தூரமே தூரமாய் 18

தூரமே தூரமாய் 18

புயல் போல் கேட்டினை முட்டி திறந்து அசுர வேகத்தில் உள் நுழைந்து வட்டமடித்து நின்ற வாகனத்தை பார்த்ததும் காவல்துறை பணியாளர்களுக்கு கிலி பிடித்தது.

“இவரு ஊருல இல்லைன்னு சொன்னாங்களே அண்ணா?” வெங்கட் கேள்வியாய் கிருஷ்ணனை ஏறிட்டான்.

“அவன் சாம்ராஜ்ஜியம் சரியும் போது ஜாலியா ஊர் சுத்திக்கிட்டா இருப்பான்” என்ற கிருஷ்ணன், கனகாவிற்கு கண்காட்டிட அவர் உள்ளே சென்றார்.

“இவருக்கு பொண்ணுங்க வீக்னெஸ்ஸோ?”

“ஏன் ஏன் சார்?” என்ற கிருஷ்ணன், “அவனுக்கு பொண்ணுங்கன்னா பிடிக்காது, அவன் சம்சாரத்தை அவனே கொன்னுட்டதா ஒரு பேச்சிருக்கு” என்றார்.

“ம்க்கும் செய்யுறது முழுக்க கா*லி தனம். இதுல பொண்ணுங்களை பிடிக்காதாம்மா இந்தாளுக்கு” என்ற வெங்கட், “இவனே நேரில் வந்திருக்கான்னா… ருது சாரை ஏதும் பண்ணிடுவானோ?” என்றான்.

காரிலிருந்து அதிரடியாக இறங்கிய கைலாஷிற்கு அறுபது, அறுபத்தைந்து வயது இருக்கலாம். ஆனால் பின் நாற்பது வயதுத் தோற்றத்தில் கட்டுக்கோப்பான உடலோடு பார்த்ததும் எதிராளியை நடுங்க வைத்திடும் பார்வையோடு திடகாத்திரமாகவேத் தெரிந்தார்.

வண்டியின் பேனெட்டின் மீது குதித்து அமர்ந்த கைலாஷ்,

“எங்கடா உங்க டிசி?” என்று உச்சக் குரலில் கேட்டிட,

‘ஹே என்ன வேணா நடக்கட்டும்
நான் சந்தோசமா இருப்பேன்.
உசுரு இருக்கு வேறென்ன வேணும்
உல்லாசமா இருப்பேன்.
என்ன வேணா நடக்கட்டும்
நான் சந்தோசமா இருப்பேன்.
உசுரு இருக்கு வேறென்ன வேணும்
உல்லாசமா இருப்பேன்.

எனக்கு ராஜாவா நான்…
எனக்கு ராஜாவா நான்…’

அவருக்கு பின்னால் பாடல் ஒலித்தது.

“ஆரம்பிச்சிட்டாரு” என்று கைலாஷை கடந்து எட்டிபார்த்த வெங்கட், ருதுவின் நடையிலிருந்த தெனாவெட்டு பாவனையில் அடக்கமாக சிரித்துக்கொண்டான்.

“ம்ப்ச் சும்மா இருங்க சார்” என்று கிருஷ்ணன் வெங்கட்டை மறைத்தவாறு முன் வந்து நின்றார்.

யாரென்று இறங்கி பார்க்க கைலாஷிற்கு அவரின் திமிர் இடமளிக்கவில்லை.

கைலாஷிற்கு அருகில் பக்கவாட்டில் நின்றிருந்த அவனது ஆள்,

“இவன் தான் புது டிசி’ண்ணே” என்றான்.

“ம்ம்ம்… என் முன்னால் வந்துதானே ஆகணும்” என்று கைலாஷ் சொல்ல…

“என்ன வெங்கட் இந்த சிட்டுவேஷனுக்கு பாட்டு செட் ஆகலையா?” என உரக்கக் கேட்டு அலைபேசியில் வேறு பாடலை மாற்றினான் ருது.

