தூரமே தூரமாய் 15

தூரமே தூரமாய் 15

எரிந்தபடி உருண்டு வந்த வண்டி சக்கர டயரினை காலால் உதைத்து தள்ளிய ருது, தனக்கு எதிராக ஓடி வந்தவனை ஒரே அறையில் சுருண்டு விழ வைத்திருந்தான்.

அவன் அலறிய அலறளில் ஆங்காங்கே அடிதடியில் ஈடுபட்டிருந்த தடியர்கள் திரும்பி பார்த்திட… தன் முழு உயரத்திற்கு நிமிர்ந்து நின்றிருந்தான் ருத்விக்.

“வா போலீசு… உனக்காக தான் காத்தினு இருக்கோம்” என்ற ஒருவன் கண்காட்டிட, அவ்வழி வந்த பேருந்து ஒன்றை இருவர் மறித்து நின்றனர்.

அவன் சற்று தொலைவில் நின்றிருந்த ஒருவனை பார்த்து விசிலடித்து எறி என்பதைப்போல் கையால் சைகை செய்திட, அவனோ பலூன் போன்று ஒன்றை தூக்கி எறிந்தான்.

சரியாக அதனை பிடித்தவன்,

“சின்ன புள்ளைங்க விளையாடுற பலூன் இல்ல போலீசு இது… பெட்ரோல் குண்டு. அந்த பஸ்ஸில் தூக்கி அடிச்சிக்கினே வச்சிக்க. குப்புன்னு பத்திக்கும்” என்று சொல்ல… பேருந்தில் இருந்தவர்கள் கத்திக்கொண்டு இறங்கிட முட்டி மோதிட, இரு வழிகளிலும் இரண்டு தடியர்கள் நின்று அவர்களை இறங்க விடாது தடுத்தபடி பேருந்தின் உள்ளே மிரட்டித் தள்ளினர்.

தப்பிக்க நினைத்து சன்னல் வழி குதித்த இருவரை உருட்டு கட்டையால் அடித்து ஓடவிட்டனர்.

“என்னண்ணா வந்ததும் ஓட விடுவாருன்னு பார்த்தால் வேடிக்கை பார்த்திட்டு நிக்கிறாரு?” என்ற வெங்கட்டிடம்…

“ஏன் சார் உங்களுக்கு பொறுமையே இல்லையா? அவர் ஏதும் செய்றதுக்குள்ள கவுண்ட்டர் கொடுத்திடுறீங்க” என்றார் கிருஷ்ணன்.

“ம்க்கும்… எப்படி இருக்கு பாருங்க இந்த இடம். இதுல பொறுமை தேவையா” என்றான்.

ருது தனக்கு பின்னால் இருசக்கர வாகனம் ஒன்று வரும் சத்தம் கேட்டு திரும்பிடாது பக்கவாட்டாக நிறுத்து என்பதைப்போல் இரு விரல்களை ஆட்டி கை காட்டியிருந்தான்.

ருது தன்னிரு கைகளையும் கோர்த்து பின்னால் கட்டிட…

அவனது பின் உருவத்திலே அடையாளம் கண்டுகொண்ட இருசக்கர வாகனம் ஓட்டி வந்த நபருக்கு ருதுவின் வலது கையில் மணிக்கட்டின் முன் புறம் ஒற்றை கண்ணின் இமை மட்டும் மூடிய அமைப்பில் தீட்டப்பட்டிருந்த நவீன பச்சையில் சகலமும் உறைந்து அதிர்ந்தது.

‘லேஷஸ்.’ காதல் மீதூறும் குரலில் ருது விளிக்கும் ஓசை, சூழ்நிலையின் பேரிரைச்சலை தாண்டி செவி தீண்டி உயிர் நடுங்க வைத்தது.

வண்டியில் வந்தது, ருது பின் திரும்பாமல் நிறுத்தக் கூறிய நபர், ருதுவின் லேஷஸ். இமையாள்.

காண தவித்த உருவம். முகம் கண்டிடவில்லை. இருப்பினும் இதயத்தில் பலதும் கிளர்ந்து எழுந்து மூச்சு முட்டியது.

ருதுவின் காதலை மட்டுமே சுவாசமாக கொண்டிருப்பவளின் இதழ்கள் விரிந்து… காற்றுக்கும் நோகுமோ எனுமளவில்,

“ருது” என உச்சரித்தது.

அவளுக்கே கேட்டிடாத அழைப்பு அவனது செவி நுழைந்ததுவோ…

கழுத்தை மட்டும் பக்கவாட்டகத் திருப்பி கடைக்கண்ணால் பார்த்தவனின் உடல்… கருவிழி உள்வாங்கிய பிம்பத்தில் தன்னைப்போல் திரும்பியது.

