அன்பின் அதீதம் 20

அத்தியாயம் 20

அன்று ஆதியின் வாயிலாக தீரன் காதலிருந்தும் தன்னை திருமணம் செய்துகொள்ள முடியாதென சொல்லிவிட்டுச் சென்றதோடு, தன்னிடம் பேசாததற்கும் காரணம் அறிந்த மயிலாஞ்சலி, அப்போதே அக்கணமே வீட்டின் கூடத்தில் அனைவரையும் கூட்டியிருந்தாள்.

ஆதி தன்னுடைய மகளின் மனதை சொல்லியிருக்க அர்ச்சனாவுக்கு அது குறித்துதான் அவள் அனைவரையும் பேசிட அழைத்திருக்கிறாள் எனும் அனுமானம். மகிழ்வின் பிரதிபலிப்பாக மகளை பார்த்திருந்தாள்.

“இப்படி எல்லாரையும் கூட்டி வச்சிட்டு எதுவும் பேசாம நின்னுட்டு இருந்தாக்கா என்ன அர்த்தம் அஞ்சலி?” முத்து மாணிக்கம் கண் காட்டிட துளசி கேட்டிருந்தார்.

அவருக்கு, தான் ஒரு முடிவெடுத்து அதனை தன்னுடைய செல்லப்பேரன் மறுத்துச்சென்ற வருத்தம் இருந்தது. உடனில்லாவிட்டாலும், தள்ளி வைத்திருந்தாலும் அங்கு அனைவருக்கும் தீரன் தான் அதீத செல்லம்.

இன்னொரு பக்கம் அவனின் மனம் அறியாது நடந்துவிட்டோம் என்ற எண்ணமும்.

“எனக்கு தீரா மாமாவை கண்ணாலம் பண்ணி வைய்ங்க” என்று சுற்றி வளைக்காது நேரடியாகவே சொல்லியிருந்தாள்.

“அதுக்குத்தேன் கொடுத்து வைக்கலையே! வேணாமின்னுல சொல்லிட்டு போயிட்டான்” என்று அங்கலாய்த்துக் கூறினார் கொற்றவை.

பெரியவருக்கு முன்னால் தாங்கள் யாரும் பேசிடக் கூடாதென மற்ற அனைவரும் அமைதியாக இருந்தனர்.

“மாமா வேணாமின்னாக்கா… அப்படியே விட்டுப்புடுவீங்களா ஐயா?” என்ற மயிலாஞ்சலி, “மாமா என்னைய வேணாம் சொன்னதுக்கு காரணம் நாந்தேன்” என்றாள்.

முத்து மாணிக்கம் விழிகள் இடுங்க என்னவென்று பார்வையால் வினவினார்.

மயிலாஞ்சலி சொல்ல வேண்டிய அனைத்தையும் மறைக்காது சொல்லியிருந்தாள்.

“இந்தப்பய ஒத்த வார்த்தை சொல்லலையே” என்று துளசி வாயில் கை வைத்திட,

“தீரனுக்கு நீன்னா உசுரு தெரியும். ஆனால் உனக்காக இம்புட்டுக்கு விட்டுக் கொடுப்பியான் நினைக்கல” என்றார் மாலதி.

“இவளுக்கு விருப்பமில்லன்னு அவன் வாழ்க்கையையே விட்டுக் கொடுத்துட்டியானே” என்று வியப்பாகக் கூறினார் ராஜாத்தி.

“இப்போ நாங்க என்ன பண்ணணுத்தா?” ஏற்கனவே அனைவருக்கும் விருப்பமான முடிவாக இருந்திட அடுத்து என்ன என்பதாக முத்து மாணிக்கம் கேட்க,

“கண்ணாலம் பண்ணி வைய்ங்க” என்ற மயிலாஞ்சலி, “ஆனால் மாமாக்கு நாந்தேன் சொல்வேன். வேற யாரும் மூச்சுவிடக் கூடாது” என்றாள்.

