முன்னுரை
தமிழக வரலாற்றின் கி.பி. 825 முதல் 925 வரையிலான காலகட்டத்தில் நடந்த ஓர் நிகழ்வே இக்கதையின் கருப்பொருள் ஆகும்.
நாட்டின் எல்லையை அரசன் மட்டுமே முடிவு செய்வதில்லை. நாட்டின் கடைக்கோடி மனிதனுக்கும் அவ்வல்லமை உள்ளது என்பதையும் காணலாம்.
வரலாற்றில் வாழ்ந்த உண்மை மாந்தர்களோடு கற்பனைக் கதாபாத்திரங்களும் இக்கதையில் இணைந்து பயணிக்கின்றனர்.
தழலின் தவம் 1
இளவேனிற்காலத்தின் வைகறைப் பொழுது, அரண்மனை நந்தவனத்து மலர்கள் யாவும் பச்சிளம் குழந்தையைப் போல மென்மையாக, மெல்ல மலரத் தொடங்கியிருந்தன. இரவின் கருமை இன்னும் முற்றிலுமாக விலகியிருக்கவில்லை.
தன் வீரத்தால் தனித்ததொரு முத்திரை பதித்த குறுநில அரசுதான் பெரும்பாணாப்பாடி என்னும் வாணர் நாடு. அந்தச் செழுமையான மண்ணை, பராக்கிரமத்தோடும் தர்மநெறி தவறாமலும் ஆண்டு வந்தார் மன்னர் வீரசிங்க வாணகோவரையர்.
வாணர் நாட்டுக்குக் கிழக்கு எல்லையில் தொண்டை நாடும், தெற்கே பெண்ணையாற்றின் இருமருங்கிலும் மலாடும் அமைந்திருந்தன. மேலும், வாணர் நாட்டின் வடமேற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் நுளம்ப நாடு இருந்தது.
வடக்கே பாலாறும், தெற்கே தென்பெண்ணை ஆறும் பாய்ந்ததால் வாணர் நாடு மரகதப் பச்சைப் பசேலெனக் காட்சியளித்தது. தாமரை, அல்லி மலர்கள் நிறைந்த ஏரிகளும் குளங்களும் இந்நாட்டின் எழிலைக் கூட்டின.
நெல் வயல்களும், கரும்புத் தோட்டங்களும் சூழ்ந்து செழுமையான மருத நிலமாக விளங்கியது. காற்றில் கரும்புச் சாற்றின் மணமும், மலர்களின் நறுமணமும் கலந்தே வீசின.
சந்தன மற்றும் அகில் மரங்கள் நிறைந்த அடர்ந்த காடுகள் இந்நாட்டிற்குத் தனித்துவமான இயற்கை அழகைத் தந்தன. யாழிசைக்கும் பாணர்களும், நடனமாடும் விறலியர்களும் இணைந்து தங்கள் நாட்டை ஒரு கலை நாடாகத் திகழச் செய்தனர்.
இத்தகைய சிறப்புமிக்க வாணர் நாட்டை, குறுநில மன்னரான வீரசிங்க வாணகோவரையர் ஆட்சி செய்து வந்தார். அவரின் அரியணையை அலங்கரித்தவர், மகாராணி காடவ மாதேவியார் ஆவார்.
அரச தம்பதியரின் காதல் வாழ்க்கைக்குச் சான்றாக மூன்று பிள்ளைச் செல்வங்கள் பிறந்தனர். அவர்களின் தலைமகனாய், வீரம் செறிந்த பட்டத்து இளவரசன் வாணவித்யன் திகழ்ந்தான். அவனது பத்தினி சித்திரலேகா ஆவாள்.
அவனுக்கு அடுத்தபடியாக, அழகும் அறிவும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற இளவரசி வாணவல்லி விநிதை விளங்கினாள். அவர்கள் இருவருக்கும் இளையவனாய், இளவரசன் குணமுதிதன் அந்த அரண்மனைக்கே செல்லப் பிள்ளையாக வளர்ந்து வந்தான்.
