அன்பின் அதீதம் 18

அத்தியாயம் 18

மயிலாஞ்சலியிடம் தன்னை கடினமாகக் காட்டிக்கொண்டு வெளியில் வந்தவனுக்கு மொத்த திடமும் வடிந்திருந்தது.

தானா அவளிடம் சரியாக முகம் கூட பாராது கடுமையாக பேசினோமென உயிர்வலி கொண்டான்.

“இருக்கிற பெயின்ல இது வேற” என்று முணுமுணுத்த தீரன், “இவ்ளோ தூரம் வந்தவளை முழுசா பார்க்கக்கூட இல்லை. திரும்ப உள்ளப்போய் பார்த்திட்டு வருவோமா?” என தன்னைத்தானே கேட்டுக்கொண்டான்.

‘வேணாம் இதை இப்படியே மெயின்டெய்ன் பண்ணிக்கோ. அதுதான் ரெண்டு பேருக்கும் நல்லது.’ அவனது மனம் இடித்துரைத்தது.

“யூ ஆர் கரெக்ட்” என்ற தீரன் மனமே இல்லாது அலுவலகம் சென்றான்.

அலுவலகம் வந்துவிட்டாலும் அவனது நினைப்பெல்லாம் மயிலாஞ்சலியிடத்தில் தான்.

“கொலையா கொல்லுறா!” வாய்விட்டு முணுமுணுத்தான்.

“இப்போ யாரு இவளை இங்க வர சொன்னது” என்றவன், ஏழு மாதங்களுக்குப் பின்னர் ரத்னவேலுவிற்கு அழைத்திருந்தான்.

ரத்னவேலு அழைப்பை ஏற்றதும்…

“யோவ் மாமா அறிவிருக்காய்யா உமக்கு?” என்று கத்தியிருந்தான்.

“யோவ் மாமாவா?” ரத்னவேலு அதிர்வாக வினவினார்.

“ஆமாய்யா அப்படித்தேன் கூப்பிடுவேன்.”

“அதுசரி கூப்பிட்டுக்கோ” என்ற ரத்னவேலு, “என் அறிவுக்கு என்ன குறை வந்துச்சாம் இப்போ?” என்றார்.

“உம் மவளை என்னத்துக்குய்யா இம்புட்டு தூரம் ஒத்தயில அனுப்பி வச்சிருக்க?” என காய்ந்தான்.

“எம் மவளா? அதுசரி” என்ற ரத்னவேலு, “எப்போலேர்ந்து உன் மயிலா என் மவளாச்சு?” எனக் கேட்டார்.

“அதேன் நான் எப்படிப்போனா என்னன்னு உன் மவளுக்கு கண்ணாலம் பேசி முடிச்சிப்புட்டல? அப்புறமும் என்ன இன்னும் என் மயிலா. அவள் என் மயிலாவே இல்லை. உன் மவள் மட்டுந்தேன்” என்றான்.

வீம்பாகக் கூறினாலும் அவனது குரலின் தழுதழுப்பை உணர்ந்தவருக்கு நெஞ்செல்லாம் அடைத்தது.

“அதேன் இல்லன்னு சொல்லிபுட்டியே! பொறவு என்னத்துக்குடே விசும்புற?” என்ற ரத்னவேலு, “நானும் உன் அக்காவும் அம்புட்டு தூரம் பேசியும், அஞ்சலி மனசுதேன் முக்கியமின்னு வேணாமின்னு போனீயே. ஒரு அப்பனா வேறென்ன நான் செய்ய முடியும். நீயில்லைன்னா நல்லவனா இன்னொருவனை பார்த்து கட்டிக்கொடுக்கத்தேன் செய்வேன். நீயும் மனசு மாறுவ, கூப்பிடுவன்னு நாலஞ்சு மாசமா காத்துதேன் கிடந்தேன். நல்ல வரன் ஒன்னு வந்துச்சு. நீயும் இறங்கி வாரமாறி தெரியல. அதேன் பேசி முடிச்சாச்சு. அவளுக்கு நீயி இருந்து கண்ணாலம் நடக்கணும் ஆசையாட்டுக்கு. நாங்கதேன் யார் போன் போட்டாலும் நீயி எடுக்கமாட்டுறியேடே! அதேன் நானே கூட்டிட்டு வாரன்னு கெளம்பி அங்கிட்டு வந்துட்டாள். பார்த்து சூதானமா அஞ்சலியை கூட்டிக்கிட்டு வந்து சேரு” என்று தீரனை பேசவேவிடாது பேசி முடித்து அழைப்பைத் துண்டித்திருந்தார்.

