தூரமே தூரமாய் 17

தூரமே தூரமாய் 17

அம்பிகாவின் பேச்சில் முழுவதும் இல்லையென்றாலும், ஓரளவிற்கு தீர்க்கமான மனநிலைக்கு ருது வந்திருந்தான்.

அம்பிகாவே மகனுக்கு உணவினை ஊட்டிவிட்டு, படுக்க அனுப்பினார்.

மெத்தையில் விழுந்தவனுக்கு இமையாளின் நினைவுகளே.

“லேஷஸ்.” கையிலிருக்கும் டாட்டூவை விரலால் வருடியவனின் இதயத்தில் இதம். இதழில் முறுவல். நீண்ட நாட்களுக்குப் பின்னர் காதலின் குளுமையில் தேகம் சிலிர்த்தான்.

“உன்னோட ஆக்ஷன்ஸ் பார்க்க வெயிட்டிங்டி பொண்டாட்டி” என்று வாய்விட்டு சொல்லிக் கொண்டவனின் முகத்தில் வெட்கம் எட்டிபார்த்ததோ? அவனது அதரங்கள் விரிந்து மூறல்கள் பளிச்சென மின்னியது.

“லவ் பண்ற வயதாடா போலீசு உனக்கு” எனக் கேட்டுக்கொண்டவன், தன் காதல் பக்கங்களை மீட்டி பார்த்தான்.

“அப்போக்கூட நீ இவ்வளவு வெட்கப்படல போலவே. இப்போ அவள் பெயரை நினைச்சாலே பிளஷ் ஆகுது” என்று தன்னைப்போல் பிதற்றிக் கொண்டிருந்தவனின் அலைபேசி சிணுங்கியது.

“கொஞ்ச நேரம் லவ் ஃபீல் பண்ண விடமாட்டாங்களே!” கடுப்பாய் மொழிந்தவன் யாரென்று பார்க்க, கிருஷ்ணன்.

“சொல்லுங்கண்ணா?”

“சார் கைலாஷ் ஆளுங்களை அனுப்பி வச்சிருக்கார். ஸ்டேஷனை சுத்துப் போட்டுட்டாங்க சார்” என்றார்.

“அவனை வரவைக்கத்தான் இந்த ஆட்டமே! நேரில் வரமால் ஆட்டம் காட்டுறான்” என்று கொதித்த ருது, “வெப்பன்ஸ் வச்சிருக்கானுங்களா?” எனக் கேட்டுக்கொண்டே, ஆடை மாற்றி அணிந்தான்.

கீழே வந்தவன் ஷிவன்யாவின் அறைக்கதவு பாதி திறந்திருக்க, மெல்ல தட்டிவிட்டு எட்டிப்பார்த்தான்.

மெத்தையில் தேஷ் உறங்கிக்கொண்டிருக்க, அவனுக்கு அருகில் புத்தகத்தோடு உட்கார்ந்திருந்தாள். அவளின் ஒரு கை தேஷ்ஷை தட்டிக் கொடுத்தபடி இருந்தது.

ருது கதவினை தட்டியதில் விழி உயர்த்தி ஏறிட்டவளிடம்,

“அர்ஜெண்ட் வொர்க் டா. ஸ்டேஷன் போகணும். அம்மா இப்போ தான் தூங்கப்போனாங்க. திரும்ப எழுப்ப முடியாது. நீ வந்து கதவு லாக் பண்ணிக்கோ” என்று அழைத்தான்.

ஷிவன்யா வர,

“தூங்கலையா?” எனக் கேட்டிருந்தான்.

“எக்ஸாம் வரப்போகுதே டார்லிங். கொஞ்சம் கொஞ்சமா பிரிப்பேர் பன்றேன்” என்றாள்.

“ம்ம்ம்” என்றவன் அவளுக்கு கையசைத்துவிட்டு பொறுமையை மறந்தவனாக காற்றில் சீறினான்.

ருதுவின் வண்டி மற்றும் கதவு திறந்து மூடும் சத்தத்தில் கண் விழித்த வேங்கடம் என்னவென்று கூடத்திற்கு வந்தார்.

“அண்ணா ப்பா. ஸ்டேஷன் போறாங்க. ஏதோ அர்ஜெண்ட் சொன்னாங்க” என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, “உங்க போன் அடிக்கிதுங்க” என்று கண்களை கசக்கியபடி கொண்டு வந்து கொடுத்தார் அம்பிகா.

