஆழ்ந்த முத்தம் வைத்து விலகியிருந்தான்.

அவனும் தன்னைவிட்டு பிரிந்திருக்க உள்ளுக்குள் போராடிக் கொண்டிருக்கிறான் என்பதை அவனது முத்தத்தின் ஆழத்தில் உணர்ந்து கொண்டவள் அதன் பின் எவ்வித பிடிவாதமுமின்றி கிளம்பிச் சென்றிருந்தாள்.

**********************

மருத்துவமனையில் உறவுகளுக்கு நடுவே பெரும் தவிப்போடு நின்றிருந்தான் தீரன்.

உள்ளே பிரசவ அறையில் அவனது உயிர் வலியில் துடித்துக் கொண்டிருந்தது.

அன்றைய தினம் தான் மயிலாஞ்சலிக்கு வளைகாப்பென நியூயார்க்கிலிருந்து வந்திருந்தான்.

ஏழாம் மாதமே செய்திட ஏற்பாடாகிய வளைகாப்பு, திடீரென தீரன் வரமுடியாது போனதால் ஒன்பதாம் மாதம் துவக்கத்தில் வைத்திட முடிவாகியது.

அப்போதும் தீரன் வர முடியாதென கடைசி நேரத்தில் ஏற்பட்ட பணியின் காரணமாக தெரிவித்திட,

“நீங்க எப்போ வாரீங்களோ அப்போ வைச்சிக்கலாம் மாமா” என்றிருந்தாள். அவளின் திடமான பிடிவாதத்துக்கு முன் மற்றவர்கள் தான் இறங்கிச்செல்ல வேண்டியதாயிற்று.

“ஏழாம் மாதமே வந்து குழந்தை பிறக்கிற வரை என்னோட இருந்து கூட்டிட்டுப்போறன்னு சொன்னீங்க மாமா” என்று அவனுடன் இருக்க முடியாத தவிப்பில் ஏக்கத்தோடு அவள் கூறிட, ஒன்பதாம் மாத இறுதியில் வருவதாக உறுதியாகத் தெரிவித்து அவளை மகிழ வைத்திருந்தான்.

அம்முறை சொன்னது போன்றே வந்தும் இருக்க… அன்று தான் மிகவும் கொண்டாட்டமாய் வளைகாப்பு ஆரம்பித்தது.

தீரன் வளையில் போடத் துவங்க அவளின் முகத்தில் சட்டென்று மாறுதல்.

“மயிலா” என்று அவளின் சிறு மாற்றத்துக்கும் அவன் துடித்திட, அவனின் கையை அழுத்தமாகப் பற்றியவள், “வலி வந்திருச்சு மாமா” என்று தன்னுடைய வலியை கணவனுக்கு காட்டாது மறைக்க முயன்றும் முடியாது, பற்களைக் கடித்துக்கொண்டு கூறினாள்.

அடுத்த நொடி அனைவரும் மருத்துவமனை விரைந்து வந்திருந்தனர்.

தனக்கு ஒன்றென்றால் தீரன் எந்தளவிற்கு பதற்றம் கொள்வானென்று தெரிந்திருக்கும் மயிலாஞ்சலி பிரசவ அறைக்குள் செல்லும் வரை கொஞ்சமும் சத்தத்தைக் காட்டாது வலியை உள்ளுக்குள்ளே கட்டுப்படுத்தி வைத்திருந்தாள்.

அவளது வலியின் அடக்கல், அவள் பிடித்திருந்த தன்னுடைய கையில் உணர்ந்தான்.

மொத்த கதறலையும் தீரனின் முகம் மறைந்து அறைக்குள் சென்ற பின்னரே வெடித்து சிதறவிட்டிருந்தாள்.

சுவர் தாண்டி கேட்ட மெல்லிய ஓசையில் ஜீவன் அடங்க நின்றிருந்தான் தீரன்.

சில மணி நேரங்களில் அவனது தவிப்புகளை குறைப்பதற்கு பிறந்திருந்தாள் அவர்களின் அன்பின் அதீதம்.

*********************

மகள் பிறந்து இரண்டு வாரங்கள் சென்றிருந்தன.

அன்று குழந்தையை தொட்டியிலிட்டு பெயர் வைத்திருந்தனர்.

தீரன் மயிலாஞ்சலியின் அன்பின் வெளிப்பாடாய் பிறந்த மகளுக்கு அயலி என பெயர் வைத்திருந்தனர்.

வந்திருந்த உறவினர்கள் அனைவரும் சென்றிருக்க, எஞ்சியிருந்த குடும்பத்தார் மொத்தமும் மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர்.

அவர்களின் மகிழ்ச்சியையெல்லாம் தீரன் இரட்டிப்பாக்கியிருந்தான்.

“நான் திரும்ப நியூயார்க் போகப்போறது இல்லை.”

