அன்பின் அதீதம் 19

அத்தியாயம் 19

‘அவளுடனான உரையாடல்கள் என்ன செய்துவிடும்?
சாதாரணமான ஒரு நாளினை வண்ணங்கள் நிறைந்த வானவில் கோலமாக மாற்றிவிடும்.’

********************

என்னதான் தான் வர வேண்டுமென்று அடமாக இருந்தாலும், திருமண நாள் நெருக்கத்தில் நிச்சயம் மயிலாஞ்சலியாகக் கிளம்பிவிடுவாளென்று தீரன் அத்தனை நம்பிக்கையாக இருந்தான்.

ஆதலால் மயிலாஞ்சலி செல்வது குறித்து எவ்வித பேச்சினையும் தீரன் வைத்துக்கொள்ளவில்லை.

அவளுக்கான திருமணம் முடிந்துவிட்டால் அவளுடன் பேசவும் வாய்ப்புக்கிட்டாது என நினைத்த தீரன், அவள் இங்கிருக்கும் நாட்களை அவளுடனே கழித்தான்.

அவள் முகம் பார்த்து வீட்டை விட்டு கிளம்புவது, வீட்டிற்கு வந்ததும் அவள் முகம் பார்ப்பது… ஒரு நாளின் தொடக்கமும் முடிவுமாய் அவளுடன் நான் என்பதே தீரனுக்கு அத்தனை நிறைவை கொடுத்தது. போதுமானதாக இருந்தது. கிடைக்குவரை நெஞ்சோடு சேமித்து வைக்க நினைத்தான்.

அதற்காக காதலென்று அவளை அருகில் வைத்துக்கொள்ளவில்லை. அது அவளின் அன்புக்கு தான் செய்யும் கலங்கமென்றே கருதினான்.

இந்த காதல் அவனுள் தடம் பதிப்பதற்கு முன் அவளிடத்தில் அவனது கண்ணோட்டம், பாசம், அக்கறை, பிணைப்பு எல்லாம் எப்படி இருந்ததோ… அந்த பழைய நாட்களுக்குள்ளான வரையறைக்குள் அவளுடன் சுகமாய் ஒரு வாழ்வு வாழ்ந்து கொண்டான்.

அவள் கையால் சமைத்த உணவில் அத்தனை இன்பம் உணர்ந்தான்.

அவனுக்காக அவனது வரவுக்காக தினமும் அவள் காத்திருப்பதில் பேரின்பம் கண்டான்.

“இதுவே போதும்ல உனக்கு?”

பால்கனி இருக்கையில் கண்களை மூடி அமர்ந்திருந்த தீரன் ரிச்சர்ட்டின் குரலில் விழிகள் திறந்து நிமிர்ந்தமர்ந்தான்.

“நீ எப்போடா வந்த?” என்ற தீரன், “உன்னோட கோடிங் ஃபங்ஷன் ஆச்சா? ஏதோ இஸ்யூஸ் கேள்விப்பட்டேன்” என்றான்.

“இப்போ நான் ஆபீஸ் மேட்டர் பேச வரல” என்ற ரிச்சர்ட், “என்ன முடிவு பண்ணியிருக்க நீ?” எனக் கேட்டான்.

“என்ன முடிவுன்னா? எதுல?”

“டோண்ட் பீ ஆக்ட், ஸ்மார்ட் தீரா” என்ற ரிச்சர்ட், “நானும் பார்த்திட்டுதான் இருக்கேன். வந்த அன்னைக்கு ஏன் வந்தேன்னு கத்தின நீ, இப்போ என்ன பண்ணிட்டு இருக்க?” என்றான்.

தீரன் பதில் சொல்லாது எழுந்து, ரிச்சர்ட்டுக்கு முதுகு காண்பித்தவனாக இருள் வானை வெறித்தான்.

“அவள் கூட இருக்க இந்த நாட்களை உன் நினைவா சேவ் பண்ணிட்டு இருக்கதான நீ?” என்றான் ரிச்சர்ட்.

“இந்த கொஞ்ச நாளோட நினைவு மட்டும் உன்னோட வாழ்க்கை முழுமைக்கும் போதுமாடா?” ஆதங்கமாகக் கேட்டிருந்தான் ரிச்சர்ட்.

