ஊர் மக்கள் கூடியிருந்த கோவில் கூடத்தில் நடுநாயகமாக அமர்ந்திருந்தார்கள் பழனிச்சாமி, ஆதித்யன் மற்றும் சில ஊர் பெரியவர்கள்.
“சோலை, பிள்ளையைக் கூட்டி போனது தப்புத்தேன், அவளும் சம்மதப்பட்டுத்தானேயா கூட போயிருக்கா, பொறவு எதுக்குவுல ஒம்ம ஆளுக கையை நீட்டுதிய, அடிச்சு மொகரையைப் பேக்கிறதெல்லாம் என்ன பழக்கம்னேன். அப்புறம் என்னத்துக்கு நாங்க இருக்கோம்? செத்த பொருத்தா கொறஞ்சசுடுமோ. கட்ட அவுத்துவிடுங்கடா, இன்னமும் கற்காலத்துல உக்காந்துகிட்டு இருக்காங்ய்க” என்று பெண்ணின் தந்தையான கவுன்சிலர் சோலைமலையிடம் கட்டளையிட்டார் பழனிச்சாமி.
கட்டிலிருந்து வெளிவந்த நவநீதன், கைகளைக் கட்டிக் கொண்டு பஞ்சாயத்துக்காரர்கள் முன் நின்றான்.
“இழவெடுத்தவனே, உங்குற சொத்துக்கும், உடுத்துற உடுப்புக்கும் நாதியில்லாம கிடக்க, காதல் கேக்குதோ காதல்” நவநீதனின் தாயார் கூச்சலிட,
“இந்தா செத்த சும்மாயிரு, பேசிக்கிட்டு இருக்கமுல்ல” என்று இதையிட்டு தடை செய்த பழனிச்சாமி,
“நவநீ, காதல் கத்தரிக்கா எல்லாம் ஒரு பக்கம் கெடக்கட்டும், இழுத்துகிட்டு போதியே, வச்சு கஞ்சி ஊத்த காசு வச்சுருக்கியாடா? பள்ளிக்கொடம் படிக்கிற புள்ளைய காதலுன்னு பேசி கலக்கலாமா அப்பு? இல்ல அவளே மொதல்ல வந்துருந்தாலும் ஒத்துக்கிடலாமா? தப்பு சாமி. ஒம்ம தங்கச்சியை நாளைக்கு எவனாவது இழுத்துகிட்டுப் போனா கையைக் கட்டி வேடிக்கையா பாப்ப? ஊருக்கு ஒரு நியாயம் உனக்கொன்னு இருக்கப்பிடாது அப்பு. ரெண்டு பேரும் படிச்சு ஒரு வேல பார்த்து பொறவு விருப்பப்பட்டா நானே கட்டி வச்சுருப்பேன். இங்க அப்புடி இல்லையே. நீயும் இப்பத்தேன் வேலை பாக்க தொடங்கியிருக்க, உனக்கும் பொறுப்பு இருக்கு, அந்தப்புள்ளையும் படிக்குது. என்ன செய்யட்டும் நாங்க?” அவனிடமே கேட்டார்.
பதினொன்று படிக்கும் பெண்ணுக்குத் திருமணமா செய்து வைக்க இயலும்?, சம்மந்தப்பட்ட பெண் பயந்து நடுங்கிக் கொண்டு நின்றிருந்தாள்.
பதில் பேச முடியாது அமைதியாக நின்றிருந்தான் நவநீதன்.
“டேய் வாயத் தொறடா, கொழுக்கட்டையா வச்சுருக்க” அவனின் தாய் ஏச,
“மாப்பு கேட்டுக்குறேன் ஐயா, பஞ்சகாயத்துக்குக் கட்டுப்படுறேன்ப்பு” மெல்லிய குரலில் சொன்னான்.
“நவநீ, நீ உண்மையிலே அந்தப்புள்ளைய விருப்பப்பட்டினா, மொதல்ல உன்னை உயர்துயா, பொறவு அவுகளே கட்டி வப்பாக. என்ன சோலை நான் சொல்றது? ஒரு உறுதியோடு பெண்ணின் தந்தையிடம் கேக்க,
“வேத்து சாதிப்பயலுக்கு சம்மந்தம் பேச சொல்றது நல்லாயில்ல அப்பு” வெறுப்பை உமிழ்ந்தார் சோலை.
சாதி என்ற வார்த்தை ஆதித்யனில் கோபம் விதைக்கப் போதுமானதாக இருந்தது.