முதல்வரின் காரியதரிசி அழைத்திருந்தார்.

“ஹலோ வேங்கடம்.” பேசியது முதல்வர்.

“என்ன சார் இந்நேரத்தில். எமெர்ஜென்சி வொர்க் ஏதுமிருக்கா சார்? நான் வரணுமா?” எனக் கேட்டார் வேங்கடம்.

“என்னை பேசவிடுங்க சார்” என்ற முதல்வர், “உங்க பையன் வீட்டில் தானே இருக்காங்க?” என்று வினவினார்.

“அர்ஜெண்ட் வேலைன்னு இப்போதான் போனான் சார்.”

“ஹோ…” என்ற முதல்வர், “கைலாஷ் ஃபாரின் ட்ரிப் முடித்து வந்துட்டான். பாதியில் முடித்துக்கொண்டு வந்ததே காந்தாவை வெளியில் எடுக்கத்தான். கலவரம் வேலைக்கு ஆகலன்னு அவனே நேரடியா டீல் பண்ண நினைக்கிறான். எனக்கு கால் செய்து, ருதுவை அவசரமா இப்போவே டிஸ்மிஸ் பண்ண சொல்லி உள்துறை அமைச்சருக்கும், டிஜிபி’க்கும் மெசேஜ் பாஸ் பண்ண சொல்லி எனக்கே ஆர்டர் போடுறான். கட்சிக்கு அண்டர் கிரவுண்ட் வேலையெல்லாம் பார்க்கிறான்னு எனக்கு முன்ன பதவியிலிருந்த என் அப்பா விட்டு வச்சது தப்பா போயிடுச்சு” என்றவர், “இது பொறுமையா டீல் பண்ணும் விஷயம். எடுத்ததும் என்னால் அப்படி செய்திட முடியாது. நாளை நேரில் வாங்க பேசிக்கலான்னு சொல்லி கால் வச்சிட்டேன். ஆனால் அவன் இதோட விடுற ஆள் இல்லை” என்றார்.

“தேன்க் யூ சார். உங்க பதவிக்கு நீங்க இதை சொல்லணும் அவசியமில்லை. ஆனால் நீங்க கவலைப்பட வேண்டாம் சார். ருதுகிட்ட ஏன் மோதினோம்ன்னு கைலாஷ் தான் ஃபீல் பண்ணப்போறான்” என்ற வேங்கடத்திடம்,

“என் பணியே மக்களை பாதுகாப்பது தானே வேங்கடம். என்ன சில நேரம் வேடிக்கை பார்ப்பதும் அவசியமாகி விடுகிறது” எனக்கூறி வைத்திருந்தார்.

வேங்கடம் முதல்வரிடம் தைரியமாக பேசிவிட்டார். இருப்பினும் மகனை நினைத்து பயமாக இருந்திட, வேகமாக அழைப்பு விடுத்தார்.

அங்கு ருது அழைப்பை எடுக்கும் நிலையில் எல்லாம் இல்லை. ஆக்ரோஷமாக சுழன்றடித்துக் கொண்டிருந்தான். ஒவ்வொரு அடியிலும் தடியர்களுக்கு கண் முன்னே இடியை இறக்கிக் கொண்டிருந்தான்.

வீட்டிலிருந்து புறப்பட்ட ருது தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வந்தானா அல்லது இறக்கை கொண்ட பறவையில் வந்தானா என்பதை கண்டறிந்திடாத வேகத்தில் விரைந்து வந்திருந்தான்.

ருது வந்த நேரம் அப்பகுதியே இருளில் மூழ்கியிருந்தது. மின்சாரத்தை தடை செய்திருப்பார்கள் போலும்.

காவல் நிலையத்தின் உள்ளே மட்டும் ஜெனரேட்டர் உதவியால் மின் விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன.

கேட்டிற்குள் வண்டியை செலுத்திய ருது பார்வையை கூர்மையாக்கி சுற்றுப்புறத்தை அலசினான்.

ஆங்காங்கே தடியர்கள் இருளில் மறைந்து நிற்பது வரி வடிவமாக தெரிந்து. நள்ளிரவிற்கு மேலாகியதால் சுற்றுப்புறத்தில் மக்களின் அரவம் ஏதுமில்லை.

