தூரமே தூரமாய் 20
அன்றைய தினம் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது காந்தாவின் சிறை தண்டனை.
ருது காந்தாவை வைத்து கைலாஷிற்கு கட்டம் கட்டியிருந்தான். கைலாஷ் கண்ணை பாசம் மறைத்திட, மெத்தனமாக இருந்துவிட்டார். இப்போது சிக்கிக்கொண்டார்.
தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுக்கு பெரும் பெரும் தொகைகள் நிதி கொடுத்து, தன் கைக்குள் அடக்கி வைத்திருந்த கைலாஷ்ஷை, அந்த நிதி தொகையின் அளவை வைத்தே ருது மடக்கியிருந்தான்.
காந்தாவை மாட்டிவிட, அவனது பேட்டையை மாற்றிட ஒரு கொலையும், ஒரு போதைப்பொருள் வழக்கும் போதுமானதாக இருந்திடலாம். ஆனால் கைலாஷ் என்பவனின் குறுகிய கால சாம்ராஜ்ஜியத்தை அழித்திட இவை போதாதே. அவர் செய்த தப்புகளின் அளவுகளில் இவை புள்ளி அளவில் கூட சேராது.
எம்.எல்.ஏ சங்கர் முதல்வரின் ஆள். காந்தாவை கைலாஷ்ஷிற்கு எதிராகத் திருப்பிட, மறைமுகமாக ருதுவிற்கு உதவி செய்திட ஏற்பாடு செய்யப்பட்ட ஆள்.
சங்கர் தன்னை கைலாஷ்ஷின் ஆள் என காட்டிக்கொள்ளவே சில அடாவடிகளை செய்தார்.
ருதுவிற்கு கைலாஷ்ஷின் சட்டத்திற்கு விரோதமான செயல்களுக்கான ஆதாரங்களை திரட்டுவது அத்தனை ஒன்றும் சிரமமில்லை. ருதுவை விட கைலாஷ்ஷைப் பற்றி அதிகம் தெரிந்தோர் இருந்திட முடியுமா என்ன?
பீகாரில் இருந்தாலும், தன்னை தனக்கு நெருக்கமானவர்களிடமிருந்து மறைத்துக் கொண்டாலும் கைலாஷ்ஷின் சிறு சிறு நடவடிக்கைகளையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தான் ருது.
வேங்கடம் சென்னை செல்ல வேண்டுமென சொன்னதும் ருது தயங்கியது இமையாளுக்காக மட்டுமே!
சில பல யோசனைக்குப் பின்னர் ஒப்புக்கொண்டதற்கு காரணம் கைலாஷ் எனும் நச்சுப்பாம்பின் ஆட்டத்தை முடிப்பதற்கே!
ருதுவிற்கு நன்கு தெரியும்… என்றோ ஒரு நாள் கைலாஷ்ஷின் அழிவு தன் கையில் தானென்று, அதற்காக அவன் பல மாதங்களுக்கு முன்பே கைலாஷிஷிற்கு எதிராக அனைத்து காய்களையும் நகர்த்தி ஆதாரங்களையும் மறைமுகமாக சேகரித்துவிட்டான்.
கைலாஷ்ஷின் பலம் என்ன என்பதை அறிவதற்கே, அவரைப்பற்றி ஒன்றும் தெரியாததைப்போல், மற்றவர்களிடம் கேட்டு தெரிந்துகொண்டான்.
அவர் அரசியலின் இருளில் இந்தளவிற்கு ஊடுருவியிருப்பார் என்பதை கிடைத்த ஆதாரங்களை வைத்து ருது மலைத்துப்போனான்.
கைலாஷ்ஷை எதாவது ஒரு வழக்கில் மாட்ட வைத்து, அதன் மூலம் அவரது அனைத்து குற்றங்களையும் வெளி கொண்டு வந்து மொத்தமாக வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைப்பதே ருதுவின் திட்டம். அதற்கு பகடைக் காயாக உருட்டப்பட்டதே காந்தா.
