இருள் நிழலாய் நானே 2

இருள் நிழலாய் நானே 2

எட்டு மாதங்களுக்கு பின்னர்…

மெத்தையில் படுத்திருந்த சமரின் உடல் சட்டென்று வியர்த்துக்கொட்டிட, கண்கள் சுருக்கி தலையை இடவலமாக அசைத்தவனால் இமைகளை திறக்க இயலவில்லை.

மீண்டும் அதே கனவு,

அவனால் கத்திட முடியவில்லை. சுவாசம் சீராக இல்லை. கால்கள் மெத்தையில் தேய்ந்தது.

கனவின் தாக்கம் இன்று கொஞ்சம் அதிகமாகவே இருந்தது போலும்,

“லட்டு” என்று வீறிட்டு எழுந்தவனின் உடலில் அத்தனை சில்லிப்பு.

தலையணை பக்கத்திலிருந்த ரெக்கார்டரை எடுத்தவன், அதனை ஆன் செய்தான்.

“அத்து…” அவனது லட்டுவின் குரல். அறையை மட்டுமல்ல, அவனது மனதையும் நிறைத்திட மூச்சினை இழுத்து வெளியேற்றினான்.

மெல்ல இமை திறந்தான்.

“உன்னோட தான் இருக்கேன் அத்து.

“உன் பக்கத்தில் இருக்கேன்.

“உன்னோட நிழல் தான் நான். பயப்படாத அத்து… ஒண்ணுமில்லை.

“நான் இருக்கேன்… நான் இருக்கேன். உன் கூடவே” என மகிழாவின் குரல் தொடர்ந்து ஒலித்திட, திடமாக அமர்ந்து இருளுக்கு தன்னை பழக்கினான்.

அருகில் எட்டி சுவற்றில் மின் விளக்கின் பொத்தானை அழுத்தினான்.

சீரான வெளிச்சம் அறையெங்கும் பரவிட, படுக்கைக்கு நேரெதிர் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த தன்னனுடைய லட்டுவின் புகைப்படத்தை வெறித்தான்.

அவன் பார்வை படுமெங்கும் நிழலுருவாய் மாட்டப்பட்டிருந்தாள்.

நீண்டு விரிந்திருக்கும் அவளின் புன்னகை இனி நிஜம் காண முடியாது எனும் நிதர்சனம் அவனுக்கு வலிக்க வலி கொடுத்தது.

‘உனக்கென்னடி அவ்ளோ அவசரம்? நீயில்லமா முடியலடி. நான் எப்படி இருப்பேன்?’ சமரின் உடல் அழுகையில் குலுங்கியது.

அவனது லட்டு உயிரோடில்லை என்ற வார்த்தை கேட்டதும் உயிரற்று மரித்துப்போனான். உடல் மட்டுமே அவன் உயிருடன் இருக்கிறான் என்பதை உணர்த்தியது.

கூடும் காலியாகியிருக்கும்…

“அப்பா, அம்மாவை நீதான் பார்த்துக்கணும் அத்து” என்று அவள் சொல்லிய வார்த்தைக்காக, பெற்றோரற்ற தன்னை அரவணைத்து பாதுகாத்த இரண்டு ஜீவன்களுக்காக, கடைசி காலத்தில் அவர்களை தவிக்கவிடக் கூடாதென்பதற்காக துடிக்கும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு நடமாடுகிறான்.

சட்டென்று சன்னல் வழி சுழன்று வீசிய காற்றால், படத்தில் மாட்டப்பட்டிருந்த மாலை ஒரு பக்கம் கழண்டு தொங்கியது. படம் லேசாக அசைந்து சரிந்தது.

“லட்டு…” என்று வேகமாக எழுந்தவன், புகைப்படத்தின் முன்னே வந்து நின்றான்.

அவளது புன்னகை முகம் மெல்ல மாற்றம் கொண்டு, கண்களில் நீரை தேக்கிக் காட்டியதோ?