ருதுவின் குரல் கேட்ட கைலாஷினுள் பெரும் அதிர்வு.

தொப்பென்று கீழிறங்கிய கைலாஷ், தன் ஆளை தள்ளிவிட்டு யாரென்று பார்க்க…

‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே… ஓய்!
நான் தாண்டா என் மனசுக்கு ராஜா
வாங்குங்கடா தங்கத்தில் கூஜா
நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன்
கேட்குற வரத்தை கேட்டுக்கடா
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே… ஓய்…!’

என்ற பாடலின் ஒலிக்கேற்ப நடந்து வந்தான் ருத்விக்.

‘இப்போ இவரு எதுக்கு நம்மள கோர்த்துவிடப் பார்க்கிறாரு?’ என்று மனதிற்குள் அலறிய வெங்கட்,

“ரெண்டு பாட்டும் ஒரே உள்ளர்த்தம் தானே அண்ணா” எனக் கேட்டான்.

“இது இப்போ ரொம்ப முக்கியமா சார்” என்ற கிருஷ்ணனின் கடுப்பில் வெங்கட் கப்சிப் ஆகினான்.

தான் ஒரு வண்டியை கடந்து வந்ததையோ… தன்னை ஒருவர் அதீத அதிர்வோடு பார்த்து நிற்பதையோ கண்டுகொள்ளாது வெங்கட் மற்றும் கிருஷ்ணனின் அருகில் வந்த ருது…

“ஏன் இங்க மரத்தில் கட்டிப்போட்டிருக்கீங்க?” என வினவினான்.

“செல்லில் இடமில்லை சார். அதான் இங்கவே மரத்தில் கட்டிப்போட்டாச்சு” என்ற வெங்கட், “எப்படியும் விடிந்ததும் கோர்ட்டில் ஹேண்ட் ஓவர் செய்திட்டா அவங்க பார்த்துப்பாங்க” என்றான்.

“ம்ம்ம்” என்ற ருது உள்ளே செல்ல…

“சார்… கைலாஷ்” என்றார் கிருஷ்ணன்.

“யாரா இருந்தால் என்ன கிருஷ்ணன். இந்த நேரத்தில் யாரையும் பார்க்க முடியாது” என்று கைலாஷிற்கு கேட்குமாறு கத்தி சொல்லிய ருது, “எதுவாயிருந்தாலும் விடிந்ததும் வர சொல்லுங்க” என்று உள்ளே சென்றான்.

கைலாஷ் உடன் வந்த ஆட்கள் இருவர்,

“ஏய்… யாராண்டா சீன் போட்டுக்கின?” என்று முன் செல்ல…

கைலாஷ் அவர்களை தடுத்திருந்தார்.

“என்னண்ணே உங்களாண்ட லந்து காமிக்கிறான். நீங்க யாரு என்னான்னு தெரியாதா?” என்று குதித்தான் ஒருவன்.

“இளரத்தம். சூடா தான் இருக்கும். காலையில் வருவோம்” என்று கைலாஷ் சொல்லியதை அவரது ஆட்களே அதிர்ச்சியாகத்தான் எறிட்டனர்.

“அண்ணே… காந்தா அண்ணே உள்ளயிருக்கு.” ரவுடிகள் பதறினர்.

“ஒருநாள் உள்ள இருந்தால் ஒன்னுமாகிடமாட்டான்” என்ற கைலாஷ் வண்டியில் ஏறி அமர்ந்தார்.

சன்னல் வழி அவரை பார்த்த ருதுவின் கண்கள் தீ ஜூவாலையாய் தகித்தது.

“ஐந்து வருடத்தில் உன்கிட்ட இந்த வளர்ச்சியை எதிர்பார்க்கல… நினைத்ததை சாதிச்சிட்டோம் எண்ணம்மா! மொத்தமா கருவறுக்கிறேன்” என்று சூளுரைத்த ருதுவினுள் ஆறாத ரணம் மேலும் ரணப்பட்டது.