“அப்படியே நாங்க சொல்றதுக்கு உன் மாமா போன் போட்டதும் எடுத்து கலகலத்து எங்ககிட்ட பேசுறான் பாரு” என்று நொடித்தார் கல்யாணி.

“பேசுவாங்க அம்மத்தா” என்றவள், “உங்ககிட்ட பேசுனா திரும்ப என்னைய கட்டிக்க சொல்லி பேசுவீங்க… ஒரு கட்டத்துக்கு மேல உங்க பேச்சையும் கேட்காம இருக்க முடியாம, எம் மனசுக்கு விருப்பமில்லாத முடிவை எடுத்திடுவோமுன்னு மாமாக்கு பயம். அதுதேன் பேசாம இருக்காய்ங்க” என்றாள்.

“இப்போவே நல்லா சப்போர்ட் பண்றத்தா” என்ற ஆதி, அவளின் கன்னம் தட்டி, “இந்த விசயத்தில் நீயி சொல்றதை நாங்க செய்றோம். உன் மாமன ஓட விடுறோம்” என்றான்.

“தேங்க்ஸ் மாமா. நீங்க சொல்லலன்னா காரணம் புரியாம இன்னுமாட்டிக்கும் மண்டையை உடைச்சிட்டு இருந்திருப்பேன்” என்றாள்.

ஆதி கீற்றாய் புன்னகைத்தான்.

“ஒன்னுமே இல்லாமா ஈசியா சேர்ந்திருக்கலாம். எவ்ளோ காம்ப்ளிகேட் பண்ணிட்டீங்க” என்று அரவிந்த் கூற, “உங்களவுக்கு தீரா மாமாக்கு விவரம் போதல மாமா” என்று அவனை வார்த்தையால் வாரியிருந்தாள் மயிலாஞ்சலி.

அரவிந்த், ஆதிரா காதல் திருமணம். அதை குறித்தே கேலி செய்தாள்.

“என்ன தாத்தா நீங்க ஒன்னும் சொல்லாம இருக்கீய்ங்க?” என்று மயிலாஞ்சலி மாயவேலுவிடம் கேட்க,

“அவனை உனக்கு கட்டிக்கொடுத்து நம்ம வூட்டோட வைச்சிக்கணும் கொள்ள ஆசைத்தா! ஐயா ஒரு முடிவெடுத்து வெளியில பொண்ணு பார்க்கவும் என் ஆசையை உள்ளுக்குள்ளே வைச்சிக்கிட்டேன். ஐயா வார்த்தையை மீறி எதுவும் செஞ்சது இல்லையே! அதேன்” என்ற மாயவேல், “அன்னைக்கு ஐயாவாவே உங்க கண்ணாலத்தைப் பத்தி பேசவும் குளுந்துபோயிட்டே(ன்)த்தா. ஆனா சின்னவன் வேணாம் சொன்னதுல உண்டான வருத்தம்… இப்போ உன் பேச்சுல போயிடுச்சுத்தா. நீங்க ரெண்டேரும் சந்தோஷமா இருக்கணும்” என்று அவளின் உச்சியில் கை வைத்திருந்தார்.

“உங்க அப்பாவும் உன்னைமாறியே நெனச்சிருக்கார்.” ரத்னவேலு தன்னுடைய மனைவியிடம் மெல்ல கூறினார்.

“எல்லாருக்கும் உள்ளுக்க இந்த ஆசை இருந்திருக்கு மாமா. ஆனா யாரும் வெளிய சொல்லிக்கல” என்ற அர்ச்சனா, “ஐயா முடிவுக்கு கட்டுப்பட்டு இருந்திருக்காய்ங்க” என்றாள். அதையே முத்து மாணிக்கமும் கேட்டார்.