தீரனுக்கு ரத்னவேலுவிடம் பேசாமலே இருந்திருக்கலாமெனத் தோன்றிவிட்டது.

அவருக்கு அழைத்திருக்கவே கூடாதென வருந்தினான்.

ரத்னவேலு கூறியவை யாவும் வருத்தத்தைக் கொடுத்தாலும், அவர் பேசியதிலிருந்த நிதர்சனம் அவனுக்கு புரியத்தான் செய்தது.

தான் வேண்டாமென இறுதியாக சொன்ன பின்பு தந்தையாக அவர் தற்போது எடுத்திருக்கும் முடிவு சரியானதாயிற்றே! அதற்கு மேல் அவரை குற்றம் சொல்லிட அவனால் முடியவில்லை.

அன்றைய தினம் அவனுக்கு பெரும் அலைபுறுதல்களாகவே நகர்ந்தது.

மதியத்திற்கு மேல் ரிச்சர்ட் அலுவலகம் வந்திருந்தான்.

“என்ன அவளை தனியா விட்டுட்டு வந்துட்ட?”

“வீட்ல தானடா இருக்காள். எனக்கு இன்னைக்கு டாஸ்க் கம்ப்ளீட் பண்ணனும்டா! அவளுக்கு ஓரளவு செட்டாகிடுச்சு. அதான் வந்துட்டேன்” என்ற ரிச்சர்ட், “காலையில அவளை போன்னு விரட்டுன. இப்போ என்ன அக்கறை?” என்றான்.

“நீயுமாடா?” என்ற தீரன், “என்னால எப்டிடா?” என்று ஓய்ந்துப் பார்த்தான்.

“இப்பவும் ஒண்ணுமில்ல தீரா. அவளே உன்னைத்தேடி வந்திருக்கா. உன் மனசை ஓப்பனா சொல்லு” என்றான் ரிச்சர்ட்.

“அவள் என்னைத்தேடி வந்திருக்கிறது அவள் மேரேஜ்க்கு கூட்டிட்டுப்போக. எனக்காக வரல” என்றான்.

“என்னவா இருந்தா என்ன?” என்ற ரிச்சர்ட், “ஒருமுறை சொல்லுடா” என்றான்.

“இனி அதுக்கு எப்பவுமே வாய்ப்பில்லை ரிச்சி. அவள் மேரேஜ் வரை போயிட்டாள்… என்கிட்ட இருந்து ரொம்பவே தூரமா போயிட்டாள். இதுக்கு அப்புறம் நான் என் மனசை சொல்றது, அவளுக்கு புரிய வைக்கிறதெல்லாம் சரிவராது. லவ்… அது தானா வரணும். அப்போதான் அழகு. அதுக்கு மதிப்பும்” என்றான்.

“ஒரு முடிவெடுத்திட்டனா உன்னை மாத்த முடியாதே” என்ற ரிச்சர்ட், “அவள் தான் வந்திருக்கான்னு எப்படி கண்டுபிடிச்ச?” எனக் கேட்டான்.

“ஏன்டா எங்க ஊர் சாப்பாடு, அதுவும் எங்க வீட்டு சமையல் எனக்குத் தெரியாதா?” என்ற தீரன், “மார்னிங் நான் சாப்பிட்டது எங்க வீட்டு சமையல் டேஸ்ட். அதோட உனக்கு உங்க ஊர் சமையலே ஒழுங்கா செய்யவராது. இதுல மதுரை கறிதோசை அம்புட்டுக்கு ருசியா நீயி செஞ்சன்னு சொன்னாக்கா நான் நம்புவேனா” என்றான்.

