அத்தியாயம் 1
அவள் அறை முழுக்க எழுதி கசக்கி எரிந்த காகிதங்கள். எங்கு தொடங்கி எங்கு முடிப்பது என்பது புரியவில்லை. அவனிடம் போட்ட சவாலில் ஜெயிக்க வேண்டும் என்ற வைராக்கியம் மட்டும் குறையவே இல்லை.
‘நான் சரியான முடிவு தான் எடுத்தேனா? இத்தனை வருடம் கழித்து எடுத்தது சரிதானா? இல்லையென்றால் அவளின் அன்றாட இயந்திர வாழ்க்கையை வாழ்ந்துகொண்டே இருக்க வேண்டுமா? இத்தனை காலமும் அதை தானே வாழ்ந்து கொண்டிருந்தாள்? என் முடிவில் நான் உறுதியாக இருக்க முடியுமா?’ என்று எண்ணும்போது அவள் காதுகளில் எப்போதும் விக்ரம் பேசும் பேச்சுகளும் நக்கல் வார்த்தைகளும் ஒலித்தன.
ஊரில் எல்லாரும் இவளைப் பாராட்டினாலும், இவன் மட்டும் தப்பித்தவறி ஒரு முறை பாராட்டினால் அடுத்த ஒரு மணி நேரத்திலேயே மீண்டும் வசைபாடத் தொடங்கிவிடுவான்.
மெதுவாக சேரில் இருந்து எழுந்தாள். அவர் வீட்டுக்கு வரும் நேரம் ஆகிவிட்டது. இந்த காகித குப்பையைப் பார்த்தால் வந்த உடனே ஆரம்பித்து விடுவார் என்று நினைத்துக் கொண்டே வீட்டை சுத்தம் செய்யத் தொடங்கினாள்.
மனதில் மீண்டும் பாரம் ஏறிக் கொண்டது.
கைகள் தன் வேலையை செய்து கொண்டிருந்தாலும் மனம் போராட்டக் களமாகவே இருந்தது.
கட்டிலில் போட்டு இருந்த துணிகளை மடித்து வைக்கத் தொடங்கினாள்.
தன் கைபேசியில் மகன் ஆதித்யாவின் அழைப்பை பார்த்ததும் சிறு புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது இதழ்களில்.
போனை எடுத்தவுடன் “சொல்லு தம்பி, சாப்பிட்டியா?” என்றாள்.
மகன் ஆதித்யன், “சாப்பிட்டு தான் ரூமுக்கு நடந்து போயிட்டேதான் உன்கிட்ட பேசறேன்” என்று பதில் கூறினான்.
“நீ சாப்பிட்டியா? அப்பா வந்தாச்சா? பாப்பா போன் செய்தாளா?” என்று கேள்விகளைக் கேட்டு கொண்டே, “இன்னைக்கு நாள் எப்படி போச்சு?” என்றான்.
“நாம் மதியம் சாப்பிட்டேன், நீ சொன்ன மாதிரியே காய்கறி வைத்து சாப்பிட்டேன். இரவுக்கு இனிமேல் தான் செய்யப் போறேன்” என்றவள், “அப்பா கொஞ்சம் லேட்டா வருவேன் சொன்னார், இப்போ வந்திடுவார். பாப்பா ஸ்டடி டைம் முடிந்ததும் தான் கூப்பிடுவாள்” என்று சொல்லிவிட்டு மௌனமானாள்.
“நைட் டூட்டியா தம்பி?” என்று அம்மாவுக்கே உரிய கவலையுடன் கேட்டாள்.
“அது ஒன்னும் பிரச்சனை இல்லம்மா, பகல்ல நல்லா தூங்கிட்டேன், கொஞ்சம் முன்னாடி தான் எழுந்தேன்,” என்றான்.
“தம்பி நேரத்துக்கு சாப்பிடு, உடம்பைப் பார்த்துக்கோ,” என்ற போதே வெளியில் பைக் சத்தம் கேட்டது.
“அப்பா வந்துட்டாங்க போல, தம்பி, வண்டி சத்தம் கேக்குது” என்றாள்.
மகன், “சரி மா, நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லல நீ? இன்னைக்கு உன்னோட நாள் எப்படி போச்சு? நான் ரூமுக்கு போற வரை என்கிட்ட பேசு. ஆபீஸ் போன பிறகு பேச டைம் கிடைக்காது, மா. நான் கேட்டதுக்கு பதில் சொல்லு,” என்றான்.
“இன்னைக்கு நான் ஒரு வேலையும் செய்யல, தம்பி. காலையில அப்பா கிளம்பியதும் துணி துவைத்து காயப் போட்டேன், எடுத்து மடித்து வைத்திருக்கேன். அம்மா போன் செய்தாங்க, அவங்களிடம் கொஞ்சம் பேசினேன். அதுக்கப்புறம் பேப்பர் எடுத்து எழுத ஆரம்பிச்சேன், என்ன எழுத, எப்படி எழுதன்னே தெரியல. வீடு முழுக்க குப்பை ஆனது தான் மிச்சம்.”
