இருள் நிழலாய் நானே 10

இருள் நிழலாய் நானே 10

முழுதாய் இரண்டு நாட்கள் முடிந்த பின்னரே தினேஷ் மெல்ல விழி திறந்தான்.

தினேஷ் உயிருடன் இருப்பது தெரிந்தால் அவனை இந்நிலைக்கு ஆளாக்கியவர்கள் மீண்டும் கொலை செய்வதற்கு முயற்சி நடைபெறும் என யூகித்த சமர், தினேஷை விட்டு நகரவில்லை.

முதல் நாள் தினேஷை காண வந்த ரூபேஷ் எதுவும் செய்திட முடியாது திரும்பிச் சென்றிருந்தான். அடுத்த நாள் சென்று பார்த்தால், சமரின் போலீஸ் மூளை தன்னை சந்தேகிக்க வாய்ப்பிருக்கிறது என்பதால் ரூபேஷ் அடுத்தடுத்த நாட்கள் வரவில்லை.

தினேஷ் கண் விழித்தது முதல் அவன் எதுவும் சொல்லிட மாட்டானா என சமர் அவனையே தான் பார்த்திருந்தான்.

பெரும் அதிர்வு ஒன்று, நம்ப முடியா காட்சிகள் பல, தினேஷை வெகுவாக பாதித்திருந்தது.

இறந்துவிட்டோம் என்று அவனே முழுதாய் நம்பி கண்களை மூடியிருக்க, தற்போது உயிருடன் கண் திறந்திருப்பதை அதிசியமாகத்தான் எண்ணினான்.

“ரியா?”

தினேஷ் கண்கள் திறந்து ஒருநாள் முடிந்திருக்க… சுயம் பெற்றவனாக அப்போது தான் மனைவியை கேட்டான்.

“இன்னும் சொல்லல தினேஷ். நீ வெளியூர் போயிருக்கன்னு தான் இருக்காங்க” என்றான் சமர்.

அன்று பத்திரிக்கையாளர்கள் வருவதற்கு முன்பு தினேஷை மருத்துவமனை கொண்டு வந்திருந்தனர் சமர் மற்றும் சீனு. அதனால் மேம்பாலத்தில் அரை உயிராக மீட்கப்பட்டது யாரென்ற நபர் பற்றிய தகவல் எங்கும் வெளிவரவில்லை. ஆதலால் ரியாவுக்கு தினேஷின் நிலையை மறைப்பது சமருக்கு பெரிய விடயமாக இல்லை.

“இன்னைக்காவது போன் பண்ணாங்களா?” எனக்கேட்டு ரியா பேசிய போது கூட சமர் எதோ சொல்லி சமாளித்தானே தவிர உண்மையை சொல்லவில்லை.

“ஹ்ம்ம்” என்ற தினேஷ் கண்களை மூடிக்கொள்ள, கண்ணீர் அவனது காது மடலை தீண்டியது.

“தினேஷ்.” பரிதவிப்பாய் ஒலித்தது சமரின் குரல்.

“பிளீஸ்… எதையும் கேட்காத சமர்.” மொத்தமாக தினேஷ் உடைந்திருந்தான்.

“எதுவும் கேட்காம எப்படி தினேஷ். மகிக்கு என்னாச்சு… அதையாவது சொல்லு. சமர் பித்து பிடிச்சு இருக்கான்டா” என்றான் சீனு.

“இதை தவிர்க்கத்தானே எதுவும் கேட்காதீங்க சொன்னேன்” என்ற தினேஷ் முகம் மூடி கதறி அழுதான்.

அவனது அழுகையில் மூளை உணர்ந்த செய்தியில் சமர் தன் சர்வமும் அடங்கி அதிர்ந்தான்.

“தவறா எதுவும் சொல்லிடாத தினேஷ்.” இதனை சொல்லும்போதே சமர் தரையில் மண்டியிட்டு அமர்ந்திட, அவனது கண்கள் கண்ணீரை கொட்டியிருந்தது.