தற்போது கைலாஷ்ஷின் ஆள் தான் காந்தா என்பது வெட்ட வெளிச்சமாக்கியிருந்தான் ருது. இது போதும், காந்தா செய்த கொலை தொடங்கி அனைத்துக்குமான, ஆறேழு வருடங்களுக்கு முன்பு குவாரியில் ஒன்பது பேர் இறந்த குற்றத்தில் கைலாஷ் ஜெயிலுக்கு போயிருந்தாலும், ஐந்தாறு மாதத்தில் எதன் மூலம் யாரின் உதவியால் வெளியில் வந்தார் என்பது தொடங்கி, அரசியல் கூட்டங்களுக்கு ஆட்கள் திரட்டும் பேட்டையின் முக்கிய ரவுடியுடன் தொடர்பு கொண்டு, அந்த ரவுடியை மிஞ்சி அரசியல்வாதிகளுக்கு வலது கையாக மாறி, ஒரு கட்டத்தில் அந்த ரவுடியை தனது தொழில் வளர்ச்சிக்காக கொலை செய்து, அரசியலில் பல பெரும் புள்ளிகளுக்கு நிகழ் உலக தாதாவாக மாறியது, பெரும் புள்ளிகளின் அந்தரங்க காணொளியை வைத்து அவர்களை மிரட்டி தன் செல்வ ஆதாயத்திற்கு பயன்படுத்திக்கொண்டது, அதன் பின்னணியில் பல அரசியல்வாதிகளை தன் கைக்குள் போட்டுக்கொண்டு, கட்சிகளுக்கு நிதி கொடுப்பது போல் அருகே நெருங்கி கட்சியின் ரகசியங்கள், முக்கிய அரசியல் பிரமுகர்களின் ரகசியங்கள் என அனைத்தும் தெரிந்து கொண்டு முக்கிய கட்சிகளை தன் கைக்குள் கொண்டு வந்து நகரத்தையே ஆட்டி வைத்தது, தன்னிடமிருக்கும் சொத்திற்கு வரிவிலக்கு கணக்கு காட்டிடவே, காந்தாவை கைக்குள் போட்டுகொண்டு பேட்டைக்கு அனைத்து வித சகல வசதிகளும் செய்து கொடுத்து தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என கைலாஷ்ஷின் நீண்ட பக்கத்திற்கான ஆதாரங்கள் யாவற்றையும் நீதிபதியின் முன்பு ருது சமர்பித்திருந்தான்.
ருது கைலாஷ்ஷின் புள்ளி அளவு தவறைக்கூட விட்டுவைக்கவில்லை.
ஒன்றே ஒன்றை தவிர்த்து. அது ருதுவிற்கானது மட்டுமே. அதற்கு எவ்வளவு தண்டனை கொடுத்தாலும் ஈடாகாது. அவனால் அதற்கான தண்டனையை கைலாஷ்ஷிற்கு கொடுத்திடவும் முடியாது. அவனை சுமந்த உயிரின் இறுதி வார்த்தையை மீறிடும் துணிவு அவனுக்கு இல்லை. ஆதலால் மட்டுமே கைலாஷ் எனும் கொடிய மிருகம் ருதுவின் கண்ணில் பட்டும் உயிரோடு இருக்கிறது. வாழ தகுதியற்ற கொடூரன் கைலாஷ். அவரின் அந்த முகம் ருது மட்டுமே அறிந்தது.
கைலாஷிஷிற்கு எதிராக அனைத்து குற்றங்களும் ருது சமர்ப்பித்த ஆவணங்களினால் உண்மையென நிரூபிக்கப்பட, ஏற்கனவே சங்கர் குழப்பியதில் பயந்திருந்த காந்தா, கைலாஷ் உடன் இணைந்து எங்கெங்கு எப்போது என்னென்ன குற்றங்கள் செய்தோம் என்பதை நீதிபதி முன்பே வாக்குமூலமாகக் கொடுத்திட, காந்தாவுடன் கைலாஷ்ஷுக்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டது.
கைலாஷ்ஷின் தொழில்கள் அரசாங்கமே ஏற்று நடத்தும்படியானது. அவரின் சொத்துக்கள் முடக்கப்பட்டது.
கைலாஷ்ஷின் குற்றங்கள் யாவும் சந்தேகத்திற்கு இடமின்று நிரூபிக்கப்பட்டிருக்க, அதில் ஆளுங்கட்சி தலைவர்கள் மற்றும் பல பெரும் புள்ளிகளின் தவறுகள் வெளியில் தெரிய வர, ருது அளித்த ஆவணங்கள் யாவும் முதல்வரின் நேரடிப்பார்வைக்கு கொண்டு சேர்க்கப்பட்டன.