“என்னண்ணா இது? முதல்முறை கைலாஷ் ஒரு வார்த்தை பேசாமல் அமைதியா போவதை பார்க்கிறேன்” என்ற வெங்கட், “நம்ம ருது சார் தோற்றம் அந்தளவுக்கா பார்க்க கொடூரமா இருக்கு?” எனக் கேட்டு ருதுவை எட்டிப்பார்த்தான்.

“டேய் யாருகிட்ட மோதுறோம் ஃபீல் பண்ணுவீங்கடா” என்று காந்தா கத்திக்கொண்டிருந்தான்.

“இவன் விடாம கத்துறான்” என்று காதினை விரல் விட்டு ஆட்டிய வெங்கட்,

“உங்க பெரிய தலை வந்தே ஒன்னும் பண்ணமுடியாதுன்னு போயாச்சு. சும்மா கத்திக்கிட்டு இருக்காத” என்றான்.

“ஏய்…” காந்தா சீற,

“அடங்குங்கடா… ரவுடினாலே இப்படி கத்தனுமா?” என்ன என்றான்.

“என்ன எஸ்.ஐ சார்… பயம் போயிருச்சு போலவே” என்று வந்த ருது, அவனின் முதுகில் தட்டினான்.

“நீங்க இருக்கீங்கன்னு தான் சார்” என்று அசடு வழிந்தான்.

“ரெண்டு நாளா வீட்டுக்கு போகாம இங்கவே இருக்கீங்க. ரெண்டு பேரும் போயிட்டு விடிந்ததும் வாங்க. நானிருக்கேன்” என்றான்.

“இத்தனை ரவுடிகள் இருக்கும்போது எப்படி சார்?” என்று கிருஷ்ணன் தயங்கிட,

“நான் மட்டுமா இருக்கேன். நைட் டூயூட்டி வந்தவங்க இருக்காங்க தானே!” என்ற ருதுவின் பேச்சுக்கு நடுவில்,

“ஒத்தையா சுழட்டி எடுத்தவருக்கு நீங்க காவலா? போயிட்டு வாங்க” என்றார் கனகா.

“இந்த அக்கா இன்னைக்கு ரொம்பத்தான் டேமேஜ் பன்றாங்க” என்று வெங்கட் முணுமுணுக்க, ருது சிறு சிரிப்போடு தன்னிருக்கைக்குச் சென்று அமர்ந்து மேசை மீது கால்களை வைத்து கண்கள் மூடிக்கொண்டான்.

உறங்கவில்லை… மனதில் பலதும் ஓடிக்கொண்டிருந்தது.

அவன் அனுபவித்த வலி, ரணம், யாவும் கண்முன்னே விரிந்தது.

யாவற்றிற்கும் ஒரே காரணம் கைலாஷின் மண்டையில் ஏறியிருந்த பணம், பதவி, செல்வாக்கு என்ற உயிரற்ற காரணிகள் மட்டுமே.

உயிரற்றவற்றிற்காக உயிருள்ள மனிதனின் உணர்வுகளை புதைப்பது தானே மனிதனின் இயல்பு.

இங்கு கைலாஷ் தன் ஆசைக்காக பலி கொடுத்தது அவனது ________?

வண்டியில் சென்று கொண்டிருந்த கைலாஷிடம் அப்படியொரு அமைதி.

“இந்நேரத்துக்கு அவனை ஓடவிட்டிருக்கணும் அண்ணே! இப்படி சப்புன்னு அமைதியா வந்துட்டிங்களே?” என்று ஆதங்கப்பட்டான் அவனது ஆள்.

“அவன் நம்ம பேட்டைக்குள்ள வந்துக்கின அன்னைக்கே வச்சு செஞ்சு விட்டிருக்கணும் தலைவா! எத்தனை போலீசை ஓடவிட்டிருப்போம். இவன் என்ன சுண்டக்கா!” என்றான் மற்றொருவன்.