அரண்மனையில் அமைந்திருந்ததுப் பிரம்மாண்டமான போர்ப் பயிற்சி மைதானம். அங்கு அமைதியைக் கிழிக்கும் வாளோடு வாள் உரசும் உக்கிரமான சப்தம். இரும்புக் கதாயுதங்கள் ஒன்றோடொன்று மோதும் ஓசை. எல்லாவற்றிற்கும் மேலாக, “ஆஹ்… ஆஹ்…” என ஆக்ரோஷமான மனித அடிக்குரல் உருமல் என அவ்விடமே ஒரு போர்க்களத்தின் மாயையைத் தோற்றுவித்தது.
அங்கே, வாணர் குலத்தின் வீர சிங்கங்களான இளவரசர்கள் இருவரும் வியர்வை சிந்தி, மூச்சிரைக்கப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுடன் அரண்மனை வீரர்களும் தீவிரமாகப் பயிற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.
அச்சமயம், கம்பீர நடையோடு அந்தப் போர்ப் பயிற்சி மைதானத்திற்குள் நுழைந்தாள் இளவரசி வாணவல்லி விநிதை.
பிறை போன்ற நெற்றி, வில்லென வளைந்த புருவங்கள், கயல் விழிகள், சீரிய நாசி, செவ்விதழ்கள், வளைந்து நெளியும் கொடியிடை என அழகிற்கு இலக்கணமாய் திகழ்ந்தாள். அவள் பதினாறு பிராயமே நிரம்பிய, எழில் கொஞ்சும் பருவ மங்கை.
ஆயினும், அவளது தோற்றத்தில் பெண்மையின் நளினத்தை விட, ஒரு வாணர்குலத்து வீராங்கனைக்கே உரிய கம்பீரமும் செருக்கும் மேலோங்கி நின்றன.
பயிற்சியில் இருக்கும் வீரர்களை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்த விநிதையின் வேல்விழிகள், இறுதியாக அங்கே தடிமனான கயிற்றைக் கொண்டு தூணில் பிணைக்கப்பட்டிருந்த ‘கொம்பன்’ மீது நிலைத்து நின்றன. உஷ்ணமான மூச்சுக்காற்றைச் சீற்றத்துடன் வெளியேற்றியபடி, ஆக்ரோஷமாகத் தாக்குவதற்குத் தகுந்த தருணம் பார்த்துக் காத்துக்கொண்டிருந்தது அந்தக் கருநிறக் காளை.
கொம்பனைக் கண்ட இளவரசி, அதன் மூக்கணாங்கயிற்றைப் பிடித்திருந்த காளைக்காவலனை நோக்கி, “கொம்பனை அவிழ்த்துவிடு!” எனக் கட்டளையிட்டாள்.
ஒரு நொடி அவன் தயங்கினாலும், அவளது கட்டளையை மீறும் துணிவின்றி, கொம்பனைப் பிணைத்திருந்த கயிற்றை அவிழ்த்தான்.
கட்டுகள் அவிழ்ந்த அடுத்த கணமே, சீறும் வேங்கையைப் போல அந்தத் திமில் பெருத்த கொம்பன் பாய்ந்தது. களத்தில் நின்ற மல்லன் ஒருவன் அக்காளையை அடக்க முற்பட்டான். ஆனால், கொம்பனின் அசுர வேகத்திற்கு முன்னால் அவனது வீரம் எடுபடவில்லை. அந்த வீரனைத் தன் கொம்புகளால் தூக்கித் தரையில் வீசி எறிந்தது அது.
கொம்பனின் கோபப் பார்வை இளவரசி விநிதையைச் சற்றும் அசைக்கவில்லை. அவளது பொன்னிற மேனியில், வைர முத்துக்களை விஞ்சும் வகையில் வியர்வைத் துளிகள் அரும்பியிருந்தன. காற்றில் அலைபாயும் கார்மேகக் கூந்தலும், இளமைக்கே உரிய கட்டுக்கோப்பான வாளிப்பான தேகமுமாய் கொம்பனுக்காகக் காத்திருந்தாள் விநிதை.
“விநிதை, பிடிவாதம் பிடிக்காதே, நான் சொல்வதைக் கேள்…” என்று பதறியபடி, அவளது இளைய சகோதரன் ஓட்டமும் நடையுமாய் அவளருகே வந்து தடுத்தான்.