“போதும்” என்று திரும்பிய தீரன்,

“இந்த காதல் எனக்கானது ரிச்சி… எனக்கு மட்டுமே! இங்க சொல்ற பல காதலே ஒண்ணு சேருறது கிடையாது. இதுல சொல்லாமப்போன என் காதலுக்கு தோல்வியே கிடையாதுடா! என் மனசுல எப்பவும் அது ஜெயிச்சிக்கிட்டே தான் இருக்கும்” என்றான்.

“இது என்ன பதில்ன்னு எனக்கு புரியல… இப்படியெல்லாம் உளர்றதுக்கு பதிலா ஒருமுறை அவகிட்ட உன் காதலை சொல்லலாம்” என்று ரிச்சி முடிக்கும் முன்னர்…

“சொல்லிட்டா என் காதல் தோத்துப்போயிடும் ரிச்சி” என்றிருந்தான் தீரன்.

“யூ இடியட்” என்ற ரிச்சர்ட், “காலத்துக்கும் தனியாதான் நிக்கப்போற பாரு” என்றதோடு, “இந்த கொஞ்சநாள் வாழ்க்கை கடைசி வரைக்கும் வேணுன்னு உனக்கு சின்னதா கூட தோணலையாடா?” என்றான்.

“தோணாமல் இல்லை… அவகூட இருக்க ஒவ்வொரு நொடியும் எப்படியிருக்குத் தெரியுமா” என்ற தீரனின் முகத்தில் அப்படியொரு ரசனை.

“கடைசி வரை வேணும்… அவளை எனக்குள்ளவே வைச்சிக்கணும்… எப்படியாவது எதாவது பண்ணி அவளை உன்கூடவே வைச்சிக்கோன்னு இங்க சொல்லிக்கிட்டே இருக்கு” என்று தன்னுடைய இதயத்தில் கை வைத்த தீரன், “இதையெல்லாம் தாண்டி அவள் என் மயிலாடா… நான் தனியா இருக்கேங்கிற நினைப்பு எனக்கு கொஞ்சம்கூட வந்திடக்கூடாதுன்னு எனக்காக எல்லாம் செய்தவள். அவளுக்கு நான் என்ன செய்ய முடியும் ரிச்சி? அவள் மனசு என்ன நினைக்குதோ அதை என்னால செய்ய முடியும் அப்படிங்கிறப்போ… அவள் ஆசைப்படி நான் அவளோட மாமாவா மட்டுமே தள்ளி நிக்கிறதுதான சரியா இருக்கும்” என்றான்.

தீரனின் அன்பு அதீதம் கொண்டிருந்தது அவனது வார்த்தைகளில்.

மறைந்திருந்து கேட்டுக் கொண்டிருந்த மயிலாஞ்சலி பொங்கி வந்த அழுகையை கை வைத்து வாய் பொத்தியவளாக அங்கிருந்து ஓடி மற்றொரு அறைக்குள் நுழைந்து கதவடைத்து சிதறவிட்டாள்.

திருமணத்திற்கு இன்னும் ஏழு நாட்கள் மட்டுமே உள்ளது. இருவரும் நாளையாவது கிளம்பிச் சென்றால் தான் மற்ற சடங்குகள் செய்வதற்கு நாட்கள் சரியாக இருக்கும்.

அதைப்பற்றி மயிலாஞ்சலி ரிச்சர்டிடம் பேசிட, “நான் பேசி பார்க்குறேன். அவனும் அப்படியே விடுறவன் கிடையாது. ஒன்னு உன்னை கூட்டிட்டு ஊருக்கு போவான். இல்லைன்னா அவன் லவ்வை சொல்வான்” என்றுதான் ரிச்சர்ட் தீரனிடம் பேசுவதற்கு வந்திருந்தான்.

தீரன் என்னதான் பதில் சொல்கிறான் என்பதை தெரிந்து கொள்வதற்காக மயிலாஞ்சலியும் அவனின் பின்னோடு வந்து மறைந்து நின்று தீரன் பேசிய அனைத்தும் கேட்டிருந்தாள்.

காதல் என்பது விட்டுக்கொடுத்தல் என்பதை தீரனின் வார்த்தைகளிலிருந்து தெரிந்துகொண்டாள்.