விழிப்படலம் முழுக்க தண்ணீர் நிரம்பியிருக்கும் மாயம்.

சமரால் நம்ப முடியவில்லை.

“மகி…” என்று காற்றாகி ஒலித்த குரலில் அத்தனை நடுக்கம்.

மெல்ல கையை உயர்த்தியவனின் விரல்கள் படத்தினை தொட்ட நொடி பணி சூழ்ந்து உறைந்தது. அடுத்த கணம் பட்டென்று பனி உடைந்து அவ்விடம் முழுக்க பனிக்கட்டி துகள்கள் சிதறி கரைந்தது.

சமரிடம் பேரதிர்ச்சி. அவனால் காணும் காட்சியை நம்ப முடியவில்லை.

“லட்டு…” என்ற வார்த்தை தவிர்த்து அவனது நா வேறொன்றையும் உச்சரிக்கவில்லை.

முயன்று, திக்கித்திணறி…

“இங்க… என் பக்கத்துல இருக்கியா லட்டு?” எனக் கேட்டுவிட்டான்.

மகிழாவின் புகைப்படத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்த வண்ண மின் விளக்கு அணைந்து ஒளிர்ந்தது.

சமர் அதிர்ச்சியில் சுவரோடு ஒண்டினான்.

படத்தில் மகிழாவின் விழியில் தேங்கி நின்ற கண்ணீர் கன்னம் வழிந்தது.

வீசிய பெரும் காற்று அமைதி கொண்டது. பனி சிதறலால் உண்டாகியிருந்த ஈரமெல்லாம் மறைந்தது.

“லட்டு…!”

சமரின் நினைவுகள் எட்டு மாதத்திற்கு முன் சென்றது.

“நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா?”

மகிழா கேட்டதை சமரால் நம்ப முடியவில்லை.

நியாயத்திற்கு சமர் மகிழ்ந்திருக்க வேண்டும். ஆனால் அவனால் முடியவில்லை. அப்பட்டமான அதிர்வை மட்டுமே அவனது முகம் காட்டியது.

சமரின் கண்களில் மட்டுமே சிறு மின்னல்.

அதுவும் நொடி நேரம் மட்டுமே வந்து சென்றது. தன்னையே தன் உணர்வுகளை அவதானித்த படியே பார்த்து இருக்கும் மகிழாவின் பார்வையில் தன்னை மீட்டுக் கொண்டவன்,

“விளையாடாத மகி” என்று நகர்ந்தான். அவனால் அடிவைத்திட இயலாது போனது.

மகி கரம் பற்றி நிறுத்தி இருந்தாள்.

“நான் ப்ளே பண்ணல. சீரியஸ்… என்னை கல்யாணம் பண்ணிக்கோ அத்து” என்றாள்.

“லட்டு என அவளின் முன் தரையில் கால் குற்றி அமர்ந்த சமர்,

“எனக்காகவா?” எனக் கேட்டான்.

சற்றும் தாமதியாது இல்லையென தலையசைத்த மகிழா தான் அமர்ந்திருக்கும் இருக்கையின் விளிம்பில் படிந்திருக்கும் சமரின் கரத்தை எடுத்து தன்னிரு கைகளின் விரல்களுக்குள் பொத்திக் கொண்டாள்.

சமரின் விழிகள் இரண்டும் அவள் முகத்தையே பார்த்தவாறு இங்கும் அங்கும் உருண்டது.

அவனது அலைபாயும் விழிகளை கூர்ந்து தன் பார்வையால் நிலைநிறுத்திய மகிழா “ம்ம்… எனக்காக” என்றாள்.

“உனக்காகவா?”

சமர் புரியாது வினவினான். அவன் தான் ஒவ்வொன்றிற்கும் மகியை எதிர்பார்த்து இருக்கிறான். அப்படியிருக்க அவளுக்காக என அவள் சொல்வதில் அவனுக்கு குழப்பம். நிச்சயம் அவளுக்கு அவன் மீது காதலில்லை என்று அவனுக்குத் தெரியும். அப்படியிருக்க மகி எனக்காக என்று சொல்வதை அவனால் எப்படி எடுத்துக்கொள்ள முடியும்?