ஆனால், விநிதையோ கொம்பன் மீது நிலைநிறுத்திய தன் பார்வையை விலக்கவில்லை. தன் தம்பியின் எச்சரிக்கைச் சொற்களைக் காதில் வாங்கிக் கொள்ளாதவளாய், குனிந்து மண்ணை அள்ளித் தன் இரு கைகளிலும் இறுக்கமாகத் தேய்த்துக் கொண்டாள். அவளது விழியில் இன்னமும் அந்தச் சீறும் கொம்பன் மட்டுமே நிறைந்திருந்தான்.
“உனக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது!” எனத் தன் குரலைச் சற்றே உயர்த்தி, எச்சரிக்கும் தொனியில் கூறினான் இளைய சகோதரன்.
அவனது சொற்கள் விநிதையின் செவிகளில் விழுந்த கணமே, கனல் கக்கும் விழிகளைத் தம்பியின் மீது திருப்பினாள். “இது புதிய செய்தி அல்லவே…” என்று கூறியவளின் இதழ்களில் அலட்சியப் புன்னகை ஒன்று தவழ்ந்தது.
அதே வேளையில், கொம்பன் உக்கிரமான வேகத்துடன் விநிதையை நோக்கிப் பாய்ந்து வந்தது.
அந்த நொடிக்காகவே விழி இமைக்காமல் காத்திருந்த இளவரசி, சட்டெனச் சீறி வந்த காளையின் கூர்மையான இரு கொம்புகளையும் தன் இரு கைகளாலும் இறுகப் பற்றி அடக்க முயன்றாள். ஆனால், அக்காளையானது தன் அசுர பலத்தால் விநிதையைத் தூக்கி எறிந்தது. அவள் சற்றே தள்ளித் தரையில் விழுந்தாள்.
விழுந்தவள் சோர்ந்துவிடவில்லை. அவளது வேகத்துடன் விவேகமும் பன்மடங்கு அதிகரித்தது. உடனே சுதாரித்து எழுந்தவள், இந்த முறை அதனுடன் நேருக்கு நேர் மோதாமல், சாதுரியமாகக் காளையின் முன்னே ஓடினாள்.
அவள் நேராக ஓடாமல், இடமும் வலதுமாக வளைந்து நெளிந்து ஓடினாள். அவளது இந்தத் தந்திரம் காளையின் வேகத்தைச் சற்றே குறைத்தது. அடுத்த கணமே, மைதானத்தின் அருகே இருந்த நந்தவனத்தை நோக்கித் திரும்பினாள்.
அந்த நந்தவனத்திற்குச் செல்ல படிகளில் இறங்க வேண்டும். இளவரசி விநிதை அப்படிகளில் மின்னல் வேகத்தில் கடகடவென இறங்கிவிட்டாள். ஆனால், சமதளத்தில் மட்டுமே பாயத் தெரிந்த காளைக்கு, செங்குத்தான படிகளில் இறங்குவது அத்தனை எளிதான காரியமாக இருக்கவில்லை.
காளையின் உடல் எடை பெரும்பாலும் அதன் முன்னங்கால்களிலேயே தாங்கப்படும். செங்குத்தான படிகளில் இறங்கும்போது, தன் முழு உடலும் முன்னோக்கிச் சரிந்து கீழே விழுந்துவிடுமோ என்னும் அச்சம் இயல்பாகவே காளையின் மனதில் எழும்.
மேலும், கண்களின் புவியியல் அமைப்பு பக்கவாட்டில் அமைந்திருப்பதால், படிகளின் ஆழத்தை அதனால் துல்லியமாகக் கணிக்க முடியாது. இந்தத் திகைப்பு அதன் கோபத்தை விட, தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற அச்சத்தையே அதிகப்படுத்தியது.
படிகளின் சரிவை எதிர்கொள்ள முடியாமல் கொம்பன் சில கணங்களிலேயே நிலைகுலைந்தது. மெல்லப் பின்வாங்கியது. சரிந்த படிகளில் இறங்குவதைப் பற்றிய வெருட்சி அதன் கவனத்தைக் கலைக்க, நெஞ்சில் கனன்ற சீற்றமும் தணிந்தது.
இவை அனைத்தையும் விலங்குகளின் இயல்பறிந்து நன்கு உணர்ந்திருந்தாள் இளவரசி. ஆதலால்தான், அவள் தந்திரமாகப் படிகளில் இறங்கினாள்.