அவனது விழிகள் விரிய தவித்திட கட்டுப்படுத்தி நேர்கொண்டு பார்த்தான்.

தளரும் கையின் விரல்களை உள்ளங்கை குவித்து விறைத்து நின்றான்.

ருதுவை நேரில் கண்டால் கண்ணீர் மட்டும் சுரந்திடக்கூடாதென மனதோடு உருப்போட்டு வைத்திருந்ததாலோ என்னவோ கண்ணின் கலக்கத்தை உள்ளுக்குள் பொத்தி வைத்தவளாக, இதழில் மனம் நிறைந்த முறுவலை மென்மையாக படரவிட்டிருந்தாள்.

ஒரு நொடி… மழைத்துளி தரையில் பட்டுத்தெறிக்கும் கணம், சூல் வெடிக்கும் கணம், வலியில் கண்ணீர் பிறப்பெடுக்கும் கணம், இமை மூடி திறக்கும் கணம், அவ்வளவே… சட்டென்று யரோபோல் கடந்து திரும்பிக்கொண்டான்.

அவனால் அவள் காட்ட மறுத்த பூரிப்பையும், அவளது மனதின் ஆர்பரிப்பையும் உணர்ந்திட முடிந்தது.

ருதுவின் இதயம் மட்டும் தாறுமாறாக துடித்தது. ஐந்து விரல்களையும் சேர்த்து குவித்து இதயப்பகுதியில் குத்திக்கொண்டான். பின்னால் இருப்பவள் அறிந்திடாது.

“ருது…” அவனது அந்நியப் பார்வையில் கலங்கித் துடித்தாள்.

அவனது வாழ்வில் இனி அவன் அவளிடம் வரவே முடியாத சூழல் உருவாகியிருந்தாலும், பார்த்ததும் தெரிந்தவர் எனுமுறையில் சிறு பார்வை பார்த்திருந்தாலும் போதுமானதாய்… இந்த தருணம் கடந்திருக்குமோ?

அவன் ஒருவனே தன் வாழ்வின் மொத்தமும் என்று வாழ்பவளுக்கு… அந்நொடி எத்தனை வலியை உண்டாக்கியிருக்கும்.

‘உனக்காக கண்ணீரை அழுத்தி, வலியை மறைத்துக்கொண்ட எனக்கு, போலியான புன்னகையோடு வலம் வருவது ஒன்றும் புதிதல்ல. உனக்காக இதையும் கடந்திட முடியும் என்னால்.’ வீம்பாக நினைத்துக் கொண்டவள், முகத்தில் கடினம் காட்டி தொய்ந்த மனதின் திடத்தை உடலில் கூட்டி விறைத்து நிமிர்ந்து அமர்ந்தாள்.

இவள் நிற்பதைக்கண்டு அடுத்தடுத்து வந்த வண்டிகளும் தன்னிச்சையாக நின்றன. அந்தபக்கமும் இந்தபக்கமும் வாகனங்கள் மக்களோடு நின்றிருக்க. நடுவில் பேருந்து. அதில் பலர் உயிர் பயத்தில், ரவுடிகள் சூழ் பீதியில் கத்திக் கொண்டிருக்க, காவல்துறையினர் ரவுடிகளை அடக்க முயற்சித்துக் கொண்டிருக்க, ருது வேடிக்கை பார்க்கும் தோரணையில் கால்களை அகட்டி நெஞ்சை நிமிர்த்தி நின்றிருந்தான்.

ருதுவின் கண்களில் அடக்குமுறையை கையாலும் விதமாக யோசனை அசைந்தாட, உள்ளம் ரத்தத்தில் முக்குளித்தது.

தன் செயல் தன்னவளை எத்தனை காயப்படுத்தியிருக்கும் எனும் வேதனை பாடாய் படுத்தியது. காயம் கொடுத்தவனுக்கு குருதி கசிந்தது.

“என்னா போலீசு பயந்துக்கினியா? அங்கவே அப்படியே சிலையாட்டம் நின்னுக்கன” என்ற தடியன், “இப்பவும் ஒண்ணுமில்லை எங்க அண்ணாத்தய உட்டுடு… நாங்களும் இதையெல்லாம் நிப்பாட்டிக்கிறோம்” என்றான்.