அந்த விட்டுக்கொடுத்தல் தன்னவர்களுக்காக தன்னையே விட்டுக்கொடுக்க வைக்கும் என்பதையும் அறிந்திட்டாள்.

“சரி நீ உன் லவ்வை சொல்லப்போறது இல்லை… அடுத்து என்ன?”

“இன்னும் ரெண்டு நாளில் கிளம்பனும். கொஞ்சம் முன்னதான் டிக்கெட் புக் பண்ணேன்” என்றான்.

“ரெண்டு நாள் அப்புறம்னா, அங்க மேரேஜ்க்கு த்ரீ டேஸ் தான இருக்கும். ஃபிஃப்த் டே’விலிருந்து ஏதோ ரிச்சூவெல்ஸ் இருக்குன்னு அஞ்சலி சொன்னாளே” என்று ரிச்சர்ட் சொல்ல…

“மாமாகிட்ட பேசிட்டேன். ஃபிஃப்த் டே ஸ்டார்ட் பண்ற நலங்கு தேர்ட் டே ஸ்டார்ட் பண்ணிக்கலாம் சொன்னார்” என்றான் தீரன்.

“ஹோ… அப்போ அவளோட கல்யாணத்தைப் பார்க்கத் தயாராகிட்டன்னு சொல்லு” என்றான் ரிச்சர்ட். அதீத முறைப்போடு.

“அவள் நல்லாயிருக்கணும்டா” என்ற தீரன், “அவளுக்கு நான் அவளோட மாமாங்கிறது எப்பவும் மாறாதுல. என் காதலுக்கு அது போதும்” என்றான்.

****************************

தீரன், மயிலாஞ்சலி, ரிச்சர்ட் மூவரும் நியூயார்க்கிலிருந்து துபாய் இடை நிறுத்தம் வழியாக இந்தியா வந்து சேர்ந்தனர்.

மயிலாஞ்சலி தன்னுடைய திருமணத்திற்கு ரிச்சர்ட்டும் வரவேண்டுமென்று கேட்டுக்கொண்டதால் அவனும் வருகை தந்தான் அவர்களுடன்.

மாலை ஐந்து மணியளவில் மதுரை விமான நிலையம் வந்திறங்க… அவர்களுக்காக அறிவன் மற்றும் அரவிந்த் காத்திருந்தனர்.

“வரமாட்டியோன்னு பயங்காட்டிட்டடே! நீ வந்தாதேன் கண்ணாலம் நடக்குன்னு அம்புட்டு உறுதியா இருந்து கூட்டிட்டு வந்துட்டாளே” என்ற அறிவன், மயிலாஞ்சலி கையில் அவளது இருசக்கர வாகனத்தின் சாவியை கொடுத்தான்.

“இப்போ நேரம் நல்லநேரமா இருக்காம் அஞ்சலி. அப்பத்தா எடுத்துக்கலாம் சொன்னாய்ங்க” என்றான் அறிவன்.

“சரி மாமா” என்றவள், தன்னுடைய இருசக்கர வாகனத்தில் அமர்ந்து அதனை உயிர்ப்பித்தவளாக தீரனை தனக்கு பின்னால் உட்காரக் கூறினாள்.

“எங்க?” கேட்டாலும் அவளுக்கு பின்னால் தீரன் அமர்ந்திருந்தான்.

“நான் கட்டிக்கப்போறவர நீங்க பார்க்க வேணாமா?” என்றவள் வண்டியை முடுக்கியிருந்தாள்.

“இருட்டுறதுக்கு முன்ன வீடு வந்து சேரணுமாம். பெரியம்மா சொன்னாய்ங்க” என்று கத்திய அரவிந்த், “வெல்கம் டூ மதுரை பாஸ்” என்று ரிச்சர்ட்டிடம் நேரில் தானாக அறிமுகமாகி வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

மயிலாஞ்சலி வண்டியை நிறுத்தும் வரை இருவரிடத்திலும் பேச்சில்லை.

வண்டியை பிரபலமான துணிக்கடை முன்னால் மயிலாஞ்சலி நிறுத்தியிருக்க…

“இங்க மாப்பிள்ளை இருக்காரா? இல்லை எதுவும் ட்ரெஸ் எடுக்கணுமா?” என்று கேட்டிருந்தான் தீரன்.