“அப்போ எல்லாருக்கும் இந்த நெனப்பு இருந்திருக்கு… நான் வெளிய பொண்ணு பார்க்கவும் என் முடிவுன்னு யாரும் வா தொறக்கல” என்ற பெரியவர், “சின்னவனுக்கு கண்ணாலம் பண்ணனும் நெனச்சதும் நீதேன் மனசுல பட்ட. ஆனால் அவன் உங்களுக்குள்ள இருக்க எழெட்டு வயசு வித்தியாசத்தை பெருசா பேசி மறுத்திடுவான் நெனச்சுதேன் வெளிய பார்த்தேன். ஆனால் அன்னைக்கு அவன் மடியில நீ தலை வைச்சு உறங்கிறதை பார்த்து, அவன் பக்கட்டுக்கு இன்னொரு பொண்ண நிறுத்தி வைக்க முடியும் தோணல… அதேன் அடுத்தநாள் என் விருப்பத்தை எல்லார்கிட்டவும் சொன்னேன். ஆனால் அவன் காரணமே சொல்லாம வேணாமின்னுட்டு போவான்னு நெனைக்கல” என்றார். வருத்தமாக.

“இப்போ என்னத்துக்கு வெசனம். ஆனது ஆச்சு… இனி பழசையே பேசாம… அடுத்து என்னன்னு பார்ப்போம்” என்றார் கொற்றவை.

“ஆமாங்க ஐயா… போனவனை வர வைச்சு சுருக்க கண்ணாலத்தை பண்ணிப்புடுவோம்” என்றார் ராஜவேலு.

“அதுக்கு அவன் வரணுமேடே” என்றார் கனகவேல்.

“அஞ்சலி கூப்பிட்டாக்கா வாரான்” என்றார் கேசவன்.

“இல்லை நான் கூப்பிட்டாலும் வரமாட்டாய்ங்க… என்கிட்டவும் பேசுறது இல்லை” என்ற மயிலாஞ்சலி, “ரெண்டு மூணு மாசம் பார்ப்போம் ஐயா. மாமா அப்பவும் ஒதுங்கியே இருந்தாக்கா நாம கண்ணால தேதியெல்லாம் முடிவு பண்ணி ஏற்பாடு பண்ணுவோம்” என்றாள்.

“அவன் இல்லாம ஏற்பாடு பண்ணி?” என்றான் அன்பன்.

“மாமாவை கூட்டிட்டு வாரது என் பொறுப்பு” என்ற மயிலாஞ்சலியிடம், “நீயி உன் மனசை சொல்லிட்டாளே அவன் ஓடி வந்திடுவான்” என்றான் முத்து பிரபா.

“அவருக்கு மட்டுந்தேன் நானா ஆசைப்படனும் நெனைக்கத் தோணுமா? எனக்கு அவங்க என்கிட்ட விருப்பத்தை சொல்லணும் ஆசையிருக்காதா?” என்ற மயிலாஞ்சலி, “யாரும் மாமாகிட்ட அவங்களுக்கு நாந்தேன்னு சொல்லக்கூடாது. அப்படியே தெரிஞ்சாலும் எனக்கு கண்ணாலன்னு மட்டுந்தேன் தெரியணும். யாரு மாப்பிள்ளைன்னுலாம் தெரியக்கூடாது” என்றதோடு, “முக்கியமா அம்மா, அப்பா உங்களுக்கு” என்றாள்.

அர்ச்சனா அளவம் காட்டிட,

“இன்னும் கொஞ்ச நாளுக்கு எனக்கு அம்மாவா மட்டும் இருங்க…” என்ற மயிலாஞ்சலி, “இருக்கீய்ங்க” என்றாள் அழுத்தமாக.

“ரொம்பத்தான் ஆர்டர் போடுற?” அர்ச்சனா கேட்க,

“உங்க தம்பி பொண்டாட்டி ஆகப்போறேன். அப்போ அதுக்கான அதிகாரம் இருக்குந்தேன்” என்று பார்வையால் வெட்டினாள் மயிலாஞ்சலி.