“எனக்காக… உன்னால் யாருமில்லாமல் இருக்க முடியாமல் இருக்கலாம். ஆனா, எனக்கு சமரில்லாமல், என் அத்து இல்லாமல் முடியாது. உனக்கு நான் வேணுமா வேணாமா கேட்கல… எனக்கு நீ வேணும் கேட்கிறேன்” என்றாள்.

“மகி…”

“என்னடா முடியாதா?” எனக் கேட்டவள், “ரொம்ப தான் யோசிக்கிற? உனக்கு என்னைவிட வேற நல்லப்பொண்ணு கிடைப்பளாடா?” என்றாள். புருவத்தை ஏற்றி இறக்கி.

“அது வேணா உண்மை தான்” என்ற சமர், “லவ் இல்லாம எப்படிடி” எனக் கேட்டான். அவள் மீது கொள்ளை காதலை இதயத்தில் வைத்துக் கொண்டு.

“ஹோ… ஏசிபி’க்கு லவ் வேணுமா?” என இழுத்துக் கேட்டவள்… “அப்போ அத்து மகியை லவ் பண்ணலையா?” என்றாள்.

நொடியில் அவள் கேட்டதில் தடுமாறினான். புரையேறிட, தலையில் அவளே தட்டிக் கொடுத்தாள்.

“அப்போ அத்துக்கு மகி மேல லவ்?” என கேள்வியாக நோக்கியவள், “சொல்லியிருக்கலாமே?” என்றாள்.

சமரிடம் பதிலில்லை.

“என்னை விட்டுக்கொடுத்தால் உனக்கு யாரும் தியாகிப்பட்டம் கொடுக்கிறன்னு சொன்னாங்களா என்ன?” என்று சமரின் தலையிலே ஓங்கிக் கொட்டியிருந்தாள்.

“ச்சோ… வலிக்குது லட்டு” என்று சமர் முகம் சுருக்கிட, அவளே கொட்டிய இடத்தில் தேய்த்தும் விட்டாள்.

“எப்பொலேர்ந்து?”

“தெரியல… ஆனா, மகின்னா அத்துக்கு ரொம்பவே இஷ்டம். அப்படி பிடிக்கும்” என்றான். அவளின் கண்களை பார்த்து.

“முன்னவே சொல்லியிருந்தா நானும் என் லவ்வை எப்பவோ தெரிஞ்சிட்டு இருந்திருப்பேனே அத்து” என தன் காதலை அவனே எதிர்பாராத வகையில் சொல்லிவிட்டாள்.

“லட்டும்மா!” சமரின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன.

“எஸ்… அம் இன் லவ் வித் யூ அத்து” என்றவள், “நிச்சயமா உன் நிலை வைத்து வந்தது இல்லை. இன்னொருத்தன் என்கிட்ட உரிமையா இனி நடந்துக்குவான் அப்படிங்கிற சூழல் நிஜமாகப்போகுதுன்னு தெரியும் போது தான், நான் உன்னை எவ்ளோ லவ் பண்றேன்னு புரியுது” என்றாள்.

தன்னவளும் தன்னை நேசிக்கிறாள். அவளது வாய்மொழியாகவே கேட்டும் விட்டான்.

தன் இதயம் சில்லென்று உறைய மூச்சுக்குத் தவித்தவனாக காற்றினை குவித்து வெளியேற்றிட, அவனை ஆசுவாசப்படுத்தும் பொருட்டு, தனது உள்ளங்கையை அவனின் இதயத்தில் வைத்தாள் மகிழா.

“என்னடா…?” என்றவள் நீவிவிட… அவனிடம் பேரவஸ்த்தை.