“சமர் நீ நினைக்கிற மாதிரி இருக்காது” என்று சீனு அவனைத் தேற்றிட முயல… தினேஷிடம் விரக்தி.

“அழட்டும் சீனு. இனி எப்பவும் மகியை பார்க்க முடியாதுன்னு அவன் நம்பனுமே. அதுக்காவது அழட்டும்” என்ற தினேஷ் தன் தோள் குலுங்கிட வெடித்துக் கதறினான்.

“நீ சொல்றது புரியல தினேஷ்.” சீனுவாலும் அவன் சொல்வதை ஏற்க முடியவில்லை.

“அங்க என்ன நடக்குதுன்னு எங்களுக்கும் ஒன்னும் புரியல சீனு” என்ற தினேஷ்… “எல்லாமே கண்ணு முன்ன நடக்குது. ஆனால் எதுவும் நிஜம் மாதிரி தெரியல. நிஜம் எல்லாம் மாயமா மறையுது” என்றான்.

“மகி… மகிக்கு?” தன் உணர்வு ஒருவேளை பொய் கூறுகிறதோ என நடுங்கியபடி சமர் வினவினான்.

“என்னால் இன்னும் நம்ப முடியல சமர். ஆனால் அது தான் உண்மை” என்ற தினேஷ்… “பல்லாயிரம் அடி பள்ளத்தாக்கில் விழுந்திட்டாள். நானும் கண் மூடிட்டேன்” என்றான்.

பெரும் அதிர்வை உள்வாங்கி மீண்டு வந்தவனுக்கு, தற்போது செய்தியாகத்தான் சொல்ல வந்தது. தங்களுக்கு முன் சென்றவர்களுக்கு என்ன ஆனது என்று முழுதாக அறிவதற்கு முன்பே கண்களில் ஜாலம் போன்று அனைத்தும் நடந்து முடிந்திருந்தது.

“உனக்கெப்படி இப்படி?” சீனு கேட்க,

“கண்ணு முன்னாடி யாருமில்லை. என்னை தாக்கியது யாருன்னு தெரியல. கண்ணு மூடுற நேரம், சில உருவங்கள் மங்கலா… பல காலடி சத்தம். அவ்ளோ தான்” என்றான்.

“அங்கு அந்த லெட்டரில் இல்லாத பல மர்மங்கள் நடக்குது” என்று தினேஷ் ஒவ்வொன்றாக சொல்ல, சீனுவின் நெஞ்சுக்கூடு பயத்தில் அதிவேகமாகத் துடித்தது.

சமர், மகி இல்லை என்பதிலேயே சுயம் தொலைத்து பிரம்மை பிடித்தவன் போல் “லட்டு” என விடாது அரற்றிக் கொண்டிருந்தான்.

‘நான் இல்லைன்னாலும் நீ தைரியமா இருக்கணும் அத்து.’ அவள் சொல்லிய வார்த்தைகள் காதில் எதிரொலிக்க…

“லட்டு” என்று கை முஷ்டி இறுக்கி, கழுத்து நரம்புகள் புடைக்க எழுந்து நின்று சமர் கத்திய கத்தலில், அக்கட்டிடமே ஆட்டம் கண்டது.

“சமர் ரிலாக்ஸ்…” சீனுவால் அவனை கட்டுப்படுத்தவே முடியவில்லை.

இருக்கும் இடம் மறந்து வெறி பிடித்த வேங்கையாய் அனைத்தும் தூக்கி எறிந்து, பித்து பிடித்தவன் போல் தரையில் உருண்டு கதறி துடித்தான்.

சமரின் சத்தம் கேட்டு கூடிய, மருத்துவர்கள், கம்பவுண்டர், காவலாளிகள் என யார் முயன்றும் சமரை அமைதிப்படுத்த முடியவில்லை.

பலர் முயன்று அழுத்தி பிடிக்க மயக்க மருந்து செலுத்தி சமரை கண் மூட வைத்தனர்.

