இருள் நிழலாய் நானே 20
கண் முன்னே காணும் காட்சியில் சீனு அரண்டு விட்டான்.
“சமர்…” குரலின் இழுப்பிற்கு இணையாக சீனுவின் கண்கள் விரிந்தன.
“என்னடா இது. சட்டுன்னு இப்படி பிணம் எரியுது.”
ஆலமரத்திற்கு முன்னிருக்கும் மூன்று பனை மரத்திற்கு அருகில் நல்ல அலங்காரத்தில் வெண்மை நிற குதிரை நின்றிருந்தது.
“என்னடா இது யூனிகார்ன். இப்பவும் இதெல்லாம் இருக்கா?” எனக் கேட்ட சீனு, “வாய் திறந்து எதும் சொல்லு மச்சான். எனக்கு பயந்து வருது” என்றான்.
அப்போதும் சமர் தன் கூரியப் பார்வையில் கண் முன் நிகழும் காட்சியை மெல்ல அறிவு வழி உள்வாங்கிக் கொண்டிருந்தான்.
“இது யூனிகார்ன் இல்லை சீனுண்ணா. விங்ஸ், மூக்கில் கொம்பு இல்லை பாருங்க” என்றாள் மகி.
“நீ கருப்பு குதிரை தானே சொன்ன?” என்றான் சீனு.
“நானும் வெள்ளை குதிரை இன்னைக்குதான் பார்க்கிறேன்” என்ற மகி, “அது மேல ஒருத்தன் உட்கார்ந்து வருவான். அவனை காணும்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
இமைப் பொழுதில் வெண்மை நிற குதிரை அடர் கருப்பு நிறமாக மாற்றம் கொள்ள… அதன் மேல் தலையில்லா உருவமும் தோன்றியது.
“சமர்…” நண்பனின் பின்னால் பயந்து ஒளிந்தான் சீனு.
“பயப்படாத சீனு அது நிஜமில்லை. போலி பிம்பம். அறிவியல் மாயாஜாலம்” என்றான் சமர்.
“புரியல.” மகி மற்றும் சீனு ஒன்றாகக் கூறினர்.
“எல்லாமே புரியும்” என்று சமர் சொல்லும்போதே மரத்தில் எரிந்து கொண்டிருந்த பிணம் மெல்ல மறைந்தது.
அதைத்தொடர்ந்து மலைப்பாதை நோக்கி ஓடிக் கொண்டிருந்த குதிரையின் சலங்கை சத்தமும் நின்றது. குதிரையும் மறைந்து காணாமல் போனது.
“என்னடா நடக்குது இங்க?”, சீனு.
“எதையோ மறைக்க மக்களை முட்டாளாக்கி இருக்காங்க” என்ற சமர், “நம்ம கண்ணுக்குத் தெரியாத தெரியிற எல்லாமே யாரோ ஒருவனின் அறிவு சார்ந்த பிம்பம். அதுக்கு பயப்பட வேண்டிய அவசியமில்லை. சாதாரணமா இரு சீனு. இனி இந்த இருட்டுக்கும் பயமில்லை” என்ற சமர், “இந்த பாறைக்கு அந்தப்பக்கம் அருவி சத்தம் கேட்குது. பாதையும் அங்க தான் வழி காட்டுது. டைம் வேஸ்ட் பண்ணாம நடக்கலாம்” என்றான்.
“விடியட்டும் அத்து…”, மகி தடுத்தாள்.
“அவ்ளோ பொறுமை இல்லை லட்டு. எனக்கு தும்பை சொன்னது உண்மையா இருக்கும் பட்சத்தில் உன்னை உயிரோடு பார்க்கணும்” என்று அடியை முன் வைத்தான்.
மகி சீனுவை பார்த்தாள்.
“இந்த இருட்டில் தானா போய் சிக்கிக்கப் போறோம் சமர்.” சொல்லிய நண்பனை திரும்பி பார்த்த சமர்,
“அப்போ நீ இங்கவே இரு” என்றான்.
சமர் தனித்து சென்றிடமாட்டான் என சீனு பாறை மீது அமர, அவனோ பல அடிகள் முன் சென்றிருந்தான்.
“என்ன மகி இவன் போயிட்டே இருக்கான். தனியா இருக்க பயமில்லையா அவனுக்கு” என்ற சீனு, மகியிடம் பதிலை எதிர்பார்க்காதவனாக ஓடினான்.