“ஆஹான்” என்று பின்னால் இரு கைகளையும் கட்டிக்கொண்டு விறைத்து நின்ற ருது,

“எனக்கு உன் டீல் பிடிக்கல. உன்னால் முடிஞ்சா பஸ்ஸை கொளுத்துடா பார்ப்போம்” என்றான்.

ருது அவ்வாறு சொல்லியதில் சுற்றியிருந்த மக்கள் யாவரும் அதிர்ந்தனர்.

‘அடப்பாவி’ என நினைத்த இமையாளின் பார்வை அவனது டாட்டூவின் மீதே.

‘இதற்கு என்ன அர்த்தம்? அப்போ கல்யாணம்? அழிக்க முடியாதுன்னு வச்சிருக்காரா?’ தலை வெடிக்கும்போல் ஆனது. இதுவரை எழுந்திடாத கோபம் அவனை கண்டதும், அவனது உதாசீனத்தில் உண்டானது.

அவனாக வந்து… அவனாக துறந்து… மொத்த கோபமும் இக்கணம் நெஞ்சத்தில் வேர் பிடித்தது.

‘கோபம் வேண்டாம் அவங்க சூழல் வேறாக இருக்கலாம்’ என்று புள்ளியளவு மனதில் எழுந்த எண்ணத்தை கோபம் கொண்டு மூடினாள்.

கிட்டத்தட்ட பதினைந்து அடி இடைவெளி ரவுடிகள் மற்றும் ருது இருவருக்குமிடையில். பேருந்துக்கும் ரவுடிக்கும் பத்துக்கும் குறைவான அடிகள், ருதுவிற்கும் பேருந்திற்கும் அதனைவிட ஓரிரு அடிகள் கூடுத்தலாகத்தான் இருக்கும்.

“இன்னா போலீசு கொளுத்தமாட்டேன்னு தைரியமா?”

“நீ தூக்கி எறிந்து தான் பாரேன்!” ருதுவின் மாஸ் மட்டும் சற்றும் குறையவில்லை.

‘இந்த திமிருக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.’

இமையாளின் கோபம் அவனை கடிந்துகொள்ளவே செய்தது.

‘பல உயிருக்கு முன்னால் இந்த அசட்டு துணிச்சல் வேண்டுமா?’ என்று தான் நினைத்தாள்.

கோபத்தில் திட்டிக்கொண்டே அவனை ரசிக்கவும் செய்தாள்.

‘இந்த காதல் மட்டும் மானங்கெட்டது’ என்று தனக்குத்தானே தட்டியும் கொண்டாள்.

‘உன்னை தான் பார்க்கக்கூட பிடிக்காம திரும்பிக்கிட்டாங்களே! அப்புறமும் ஏன் காதல்ன்னு உருகுற’ என்று மானசீகமாகக் கொட்டிக்கொண்டவள் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டாள்.

நகரம் கட்டுக்குள் வந்திருக்க இங்கு மட்டுமே ரவுடிகள் அடங்காது காவல்துறைக்கு ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தனர். ஊடங்கங்கள் கூடிவிட்டன.

எங்கே ரவுடிகள் கையிலிருப்பதை தங்கள் மீது வீசி விடுவார்களோ என்ற பயத்தில் அருகில் நெருங்காது, காணொளியை பதிவு செய்தவாறு தள்ளி நின்றுகொண்டனர்.

ருது சிரித்துக்கொண்டான். ‘சமூக பொறுப்பு ரொம்பத்தான் வேலை செய்யுது.’ உள்ளுக்குள் கேலியாக நினைத்தான்.

சமூகப் பொறுப்பு, அக்கறை என்று பேசும் பலருக்கும், களத்தில் இறங்கி அந்த பொறுப்பையும் அக்கறையையும் காட்டிட வராது. நிதர்சனமான உண்மை. அவர்களின் அக்கறையெல்லாம் காட்சியை பதிவு செய்து, இரு வரிகளில் ஆதங்கத்தைக் கொட்டி இணையத்தில் பதிவு செய்வதோடு நின்றுவிடும்.

சமூகப் பொறுப்புள்ள உண்மையான மனிதனின் ஆதங்கம் இது.

“கடைசியா ஒரு தபா கேட்டுக்கினே… என்னா சொல்ற நீ” என்றான் அவன், கையில் குண்டினை வைத்து உருட்டியபடி.

“நீ வேலைக்கு ஆகமாட்ட. உங்களுக்கெல்லாம் உதார் விட மட்டும் தான் தெரியும்” என்ற ருது ஒரு அடி எடுத்து முன் வைத்திட, ரவுடி பெட்ரோல் குண்டினை பேருந்தை நோக்கி எறிந்திருந்தான். பட்டென்ற சத்தம் கேட்டு, நெருப்பின் அனல் மூண்டு, காற்றில் புகை பரவியது.