“நீங்க பெருசா சொல்றீங்க இல்ல, உன்னை நிரூபி” என சொல்லிக்கொண்டிருந்த போது உள்ளே வந்த விக்ரம்,
“அம்மாவும் மகனும் பேச ஆரம்பிச்சுட்டீங்களா? எனக்கு நைட் டின்னர் உண்டா?” என்று சொல்லியபடி அறைக்குள் நுழைந்தான்.
அவன் சிரித்துக்கொண்டே சொன்னான், ஆனால் இவளால் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
சமையலறை நோக்கி நடந்தாள். இரவு உணவு செய்ய. அப்போது காலிங் பெல் ஒலித்தது. மகனுடன் பேசிக்கொண்டே கதவைத் திறந்து பார்த்தாள். ஜொமாட்டோ டெலிவரி பையன் உணவுடன் நின்றான்.
“தம்பி, நீ ஆர்டர் செய்தாயா?” என்று மகனிடம் கேள்விகேட்க.
“நான்தான் ஆர்டர் செய்தேன்,” என்றபடி பின்னால் வந்து நின்றான் விக்ரம்.
“அதான், பிள்ளைங்க உனக்கு ரொம்ப வேலை கொடுக்கக் கூடாது, அம்மாவுக்கு ரெஸ்ட் கொடுங்கன்னு சொல்றாங்களே. அதையும் தாண்டி உன்னை ஏதாவது செய்யச் சொன்னா… என்னை இவன் விக்ரம்மா? ரகுவரனா? என்று பார்ப்பாங்க.”
அவன் உணவை வாங்கிக் கொண்டு டைனிங் டேபிள் மீது வைத்தான்.
“கல்யாணம் ஆகி 24 வருடம் ஆச்சி இதுவரை சாதிக்க தோணல. இப்ப தோணுதாம்… சரி, சாப்பிட வா” என்று சொல்லிக்கொண்டே இரண்டு தட்டுகளை எடுத்து டைனிங் டேபிள் மீது வைத்து பரிமாறத் தொடங்கினான்.
தண்ணீரை எடுத்துக் கொண்டு,
“இன்னைக்கு பால்கார் அம்மாவுக்கு 1050 ரூபாய் கொடுத்தேன், ஈபி பில் கட்டிட்டேன், டிரஸ் அயர்னிங் கொடுத்து வாங்கி வைத்திருக்கேன்,” என்று சொல்லிக்கொண்டு சாப்பிட அமர்ந்தாள்.
“பாப்பாவுக்கு பீஸ் கட்ட அனுப்பிச்சாச்சா?” என்றவனைப் பார்த்தபடி,
“நாளைக்கு அனுப்பச் சொன்னாங்க,” என்றாள்.
தட்டை எடுத்து சிங்க் போட்டுவிட்டு, கை கழுவி மீண்டும் வந்தான்.
“கையை இங்கேயே கழுவு” என்று தண்ணீர் கொடுத்தபடி, “முதுகு வலி எப்படி இருக்கு?” என்று கேட்டான்.
“பரவாயில்லை” என்ற பதில் மட்டும் வந்தது.
அவள் தட்டையும் எடுத்து சிங்கில் வைக்கச் செல்லும் அவனை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தாள் மகிழினி.
அவள் மனதில், ‘கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்’ என்று கமல் பாடிய பாடல் வரிகள் பிம்பமாக தோன்றின.
சிரித்துக் கொண்டே, ‘எப்போ கற்பனை வர வேண்டுமோ அப்போதெல்லாம் வராது, இப்ப மட்டும் வரும்,’ என்று மனதில் சொல்லிக் கொண்டே, மெதுவாக பாலை சூடுபடுத்தத் தொடங்கினாள்.
மீண்டும் மகனிடம் இருந்து அழைப்பு.
“என்ன தம்பி இப்ப தானே கூப்பிட்ட?” என்ற அவளின் காதில் பாப்பா அம்ரித்தாவின் குரல் ஒலித்தது.
“பாப்பா உன் ஸ்டடி டைம் முடிஞ்சிருச்சா? அண்ணன் கூப்பிட்டானா?” என்று கேட்ட மகிழினி குரலில் சந்தோஷம் ஒட்டிக்கொண்டது.
மகிழ்ச்சியுடன், “ஏங்க… பாப்பாவும் , தம்பியும் லைன்ல இருக்காங்க.. வாங்க” என்று அழைக்க துண்டை மேலே போட்டுக் கொண்டே ஹாலுக்கு வந்தான் விக்ரம்.
போன் ஸ்பீக்கரில் போடப்பட்டது,
“இப்போதுதான் மா ஸ்டடி முடிஞ்சது. அண்ணனுக்கு கூப்பிட்டேன், அண்ணா உடனே உனக்கு கூப்பிட்டு விட்டான்” என்றாள் மகள்.
