தூரமே தூரமாய் 16
தங்கையின் கண்ணீரை பார்த்ததும் இனியன் துவண்டு போனான். அவன் சரியும் இடம் தங்கையல்லவா. அவள் மீது அவன் வைத்திருக்கும் அன்பு சில வருடங்களாக அவனது பலவீனமாகியிருந்தது.
காதலுக்காக அவள் சுமப்பது ஒற்றை வலி தான். ஆனால் இனியனுக்கு… தங்கைப் பாசம், நட்பு… இருபெரும் வலிகள்.
சில நாட்களாக தன்னை திடமாகக் காட்டிக்கொள்ளும் தங்கை இன்று உடைந்து அழுவதை அவனால் பார்க்க முடியவில்லை. உள்ளம் கசிகிறது அவனுக்கு. தங்கைக்காக அழுத்தமாக நின்றான்.
“அவனை பார்த்தியா?”
விசும்பலோடு மெல்ல தலையசைத்தவள்…
“ஈஸியா என்னை கடந்துட்டாங்கண்ணா. அவங்க லைஃப்பில் இப்போ நான் இல்லவே இல்லை” என்றவள், “எப்படி முடிந்தது அவங்களால்?” என்று கேட்க வேண்டியவனை விடுத்து அண்ணனிடம் கேட்டு குமுறினாள்.
“எப்படி சொல்ற?”
நடந்த நிகழ்வை விவரித்த இமையாள்,
“ஒரு பார்வை போதும்… அதுவே அவங்க என் மேல் வைத்திருக்கும் அன்பை கொட்டி கவிழ்த்திடும். இன்னைக்கு அவங்க என்னைப்பார்த்த பார்வையில் தேர்ட் பெர்சனை பார்க்குற ஃபீல் கூட இல்லை. ஏன் அவங்க என் முகத்தை பார்த்தாங்களான்னே டவுட்டா இருக்கு” என்றவள் கண்ணீரை துடைக்க துடைக்க கன்னம் வழிந்தது அவளது உள்ளத்து வலிநீர்.
இதைப்பற்றி பேசினால் அவளுக்கு மேலும் வலியை கூட்டுமென அறிந்த இனியன், பேச்சினை மாற்றினான்.
“உனக்கு ஒன்னுமில்லையே! அங்க கலவரம் தெரிந்ததும் வேற வழி போயிருக்கலாமேடா” என்று தங்கையை தள்ளி நிறுத்தி முழுதாய் ஆராய்ந்தான்.
“எனக்கு எதுவுமில்லைண்ணா” என்ற இமையாள், “எல்லாம் அவ்வளவு தானா இனியாண்ணா?” எனக்கேட்டு, “அப்புறம் எதுக்கு அவங்களா வந்து என்னை விரும்புறேன்னு சொல்லி, என்னையும் விரும்ப வைத்து, எதுக்கு விட்டுப்போனாங்க. இப்படி என்னை அழ வைக்கவா?” என்றவள் முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டே, “இனி நான் அழமாட்டேன். நான் ஏன் அழணும். நீயில்லாம நான் நல்லாவே இருக்கன்னு இன்னைக்கு எனக்கு அவங்க காட்டிட்டாங்க. நான் மட்டும் ஏன் அவங்காயில்லாம வலியோடு இருக்கணும். அவங்க இல்லாம நானும் நல்லாயிருக்கேன்னு அவங்களுக்கு காட்டனும்” என்றாள்.
“காம் டவுன் டா பாப்பா. ஜஸ்ட் ரிலாக்ஸ் யுவர்செல்ஃப். இப்போ நீ ருது மேல் கோபமா இருக்க. எந்த முடிவும் எடுக்காதே! அமைதியா அடுத்து என்ன செய்யனும் பார்க்கலாம்” என்றான்.