ரிச்சர்ட் அசடு வழிந்திட…

“அதோட அவளோட பிரசன்ஸ் நான் ஃபீல் பண்ணேன்” என்றான்.

“ஒருத்தவங்களை அளவுக்கு அதிகமா பிடிச்சுப்போச்சுன்னு வைய்யீ… அவங்களை பார்க்கிறதுக்கு முன்னாடி அவங்களோட வாசனையே நமக்கு அவங்களை உணர்த்திடும்” என்ற தீரனின் முகத்தில் அப்படியொரு காதல்.

“இவ்ளோ லவ் வச்சிக்கிட்டு எப்படிடா சும்மா இருக்க. அவளுக்கு மேரேஜ் டா. கொஞ்சம் கூட ரியாக்ட் பண்ணாம இருக்க. உனக்கு இப்போக்கூடவா உன் லவ்வை அவகிட்ட சொல்லணும் தோணல” என்ற ரிச்சர்ட், “ஒருவேளை நீ உன் லவ்வை சொல்லியிருந்தா அவளும் உன்னை லவ் பண்ணியிருப்பாளோ?” என்றான்.

“அவளுக்கு என்மேல அளவுக்கு அதிகமா அன்பு இருக்கிறதுக்காக அதை நான் எனக்காக யூஸ் பண்ணிக்கக்கூடாதுடா. அவளோட மனசு தெரிஞ்சும் நான் என்னோட விருப்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது தப்பு” என்ற தீரன், “என் பக்கத்துல எனக்குன்னு இல்லைன்னாலும், அவள் என் மயிலா. அவளுக்கான என் அன்பு எப்பவும் குறையாது. என் கண் பார்க்க அவள் நல்லா வாழ்ந்தாலே போதும். என் காதல் சதோஷமாகிடும்” என்றான்.

என்ன மாதிரியான காதல் அவனுடையது.

ரிச்சர்ட்டுக்கு இப்படியும் ஒருவனால் காதலிக்க முடியுமா என்று தான் தோன்றியது.

“அவளுக்காகவே எல்லாம் யோசிக்கிற நீயே அவளோட வாழ்க்கைன்னா… அவள் லைஃப் இன்னும் சந்தோஷமா இருக்குமேடா!”

“அவளுக்கு நான் அவள் மாமாவா மட்டும் தான் இருக்கணும்” என்ற தீரன், “இதுக்குமேல இதை பேசுறது சரிவராது ரிச்சி. அவள் அவளுக்கு பார்த்திருக்கும் பையனை விரும்ப ஆரம்பிச்சிருந்தா… நாம இப்படி பேசுறது ரொம்பவே தப்பு. நீ உன் வேலையப்பார். நான் வீட்டுக்குப் போறேன்” என்றான்.

இரண்டு அடிகள் முன் வைத்த தீரன் நின்று திரும்பி,

“அவகிட்ட நீ பேசிட்டு தான இருந்த? அப்போ உனக்கு அவளுக்கு மேரேஜ் பேசும்போதே தெரிஞ்சிருக்கும்ல?” எனக் கேட்டான்.

ரிச்சர்ட் மெல்ல ஆமென தலையசைத்திட,

“சொல்லவே இல்லை?” என்ற தீரனின் உதட்டில் வலி நிறைந்து விரக்தியாய் சிறு புன்னகை.

“நீ ஏற்கனவே ரொம்ப பெயின்ல இருந்த மச்சான்.”

“புரியுது” என்ற தீரன், “பையன் எப்படின்னு கேட்டியா? நல்லா பார்த்துப்பானா? நல்லவனா?” என்று கேட்டான்.

“நான் கேட்டதுக்கு உன்னை மாதிரின்னு சொன்னாள்” என்ற ரிச்சர்ட்டுக்கு, நண்பனிடம் உண்மையை சொல்விடுவோமா எனத் தோன்றிய போதும், “நானா சொல்லாமா மாமாவுக்கு எதுவும் தெரியக்கூடாது ருச்சி ஊறுகாய்” என்று மயிலாஞ்சலி மிரட்டியது நினைவுக்குவர, அப்படியே தன்னுடைய எண்ணத்தை பின்னால் இழுத்துக்கொண்டான்.

