என் ஆயுள் நீயே 24

என் ஆயுள் நீயே 24

“அண்ணி…”

ஆர்யன் அழைத்ததில் நனியிதழை விட, எழிலுக்குத்தான் பெரும் அதிர்வு.

‘மொத்தமா முடிச்சி விட்ருவான் போல.’ வாய்க்குள் முனகிய எழில், வேகமாக அவனிடம் நடந்து சென்று…

“என்னடா? என்ன நினைச்சிட்டு இருக்க?” எனக் கேட்டு,

“உன்னைதான்னு மொக்க போடாதே” என்றாள்.

“நான் அப்படி சொல்லலையே” என்று புருவம் நெளித்த ஆர்யன், “சொல்லணும் எதிப்பார்க்குரியோ?” என்றான், உதட்டின் ஓரம் சுளித்த புன்னகையோடு.

“பிளீஸ்… பெரியண்ணாக்கு கூட பயமில்லை. அக்கான்னா லைட்டா பயம். ஏதும் போட்டுக் கொடுத்திடாத” என்று உதடு அசையாது கெஞ்சினாள்.

“பயமா? உனக்கா?” எனக் கேட்ட ஆர்யன், “அண்ணி” என மீண்டும் அழைத்தான்.

இப்போதுதான் அவனின் விளிப்பை நன்கு கவனித்து நெற்றி சுருக்கி அவனை பார்த்தாள் நனியிதழ்.

“பிரணவ்ஸ் பிரதர்” என்று கையிலிருந்த நனியின் அலைபேசியை அவளை நோக்கி நீட்டினான்.

பிரணவ் சந்திக்க வேண்டுமென்று அனுப்பிய தகவல், திரையில் அறிவிப்பாக எம்பிக் குதித்து ஒளிர, நனியிதழ் அலைபேசியை விட்டுச் சென்றதால், மின்னிய அலைபேசியை ஆர்யன் பார்க்க நேர்ந்தது. பிரணவ் பெயர் ‘மை லவ்’ என்று வந்தாலும், புலனத்தின் தகவலென்று அவனது முகப்பு படம் சிறு வட்டமாக ஒளிர்ந்ததில் தெரிந்த தன் அண்ணனின் நிழலுறுவில் நொடியில் நனியிதழ் யாரென்று கிரகித்து உரிமையாய் அண்ணியென்று அழைத்துவிட்டான்.

எழிலுக்கோ தன்னுடைய அக்கா என்பதால் அண்ணியென அழைக்கிறானென்று பயந்து வந்தது.

“இது நல்லாயில்லா ஆரி. அக்கா என்ன நினைப்பாங்க. திரும்பத் திரும்ப அண்ணி சொல்ற நீ?” என்று பற்களைக் கடித்தாள்.

“உனக்கு கோபப்படக்கூடத் தெரியலடி” என்று அவளின் நெற்றியில் தட்டிய ஆர்யன், “நீ எனக்கு யாருமே இல்லைன்னாலும் அவங்க எனக்கு அண்ணி தான்” என்றான்.

“புரியல.”

“இப்போ புரியும்” என்ற ஆர்யன், அதற்குள் தங்கள் அருகில் வந்துவிட்ட நனியிடம் அலைபேசியை கொடுத்தான்.

நனியிதழ் ஆர்யனின் முகத்தை பார்த்தபடி தயக்கமாக வாங்கிட,

“எனக்கு டூ டேஸ் முன்னால் தான் தெரியும். அஷ்மி சொன்னாங்க. இப்போ மொபைல் ஸ்க்ரீனில் அண்ணா பிக் பார்த்து தான் நீங்கன்னு தெரியும்” என்றான்.

“ம்ம்…” ஓசையின்றி வந்த அவளின் குரல் அளவிலேயே, அவளின் நிலை புரிய,

“என்ன காரணம் வேணாலும் இருக்கட்டும் ஒருமுறை சொல்லுங்க. ஹீ லவ்ஸ் யூ டூ…” என்றான். அழுத்தமாக.

நனியிதழ் அவன் சொல்லியதை நம்பாது பார்க்க… ஒற்றை கண்ணில் நீர் துளிர்த்து இறங்கியது.

“ட்ரஸ்ட் மீ” என்று தன் கழுத்தில் இரு விரல் பிடித்துக் கூறிய ஆர்யன், “உங்களுக்கு ஒரு காரணம் இருக்காப்போல… அண்ணாக்கும் ஒரு காரணமிருக்கலாமே” என்றான்.

