இருள் நிழலாய் நானே 22
அதுவரை கேட்ட செய்திகளில் உறைந்து நின்றிருந்த மகியின் ஆன்மா ஆக்ரோஷம் கொண்டு சுற்றி சுழன்றது. நொடியில் அவ்விடம் பனியாக சூழ்ந்தது.
‘மகி காம் டவுன்.’ சமர் மனதில் நினைக்க, மகியை கட்டுப்படுத்த முடியவில்லை.
தும்பை சொல்லியது போல தானின்னும் இறக்கவில்லை என்ற மகிழ்வு அடங்கும் முன்பு, ரூபேஷ் சொல்லியது, அவளை அவளது அத்துவிடமிருந்து பிரித்து அழைத்துச்செல்ல இருக்கிறேன் என்பது அத்தனை கோபம் கொள்ள வைத்தது.
“எப்படி டக்குன்னு இந்த இடம் குளிராச்சு?” விருமன் கேட்டிட,
“நெருப்பா ஒருத்தி சுத்திட்டு வந்து நம்மளை அழிக்க நினைச்சாளே, அவள மாதிரி நம்ம கையால் செத்த வேறு எந்த பேயும் வந்திருக்கும்” என்று சாதரணமாகக் கூறினான் ரூபேஷ்.
“பாரு மச்சான் ஒரு உயிரை கொல்றது அவ்ளோ ஈசியா இருக்கு இவனுங்களுக்கு” என்ற சீனு, “அவளை ஏன் கொன்னீங்க?” என்றான்.
“கிட்ட்தட்ட எங்களை மோப்பம் பிடிசிட்டாளே! அவளை கொல்லாம விட்டிருந்தால் மொத்தமும் வீணாகியிருக்கும். செத்தும் எங்களை கண்டுபிடிக்கிறேன்னு வந்தாள், எனக்கு பெருசா நம்பிக்கை இல்லைன்னாலும் என் அப்பா சொன்னாருன்னு மந்திரவாதி மூலமா எதோ பூஜையெல்லாம் செய்து அவளை தடுத்தாச்சு. அதோ அந்த செட்டப் தான் அது” என்று பல மஞ்சள் கயிறுகள் கட்டப்பட்டு பில்லி, ஏவல் செய்த தடம் போலிருக்கும் இடத்தைக் காட்டினான்.
“அதுக்கு அப்புறம் அவள் வரல… சூப்பர் நேச்சுரல் இருக்குதான் போல. அதுலையும் எதும் செய்து, பணம் பார்க்கணும்” என்ற ரூபேஷ்,
“எல்லாம் தெரிஞ்சுக்கிட்டாச்சா? ஆனால் இதையெல்லாம் வெளியில் சொல்ல நீங்க ரெண்டு பேரும் உயிரோட இருக்கமாட்டிங்க” என்றான்.
“பர்ஸ்ட் சீனு” என்ற ரூபேஷ், ஒரு மருந்தினை ஊசியில் ஏற்றி, “இதை உன் உடம்பில் செலுத்தினால், நீ கோமாவுக்கு போயிடுவ… அப்புறம் என்ன? நாங்க என்ன பண்ணுவோம் உனக்குதான் தெரியுமே” என்று சமரிடம் கேட்டு சத்தமாக சிரித்தான் ரூபேஷ்.
மெல்ல சீனுவை நெருங்கிய ருபேஷ், ஊசியை அவனது கழுத்தில் வைத்திட,
“மகி எதும் செய். அவனை தடுத்து நிறுத்து” என்றான் சமர்.
மகியும் சடுதியில் ருபேஷின் கால்களை பனியால் சிறை செய்து உறைய வைத்தாள்.
சட்டென்று நிகழ்ந்த மாயத்தால், மந்திரன் மற்றும் விருமன் என்னவென்று தங்களின் மாந்த்ரீகரை அழைத்தனர்.
அங்கிருந்த மூடிய பாறைக்கு பின்னிருந்து வந்த மாந்த்ரீகர், கண்களை மூடி ஏதேதோ உச்சரித்து கண் திறந்தார்.