“இல்லைண்ணா… நான் சந்தோஷமாதான் இருக்கேன்னு காட்டனும்” என்றவள் தலையை பிடித்துக்கொண்டு அங்கிருந்த நோயாளிக்கான நீண்ட பெஞ்சில் அமர்ந்துவிட்டாள்.
இமையாள் அதீத மன அழுத்தத்தில் இருப்பதை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது.
என்ன செய்வதென்று தெரியாது தங்கையை பார்த்தவாறு நின்றிருந்த இனியன், தாமதமாகத்தான் உணர்ந்தான். இமையாளின் அலைபேசி தொடர்ந்து ஒலி எழுப்பிக் கொண்டிருப்பதை.
அவளது கைப்பை அவனது மேசையில் கிடந்தது. எடுத்து யாரென்று பார்க்க… சுரேந்தர் தான் பலமுறை அழைத்திருக்கிறார்.
இமையாள் இன்னும் வீடு செல்லாததால், கலவரம் வேறு… பயந்து இருப்பார்கள் என நினைத்தவன், திருப்பி அழைத்தான்.
மகளின் அலைபேசியில், மகன் பேசவும் பதறிவிட்டார்.
“என்னப்பா என்னாச்சு. இமயா போன் நீ எடுக்குற?” என்றார். அவரின் அருகில் தீபாவின் குரலும் கலக்கமாக ஒலிப்பது கேட்டது.
“அப்பா… அப்பா நான் சொல்றதை முதலில் கேளுங்க” என்று அவர்களை அமைதிப்படுத்தியவன், “பாப்பாக்கு ஒன்னுமாகல. வீட்டுக்கு வர ரூட் ஒரே அடிதடியா இருக்குன்னு நான் தான் ஹாஸ்பிடலுக்கு வர சொன்னேன். என்னோட சேஃபா இருக்காள்” என்றவன், அவர்கள் ஆசுவாசம கொண்ட பின்னரே வைத்திட்டான்.
“இமயா.”
விலுக்கென நிமிர்ந்து பார்த்தாள். கண்கள் சிவந்து, என்னவோபோலிருந்தாள்.
தான் மருத்துவன், அந்த இடத்தில் தன்னுடைய மதிப்பு உயர்ந்தது என்பதையெல்லாம் மறந்தவனாக தங்கையின் கைகளை பிடித்துக்கொண்டு அவள் முன் தரையில் அமர்ந்துவிட்டான்.
“டேய் பாப்பா… இதுதான்னு ஏத்துக்க ட்ரை பண்ணுடாம்மா. வேறென்ன சொல்ல எனக்கும் தெரியலையே!” என்றவன், “ஜஸ்ட் அக்செப்ட் அண்ட் மூவ் ஆன் டா பாப்பா” என்றான்.
“முடியலையேண்ணா.”
அவளது கண்கள் மீண்டும் உடைப்பெடுக்கும் போல பொங்கிட, அவளின் கன்னத்தில் கை வைத்தவன், ஒற்றை விரலால் கண்ணீரை தடுத்திருந்தான்.
“பழையதுலே தேங்கிட்டோம்ன்னா. புதுசு கண்ணுக்குத் தெரியாமல் போயிடும்டா. இதிலிருந்து நீ வெளிய வரனும்ன்னா புதுசா ஏதும் நடக்கணும். அது என்னன்னு யோசிடா” என்றான்.
அவள் அமைதியாக இருக்க…
“இன்னொருமுறை உன் கண்ணீரை பார்க்கும் தைரியம் எனக்கில்லைடாம்மா” என்றான்.
“அண்ணா…”
“இந்த அண்ணாக்கு உலகமே நீதான்னு உனக்கு தெரியும்லடா. எனக்காக கொஞ்சம் மாற ட்ரை பண்ணேன்” என்றான்.
எனக்காக என்ற சொல்லை எப்போதுமே தங்கையிடம் பயன்படுத்திவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தவன்… இன்று அவளின் நிலை பொறுக்காது, உபயோகித்துவிட்டான்.