“எதுவா வேணாலும் இருக்கட்டும். இதுக்கும் மேல முடியாது. முடியல. மறக்க முடிவு பண்ணிட்டேன்” என்று கன்னம் துடைத்து திரும்பி நடந்தாள்.

“நீங்க முடிவு பண்ணிட்டா மட்டும் மறக்க முடியுமா?” ஆர்யன் கேட்டதில் நனியின் நடை நின்றது.

“அப்படி மறக்கணும் நினைச்சிருந்தால் இந்த நாலு வருஷத்தில் முடிந்திருக்குமே” என்றான்.

இருவருக்குமிடையே என்ன நடக்கிறதென்று புரியாது விழி விரித்து நின்றிருந்த எழில்,

“எதுக்குடா இப்போ அக்காவை அழ வைக்கிற நீ?” எனக் கேட்டாள்.

“லைஃப் லாங் அழுதிடக்கூடாதே” என்றான்.

“அண்ணி ஒருமுறை எனக்காக” என்ற ஆர்யனை நின்ற இடத்திலிருந்து திரும்பி பார்த்த நனி, “முடியல… பிளீஸ்” என்று சொல்லி வேகமாகச் சென்றுவிட்டாள்.

“என்னடா நடக்குது?”

“நீ என்னை லவ் பண்றேன் சொல்லு சொல்றேன்.”

“நீ எதுவும் சொல்லத் தேவையில்லை.”

“நீ சொல்லலனாலும் எனக்குதான் தெரியுமே!” குறும்பாய் கண்கள் சிமிட்டினான்.

“என்ன தெரியும்?” எகிறிக்கொண்டுக் கேட்டாள்.

அவளின் நெற்றிப் பொட்டில் ஒற்றை விரல் வைத்து பின் தள்ளியவன்,

“உனக்கும் என்னை பிடிக்கும். லவ் இருக்கு” என்றான்.

“அதெல்லாம் இல்லை.”

“அப்படியா… அப்போ ஓகே” என்று அவன் விலகி நடக்க,

“என்ன ஓகே?” என்று ஓடிவந்து அவன் வழி மறைத்து வினவினாள்.

“நீதான் லவ் பண்ணலையே. அப்போ என்னை லவ் பன்ற பொண்ணுக்கு ஓகே சொல்றேன். சிவில் டிபார்ட்ல ஒரு பொண்ணு நேத்து ப்ரொபோஸ் பண்ணாள்” என்றான்.

எழில் அவனை தீயாய் முறைத்தாள்.

“என்ன?”

“அண்ணா ஓகே சொல்லணும்.” மெதுவாகக் கூறினாள்.

“உனக்கு என்னை பிடிச்சிருக்கு ரைட்?” எனக் கேட்டான்.

அவளின் தலை ஆமென்று அசைந்தது.

“சப்போஸ் உன் அண்ணா நோ சொல்லிட்டா… நான் வேண்டாமா? வேண்டாம் சொல்லிடுவியா?” என்றான்.

“அண்ணா அப்படி சொல்லமாட்டாங்க. ஆனால், அண்ணா சொல்றதுதான் எனக்கும்” என்று சொல்லியவளின் இமை நனைந்து உருண்ட கண்ணீர் அவனுக்கான நேசத்தை சொல்லிட…

“வெயிட் பண்றேன்” என்று நகர்ந்தான்.

“உனக்கு புரியுது தானே?” என மீண்டும் அவன் குறுக்கே ஓடிவந்து வினவினாள்.

“புரியுது” என்ற ஆர்யன், “அவர் வேணாம் சொன்னா விட்டுடுவியா?” எனக் கேட்டான். அவனுள் மெல்லிய வலி.

“ம்ஹூம்…” என்று இருபக்கமும் தலையை ஆட்டியவள், “அண்ணாவை சம்மதிக்க வைக்க ட்ரை பண்ணுவேன்” என்றாள். அவனை பாராது.

அவளைத் தீண்டாது நெற்றி முட்டி நின்ற ஆர்யன், “அழாதடி” என்றான். பனித்த விழிகளுடன்.

“அண்ணா நோ சொல்லமாட்டாங்க தானே?” அவனிடமே கேட்டாள்.

“மாட்டாங்க…” என்ற ஆர்யனிடம், “நீ ஒன்ஸ் பேசுறியா?” என்றாள்.