“இங்க உயிருள்ள ஆன்மா ஒன்னு சுத்திட்டு இருக்கு” என்றவர், கையில் வெண்மைநிற பொடியை எடுத்து மீண்டும் மந்திரத்தை உச்சரிக்கத் துவங்கினார்.
“மகி உன்னால் மட்டும் சமாளிக்க முடியாது. அங்கிருக்கும் மஞ்சள் கயிற்றை எப்படியாவது அறுத்துவிடு. தும்பை வந்திடுவாள். நீங்க ரெண்டு பேரும் ஒன்றாக இருக்கும்போது பலம் அதிகம்” என்று சமர் மனதால் மகியிடம் பேசிட, மந்திரவாதி மந்திரத்தை சொல்லும் நேரத்தைப் பயன்படுத்தி மகி, தும்பையை கட்டுக்குள் வைத்திருக்கும் கயிற்றை அறுத்திட, சடுதியில் பனி சூழ்ந்த இடம் முழுக்க வெப்பம் பரவியது.
மகியின் கட்டிலிருந்து ரூபேஷால் அசையக்கூட முடியவில்லை.
அனலின் கோர சிரிப்பில் உண்மையில் அங்கு பேய் இருப்பதை அறிந்த ரூபேஷின் ஆட்கள் உயிருக்கு பயந்து வெப்பம் மற்றும் குளிர் ஒருங்கே தாங்காது குகையை விட்டு வெளியில் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.
“எனக்கு என்னவானாலும் பரவாயில்லை. மருந்தையும், ஃபார்முலா நோட்ஸ்சையும் எடுத்துட்டு ரெண்டு பேரும் கிளம்புங்க” என்று ரூபேஷ் கத்திட…
உன்னை அப்படியெல்லாம் எளிதாக தப்பிக்க விட்டுவிடமாட்டேன் என அனலும் குளிரும் ஒருங்கே இணைந்து தங்களின் சக்தியைக் காட்டிட, மந்திரன் மற்றும் விருமனால் நின்ற இடம் விட்டு அசைய முடியவில்லை.
தும்பைக்கு இருக்கும் பழி வெறிக்கு அவர்களை நொடியில் சாம்பலாக்கி விடுவாள். ஆனால் இதையெல்லாம் கண்ணால் காட்டிடாது யாரும் நம்பமாட்டார்கள். அதற்காகவே அவர்கள் தப்பிக்க முடியாத அளவுக்கு மட்டும் ஆட்டம் காட்டினாள்.
தும்பை கட்டிலிருந்து வெளி வந்ததுமே, மந்திரவாதியின் வாயினை தன் சக்தியின் மூலம் கட்டியிருந்தாள். அவரால் மந்திரத்தை சொல்ல முடியாது போகவே, ஆன்மாவை அவரால் அடக்க முடியாது போனது.
அவ்விடம் முழுக்க அனல் மற்றும் குளிர் கூடிக்கொண்டே போனது.
சமர் மற்றும் சீனுவின் உயிருக்கும் ஆபத்து நேரிடுமோ என அஞ்சிய மகி, இருவரின் கயிற்றை அவிழ்த்து அங்கிருந்து வெளியேறுமாறு கூறியது.
“இவங்க மூணு பேரையும் சட்டத்திற்கு முன்பு நிறுத்தணும். அதோட நீயில்லாம நான் எப்படி லட்டு போவது?” என்று சமர் கேட்டதில் மகியின் கண்ணீர் காற்றில் உறைந்து காட்சியளித்தது.
“மகியா?” என்ற ரூபேஷ், “அவள் சாகலையே! அப்புறம் எப்படி பேயா?” என்று கேட்டவன், “புரிஞ்சுது, கோமா ஸ்டேஜில் ஒரு சிலரின் இருபது சதவிகிதம் ஆரா உடலை விட்டு வெளியில் வந்து காற்றில் சுற்றும். மெடிக்கல் சயின்ஸ்” என்றான்.
“மகி உடல் எங்கடா?” சமர் உறைந்து நின்ற ரூபேஷின் சட்டையை பிடித்து உலுக்கிக் கேட்டான்.