சமருக்கு தனித்திருப்பதால் உண்டாகும் பயம் சரியாகிவிட்டதா என்றால் அவனுக்கும் தெரியாது.
ஆனால் இங்கு தன்னை இருவரும் தனித்து விட்டுவிட மாட்டார்கள் எனும் நம்பிக்கை சமரை முன்னோக்கிச் செல்ல வைத்தது.
அத்தோடு காற்றில் கலந்தாலும், தன்னுடைய மகி தன்னோடு எப்போதும் இருந்திடுவாள் என்று சமரின் ஆழ் மனம் நம்புகிறது.
நிலவு வெளிச்சத்தில் பால் போன்று அத்தனை வெண்மையாக கண்களுக்குத் தெரிந்தது… பெரும் ஆர்ப்பரிப்போடு கொட்டிகொண்டிருந்த அருவி.
“என்னடா இடி முழக்கமா இருக்கு?” என்று தனக்கு முன் சென்று கொண்டிருந்த சமர் நின்று விட்டதும், அவனைத் தாண்டி எட்டிகொண்டு பார்த்த சீனு ஆச்சரியத்தில் விழி விரித்தான்.
“வாவ்… சூப்பரா இருக்கு” என்ற சீனு, இரவு நேரம் என்பதையும் மறந்து, அருவி நீர் சமதளப் பரப்பில் ஓடிடும் பகுதியில் பாய்ந்து குதித்தான்.
அடுத்த நொடி, “அய்யோ அம்மா” என்று வலியில் கத்தியிருந்தான்.
நீருக்குள் விழுந்தவனின் மேனியில் ஒரு துளி ஈரம் கிடையாது.
கண்ணின் காட்சி மட்டுமே தண்ணீராய் ஓடிக் கொண்டிருந்தது. நிஜத்தில் அது செடிகள் மண்டிய மலையின் தரைப் பகுதி.
விழுந்த வேகத்தில் சீனுவுக்கு உடலில் நல்ல அடி. வெளிகாயம் எதுவும் இல்லையென்றாலும், அவனால் நிலையாக ஊன்றி நடக்க முடியவில்லை.
“நல்ல அடி சமர்.” தன்னை தூக்கி நிற்க வைத்த சமரிடம் சொல்லிய சீனு, கை, கால்களை நன்கு உதறி நேராக நின்றான்.
“நெஞ்சில் பயங்கர வலி மச்சான்” என்ற சீனு மூச்சினை ஆழ்ந்து சுவாசித்து…
“நீயெல்லாம் என்ன பேய். நான் குதிச்சதும் அது தண்ணியில்லைன்னு தெரிஞ்சதும் அப்படியே காத்துல என்னை பிடிச்சிருக்க வேண்டாமா?” என்றான். வலியில் பேச தெரியாது பேசினான்.
“நானும் இப்போ தான் இங்கு வரேன் சீனு அண்ணா. எனக்கும் தெரியாது” என்ற மகி, “மனித சக்திகளை விட ஆன்மாக்களுக்கு சக்தி குறைவு தான். எங்களிடம் இருக்கும் கட்டுப்பாடு உங்களுக்கு இல்லை. அதனால் தான் எங்களால் செய்ய முடியும் வித்தைகளை உங்களால் செய்ய முடியவில்லை” என்றாள்.
“நீ ஒன்னும் ஆன்மா கிடையாது” என்ற சமர், “கொஞ்சம் சும்மா இரேன் டா… அதான் ஒன்னும் ஆகலையே” என்று நீர் மேலிருந்து கொட்டுவதை தலையை உயர்த்தி பார்த்தவனாக அதற்குள் புகுந்திட, பாறையில் இரும்பிலான பெரும் கதவு தெரிந்தது.
“என்னடா இது?”, சீனு.
“இங்க நமக்கு பல ஆச்சரியம், அதிர்ச்சி இருக்கும்ன்னு வந்தப்போவே தெரிஞ்சிடுச்சு. அதனால் ஒவ்வொரு முறையும் நீ இப்படி ஷாக் ஆக வேண்டிய அவசியமில்லை” என்ற சமர், “இது தெரியக் கூடாதுன்னு தான் இந்த அருவி செட்டப்” என்றான்.
“எனக்கு தலை வெடிக்குது மச்சி” என்ற சீனு, “இதெல்லாம் சாத்தியமா?” எனக் கேட்டான்.