“இப்போ உன் அண்ணா வேற ஒரு சூழலில் இருக்காங்க. சீக்கிரமே ரெண்டு பேரும் ரிலேட்டிவ் ஆகிடுவோம். அப்போ உரிமையா என் மாமாகிட்ட உங்க தங்கச்சியை கொடுங்கன்னு கேட்கிறேன்” என்றவனின் பேச்சு சுத்தமாக அவளுக்கு விளங்கவில்லை.

“எனக்கு ஒண்ணுமே புரியல!”

“உன் அக்காவும் என் அண்ணாவும் லவ் பண்றாங்க.” சிரிப்புடன் கூறினான்.

“நிஜமாவா?” அகல கண்கள் விரித்த எழில், “அக்காவா? நம்ப முடியல” என்றாள்.

தனக்கு தெரிந்த அளவில் எல்லாம் சொல்லிய ஆர்யன், “நாம் வெயிட் பண்ணிதான் ஆகணும்” என்றான்.

“ம்ம்… யாருமே என்கிட்ட சொல்லல” என்று வருந்தினாள்.

“நீ சின்னப் பொண்ணுன்னு உன்கிட்ட சொல்லாம இருந்திருக்கலாம்” என்ற ஆர்யன், “நீ எனக்கு சின்னப் பொண்ணுலாம் இல்லை” என்றான்.

அவனின் உட்பொருள் புரிந்து, புஜத்திலே கிள்ளினாள்.

“அடியேய்… விடுடி” என்ற ஆர்யன், “என் மாமா இன்னும் நம்ம லவ்வுக்கு ஓகே சொல்லல” என்றான்.

“அச்சோ ஆமா” என்று தலையில் தட்டிக்கொண்ட எழில், “நான் இன்னும் உனக்கு சரி சொல்லல… ஓகேவா?” எனக் கேட்டு, “கீப் டிஸ்டன்ஸ்” என்றாள்.

பொங்கி வந்த சிரிப்பை அடக்கிய ஆர்யன், “நீ ஃபர்ஸ்ட் தள்ளி நில்லுடி. மனுஷனை படுத்துற” என்க, அவனை காதல் ஊற்றெடுக்க மென்மையாக பார்த்தாள் அவனது எழில்.


கல்லூரியிலிருந்து புறப்பட்ட நனியிதழ் வீட்டிற்கு செல்லாது கடற்கரைக்குச் சென்று, அலைகளை வெறித்தபடி அமர்ந்துவிட்டாள்.

“ஹீ லவ்ஸ் யூ டூ…” அவங்களும் உங்களை விரும்புறாங்க என ஆர்யன் சொன்னது அவளின் நெஞ்சத்தை இன்னும் அதிர வைத்துக் கொண்டிருந்தது.

“இப்போ இதை நான் நம்பனுமா?” அப்படியே கால்களைக் கட்டிக்கொண்டு தலை கவிழ்த்து கண்ணீர் சிந்தினாள்.

‘வேண்டாம் நனி வேண்டாம். அழ வைக்கும் இந்த காதலே வேண்டாம். அவங்க வேணாம் சொல்ல சொல்லுவாங்க. திரும்ப வந்தா ஓகே சொல்லணுமா? அப்போ என் மனசு? அதிலிருக்கும் காதல்? அனுபவிக்கும் வலி? இதெல்லாம் ஒண்ணுமே இல்லையா?’

மனதோடு வெகுவாகப் போராடினாள்.

“லவ் பண்றவங்க ஏன் ஒருமுறை கூட சொல்லல?”

‘நீ ஏன் சொல்லல?’

அவளுக்கான கேள்விக்கு எதிர் கேள்வி கேட்டது மனம்.

“என்ன காரணமிருக்கும்?” பதில் அவனிடம் மட்டுமே!

அலைபேசியை எடுத்து பிரணவ் என்ன அனுப்பியிருக்கிறான் என்று பார்த்தாள்.

“வாண்ட் டூ மீட் யூ” என்றிருந்த செய்தியை விரலால் வருடியவள், “எதுக்காம்?” என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள்.

பதிலேதும் அனுப்பிடத் தோன்றவில்லை.

இப்போதுதான் ஒருவித தெளிவில் இருக்கின்றாள். அவள் அனுபவிக்கும் இந்த காதல் வலியால், அவளைவிட அதிக வேதனை அவளின் செல்வாவிற்குத்தான். அதற்காகவே தன் காதலை தூரம் வைத்திட முடிவு செய்து மூன்ற நாட்களாகிறது.