“ஹோ…” என்ற தீரன், “நான் வீட்டுக்குப்போறேன்” என்று சென்றிருந்தான்.

***************************

அலுவலகதிலிருந்து வீட்டிற்கு வந்த தீரன் மயிலாஞ்சலியிடம் ஒரு வார்த்தை பேசவில்லை.

கூடத்தில் அமர்ந்து யாரிடமோ அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள்.

தீரன் வந்ததை கவனித்து… மயிலாஞ்சலி புன்னகைத்திட, அவன் முகத்தை திருப்பியவனாக அறைக்குள் சென்றுவிட்டான்.

“ரொம்பத்தான் பண்றீய்ங்க மாமோய்!” அவனுக்கு கேட்க வேண்டுமென்று கத்தி கூறியவள், அறைக்குள்ளிருந்து தீரன் எட்டிப்பார்க்கவும் அலைபேசியில் பேசுவதைப்போன்று பாவனை செய்தாள்.

“சேட்டை” என்று மென் முனகலோடு நகர்ந்தவன், “நீ பண்றது ரொம்ப தப்பு தீரா… அவளுக்கு உன்மேல லவ் வரலன்னா அவள் என்ன பண்ணுவா? இப்படித்தான் நடந்துப்பியா? அவள் உனக்கு இல்லைன்னா, உன் மயிலா இல்லையா? இவ்வளவு தூரம் வந்திருக்கவகிட்ட சாதாரணமா பேச உனக்கென்ன? நீ இப்படி நடந்துகிறது அவளை கஷ்டப்படுத்தும்” என்று கண்ணாடியில் தன்னைத்தானே கடிந்து கொண்டான்.

சில நிமிடங்களில் ஆடை மாற்றி வெளியில்வர,

“சாப்டிங்களா மாமா?” எனக் கேட்டாள் மயிலாஞ்சலி.

“இனிதான் சாப்பிடணும்” என்ற தீரன், “நீ?” என வினவினான்.

“நீங்க ஆபிசிலிருந்து வீட்டுக்கு கிளம்பினதும் ரிச்சி அண்ணே கால் பண்ணி சொன்னாய்ங்க. நீங்க வரட்டும் வெயிட் பண்ணேன்” என்றாள்.

“ஹ்ம்ம்” என்ற தீரன், “நீ தனியா இவ்வளவு தூரம் வந்திருக்கன்னு ஒரு டென்ஷன்ல மார்னிங் அப்படி பேசிட்டேன்” என பொய் கூறினாலும், “சாரி” என மனமார மன்னிப்பு வேண்டியிருந்தான்.

“அதை நான் பெருசாவே எடுத்துக்கல மாமா” என்றவள், “சாப்பிடலாமா?” என்றாள்.

“ம்ம்… கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு ஆர்டர் போடுறேன்” என்று தீரன் அலைபேசியை கையிலெடுக்க…

“இல்லை வேணாம். நானே சமையல் பண்ணிட்டேன்” என்றவளை, “வந்த டயர்ட்னெஸ்ஸே போயிருக்காது. இதுல வந்ததுலேர்ந்து குக் பண்ணிட்டு இருக்க நீ” என்றான்.

“டயர்ட்லாம் இல்லை இவ்ளோ நேரம் உறங்கிட்டுதேன் இருந்தேன். ரிச்சி அண்ணே கால் பண்ணி நீங்க வர்றீங்க… கோபமா பேசனாலும் ஃபீல் பண்ணாதன்னு சொன்னதுக்கு அப்புறந்தேன் சமைச்சேன்” என்றவள், ரிச்சர்ட்டை போட்டுக் கொடுத்துவிட்டோம் என்பதையே தீரன் கேட்ட பின்னர் தான் உணர்ந்தாள்.

“நான் உன்னை கோபமா பேசுறேனாம்மா… அவரு உங்களை புரொடெக்ட் பண்றாராமா?”

“அது…” என்று மயிலாஞ்சலி என்ன சொல்லி சமாளிப்பதென்று தெரியாது இழுக்க…

“ஃபர்ஸ்ட் சாப்பிடுவோமா?” என்று தீரனே அப்பேச்சினை முடித்திருந்தான்.