விக்ரம், “பாப்பா கிளாஸ் எல்லாம் எப்படி போச்சு? ஹாஸ்டல் லைஃப் ஓகேவா?” என்று கேட்க,
“மற்றதெல்லாம் ஓகேபா அஞ்சு மாடி ஏறி ரூமுக்கு போக வேண்டியது தான் இருக்கு. அதுதான் கஷ்டமா இருக்கு. அப்பா நான் இன்னைக்கு பிரியாணி சாப்பிட்டேன்” என்றாள் மகள்.
மகனிடையில் புகுந்து “அம்மா சிக்கன் 65 கொடுத்தார்களா? கேளுமா” என்றான் சிரித்துக் கொண்டே…
“டேய் பாப்பாவ வெறுப்பேத்தாதடா” என்றான் விக்ரம் சிரித்துக் கொண்டே…
“வீட்டுக்கு வா பாப்பா உனக்கு நிறைய சிக்கன் 65 வாங்கி தரேன்” என்றான் மகளை சமாதானப்படுத்தும் பொருட்டு.
“அம்மா நல்லா கேட்டுக்கோ சிக்கன் 65 கொடுக்க கூடாதுன்னு நீ சொல்லி இருக்க டாடி சிக்கன் 65 வாங்கிக் கொடுக்கேன்னு சொல்றாங்க நோட் திஸ் பாயிண்ட்” என்றான் மகன்.
“அம்மா கவலைப்படாதம்மா என்னை போல அவளும் ஹாஸ்டல்ல முடிச்சிட்டு வரும்பொழுது உன் சாப்பாடு தேவாமிர்தம் என்று சொல்லுவாமா ஏதாவது வீட்ல சமைத்து போடுங்க கேட்பாள்” என்றான் மகன் கூடுதலாக
“டேய் என் மகள வம்பு பண்ணலைன்னா உனக்கு சும்மாவே இருக்க முடியாது டா” என்று மகனிடம் மகளுக்கு விக்ரம் சப்போர்ட் செய்ய,
அந்த உரையாடல் தொடர்ந்து கொண்டே இருந்தது. என்ன பேசினார்கள் என்பது நால்வருக்குமே தெரியாது. ஆனால் பேசிக் கொண்டே இருந்தார்கள்.
“சரிமா நைட் சாப்பாடுக்கு கூப்பிடுறாங்க. உடனே போய் சாப்பிடலைன்னா காலி ஆயிரும். போய் சாப்பிட்டு வந்து கூப்பிடுறேன் மா” என்றாள் மகள்.
“சரிமா நானும் ஆபீஸ்க்கு கிளம்பனும் நானும் ரெடி ஆகிறேன்” என்றான் மகன்
இத்தனை நேரம் இருந்த மகிழ்ச்சி துடைத்தார் போல் குறைய ஆரம்பித்தது மகிழினியின் முகத்தில்.
“மகி யதார்த்தத்தை ஏத்துக்க பழகு. எப்போதுமே அவங்களை உன் கைக்குள்ளே வச்சுக்க முடியாது. அவங்களும் வளர்ந்துட்டாங்க” என்றான் விக்ரம்.
சரி நீ போ நான் பால் சூடு பண்ணி எடுத்துட்டு வரேன் என்று டேபிளில் இருந்த பாலை எடுத்துக் கொண்டு சமையலறை நோக்கி சென்றான் விக்ரம்.
“அதுதான் உனக்கு உன் மகன் ஒன்னு வாங்கி கொடுத்திருக்கானே. அவன் இல்லாத டைம்ல இதை கொஞ்சிக்கமான்னு சொல்லி, அது என்ன ஆச்சுன்னு போய் பார்த்தியா?” என்றான் விக்ரம் கேலியாக.
படுக்கையில் ஓரமாய் படித்திருந்தது இவர்களின் 3 வது செல்லக் குழந்தை பூனையார் யாழ்வின்.
இவள் படுக்கையறை வந்தவுடன் மெல்ல கண்விழித்துப் பார்த்து “மியாவ் மியாவ்” என்று சத்தம் எழுப்பிக் கொண்டே இவளிடம் வந்தது இவள் காலை மெல்ல உரசி கொண்டே சுற்றி சுற்றி வந்தது.
“அச்சோ இவ்ளோ நேரம் உன்னை கவனிக்கவே இல்லையே. . அம்மா” என்றபடி அதனை தூக்கிக் கொண்டு அதற்கு உணவிடக் கிளம்பினாள் மகிழினி.
அவள் பூனையிடம் கொஞ்சிக் கொண்டிருப்பதை அவளுக்கு தெரியாமல் போட்டோ எடுத்து அனுப்பினான் தன் மகளுக்கும், மகனுக்கும் விக்ரம்.
Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