“எல்லாம் என்னால் தான். கூட இருந்தும் மகியை காப்பாற்ற முடியவில்லை” என தினேஷ் தன்னையே அறைந்து கொண்டு அழ, “மகி விழுந்ததை தானே பார்த்த? ஒருவேளை உயிரோடு இருந்தால்?” என சீனு கேள்வி எழுப்பினான்.

“கண்டிப்பா பிழைக்க வாய்ப்பில்லை” என்ற தினேஷ், அந்த பள்ளத்தாக்கின் நிலையை விவரித்தான்.

“எட்டி பார்த்திடவே அத்தனை திடம் வேணும் சீனு” என்ற தினேஷ், “மகி விழறதுக்கு முன்ன அவளுக்கு எதோ இன்ஜெக்ட் பண்ணாங்கடா. அது பாய்சனா கூட இருக்கலாம். போட்டதும் அப்படியே பின்னால் மயங்கி சரிந்தாள். விழுந்த இடம் பள்ளத்தாக்கு” என்றான்.

பக்கத்துப் படுக்கையில் உயிர் இருந்தும் ஜடமாய் கிடந்த தன் நண்பனை பார்த்தவாறு…

“சமருக்கு உலகமே மகி தான்டா. இனி எப்படி அவன் உலகம் சுழலும்?” என்ற சீனுவுக்கும் கண்கள் கலங்கியது.

“அங்க போய் ஒன்ஸ் செக் பண்ணலாமா?”

சீனு கேட்க, தினேஷ் வெளிப்படையாக வேண்டாமென மறுத்தான்.

“சப்போஸ் மகி உயிரோடு… உயிருக்கு போராடிட்டு இருந்தால்?”

“போற யாரும் திரும்பி வர முடியாது” என்ற தினேஷ், கண்களை அழுத்தமாக மூடி திறந்தான்.

“மூணு பேரும் எப்படி துடிச்சிருப்பாங்க?” தினேஷ் அழுதிட சீனுவால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

“அப்போ வர்ஷா, ராகுல்… அவங்களும் இறந்துட்டாங்க சொல்றியா?” சீனு அதிர்வோடு தான் கேட்டான்.

“அவங்க ரெண்டு பேரும் அங்க தான் போனாங்க. நாங்க போனப்போ அவங்க இல்லையே! வேறெங்க போயிருக்க முடியும்? எங்கயும் போகலன்னா… இங்க வந்திருக்கணும் தானே?” என்றான் தினேஷ்.

தினேஷ் அங்கு நடந்தவை எல்லாம் சொல்ல சீனுவால் நம்புவதா வேண்டாமா என்று கூட தெரியவில்லை.

கேட்கவே படு பயங்கரமாக இருந்தது.

“கொஞ்சம் கூட மகி உயிரோடு இருப்பதற்கு சான்ஸ் இல்லையா தினேஷ்?”

“இருந்தால் இந்நேரம் நான் இங்க உட்கார்ந்திருக்க மாட்டேன் சீனு. கூட வந்தவளை கண்ணு முன்ன சாவுக்கு கொடுத்திட்டு வந்திருக்கேன்” என்று அழும் தினேஷின் உடல்நிலை கருதி அடுத்து சீனு எதும் கேட்கவில்லை.

சமர் கண்விழிக்கவே இருவரும் காத்திருந்தனர்.

கண் திறந்ததும் என்ன வலி கொள்வானோ என அச்சமாக வேறு இருந்தது.

சமர் கட்டுப்படுவது மகி ஒருவளுக்குத்தான். யோசனை வந்தவனாக, சீனு எழுந்து சென்று சமரின் பேண்ட் பையை ஆராய்ந்து அதிலிருக்கும் ரெக்கார்டரை எடுத்துக் கொண்டான்.

தினேஷ் என்னவென்று பார்க்க,

“இப்போதைக்கு இதை வச்சு தான் இவனை சமாளிக்கணும்” என்றான் சீனு.

சில மணி நேரங்களில் சமர் கண் திறந்தான்.

அவனிடம் அசைவு தோன்றியதும் சீனு மற்றும் தினேஷிடம் கலக்கம் வந்து ஒட்டிக் கொண்டது.