இனியனின் வருத்தம் தங்கையாக அவளை தாக்காதா என்ன?
நொடியில் நிமிர்ந்து அமர்ந்தவளாக,
“ஓகேண்ணா… அழல. ட்ரை பன்றேன்” என்றாள்.
“குட். தட்ஸ் மை கேர்ள்” என்று அவளின் உச்சியில் உள்ளங்கை வைத்து அழுத்தம் கொடுத்தவன், “வீட்டுக்கு போகலாமா?” என்றிட, கண்ணுக்கு எட்டாத புன்னகையில் சம்மதம் வழங்கினாள்.
இனியனுக்கு நன்கு தெரியும். இது தற்காலிக தீர்வுதான். முழுதாய் தங்கையை மீட்டெடுக்க வேண்டுமானால் அவளுக்கு நல்வாழ்வு ஒன்றை அமைத்து தர வேண்டும். இனி தினம் தினம் இல்லாவிட்டாலும் அடிக்கடி ருதுவை நேரிலோ, செய்திகள் மூலமாகவோ பார்க்க நேரிடும். அப்போதெல்லாம் இதுபோன்று நிலை தவறி அவள் வருந்த நேரிடும். அதற்காகவேணும் தங்கைக்கு திருமணம் செய்ய வேண்டும். திருமணம் நடந்தால் தான், ‘இனி தன் வாழ்வில் ருது என்பவனுக்கு இடமே இல்லை என்பதை அவள் மனம் நம்பும்’ என நினைத்தவன், தீர்மானித்துவிட்டான்.
தங்கைக்கு முன்பு இனியனுக்கு வேறெதுவும் பெரியதாக தெரியவில்லை.
இனியன் ஏதோ யோசனையிலே வருவதை கண்ட இமையாள்…
“என்னாச்சுண்ணா. உங்களை ரொம்பவே கஷ்டப்படுத்திட்டேனா?” எனக் கேட்டாள்.
அவளை பார்த்து புன்னகைத்தவன்,
“ம்ப்ச்… இல்லைடா” என்று கண் சிமிட்டினான்.
“அப்புறம் என்ன தின்கிங்?”
“கல்யாணம் பண்ணிக்கலாம் தோணுது” என்றான்.
“வாவ் அண்ணா… குட் டெஸிஷன்.” அதீத உற்சாகமானாள்.
“நான் கல்யாணம் பண்ணிக்கணும் அப்படின்னா… வன் கண்டிஷன்?” என்று அவளை ஏறிட்டான்.
“என்ன கண்டிஷன்?”
“உனக்கு ஃபர்ஸ்ட் மேரேஜ் நடக்கணும்” என்றான்.
“அண்ணா?”
“என்ன? ருது இனி கிடையாது. அவ்வளவுதான். அடுத்து என்ன? இதுதான். அக்செப்ட் பண்ணப் பழகு” என்று அப்பேச்சினை முடித்துவிட்டான்.
இதுதான் எனது முடிவென இனியன் ஸ்திரமாக காட்டும் குரல் அது. அதை மாற்றிடவே முடியாது.
கண்களை இறுக மூடி இருக்கையில் சாய்ந்துகொண்டாள்.
அவளுக்குத் தெரியும்… தன்னை வாழ்வில் தனித்து விடமாட்டார்கள் என்று. தன்னை விட்டுச்சென்ற காதலுக்காக குடும்பத்தை வதைத்திட வேண்டுமா? சிந்திக்கத் துவங்கினாள். காதல் மீளா வலியை கொடுத்தபோதும் கடந்து வருவது தானே இயல்பு.
இமையாள் ருதுவிற்கு, அவனது காதலுக்கு பழகிவிட்டாள். அவன் இல்லாத போது அதுவே அவளின் அதீத வலிக்கு காரணம். அவனை கடந்து, அந்த வலியை தாண்டி அவளால் மற்றொரு வாழ்வில் அடி வைத்திட முடியுமா?