அவன் எறிந்த வேகத்திற்கு சுற்றி இருந்தவர்கள் பீதியில் காதுகளை பொத்திக்கொண்டு கண்களை மூடியபடி இருக்க… சுற்றுப்புறம் எங்கும் புகையின் கருமை.

கண் திறந்தவர்கள் அனைவரும் பேருந்து தான் பற்றி எரிகிறதோ என்று உறைந்திட…

தனக்கு முன்னால் நின்றிருந்த ருதுவை காணவில்லை என்றதும், இமையாளின் நெஞ்சம் படபடத்தது.

“அவங்க எங்கே?” பார்வையை சுழற்றினாள். புகையைத் தவிர ஒன்றும் கண்ணுக்கு புலப்படவில்லை.

“ருது” என வெடித்துக் கிளம்பிய கேவல், புகை விலகிய நொடி தொண்டைக்குள்ளே அமிழ்ந்தது.

புகை விலக அதனின் நடுவில் கம்பீரமாக நின்றிருந்தான் ருத்விக்.

ரவுடி குண்டினை எறிந்த நொடி மின்னலென பாய்ந்தோடிய ருது, பேருந்தில் படும் முன் ஒற்றை கையில் பிடித்திருந்தான். பிடித்த வேகத்தில், எறிந்த ரவுடியின் பாதத்திற்கு அருகில் தரையில் வீசியுமிருந்தான்.

தரையில் பட்டு வெடித்த குண்டு இடத்தை புழுதியோடு சேர்த்து புகையாக்கியிருந்தது.

“மின்னல் முரளியா இருப்பார் போல.” வெங்கட் முணுமுணுத்தான்.

“அவர் எது செய்தாலும் உனக்கு கவுண்ட்டர் கொடுக்கணும்” என்ற கிருஷ்ணனை வெங்கட் முறைத்தான்.

ருதுவின் அதிரடியில் கலவரம் செய்த ரவுடிகள் யாவரும் அரண்டு நின்றிருக்க, ருதுவின் கண் அசைவில் அவர்கள் தப்ப முடியாது காவலர்கள் சூழ்ந்திருந்தனர்.

“அரெஸ்ட் தெம்” என்று காவலர்களை பார்த்து கட்டளையிட்ட ருது, குண்டு அருகே வெடித்த அதிர்வில் மயங்கி விழுந்து கிடந்தவனை மருத்துவமனையில் சேர்ப்பிக்க உத்தரவிட்டு, தனது வண்டியை நோக்கி வர, கூலர்ஸ் அணிந்த அவனது விழிகள் மொத்தமாக உள்வாங்கிக் கொண்டிருந்தது அவனவளை.

அவளின் முகத்தில் பதற்றமும், ஆசுவாசமும் ஒருங்கே தெரிய… அவனது காதல் மனம் ரசிக்கவே செய்தது.

அவளுக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பதை அவளது தோற்றம் வைத்து நொடியில் கிரகித்து இருந்தான்.

‘எனக்காகவா?’ அவனுள் இன்பம் தான். ஆனால் ஏனோ ஏற்க முடியவில்லை.

‘எனக்கு கல்யாணம் ஆனதை நம்பலயா?’ அவனுக்கு வலிக்கவே செய்தது.

‘தேவையில்லாத காத்திருப்பு.’ அவளை நிந்தித்தான்.

நொடியில் இமையாளின் முகத்தில் கோபம் படர… உள்ளே சன்னமாக சிரித்துக்கொண்டான்.

‘உன்னோட இந்த சின்ன கோபம் போதும். உன்னை என்னிடமிருந்து விலக்கி நிறுத்த’ என நினைத்தவனுக்குத் தெரியவில்லை. கட்டம் கட்டி அவளை கல்யாணம் செய்து கொள்வோமென்று. மறைத்து வைக்கப்பட்டிருக்கும் அவனது காதலே அதனை நடத்தியிருக்கும்.

கண்ணாடிக்கு பின்னால் அவன் தன்னை பார்க்கின்றானா இல்லையா என்பதை அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை.

காவலர்கள் தடியர்களை கைது செய்து வேனில் ஏற்றிக்கொண்டிருக்க, ஒருவன் மட்டும் தப்பி ருதுவை அடித்திட உருட்டு கட்டையை ஓங்கியபடி ஓடி வந்தான்.