“நீ த்ரீ டி படிச்சது இல்லைன்னாலும் கேள்விப்பட்டிருப்பியே” என்ற சமர், “இது ஹாலோகிராம் ஆர் ஹாலோகிராபி. இந்தளவுக்கு நமக்கு தெரிஞ்சா போதும். உள்ள ஆராய்ந்து பார்க்க நினைச்சா அறிவியல் எப்போதும் குழப்பம் தான்” என்றான்.
[(ஹாலோகிராம்) (முப்பரிமாணம்)
முப்பரிமாண ஒளிப்படவியல் என்பது ஒன்றின் முப்பரிமாண ஒளிப்படத்தை சேமித்து இன்னொரு இடத்துக்கு பரிமாறக்கூடிய தொழில்நுட்பத்தைக் குறிக்கிறது. ஒரு பொருளின் அனைத்து பரிமாணங்களையும் இது பிரதிசெய்கிறது. அதனால் ஒரு பொருளை நேரடியாக பார்ப்பதற்கு இணையாக ஒவ்வொரு கோணத்தில் அதன் தோற்றத்தை இது தோற்றுவிக்கிறது.
ஒளி வழியாக நம் கற்பனைகளுக்கு நிஜ உருவ வடிவம் காட்சி சிதறலாக கொடுத்திட முடியும். (VFX – திரைப்படத் தொழில் நுட்பத்தில் பெரிதும் பங்கு வகிக்கிறது.]
“என்னவோ… ஆக மொத்தம் அறிவியல் அறிவு வச்சு, நிஜத் தோற்றம் உருவாக்கி மக்களை நம்ப வச்சிருக்காங்க… அப்படித்தானே?” என்றான் சீனு.
“அதேதான்” என்ற சமர், “நீ இந்த புகை உருவம் இல்லாம என் பக்கத்திலேயே இரு மகி. உன்னோட ஆரா அவங்களுக்குத் தெரியக் கூடாது தும்பை சொன்னாள்” என்றான்.
சட்டென்று மகி தன் அருவத் தோற்றத்தை மறைத்துக் கொண்டாள்.
“உள்ள என்ன இருக்கும் தெரியல சமர். பார்த்து” என்ற சீனு, “இந்த கதவைத் தாண்டி எப்படி போறது” எனக் கேட்கும் போதே, பல காலடி சத்தங்கள் இருவரின் காதுகளையும் நிறைத்தது.
“அத்து இதே மாதிரி தான் எங்களுக்கும் கேட்டுச்சு” என்று மகியின் சத்தம் மட்டும் சமரின் காதில் ஒலித்தது.
சமர் தன் பார்வையை தரையில் அழுத்தமாக பதித்தான்.
சருகுகள் மிதிப்பட்டு அசைந்தது.
“கீழ கிடக்கும் இலை அசைவதில் உன் பனியை வீசு மகி” என்று தன் உதடு பிரியாது முணுமுணுத்தான் சமர்.
மகியும் சமர் சொல்லியதை செய்திட,
தண்ணீர் உருவமாக பல தடியர்கள் காட்சிக் கொடுத்தனர்.
“டேய் மனுஷங்கடா” என்ற சீனு, “இவனுங்களுக்கா பயந்து பயந்து ஒவ்வொரு அடியும் வைத்தோம்” என்றான்.
“அதான் இப்போ இவனுங்க மனுஷங்க தெரிஞ்சிடுச்சே… போ சண்டை போடு” என்று சமர் சொல்லியதில் ஜெர்க் ஆகினான் சீனு.
“எதே சண்டை போடுறதா? மலை மாடுங்க மாதிரி இருக்கானுங்கடா” என்ற சீனு, “ஃபைட்லாம் உனக்கு தான் செட் ஆகும். நானெல்லாம் ஜெனரல் ஆடியன்ஸ்” என்றான்.
“அந்த சீன் எல்லாம் இங்கில்லை. என்னோட கெஸ் சரின்னா… அவனுங்களே நம்மை உள்ள கூட்டிட்டுப் போவானுங்க” என்ற சமர், “நமக்கு அவங்க கண்ணுக்குத் தெரிஞ்சா மாதிரி காட்டிக்காதே” என்றான்.
சீனு சரியென்றிட…
“இந்த கதவை திறக்க முயற்சி பன்ற மாதிரி ஆக்ட் பண்ணு” என்றான்.