“இங்க எல்லாமே ஃப்ரோஸன் மீட் தானா? பார்த்து பார்த்து செஞ்சாலும் டேஸ்ட் என்னவோ கம்மியாதேன் தெரிஞ்சுது. காலையில செஞ்ச கறியில ஃபிரஷ் ருசி இல்லவே இல்லை. அதேன் இப்போ ஃபுல்லா வெஜ்” என்று முழு விருந்தே தயார் செய்திருந்தாள்.

“மதுரை விருந்து ரெடி பண்ணிட்ட போலவே” என்ற தீரன், “நீயும் உட்காரு” என அவளையும் தனக்கு அருகில் அமர்த்தி தானே அவளுக்கான உணவினை எடுத்து வைத்தான்.

“நல்லா சமைக்கத் தெரியுமா உனக்கு? என்கிட்ட சொன்னதே இல்லையே!” என்ற தீரன், “காலையில உன்னை காட்டிக்கொடுத்ததே இந்த சாப்பாடுதேன்” என்றான்.

“எப்படி? நான் சமைச்சு இப்போதேன் நீங்க முதல்வாட்டி சாப்பிடுறீங்க.”

“அச்சும்மா கைப்பக்குவம் உனக்கு அப்படியே இருக்கு” என்றான்.

“ஹோ… அப்போ உங்க அக்கா அளவுக்குத்தேன் நான் சமைக்கிறேன். அதிகமா இல்லை” என்றாள். புருவத் தூக்கலோடு.

மெலிதாக சிரித்த தீரன்,

“என்னயிருந்தாலும் அச்சும்மா செய்றதே தனிதான்” என்றான்.

“ஆமா ஆமா தனிதேன். நீங்க உங்க அச்சும்மாவை விட்டுத்தராதீங்க. அவீங்களும் தம்பியை விட்டுக்கொடுக்கமாட்டாய்ங்க” என்ற மயிலாஞ்சலி…

“உங்களுக்கு என்ன கோவம் மாமா? ஏன் இம்புட்டு நாளா பேசாம இருந்தீய்ங்க. என்னவோ உங்களை நாந்தேன் வூட்டை வுட்டு அனுப்புன கணக்கா உங்க அக்கா என்னைய பாக்குற நேரமெல்லாம் மொறைப்புதேன்” என்றாள்.

அர்ச்சனா எதற்காக அப்படி நடந்து கொண்டிருப்பாளென்று தீரனுக்கு விளங்கிட எதுவும் பதில் பேசாது உணவில் கவனம் வைத்தான்.

மயிலாஞ்சலிக்கும் ஆரம்பத்தில் தெரியவில்லையென்றாலும். அதற்கு பின்னான நாட்களில் காரணம் தெரிந்திருந்ததே! இப்போதாவது கூறுவானா எனும் எதிர்பார்ப்போடு அவள் அவனையே பார்த்திருக்க… அவன் உண்டு முடித்து எழுந்துவிட்டான்.

மயிலாஞ்சலியும் உணவினை முடித்துக்கொண்டு அவனருகில் செல்ல…

“புது இடம். தனியா இருப்பன்னுதேன் வந்தேன். வேலையிருக்கு. நீ ரெஸ்ட் எடுக்கணுன்னா எடு” என்று தன்னுடைய மடிக்கணினியை திறந்து முன் வைத்தான்.

“நீங்க இன்னும் காரணம் சொல்லல?”

மயிலாஞ்சலிக்கு அவனது காதலை அவன் வாய் வழி கேட்டிட பேராசை நெஞ்சம் முட்டியது.

“என்ன?” புரியாததைப்போன்று வினவினான்.

“என்கிட்ட ஏன் பேசாம இருந்தீங்க? எம்மேல என்ன கோவம் உங்களுக்கு?”

“கோபமெல்லாம் இல்லை.”

“பொய் சொல்றீங்க!”

“நிஜமா இல்லைடா.”

“இருக்கு… இம்புட்டு நேரமாகியும் நீங்க இன்னும் மயிலா சொல்லல” என்றாள். சுருங்கிய வதனத்தோடு.