யாருக்கும் கைலாஷ் பதில் சொல்லவில்லை.

முதல் முறை தோற்று விடுவோமோ என்கிற பயம் கைலாஷின் மனதில் மெல்ல பரவியது.

இந்த ஐந்தாறு வருடத்தில் அவன் கொண்ட வளர்ச்சி அதீதம். அதற்காக அவன் செய்த பலதும் அத்தனை கொடுமையானவை. அரசியலையே ஆட்டி வைக்கும் பலம்… அதற்காக அவன் செய்தது கொஞ்சமல்ல. அவை யாவையும் ஒழித்திட ருது வந்து நிற்பான் என்று அவர் நினைத்து பார்த்ததே கிடையாது.

எதையும் யோசிக்காது மனைவியின் உயிரோடு விளையாடிவருக்கு முதல்முறை தன்னால் ருதுவுக்கு எதுவும் ஆகிடக் கூடாதென நினைத்தாரோ?

ருதுவின் மீது மட்டும் அப்படியென்ன கரிசனமோ அந்த அரக்கனுக்கு?

கைலாஷ்ஷை வீழ்த்தும் வியூகத்தில் மூழ்கியிருந்த ருது கனகாவின் விளிப்பில் மெல்ல இமை திறந்தான்.

“விடிஞ்சிருச்சா?” எனக் கேட்டுக்கொண்டே அவன் எழுந்து சோம்பல் முறித்திட…

அவனது அலைபேசி சிணுங்கியது.

அம்பிகா தான் அழைத்திருந்தார். திரையில் பெயரை பார்த்தவன், கனகாவிடம் என்னவென்று கேட்டான்.

கனகா தன்னுடைய அலைபேசியை அவன் முன் காட்டினாள். இரவு அங்கு நடந்த காட்சிகளை சிறு தொகுப்பாக்கி செய்தி ஊடகங்களில் ஓடிக்கொண்டிருந்தது.

‘காந்தாவை காப்பாற்ற கைலாஷ்ஷே அந்த நள்ளிரவில் காவல்நிலையம் வருகை. காந்தாவுக்கு பின்னால் கைலாஷ் இருப்பது உண்மை என்பதற்கு இதைவிடவும் சான்று வேண்டுமோ.’ என்ற வரிகள் காணொளிக்கு கீழ் சீராக ஓடியது.

‘நகரத்தை காக்க முழு முனைப்போடு புதிய துணை ஆணையர் திரு.ருத்விக் ஐபிஎஸ்’ என்ற வரியும் மிளிர்ந்தது.

காந்தா பேட்டையின் நுழைவு வாயிலில் ஒருவரை தொங்கவிட்டதில் ஆரம்பித்து, இரவு கைலாஷ் வந்தது வரை விரிவான செய்தியாக வெளி வந்திருந்தது.

‘மனிஷ் பக்காவா வேலை பார்த்திருக்கிறான்’ என உள்ளுக்குள் தோன்றிய சிறு மகிழ்வை தனக்குள்ளே மறைத்துக்கொண்டான் ருது.

செய்தியை பார்த்துவிட்டு தான் அம்பிகா அழைக்கிறார் என்பதை புரிந்துகொண்ட ருது, நிற்கும் தருவாயிலிருந்த அழைப்பை ஏற்று…

“வீட்டுக்குதாம்மா கிளம்பிட்டு இருக்கேன்” என்று சொல்லி வைத்திட்டான்

“வெங்கட் வந்தாச்சா?” என ருது கேட்கும்போதே உள்ளே வந்தான். உடன் ராதிகாவுடன்.

ராதிகாவை கண்டதும் ருதுவினுள் சிறு நடுக்கம்.

“கைலாஷ் கேஸ் முடியும் வரை நீங்க எமர்ஜென்சி லீவ் எடுத்துக்கோங்களேன் ராதிகா” என்றான்.