கலங்கும் மனதை முகத்தில் காட்டாதிருக்க அவஸ்த்தைப் படுகிறாள்.
அவளின் துக்கம் அவளோடு மட்டுமே என்றால் அமைதியாகியிருப்பாளோ? அவளையே உயிராக நேசிக்கும் மூன்று உறவுகளையும் வதைத்திடும்போது இனியனின் பேச்சிற்கு அசைந்து கொடுக்கவே தோன்றுகிறது.
_____________________________
நகரத்தை ரவுடிகளின் தாக்குதலிலிருந்து கட்டுக்குள் கொண்டு வந்திடவே மாலை மங்கி இருள் சூழ்ந்திருந்தது.
தன்னவளை முழுதாக தவிர்த்தவனாக ஜீப்பில் ஏறி இயக்கியவன், அவள் தன்னையே பார்த்திருப்பதை பக்க கண்ணாடி வழி பார்த்துக்கொண்டே சென்றிருந்தான்.
அடுத்து காவல் நிலையம் சென்றவன், ஒருவனையும் விட்டு வைக்கவில்லை. எத்தனை லத்தி முறிந்ததோ? அனைவரையும் ஒரே அறைக்குள் அடைத்து ஓடக்கூட இடமில்லாது அடி வெளுத்திட்டான்.
அவனது இந்த ஆக்ரோஷத்திற்கு பின்னால் இருந்தது முழுக்க முழுக்க அவன்மீது அவனுக்கே இருக்கும் கோபம்.
அவளிடம் காதலை சொல்லிய தருணம் இன்னும் அவனுள் பசுமையாய். இதயத்தில் அத்தனை குளுமையாய். தள்ளி எங்கோ ஒரு மூலையில் இருந்தபோது அவளை நினைத்தானோ இல்லையோ… இங்கு, அருகில் வந்த பின்பு தினமும் அவளை கண்டிடமாட்டோமா என அவன் ஏங்காத நாளில்லை.
அவள் நல்லாயிருந்தால் போதுமென இருந்தவனுக்கு, தானில்லாமல் அவள் சுத்தமாக நல்லாயில்லை என்பதை பார்த்ததும் அறிந்து கொண்டிருந்தான்.
கருவிழிகள் அவளது பிம்பத்தை உள்வாங்கியதுமே, அவளை இழுத்து தன் பரந்த மார்பில் பொத்திக்கொள்ளும் வேட்கை அவனுள். எப்படி கட்டுப்படுத்தினானென்று அவனுக்கேத் தெரியாது.
மொத்தமாக அவளை உதாசீனம் செய்துவிட்டு… தனக்குள் வதைப்படுகிறான்.
எங்கோ உலகின் வெற்றிடப்புள்ளியில் தனித்து நின்று ஆவென கத்திடத் தோன்றியது.
அத்தனை அழுத்தம். மொத்தமாக பணியில் காட்டியிருந்தான். ருது அடிப்பதை நிறுத்திய பின்னரும் தடியர்கள் வலியில் கத்திக்கொண்டும், நெளிந்துகொண்டும் இருந்தனர்.
“சாருக்கு இவ்வளவு கோபம் வருமா?” வெங்கட் அரண்டு விட்டான்.
“ஒரு பஸ்ஸை கொளுத்த பார்த்தவனுங்களுக்கு இந்த அடிலாம் ரொம்பவே கம்மி சார்” என்ற கிருஷ்ணன், மல்லிகா எழுதிய குற்றறிக்கை பதிவேட்டில் ஒவ்வொருவனையும் அசைக்க முடியாது அசைத்து கையெழுத்து வாங்கிட ஆரம்பித்தார்.
“படித்த ரவுடிங்க போல…” வெங்கட்டின் உதடு கீழ் நோக்கி வளைந்தது.