“இன்னும் முகூர்த்தப் புடவையே எடுக்கல மாமா” என்ற மயிலாஞ்சலி, “எனக்கானது எல்லாத்துலயும் நீங்க இருக்கணுமாட்டிக்கு. அதுவும் முகூர்த்தப் புடவை என் மாமா சீரா இருக்கணுமாட்டிக்கு” என்றாள்.

“ஹ்ம்ம்” என்ற தீரன், சிறு தயக்கத்திற்குப் பின், “நான் எடுத்திருக்கேன்” என்றான்.

“என்னது மாமா? புடவையா?”

“ஆமா!”

“அப்போசரி… ஒருவேளை மிச்சம். வாங்க போவோம்” என்று வண்டியை கிளப்பினாள்.

“நான் அங்க நியூயார்க்கிலே எடுத்துட்டேன். உனக்கு இங்க நம்மவூர் பட்டு வேணுமின்னா எடுத்துக்கலாம். எடுத்திருக்க புடவை உனக்கு பிடிக்காமப்போச்சுன்னா?” என்று கேள்வியாய் நிறுத்தினான்.

“பட்டெல்லாம் இங்கிருந்துதேன அங்கிட்டு வரும்” என்ற மயிலாஞ்சலி, “நீங்க எடுத்தது எப்படியிருந்தாலும் எனக்கு பிடிக்கும்” என்றாள்.

“அதுக்கு மேட்சிங் பிளவுஸ் ஸ்டிச் பண்ணனும்ல… அதெல்லாம் எப்படி தெரியல. சோ, மெட்டீரியலாதேன் இருக்கு. உனக்கு மாமன் முறைக்கு நான் சீர் தட்டு வைக்கணுமே அதுக்குன்னு எடுத்ததால ஸ்டிச் பண்ணாம அப்படியே வச்சிடலாம் நினைச்சேன்” என்றான்.

“உள்ளுக்குள்ள பயங்கர பிளானெல்லாம் இருக்கும் போலவே” என்ற மயிலாஞ்சலிக்கு அவனின் சட்டையை பிடித்து நாலு கேள்வி கேட்டு, கன்னத்தில் கடித்து வைக்க வேண்டுமென்ற வேகம் கோபமாய் கனன்றது.

எப்படி அவனால் உள்ளுக்குள் இத்தனை நேசத்தை மறைத்திட முடிகிறதென்ற கோபம். தனது வார்த்தைக்காக தன்னையே விட்டுக் கொடுக்கிற அவனது முடிவின் மீது அவ்வளவு கோபம். இருப்பினும் அவன் தன்மீது வைத்திருக்கும் அந்த காதலினாலே அவளால் அவளது கோபத்தை காட்டிட முடியவில்லை.

“அதெல்லாம் ஆதிரா மதினியும், வித்யா அத்தையும் எப்படி ஸ்டிச் பண்ணனுமோ அப்படி அரை நாளுல முடிச்சிடுவாய்ங்க” என்ற மயிலாஞ்சலி, “நாம இப்போ வேறொரு இடம் போவோம்” என்றாள்.

வேறொரு இடம் செல்வோம் என்றவள், அவர்களின் ஊர் பாதையில் பயணித்து கிராமத்தின் எல்லையையும் தொட்டுவிட்டாள்.

“நம்ம ஊருக்கே வந்திருக்க… மாப்பிள்ளையை பார்க்கணும் சொன்ன?” என்று தீரன் கேட்க மயிலாஞ்சலி பதில் சொல்லவே இல்லை.

முந்தைய அவளின் திருமணப் பேச்சு வார்த்தைகள் வைத்து தீரனாக ஓர் யூகத்திற்கு வந்தவனாக,

“மேலத்தெரு கணேசன் பெரியப்பா வூட்ல பொண்ணு கேட்டதா சொன்னியே! அவங்கதேனா?” என்றான். அதற்கும் அவள் வாய் திறக்கவில்லை.

“வீட்டோட இருக்க யாரும் ஒத்து வரலன்னு… ஒரே ஊருக்குள்ள இருக்கான்னு ஓகே சொல்லியாச்சா? ஆள் எப்படி? நல்ல பையனா?” அவளது வாழ்வு நன்றாக இருப்பதற்காக, தீரனிடம் அவளுக்கு கணவனாக வரப்போகிறவன் குறித்து ஆயிரம் வினாக்கள் அணிவகுத்தன. ஆனால் மயிலாஞ்சலி ஒன்றிற்கும் பதில் சொல்லவில்லை.