அதில் அவனின் ஜீவனும் சுருண்டது.

எளிதாக சொல்லுமளவிற்கு அவனுள் அப்பெயர் வெறும் பெயராக மட்டும் பதிந்திடாது… அவனது மொத்த சந்தோஷத்தின் தடமாக அல்லவா நிறைந்திருக்கிறது.

அவன் மயிலா என்றழைத்தாலே அவன் மறைக்க நினைக்கும் காதல் வெளிப்பட்டுவிடுமே! அதற்காகவே மயிலா என அழைப்பதை தவிர்க்கிறேனென அவன் எப்படி கூறுவான்.

தீரன் என்ன சொல்வதென்று தெரியாது அவளையே பார்த்திருக்க…

“வூட்ல எல்லாரும் என்னைய கட்டிக்க சொன்னதுதேன் உங்க கோவத்துக்கு காரணமா மாமா? திரும்ப அந்தப் பேச்சு யாரும் பேசிடக்கூடாதுன்னுதேன் யார்கிட்டவும் பேசுறது இல்லையா?” எனக்கேட்டாள்.

அதுதானே உண்மை. மௌனித்திருந்தான்.

“நானும் அப்படி கேட்டிடுவேன்னு என்னையும் விலக்கி எட்ட நிறுத்திட்டீங்களா?” என்ன முயன்றும் கலங்கிவிட்ட கண்களை அவளால் மறைக்க முடியாது போனது.

“மயிலா…” கரகரப்பாய் ஒலித்த அவனது குரலில் அவனின் தவிப்புகளை அறிந்த போதும்… தான் இத்தனை கேட்டும் காதலை சொல்லாது அழுத்தமாக இருக்கின்றான் என வேதனை கொண்டாள்.

“சொல்லாதீங்க… இனி எப்பவும் மயிலா சொல்லக்கூடாது” என்றவள், “உங்களுக்கு இப்போ எத்தனை நாளுக்கு லீவ் போட முடியும்?” என வினவினாள்.

“எதுக்கு?”

“என் கண்ணாலம் நீங்க இல்லாம எப்படி? நான் வந்ததே உங்களை கூட்டிட்டு போவத்தேன். இந்த மாசம் இருவத்தி ஒண்ணு கண்ணாலம். பதினேழு நலங்கு சடங்கு ஆரம்பிக்குது. நான் அதுக்கு அங்கிட்டு இருக்கணும். அதுக்குள்ள என்னைய கூட்டிடுகிட்டு ஊருக்கு போறது உங்க வேலை” என்றாள்.

“எனக்கு லீவ் கிடைக்காது.”

“உங்க ஹயர் ஆபீசர் தாமஸ் தான? அவருக்கிட்ட நான் கேட்கிறேன். அப்பவும் உங்களால முடியாது அப்படின்னா… நானும் போவல. நீங்க இல்லாம எனக்கு கண்ணாலமே வேணாம். நீங்களும் இருந்தா என் கண்ணாலம் நடக்கும். இல்லாட்டி நடக்காது” என்றாள். அத்தனை அடர்த்தி அவளின் வார்த்தைகளில்.

“இது விளையாட்டுக்கு பண்றது இல்லை… எல்லா ஏற்பாடும் நடந்துக்கிட்டு இருக்கு. நீ இப்போ அங்க இல்லாததே உறவுக்காராய்ங்க என்னென்ன பேசுவாங்க தெரியுமா? அத்தோட அந்த பையன்…” என்று நிறுத்திய தீரன், அடைத்த தொண்டையை சரி செய்து, “மாப்பிள்ளை வீட்டில் நீ அங்க இல்லாததுக்கு எதுவும் உரண்டைய கூட்டிடப் போறாய்ங்க” என்றான்.

“என்ன வேணாலும் நடக்கட்டும்… ஆனால் நீங்க இல்லாம என் கண்ணாலம் நடக்காது” என்று அழுத்தமாகக் கூறியவள், வேகமாக அறைக்குள் சென்று மறைந்தாள்.

தீரனுக்கு மன வேதனையோடு தலை வேதனையும் சேர்ந்தது.