“இனிமேட்டுக்கு வூட்ல நிறைய சுவாரஸ்யமான சம்பவமெல்லாம் நடக்குமாட்டிக்கு” என்று தேவதாரணி கூறிட, அனைவரிடத்திலும் விரிந்த சிரிப்பு.

“இருக்காதா பின்னே அம்மாவே நாத்தனாரு ஆவுறாய்ங்க… சப்போர்ட்டு மகளுக்கா? தம்பிக்கா? பார்ப்போம்” என்றாள் கலாவதி.

“நிச்சயம் அர்ச்சனா மதினி சப்போர்ட்டு தம்பிக்குதேன்” என்று காயத்ரி கூற, “அஞ்சனை மதினி வேணுமின்னா அஞ்சலிக்கு சப்போர்ட் பண்ணலாம்” என்றாள் ஆதிரா.

“ஆமா ஆமா… தம்பியை அக்காவே செல்லம் கொஞ்சிக்கிட்டும். எனக்கு என் மவள் அஞ்சலிதேன் முக்கியம்” என்று அஞ்சனை கூறிட, அர்ச்சனா தன்னுடைய தங்கையின் கன்னத்தில் இடித்தார்.

ஒருவழியாக அனைத்தும் சீர் பெற, தீரன் மட்டும் தன் நிலையிலிருந்து கொஞ்சமும் தளரவில்லை. மொத்தமாக குடும்பத்து ஆட்களையே தள்ளி வைத்திருக்க, மயிலாஞ்சலியின் பேச்சினை நம்பி எப்படி திருமண ஏற்பாடுகளை செய்வதென்று மாதங்கள் மூன்று கடந்த பின்னர் அனைவரும் கூடிப்பேசிட…

“அதெல்லாம் அஞ்சலி சரிக்கட்டிடுவா. நாம ஆக வேண்டியதைப் பார்ப்போம்” என்று அனைவரையும் திருமண வேலைகளை செய்ய வைத்திருந்தார் ரத்னவேலு.

அவ்வீட்டில் தீரனிடம் ரத்னத்திற்கான மதிப்பு தெரிந்தே இருக்க, அவர் சொன்னால் நிச்சயம் தீரன் வந்துவிடுவான் எனும் நம்பிக்கையில் நாள் குறித்து திருமண ஏற்பாடுகளை கவனிக்கத் தொடங்கியிருந்தனர்.

திருமண அழைப்பிதழ் அச்சிட்டு வீட்டிற்கு வந்திருக்க…

“இந்த குடும்பத்துல தனிச்சு நின்னவன், உன் மூலமாதேன் நம்மோடவே இருக்கணும். கண்ணாலம் ஆனதும் அவனோட அங்கிட்டு போகாம… இங்கிட்டு நம்மோடவே அவனை நிறுத்திக்கப்பாரு” என்றார் கொற்றவை.

“அஞ்சலிக்கும் இங்கிட்டு நம்மோடவே இருக்கத்தேன் அத்தை விருப்பம். அதுக்குத்தேன் வீட்டோட பையன் பார்க்க சொன்னாள். இப்போ மட்டும் எப்படி அவனோட அங்கிட்டு போவா… இனிமேலுக்கு சின்னவன் நம்மக்கூடத்தேன்” என்றார் துளசி.

மயிலாஞ்சலி தன்னுடைய தந்தையை பார்க்க, ரத்னவேலுவோ அர்த்தமாக கண்கள் மூடி திறந்தார்.

தந்தையிடம் மெல்ல தலையசைத்த மயிலாஞ்சலி…

“உங்க எல்லாருக்கும் அப்படியொரு எண்ணமிருந்தா இப்போவே மறந்திடுங்க” என்றாள்.