முதல்வரும் இதைத்தான் எதிர்பார்த்தாரோ… தன் கட்சி ஆட்கள் என்றும் அவர் தயவு தாட்சண்யம் பாராது அனைவரையும் கட்சிகளிலிருந்து நீக்கம் செய்ததோடு, முறையான தண்டனைகள் கொடுக்குமாறு நீதிமன்றத்திற்கு மனு தாக்கல் செய்தார்.
அன்று நகரமே ருது என்ற தனிப்பட்ட ஒருவனால் சுத்தம் செய்யப்பட்டது.
“உங்க மகன்னு நீங்க பெருமையா சொல்லிக்கலாம் வேங்கடம்” என்று முதல்வர் வேங்கடத்திடம் சொல்லிய தருணம், அவரின் முகத்தில் மிதமிஞ்சிய பெருமை. மீசையை முறுக்கியபடி நெஞ்சை நிமிர்த்தி நின்றார்.
நேர்மைக்கு கிடைக்கும் வெகுமதி அது. நேர்மையானவர்களுக்கு மட்டுமே உரித்தாகும்.
முதல்வர் மற்றும் ருது தனிப்பட்ட முறையில் சங்கருக்கு நன்றி தெரிவித்திருந்தனர்.
ஒரு ரவுடியை கைது செய்ததற்கே நகரத்தை கலவர பூமியாக மாற்றியிருந்தார்கள். அவனது ஆட்கள். தற்போது மொத்த ரவுடி கும்பல்களையும் தண்டனை கொடுத்து சிறையில் அடைத்திருக்க, நகரமே அமைதி பூங்காவாக காட்சியளித்தது.
ஒரு நாளில் மாபெரும் மாற்றம் நிகழுமென யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். ஆனால் ருது… ருத்விக் சாத்தியமாக்கியிருந்தான்.
அனைத்தும் முடிந்து நீதிமன்றம் விட்டு வெளியில் வரும்போது, வெங்கட் மற்றும் கிருஷ்ணன் உட்பட ருதுவின் கீழ் பணிபுரிவோர் அனைவரும் ருதுவை வானளவு உயர்ந்து பார்த்தனர்.
“ஊஃப்ப்ப்…” தலையை உலுக்கிய வெங்கட், “எவ்வளவு பெரிய விஷயம் சார். இவ்ளோ சிம்பிளா முடிச்சிட்டிங்க?” என்று கேட்டிட, ருதுவிடம் வெற்றிக்கொண்ட மகிழ்வின்றி கசந்த முறுவல் ஒன்று சின்னதாக வெளிப்பட்டது. அவ்வளவே!
“அந்த கைலாஷ்ஷை அரெஸ்ட் பண்ணி ஜெயிலில் போட்டுட்டு கால் பண்ணுங்க” என்ற ருது நேரத்தை பார்க்க மாலை ஆகியிருந்தது.
“இவ்வளவு நேரமாகிடுச்சா?” என்றவன், எங்கிருந்து வந்தார்கள் என்று அறியும் முன் நொடியில் தன்னை சூழ்ந்துவிட்ட ஊடகவியலாளர்களின் ஒலிவாங்கிக்கு முன் அவர்கள் கேட்ட கேள்விக்கு தகுந்த பதிலை எவ்வித அலட்டலுமின்றி வழங்கி வெளியேறியிருந்தான்.
___________________________________
இமையாள் வரும் சரியான நேரத்திற்கு அந்த கிளை சாலையின் இறக்கத்தில் அவளுக்காகக் காத்திருந்தான் ருது.
சரியான நேரத்திற்கு வந்துவிட்டான்.
வண்டியின் உள்ளே அவள் வரும் திசையை பார்த்தவாறு அமர்ந்திருந்தவன், தொலைவில் அவள் தெரியவும் இறங்கி நின்றான்.
இமையாளும் சற்று முன்னரே ருதுவை கண்டுகொண்டாள்.