“சொல்ல முடியாது” என்று அவன் சொல்லியதில், அனல் தன் தகிப்பைக் கூட்டிட அவ்விடம் தீ பிடிக்கத் துவங்கியது.
“ஹேய் இவனுங்களை எரிச்சிடாத” என்று சமர் கத்த…
“இருந்து என்ன பண்ணுவானுங்க?” என்ற தும்பை, “எத்தனை உயிரை சர்வ சாதாரணமா கொன்னு இருக்கானுங்க. இவனுங்களுக்கு சட்டம் கொடுக்கிற ஆயுள் தண்டனை மட்டும் போதுமா? எண்ணிக்கை இல்லாத உயிர்களின் இழப்புக்கு காரணமா இருந்த இவனுங்க, துடிச்சு சதை பிண்டம் எரிந்து வலி அனுபவிச்சு சாக வேண்டாமா? இருப்பதையெல்லாம் காட்டினாலும், நம்பக்கூடிய விஷயத்தையா செய்து இருக்கானுங்க. இல்லாத ஒன்னை சொல்லி மாட்டி விடுறாங்க அப்படின்னு ஈசியா வெளிய வந்து இதையேதான் திரும்ப செய்வானுங்க. அதுக்கு நானே என் கையால் கொன்னுடுறேன்” என்று தான் இறந்த போது கொண்ட வலியின் வேதனையில் தும்பை கூறிட…
“அவளோட ஆன்மா சாந்தி அடைய இதை செய்துதான் ஆகணும் அத்து. போலீசா இல்லாம சாதாரண மனிதனா அந்த ஆன்மாவுக்கு விமோட்சனம் கொடு” என்ற மகியின் கூற்றை சீனுவும் ஆமோதிக்க…
“மகி, ராகுல் உடல் இல்லையே டா” என்றான் சமர்.
கண்களை மூடி தன் உட் பார்வையால் அவ்விடம் அலசிய தும்பை, ரூபேஷ், மந்திரன், விருமன் மூவரையும் தன்னுடைய நெருப்பு வளையத்தில் ஒன்றாக பிடித்து வைத்தது.
மந்திரவாதியை பார்வையாலே சுட்டெரித்து பஸ்பம் செய்திருந்தது.
அதுவரை தோன்றாத பயம் மூவரையும் சூழ்ந்திட சமரிடம் உயிருக்கு கெஞ்சினர்.
“நாங்க பண்ண தப்புக்கு எங்களை கோர்ட்டில் ஒப்படைச்சிடுங்க. காலம் முழுக்க ஜேயிலிலே இருந்துக்கிறோம். இந்த பேய் கிட்ட மட்டும் விட்டுடாத சமர்” என்று மூவரும் கெஞ்சிட, “என் அம்மா அப்பாவை ஏன் கொன்னீங்க?” எனக் கேட்டான் சமர்.
“இங்க பருத்தியை பார்க்க வந்திருப்பாங்க போல, அப்போ நான் மலை பக்கம் தனியா வரதை பார்த்திட்டு என் பின்னால் வந்து இதெல்லாம் பார்த்துட்டாங்க. கொலை செய்ய வேண்டியதாப்போச்சு” என்று கொஞ்சமும் குற்றவுணர்வு இல்லாது எதோ கதை போன்று கூறினார் விருமன்.
“சரி மகி, ராகுல், வர்ஷா உடல் எங்க?”
“எங்களை இந்த பேய் கிட்ட விடமாட்டேன் சொல்லு சொல்றேன்” என்றான் ரூபேஷ்.
“சரி” என்று சமர் சொல்ல ரூபேஷ் பக்க சுவர் பாறையை காண்பித்தான். அதிலிருந்த வட்டவடிவ சிறு கல்லினை சீனு சுழற்றிட பாறை விலகியது.
அங்கு மகி, ராகுல், வர்ஷா இன்னும் இருவரின் உடல் இருந்தது.
“குடுவைக்குள் இருக்கும் எல்லாரும் உயிரோடு இருக்காங்களா?”, சமர்.