ருதுவிற்கு பின்னால் ஓடி வந்தவனை கண்டு விட்ட இமையாள்,

“ருது” என்று கத்திட, நொடியில் சுதாரித்து ருது உடலை பக்கவாட்டில் சாய்த்திட, ஓடி வந்தவனது கையின் விசை அதிக அழுத்தத்துடன் கட்டையை பின்னால் இழுத்து முன் கொண்டு வந்திருக்க, ருதுவிற்கு முன்னாலிருந்த இமையாளின் தலையில் பட’யிருந்த கணம் ருது கட்டையை பிடித்திருந்தான்.

பிடித்த கட்டையாலே அவனது மண்டையில் நச்சென்று ஒன்று வைத்திருந்தான் ருது.

வெங்கட் ஓடி வந்து அவனை இழுத்துச்செல்ல…

பயத்தில் மூச்சு வாங்க வண்டியில் அமர்ந்திருந்தவளை அழுத்தமாக ஏறிட்டு தன்னுடைய வாகனத்தில் ஏறி புறப்பட்டிருந்தான்.

“திமிரு” மெல்ல முணுமுணுத்தாள்.

அவன் பின்னால் செல்ல துடித்த மனதை கோபம் கொண்டு கட்டி வைத்தாள்.

அவன் சட்டையை பிடித்து, “நீ சொன்னது பொய் தானே?” என கேட்க துடித்த அதே சமயம், அவன் உண்மை என்றுவிட்டால் என பயந்தே எட்ட நின்றாள்.

‘எங்கே உன் குழந்தை? காட்டு’ என்று கேட்டு, அவன் இல்லையென சொல்வதைக் கேட்டிட எண்ணம் கொள்கிறாள்.

அவளளவில் அவன் சொல்லியது பொய் எனும் நிலையில் அவளது காதல் மனம் அவளுக்கு சாதகமாகத்தான் அனைத்தையும் உருவகம் கொள்ள வைத்தது.

அவனது வாகனம் கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்திருந்தாள்.

நொடியில் அவ்விடம் சூழலுக்கு திரும்பியிருக்க, பின்னால் ஒலித்த வாகனங்களின் சத்தத்தில் வண்டியைக் கிளப்பியிருந்தாள்.

நெஞ்சம் முழுக்க காதலும், அந்த காதல் கொடுத்த வலியோடும் வீடு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தவளுக்கு விழி நீர் காட்சியை மறைத்தது.

அவன் முன் ‘நீயில்லாமல் நான் நன்றாகவே இருக்கிறேன்’ என்பதை காட்டிட திடமாக இருந்துவிட்டாள். ஆனால் இப்போது இதயத்தில் அவள் உணர்வதெல்லாம் அப்பட்டமான வலி.

அழவேக் கூடாது என நினைத்தவளால் அழமால் இருந்திட முடியவில்லை. அவன் முன்பு அழவில்லை. அது மட்டுமே தற்போது அவளுக்கு பெரும் ஆறுதல்.

சிறு வயதில் நம்மோடு பழகியவர்களை பல வருடங்கள் கடந்து தற்செயலாக சந்திக்க நேர்ந்தால் தன்னைப்போல் தோன்றுமே மென் புன்னகை. அத்தகைய முறுவல் அவனது முகத்தில் தோன்றியிருந்தாலும் அவளின் மனம் சமன்பட்டிருக்குமோ? சாதாரண பார்வைக்கும் பஞ்சமாகியிருக்க, தன் காத்திருப்பெல்லாம் வீண் எனும் எண்ணம் அவளின் வலியை மேலும் கூட்டியது.

கைகளில் வண்டி தடுமாற சாலையோரம் நின்றுவிட்டாள். மூச்சினை ஆழ்ந்து வெளியேற்றியவள், அடுத்த பத்து நிமிடத்தில் இனியனின் மருத்துவமனையில் இருந்தாள்.

நகரமே கலவரத்தால் பரபரப்பாக இருக்க, சுரேந்தரும், தீபாவும் இமையாளுக்கு மாற்றி மாற்றி அழைப்பு விடுத்து சோர்ந்திருந்தனர்.

இமையாள் இனியனின் அறைக்குள் நுழைந்திட… இனியன் அப்போதுதான் அறுவை சிகிச்சை முடித்து வந்து ஆசுவாசமாக இருக்கையில் அமர்ந்தான்.

“அண்ணா…”

தங்கையின் குரலில் எழுந்து நின்றவன்,

“இமயா!” என்று விளித்திட…

“ஐ நீட் அ ஹக்” என்று அண்ணனின் நெஞ்சம் சாய்ந்திருந்தாள்.

error: Content is protected !!
Scroll to Top