முதல் தொடுகை அல்ல. ஆனால் இத்தருணம்… அவளின் தொடுகையை சமரால் சாதாரணம் போல் கடக்க முடியவில்லை.

“ம்ப்ச்… மொத கையை எடு நீ” என்றவன், தான் விலகியும் இருந்தான்.

“என்னோட நிலைக்காக உன்னை கூடவே வச்சிக்க லவ்வுன்னு சொல்றேன்னு யாரும் சொல்லிட்டா… என்னால் முடியாதுடி” என்றான்.

“யாரோவா? இல்லை நானா?”

“ஹேய்…”

“பின்ன என்னடா? நானும் உன்னை லவ் பண்றேன் சொல்லுறேன். அது உன் மண்டைக்கு ஏறுதா?” என காட்டமாக வினவினாள்.

“இப்போ எப்படி டா? அத்தை மாமா என்ன நினைப்பாங்க?” அவனால் ஏற்கவும் முடியவில்லை, அழுத்தமாக முடியாது என்று சொல்லவும் முடியவில்லை. நன்றி உணர்வில் காதலை கூட வெளிப்படுத்தாது இருக்க… காதலே நீ வேண்டும் என வரும்போது அவனால் எப்படி வேண்டாம் என சொல்ல முடியும்? ரேவதி, சுந்தர் நினைத்து தயங்கினான்.

“என்னை கட்டிக்க இவ்ளோ யோசிக்கிற? உன் மூஞ்சிக்கு நான் ரொம்பவே அதிகம் டா” என்றவள், “நீ தயங்கிக்கிட்டே இரு. நான் அம்மா, அப்பாகிட்ட பேசிட்டு வந்திடுறேன்” என நகர்ந்தவளை பிடித்து நிறுத்தினான்.

“இருடி… குளிச்சிட்டு வரேன்” என்று சமர் அறைக்குள் செல்ல… மகியும் பின்னால் சென்றாள்.

குளியலறைக்குள் புகுந்த சமர் கதவினை திறந்து வைத்துக்கொண்டு குளித்திட, மகி அவனிடம் பேசியபடி இருந்தாள்.

குளித்து முடித்து இடையில் கட்டிய துண்டுடன் சமர் வெளியில் வர,

எப்போதும் சமர் அந்நிலையில் வரும்போது கண்டு கொள்ளாதவளாக எழுந்து கூடத்துக்கு நகர்ந்திடுபவள் இன்று அசையாது அமர்ந்திருந்தாள். அவனையே பார்த்தவாறு.

அவளின் பார்வையில் கூச்சம் கொண்டவன்… “என்னடி அப்படி பாக்குற?” என மற்றொரு துண்டினை எடுத்து உடலில் போர்த்திக் கொண்டான்.

“என்னடா இப்படி இருக்க?” என்று எழுந்து அவனருகில் வந்த மகி,

“எப்பவும் கவனிச்சு பார்த்தது இல்லை. கூடவே இருந்ததால உன்னை சைட்டும் அடிச்சது இல்லை. இன்னைக்குதான் நல்லா நோட் பண்றேன்” என போட்டிருந்த துண்டினை அவன் சுதாரிக்கும் முன்பு உருவியிருந்தாள்.

“மகி என்ன பண்ற நீ?” என்றவன், “பர்ஸ்ட் நீ வெளியில் போ” என கைகாட்டினான்.

“நான் போனா… அடுத்த செக் லட்டுன்னு கத்துவடா” என்று அவனது திண்ணிய மார்பில் மகி தன் விரல்களை வைத்து மெல்ல வருட, சமரின் கண்கள் தானாக மூடிக்கொண்டது.

“யூ லுக்கிங் டூ ஹாட் டா. எப்படி உன்னை இப்படி பார்க்காமல் விட்டேன்” என்ற மகியின் விரல்கள் ஆங்காங்கே நீர்த் திவளைகள் பூத்திருந்த அவனது தோளில் ஊர்ந்தது.