ராதிகாவும், வெங்கட்டும் ஒருவரையொருவர் குழப்பமாக ஏறிட்டனர்.

“ஸ்டேஷன் முழுக்க ரவுடிகளா இருக்காங்க. எப்பவும் இதே மாதிரி அமைதியா இருப்பானுங்களா தெரியாது. பேபிக்கு ஏதும்… இப்போ இருக்கும் சூழல் செட்டாகாதே!” என்று தயங்கி தயங்கி சிறு தடுமாற்றத்தோடு மொழிந்தான்.

“இப்போ லீவ் எடுத்தால் டெலிவரி அப்போ கஷ்டம் சார்” என்றாள் அவள்.

“ஹோ” என்று தாடையை நீவியவன், “நான் உங்களுக்கு லீவ் சேங்க்ஷன் பன்றேன்” என்றான்.

தன்னுடைய பதவியின் அதிகாரத்தை தனிப்பட்ட காரியத்திற்கு இதுவரை அவன் உபயோகித்ததே இல்லை. இன்று முதல்முறை ராதிகாவிற்காக, அவளின் தற்போதைய நிலைக்காக தன் பணியின் கட்டுப்பாட்டை தளர்த்தினான்.

ராதிகா யோசித்திட…

“பத்து நாள் லீவில் என்னாகப்போகுது?” என்றான்.

அவனது பயம் அவர்களுக்கு புரிய வாய்ப்பில்லையே. கர்ப்பிணியை பார்த்தால் தானாக அனுதாபம் கொள்வது இயல்பு. ஆனால் ருதுவிற்கு? அவன் வாழ்வே மாறிய இடம் அது. அதனால் அவன் கொண்ட வலிகள்.

நெஞ்சம் முட்டிய நினைவுகளை விரட்டியவன்…

“வாங்க நானே கூட்டிட்டுப்போறேன். குவார்ட்டர்ஸ் தான் போறேன்” என்று அவளுக்கு மறுக்க வாய்ப்பே அளிக்காது முன் சென்றான்.

“சார் வைஃப் ரொம்ப கொடுத்துவச்சவங்க” கனகா சொல்ல…

“அவங்க வைஃப் சார் கூட இருக்கிற மாதிரி தெரியலையே” என்றான் வெங்கட்.

ராதிகா நின்றுகொண்டே இருக்க…

“போ ராது. சாருக்கு உன்மேல் ஏதோ சாஃப்ட் கார்னர். அவரை சங்கடப்படுத்த வேண்டாம். போ” என்று வெங்கட் அனுப்பி வைத்தான்.

___________________________________

இமையாள் பள்ளிக்கு புறப்பட்டுக் கீழே வர, தீபா தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார்.

“சாப்பாடு வேண்டாம்மா… டைம் ஆச்சு. கேன்டினில் பார்த்துக்கிறேன்” என்று சொல்லியவளை தடுத்து நிறுத்தியவர்…

“இன்னைக்கும் கலவரமாகும் போல இமயா! அந்த போலீஸ் முழுசா கைலாஷ் ஆட்டத்தை முடிக்க முடிவெடுத்துட்டார் போல. நீ ஸ்கூல் போக வேண்டாம்” என தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த செய்தியை காண்பித்தார்.

அந்நேரம் சரியாக ரவுடிகள் ருதுவை சுற்றி பாய்ந்த காட்சி ஓடிட…

“ருது” என்று தன்னை மறந்து கத்திவிட்டாள் இமையாள்.

“ருதுவா?” என்ற தீபா, “இந்த தம்பி உனக்குத் தெரிந்த ஆளா?” எனக் கேட்டார்.

“மே பீ” என்றவள், “அவங்க வேலையை அவங்க செய்யும்போது, நம்ம வேலையை நாம் செய்ய வேண்டாமா?” எனக் கேட்டவள், தீபா சொல்ல சொல்லக் கேட்காது கிளம்பியிருந்தாள்.