படிகளின் விளிம்பில் நின்றிருந்த கொம்பனின் சீற்றம் மெல்ல மெல்ல அடங்குவதை இளவரசி கூர்ந்து கவனித்தாள். மைதானமெங்கும் ஆக்ரோஷமாகப் பாய்ந்து திரிந்ததாலும், படிகளின் ஆழம் தந்த திகைப்பாலும் அதன் உடல் தசைப்பிடிப்புகள் யாவும் தளரத் தொடங்கியிருந்தன. அதன் நாசித்துவாரங்களில் இருந்து தணலாய் வெளிப்பட்ட மூச்சுக்காற்று, இப்போது பெருமூச்சுகளாய் மாறி காளையின் சோர்வை வெளிப்படுத்தியது.
கொம்பன் இனி தாக்க மாட்டான் என்று அவள் மனதில் உதித்தது. விநிதை எவ்வித அச்சமும் இன்றி, அடிமேல் அடி வைத்து அதன் அருகே சென்றாள். சீறிக்கொண்டிருந்த கொம்பன், இப்போது உடல் நடுங்கத் தன் தலையைத் தாழ்த்தி, சோர்வின் உச்சத்துக்கே சென்று சாதுவாய் நின்றது. அதன் கண்கள் தன் ஆக்ரோஷத்தை இழந்து, தஞ்சம் கோருவதைப் போல இளவரசியை நோக்கின.
இளவரசி விநிதை பசும்புல் கட்டினை வரவழைத்து மென்மையாக அதன் முன்னே நீட்டி, முழுமையாகச் சாந்தப்படுத்தினாள். அந்த நொடிக் களத்தில், காளைக்காவலன் ஓடிவந்து, தன் காளையைப் பற்றிக் கொண்டு அங்கிருந்து அழைத்துச் சென்றான்.
உண்மையில், இந்த ஏறுதழுவல் களம் என்பது மனிதனுக்கும் விலங்கிற்குமான போர் அல்ல. அது மனிதர்களுக்கும் மனிதர்களுக்குமிடையே திரைமறைவில் அரங்கேறும் பெரும் மானப் பிரச்சினை, கௌரவப் போராட்டம் ஆகும்.
அங்கு நின்றிருந்த அந்தக் காளைக்காவலனின் நெஞ்சம், தன் காளை இளவரசியை வீழ்த்தி வெற்றி வாகை சூடியிருந்தால் ஆனந்தக் கூத்தாடியிருக்கும். ஆனால், அதே வேளையில் அரச குடும்பத்தின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்னும் அச்சத்தால், அவன் தன் உண்மையான உணர்வை வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருந்தான்.
மன்னனுக்கும் ஆண்டிக்கும் பேதம் பார்க்கக் காளைக்குத் தெரியாது. தன் எதிரே களத்தில் நிற்பவன் எவனாயினும், அது தன் வீரத்தையே காட்டும்.
அப்போது, இளவரசியின் இளைய சகோதரனான குணமுதிதன் அவள் முன்னே வந்தான். அவனது முகத்தில் அதிருப்தியின் ரேகைகள் படர்ந்திருக்க, “நீ செய்தது சற்றும் முறையல்ல விநிதை! வீர நெறிப்படி அந்தக் காளையுடன் நீ சமதளக் களத்திலல்லவா நேருக்கு நேர் நின்று சண்டையிட்டிருக்க வேண்டும்? இப்படிச் சூழ்ச்சியால் அதை வீழ்த்துவது வீரத்திற்கு அழகல்ல!” என்று கடுமையான குரலில் சாடினான்.
தன் இளவலின் குற்றச்சாட்டைக் கேட்டு விநிதை கோபம் அடையவில்லை. மாறாக, இதழ்களில் ஒரு மெல்லிய புன்னகை அரும்ப அவனை நிமிர்ந்து நோக்கினாள் . “குணமுதிதா, நம் அரண்மனையின் பிரதான வாயிலுக்கு எவ்வழிச் செல்ல வேண்டும்?” என்று மெல்லிய குரலில் வினவினாள்.