“உன்னை லவ் பன்றன்னு தெரிஞ்சதும்… என் கண்ணுக்கு நீ வேற மாதிரி தெரியிரடா” என்றவள், பட்டென்று அவனது கன்னத்தில் இதழ் பதித்திருந்தாள்.

“லட்டு… பிளீஸ் டி…” காற்றாக ஒலித்தது சமரின் குரல்.

காதலை பகிர்ந்து கொண்டதும் சட்டென்று அவள் காட்டும் அதீத நெருக்கம், அவனுள் தீ மூட்டியது.

இரவு ஒன்றாக உறங்கும் நேரங்களில், அவளின் ஆடை எக்குத்தப்பாக விலகி பார்த்திருக்கிறான். அப்போதெல்லாம் தோன்றாத உணர்வு, அவளின் ரசனையான சிறு தீண்டலில் உண்டானது.

தவித்துப் போனான்.

“லட்டு…”

“ஓகே… ஓகே…” என்று நகர்ந்தவள், “நீ ட்ரெஸ் வியர் பண்ணு. பட், நான் வெளியில் போகமாட்டேன்” என சட்டமாக அவளது மெத்தையில் அமர்ந்து கொண்டாள்.

“ரொம்ப ஓவரா பன்றடி” என்றான்.

“என்ன ஓவர்… ஹான்?” என்றவள், “நமக்கு கல்யாணம் ஆகி, அதெல்லாம் முடிந்தபிறகும் என்னை வெளியில் போக சொல்லுவியா? இல்லைதானே!” என்று புருவம் உயர்த்தியவள், “இப்போவே இந்த செகண்டில் இருந்து பழகிக்கோடா” என்றாள்.

“எதே…” என்று அதிர்ந்தவன், அவளது அதிரடியை ரசிக்கவே செய்தான்.

தன் காதல் சமர் என்று உணர்ந்தது முதல், அவனும் தன்னை நேசிக்கிறான் என்பது தெரிந்தது முதல், அவளிடம் இயல்பாய் தன்னவன் என்கிற அதீத உரிமை. அதனை மறைத்து வைக்கத் தெரியாது வெளிப்படையாகவே காட்டவும் தொடங்கியிருந்தாள்.

“இவ்ளோ நாள் வேஸ்ட் பண்ணிட்டேன் அத்து… அப்பா மூணு வருசத்துக்கு முன்ன எனக்கு கல்யாணப்பேச்சு ஆரம்பிச்சப்போவே எனக்கு ஏன் நம்ம காதலிக்கிறோம் ஸ்ட்ரைக் ஆகல?” எனக் கேட்டு, “உன் மேல இந்த செக் நிறைய லவ் பொங்குதே! அடக்கவே முடியலடா” என தன் நெஞ்சத்தை நீவினாள்.

அவளின் அவஸ்தை அவனுள் பேரின்பமாய்.

‘இதற்கு மேல் எவ்வளவு சொன்னாலும் அவள் கேட்கப்போவதில்லை’ என சமர் தான் இறங்கி வந்தான்.

“அட்லீஸ்ட் கண்ணாவது மூடு லட்டு” என்றவன், அவள் பார்க்க அவள் முன்பே தான் முடிந்தளவு தன்னை மறைத்துக்கொண்டு ஆடை மாற்றினான்.

சமர் காக்கிச்சட்டை அணிந்து பொத்தான்களை பூட்டிட முயல, மகியே வந்து அவனது கையை தட்டிவிட்டு, தான் பூட்டினாள்.

“இதுவும் நல்லா தான்டா இருக்கு” என்றவள்,

“லவ் மேக் பண்ணலாமா டா” என அவனது உதட்டை இழுத்து கண்களில் மையலோடு கேட்டாள்.

மகி கேட்டதில் சர்வமும் பதறியவன்,

“மகி நீ என் லட்டுவே இல்லை. முதலில் வெளியில் போவோம் வா” என அவளை இழுத்துக்கொண்டு வெளியில் வந்தான்.