எல்லைத்தாண்டி ஊருக்குள் நுழைந்ததும், ஊரின் அழகுக்கு அடையாளமாக முதலிலிருக்கும் குளத்திற்கு முன் வண்டியை நிறுத்தியிருந்தாள்.

“இங்க வர சொல்லியிருக்கியா என்ன?” என்ற தீரன், “பேரென்ன?” என்று கேட்டான்.

“இப்போவாவது கேட்கத் தோணுச்சே” என்றவள், வண்டியின் இருக்கையை உயர்த்தி அதனுள்ளிருந்து திருமண அழைப்பிதழ் அட்டையை எடுத்தாள்.

“வாங்க அப்படி போய் படியில உட்காருவோம்” என்று முன் சென்றாள்.

தீரனின் பார்வை அவளது கையிலிருந்த அழைப்பிதழில் படிந்திருக்க… இதயத்தில் இடி இடித்தது.

‘தீரா காம்… காம் டவுன் மேன். இதெல்லாம் ஃபேஸ் பண்ணித்தான் ஆகணும். ஃபேஸ் பண்ணிட்டா வலியை கடந்திடலாம்.’ மனதோடு தனக்குத்தானே திடம் அளித்தவனாக அவளை தொடர்ந்து அடி வைத்தான்.

மேலிருந்து கீழாக குளத்தின் மூன்றாவது படியில் மயிலாஞ்சலி அமர்ந்திட, தீரன் அவளுக்கும் கீழான அடுத்த இரண்டு படிகள் விட்டு அதிக இடைவெளியின்றி அவளின் பாதத்திற்கு இணையாக அமர்ந்தான். இருவரின் பார்வையும் நேர்கொண்டு நீரின் மீதிருந்தது.

குளத்தின் ஒரு பக்கம் முழுவதும் வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிற தாமரைகள் கண்ணுக்கு இதமாக நிறைந்திருந்தன.

குளத்துக்கு நான்கு பக்கமும் நீரில் இறங்குவதற்கு படிகள் இருக்க… ஒரு பக்கம் சில பெண்கள் துணிகள் துவைத்துக் கொண்டிருக்க, மற்றொரு பக்கம் சிறுவர்கள் நீந்தி விளையாடிக் கொண்டிருந்தனர்.

அவளாக அழைப்பிதழை தரட்டுமென்று நினைத்த தீரனுக்கு நிச்சயம் அவளது பெயர் அருகே இன்னொருவனின் பெயரை பார்க்கும் திடமில்லை.

அதற்காகவே அவள் தராது இருந்தபோதும் கேட்காது இருக்கின்றான்.

“தாமரை பூ வேணும் மாமா?”

மயிலாஞ்சலி அவனை பாராது கேட்டிட, தீரன் அவளின் முகத்தை திரும்பிப் பார்த்தான். அவனது பார்வை உணர்ந்து அவன் மீது விழிகள் பதித்தாள்.

அவளின் பார்வையில் என்ன கண்டானோ… நீருக்குள் வரை சில படிகள் இருக்க… மெல்ல இறங்கினான்.

“சூதானமா மாமா! படியில பாசி வழுக்கும்” என்றாள்.

அவனது கைகளின் நீளத்திற்கு அதிகத்திற்கு நீருக்குள் இறங்காது இரு வண்ணத்திலும் மலர்களை கொய்தவன், அவளை நோக்கி வர,

வயலில் வேலை செய்து முடித்த ஒருவர் காலின் சேற்றினை கழுவுவதற்காக அவர்கள் அமர்ந்திருந்த பக்கம் இறங்கி வந்தார்.

படிகள் இறங்கியவர் தீரன் மற்றும் மயிலாஞ்சலியை பார்த்தபடி கால்களை சுத்தம் செய்தார்.

தீரன் மயிலாஞ்சலியிடம் காம்பு நீண்ட பூக்களை நீட்டிட, அவள் அவனிடம் அழைப்பிதழை நீட்டியிருந்தாள்.