அவள் கூறியதில் அதிர்வாய் அனைவரும் நோக்க…

“எனக்காக மட்டுமே ரோசிக்கிற மாமாவுக்காக, அவரோட விருப்பத்துக்காக நான் ரோசிக்க மாட்டனா?” என்ற மயிலாஞ்சலி, “மாமா எம்புட்டு பெரிய கம்பெனியில, எவ்ளோ பெரிய பதவியில இருக்காரு தெரியுமா? நாமளும் யாரும் கூட இல்லாம அந்த உசரத்துக்கு போவ எம்புட்டு கஷ்டப்பட்டிருப்பாரு. அம்புட்டு சுலுவா அதையெல்லாம் விட்டுப்போட்டு எனக்காக வந்துப்புடு மாமான்னு ஒரு நாளும் நான் சொல்லமாட்டேன்” என்றாள்.

மயிலாஞ்சலி ஒருத்தி மட்டும் அன்றைக்கும் இன்றைக்கும் தீரனுக்காக மட்டுமே அனைத்தையும் பார்ப்பது எல்லோருக்கும் அத்தனை மகிழ்வை கொடுத்தது. இருவருக்குமான இந்த அன்பு அவர்களின் வாழ்வை சிறக்க வைக்குமென்பதை அவனுக்கான அவளின் பேச்சில் உணர்ந்து நிறைவு கொண்டனர்.

“எங்கிருந்தாலும் நம்ம புள்ளைங்க அப்படிங்கிறது மாறாது. அவங்களுக்கு எது சரியோ அதையே பண்ணட்டும். இனி இந்தப்பேச்சு வேணாம். அவனும் ஒன்னும் வாழ்க்கை முச்சூடும் அங்கிட்டே இருந்திடமாட்டியான்” என்று சூழலை இயல்பாக்கியிருந்தார் முத்து மாணிக்கம்.

“அப்போ நாங்க எல்லாம் இல்லாம நீயி இருந்திடுவ…?” என்று ஆதி வேண்டுமென்றே அவளை சீண்டினான்.

“கொஞ்சம் கஷ்டந்தேன்” என்ற மயிலாஞ்சலி, “மாமா ஒருத்தர் என்கூட இருந்தாக்கா நீங்க அம்புட்டு பேரும் என்கூட இருக்கிறதுக்கு சமம்” என்று அனைவரின் வாயினையும் அடைத்திருந்தாள்.

அவளது பேச்சில் தீரன் மீதான அவளின் அன்பை மட்டுமே பார்த்தனர். புரிதல் உள்ள உறவுகளுக்கிடையில் அதீதம் பெறுகிறது அன்பு.

மயிலாஞ்சலி ரிச்சர்ட்டிடம் தினமும் அலைபேசி வழியாக தொடர்பில் இருந்திட, அவனுக்கும் இவர்களது திட்டம் தெரிந்திருந்தது.

“அவன்கிட்ட சொல்லிட்டே செய்யலாம் அஞ்சலி” என்று ரிச்சர்ட் கூறியதற்கு, “மாமா என்கிட்ட லவ் சொல்லணும் சின்ன ஆசை ரிச்சி அண்ணே… அதுக்காகத்தேன் இந்த டிராமா” என்றிருந்தாள் மயிலாஞ்சலி.

ரிச்சர்ட்டுக்கு மயிலாஞ்சலியின் மனம் புரிந்தது. என்ன நடந்தாலும் தன்னுடைய நண்பனின் மனம் நினைத்த வாழ்வு கிட்டுகிறதே என்று அவனும் தீரனிடம் எதுவும் சொல்லிக்கொள்ளவில்லை. இறுதி வரை தனக்குத் தெரியுமென்பதையும் காட்டிக்கொள்ளவில்லை.

வீட்டிற்கு வந்த பின்னர் அத்வத் மூலமாக எப்படி தன்னுடைய சம்மதமே இல்லாது திருமண ஏற்பாடுகள் வரை தைரியமாக வந்தனர் என்பதை அறிந்துகொண்ட தீரன், அனைத்திற்கும் தன்னவள் தான் காரணமென அறிந்ததும் வேகமாக மயிலாஞ்சலியின் அறை நோக்கிச் சென்றான்.