கேட்டிற்கும் அலுவலகக் கட்டிடத்திற்கும் நடுவில் உள்ள கொடி கம்பத்திற்கு முன் வண்டியை நிறுத்திய ருது, அதிலிருந்து இறங்கி கம்பத்தின் சுற்று மேடையில் குதித்து அமர்ந்தான்.

ருதுவின் வண்டியின் சத்தத்தில் இரவு நேரப்பணியில் உள்ளிருந்த காவலர்கள் வெளியில் வந்து நின்றனர்.

முதலில் மின்சாரம் தடைப்பட… அடுத்து இருளில் பல காலடி ஓசைகள் காவல்நிலையத்தைச் சுற்றி கேட்டிட, காந்தாவை காப்பாற்ற கைலாஷ் ஆட்களை அனுப்பி வைத்திட்டான் என்பதை யூகித்த பணியாளர்கள் பயத்தில் அப்பட்டமாக நடுங்கிக் கொண்டிருந்தனர்.

இதுபோன்று ஒருமுறை காந்தாவை உள்ளே தூக்கி வைத்த சமயம் கைலாஷே நேரடியாக வந்து காவல் நிலையத்தை தரைமட்டமாக்கி ஊடகங்களுக்கு போஸ் கொடுத்து கையாட்டியபடி காந்தாவை அழைத்துச் சென்றிருந்தான். அப்போது பணியிலிருந்த இரு காவலர்கள் கொலை செய்யப்பட்டிருந்தனர். அன்றைய பயம் அவர்களுக்கு. கைலாஷ் எதையும் செய்யக்கூடியவன்.

ஆட்கள் வந்தது தெரிந்ததுமே வெங்கட் காந்தாவை வைத்திருக்கும் செல்லுக்கு முன் சென்று நின்று கொண்டான்.

கிருஷ்ணன் தான் என்ன நடக்குமோ எனும் அச்சத்தில் ருதுவிற்கு தகவல் அளித்தார்.

வந்த ரவுடிகள் அலுவலகத்தை சுற்றி வளைத்திருந்தார்களே தவிர, எதுவும் செய்யாது அமைதியாக இருந்திட, உள்ளே இருப்பவர்களுக்கு அவர்களின் அமைதி மேலும் அச்சத்தையேக் கொடுத்தது.

“என்னண்ணா வந்தவனுங்க அமைதியா இருக்கானுங்க. இவனுங்க இப்படி அமைதியா இருக்கிற ஆளுங்க இல்லையே!” என்று வெங்கட் ஆச்சரியமாகக் கேட்டுக்கொண்டிருக்கும் போது தான் ருது வந்து சேர்ந்திருந்தான்.

“ருது சாருக்கு ஸ்கெட்ச் போட்டிருக்கானுங்க போல சார்” என்றார் கிருஷ்ணன்.

“சார் வந்தாச்சு. இனி ஆக்ஷன் தான்” என்று வெங்கட் சொல்ல… அனைவரும் வெளியில் வந்தனர்.

“எனக்காகத்தான வெயிட் பண்றீங்க. ஒளிந்து நிக்கிற எல்லா கோழையும் முன்ன வாங்க பார்ப்போம். பர்ஸ்ட் வரவங்களுக்கு அடி கம்மியா விழும்” என்று ருது முடிக்கும் முன்னமே ஒருவன் அரிவாளை உயர்த்தி பிடித்தவனாக, ஏய் என்று கத்திக்கொண்டு ஓடிவர, உட்கார்ந்திருந்த இடத்திலிருந்தே அவனது மார்பில் கால் வைத்து சுழட்டித் தள்ளியிருந்தான் ருது.

அவனோ நான்கைந்து பல்டி அடித்து கேட்டில் இடித்து சுருண்டு விழுந்தான்.

“செம மாஸ் ண்ணா…” வெங்கட் சிலாகிக்க…

“நீங்க இப்படியெல்லாம் எப்போ சார் மாஸ் காட்டுவீங்க?” எனக் கேட்டிருந்தார் இரவு பணியிலிருந்த பெண் உதவி ஆய்வாளர் கனகா.

“ம்க்கும்… போங்கக்கா நீங்க வேற. அதுக்கெல்லாம் தனி முக அமைப்பு வேணும்” என்று வெங்கட் சொல்ல…

“அதெங்க இங்கிருக்கு” என்று முடித்தார் கிருஷ்ணன்.

வெங்கட் முறைத்திட…

“ஆக்ஷன் முடிஞ்சிடப்போகுது அங்க பாருங்க சார்” என்று அவனின் முகத்தை திருப்பினார் கிருஷ்ணன்.