“பையன் பேரு எனக்கு பொருத்தமா இருக்கா பார்த்து சொல்லுங்க மாமா” என்றவள் பூக்களை வாங்கிக்கொண்டாள்.

அழைப்பிதழின் உரையில் மணமக்களின் பெயர் இருக்க… பின்பக்கமாக திருப்பி வைத்துதான் மயிலாஞ்சலி அவனிடம் நீட்டியிருந்தாள்.

விரல்களில் தோன்றிய மென் நடுக்கத்தோடு தீரன் அழைப்பிதழை வாங்கி, உரையிலிருந்து அட்டையை எடுக்க…

கால்களை சுத்தம் செய்துகொண்டு மேலேறிய அந்நபர் அவர்களை கடந்தவராக,

“என்னப்பா தீரா… கட்டிக்கப்போற பொண்ணே வந்து கூட்டியாந்தாதேன் தாலி கட்டுவியா நீயி?” என பதிலை எதிர்பாராதவராக சிரித்தபடி சென்றிருந்தார்.

அவர் சொல்லியதை மூளை கிரகித்ததும் வேகமாக அழைப்பிதழின் உரையின் முன் பக்கத்தையும், அட்டையின் உள் பக்கத்தையும் திருப்பி மாற்றி மாற்றி பார்த்தான்.

‘அதிதீரன் வெட்ஸ் மயிலாஞ்சலி.’

பார்த்ததும் பார்த்த கருவிழிகள் அப்பெயர்களில் நிலைக்குத்தின.

தீரனின் விரல்கள் மெதுவாய்… மிக மெதுவாய் அட்டை உரசாது பெயர்களின் இணைவை வருடியது.

அவனது இதழ்கள் பிரிந்து ஓசையின்றி உச்சரித்தது.

இருவரின் பெயரும் அருகருகே… அவன் ஏங்கியது. நெஞ்சத்தின் வலியெல்லாம் காற்று தீண்டிய மேகமாய் கலைந்திருக்க, வலது பக்க கண்ணில் நீர் திரள தன்னவளை ஏறிட்டுப் பார்த்தான்.

“மயிலாஞ்சலி அதிதீரன்… எப்படியிருக்கு மாமா?”

அவனின் முகத்தில் குவிந்து நிற்கும் உணர்வுகளின் குவியல்களை, அதனின் ஊற்றாய் தேங்கிடும் அவனது மகிழ்வை உள்வாங்கியவளாகக் கேட்டிருந்தாள்.

ஆர்ப்பரிப்பின்றிய அவனது பெரும் மகிழ்வின் தடம் தனக்குள் கரை ஒதுங்கிட, அவளுக்கும் நெஞ்சத்தின் விம்புதலால் கண்கள் பனிக்கும் போலானது.

“மயிலா!”

தீரனின் கண் தேங்கிய நீர், துளியாய் இமை உடைத்து கன்னம் தீண்டும் முன்பு தனது மென் விரல் கொண்டு துடைத்தவள்,

“சொல்லியிருக்கலாம்ல மாமா?” என மனதோடு குடி கொண்டிருந்த எதிர்பார்ப்புகளை தேக்கி வைத்து கேட்டிருந்தாள்.

“நீ… உனக்கு நான்…” கேட்கமுடியாது வார்த்தைகள் தடுமாறினான்.

“நான் சொன்னாதேன் புரியுமா மாமா?” என்ற மயிலாஞ்சலி, “உங்களுக்கு என்னைய கட்டிக்க வேணாம் அப்படின்னா கட்டிக்காதீங்க. ஆனால் எனக்கு என் மாமா என் மாமாவா மட்டுமே இருக்கணுங்கிறதுக்காக நான் கட்டிக்கணும். கட்டிக்கிறேன்” என்றிருந்தாள்.

அவள் சொல்லிய எந்த வார்த்தைக்காக விலகி நின்றானோ… இன்று அந்த வார்த்தைகள் வைத்தே தன் காதலை சொல்லியிருந்தாள்.

இதற்கு மேல் மயிலாஞ்சலி தன்னுடைய மனதை வேறெப்படி சொல்வதாம்? தனக்குத் தெரிந்த வகையில் தன்னுடைய காதலை சொல்லிவிட்டு… அவனைத் திண்டாடி பார்க்க வைத்திட்டாள்.