தன்னிருக்கையில் சென்று அமர்ந்த ருதுவின் மனம் தத்தளித்துக் கொண்டிருந்தது. அவனால் தன்னை நிலைப்படுத்திடவே முடியவில்லை.
எப்போதெல்லாம் தன்னவளின் நினைவு தனக்குள் ஆதிக்கம் செலுத்திட துவங்குகிறதோ அப்போதெல்லாம் தன் மகனை கண்முன்னே கொண்டு வந்து தன்னை சமன் செய்திடுவான்.
இப்போதும் அதுவே கைகொடுக்கும் என நினைத்தவனிடம் அத்தனை தடுமாற்றம்.
‘நான் உன்னை பார்த்திருக்கவே கூடாதுடி…’
‘லேஷஸ்…’ மனதின் ஓலம் அவனின் செவி நிறைத்து மேலும் துவளச் செய்தது.
“வெங்கட்… டோன்ட் மைண்ட். என்னை வீட்டில் விட முடியுமா?” ருது கேட்டதில் வெங்கட்டிற்கு அதிர்ச்சி.
“ஹெவி டயர்ட். வீட்டுக்கு போனால் பெட்டர் தோணுதுடா. கிருஷ்ணன் அண்ணா வேலையில் இருக்காரேன்னு உன்னை கூப்பிட்டேன். முடியாதுன்னா பரவாயில்லை” என்று ருது வாயிலை நோக்கி நகர… அவனை முந்திக்கொண்டு முன் சென்றான் வெங்கட்.
மனம் தளர்ந்து போனதால் ருதுவின் உடலும் வெகுவாக தளர்ந்திருந்தது. அவனது நடையில் அதனை கண்டுகொண்ட வெங்கட்… இந்நேரத்தில் அவனை தனித்து அனுப்பிட மனமில்லாது, அவன் கேட்டதற்காக மட்டுமில்லாது உண்மையான அக்கறையிலே சென்றான்.
மணி பதினொன்றை கடந்திருந்தது.
காவல் நிலையம் முழுக்க ரவுடிகள் நிரம்பியிருக்க… ருது அன்றைய இரவு அங்கிருக்க வேண்டிய கட்டாயம். ஆனால் அவனால் முடியவில்லை. அவனுள்ளிருந்து எதையோ விரட்டிட வேண்டும். அவன் அவனாக இல்லை. கிளம்பிவிட்டான்.
கைது செய்த அனைவரையும் பாதுகாப்பாக செல்லில் வைத்திருக்கக்கூறிய ருது, வெங்கட்டுடன் புறப்பட்டிருந்தான்.
வண்டியில் ஏறி அமர்ந்ததும் ருது இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான். இமைகள் சூட்டினை உணரவே, கண்கள் கலங்கியிருப்பதை உணர்ந்து திடுக்கிட்டவனாக விழி திறந்து நிமிர்ந்து அமர்ந்து வெளி இருளை வெறித்தான்.
‘எனக்காகவாடி காத்திருக்க?’ வேண்டாமென உறுதியாக இருந்தவனின் மனம் மெல்ல மெல்ல வேண்டுமென நினைக்கிறதோ?
தலையை உலுக்கி அந்நினைப்பை விரட்டினான்.
“சார்?”
“நத்திங்… நத்திங் வெங்கட்” என்ற ருது, “சாரி ஸ்டேஷனில் டா சொல்லிட்டேன்” என்றான்.
“பரவாயில்லை சார். அண்ணா போலத்தான் நீங்க” என்ற வெங்கட்டிற்கு ருதுவிடம் மனதால் ஒரு நெருக்கம்.
“ஹாஸ்பிடல் ஒழுங்கா கூட்டிட்டுப்போறியா?”
“சார்…!”
“அண்ணா போல சொல்லிட்டு, சார் சொல்ற?”