ருது நடந்து கொண்டே ரவுடிகளை துவம்சம் செய்து கொண்டிருந்தான்.

எங்கிருந்து தான் அத்தனை பேர் வந்திருந்தார்களோ? ருது அடிக்க அடிக்க புற்று ஈசலாய் வந்து கொண்டே இருந்தனர்.

வந்திருந்தவர்களில் பாதி பேர் எழ முடியாது தரையில் மண்புழுவாய் துடித்து நெளிந்துக் கொண்டிருந்தனர்.

“எவனாலையும் எழ முடியாது போலிருக்கே!”

“சும்மா கவுண்ட்டர் கொடுக்காம சாருக்கு ஹெல்ப் பண்ணலாமே நீங்க?”

“நீங்களும் எஸ்.ஐ தானேக்கா. போய் ஹெல்ப் பண்ணுங்களேன்” என்று வெங்கட் கனகாவை வம்பிழுக்க…

“ஒவ்வொருத்தனையும் பார்த்தீங்களா? மலைமாடு மாதிரி. லேசா மோதினாலே நான் கீழே விழுந்திடுவேன். இதுல எங்கிருந்து அடிக்கிறது” என்றவர், “இது ருது சாருக்கான சீன். நல்லா ஸ்கோர் பண்ணிக்கட்டுமே” என்று லாவகமாக கழண்டு கொண்டார் கனகா.

மீதியிருந்த ரவுடிகள் கையில் அரிவாள், கத்தியோடு ருதுவை சுற்றி வளைத்திருக்க… பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு பதற்றமாகியது. அந்த பதற்றம் கொஞ்சமும் ருதுவிடம் இல்லை.

ஒற்றை ஆளாக தடியர்களுக்கு மத்தியில் இடையில் கைகளைக் குற்றி நிமிர்ந்து நின்றிருந்தான்.

அனைவரையும் சுற்றி பார்வையால் வட்டமிட்டவன்…

“இன்னும் நீங்கலாம் அப்டேட் ஆகவே இல்லையாடா?” என்று நெற்றியை தேய்த்தான்.

“2026 ல இருக்கோம்டா. இப்போலாம் குழந்தைங்களே துப்பாக்கி வச்சு சுடுற கேம் தான் விளையாடுறாங்க. நீங்க இன்னமும் அதே அரிவாள், கட்டை, கம்பி, சைக்கிள் செயினுன்னு என் டைம் வேஸ்ட் பண்றீங்க” என பேசிக்கொண்டே ஒவ்வொருத்தனின் நிலையையும் உள்ளே அவதானித்தான்.

அவர்கள் நிற்கும் தன்மை, தன் மீது படிந்திருக்கும் கோணம், எந்த பக்கம் தன்னை தாக்கிட முடியுமென அனைத்தையும் தன் பேச்சின் மூலம் அவர்களை திசை திருப்பியவனாக மனதில் குறித்துக் கொண்டிருந்தான்.

“எங்களுக்குத்தான் புல்லட்டுக்கு கணக்கு சொல்லணும். உங்களுக்கு அப்படியில்லையே… துப்பாக்கி கொண்டு வந்திருந்தீங்கன்னா நானும் ஒன்னை பிடுங்கி… உங்க எல்லாரையும் சுட்டுத் தள்ளியிருப்பேன். ஃபைட்டும் முடிஞ்சிருக்கும். இப்போ பாரு மொக்கையா முடியுது” என்று தலையை சலிப்பாக ஆட்டினான்.

நொடியில் அனைவரும் மொத்தமாக ருதுவின் மீது பாய, அதிர்வில் காவலர்கள் அடியினை முன் வைத்திட, அவர்களின் பார்வையை மறைத்தது, சடுதியில் அங்கு எழுந்த புழுதி.

அனைவரும் ஒருசேர தாக்கிய கணம், ஒற்றை காலை தரையில் அழுத்தி ஊன்றிய ருது மற்ற காலினை பக்கவாட்டாக நீட்டி நின்ற இடத்திலிருந்து சுழன்றவனாக, சுற்றியிருந்தவர்களின் வயிற்றிலே அழுத்தமாக உதைத்து கீழே விழச் செய்திருந்தான்.