அவளுக்கான திருமண ஏற்பாடுகளின் போது அவள் இல்லையென்றால் என்னென்ன பேச்சுக்கு தன்னுடைய குடும்பம் ஆளாகும் என நினைத்த தீரன் அடுத்து என்னவென்று முடிவெடுக்க முடியாது திணறினான்.

நிச்சயம் அவனால் அவனது மயிலாவை இன்னொரு ஆடவன் அருகில் இணைத்து வைத்துப் பார்த்திட முடியாது.

அதுவும் தன் கண்கள் பார்க்க அவளுக்கு வேறொருவனுடன் திருமணமா?

நினைக்கவே நெஞ்சம் அனிச்சையாய் வாடியது.

**************************

நாட்கள் கரைந்த போதும் தீரன் ஊருக்கு செல்ல வேண்டுமென்பதை பற்றி ஒருவார்த்தை பேசவில்லை.

மயிலாஞ்சலியும் வந்த அன்று அவனிடம் ஊருக்கு செல்வது குறித்து பேசியது… இனி அங்கு தன்னை கொண்டு சேர்ப்பது அவனது பொறுப்பென்று அதை பற்றியே கண்டுகொள்ளவில்லை.

ஊரிலிருந்து யாரும் அழைத்து, “எப்போ வாரீங்க?” எனக் கேட்டாலும்.

“வர வேண்டிய நேரம் வந்திருப்போம்” என்பதோடு முடித்துக்கொள்வாள்.

அன்று ரிச்சர்ட் தீரன் உள்ளத்தோடு படும் வேதனையை தாளமுடியாது…

“அவன்கிட்ட உண்மையை சொல்லியே கூட்டிப்போகலாமே அஞ்சலி” என்றான்.

“அந்த நெனைப்புலதேன் நானும் இங்கிட்டு வந்தேன் ருச்சி ஊறுகாய்… ஆனா பாருங்க, என் மேல அம்புட்டு காதலை வச்சிக்கிட்டு உங்க ஃப்ரெண்ட் என்னைய இல்லாத ஒருத்தனுக்கு விட்டுக்கொடுக்கத் தயாராகிட்டாங்க. அப்போ என்மேல காதல் அம்புட்டுதேனா? அதுக்கு இதுதேன் தண்டனை. எவ்ளோ வலிச்சாலும் தாங்குவேன்னு இருக்காய்ங்களே! இருக்கட்டும்… இன்னும், கூட கொஞ்ச வலிக்கட்டும்” என்றாள்.

“இதெல்லாம் அப்பட்டமான பழிவாங்கல் அஞ்சலி” என்று ரிச்சர்ட் கூற…

“அஃப்கோர்ஸ்” என்று தோள்களை உயர்த்தி இறக்கினாள்.

“அவன் பாவம்டா!”

“என்ன உங்க ஃப்ரெண்ட்க்கு சப்போர்ட்டா? அப்போ என்கிட்ட பேசாம இருந்ததுக்கு… எனக்கு கண்ணாலம் தெரிஞ்சும் அமைதியா இருந்து எனக்கு வலி கொடுக்கிறது மட்டும் சரியா?” என்றாள்.

“அவன் சந்தோஷமே நீதான் அஞ்சலி!”

“அது தெரிஞ்சும் என்னைய விட்டாச்சுல?”

“அவன் வேணாம் சொன்னதே உனக்காகத்தான்.”

“அவங்க நேரா கேட்டு நான் வேணாம் சொன்னனா?”

“இதெல்லாம் அநியாயம்.”

“எனக்கு நியாயந்தேன்” என்ற அஞ்சலி, “உங்க ஃபிரண்டுக்கு ஒத்து ஊதாம… என்னோட ஊருக்கு போகச்சொல்லி போய் பேசுங்க” என்றாள்.

“உத்தரவுங்க மேடம்” என்ற ரிச்சர்ட் தீரனின் அறைக்குச் செல்ல… அவனோ பால்கனியில் சோகத்தின் மொத்த உருவமாக நின்றிருந்தான்.

error: Content is protected !!
Scroll to Top