“பெரியவுக பேசும்போது குறுக்கப் பேச மன்னிச்சுக்கிடுங்க, படிக்கிற பெண்ணிடம் அவன் காதலுன்னு சொல்லி இழுத்துட்டுப் போனது வேணும்னா தப்பியிருக்கலாம், ஆனா சாதின்னு பார்க்காமல் காதலித்தான் பாருங்க அது தப்பில்லை. சித்தப்பூ, அவன் சாதிக்காரன் பாடை கட்டி, தப்புக் கொட்டித்தான் நீங்க செத்தாலும் தூக்க முடியும், நா செத்தாலும் ஏன் எந்தக் கொம்பன் செத்தாலும் தூக்க முடியும். சாதி….ஏன்யா இல்லாத ஒன்னைப் பிடுச்சுத் தொங்கிட்டு இருக்கீங்க? செய்யுற தொழிலை வச்சு என்ன காரணத்துக்காக நம் முன்னோர்கள் வகைபடுத்துனாங்களோ அதை உணராம ஏன்யா ஆளுக்கொரு சாதியைத் தூக்கிட்டுத் திரியுறீங்க?
சாதி ஒரே நாளில், ஒருவரால் அல்லது ஒரு குறிப்பிட்ட மதத்தால் உருவாக்கப்பட்டது இல்லங்கிறத முதல்ல புரிஞ்சுக்காங்கய்யா. பல நூற்றாண்டுகளாக ஏற்பட்ட சமூக மாற்றம், பொருளாதார மாற்றம், அரசியல் மற்றும் மத மாற்றங்களின் விளைவாகப் படிப்படியாக உருவானதுதான். நம் தமிழின முப்பாட்டன் மலைகளில் வாழும் போது வேட்டையாடினான், காடுகளில் வாழும் போது கால்நடைகளை வளர்த்தான், வயல்வெளி நாகரிகத்துக்கு வந்தான் விவசாயம் செய்தான், கடல் சாந்த பகுதியில் போய் வாழ்ந்தான் மீன்பிடித்தான் மற்றும் கடல் வணிகம் செய்தான், மணலும் மணல் சார்ந்த வறண்ட பகுதிப் போய் இருந்தான் படைத்தொழில் செய்தான். வாழுகின்ற இடங்களுக்குத்தக்க வாழ்வியலை வகுத்தான், செய்யும் தொழிலுக்குத்தக்க பழக்கங்களைப் பகுத்தான், இருந்த இடத்தைப் பொறுத்து இயற்கையை தெய்வ வடிவங்களாகத் தொகுத்தான். அவ்வளவுதான். செய்யுற தொழிலை வச்சு வருது உங்க சாதினா, என் பாட்டனுக்குப் பாட்டன் வணிகம் செய்தான், என் பாட்டன் நகைத் தொழில் செய்தான், என் அப்பா ஊருக்குப் பணி செய்கிறார், நான் நாட்டுக்குச் செய்கிறேன், அப்ப நான் என்ன சாதி?
இன்னைக்கு நம் தமிழ்நாட்டில் மட்டும் நூத்துக்கணக்கா சாதியும், ஆயிரக்கணக்கா உட்பிரிவும் வச்சுருக்கீங்க.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் -னு பாடிய பெரும்பாட்டன் பிறந்த நிலத்தைச் சேர்ந்தவங்களாயா நீங்களெல்லாம்?
நம் வாழ்வியல் முறையிலேயே ஒருத்தருக்கு ஒருத்தரா வாழும்னுதான் நம் முன்னோர்கள் கத்துக்கொடுத்திருக்காங்க. பிறந்தாலும் செத்தாலும் நீ ஒதுக்குற சாதிக்காரன் வந்து சங்கூதணும், சடங்கு செய்யணும்னு எல்லாத்தையும் கோர்த்துத்தான் வாழ்வியலை முறைப்படுத்தி இருக்காங்க.
மனிதனுக்குப் பிறப்பால் வருவது மரபணு மட்டும்தான். சாதி இல்லை, அது சமூகத்தால் வழங்கப்படும் கேவலமான அடையாளம். அந்த மரபணுவின் அடிப்படை அமைப்பும் கூட எல்லா மனிதர்களுக்கும் ஒன்றுதான். ஒரு மனிதனின் மதிப்பை நிர்ணயிப்பது அவனுடைய பிறப்போ சாதியோ இல்லையய்யா; அவனுடைய பண்புகள் மட்டும்தான். ஒருவன் மனதில் பாகுபாட்டை வைத்திருந்தால் அவன் கீழ்சாதி, சமத்துவம் வைத்திருந்தால் அவன் மேல்சாதி. அவ்வளவுதான். இப்போ சொல்லுங்க நீங்க எந்தச் சாதி?” ரௌத்திரம் கண்களில் படிய, குரல் கொதிமணலாய் உரத்த குரலில் ஓங்கிக் கொட்டியது ஆதித்யனிடமிருந்து.