“இந்த ஹாலிவுட் படத்துலலாம் வர மாதிரி உண்மையிலேயே இன்விசிபுள் ஆகலாமாடா?” வாய் பிளந்து வினவினான் சீனு.
“அதுக்கும் எதும் வச்சிருப்பானுங்க. கெட்டது செய்ய பயன்படுத்துற அறிவு, அறிவியலை நல்லது செய்ய பயன்படுத்தலாம். நாடாவது முன்னேறும்” என்ற சமர், “கதவுல கையை வைடா” என்றான்.
இருவரும் சாவி நுழையக்கூட துவாரம் இல்லாத அந்த கதவில் கையை வைத்து தடவிக் கொண்டிருந்தனர்.
“என்ன மச்சான் பொண்ணுக்கு கிஸ் பண்ண வர மாதிரி இம்புட்டு நெருக்கமா வந்து சுத்துப்போட்டு நிக்கிறானுங்க” என சீனு சமருக்கு மட்டும் கேட்கும் வகையில் கிசுகிசுக்க…
“இப்போ அவனுங்க நம்ம ரெண்டு பேரையும் தூக்கிட்டுப் போவானுங்க… பயந்து கத்துற மாதிரி கத்து” என்று சமர் சொல்லும் போதே, சீனுவின் இருபக்கமும் இரண்டு பேர் வந்து அவனது புஜம் பற்றித் தூக்கியிருந்தனர்.
உண்மை தெரியாது இருந்திருந்தால் சீனு காற்றில் மிதப்பதுப்போல தெரிந்திருக்கும்.
“மச்சான் என்னடா இது? யாரோ என்னை தூக்கியிருக்க மாதிரி இருக்கு. பயமா இருக்கு மச்சான். காப்பாத்து…”
“ஓவர் ஆக்டிங் பண்றான்.” முனகிய சமர், “சீனு…” என்று கத்தியபடி அவன் பின்னால் ஓடினான்.
கதவிற்கு பக்கவாட்டில் நீண்ட குகை பாதையில் சென்றனர்.
ஒவ்வொரு அடியையும் அத்தனைக் கூர்மையாக ஆராய்ந்தவாறு… சமர், பறந்து செல்லும் நண்பனின் பின்னால் பதறியவாறு காட்டிக்கொண்டு ஓடினான்.
சிறிது தூரத்தில் வழியின்றி பாறை அடைத்து நின்றனர்.
அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்த சீனு பொத்தென்று கீழே விழுந்தான்.
“அச்சோ அம்மா… தூக்கிட்டு வந்தவனுங்க பொத்துனாப்புல இறக்கி விடக் கூடாது. பிசாசுங்க” என்று வலியால் கத்திய சீனு, “நீ என்னடா வேடிக்கை பார்த்திட்டு நிக்கிற. வந்து தூக்குடா” என நண்பனை கடிந்து கொண்டான்.
சமர் குனிந்து சீனுவைத் தூக்கிட…
அவர்களுக்கு முன் பாறை மெல்ல நகர்ந்து விலகியது.
சீனு பதறி இரண்டடி பின் நகர்ந்தான்.
“இது உள்ள போகணும் டா” என்ற சமர் சீனுவை தனக்கு பின் வைத்து, கையை பிடித்துக் கொண்டவனாக உள்நோக்கி அடி வைத்தான்.
“கரெக்ட் இடத்துக்கு வந்துட்டோமா சமர்?”
“நாம வரல… எதிரி நம்மளை வரவச்சிருக்கான்” என்ற சமர், “இதுவரை வந்தது வேணும்னா நம்மோட முயற்சியா இருக்கலாம். ஆனால் இப்போ இதுக்குள்ள நம்மால் போக முடியுதுன்னா அது எதிரே இருப்பவனோட முடிவு” என்றான்.
“ஒன்னும் புரியல” என்ற சீனு, சென்று கொண்டிருந்த இடத்தை அப்போது தான் கவனித்தவனாக,
“என்னடா பாறையை குடைஞ்சு ரூம் கட்டி வச்சிருக்கானுங்க” என்றான்.
பாதை முடிந்து பெரிய வாயில் போன்று இடம் வர,
சமர் அதில் அடி வைத்த நொடி…
“வெல்கம் ஏசிபி சார்” என்று மிகவும் பழக்கப்பட்ட குரல் சமரின் நெற்றியைச் சுருங்க வைத்தது.
Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