“இல்லை” என்ற ரூபேஷ், “மகி, ராகுல், வர்ஷா” என்று அவர்களுடன் இன்னும் இருவரை காண்பித்தான்.
“மத்தவங்க உடலிலிருந்து பலமுறை திசுக்கள் எடுத்தாச்சு. அவங்களை பிழைக்க வைப்பது கஷ்டம். செயற்கையாக உருவாக்கப்பட்ட கோமா… இருந்தாலும் அதிலிருந்து அவங்களை மீட்க முடியாது. ஆன்டி டோன் கொடுத்தாலும் பிரெய்ன் டெட் ஏற்பட சான்ஸ் இருக்கு” என்ற ரூபேஷை அக்கணம் கொன்று புதைக்க வெண்டுமெனதான் சமருக்குத் தோன்றியது.
எத்தனை உயிர்கள். நினைக்கவே நெஞ்சம் கனத்தது.
குடுவைக்குள்ளிருந்து எடுக்கப்பட்ட மகி, ராகுல், வர்ஷா இன்னும் இரு உடல்களுக்குள் மாற்று மருந்து செலுத்திட சில நிமிடங்களில் மகியைத் தவிர்த்து மற்றவர்கள் கண் திறந்தனர். இருப்பினும் அவர்களிடம் சாதாரண அசைவுகள் இல்லை. அதுவும் சில மணி நேரங்களில் சரியாகிவிடும். ஆனால் மகி?
சமர் தவிப்பாய் மகியின் உடலைக் கட்டிக்கொண்டு அழுதான்.
“உன்னோட உடலுக்குள் நீ போக முயற்சி பண்ணு மகி.” தும்பை சொல்லிட, மகி பலமுறை முயன்றும், அவளால் உடலைச் சுற்றி காற்றாய் அலைந்திடதான் முடிந்தது. உள்ளே நுழைந்திட முடியவில்லை.
தும்பை தன் சக்தியின் மூலம் என்ன காரணமென ஆராய, “உன் உடம்புக்குள் இன்னொரு ஆன்மா இருக்கு மகி. அது வெளியில் வந்தால் தான் உன் ஆன்மாவை உன் உடல் உள்ளிழுக்கும்” என்றது.
“இன்னொரு ஆன்மா?” சமர் கேள்வியாக இழுத்திட…
மகி உண்மை தெரிந்து கண்ணீர் வடித்தாள்.
“என்னன்னு சொல்லு லட்டு?”
“நம்ம குழந்தை” என்ற மகியின் ஆரா கதறியது.
சமருக்கு கேட்ட செய்தி விளங்கிட, மகியின் உடலை இன்னும் இறுக்கமாக அணைத்து வயிற்றில் கை வைத்து வெடித்து அழுதான்.
சீனுவுக்கும் கண்கள் கலங்கியது.
“ஏன் சொல்லல?”, சமர்.
“என்னை நம்பி இங்கு வந்த ராகுல்,வர்ஷாவுக்கு என்னாச்சு தெரியல. நான் பிரெக்னெண்ட் சொன்னா நீ விடமாட்ட.” மகியின் ஆன்மா சொல்லிய காரணம் ஏற்புடையதாக இருந்தாலும் அந்த நேரம் சமரால் அதனை ஜீரணிக்க முடியவில்லை.
இதைத்தான் ஆரம்பத்திலிருந்து தும்பையை சமரிடம் சொல்லவிடாது மகி தடுத்திருந்தாள். இங்குவர கிளம்பியபோதும் அவளின் தவிப்புக்கு இன்னொரு காரணமும் இதுவே.
வயிற்றிலிருக்கும் குழந்தையின் ஆத்மாவை தும்பை விண்ணுலகம் அனுப்பிட, பனித் துகள்களாக சிதறிய மகியின் ஆன்மா உடலோடு இணைந்தது.
ஐவரும் மயக்க நிலையில் இருந்திட,
“இவனுங்க செத்தா தான் நான் இங்கிருந்து போக முடியும் சமர்” என்றது தும்பையின் அரூபம்.