“அது… உங்க பதவி…”
“அதெல்லாம் ஸ்டேஷனில் வச்சிக்கோ” என்ற ருது, “ராதிகாவை கேட்டேன்” என்றான்.
ருதுவிற்கு மனதை வேறெதிலாவது மாற்றி செலுத்திட வேண்டும். மனதை மாற்றிட கேட்டாலும், உறவுகளற்ற தனிமையில் இந்நேரத்தில் இருவரும் எத்தனை வேதனையை சுமப்பர் என்பதை அறிந்ததாலே உளமார தான் இருப்பதாகக் காட்டிட நினைத்தான்.
“ம்ம்ம் லாஸ்ட் வீக் கூட செக்கப் கூட்டிப்போனேன். ரெண்டு பேருமே ஆரோக்கியமா இருக்காங்க” என்றான்.
“குட்… வீடு எங்கே?”
“நம்ம குவார்ட்டர்ஸ் தான். கிரவுண்ட் பக்கத்தில்.”
“ம்ம்ம்… ராதிகாவுக்கு எதுனாலும் தயங்காமல் சொல்லு. நம்ம வீட்டில் அம்மா இருக்காங்க. பார்த்துப்பாங்க” என்றான்.
வெங்கட் நெகிழ்ந்து போனான்.
“நானிருக்கிறேன்” என்ற சொல்லின் பலம் யாருமற்றவர்களுக்கே புரியும்.
“தேன்க்ஸ்… தேன்க்ஸ் ண்ணா!”
வீடும் வந்திருந்தது.
“ஸ்டேஷன் போயிட்டு கால் பண்ணுடா” என்ற ருது அவனை அனுப்பிவிட்டே வீட்டிற்குள் சென்றான்.
ருதுவிற்காக அம்பிகா கூடத்திலே காத்திருந்தார்.
“என்னப்பா ருது இவ்வளவு நேரம்? சிட்டியே பரபரப்பா இருந்துச்சுப்போல. டிவில இன்னைக்கு முழுக்க கலவரம் பத்தின நியூஸ் தான்” என்றவர், “வா சாப்பிடலாம்” என்று இருக்கையிலிருந்து எழ, சிறுவனாய், அன்னை மடி தேடும் சேயாய் அவரை இறுக்கி அணைத்திருந்தான்.
“அம்மா…”
அழுகிறான் என்பதை அவனின் தழுதழுப்பில் உணர்ந்தவர், கரம் உயர்த்தி மகனின் பின்னந்தலையில் ஆதுரமாய் தடவிக் கொடுத்தார்.
“ஒண்ணுமில்லை… ஒண்ணுமில்லை ருது. எதுவாயிருந்தாலும் பார்த்துக்கலாம்.”
காரணம் என்னவென்று தெரியாமலே மகனை ஆறுதல் படுத்தினார்.
ருதுவின் பிடி இறுகிக்கொண்டே சென்றது.
அவனின் மனதின் வதை அவனது அழுத்தத்தில் அன்னையாய் உணர்ந்து கொண்டார்.
“ருது…”
“அவளை பார்த்தேன் ம்மா…”
“நல்லாயிருக்காள் தானே?”
அவளின் நலன் ஏதும் சரியில்லையோ? அதில் தான் மகன் இத்தனை கவலை கொள்கிறானோ என்று எண்ணி வினவினார்.
“அப்படியே இருக்காம்மா. நான் விட்டுப்போன இடத்தில் அப்படியே இருக்காள். எனக்காக வெயிட் பன்றாம்மா. முடியல” என்று கண்ணீர் விட்டு அழுதான்.
பிரிக்க முடியாது தன்னிலிருந்து பிரித்து, இருக்கையில் தன்னுடன் அமர வைத்தவர், புடவை தலைப்பினால் ருதுவின் முகம் துடைத்து, ஒற்றை கையை அவனின் கன்னம் வைத்து…
“உனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு நீ சொன்ன பொய்யை அவள் நம்பலன்னு உனக்கு புரியுதா ருது?” எனக் கேட்டார்.