ஆனால் சமர் அவர்களின் எண்ணத்திற்கு மாறாக அமைதியாக எழுந்து அமர்ந்தான்.

“உண்மையாவே லட்டு உயிரோடில்லையா தினேஷ்?” அன்னையைத் தேடும் சிறுவனாகக் கேட்டான்.

தினேஷ் மௌனமாக தலை கவிழ,

சமர், தன்னுடைய அழுகை, கோபம், வருத்தம் என பல வகை உணர்வுகளை அடக்குவது அவனது சிவந்த விழிகளிலும், அவனது கைகளில் படுக்கை விரிப்பு கசங்குவதிலும் தெரிந்தது.

“நான் இல்லைன்னாலும் நீ தைரியமா இருக்கணும் அத்து.” மீண்டும் மீண்டும் காதுக்குள் ரீங்காரமிட…

“தெரிஞ்சே அங்க போயிருக்கீங்க… ரைட்?” என்றான்.

தினேஷ் ஆமென்க,

“நீயாவது இங்க தான் போறோம் சொல்லியிருந்தா, நானும் கூட வந்திருப்பனே. ஆபத்து தெரிஞ்சு அவளை விட்டிருக்கமாட்டேன். முதல் தடவை அவளை தனியா விட்டு மொத்தமா வாரிக் கொடுத்திட்டனே” என தான் ஆண் என்பதையும், தன் பதவி, கம்பீரம் யாவும் மறந்து துடித்து அழுதான்.

“அத்தை, மாமாகிட்ட எப்படி சொல்லுவேன். இனி என் மகி இல்லைன்னு.” தலையில் அடித்துக்கொண்டு அழுதான்.

“சார் பிளீஸ்… அவருக்கு இது நல்லதில்லை.” சமரின் சத்தம் கேட்டு செவிலி வந்து சொல்லிச் செல்ல…

“சமர்” என்று ஆற்றுப்படுத்த அருகில் சென்ற சீனுவை இறுக்கி பிடித்து அழுகையில் கரைந்தான் சமர்.

அழுது அழுது ஓயமால்… மீண்டும் மீண்டும் தவித்து, துடித்து கதறும் நண்பனின் நிலை தாங்காது, தினேஷிடம் கண்காட்டி விட்டு சீனு வெளியில் சென்று, சுந்தருக்கு அழைத்து சமருக்கு உடல்நிலை சரியில்லை என மருத்துவமனை வர சொல்லி உள்ளே வந்தான்.

“சீனு லட்டு டா!”

சமரின் அக்குரலும், தோற்றமும் சீனுவுக்கு அவனது மனநிலையை கருத்தில் கொள்ள வைக்க, உடனடியாக சமருக்கு சிகிச்சை அளிக்கும் மனநல மருத்துவருக்கு அழைத்து விவரம் கூறினான்.

“நீங்க வீட்டுக்கு எப்படியாவது கூட்டிட்டு போங்க சீனு. நான் வரேன்” என்று வைத்திட, சுந்தரும், ரேவதியும் கவலை படிந்த முகத்தோடு வந்து சேர்ந்தனர்.

“என்னாச்சு சீனு” என்று அறைக்குள் வந்தவர்கள், அங்கு இன்னொரு படுக்கையில் தினேஷ் படுத்திருப்பதை கண்டு குழப்பமாக ஏறிட்டனர்.

“மாமா!” சுந்தரை கண்டதும் தாவி அணைத்த சமர், நிகழ் புரியாது தன் வாழ்வு மகியுடன் நின்றுவிட்டது என்பதைப்போல, “லட்டு வேணும். என் மகி எனக்கு வேணும்” என்று கட்டிக்கொண்டு அரற்றினான்.

சமரின் நடவடிக்கை அவர்களுக்கு கிலி பிடிக்க வைத்தது.

ஏழு வயது சிறுவனாக அவன் முதன் முதலில் வலியோடு அனுபவித்த தோற்றம் கண்முன்னே வந்து அவரை ‘மீண்டுமா?’ என நடுங்க வைத்தது.