அங்கு பெண்களுடன் பேசிக் கொண்டிருந்த மயிலாஞ்சலி வேகமாக கணவனை திரும்பிப் பார்த்திருந்தாள்.

“என்னடே சொல்ற? எம்புட்டு பெரிய வேலை” என்றான் ஆதி.

“இங்கயே என் ஜாப் ரிலேட்டட் புதுசா கம்பெனி ஸ்டார்ட் பண்ணலாம் பிளான் பண்ணியிருக்கேன் ஆதிண்ணே” என்று தீரன் சொல்ல…

“ரொம்ப சந்தோஷம் தீரா” என்றிருந்தார் முத்து மாணிக்கம்.

அனைவரும் எதிர்பார்த்தது இதைத்தானே! அவனும் தங்கள் கூட்டுக்குள்ளே இருக்க வேண்டும்.

ஒவ்வொருவரும் தீரனின் முடிவில் தனித்தனியாக தங்களின் மகிழ்வை வெளிப்படுத்திச் சென்றனர்.

இரவு சகோதரர்களுடன் உரையாடலை முடித்துக் கொண்டு தீரன் மேலேறி வர அயலிக்கு அமுதூட்டிக் கொண்டிருந்தாள் மயிலாஞ்சலி.

தீரன் அவனது முடிவை கூறியதிலிருந்து இன்னும் ஒரு வார்த்தை அவள் அவனிடம் பேசவில்லை.

மருத்துவமனையிலிருந்து வந்த இத்தனை நாட்களில், பலமுறை தீரனிடம்,

“என்னைய விட்டுட்டுப் போயிடாத மாமா” என்று சொல்லிவிட்டாள். அப்போதெல்லாம் சின்ன சிரிப்பை பதிலாகக் கொடுத்தானே தவிர, தான் மொத்தமாக வந்துவிட்டதை சொல்லவே இல்லை. அந்த கோபமென்று நினைத்த தீரன் மௌனமாக பால்கனி பக்கம் சென்று நின்றான்.

குழந்தை உறங்கியதும் தொட்டிலில் போட்டுவிட்டு அவனருகில் வந்த மயிலாஞ்சலி பின்னிருந்து அணைத்திருந்தாள்.

அவளை அணைப்பில் நிறுத்தியபடியே அவள் புறம் திரும்பிய தீரனும் தன்னவளை கட்டிக்கொண்டு அவளின் உச்சியில் நாடி பதித்தான்.

“எனக்காகவா மாமா!”

“நமக்காக! நீயி நம்ம குடும்பத்தை எவ்ளோ மிஸ் பண்ணேன்னு, நீயி சொல்லலனாலும் எனக்கு புரியும்” என்ற தீரன், “அத்தோட என் மயிலா என்கிட்ட ஆசைப்பட்டு மொத மொதலா கேட்டது. நிறைவேத்தி வைக்கணும்ல” என்றான்.

“எப்போ? என்ன கேட்டேன்?”

“என் பர்த்டே அன்னைக்கு நான் இங்கிட்டே வந்துப்புடனும் கேட்டியே!”

“மாமா…”

அவளுக்காக அவளையே வேண்டாமென்றவன், தன்னுடைய வேலையை விட்டுக்கொடுத்திட மாட்டானா?

“அவ்ளோ பெரிய வேலை” என்றவளின் வாயில் விரல் வைத்தவன், “அங்க என் பொறுப்பிலிருந்த வேலையை மொத்தமா முடிச்சிட்டு வரத்தான் லேட்டாகிடுச்சு. அதனாலதேன் உன்கிட்ட சொன்ன மாதிரி செவன்த் மன்த்தே வர முடியல” என்றான்.

“ஹ்ம்ம் இப்போ புரிஞ்சுது” என்ற மயிலாஞ்சலி,

“வீடு?”

“இப்போதைக்கு ரிச்சி இருக்கான். அவனும் இங்க வந்துட்டா, நாம அப்பப்போ ஹனிமூன் போனா யூஸ் பண்ணிப்போம்” என்று அவளை சிவக்க வைத்தவன், அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்து தன்னவளை இழுத்து மடி அமர்த்திக் கொண்டான்.

“லவ் யூ மாமா” என்ற மயிலாஞ்சலி, தான் சொல்லியதற்காகவே கூர்மையாய் வைத்திருக்கும் மீசை நுனி பிடித்திழுத்து ஆழமாய் முத்தம் வைத்து அணைப்பைக் கூட்டிட…

“தீரனோட அதீதம் மயிலா” என்று அவளின் நெற்றி முட்டி, உச்சியில் அழுத்தமாய் இதழ் பதித்தான்.

அவனது வாழ் முழுமைக்குமான மகிழ்வின் தடம் அழுத்தம் கொண்டது அவளிடத்தில்.

மயிலாவின் அன்பின் அதீதமாய் தீரன்.

தீரனின் அதீதம் மயிலா

சுபம்.

error: Content is protected !!
Scroll to Top