“அம்மா…!” அவனிடம் பெரும் அதிர்வு.
“ஒரு பொண்ணு ஒருத்தனுக்காக பல வருஷமா காத்திருக்கான்னா… அவளை விட்டுச்செல்ல அவன் சொல்லிய காரணத்தை அவள் நம்பலன்னு தானே அர்த்தம்?” என்றார்.
“ரொம்பவே கஷ்டப்படுத்திட்டேன்.”
“அவளை கல்யாணம் பண்ணிக்கோப்பா!”
“அம்மா… தேஷ்?”
“தேஷ்க்கு நீ அப்பான்னா… அவள் அம்மா தானே ருது?” என்றவர், “இமையாள்’ங்கிற பெயரைத்தானே தேஷ்ஷோட அம்மாங்கிற அனைத்து இடத்திலும் குறிப்பிடுற? அப்போ கல்யாணம் பண்ணிக்க என்ன தயக்கம்?” எனக்கேட்டார்.
“தேஷ் பற்றி தெரிந்தால் எப்படி எடுத்துக்குவான்னு தெரியலையேம்மா” என்ற ருது, “இப்போ அவள் என் மேல் வைத்திருக்கும் அந்த காதலோடவே, உண்மை ஏதும் தெரியாமல் என்னை ஏத்துக்கனும்மா. இல்லைன்னா பின்னாடி ஏதோ ஒரு சந்தர்ப்ப சூழலில் அதுவே எங்க ரெண்டு பேருக்கும் இடைவெளியை உண்டாக்கிடும்” என்றான்.
“ரொம்ப கஷ்டம் ருது!”
“அம்மா…?”
“தான் உயிரே வைத்திருப்பவனாக இருந்தாலும், இன்னொரு பொண்ணோட கணவனை எந்தவொரு நல்ல பெண்ணும் திருமணம் செய்து கொள்ளமாட்டாள் ருது” என்றார்.
“எனக்குதான் கல்யாணம் ஆகலையேம்மா?”
“அவள் நீ சொன்னதை நம்பலன்னாலும், நீயே கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொல்லியிருக்கியே ருது” என்ற அம்பிகா, “இப்போக்கூட இமையாள் காத்திருப்பது உனக்காக இல்லை. அதாவது வேறொரு பெண்ணின் கணவனான ருதுவிற்காக இல்லை. அவளை காதலித்த, அவள் விரும்பிய பழைய ருதுவிற்காக மட்டுமே இருக்கும். அந்த ருதுவை கடந்து வர முடியாததே அவளின் காத்திருப்பு இன்னைக்குவர தொடர காரணமா இருக்கலாம்” என சரியாகக் கணித்துக் கூறினார்.
“அப்போ… நிச்சயம் நான் ஏதும் சொல்லாமலே அவள் எனக்காக வரணும் ம்மா. தேஷ்ஷை என் பையனாவே அவள் ஏத்துக்கணும்” என்றான்.
“அது ரொம்பவே கஷ்டம்” என்றார் அம்பிகா.
“அவள் என்னோட லேஷஸ் ம்மா. என்னைப் புரிஞ்சிப்பாள்” என்றான். அவளின் காதல் மீது அத்தனை நம்பிக்கை அவனுக்கு.
அவளின் புதிய முடிவு தெரியாது மீண்டும் தன் காதலை மனதில் மீட்டத் துவங்கியிருந்தான் ருத்விக்.
அவளாக வருவாள் என்று நம்பிக்கை கொண்டவன், சூழ்நிலையின் பிடியில் தனக்கு சாதகமாக அவளுக்கு விருப்பமற்று மணக்கவிருக்கிறான். கனவிலும் அவன் நினைக்காத ஒன்றை நடத்தவிருக்கிறான்.