பள்ளியில் இருந்தாலும் இன்றைய செய்தியை அறிந்திருந்தாள். முழுக்க ருதுவின் பேச்சாகத்தானே உள்ளது. உள்ளுக்குள் அவனை நினைத்து பெருமையாக இருந்தாலும், தன்னை ஏமாற்றியவன் என்ற நிலையில் அவன் மீது கோபம் குறையாது தானிருந்தது.
‘ஊரே இவங்களைப்பற்றி பேசிட்டு இருக்கு. இவங்க இங்க நின்னுட்டு இருக்காங்க’ என நினைத்தவள் ருதுவை காணாதது போல் தாண்டிச்செல்ல, சட்டென்று வண்டியை பின்னால் இழுத்து அமர்ந்திருந்தான்.
“என்ன பண்றீங்க நீங்க?”
ருது இழுத்ததில் வண்டி ஆட்டம் கண்டதில் இமையாள் பயந்துவிட்டாள்.
“என்னை பார்த்த தானே?”
“இல்லை.”
“பொய்.”
“இப்போ என்ன வேணும் உங்களுக்கு?” இருக்க இருக்க ருதுவின் மீது இமையாளுக்கு கோபம் அதிகரித்துக்கொண்டேச் சென்றது.
“நீதான் வேணும்.” ருது அலட்டல் இல்லாது மொழிய, அவனை திரும்பிப் பார்க்க முடியாது கண்ணாடி வழி முறைத்து வைத்தாள்.
“எதுக்குடி எப்போ பாரு முறைச்சிட்டே இருக்க?”
“விட்டுட்டு ஏமாத்திட்டு போனவங்களை வேறெப்படி பார்ப்பாங்க?”
“சரிதான்…” என்ற ருது, “என்னை வீட்டில் டிராப் பண்ணிடு” என்றான்.
“உங்களை நான் ஏன் கூட்டிட்டுப் போகனும்?”
“எதுக்குடி இப்போ கேள்வியா கேட்டுட்டு இருக்க?” என்றவன் “அசையாம உட்காருடி. மனுஷன் நிலைமை புரியாம அவஸ்தையை கூட்டிட்டு” என்று மெல்ல முனகினான்.
“நீங்க முதலில் இறங்குங்க?”
“முடியாது. என்னை டிராப் பண்ணு.”
ருதுவின் பிடிவாதமும், அழுத்தமும் அவளுக்கா தெரியாது. அவனை ஒன்றும் செய்ய முடியவில்லையே என்கிற ஆதங்கம் கோபமாக உருமாறிட சட்டென்று வண்டியிலிருந்து இறங்கியிருந்தாள்.
“ஹேய்…” என்றவன் சுதாரித்து வண்டியை நிலை நிறுத்தினான்.
இமையாள் நடக்கத் தொடங்கியிருந்தாள்.
“என்னடி புருஷனை விட்டுட்டுப்போற?”
திரும்பி நின்று காலை தரையில் உதறியவள், “யாருக்கு யார் புருஷன்?” எனக் கேட்டு, “விட்டுட்டுப்போறதெல்லாம் சாருக்குத்தான் கை வந்த கலையாச்சே” என்றாள்.
“ரொம்ப சூடா இருக்கப்போல?” என்றவனின் இதழ் ஓரமாய் துடித்தது. அடக்கப்பட்ட புன்னகையில். அவளின் கோபத்தை ரசித்தவனாக.
“ஆ…” என்று பற்களை கடித்தவள் அவனை நெருங்கி, கழுத்தை நெறிப்பதைப்போல் கைகளைக் கொண்டு சென்று…
“அப்படியே கொல்லனும் போல இருக்கு” என்றாள்.
“கொன்னுக்கோ” என்று தோள்களை உயர்த்தி இறக்கியவன், “அப்புறம் நீதான் ஃபீல் பண்ணுவ” என்று கண் சிமிட்டினான்.
“யாரோ ஒருத்தியோட புருஷன் சாகறதுக்கெல்லாம் நான் ஏன் சார் ஃபீல் பண்ணனும்?” மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு மிதப்பாக அவள் கேட்ட தோரணையில் ருது மலைத்துப் பார்த்தான்.
‘இவளை மலை இறக்கிறது ரொம்ப கஷ்டம் போலவேடா ருது.’