“பதிலே காணோம்” என்ற மயிலாஞ்சலி, “இப்பவும் நான் வேணாமா மாமா?” எனக் கேட்டிருந்தாள்.

வாய்ப்பில்லையென்ற ஒன்று தானாக அவனது கரம் சேர்கையில் பேச்சுக்கள் மறந்திருந்தான்.

“உங்க விருப்பப்படி எனக்கும் உங்க மேல காதல் வந்திருச்சு… இப்போ இல்லை, நீங்க என்னைய கட்டிக்க முடியாதுன்னு எல்லார்கிட்டவும் சொல்லிட்டு போன அன்னைக்கு, எனக்கு உங்களைத்தேன் கட்டிக்க விருப்பன்னு வூட்ல சொல்லலாம் இருந்தேன். அதை சொல்லத்தேன் உங்களை கூப்பிட உங்க ரூமுக்கும் வந்தேன்” என்றவள், “என்னைய வேணாம் சொல்ல உங்களால முடிஞ்சுதுல மாமா?” என்றாள் தழுதழுப்போடு.

“அதில்லடா” என்று பேச வந்தவனை தடுத்தவள், “என்னால முடியல… நீங்கயில்லாம” எனக்கூறி, “எம் மனசு எனக்கு எப்போ எப்படி புரிஞ்சுது தெரியுமா?” என்று ஆதி தன்னிடம் வந்து பேசியது தொடங்கி, மீண்டும் ஆதியிடம் தீரனை காதலிப்பதாக சொல்லியது வரை நடுவில் நடந்த அனைத்தையும் காட்சி மாறாது, வார்த்தைகள் அதிகமின்றி கூறினாள்.

“இங்கிருந்து போறப்ப… ஒத்த பார்வையில சுருட்டிட்டியே மாமா” என்றவள், “என்னைய கண்ணாலம் பண்ணிக்கிறதுக்கு நானில்லாத வலியே மேலுன்னு நினைச்சிட்டல” என்றாள்.

“அப்படியில்ல அது” என்றவனின் வாய் மீது கை வைத்தவள், “எதுவும் சொல்ல வேணாம் மாமா. எனக்கு உங்களை புரியும். நீங்க சொல்லித்தேன் உங்க பக்கட்டு நான் புரிஞ்சிக்கணும் இல்லை” என்றாள்.

அக்கணம் தீரனுக்கு அவளின் அன்பு அதீதமாய் அகம் நுழைந்திருந்தது.

தீரனின் வருத்தங்கள் யாவும் விலகி மறைந்து, அவனது இதழ்கள் நீண்டு விரிந்தன.

“சரியா தாலி கட்டுற நேரம் தீடீர் மாப்பிள்ளையா உங்களை மேடை ஏத்திதேன் எல்லாம் சொல்லணும் நினைச்சிருந்தேன். ஆனா நமக்கான நாள். அதுக்கான ஒவ்வொண்ணும் சரியா, மனசு நிறைஞ்ச சந்தோஷத்தோட நடக்கணும்ல… அதுக்காக மட்டுந்தேன் இப்போவே சொன்னேன். இல்லைன்னா தியாகியாக பார்த்த உங்களுக்கு இந்த தண்டனையெல்லாம் பத்தாது” என்று அவனின் இதயத்தில் அழுத்தமின்றி விரல்கள் மடக்கி குத்தியிருந்தாள்.

மயிலாஞ்சலியின் முகத்தை தன்னிரு உள்ளங்கையிலும் ஏந்தி அவளின் நெற்றியோடு நெற்றி முட்டி தன்னுடைய மகிழ்வினை வார்த்தைகளற்று அவளுள் கடத்தினான்.

“இப்போவாவது சொல்வீங்களா மாமா? மயிலா ரொம்ப மாசமா வெயிட்டிங்” என்றாள்.

“தீரனின் அதீதம் மயிலா” என்று தீரன் கூறிட, அவளும் அதையே கூறியிருந்தாள்.

நாளை திருமண பந்தத்தில் இணைய உள்ள இருவர் இக்கணம் இதயத்தால் காதலெனும் சொந்தத்தில் இணைந்திருந்தனர்.

error: Content is protected !!
Scroll to Top