“என்னப்பா?” ரேவதி புரியாது கேட்க,

சீனு கண்களை மூடிக்கொண்டு வேகமாக அனைத்தும் சொல்லிவிட்டான்.

“அய்யோ மகி!” ரேவதி கூவலோடு மயங்கி சரிந்திட, சீனு தாங்கி பிடித்தான்.

சுந்தரம் தன் கையில் குழந்தையென துவண்டு இருப்பவனை நெஞ்சோடு கட்டிக்கொண்டு கதறினார்.

“மாமா… லட்டு!”

உதடு பிதுக்கி அழும் தன் குழந்தையை தேற்றும் வழி தெரியாது சுந்தரம் கலங்கி தவித்தார்.

மகள் இல்லையென்று பார்ப்பதா இல்லை மகனாக இருப்பவனின் நிலை முன்பு போல் ஆகிவிடுமோ என்று எதற்கு பார்ப்பதென தெரியாது வதை கொண்டார்.

__________________________

எப்படி தேறுதல் அடைந்தனர் என்று சொல்லிட முடியாது மூவரும் தங்களில் ஒருவருக்காக ஒருவரென்று பார்த்து அழுகையை மறைத்து வீடு வந்து சேர்ந்தனர்.

தினேஷை ரியாவிடம் ஒப்படைத்து விட்டு, சீனுவும் சமரின் நிலையை சிறு வயது முதல் அறிந்து அவனுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரையும் கூட்டிக்கொண்டு சமரின் வீடு வந்து சேர்ந்தான்.

சமர் கூடத்து தரையில் சுருண்டு கிடக்க…

சுந்தரும், ரேவதியும் ஆளுக்கொரு மூலையில் முடங்கியிருந்தனர்.

சமரின் கண்ணீர் தரையை நனைத்துக் கொண்டிருந்தது.

“சமர்…” மருத்துவர் பலமுறை அழைத்திட அவனிடம் பதில் இல்லை. சிறு அசைவும் இல்லை.

அங்கு சுவரில் மாட்டியிருக்கும் தன்னுடைய திருமண புகைப்படத்தில், தன் தோள் சாய்ந்திருக்கும் தன்னுடைய லட்டுவையே இமை சிமிட்டாது பார்த்திருந்தான்.

கருவிழியும் அசைவின்றி இருக்க, மருத்துவர் பயம் கொண்டு சமரின் நாடி பிடித்து பார்த்து ஆசுவாசம் கொண்டார்.

சமரின் நெஞ்சம் ஏறி இறங்காது அமைதியாக இருந்திட, அங்கு கை வைத்து அழுத்தம் கொடுத்த மருத்துவர் அவனது உடல் சில்லிப்பில் கையை வேகமாக எடுத்திருந்தார்.

“டாக்டர்!”

சீனு அவர் பதறி இரண்டடி பின் நகர்ந்ததில் என்னவென்று அருகில் வந்தான்.

சீனுவின் பதட்டமான குரலில் ரேவதியும், சுந்தரும் கூட என்னவென பார்வை மாற்றி ஏறிட…

“ஐஸ் மாதிரி உறைஞ்சிருக்கான்” என்ற மருத்துவர், “ஏசி ஆஃப் பண்ணு சீனு” என்றார்.

“டாக்டர் இங்கு ஏசியே இல்லை” என்று சீனு சொல்ல… “அப்போ” என்று சமரின் அருகில் அமர்ந்த மருத்துவர், அவனது உள்ளங்கை பிடித்து தேய்க்க, அவரின் சூடு அவனில் கடத்துவதற்கு பதிலாக, அவனது சில்லிப்பு அவரின் உடல் பரவியது.

“பெட்ஷீட் கொண்டு வாங்க” என்றவர், “இப்படியே விட்டால் விறைத்து இறந்துவிடுவான்” என்க, சன்னல் கதவு தானாக திறந்து வேகமாக மூடியது.

அடுத்த நொடி சமரின் உடல் சீரான வெப்பம் கொண்டது.

பார்த்திருந்த நால்வருக்கும் அதிர்ச்சி.

Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
Scroll to Top