வண்டியை விட்டு இறங்கி நின்றவன்,
“போ” என்றான்.
“இனி என் முன்னாடி வந்து நிக்கிற வேலை வச்சிக்காதீங்க. உங்க பதவிக்கும் உயரத்துக்கும் அது நல்லாயில்லை. அதுவும் கல்யாணமாகி, பொண்டாட்டி, குழந்தைன்னு வீட்டில் இருக்கும்போது” என்றவள், “தள்ளுங்க” என்றாள்.
‘உண்மையை சொன்னால் கூட நம்பமாட்டாள் போல’ என நினைத்த ருது, “நீ பார்த்தியாக்கும்?” என்றான்.
“அதான் சொன்னீங்களே!”
ருது, ‘நாசமாப்போச்சு.’
“அதை நம்பாமதானே எனக்காக இன்னும் யாரையும் கல்யாணம் செய்துக்காம காத்திருக்க?”
“ம்க்கும்… நினைப்புதான் பொழப்பை கெடுக்குமாம்” என்றவள், “நெக்ஸ்ட் மன்(ந்)த் எனக்கு கல்யாணம். இன்விடேஷன் பிரிண்ட் பண்ணதும் கொண்டு வரேன். கல்யாணத்துக்கு வந்துடாதீங்க” என்று அதீத கோபத்தில் மொழிந்தவள் ருதுவின் ஆராயும் பார்வையை கண்டு கொள்ளாதவளாக வண்டியை உயிர்ப்பித்து மின்னலென மறைந்திருந்தாள்.
“ராஸ்கல்… எனக்காகத்தான் காத்திருக்கேன் சொன்னால் குறைஞ்சிடுவியா?” என்று இல்லாதவளிடம் கேட்டவன், “ஃபர்ஸ்ட் என் கைக்குள்ள வாடி… உனக்கிருக்கு” என்றவனாக வண்டியில் ஏறி இயக்கியிருந்தான்.
ருதுவிடம் பேசும்போது ஒன்றுமே இல்லை எனும் விதமாக திடமாக பேசி வந்துவிட்டாள். ஆனால் இப்போது கண்கள் அருவியென சுரந்து கொண்டே இருந்தது.
அவளால் இந்த ருதுவை ஏற்கவே முடியவில்லை. காதலி என்ற போதும் கண்ணியம் காத்த ருதுவுக்கும், அவனளவில் திருமணம் ஆகிவிட்டது என்ற நிலையில் தன்னிடம் இப்படி அவன் நடந்துகொள்வது அவளுக்கு வலிக்கவே செய்கிறது.
தெரிந்த நபர் என்ற முறையில் அனுகியிருந்தால் நன்றாக பேசியிருப்பாளோ?
இப்போது எதை ஏற்க, எதை நம்புவதென்று புரியாது தனக்குள்ளே குழம்பினாள். குழப்பங்கள் யாவும் அவன் மீது கோபமாகவே சேர்ந்துக்கொண்டது.
‘அவங்களுக்காக நான் காத்திருக்கேன் எண்ணம் வேற இருக்கா அவங்களுக்கு. அது கூடாது. வலிக்க விட்டுச் சென்றவர் தானே! இப்போ வந்து என்னவாம். அவங்க சொல்லிய கல்யாணம், கர்ப்பம் இப்போ எங்கப்போனதாம்’ என்று மொட்டை மாடியில் குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டு தன்போக்கில் புலம்பிக் கொண்டிருந்தாள்.
மாலை வெயில் முகத்தில் மோதிய சூட்டினை பொருட்படுத்தாது ருதுவை மனதில் காய்ச்சி எடுத்தாள்.
‘அவங்களுக்காக நான் ஏன் அழணும்? அழாத இமையாள்’ என்று கண்களை துடைத்தவள், அப்போதுதான் கவனித்தாள் தன்னையே பார்த்து நின்றிருக்கும் இனியனை.
“எப்போ வந்தீங்க?”
“ருதுவை பார்த்தியா?”
“நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்.”
“நான் கேட்டதுக்கு இது பதில் இல்லையே!”
“அண்ணா ப்ளீஸ்” என்றவள் வழமைப்போல் தமயனின் முன் முழுதாய் உடைந்து கதறினாள்.