“நாளைக்கு கண்ணாலத்தை வைச்சிக்கிட்டு இன்னைக்கு பொண்ணுக்கிட்ட பேசலாம் கூடாது மாப்பிள்ளை” என்று அவனுக்கு எதிர்பட்ட கயல்விழி கேலி செய்ய… தீரன் கண்டுகொள்ளவே இல்லை.

“உன்னைய ஹரிஷ் தேடினார் போய் பாரு” என்று சென்றிருந்தான்.

கதவு திறந்தே இருக்க தீரன் அனுமதியின்றி உள்ளே சென்றிருந்தான். இனி அனுமதி கேட்கவும் வேண்டுமா என்ன? அவள் அவனவளாயிற்றே! ஒவ்வொரு நொடியும் தனக்குள் இழுத்து வைத்துக்கொள்ளத்தான் நேரத்தை நகர்த்திக் கொண்டிருக்கிறான்.

அப்போதுதான் மயிலாஞ்சலிக்கு தேவதாரணி வீட்டிலே பறித்து அரைத்த மருதாணியை கைகள் மற்றும் கால்களுக்கு வைத்து முடித்து எழுந்தார்.

“நேத்து ராத்திரிக்கே வைச்சிருக்கலாம். இப்போ கை பார்க்க அம்புட்டு அழகா இருந்திருக்கும். ராவுல வைச்சா உனக்கு ஒத்துக்காதுன்னு விட்டாச்சு. இன்னும் செத்த நேரத்துல பொண்ணு அழைப்புக்கு தயாராவ சொல்லுவாய்ங்க. அதுக்குள்ள ஒட்டுதா பார்ப்போம்” என்றாள் வித்யா.

“காலையில நலங்கு வைக்கன்னு, தலையில அரப்பு, பாசிப்பயிறு வேற தேய்ச்சிருக்கு. அதனால ரொம்ப நேரமெல்லாம் வச்சிருக்க வேணாம். கலரு புடிக்கிற வரை புடிக்கட்டும். ரெண்டு மணி நேரத்துல கழுவிடு” என்றாள் அஞ்சனை.

“அதெல்லாம் அவள் சின்னவர் மேல வச்சிருக்க லவ்வுக்கு செஞ்சாந்து கணக்கா செவக்குமாட்டிக்கு” என்று காயத்ரி கூற அங்கு நாணத்தால் சிவந்து போனாள் மயிலாஞ்சலி.

“பேருக்கேத்த மாறியாவுல மொவம் செவக்குது… ஆத்தி, இவளை இப்படி பார்க்க எனக்கே என்னவோ ஆவுதே! சின்னவன் நெலமை அம்புட்டுதேன்” என்று மயிலாஞ்சலியின் முகம் வழித்து திருஷ்டி சொடுக்கினாள் ஆதிரா.

“இப்போவே அவளுக்கு மட்டுந்தேன்னுதேன் இருக்காய்ங்க… கண்ணாலம் ஆனா நெதம் மீனாட்சி ஆட்சிதேன்” என கலாவதி கூற கொள்ளென்ற சிரிப்பு அவ்விடம் நிறைக்க,

“அய்யோ போதுமாட்டிக்கு. என்னைய வம்பு பண்ணாம எல்லாரும் போங்க” என்று மயிலாஞ்சலி சிணுங்கிட,

“சரித்தா போறோம். நீயி தாலி கட்டுற வரை ஒத்தையில கனா கண்டுட்டு இரு” எனக்கூறி அனைவரும் செல்ல திரும்பிட, தீரன் அவர்களின் பேச்செல்லாம் கேட்டபடி நின்றிருந்ததை அப்போதுதான் கவனித்தனர்.