ஒரு மயான அமைதி அங்கே சூழ்ந்து நின்று அனைவரையும் மருட்டியது.
சூழ்நிலையைக் கையில் எடுத்த பழனிச்சாமி, “அம்மா கண்மணி இப்ப உனக்குப் படிக்கற வயசுதாயி, நீ படிச்சு முடிச்சு ஒரு வேலைக்குப் போயி, பொறவு நவநீதந்தேன் வேணும்ன்னு சொல்லு அப்புச்சி நானாச்சு கட்டிவைக்க. நவநீதா உனக்குந்தென் சொல்லுதேன், நாலு காசு சம்பாரிச்சு ஒம்ம தங்கச்சியை கரையேத்திட்டு வா. சாதியாவது மண்ணாங்கட்டியாவது நான் கட்டி வக்கிறேன். ஆனா அதுவரை பஞ்சாயத்துக்குக் கட்டுப்படணும். வெளிய தெருவ சந்திக்கப்படாது, இந்த போனு கினு தொடர்புன்னு எச்சோலியும் வச்சுக்கப்படாது. என்ன புரிஞ்சுதா?” என்றார்.
சம்மந்தப்பட்ட இருவரும் தலையாட்ட, பெண்ணின் குடும்பமும் சொந்தமும் இந்த முடிவில் சலசலத்தது.
“என்னய்யா, என்ன சத்தத்தைக் கூட்டுத்தீரு?” ஒரு பெரியவர் அவர்களைப் பார்த்துக் கேட்க,
“அடுத்த வூட்டுக்குன்னா வேத்து சாதியைத் தினிக்கிதியலே, ஒம்ம வூட்டுக்கு மருமகளை வேத்து சாதியில இருந்து கூட்டுவிகளா?” என்றார் சோலை.
“ஆருகிட்ட கேள்வி கேக்குற? என்ன திமிருடா உனக்கு” என பல குரல்கள் சோலை மற்றும் அவர் கூட்டத்தைப் பார்த்துக் கத்த,
கை நீட்டி நிறுத்திய பழனிச்சாமி, “அய்யன் சன்னதியில் வச்சுச் சொல்றேன், எம் புள்ள விருப்பப்பட்டு ஆரை கூட்டி வரானோ, அவதான் எம்மூட்டு மருமவ. கூட்டம் முடிஞ்சுது” என்றவர் கைகள் கூப்பியபடி எழுந்து கொண்டார்.
நவநீதன் தாயிடம் வந்த ஆதித்யன், “சின்னத்தா, இவன் கொஞ்ச நாளைக்கு நம்ம தோப்பு வீட்டில் என் கண் பார்வையில் இருக்கட்டும்” என்றவன் கையோடு நவநீதனை அழைத்துக் கொண்டு காரில் ஏறினான்.
தந்தையை வீட்டில் இறக்கிவிட்ட ஆதித்யன், “நா நம்ம தோப்பு வீட்டில் இரா தங்கிக்கிறேன் அப்புச்சி, ஆத்தாளுக்குச் சொல்லிருங்க” என்றவன் காரைக் கிளப்பினான்.
இரண்டு கிலோமீட்டர் தூரத்திலிருக்கும், பழ வகைகள் சாகுபடி செய்யும் தோட்டமுள்ள தோப்பு வீட்டுக்கு வந்த ஆதித்யனும் நவநீதனும் வீட்டைத் திறந்து உள்ளே சென்றார்கள்.
“நவநீதா, போய் கீசர் ஆன் பண்ணி நல்லா குளிச்சுட்டு, என் உடுப்பு இருக்கும் உடுத்திக்கிட்டு வா” என்று பணித்தவன், நேராக சமையலறைக்குள் நுழைந்து தேநீர் தயாரித்து இரண்டு கோப்பைகளில் ஊற்றிக்கொண்டு வந்தான்.
குளித்து முடித்து நவநீதன் வரவும் அவனுக்கு ஒன்றைத் தந்துவிட்டு, தன்னுடைய கோப்பையோடு நீள்விருக்கையில் அமர்ந்துகொண்டான்.
தயங்கிக்கொண்டு எதிரே அமர்ந்த நவநீதன், “சாரி தலைவரே” என்றான் எழுப்பாத குரலில்.