மருத்துவமனை செல்லத் தயாராகி வந்த இனியன் இருவருக்குமிடையேயான பேச்சினைக் கவனித்திருக்க…

இமையாள் சொல்லிய ‘மே பீ’ல் யோசனைக்குச் சென்றான்.

‘கோபமா இருக்காளா? இல்லை மறக்க முடிவெடுத்திட்டாளா?’ பதிலை அவளிடமே கேட்டுக்கொள்ளலாமென தன் பணி காண விரைந்தான்.

“யாரும் சொல்றதை கேட்கிறதே இல்லை” என்ற தீபா, சுரேந்தர் அதட்டிய பின்னரே அமைதியாகினார்.

“உங்களையும் வேலைக்கு போகவேணாம் சொல்லிடுவேன்னு முந்திக்கிட்டிங்களா?” என்ற தீபா, “இதுக்குத்தான் நான் கதை மட்டும் படிக்கிறது. உங்ககிட்டலாம் பேசுவதே இல்லை” என்றதோடு, “ரெண்டு பேரும் லவ் சொல்லிக்கிறதுக்குள்ள பிரிச்சு வைக்கிற வேலையை பார்க்குது அந்த ரைட்டர் பொண்ணு. ஹீரோ வேற என்ன புரிஞ்சிக்கிட்டான் தெரியல. நான் கதை போட்டுட்டாங்களான்னு பார்க்கிறேன்” என அலைபேசியை கையிலெடுத்துக்கொண்டு தீபா அமர்ந்திட, சுரேந்தர் அவர் பேசுவது புரியாது இருபக்கமும் சலிப்பாக தலையை ஆட்டிக்கொண்டு அலுவலகம் புறப்பட்டிருந்தார்.

இமையாள் யோசனையோடே வண்டியை சாலையில் செலுத்திக் கொண்டிருந்தாள். அவளின் யோசனைக்கு காரணமானவன் ருதுவைத் தவிர்த்து வேறு யாராக இருந்திட முடியும்.

அவனே அவள் கண் முன் காட்சியளித்தான்.

நேற்று கலவரத்தின் போது அவளை கண்ட பகுதியிலிருக்கும் போக்குவரத்து சமிக்கை அருகே ஜீப்பில் சாய்ந்தபடி அவள் வரும் திசை நோக்கி நின்றிருந்தான்.

வீட்டிற்கு சென்றதும் தன் நலன் குறித்து அம்பிகா, வேங்கடத்திடம் தெரிவித்துவிட்டு, உடனடியாக புறப்பட்டு வந்திருந்தான். தன்னவளை பார்ப்பதற்காக. நேற்று அம்பிகாவிடம் பேசிய பின்னர் அவனுள் ஒரு தெளிவு.

தனக்காக பல வருடங்களாகக் காத்திருப்பவள் தன் பக்கத்தை புரிந்துகொள்வாள் என்று அன்று தோன்றாதது இன்று தோன்றியது.

அன்று ஏனோ அவனுக்காக அவள் என்னவும் செய்திடுவாள் என்பதை மறந்திவிட்டான். அவன் இருந்த நிலை அப்படி. எதையும் யோசிக்க முடியாத சூழல். தன் தந்தையின் சூழ்ச்சியில் சிக்கியிருந்தான். இன்று அவனுக்கு தடையென்று யாருமில்லை. எல்லாம் தெரிந்தால் இமையாள் நிச்சயம் தேஷ்ஷை ஏற்றுக்கொள்வாள் என்று நம்பினான்.

புதைத்த காதலை மீட்டிட அடி எடுத்து வைத்துவிட்டான்.

இமையாள் அருகில் வர சரியாக அந்நேரம் சிவப்பு நிறம் ஒளிர, ருதுவிற்கு பக்கவாட்டாக அவள் நிற்க வேண்டிய நிலை.