எல்லாம் முடிந்து விட்டதென்று அவளிருக்க… மீண்டும் தொடங்கும் புள்ளியாய் ஆர்யன் சொல்லியது. பிரணவ் குறுந்தகவல்.

முற்று வைத்த புள்ளி அருகே மற்றொரு புள்ளி வைத்து ஆரம்பிக்க அவளின் மனம் உந்தியபோதும்,

“என்னை பிடிக்கலன்னு சொல்லு” என்று அவனே கேட்டது அவளின் செவி நிறைத்து இளகும் இதயத்தை இறுக வைத்தது.

அடுத்து என்ன செய்வதென்று தெரியாத நிலை தான் அவளுக்கு.

ஆர்ப்பரிக்கும் கடலின் சத்தத்தை தாண்டி கத்த வேண்டும் போலிருந்தது.

வீட்டிற்கு செல்லும் எண்ணமின்றி அமர்ந்திருந்தவளை கலைத்தது, பிரணவ்வின் அழைப்பைத் தாங்கி வந்த அலைபேசி ஒலி.


இதுநாள் வரை கண் பார்த்து நடந்துகொள்வதாக எண்ணி தவறாக நினைத்து தூரமிருந்ததெல்லாம் போதுமென நினைத்த பிரணவ், நேரில் சந்தித்து அனைத்தும் பேசி முடித்திட வேண்டுமென சந்திக்கக் கேட்டு தகவல் அனுப்பி, அவள் பார்ப்பதற்காக காத்திருந்தான்.

நிமிடங்கள் பல நீள, அவனின் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போனது.

வேலைகளுக்கு நடுவில் கூட தன் செய்தியை அவள் பார்த்துவிட்டாளா என்று நொடிக்கு ஒரு தரம் அலைபேசியை எடுத்து புலனம் திறந்து பார்வையிட்டான்.

வெகு நேரம் அவனை காக்க வைத்தே, குறி நீல நிறம் காட்டிட, அவள் பதிலை எதிர்பார்த்து ஏமாந்து போனான்.

நனியிதழ் பதல் அனுப்பாததிலேயே அவள் கோபமாக இருக்கின்றாள் என்பதை புரிந்து கொண்டான்.

“கிவ் மீ வன் சான்ஸ்” என்று மீண்டும் அனுப்பினான்.

எப்போதும் அவனருகில் அவள் கொள்ளும் சிறு நடுக்கம் அவனுக்கு சுவாரஸ்யம் அளித்திட, அவளிடம் அதட்டலாகத்தான் நடந்துகொள்வான். முதல்முறை கெஞ்சுதலாக கேட்கிறான். பெண்ணவள் இறங்கிவர தயாராக இல்லை போலும்.

இம்முறை அவன் அனுப்பியதை பார்க்கவே இல்லை.

பொறுத்துப் பார்த்த பிரணவ் அவளுக்கு அழைத்துவிட்டான்.

“அட்டென்ட் பண்ணாமல் மட்டும் இருக்கட்டும். நேரா வீட்டுக்கே போயிடுறேன்” என்று முணுமுணுத்தவாறு, அவள் அழைப்பை எடுப்பதற்காக காத்திருந்தான்.

ஆர்யன் தன்னை கண்டு கொண்டு பேசியதிலேயே, தான் அவனை காதலிப்பது அஷ்மியின் மூலமாக பிரணவ்வுக்கும் தெரிந்து விட்டதென்று அறிந்த நனியிதழ்,

‘உண்மை தெரிந்து அழைக்கிறான். என்ன பேசுவான்? ஆர்யன் சொல்லியதுபோன்று என் காதல் தெரிந்து அவனது காதலை கூறப்போகிறானா? இல்லை என் காதல் தெரிந்து மீண்டும் இது ஒத்துவராது என்று சொல்லப் போகிறானா?’ என தனக்குள் பலவாறு உழன்று, அழைப்பு முடியும் தருவாயில்… இறுதி ஓசையில் ஏற்று செவிமடுத்தாள்.

“ஹலோ…”

தேடலில் நீளும் நேசம் யாவும் நெஞ்சம் சேர தவமிருக்க… காதலித்த இதயத்தில் தான் எத்தனை விந்தையான எண்ணங்கள்?

error: Content is protected !!
Scroll to Top