“இந்த கண்ராவி பிடித்த தலைவருன்னு கூப்புடுறதை விடுடா முதல்ல” என்று கடுகடுத்தவன்,“முடிஞ்சு போனதைப் பேசி என்னாகப்போகுது? விடு. குடி” என்றான்.
“இல்லண்ணே, நீங்க அவ்வளவு சொன்னீங்க. புத்தி மட்டு எனக்கு” என தலையில் தட்டிக்கொண்டான் இளையவன்.
“நாளைப் பின்ன அந்தப் புள்ள படிச்சு முடிச்ச பிறகு தனக்கு இவன் பொருத்தமில்லைன்னு நினைச்சா, உன் ஆத்தா பார்க்கும் பொண்ணைக் கட்டுவியா?” என்றான் வலது கையால் தாடையைத் தடவியபடி.
“கண்மணி அப்புடி சொல்லாதுண்ணே”
“உறுதியா தெரியுமா உனக்கு? கண்மணிக்கு பதினாறு வயது இருக்குமா? வாழ்க்கைக்கான முடிவை இந்த வயசில் எடுக்க முடியும்னு நினைக்கிறியா?” நவநீதனை ஆழ்ந்து இவன் பார்க்க,
“உறுதியா…..” தெரியாது என்று வலமும் இடமுமாகத் தலையை ஆட்டினான்.
“காதல் என்றால் என்ன தெரியுமா நவநீதா?” என்றவன் எழுந்து ஜன்னலில் போய் நின்றுகொண்டு நிலவை வெறித்தான்.
“ஒருத்தரைப் பிடிக்கிறது மட்டும் காதலில்லை. அவர் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க நாம் காரணமாவது, அவர் லட்சியங்களை, கனவுகளை அடைய நாம் துணை நிற்பது, அவரின் மரியாதை பொதுவெளியில் எந்த விதத்திலும் நம்மால் பாதிக்காமல் பாதுகாப்பது. அவரின் கஷ்டத்தில் தோள் கொடுப்பது. ஐ லவ் யூ சொல்றதுல இல்லடா காதல். அனைத்துமா நான் இருக்கேனு காட்றதுதான் காதல்” என்றான் உள்ளார்ந்து.
“அண்ணா, நீங்க காதலிச்சிருக்கீங்களா?” என்ற நவநீதனை ஏறிட்டுப் பார்த்த ஆதித்யன்,
ஆமாம் என்பதாகத் தலையை ஆட்டிவிட்டு, “ஒரு தேவதையைக் காதலிக்கிறேன். ஒன்பது வருஷம், ஆறு மாதம், ஏழு நாட்கள், ஐந்து மணிகள், இருபத்து மூன்று நொடி நேரங்களாக அவள் சம்மதம் சொல்ல காத்துட்டு இருக்கேன்” என்றான் தன் வாட்சைப் பார்த்துக்கொண்டு புன்னகை உதடுகளில் உறைய.
“ஆஆ…என்னண்ணா சொல்றீங்க? கிட்டத்தட்ட பத்து வருஷமாவா? நீங்க கேட்டு அவங்க ன்னும் சம்மதம் சொல்லலையா?” என்றான் வியந்துபோய். ஆதித்யனுக்குள் இப்படி ஒன்று இருக்குமென்றே இவனால் கணிக்க முடியவில்லை.
“ம்ஹும்..நான் கேட்கவே இல்லையே” என்றான் அமைச்சன் தோள்களைக் குலுக்கிக்கொண்டு,
“என்னது கேட்கவே இல்லையா?”
“ம்ஹும்… நான் கேட்கலைன்னா அவளுக்குப் புரியாதா என்ன? அவளுக்கு நல்லாவே தெரியும். நான் காத்துட்டு இருக்கிறேன்றதும் தெரியும். அவளைத் தவிர வேற யாரையும் நான் கல்யாணம் செய்ய மாட்டேன் என்பதும் தெரியும். எல்லாம் தெரிஞ்சும் எதுவுமே தெரியாதது மாதிரி அவளும் இருக்கா, நானும் இருக்கேன்” என்றான் புன்சிரிப்போடு.
“அண்ணா…யாரு அவங்க? நம்ம ஊரா?” என்றான் நவநீதன் ஆர்வம் மிக.
“என் குயிலம்மா, நம்ம மாவட்டக் கலெக்டர் குயிலமுதி” என்று பெருமிதமாகச் சொன்ன ஆதித்யன், தன் குயிலைச் சந்தித்த நாட்களைத் தன் நினைவுகளால் தொட்டான்.
Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