“பாவம் மச்சான். செத்தும் அவளை நிம்மதியில்லாம அலைய வைக்க வேண்டாம்” என்று சீனு சொல்லிட, “உன் விருப்பம் போல பண்ணிக்கோ” என்ற சமர், ஐந்து பேரையும் அவ்விடம் விட்டு சீனுவின் உதவியோடு வெளியில் கொண்டு வந்தான்.
அடுத்த நொடி அந்த குகை எரிமலையைக் காட்டிலும் பல மடங்கு தகிப்பைத் தனக்குள் அடக்கிட மாபாதகர்களின் ஓலம் அக்காட்டை கிடுகிடுக்க வைத்தது.
மூவரின் கத்தல் தும்பையின் அனலை மெல்ல மெல்ல குளிர்வித்தது. நெருப்பில் சாம்பல் கூட மிஞ்சாது துடித்து கதறி மூவரும் காற்றாகியிருக்க… தும்பை முழுதாய் அமைதி கொண்டாள்.
“அம்மாவை பார்த்துக்கோ சமர்” என்ற தும்பை இறுதியாக தன் புன்னகை முகம் காட்டி, தீப்பொறிகளாக காற்றில் கலந்து மறைந்து போனாள்.
________________________
பத்து மாதங்களுக்குப் பின்னர்…
மலையின் மேல் குகைக்குள் சட்டத்திற்கு விரோதமாக, மருத்துவ ஆராய்ச்சியில் சில மருத்துவர்கள் ஈடுபட்டிருந்ததாகவும், அவர்கள் தங்களின் ஆராய்ச்சிக்கு இடையூறு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அமானுஷ்யம் என்ற பெயரில் கிராம மக்களை அச்சுறுத்தி வைத்திருந்ததாகவும், ஆராய்ச்சிக் கூடத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால், அங்கு நிரம்பியிருந்த வேதியியல் பொருட்களின் காரணமாக அவ்விடமே மிச்சமின்றி எரிந்துவிட்டதாகவும், இதுவரை நடந்த கொலைகளுக்கு அவர்கள் தான் காரணம் என்பதால் இனி இதுபோன்று கொலைகள் நடக்க வாய்ப்பில்லை எனவும், ஆராய்ச்சிக் கூடத்தில் இறந்தவர்கள் யாரென்று அடையாளம் காண முடியவில்லை எனவும் சமர் அறிக்கைத் தாக்கல் செய்திட, வழக்கு அதீத பரப்பரப்புக்கு நடுவில் முடிவுக்கு வந்தது.
சமரின் அறிக்கையையே உண்மை எனும் விதமாக, மகி கட்டுரையாக செய்தித்தாளில் வெளியிட… பாதி உண்மை மறைக்கப்பட்ட மர்மம் மர்மாகவே மக்கள் மனதில் கடந்து சென்ற மாதங்களில் மறைந்தும் போனது.
இதோ பத்து மாதத்திற்கு பின்பு, அதே கிராம மக்கள் மலைக்குள் சென்று தங்கள் வாழ்வாதாரத்தை மேற்கொள்வது குறித்து விசாரித்து அனுபவம் எனும் தலைப்பில் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறாள் மகி.
சமர் பருத்தியை தங்களோடு அழைத்து வந்து விட்டான்.
சுந்தர், ரேவதியிடம் கூட மகி, சமர் உண்மையை முழுதாக சொல்லவில்லை. மகி அனைத்தும் தெரிந்து கொண்டதால் அடைத்து வைத்திருந்தனர். அவள் சாகவில்லை. மீட்டு கொண்டு வந்துவிட்டேன் என்று மட்டும் சமர் சொல்லியிருந்தான்.
சீனு அந்த வழக்கில் சமருக்கு உதவியாக இருந்ததற்காக உயர் பதிவியுடன் கூடிய பணிமாற்றல் பெற்று தற்போது வேறொரு மாவட்டத்தில் பணி செய்கிறான்.
“இன்னும் எவ்வளவு நேரம் லட்டு.”
இரவு நேர ரோந்து முடித்து வந்த சமர், அவனின் லட்டுவிடம் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறான். அவள் கட்டுரை எழுதுவதில் முனைப்பாக இருந்திட, தன்னை கண்டு கொள்ளாததில் சடைப்பு அவனிடம்.