புழுதி விலக ஒவ்வொருவனாக எழ முடியாமல் எழுந்து பாய்ந்து வர… தன்னை தாக்க வருபவர்களை நின்றுகொண்டே சர்வ சாதாரணமாக வீழ்த்தியிருந்தான்.

சில நிமிடங்களில் அனைத்தும் முடிந்தது.

எல்லா ரவுடிகளும் ஆங்காங்கே சுருண்டு கிடந்தனர்.

“யாருக்காகவோ நீங்க ஏன்டா உதைபடுறீங்க?” என்று இரு கைகளையும் உயர்த்தி சோம்பல் முறித்த ருது…

“அண்ணா காபி கிடைக்குமா?” என கிருஷ்ணனிடம் கேட்டான்.

“வெளியில் கடையிருக்கும் சார். வாங்கி வரேன்” என்று கிருஷ்ணன் நகர,

“நானே போய்க்கிறேன். நீங்க இவனுங்களை செல்லுக்குள்ள தூக்கி போடுங்க” என்றவன், “வெங்கட் ஹெல்ப் பண்ணுங்க. நல்லா பப்ஜி பாக்குற மாதிரி பார்த்துட்டே நிக்கிறீங்களே!” என்றான்.

ருது கலாய்த்தது அப்பட்டமாக தெரிய கனகா அக்கா சத்தமாக சிரித்துவிட்டார்.

“பொண்ணுங்க ஃபைட் பண்ணக்கூடாதுன்னு இருக்கா? நீங்களும் காளி அவதாரம் எடுக்கலாம். தப்பில்லை. எப்பவுமே மகாலட்சுமி மட்டும் அழகில்லை. சில நேரம் காளி ரூபம் தான் அழகு” என்றவன், “ரெண்டு பேருக்கும் மேல போகணும் ஆசையே இல்லையா?” எனக் கேட்டு தேநீர் கடை நோக்கிச் சென்றான்.

“நான் அப்போவே சாருக்கு ஹெல்ப் பண்ணலாம் சொன்னேன்” என்று கனகா முனக… “இந்த வழக்கில் சாருக்கு சப்போர்ட் செய்து இன்ஸ்பெக்டர் ஆகிடனும்க்கா” என்றான் வெங்கட்.

“அது ஆகலாம். இப்போ இவனுங்களை அள்ளி உள்ளப்போடலாம்” என்று கிருஷ்ணன் ஒருவனின் காலை பிடித்து இழுத்துச்செல்ல…

“வரவர உங்களுக்கு உயர் அதிகாரிங்கிற பயமே இல்லாமல் போச்சுண்ணா” என்றான் வெங்கட்.

“உயர் அதிகாரியா? யாரு கனகா அது?” என்று கிருஷ்ணன் கேட்டதில் வெங்கட்டின் முகம் போனப்போக்கில் அவனுக்கே சிரிப்பு வந்தது.

வெளியில் வந்த ருது சாலையில் நின்றபடி தேநீர் கடை எங்கிருக்கென பார்வையிட, பத்தடி தொலைவில் ஒரு கடை தெரிந்தது. அதற்கு முன் காவல் நிலையத்திற்கு நேரெதிர் இருக்கும் மரத்தை நோக்கிச் சென்றான்.

ருது அருகே சென்று தலையை உயர்த்திட… ஒருவன் காமிராவோடு கீழே குதித்தான்.

“எல்லாம் ஷூட் பண்ணிட்டிங்களா?”

“சார்… சார்… அது” என்று இழுத்த நபர், “இது என்னோட ஜாப் சார்” என்றான்.

“நான் உங்களை ஒன்னுமே சொல்லலையே மிஸ்டர்” என்ற ருது, “எவ்வளவு நேரமா எடுத்திட்டு இருக்கீங்க?” எனக்கேட்டான்.

“ரவுடிங்க சுத்துப்போட்டதுல இருந்து சார்” என்றான் அவன்.

“ஹ்ம்ம்… அப்போ அவனுங்க இங்க வரயிருந்தது உங்களுக்கு முன்னவே தெரிந்திருக்கு அப்படித்தானே?” எனக் கேட்ட ருது, அவனின் தோளில் கைபோட்டபடி தேநீர் கடை நோக்கி அழைத்துச் சென்றான்.

அங்கு சென்று முன்னிருந்த பெஞ்சில் தளர்வாக அமர்ந்த ருது தன்னருகில் அமருமாறு கண் காண்பித்தான். கடைக்காரரிடம் இரண்டு என்று விரல் காண்பித்தான்.