அவனது பதற்றத்தில் மகியிடம் அப்படியொரு சிரிப்பு.

“இதெல்லாம் நடக்கும் தானே? எதுக்குடா இப்படி ஓடுற” என்றவளின் சிரிப்பு மட்டும் நிற்கவில்லை.

“என்னென்னவோ தோனுதுடா உன் பக்கத்தில்” என்றவள், “காக்கியில் படு மாஸாவே இருக்க அத்து நீ” என அவனின் கன்னம் பற்றி இழுத்தாள்.

“ஹேய்… விடுடி” என்றவன், “இன்னும் அத்தை மாமாகிட்ட சொல்லல. ரூபேஷ் வீட்டில் எப்படி எடுத்துப்பாங்க தெரியல. அதுவரை கொஞ்சம் பொறுமையா இருடா” என்றான்.

“ம்ம்… பேசலாம். அதுக்கு முன்ன சாப்பிடுவோம். எனக்கும் டைம் ஆகுது” என்றவள், அவனை அமர வைத்து, இருவருக்கும் ஒரே தட்டில் ரேவதி கொடுத்த உணவினை எடுத்து வைத்து, அவனுக்கு ஊட்டியபடியே அவளும் உண்டு முடித்தாள்.

அடுத்த நிமிடம் இருவரும் தத்தம் பணிக்கு ஒரே இருசக்கர வாகனத்தில் கிளம்பியிருந்தனர்.

முதலில் காவல் நிலையத்தில் இறங்கிக் கொண்ட சமர், அவளுக்கு விடை கொடுக்காது, உள்ளேவும் செல்லாது அவளையே பார்த்து நின்றான்.

“என்னடா?”

“லவ் யூ டி.” சமர் காற்றுக்கும் கேட்குமோ எனும் விதமாக மெல்லிய ஒலியில் சொல்லிட…

“லவ் யூ டூ அத்து…” என இரு கைகளையும் நீண்டு விரித்து கத்தி சொல்லியிருந்தாள் மகிழா.

“அடியேய்…” சட்டென்று அவளின் வாயினை கை வைத்து பொத்திய சமர், உள்ளே பார்த்துக்கொண்டே “இது ஸ்டேஷன் லட்டு” என்று பார்வையால் அதட்டினான்.

“இனி என் லவ்வுக்கு பழகிக்கோ அத்து செல்லம்” என்றவள், “வாய்ஸ் ரெக்காடர் இருக்குல? எதுவாயிருந்தாலும் கால் பண்ணு” என காற்றில் இதழ் குவித்து முத்தத்தை அவனுக்கு பறக்கவிட்டவள், இருசக்கர வாகனத்தில் பறந்திருந்தாள்.

சமர் அலுவலகத்தின் உள்ளே நுழைய, அனைவரும் எழுந்து நின்று சல்யூட் அடித்திட சிறு தலையசைப்பில் ஏற்று தனது இருக்கைக்குச் சென்றான்.

உதவி ஆய்வாளர் சீனுவை அழைத்து,

“கோர்ட்டுக்கு போக வேண்டிய கேஸ் எல்லாம் போயாச்சா?” எனக் கேட்டான்.

“இப்போ தான் சித்ராவும், மணி அண்ணாவும் கூட்டிட்டு போனாங்க சார்” என்ற சீனு சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மேம்பாலத்திற்கு கீழே ஒரு பெண்ணின் உடல் கோணி பைக்குள் கட்டப்பட்டு கிடப்படதாக அழைப்பு வந்தது.

சமர் பதற்றம் கொள்ளாது, “அடுத்த கொலை நடந்தாச்சு… வாங்க போவோம்” என சீனுவை அழைத்துக்கொண்டு உடல் கிடக்கும் இடத்திற்கு விரைந்தான்.

error: Content is protected !!
Scroll to Top