“சமர்” என்று குரல் கொடுத்த பருத்தி, “இந்த மாதிரி நேரத்தில் ரொம்ப நேரம் கண்ணு முழிக்கக் கூடாது சமர். இதை குடிச்சிட்டு சீக்கிரம் தூங்க சொல்லு” என அவனிடம் பால் குவளையை கொடுத்துவிட்டு உறங்கச் சென்றுவிட்டார்.
“மகி…”
அத்தனை நேரம் லட்டு என கொஞ்சிய அவனது கொஞ்சல்களுக்கு இல்லாத மதிப்பு அவனின் மகி என்ற அழைப்புக்கு அவளிடம் இருந்தது.
“வந்துட்டேன்” என்று அனைத்தையும் மூடி வைத்துவிட்டு தனது மேடிட்ட வயிற்றை பற்றியபடி இருக்கையிலிருந்து எழுந்த மகி, அடி வைத்திட முடியாது சுணங்கிட..
“இதுக்குதான் இந்த மாதிரி நேரத்தில் கால் நீட்டி உட்காரணும் அப்படின்னு அத்தையும் சித்தியும் சொல்றாங்க. எங்க கேட்கிற நீ?” என்று அவளை மலரென கையில் ஏந்தி வந்து படுக்கையில் அமர வைத்தான்.
“இந்த பாலை குடி லட்டு” என்று குவளையை எடுத்து அவளின் கையில் கொடுத்தான்.
மகி பாலினை பருகிட, சமர் அவளின் இரு பாதங்களையும் தன் மடியில் வைத்து மெல்ல பிடித்து விட்டான்.
அவனையே ரசனையாக பார்த்திருந்த மகி, “லவ் யூ அத்து” என்று காற்றில் முத்தம் அனுப்பிட,
அவனோ அவளின் விழிகள் சந்தித்து, “லவ் யூ டூ லட்டு” என்றான்.
மகி தன்னிரு கைகளை விரித்து அழைத்திட, அவளுக்கும் மகவுக்கும் நோகாது வாகாக அவளின் அணைப்பில் அடங்கினான் லட்டுவின் அத்து.
இருவரும் ஒருசேர மகவின் அசைவை முதல்முறை உணர்ந்திட தேகம் சிலிர்த்து மகிழ்வு கொண்டனர்.
முதல் இழைப்பை பற்றி இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை. மனதால் கொண்ட புரிந்துணர்வால், ஒருவருக்கொருவரின் அன்பினால், கடந்திட முயன்று அடுத்த வரவின் இன்பத்தில் மனதிற்குள் பொத்தி வைத்துக் கொண்டனர்.
“என்ன குழந்தை தெரியுமா லட்டு?”
“டாக்டர் சொல்லமாட்டாங்க அத்து.”
“உனக்கு என்ன பேபி வேணும் லட்டு?”
“உன்னை மாதிரி பாய் பேபி வேணும்” என்று சொல்லியவளை காதலாய் வளைத்துக் கொண்ட சமர், அவளின் நெற்றி முட்டி, வயிற்றில் கை வைத்து, “லட்டு வயிற்றில் குட்டி சமர் இருக்கீங்களா?” எனக் கேட்க…
“தும்பை” என்ற குழந்தையின் குரல் அவ்வறை நிறைத்தது.
சமர், மகி இருவரின் விழிகளும் விரிந்து ஆச்சரியம் கொண்டன அதிர்வோடு.
அவர்கள் கொண்ட ஆச்சரிய அதிர்வோடு நாமும் விடைபெறுவோம்.
சமருக்கு மகி என்றும் அவனின் இருளில் கூட நிழலாய்… அவன் அவளுக்கு உயிர் மீட்கும் அரணாய். அவனது தனிமை பயம் அவனை நிழல் போல் தொடரும் அவனவளின் உடனிருப்பில் என்றாவது மறையக்கூடும்.
இருள் நிழலாய் நானே!
சமரின் நிழலாய் மகி!
சுபம்.
Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