“கைலாஷ் பி.ஏ என் ஃபிரண்ட் சார். இண்ட்ரெஸ்டிங்கா நியூஸ் கிடைக்குமேன்னு வந்துட்டேன் சார்” என்ற நிரூபர்… “ஆனால் நீங்க செம போலீஸ் சார். காமிராவில் ஆக்ஷன் படம் பார்க்குற மாதிரியே இருந்தது” என்றான்.

“ஹ்ம்ம்… உங்க பெயர்?”

“மனிஷ் சார்” என்றவன், “இந்த ஃபைட் நான் டிஸ்பிளே பண்ணிக்கட்டுமா சார்?” எனக்கேட்டான்.

“நான் உங்களை பார்க்காம இருந்திருந்தால் என்ன செய்திருப்பீங்க மனிஷ்?”

“அது…”

“சொல்லுங்க?”

“இந்நேரம் சேனலில் டெலிகாஸ்ட் செய்திருப்பேன் சார்?” என்றான் மனிஷ்.

“ஹ்ம்ம்…” என்ற ருது, “உங்களுக்கு கைலாஷ் பார்த்து பயமில்லையா?” எனக் கேட்டான்.

“கெட்டது செய்றவனுங்களே பயப்படுறது இல்லையே சார்” என்றான்.

அவனை மெச்சுதலாக பார்த்த ருது…

“இதில் கைலாஷின் பெயரை உன்னால் தைரியமா சொல்ல முடியுமா?” என்று புருவம் உயர்த்தினான்.

“கண்டிப்பா சார்” என்றவன், தங்களை கடந்து சாலையில் சென்ற வாகனத்தை தனது காமிராவில்… அது காவல் நிலையத்தின் உள்ளே செல்லும் வரை காணொளியாக பதிவு செய்தான்.

இதற்கிடையில் குளம்பி நீர் குடித்து முடித்திருந்தனர்.

“யார் கார் அது?”

“கைலாஷ் சார். ஃபாரின் ட்ரிப் போயிருந்தார். காந்தாவுக்காகவே பாதியில் திரும்பி வந்திருக்கார். அநேகமாக அவரோட ஆட்களை நீங்க அடித்து போட்டது அவருக்கு தெரிந்திருக்கும். அதான் உங்களை பார்க்க இந்நேரத்தில் நேராவே வந்துட்டார் போல” என்றான்.

“குட்…” என்ற ருது, “அம் ஈகர்லி வெயிட்டிங் ஃபார் திஸ் மொமெண்ட்” என்று உற்சாகமாக எழுந்து, குளம்பிக்கான தொகையை செலுத்திவிட்டு துள்ளல் நடையோடு காவல் நிலையம் நோக்கிச் சென்றான்.

செல்லும் ருதுவை வியப்போடு, அத்தனை உயரமாகத்தான் பார்த்திருந்தான் மனிஷ்.

கைலாஷ்ஷை நேரில் சந்திப்பதற்காக ருது கொண்ட ஆர்வம் அதீதம். அதற்கு பெரும் காரணம் ஒன்று உள்ளது.

என்றோ பட்ட துன்பத்திற்கும், வலிக்கும் பதில் கொடுக்கப்போகும் முனைப்பாக இருக்கலாம்.

தன் வாழ்வின் பாதையை மீண்டும் நேர்கொண்டு அமைத்திடும் வேகமாக இருக்கலாம்.

இல்லை… பழிவாங்குதலாகவும் இருக்கலாம்.

அன்னை என்ற உயிரை பிரிந்ததான் ரணமாக இருக்கலாம்.

மொத்தத்தில் கைலாஷ் என்றொருவனை விட்டு வைத்தது போதுமென்று நினைத்துவிட்டானோ?

ருத்விக்… கைலாஷ்…

கொடுப்பது யாரோ? பெறுவது யாரோ?

வித்திட்ட விதையே விருட்சமாய் தாக்கிடும்போது உரமிட்டவன் பக்கவினை என்னவோ?

வினைத்த வினையெல்லாம் அறுக்கும் கால தேவனாக ருதுவின் ஆட்டத்தில் நிலைகுலைய இருப்பது அவனது ரத்தமல்லவா!

விட்டுவிடுவானா? விடை கொடுத்திடுவானா?

பார்ப்போம்…

error: Content is protected !!
Scroll to Top