“என்ன கொழுந்தனாரே அம்புட்டு உரிமையா உள்ள வந்து நிக்குறீய்ங்க? நாளைக்குத்தேன் தாலி கட்டு” என்று வம்பு பேசினாள் தேவதாரணி.

“அவகிட்ட எப்பவும் எனக்கு மட்டுந்தேன் முதல் உரிமையாக்கும்” என்ற தீரன், “இப்போ நீங்கெல்லாம் போறீங்களா?” என்றான்.

“இருங்க இருங்க ஐயாகிட்ட சொல்லுறோம்” என்று காயத்ரி கூற,

“ம்ம் போய் சொல்லுங்க. இப்போவே தாலி கட்டுணுமாம் அப்படின்னு” என்று தீரன் அசராது கொடுத்த பதிலில் அவர்களெல்லாம் வாயில் கை வைத்தவர்களாக வெளியேற, மயிலாஞ்சலி அவனை தவித்துப் பார்த்தாள்.

அவர்களின் அரவம் மறையும் வரை பொறுமையாக நின்றிருந்த தீரன், வேகமாக மயிலாஞ்சலியை தனக்குள் அடக்கி இறுக்கமாக அணைத்திருந்தான்.

“அச்சோ மாமா மருதாணி” என்றவள் அவனை தீண்டிடாது கைகளை விரித்து விலக்கி வைக்க, அவனுக்கு இன்னும் வாகாய் அமைந்தது.

“மாமா…” அவளின் அழைப்புக்கு அவனது அணைப்பின் நெருக்கம் கூடியது.

“லவ் யூ டி… லவ் யூ டூ தி கோர்” என்று அவளின் செவியில் ஓயாது சொல்லிக்கொண்டே இருந்தான்.

முதலில் அவனது நெருக்கத்தில் மூச்சடைத்துப் போனவள், அவன் சொல்வதில் இன்பமாய் அவனுள் உறைந்து நின்றாள்.

“நான் சொல்லி கேட்கணும் அம்புட்டு ஆசையா மயிலா?”

அவளை தன்னுடைய அணைப்பில் வைத்துக்கொண்டே கேட்டான்.

“இதை ஆரம்பத்திலே சொல்லியிருந்தா இந்நேரம் நம்ம கண்ணாலம் முடிஞ்சு நடக்க வேண்டியதெல்லாம் நடந்திருக்கும் மாமா” என்று ஒரு வேகத்தில் சொல்லிய பின்னரே தான் சொன்னதன் பொருளுணர்ந்து சடுதியில் அவனது நெருக்கத்திலிருந்து விலகி நின்றிருந்தாள்.

“அப்படி என்ன நடந்திருக்குமாம்?” தீரன் விஷமம் தெறிக்க, இதழின் ஓரம் சுருண்டுவிட்ட புன்னகையோடு கேட்டிருந்தான்.

“அச்சோ மாமா” என்றவள், மருதாணி வைத்திருப்பதால் கை கொண்டு முகத்தை மறைத்திட முடியாது, அவனது மார்பில் நெற்றி முட்டி முகம் மறைத்திருந்தாள்.

தீரனும் தன்னிடம் சேர்ந்தவளை சுகமாய் தனக்குள் நிறைத்துக் கொண்டான்.

அடுத்தநாள் அதிகாலை முகூர்த்தத்தில் உற்றத்தார் மற்றும் சுற்றத்தார் ஆசீர்வாதத்தோடு, மதுரை ஆளும் அரசாணி மீனாட்சி அம்மன் சந்நதியில், அன்பின் அதீதத்தில் தன்னுடைய அகம் நுழைந்தவளை தனது வாழ்வின் சரிபாதியாக ஏற்றிருந்தான் மயிலாஞ்சலியின் அதிதீரன்.

ஏக்கமும் தவிப்புமாய் தளும்பி நின்ற காதல் திருமணத்தால் இதயம் சேர்ந்தது.

error: Content is protected !!
Scroll to Top