சூழலுக்குச் சற்றும் முரண்பட்டு, அக்காள் விநோதமானதொரு கேள்வியைத் தொடுத்ததும் குணமுதிதனின் புருவங்கள் சுருங்கின. அவளது வினாவைப் புறக்கணிக்க முடியாமல், “அந்தப் பிரதான வாயிலை அடைய அந்தப்புரத்தின் உள்ளே புகுந்தும் செல்லலாம் அல்லது கோட்டையின் வெளி மதில்சுவரைச் சுற்றிக் கொண்டும் அங்குப் போய்ச் சேரலாம்” என்று சினங்கலந்த சலிப்புடன் மறுமொழி கூறினான்.
அவளது இதழ்களில் படர்ந்திருந்த புன்னகை இப்போது சற்றே விரிந்தது. தன் இளவலை நேருக்கு நேர் நோக்கி, “இலக்கை எந்தப் பாதையின் வழியாக வேண்டுமானாலும் அடையலாம் அல்லவா இளவரசே? அதை இப்படித்தான் அடைய வேண்டும் என்ற எந்தவொரு மாறாத கோட்பாடும் போர்க்களத்தில் இல்லை. அதற்காக நான் அறத்திற்குப் புறம்பான எந்தவொரு குறுக்குவழியையும் கையாளவில்லை, உனக்கு அச்சம் வேண்டாம்” என்று உறுதியான கம்பீரக் குரலில் விடையளித்தாள்.
“அருமை .. அருமை மகளே” என்ற சிம்மக்குரல் அங்கே முழங்கியது. குரல் வந்த திசை நோக்கி அனைவரும் திரும்ப, வாணர் நாட்டின் அரசரும், விநிதையின் தந்தையுமான வீரசிங்க வாணகோவரையர் தன் மகளை நோக்கித் தீர்க்கமான எட்டுகளுடன் நடந்து வந்தார். அவருடன் அவரது பட்டத்தரசி காடவ மாதேவியாரும், விநிதையின் மூத்த அண்ணனும் அந்த நாட்டின் பட்டத்து இளவரசனுமான வாணவித்யனும் கம்பீரமாக நடந்து வந்தனர்.
தன் மகளின் கூர்மதியைக் கண்டு பூரித்துப் போன அரசர், “சரியான பதிலடி கொடுத்தாய் மகளே. வெற்றி ஒன்றே நமது இறுதி இலக்கெனில், தர்மத்தின் நெறி மாறாமல் அதை அடைய எந்தவொரு தந்திர உபாயத்தையும் நாம் மேற்கொள்ளலாம்! அதில் தவறேதுமில்லை” என்று மனதாரப் பாராட்டினார்.
பட்டத்தரசி காடவ மாதேவியாரின் தாய்ப்பாசத்துடன், தன் அருமைச் செல்வ மகளை ஆனந்தக் கண்ணீர் பெருக வாஞ்சையோடு நோக்கினார்.
அடுத்து, அண்ணன் வாணவித்யனின் முகம் பெருமிதத்தால் மலர்ந்தது. அவன் தன் தங்கையை மனதார வாழ்த்தி, “இப்போதே நுளம்ப நாட்டின் அரியணையில் அமரப்போகும் மகாராணியைப் போலவே உனது சிந்தனைகள் யாவும் கம்பீரமாகத் தொடங்கிவிட்டன விநிதை. என் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்!” என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினான்.
தமையனின் சொற்கள், நுளம்ப நாட்டு இளவரசனுக்கும் விநிதைக்கும் இடையே மிக விரைவில் அரங்கேறவிருக்கும் அந்த மங்கலத் திருமண ஒப்பந்தத்தை அங்கிருந்தோர்க்கு நினைவூட்டியது.
தமையனின் வாழ்த்தைக் கேட்டதும் இளவரசி விநிதையின் கன்னங்களில் செம்மை படர, நாணப் புன்னகையுடன் தன் முகத்தைத் தாழ்த்திக் கொண்டாள்.
ஆனால், அந்தப் பெண்ணுக்கே உரிய மென்மைக்குப் பின்னே, வருங்காலத்தில் ஒரு பெரும் தேசத்தை ஆளப்போகும் பேரரசிக்குரிய தீர்க்கமும் மதிநுட்பமும் அவளது விழிகளில் ஆழமான உறுதியுடன் மின்னிக் கொண்டிருந்தன.
தொடரும் …