இமையாள் தன்னை கவனிக்கவில்லை என்பதை உணர்ந்தவனுக்கு அவளின் சிந்தனை நிகழ் இல்லை என்பதும் புரிந்தது.

“சார் போகலாமா?” அவனோடு நின்றிருந்த வெங்கட் இதோடு பலமுறை அழைத்துவிட்டான். நகரமே பரபரப்பாக அவனைப்பற்றி பேசிக் கொண்டிருக்கையில், அவனோ சாதாரணமாக இங்கு நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான்.

தற்போது காவல் நிலையம், ரவுடிகள் நிலையமாக உள்ள நிலையில் இங்கு இப்படி நிற்கத்தான் வேண்டுமா என்கிற கடுப்பு வெங்கட்டிடம்.

நேற்றே ருதுவினுள் ஒரு கணிப்பு. அந்நேரத்தில் இமையாள் அவள் வீடிருக்கும் பகுதி நோக்கி செல்கிறாள் என்றாள், வேலை முடித்து வருகிறாளென்று. அப்போ காலை இதே வழியாக மீண்டும் வேலைக்கு செல்ல வரவேண்டும் என யூகித்தவன் ஏழு முப்பதிலிருந்து அங்கு தன்னவளுக்காகக் காத்திருக்கிறான்.

இதில் தனியாக நிற்க பிடிக்காது,

“நேற்று மாதிரி இன்னைக்கும் எவனாவது கலவரம்ன்னு இறங்கிடப் போறானுங்க வெங்கட். நேற்று அதிகமா கலவரம் நடந்த இடத்தை ஒரு ரவுண்ட்ஸ் பார்ப்போம் வாங்க” என்று போன் செய்து வரவழைத்திருந்தான்.

“காந்தா பேட்டை மொத்த ரவுடிகளும் நம்ம ஸ்டேஷனில் தான் சார் இருக்காங்க… அடிதடி நடக்க வாய்ப்பே இல்லை. கோர்ட்டுக்கு கூட்டிட்டுப் போகணும். போகலாமா சார்?” என்று இம்முறை சற்று அழுத்தமாகவேக் கேட்டான் வெங்கட்.

“என்ன அவசரம் வெங்கட்” என்ற ருதுவின் பார்வை இமையாளின் மீதே!

ருதுவின் பார்வையை வைத்து, “இது சரியில்லை சார்” என்றான் வெங்கட்.

“எது?”

“நீங்க இப்படி ஒரு பொண்ணை…” அதற்கு மேல் வார்த்தை கோர்க்க முடியாது வெங்கட் நிறுத்த…

“எப்படி… சைட் அடிப்பதா இல்லை பொ*** தனம் மாதிரியா?” எனக் கேட்ட ருது, “லவ் பன்றேன் வெங்கட்” என்று அவனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தான்.

“சார்… உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சு!”

பச்சை நிறம் ஒளிர்ந்தது. இமையாள் வண்டியை இயக்கியிருந்தாள்.

“ஆஹான்” என்ற ருது அப்போதுதான் கவனித்தவனாக ஓட்டுநர் இருக்கையில் ஏறி அமர்ந்து அதனை முடுக்கிட, வெங்கட் வேகமாக மறுபக்கம் ஏறியிருந்தான்.

ருது இமையாளை பின் தொடர்ந்தான்.

“சார் இது ஏதோ…”

“சொல்லுங்க வெங்கட்.”

“ஒரு பொண்ணை பாலோவ் பண்றதெல்லாம் ரோக் மாதிரி இருக்கு” என்றான்.

“விட்டால் என்னை பொ*** பொ***’ன்னு முத்திரையே குத்திடுவப்போல” என்று சிரித்த ருது,

“அவள் என் பொண்டாட்டிடா!” என்று சொல்லிக்கொண்டே இமையாளுக்கு முன் சென்று மறித்தபடி வண்டியை நிறுத்தியிருந்தான்.

error: Content is protected !!
Scroll to Top